Monday, August 27, 2012

பதிவர் மாநாடு: தீர்மானகளும் அடுத்த மாநாட்டு தேதியும்?


எத்தனையோ மாநாடுகள் பார்த்திருக்கிறோம். அரசியல் கட்சி மாநாடுகள், ரசிகர் மன்ற மாநாடுகள், ஊழியர் சங்க மாநாடுகள். அங்கெல்லாம் என்ன நடக்கும்னு எல்லோருக்கும் தெரியும்.

ரசிகர் மன்றங்களுக்கு தன் தலைவனை புகழ் பாட மட்டுமே தீர்மானங்கள் இயற்றப்படிருக்கும். அரசியல் கட்சிகளுக்கு சொல்லவே வேண்டாம். எது எது அவர்களால் செய்ய முடியாதோ அதை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்து கிழிப்போம் என தீர்மானங்களாக தீட்டி இருப்பார்கள். ஊழியர் சங்கங்களோ, தங்களுக்கு தேவை என்றால் ஆளும் கட்சியை புகழ்ந்தும், தேவை இல்லாதபோது எதிர் கட்சிகளோடு சேர்ந்து கொண்டு கண்டன தீர்மானங்களும் போட்டுத் தாக்கும்.

ஆனால், பதிவர் மாநாடு அப்படி  நடந்ததாக எனக்கு தெரியவில்லை. நமக்கு மற்றவர்களை போல் எந்த நிர்பந்தமும் இல்லை. இருந்தும் நம் மாநாட்டில் அப்படி ஏதும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டனவா என எனக்கு தெரியவில்லை. அப்படி ஏதும் இருந்தால், மாநாட்டின் தீர்மானங்களை பற்றி  தெரிந்து கொள்ள உங்களைப் போலவே நானும் ஆவலாக உள்ளேன்.

அது மட்டும் அல்லாமல் குறிப்பாக மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதவர்களின் முதல் கேள்வியாக தற்போது இருப்பது, அடுத்த மாநாடு எப்போது என்பது தான் (ஆமா முதல் மாநாட்டுக்கே வர வழிய காணோம். அதுக்குள்ளே அடுத்த மாநாடு பத்தி கேள்வி கேக்குறாரு பாருன்னு யாரோ சொல்றது கேக்குது. என்ன பண்றது ஒரு நப்பாசைதான்).


இந்த கேள்விகளையெல்லாம் கேட்க எனக்கு தகுதி இருக்கானு தெரியல. ஏனென்றால் நான் மாநாட்டில் காலத்து கொள்ள (முடிய)வில்லை. இருப்பினும் முடிந்த வரை நிகழ்சிகளை நேரலையின் மூலம் கண்டுகளித்தேன். மதியத்திற்கும் மேல் என்னால் பார்க்க இயலவில்லை. ஒரு வேலை அந்த நேரத்தில் தீர்மானங்கள் ஏதும் படிக்கப்பட்டதா என தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் அதை என்னைப்போல பதிவர்களுக்காக ஒரு பதிவாக சம்மந்தப் பட்டவர்கள் போட்டால் நன்றா இருக்கும்.

பதிவர் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுத்த அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் பதிவுலகம் சார்பாக என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட கேள்விகள் என் ஆர்வ மிகுதியால் கேட்கப்பட்டவையே தவிர யாரையும் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். . அதே போல் எல்லோரும் மாநாடு முடிந்து மீண்டும் அவரவர் பணிகளில் மூழ்கி இருப்பீர்கள். சிலருக்கு அயர்ச்சியாக கூட இன்னும் இருக்கலாம். ஆகவே ஆற அமர இதை பற்றிய விபரங்களை தெரிவித்தால் போதுமானது. மீண்டும் மாநாட்டு நிர்வாகிகளுக்கு என் நன்றிகள்.



பதிவர் மாநாடு தொடர்புடைய மற்ற பதிவுகள்...




பதிவர் மாநாட்டு நிகழ்சிகள். சுடச் சுட Recorded videos...

பதிவுலக மாநாடு 1.00 PM update. பதிவுலகில் அதிகம் சம்பாதித்தவர் யார்...

பதிவர் மாநாடு12.27 PM update - சில சுவாரசியங்கள்...சில ஏமாற்றங்கள்...



share on:facebook

Sunday, August 26, 2012

பதிவர் மாநாட்டு நிகழ்சிகள். சுடச் சுட Recorded videos...

லிங்க்-1

லிங்க்-2

லிங்க்-3

லிங்க்-4

லிங்க்-5 (நீண்ட நேரம் ஓடக்கூடியது)

லிங்க்-6 (நீண்ட நேரம் ஓடக்கூடியது)


share on:facebook

பதிவுலக மாநாடு 1.00 PM update. பதிவுலகில் அதிகம் சம்பாதித்தவர் யார்...

இந்த முறையும் பேசிய பதிவர் யாரென்று அறிய முடியவில்லை. பதிவர் அறிமுகத்தின் போது ஒரு முறைக்கு இரு முறை பதிவர் பெயரை அறிவித்தால் நன்றாக  இருக்கும்.

இளைய பதிவரான இவர், தான் அதிகமாக சம்பாதித்தது வலைத்தளம் மூலமாகத்தான் என கூறினார். ஆம், பதிவுலகம் மூலமாக நிறைய நண்பர்களை நான் சம்பாதித்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல், பதிவர்களுக்கு website அமைத்துக் கொடுப்பதின் மூலம் இது வரை 10,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக்கிறேன் என கூறினார்.

