Tuesday, February 28, 2012

(சசிகலா) நடராஜன் உயிருக்கு ஆபத்து?நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய, சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட மூவருக்கு, ஒருநாள் போலீஸ் கஸ்டடி கொடுத்து, தஞ்சை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், விசாரணையின் போது, மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடராஜன் கூறுகையில், "நில அபகரிப்பு புகார் முற்றிலும் பொய்யானது. அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனக்கும், புகாருக்கும் சம்பந்தமில்லை. என்னைக் கைது செய்து விட்டுத்தான் போலீசார் எப்.ஐ.ஆரையே தயார் செய்தனர். கடந்த தி.மு.க., ஆட்சியிலேயே டிரஸ்ட் மூலமாக முள்ளிவாய்க்கால் நினைவக தூண் கட்டப்பட்டு வருகிறது. அதில் உறுப்பினராகக்கூட நான் இல்லை. எனக்கு சம்பந்தமில்லாத வழக்கில், என்னை போலீசார் சேர்த்துள்ளனர். தற்போது என்கவுன்டர்களை போலீசார் நடத்தி வருகின்றனர். அதனால் என்னையும் என்கவுன்டரில் கொல்ல வாய்ப்புள்ளது. எனது உயிருக்கு போலீசாரால் பாதுகாப்பு இல்லை. அதனால், என்னை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதிக்கக்கூடாது,' என்று எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூரு நீதி மன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில், இந்த வழக்கிற்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் எந்த சமந்தமும் இல்லை என கூறி திருமதி. சசிகலா கதறி அழுததாக செய்தி வந்திருந்தது.

ஹ்ம்ம்...இன்னும் என்னவெல்லாம் அரங்கேற போகிறதோ? எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய மற்ற பதிவு...நில அபகரிப்பு வழக்கில் சசிகலா நடராஜன் கைது

share on:facebook

அமெரிக்க அவஸ்தைகள் : அபார்ட்மென்ட் கட்டுபாடுகளும் லீஸ் தொல்லைகளும்...


ஒரு காலத்தில் சென்னையில் வாடகை வீட்டில் மாறி மாறி குடியிருந்த போது ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் ஒவ்வொரு வகையான கண்டிசன்கள் போடுவார்கள். ஆனால், எனக்கு தெரிந்து அதிக பட்சமாக பத்து பன்னிரண்டு கண்டிசன்கள் இருக்கும். அதுவும் எல்லாம் ஒரே மாதிரியானவை. ஒன்று முதல் ஐந்தாம் தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும், அதை உடைக்க கூடாது இதை உடைக்க கூடாது என்று. சென்னை வீட்டு உரிமையாளர்களின் சர்வதிகார போக்கை பற்றி ஒரு பதிவே போடலாம்.

அதுக்கே விழி பிதுங்கிய நான், இங்கு கலிபோர்னியாவில் ஒவ்வொரு லீஸ் அக்ரீமென்ட் கை எழுத்து போட்டு முடிக்கும் முன் என் பேனாவில் உள்ள இங்க்கே தீர்ந்து போய் விடும். அந்த அளவிற்கு கண்டிசன்கள். எல்லாம் சட்டத்தை மேற்கோள் காட்டி வேறு. அக்ரிமெண்டில் உள்ள சில முக்கிய கண்டிசன்கள் கீழே...


# ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதிக்குள் வாடகை செலுத்தி விட வேண்டும். இல்லை என்றால் முப்பத்தி ஐந்து டாலர் பைன்.


# செக்கூரிட்டி டெபாசிட் $ 500. இது ஆற்றில் போட்ட கல். திரும்பி நமக்கு கிடைக்கவே கிடைக்காது.

# $ 1,00,000 க்கு ஆன ரெண்டர்ஸ் இன்சூரன்ஸ் கட்டாயம். நம் பணத்தில் நாம் குடி இருக்கும் வீட்டிற்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை தவிர கீழே வரும் அனைத்து கண்டிசன்களுக்கும் பக்கத்துக்கு பக்கம் என் கையெழுத்து மட்டும் இன்றி வீட்டு எஜமானி அம்மா கையெழுத்தும் அவசியம்.

# Additional Occupants Addendum : அதாவது அக்ரிமெண்டில் குறிப்பிட்டுள்ள நபர்களை தவிர வேறு யாரும் வீட்டில் தங்கி இருக்க கூடாது. ஊரிலிருந்து அம்மா அப்பாவை அழைத்து வந்தால் கூட ரெண்டல் ஆபிஸிற்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலனோர் இதை கடை பிடிப்பதில்லை.

# Asbestos Addendum : இந்த அபார்ட்மெண்டில் ஆஸ்பெஸ்டாஸ் உபயோகம் உள்ளது. அதனால் ஏற்படும் உடல் நல குறைவிற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த அறிவிப்பை அனேகமாக கலிபோர்னியாவில் எங்கும் காணலாம்.    

# Bedbug Addendum : வீட்டில் மூட்டை பூச்சி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வந்து விட்டால், வீட்டில் உள்ள, மெத்தை, தலையணை, துணி மணிகள் என்று எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட வேண்டும். வீட்டை கம்ப்லீடாக அவர்கள் மீண்டும் பூச்சி மருந்து அடித்து சுத்தம் செய்யும் வரை உள்ளே அனுமதி இல்லை.

# Business Center Agreement : அபார்ட்மென்டில் உள்ள பிசினஸ் சென்டரை உபயோகிக்க 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், அல்லது துணை இருக்க வேண்டும். இன்டர்நெட், ஈமெயில், பிரிண்டர் என அனைத்து வசதிகளும் இங்கு இலவசம்.

# Carpet Care Instructions : வீட்டில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து இருக்கும் கார்பெட்டை பத்திரமாக, அதே நேரத்தில் சுத்தமாக பேணி காக்க வேண்டும். இல்லையேல் வரும் போது அவர்கள் சுத்தம் செய்ய நம் கை காசை அழ வேண்டும்.

# Fitness Center : பிட்நெஸ் சென்டரின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ். அதுவும் எங்கள் அபார்ட்மென்டில் பிட்நெஸ் சென்டர் காலை 8 மணி முதல் மாலை ஆறு மணி வரை தான் திறந்து இருக்கும். ஆபீசுக்கு லீவு போட்டு விட்டா ஜிம்முக்கு போக முடியும்?

# Grilling Addendum : இங்கு பார்பிகு மிகவும் பாப்புலர். அட அது ஒன்றும் இல்லைங்க. நம்மூர் பாட்டி வடை சுட்டு கொடுப்பாரே. அது போல் தான். சிக்கன் பீஸ், மீன் துண்டுகளை எலெக்ட்ரிக்/அடுப்புக் கரி க்ரில்களில் வைத்து வறுத்து சாப்பிடுவது தான். அந்த க்ரில்களை போர்டிகோவில் எங்கு வைக்கலாம். எங்கு வைக்க கூடாது, எப்படி பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்பதற்கு ஒரு அக்ரிமென்ட்.

 # House Rules #2 : அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ் உள்ளே எப்படி நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் விளையாடும் பார்க் ரூல்ஸ். சத்தமாக பாட்டு வைக்க கூடாது. ஸ்விமிங் பூல் விதி முறைகள் என அனைத்து கண்டிசன்களும்  இங்கு. குழந்தைகள் பார்க்கில் விளையாடும் போது பெரியவர்கள் கூடவே இருத்தல் வேண்டுமாம். பேசாம அதுக்கு நம்ம வீட்டிலேயே குழந்தைகளை வைத்துக் கொள்ளலாம்.

இன்னும் வரும்...  

"அடச் சே" அமெரிக்கா பற்றிய மற்ற சில பதிவுகள் கீழே...

அமெரிக்கா போறீங்களா? இத படிங்க முதல்ல...

அட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.

share on:facebook

Sunday, February 26, 2012

காலேஜ் ஸ்பெஷல் - லேடீஸ் காரேஜும், 'டிஸ்க்' புல்லிங்கும்.


பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது கடைசி பெஞ்சை பொதுவாக மாப்பிள்ளை பெஞ்ச் என்று கூறுவார்கள். அதாவது மாப்பிள்ளை பெஞ்சில் உட்கார்பவர்கள் எல்லாம் அதிகம் படிக்காத மார்க் எடுக்காத உருப்புடாதவர்கள் என்ற எண்ணம் இன்றளவும் உள்ளது. ஆனால், அப்படி கடைசி பெஞ்சில் ஜாலியாக உட்கார்ந்து அரட்டை அடித்து அதே நேரம் நல்ல மார்க் வாங்கி உருப்புட்டவர்களும் உண்டு. அவர்களை போல் வாழ்க்கையை படிப்பிலும் சரி, மற்ற விசயங்களிலும் சரி, அனுபவித்தவர்கள் இருக்க முடியாது.

நம்மூர் ரெயில்களில் கடைசி பெட்டி கார்ட் பெட்டியாகவும் அதற்க்கு முன்னால் உள்ள பெட்டி பெண்களுக்கான L.C. எனப்படும் லேடீஸ் காரேஜ் என்பார்கள். கல்லூரி படிக்கும் போது இந்த L.C. பெட்டிக்கு முன் பெட்டி தான் எங்கள் பேவரைட் பெட்டி. பள்ளி/கல்லூரிகளில் எப்படி கடைசி பெஞ்ச் மாப்பிள்ளை பெஞ்ச்சோ அதே மாதிரி தான் ரெயில்களில் நான் மேலே சொன்ன கடைசி பெட்டியும்.

சுமார் ஆறு ஆண்டுகள் நான் கல்லூரி செல்லும் பொருட்டு தினமும் ரெயிலில் செல்லும் பாக்கியம் பெற்றவன் நான். பொதுவாக கல்லூரி செல்பவர்கள் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள் தான் செல்ல நேரிடும். நான் மூன்று மூன்று ஆண்டுகள் என மொத்தம் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து ரெயில் பயணம். தஞ்சையிலிருந்து திருச்சிக்கு அப்போதெல்லாம் அதிக டிரெயின்கள் கிடையாது. விடியற்காலை பொன்மலை ரெயில் தொழிற்சாலை செல்லும் பணியாளர்களுக்காக சுமார் ஐந்து மணியளவில் ஒரு டிரெயின் உண்டு. அதன் பிறகு காலை ஏழு ஐந்து மணிக்கு (அது என்ன ஐந்து நிமிட கணக்கு என எனக்கு இன்றும் தெரியவில்லை).

இந்த ஏழு ஐந்து மணி டிரெயின்னை பொதுவாக ஆபீஸ் டிரெயின் என்று தான் சொல்வார்கள். இதில் பயணம் செல்லும் தொண்ணூறு சதவிகித பயணிகள் ஒன்று அலுவலகம் செல்பவர்களாக இருப்பார்கள் இல்லை பள்ளி கல்லூரி செல்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் தொடர்ந்து பயணம் செல்லும் வகையில் சீசன் டிக்கெட் வைத்திருப்பார்கள். பள்ளி/கல்லூரி கன்சஷன் சீசன் டிக்கெட் விலை மிகவும் மலிவு. அதாவது எனக்கு நினைவு தெரிந்து மூன்று மாதத்திற்கு ஆன சீசன் டிக்கெட் வெறும் அறுபது ரூபாய்தான். இந்த சீசன் டிக்கெட்டை வைத்து நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருச்சி தஞ்சை சென்று வரலாம். எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட. அப்போது டிரெயின் டிக்கெட் மூன்று ருபாய் இருந்திருக்கும்.

சரி, L.C. பெட்டி பற்றி மீண்டும் பார்ப்போம். கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் இந்த L.C. பெட்டிக்கு முன் பெட்டியில் தான் பயணம் செய்வார்கள். அதற்க்கு காரணம் வேறாக நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை. ஆனால், நான் சொல்லும் காரணம், தாமதமாக வந்து டிரெயின்னை பிடிக்கும் நேரத்தில் கடைசி பெட்டி கார்ட் பெட்டி. அதில் ஏற முடியாது. அதற்க்கு முன் பெட்டி L.C. லேடீஸ் பெட்டியில் ஏற கூடாது. அதனால் தான் நாங்கள் L.C. பெட்டிக்கு முன் பெட்டியில் பயணம் செய்வோம். அதே போல், நான் முன்பே கூறியிருந்தது போல், பெரும்பாலனோர் தினமும் பயணம் செய்யும் பயணிகள் ஆதலால், ஒவ்வொரு க்ரூப்பும் ஒரே பெட்டியில் ஒரே இடத்தில் தினமும் ரிசர்வ் செய்தது போல் சேர்ந்து உட்காருவார்கள்.

டிரெயின்னை ஆபத்து சமயங்களில் நிறுத்துவதற்கு செயினை பிடித்து இழு என்று நீங்கள் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், எங்கள் பாஷையில் அதற்க்கு பெயர் 'டிஸ்க்' என்போம். வண்டியை உடனே நிறத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு பெட்டியிலும் வைத்துள்ள சங்கிலியை பிடித்து இழுக்கலாம். உண்மையை சொல்லப் போனால் சில லோக்கல் டிரெயின்களில் இந்த சங்கிலி சரியாக வேலை செய்யாது. அது தவிர இந்த சங்கிலிகள் எல்லோர் பார்வையில் படும் படி இருக்கும். ஆதலால், சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எல்லோருக்கும் தெரியும்.

அதே நேரம் இந்த 'டிஸ்க்' ஒவ்வொரு பெட்டியின் ஏறும்/இறங்கும் வழியில் கதவுக்கு மேல் பெட்டியின் மூலையில் ஒரு சாவி போல் இருக்கும். இந்த சாவியை பிடித்து மறு புறம் திருகினால் ரெயில் உடனே நின்று விடும். அதாவது, நீங்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தாலும் இந்த 'டிஸ்க்' எனப்படும் சாவிதான் ரெயிலின் பிரஷரை ரிலீஸ் செய்து வண்டியை நிறுத்தும். ஒவ்வொரு முறை அபாய சங்கிலி மூலம் வண்டி நிறுத்தப் படும் போதும் வண்டியின் டிரைவர் மற்றும் கார்ட் இருவரும் கீழே இறங்கி வந்து எந்த பெட்டியில் இந்த 'டிஸ்க்' திருகி இருக்கிறது என பார்த்து பின் அதை பழைய படி திருப்பிய பின் தான் வண்டியை எடுக்க முடியும். இந்த 'டிஸ்க்' டெக்னிக் எனக்கு தெரிந்து கல்லூரி மாணவர்களுக்கும் அடிக்கடி டிரெயின்யில் செல்லுபவர்களுக்கு தான் தெரியும்.     

சில சமயங்களில் ஆற்றை கடக்கும் போது சிலர் அபாய சங்கிலியையோ/டிஸ்க்கையோ பிடித்து இழுத்து விட்டால் அவ்வளவு தான். டிரெயின்னின் கார்டோ அல்லது டிரைவரோ உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆற்றுப் பாலத்தில் நடந்து வந்து எந்தப் பெட்டியில் இருந்து வண்டியை நிறுத்தினார்கள் என்று கண்டறிய வேண்டும். இதையெல்லாம் விட டிரெயின் டிரைவர்கள் மற்றும் கார்டுகளின் வேலை எப்போதும் மிகவும் சிரமமும், பொறுப்பும் வாய்ந்தது. அதை பற்றி அடுத்த பதிவில்...

சுய சரிதையின் வேறு பதிவுகள்...

"ஜெயிப்பது சுகம்" சுய சரிதை-1: காமர்ஸ் படித்தால் வெற்றி அடைய முடியாதா?

IT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loop  
   

share on:facebook

Friday, February 24, 2012

வங்கி கொள்ளையர்களும், என்கவுண்டர் ஓட்டைகளும்...

சமீபத்தில் நடை பெற்ற வங்கி கொள்ளையர் என்கவுண்டர் பற்றி பலர் எழுதி விட்டார்கள். என்னைப் பொறுத்த வரை இம்மாதிரி கொள்ளையர்களை இப்படி தான் போட்டு தள்ள வேண்டும் என்று சாதாரணமாக கூற முடியவில்லை. ஏனென்றால், இந்த என்கவுண்டரால் மக்களுக்கு பெரிய அளவு ஒன்றும் பயனில்லை என்பதே என் கருத்து. சரி இப்போது என்கவுண்டர் ஓட்டைகளை பார்ப்போம்.

கொள்ளையர் தங்கி இருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைத்த பிறகு ஓரிரு நாள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக கண்காணித்து சரியான நேரத்தில் மடக்கிப் பிடித்திருந்தால், அது சாமர்த்தியம். எல்லோராலும் பாராட்டப் பட்டிருக்கும். அட, அட்லீஸ்ட் ஒருவரையாவது வளைத்து பிடித்திருந்தால் பாராட்டி இருக்கலாம். எல்லோரையும் ஒரே இரவில், ஒரு மணி நேரத்தில் போட்டுத் தள்ளுவதில் என்ன பெரிய சாமர்த்தியம் இருக்கிறது?

மேலும், கொள்ளையர்கள் அனைவரும் வட நாட்டை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். அதாவது, போலீசார் வெளியிலிருந்து என்ன கத்தி இருந்தாலும் மொழி புரியாமல் பயத்தில் உள்ளேயே அவர்கள் இருந்திருக்கலாம் அல்லவா? மேலும் அவர்கள் வீட்டின் உள்ளே தானே இருந்தார்கள். சுற்றி வளைத்து சற்று நேரம் எடுத்து அவர்களிடம் பேசி வெளியே கொண்டு வந்திருந்தால் அவர்களை பற்றியும் அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களை பற்றியும் இன்னும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

இதோ பத்திரிக்கைகளில் எழுப்பப்பட்ட சில கேள்விகள்...

# கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், வெளி கதவு உடைக்கப் பட்டதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்கிறார்கள்..

# ஜன்னலுக்கு பின்புறம் உள்ள சுவரில் இரண்டே இடத்தில் மட்டும் துப்பாக்கி  குண்டுகள் துளைத்த தடயங்கள் உள்ளன. அதுவும் ஒரே உயரத்தில். ஜன்னல்  கிரிலில் துப்பாக்கி குண்டு பட்டதற்கான எந்த தடயமும் இல்லை. அதாவது,  மிக சிறந்த/தேர்ந்த துப்பாக்கி சுடும் அனுபவம் உள்ளவர்கள் கூட அப்படி  குறி  தவறாமல், ஒரே அளவோடு சுட முடியாது. போலீசார் மற்றும்  கொள்ளையர்கள் அந்த அளவு துப்பாக்கி சுடும் அனுபவம் உள்ளவர்களா?

# ஜன்னல் கிரிலுக்கும் சுவருக்கும் இடையில் இருந்த டி.வி. ஒரு சேதமும் இல்லாமல் இருக்கிறது. இத்தனை துப்பாக்கி குண்டுகளுக்கு இடையில்.

# தரை முழுதும் ரத்தக் கரைகள் இருந்தும், சுவற்றிலோ வேறு எங்குமோ ரத்தக் கரைகளை காண முடியவில்லை. அப்படி என்றால் ஒரே இடத்தில் எல்லோரும் சுட்டுக் கொல்லப் பட்டு இருக்கிறார்கள்.

வங்கியில் கொள்ளை அடிக்கப் பட்ட பணத்தை கை பற்றி இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள். அதற்குள் எப்படி அந்த பணம் வங்கியில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டதுதான் என்று முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ வழக்கம் போல இந்த என்கவுன்டரிலும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கப் போவதில்லை.

சிலர் சொல்கிறார்கள். நீங்கள் பதிக்கப் பட்டிருந்தால் தான் உங்களுக்கு தெரியும் என்று. அதை தான் நானும் கேட்கிறேன். ஒரு வேலை இவர்களில் ஒருவர் நிரபராதியாக இருப்பின் அவ்வாறு பாதிக்கப் பட்டவர் நம் குடும்பத்தில் ஒருவராக இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் என்பது தான் என் கேள்வி?

கெட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். தீயவர்கள் ஒழிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், அப்பாவிகள் பலிகாடாக ஆக கூடாது. தீயவர்களுடன் தொடர்பில் உள்ள மற்றவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும். அது தான் என் கருத்து. அதற்க்கு இந்த என்கவுண்டர்கள் பலனளிக்காது.

என்கவுண்டர் பற்றி விசாரிக்கும் நீதிபதி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்...


share on:facebook

Thursday, February 23, 2012

உலகின் மிக பெரிய பீரங்கி - தஞ்சையின் பெருமை

உலகின் சக்தி வாய்ந்த பீரங்கி வேண்டுமானால் தற்போது அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கலாம். ஆனால், நான்கு  நூற்றாண்டுகளுக்கு முன் உலகின் மிக பெரிய பீரங்கியை உருவாக்கி அதை  தன நாட்டு பாதுகாப்புக்கு உபயோகித்தது தஞ்சையை சேர்ந்த அரசர் ஒருவர் தான்.

தஞ்சை கீழ அலங்கத்தில் அமைந்துள்ள பீரங்கி மேட்டில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த பீரங்கி அப்போது தஞ்சையை ஆண்ட  ரகுநாத  நாயக்கால் 1920 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. எதிரிகளிடமிருந்து  நாட்டை காப்பாற்றி கொள்ள வடிவமைக்கப் பட்ட இந்த பீரங்கி டானிஷ்  (டென்மார்க்) தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப் பட்டது.

சுமார் 26 அடி நீளமும், 22 டன் எடை கொண்ட இந்த பீரங்கி போர்ஜ் வெல்டிங்  மூலம்  செய்யப்பட்டது. போர்ஜ் வெல்டிங், காஸ்டிங் மூலம் செய்யப்படும்  பொருளை  விட மிகவும் வலுவானதாக இருக்கும். அதுவே இத்தனை   நூற்றாண்டுகள் ஆகியும் இப்பீரங்கி இன்றும் மலையிலும் வெயிலிலும்     காய்ந்தாலும் துரு பிடிக்காமல் இருக்க காரணம்.

சுமார் 300 மில்லி மீட்டர் வெளி சுற்றளவும் 150 மில்லி மீட்டர் உள் சுற்றளவும் கொண்ட இப்பீரங்கியை தூக்க எட்டு வளையங்கள் மேலே  பொருத்தப் பட்டுள்ளன (அவற்றில் தற்போது இரண்டு வளையங்கள் மட்டுமே உள்ளன). 43 இரும்பு பட்டைகளும், 94 வலையங்களினாலும்  உருவாக்கப் பட்டுள்ள இப்பீரங்கி, எதிரிகள் தஞ்சையின் கீழ வாசல்  வழியாக நுழைவதை தடுக்க இந்த இடத்தை தேர்ந்தெடுத்து  அமைத்துள்ளார்கள்.

இந்த பீரங்கி மேடு தொல்பொருள் துறையின் கீழ்  வந்தாலும் அவற்றின் சட்ட திட்டங்கள் எதுவும் பின்பற்ற படுவதாக தெரியவில்லை. உதரணமாக, சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தால் இரவில் சமூக விரோதிகளாலும், சுற்றிலும் ஆடு மாடுகள் வளர்க்கப்பட்டு வருவதாலும் இப்பீரங்கி மேடையின் அழகும் பாரம்பரியமும் அழிந்து கொண்டு வருகிறது.   இம்மேடையின் மீதிருந்து தஞ்சையின் நாயக் அரண்மனையையும், அதன் அருகே அமைந்துள்ள ராஜா காலத்து ஏழடுக்கு  மாளிகையையும் காண முடியும்.

தஞ்சை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து  சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பீரங்கி மேடையை சென்று  பாருங்கள். நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்  நம் மூதாதையர்களின்  அறிவையும், திறனையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

படம் உதவி: கூகுல் ஆண்டவர்.

தஞ்சை பற்றிய மற்ற பதிவுகள் இதோ...

சொர்க்கமே என்றாலும்...தரணி போற்றும் தஞ்சை தொடர்

சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போலாகுமா...share on:facebook

Monday, February 20, 2012

McDonald's இட்லி வடை. ருசித்து சாப்பிட்டார் ரஜினி.


சென்ற முறை எந்திரன் படபிடிப்பிற்காக ஹாலிவுட் வந்திருந்த ரஜினிகாந்த் ஒரு நாள் காலை மிகவும் பசி ஏற்பட்ட காரணத்தால் அருகிலிருந்த 'மெக் டொனால்ட்ஸ்' சென்றார். அங்கு சூடாக ஒரு பிளேட் இட்லி வடை ஆர்டர் செய்தார். என்ன ஆச்சர்யம். ஐந்து நிமிடத்தில் ஆவி  பறக்க இட்லி வடை அவர் டேபிளில்.

ஹலோ ஹலோ என்னாச்சு உங்களுக்கு என்று என்னை அடிக்க வருகிறீர்களா? இதே போல் தான் இந்த கதையை (!) என்னிடம் சொன்ன நண்பரை அடிக்க நான் பாய்ந்தேன். எப்படியா? எப்படி? மெக் டொனால்ட்ஸில், இட்லி வடையா? என்று. அதற்க்கு அவர் கூலாக சொன்ன  பதில். ஆம், ஆர்டர் செய்தது ரஜினி அல்லவா? அதுதான் ரஜினி பவர் என்று.

சும்மா ஜோக்குக்காக இப்படி கூறினாலும், உண்மையை  சொன்னால், மெக் டொனால்ட்ஸில் வழங்கப்படும் பாதிக்கும் மேற்ப்பட்ட உணவு வகைகள் ஜன்க்  புட் எனப்படும் சத்தில்லாத அதே நேரத்தில் உடலை அதிக குண்டாக்கக் கூடியதும்  ப்ரோசன் செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவைதான். இருந்தாலும் குழந்தைகளை குறிவைத்து கிட்ஸ் மீளுடன் அவ்வப்போது புதிய புதிய அழகான பொம்மைகள்/விளையாட்டு பொருட்களை இலவசமாக கொடுத்து குழந்தைகளை கவர்வதின் மூலம் அதன் மூலம் பெரியவர்களையும் வர வைப்பது தான் அவர்களின் டெக்னிக். தற்போது அவர்களின் ஜனக் புட்டுக்கு எதிராக பல குரல்கள். அதனால், தற்போது குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பிரைஸ் அளவை குறைத்து அதற்க்கு பதிலாக ஆப்பிள் துண்டுகளும், ப்ரூட்ஸ் வகைகள் இணைத்து கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

மெக் டொனல்ட்ஸ் கிட்ஸ் மீல்: 

என்னைப் பொறுத்த வரையில் அமெரிக்கா வரும் முன் இந்தியர்கள் அதிலும்  குறிப்பாக  தமிழர்கள் தான் நாக்கு ருசி அதிகம் பார்ப்பவர்கள் என்று  நினைத்திருந்தேன்.  ஆனால், அது தவறு என சில நாட்களிலேயே தெரிந்து  கொண்டேன். ஆம், அமெரிக்கர்கள் நம் எல்லோரை விடவும் உணவு பிரியர்கள்  அல்லது சாப்பாட்டு ராமர்கள். நாம் கூட வித விதமாக சமைப்போமே ஒழிய  வெளியில் சென்று பல நாட்டு உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட  மாட்டோம். ஆனால், அமெரிக்கர்கள் அப்படி இல்லை. இனி அவர்களின் உணவு  பழக்க வழக்கங்களை பார்ப்போம்.

சிக்கன் திரியாக்கி:

பொதுவாகவே அமெரிக்கர்கள் நம்மைப் போல் தினமும் சமைத்து சாப்பிடுவதில்லை. அப்படியே சமைத்தாலும் நம்மைப் போல் ஒவ்வொரு வேலைக்கும் சமைக்க மாட்டார்கள். எனக்கு தெரிந்து சில நேரங்களில் பாஸ்த்தா போன்றவைகளை ஒரு தடவை சமைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து விட்டால் அது ஒரு வாரம் அவர்களுக்கு  காலை/இரவு உணவாக ஓடும். அது மட்டும் இல்லை. பெரும்பாலான அமெரிக்கர்கள் மதிய உணவை வீட்டில் தயாரித்து எடுத்து வருவதில்லை. வெளியில் தான் சாப்பிடுவார்கள்.


லசாங்கா:

மேலும் நம்மூரைப் போல் தெருவுக்கு ஒரு தனி தனி ஹோட்டல் போல்  இங்கு இல்லாததாலும், எல்லாமே செயின் ரெஸ்டாரன்ட் என்பதாலும் உணவு வகைகள் நேர்த்தியாகவும், சுகாதாரமாகவும், எந்த ஊருக்கு போனாலும் ஒரே  மாதிரியாக கிடைப்பதால் (நடுத்தர/மெக் டொனால்ட்ஸ் போன்ற ஹோட்டலில் சாப்பிடுவது அதிக செலவும்  இல்லை எனவும்  சொல்லலாம்) பெரும்பாலான அமெரிக்கர்கள் மதிய மற்றும் காலை மாலைகளில் வெளியிலேயே உணவை எடுத்துக் கொள்கிறார்கள்.

வெளியில் சென்று சாப்பிடுவது என்பது வெறும் வாய் ருசிக்காக மட்டும் இல்லை. நாம் குடும்பத்துடன்/நண்பர்களுடன் சினிமா பார்ப்பது, பூங்கா செல்வது போல், அமெரிக்கர்கள் ரெஸ்டாரண்டுக்கு சென்று குடும்பத்துடனோ பாய் பிரெண்ட்/கேர்ள் பிரண்டுகளுடன் உடனோ சேர்ந்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவர்கள். ஆர்டர் செய்த பின் உணவு வரும் வரை இருக்கும் நேரத்தையும், உணவு வந்த பின் பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் உணவை ஒரு மணி நேரம் சிறிது சிறிதாக ருசித்து அதே நேரத்தில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிடுவது அவர்களுக்கு பிடித்த விஷயம். சாப்பிடும் போது பேச கூடாது என்பது அமெரிக்காவில் இல்லை.


சப்வே சிக்கன் சான்ட்விச்: 

அதே போல் நான் முன்பே கூறியிருந்தது போல் அமெரிக்கர்கள் உணவு பிரியர்கள். ஒரு நாட்டு உணவையும் விட்டு வைக்க மாட்டார்கள். ஜாப்பனீஸ், சைனீஸ், கொரியன், மெக்சிகன், இந்திய உணவு வகைகள் என்று மாறி மாறி ருசிப்பார்கள். அதிலும் குறிப்பாக இந்திய உணவு வகைகளை அவர்கள் எடுத்து உண்ண தெரியாமல் உண்ணும் அழகே அழகு. தோசையை போர்க்காலும், ரைஸை தனியாகவும், குருமாவை தனியாகவும் எடுத்து ருசிப்பதை பார்க்கும் போது நமக்கு பாவமாக இருக்கும். பெரும்பாலும் அமெரிக்கர்களை குறி வைத்து நடத்தப் படும் இந்திய ரெஸ்டாரன்ட்களில், ஒரு அப்பளம் ஒன்றிரண்டு ஐட்டங்களை தொட்டுக்க கொடுத்து அதற்க்கு இரண்டு, மூன்று டாலர்கள் பில் போட்டு போடுவார்கள்.

ஆரஞ்சு சிக்கன்:

அமெரிக்க ரெஸ்டாரன்ட்களில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால், ஆர்டர் செய்து விட்டு முழுவதையும் சாப்பிட முடியாவிட்டால், மீந்து போன உணவை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லி விட்டால் போதும் அழகாக அதை ஒரு பாக்சில் போட்டு கொடுத்து விடுவார்கள். ஐயோ காசு கொடுத்து சாப்பிட முடியவில்லையே என ஏங்க வேண்டாம்.

கடைசியாக எனக்கு பிடித்த உணவு வகைகள். ஜாப்பனீஸ் சிக்கன் திரியாக்கி, ஆரஞ்சு சிக்கன், ஹனி சிக்கன், பாஸ்தா, லசாங்க போன்ற பிற நாட்டு உணவு வகைகளும், அவ்வப்போது மெக் டொனால்ட்ஸ் சிக்கன் சான்ட் விச், சப் வே சான்ட் விச் போன்றவைகள். சப் வே சான்ட் விச் மிகவும் ஹெல்தியானது. எல்லாம் பிரஷ் பிரட் மற்றும் வெஜிடபிள்களால் ஆனது.

நிச்சயமா நான் சாப்பாட்டு ராமன் இல்லீங்கோ...

மேலும் சில அமெரிக்க கலாச்சாரம் அமெரிக்கர்கள் பற்றிய பதிவில் இங்கே...

பேய் விரட்டும் அமெரிக்கர்கள்

Black Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்களும்

share on:facebook

Saturday, February 18, 2012

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா நடராஜன் கைதுசென்னை: நில அபகரிப்பு வழக்கில் சசிகலா கணவர்நடராஜன் தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. இவரது கணவர் நடராஜன். சசிகலாவும், அவரது உறவினர்களும், கட்சியிலும் , ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி சசிகலா, அவரது கணவனர் நடராஜன், திவாகரன், தினகரன், ராவணன். பாஸ்கரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதனையடுத்து போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேறிய சசிகலா தனது உறவினர் இளவரசி வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் வீடு இடிப்பு புகாரின் பேரில் சசிகலா சகோதரர் திவாகரன், திருவாரூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உறவினரான ராவணன், மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது நில அபகரிப்பு புகாரின் பேரில் சசிகலா கணவர் நடராஜனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர், தஞ்சை போலீசாரிடம் கொடுத்த புகாரில், தஞ்சையின் பிரதான இடத்தில் உள்ள தனக்கு சொந்தமான 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை நடராஜன் தூண்டுதலின் பேரில் சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், இடத்தை திருப்பி கேட்டபோது நடராஜனுடன் சேர்ந்து சிலர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். இதன் பேரில் தஞ்சை டி.ஐ.ஜி., அமல்ராஜ் தலைமையிலான போலீசார் பெசன்ட் நகரில் உள்ள வீட்டிலிருந்த நடராஜன் மற்றும் ஒருவரை அழைத்து சென்றனர்.

நன்றி: தினமலர் செய்தி.

share on:facebook

Wednesday, February 15, 2012

கவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி? - பெண்களுக்கு மட்டும்.


சமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் "வால் கிரீன்சில்" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள  பெண்களூக்கான 'கமிசோல்' என்று சொல்லப் படும் உள்ளாடையின் விளம்பரத்தை பார்த்தேன். 'மாத்தி யோசி' என்று சொல்வார்களே அது இது தான் போல. சில நேரங்களில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த கலர், டிசைன் என்று எல்லாம் தேர்வு செய்த பின் மேலாடையை அணிந்து பார்த்தால் அதில் கழுத்துக்கு கீழே பெரிய அளவில் மார்பக பகுதிகள் தெரியும் வகையில் மிகவும் லோ நெக்க்காக இருக்கும். அதை விரும்பாத பெரும்பாலான பெண்கள் அவர்களுக்கு உடை பிடித்திருந்தும் வேண்டா வெறுப்பாக வந்து விடுவார்கள். 

ஆனால், படத்தில் உள்ளது போல் ஒன்றிரண்டு வண்ணங்களில் 'கமிசோல்கள்'  பெண்கள் வாங்கி வைத்துக் கொண்டால் போதும். எவ்வளவு லோ நெக்காக  இருந்தாலும், மேலாடை அவர்களுக்கு பிடித்திருந்தால் இம்மாதிரி  கமிசோல்களை உபயோகித்து அழகான உடைகளை கவர்ச்சி இன்றி அதே நேரத்தில் அடுத்தவர்களை கவரும் வகையில் உடைகளை அணியலாம்.


இந்தியாவில் இம்மாதிரி 'கமிசோல்ஸ்' கிடைக்கிறதா என்று எனக்கு தெரியாது. இல்லை என்றாலும் கூட இம்மாதிரி இரண்டு மூன்று வண்ணங்களில் பெண்களே தைத்து வைத்துக் கொண்டால் அவர்களுக்கு பயன் படும் என்று நினைக்கிறேன்.

இம்மாதிரி வேறு சில 'மாத்தி யோசி' பொருட்களை பற்றி வேறு ஒரு பதிவில்...

வேறு சில 'மாத்தி யோசி' சமாச்சாரங்கள் கீழே...

மாத்தி யோசி - 1


மாத்தி யோசி - 2


share on:facebook

Tuesday, February 14, 2012

அமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்


அமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் மட்டுமே வெளி நாடு செல்ல முடிந்தது. ஸ்டேட்ஸ்  ரிடர்ன் என்று பெருமையாக சொல்வார்கள். அல்லது லண்டன் போயிட்டு வந்தவர் என்று கூறுவார்கள்.

இன்று அட்லீஸ்ட் நகரங்களில் தெருவுக்கு ஒருவர் அமெரிக்காவிலோ   அல்லது வேறு நாடுகளிலோ நல்ல வேலைகளில் உள்ளார்கள். இதில் பெரும்பாலும் கொடுத்து வைத்தவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஸ்பவுசுக்கு ஆன வீசாவில் வரும் கணவன்/மனைவிமார்களே. பெரும்பாலும் ஆண்கள் H1/L1 போன்ற வொர்க் வீசாவிலும் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் H4/L2 போன்ற டிபன்டன்ட் வீசாவிலும் வருவார்கள்.

உலகத்திலேயே அதிகம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் டிபன்டன்ட் வீசாவில் வருபவர்கள் தான். பின்னே? மற்றவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு  படித்து வேலை பார்த்து இன்டர்வியு அட்டன்ட் செய்து வாய்ப்புக்காக காத்திருந்து ஒரு வழியாக வந்து சேர்வார்கள். ஆனால், இதில் எந்த கஷ்டமும் இல்லாமல் ச்பவுஸ் என்ற ஒரே தகுதியுடன் நேராக அமெரிக்காவில் காலடி வைக்கும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு மட்டும் தான். அமெரிக்கா பற்றி சொல்லும் போது இன்னொன்றையும் நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். அமெரிக்காவை பொறுத்தவரை ஒருவருடைய டிப்பண்டன்ட்ஸ் அவருடைய மனைவி/கணவர் மற்றும் குழைந்தைகள் மட்டும் தான். பெற்றோர்கள் டிப்பண்டன்ட்ஸ் கிடையாது. அவர்கள் சுற்றுலா வீசாவில் மட்டும் தான் வர முடியும். அதிலும் ஏகப்பட்ட பார்மாலிடீஸ்.

சரி, அப்படி அமெரிக்கா வரும் இல்லத்தரசிகள் இங்கு எப்படி பொழுதை கழிக்கிறார்கள் என்பதை தான் இங்கு பார்க்க போகிறோம். இல்லத்தரசிகளை பொறுத்தவரை பெரும்பாலனோர் அமெரிக்காவை விரும்புகிறார்கள். அதற்க்கு காரணம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இங்கு அதிகம் கட்டுப்பாடு கிடையாது. அதாவது மாமனார், மாமியார், நாத்தனார் கட்டுபாடுகள் கிடையாது. பெரும்பாலும் திருமணமான புதிதில் வருபவர்களுக்கு தனிமையும் சந்தோசமும் தொடர்ந்து கிடைப்பதும் ஒரு காரணம். அதே போல் வீட்டு வேலைகள் என்று பார்த்தாலும் பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றுக்கும் மிஷினும் தேவை என்றால் எந்நேரமும் வெளியில் சாப்பிடும் வசதியும் நினைத்த நேரத்தில் தூங்கி எழும் வசதியும் ஒரு காரணம்.

இது ஒரு புறம் என்றால், அமெரிக்காவில் வேலை பார்க்கும் பெண்கள் நிலைமை வேறு. கணவன் மனைவி மட்டும் என்றால் ஓரளவு பரவாயில்லை. சமாளிப்பது ஒன்றும் பெரிதில்லை. ஆனால், குழந்தை(கள்) இருந்து வேலைக்கு இருவரும் சென்றால் அதை விட பெரிய கஷ்டம் வேறு இல்லை(குழந்தைக்கு தான்). காலையிலேயே எழுந்து குழந்தையை ஸ்கூலுக்கோ டே கேருக்கோ அனுப்பி விட்டு அவசர அவசரமாக அலுவலகம் சென்று நாள் முழுதும் குழந்தை சாப்பிட்டதா தூங்கி இருக்குமா என கவலை பட்டுக் கொண்டே மாலை ஆனதும் சரியான நேரத்துக்கு சென்று குழந்தையை மீண்டும் டே கேரில் இருந்து அழைத்துக் கொண்டு வருவதும் என சற்று கடுமையான பணி தான். அமெரிக்கா என்பதால் குழந்தை வளர்ப்பில் தாய் தந்தை என இருவரும் பாகுபாடு இல்லாமல் பொறுப்புகளை எடுத்துக் கொள்வார்கள். அதாவது நான் மேலே கூறியதை சில பல நேரங்களில் குழந்தையின் தந்தையும் செய்வார்.

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் தோழி தன் இரு வயது குழந்தையை டே கேரில் விட்டு விட்டு மதிய உணவின் போது எப்போதும் குழந்தையை பற்றியே பேசிக்கொண்டும், நினைத்துக் கொண்டும் அவருக்கு தொண்டைக் குழிக்குள் உணவு இறங்க கூட மறுக்கும். அந்த அளவிற்கு குழந்தையின் பிரிவு அவரது ஏக்கத்தில் தெரியும். இந்தியா என்றால் அட் லீஸ்ட் குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு பாட்டி தாத்தாவோ இல்லை வேறு யாரோ இருப்பார்கள். இங்கு தான் அதுவும் கிடையாதே. அப்படி குழந்தையை விட்டு விட்டு இருவரும் ஏன் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சரி அதை அப்படியே விட்டு விடுவோம்.

அடுத்து...ஜீன்சுக்கு பழகிப் போன தமிழ் பெண்கள்.

உங்களுக்கு தெரியுமா...?

அமெரிக்காவில் இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்?share on:facebook

Sunday, February 12, 2012

தமிழ், தமிழர் பெருமை சாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரி.


தாய் மொழி தமிழில் பேசுவதையே இழுக்காக நினைக்கும் நம்மில், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து, இன்று ஓர் உயர் பதவியில் இருந்து கொண்டு முடிந்தவரை கொஞ்சும் தமிழில் இவர் பேசுவதை நிச்சயம் நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.  

அது மட்டுமில்லாமல், தமிழக மாணவர்கள் நலனில் இவர் காட்டும் அக்கறையும், அவர்கள் அமெரிக்கா சென்று எளிதாக உயர் கல்வி கற்க இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், மிகவும் பாராட்டத்தக்கவை.   

நன்றி: தினமலர்.com

share on:facebook

Wednesday, February 8, 2012

அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா?

அமெரிக்கர்கள் தங்களை அதிகாரம் செலுத்தி வந்த ஐரோப்பியர்களிடம் இருந்து விடுதலை வாங்கிய பின் ஒன்று, புதிது புதிதாக கண்டு பிடித்தார்கள் அல்லது அது வரை ஐரோப்பியர்கள் உபயோகித்து வந்த எல்லாவற்றையும் மாற்றி அமைத்தார்கள். அதனால் தான் இன்றும் அமெரிக்கா செல்பவர்களுக்கு முதலில் பல விஷயங்கள் புதிதாக தெரியும்.

அமெரிக்க பள்ளி கல்வி முறையும் அப்படிதான். இங்கு பள்ளி கூடத்தில்  ஒவ்வொரு பீரியட் முடிந்தவுடன் மாணவர்கள் தான் அடுத்த பாடத்திற்காக வேறு அறைகளுக்கு செல்ல வேண்டும். அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு அறை உண்டு. வெவ்வேறு பிரிவுகளில் இருந்து மாணவர்கள் தான் மற்றொரு பாடத்திற்காக வேறு வேறு அறைகளுக்கு செல்ல வேண்டும். ஆசிரியர்கள் ஒரே அறையில் தான் இருப்பார்கள்.

அதே போல், ஒவ்வொரு நாளும் P.E. எனப்படும் உடற் கல்வி இங்கு  கட்டாயம். பொதுவாக P.E. யில் மைல் ஓட வைப்பார்கள். அதாவது,  வருடத்தின் முதல் உடற் கல்வி வகுப்பின் போது எல்லோரையும்  கையில் கடிகாரம் இன்றி ஒரு மைல் ஓட சொல்வார்கள். ஒரு மைல் ஓடி முடிக்கும் போது எவ்வளவு நேரம்  எடுத்துக் கொண்டார்கள்  என குறித்துக் கொள்வார்கள். அடுத்த நாளில் இருந்து, தினமும் முதல் நாள்  எடுத்துக் கொண்ட நேரத்துக்கு அதிகமாகாமல்  ஒவ்வொரு நாளும் எல்லோரும் ஒரு மைல் ஓடி முடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களின் கிரேட் குறைந்து விடும். ஆம், உடற் கல்வி மதிப்பெண்களும் கிரேட் சிஸ்டத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இன்னொரு முக்கிய அம்சம், எல்லோரும் இங்கு எதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் வகுப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, இசை கருவி வாசித்தல், அல்லது நாடகம் நடித்தல் என எதாவது ஒன்று கட்டாயம் பழக வேண்டும். இதுவும் கிரேட் சிஸ்டத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கென்று தனியே லாக்கர் வசதிகள்  உண்டு. உடற் கல்வி வகுப்பின் போது மாணவர்கள் தங்கள் உடைகளை  மாற்றி கொள்வதற்கும்  தங்களின் வாத்திய கருவிகளை பாத்து காப்பாக  வைத்து கொள்வதற்கும் இது பெரிதும் உதவும். ஆனால், அதே நேரம் பல பள்ளிகளில் பாத்ரூம்களில் முகம் பார்க்கும்  கண்ணாடிகள் இருக்காது. மாணவ/மாணவிகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கவே இப்படி. 

இவையெல்லாம் அமெரிக்காவில் உள்ள பப்ளிக் ஸ்கூலில் பொதுவாக உள்ள நடை முறைகள். சில மாகாணங்களில் அம்மாகான சட்டத்திற்கு ஏற்ப வேறு மாதிரியாகவும் இருக்கும். அது தவிர தனியார் பள்ளிகள் எப்படி இருக்கும் என்று கூட எனக்கு தெரியாது. ஏனென்றால் இங்கு பப்ளிக் பள்ளிகளே அதிகம். தனியார் பள்ளிகள் மிகுந்த காஸ்ட்லி ஆனதும் கூட.

படம்: என் குழந்தைகள் படித்த அமெரிக்க அரசு பள்ளி.

இன்னும் பல சுவாரசியங்கள். அடுத்த பதிவில்...

அமெரிக்கா பற்றிய வேறு சில சுவாரசிய பதிவுகள்...

டாலர் பிச்சை
பேய் விரட்டும் அமெரிக்கர்கள்

share on:facebook

Wednesday, February 1, 2012

கேப்டனுக்கு ஆப்பு. விரைவில் சிறை? அரசு நடவடிக்கை.

எந்த நேரத்தில் "காப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை" என  தலைப்பிட்டு இந்த பதிவை போட்டேனோ. நேற்று தமிழக சட்ட மன்றத்தில்  நடை பெற்ற நிகழ்வுகளை பார்க்கும் போது மேலே உள்ள தலைப்பு உண்மை  ஆகிவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது.    

ஆனால் ஒன்று. சட்ட சபையில் நடந்த விவாதத்தில்(சண்டையில்),  முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதா என்னமோ ஒரு கட்சி பொது  கூடத்தில் எதிர் கட்சியை சவால் விட்டு பேசுவது போல் விஜயகாந்த்தை  நோக்கி பேசியதும், அதன் பிறகு அக்கட்சியினரை பார்த்து விஜயகாந்த்  ஏதோ சினிமாவில் வில்லன்களை பார்த்து சவால் விடுவது போல் நடந்து  கொண்டதும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக சபாநாயகர் எதிர் கட்சியினரை மன்றத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்ட தொனியில்  தெரிந்த அலட்சியமும், இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது  இவர்களை சட்ட மன்றத்திற்கு அனுப்பியதற்கு நாம் தான் வருத்தப் பட  வேண்டும்,  வேதனைப் பட வேண்டும்.

அந்த அறிய கட்சியை பார்க்க தவறியவர்கள் இங்கே பார்க்கலாம்... காணொளி நன்றி: நக்கீரன் வெப் டி.வி.

share on:facebook