அடுத்து பெரிதும் எதிர்பார்த்த 'ஜாக்கி' சேகர். மேடையில் அமர்ந்திருந்தவர் அடித்த கமென்ட் போல, பிளாக்குகளில் கலக்கும் இவர், மேடையில் பேச சிறிது சிரமபட்டார் அல்லது அதிகம் பேசவில்லை. We expected more  from you Sekar.

இந்த பதிவுலகத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால், மற்ற எந்த குழுமத்தை விட இங்கு variety அதிகம். இருபது வயதுக்கும் குறைவான பதிவர்கள் முதல் அறுபது வயதுக்கும் மேற்பட்ட பதிவர்கள் முதல் யாரும் தங்களை சிரியவர்களாகவோ பெரியவர்களாகவோ தங்களை நினைத்துக் கொள்ளாமல் எல்லோரும் தாங்கள் எல்லோரும் ஒரே இனம் போல் பேசி செயல்படுவது தான்.



share on:facebook

Saturday, August 25, 2012

பதிவர் மாநாடு12.27 PM update - சில சுவாரசியங்கள்...சில ஏமாற்றங்கள்...

பதிவர் மாநாட்டின் அறிமுக நிகழ்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்றுக்கொண்டிருக்கிரார்கள். உண்மையிலேயே ஆவலாக கண்டு களித்துக் கொண்டிருக்கிறேன்.

பதிவரின் பெயர் யாரென்று சரியாக காதில் விழவில்லை. ஆனால் அவர் மிகவும் காமெடியாக பேசினார். திடீரென்று நான் இலக்கியத்திற்கு ஆற்றி வரும் தொண்டு மிக பெரியது என  கூறினார். என்னடா இது?  யார் இவர் என பார்த்தால். இறுதியில் இப்படி முடித்தார்.

'நான் கவிதைகள் ஏதும் என் 'பிளாக்கில்' எழுதுவதில்லை இப்போ சொல்லுங்கள், நான் இலக்கியத்திற்கு ஆற்றும் தொண்டு மிக பெரிது தானே என்று.

அடுத்து சிரிப்பு போலிஸ் பதிவரை அறிமுக படுத்த அழைத்தார்கள். நேரில் எப்படி இருப்பார் என பார்க்க ஆவலுடன் இருந்தேன். என்ன ஆயிற்று என  தெரியவில்லை நண்பருக்கு. மேடைக்கு வரவில்லை.

பல பதிவர்கள் மிகவும் சுருக்கமாக தங்க அறிமுகத்தை முடித்துக் கொண்டாலும், சில பதிவர்கள் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொண்டார்கள் அவர்களின் பதிவு பற்றியும், அவர்களை பற்றியும் நன்கு அறிமுகப்படுத்தினார்கள்

பதிவர்கள் பக்கம் கேமரா திரும்பிய போது  பதிவர்கள் முகங்களை காண முடிந்தது. அதிகமானோர் சற்று முதிய பதிவர்களாக கட்சி அளித்தார்கள். அதுவும் சற்று வருத்தம் தான்.

அடுத்த update சிறிது நேரம் கழித்து....






share on:facebook

பதிவர் மாநாடு. தடங்கல் இல்லா நேரடி ஒளிபரப்பு. காணத் தவறாதீர்கள்.


பதிவர் மாநாட்டின் நிகழ்சிகளை நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நன்றி...

நேரலையை காண இங்கே சொடுக்கவும்.

share on:facebook

Friday, August 24, 2012

பதிவுலக மாநாடு. அமெரிக்காவிலிருந்து ஆதிமனிதன் ஆஜர்

பதிவுலக மாநாடு. அமெரிக்காவிலிருந்து ஆதிமனிதன் ஆஜர். இப்படி எழுத ஆசைதான். இப்படி எழுதியும் கூட இருக்கலாம். ஒரு சின்ன 'ஸ்லிப்'. ஆகஸ்ட்டில் நடக்கும் மாநாட்டிற்கு ஜூனில் வந்துவிட்டேன்.

ஓரிரு வாரங்களுக்கு முன் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபோது ஆஹா நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது என மகிழ்ந்திருந்தேன். அப்போது பார்த்தா என்னை மும்பைக்கு அனுப்ப வேண்டும் என் கம்பெனி? நண்பர் (வீடு திரும்பல்) மோகன் கூட என்னை அலை பேசியில் அழைத்து மாநாடு பற்றி கூறி அவசியம் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சரி மும்பையில் இருந்தாலும் அந்த வாரம் மட்டும் சென்னைக்கு எஸ்கேப் ஆகி மாநாட்டில் ஆஜர் ஆகிவிடலாம் என நினைத்திருந்த போது தான் வீட்டில் மனைவிக்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் போக கடந்த வாரமே இரு முறை சென்னை செல்ல நேர்ந்து விட்டது. அதனால் இந்த வாரம். மிகுந்த வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். No  way.

ஆனால் கடந்த ஓரிரு வாரமாக வலை உலகம் படும் பாடு அப்பப்பா...எந்த ஒரு கேப்பையும் விடாமல் பதிவர்கள் பதிவர் சந்திப்பை வைத்து பதிவாக போட்டு தாக்குகிறார்கள். 'ஆரிய கூத்தாடிக்கு காரியத்தில் கண்ணு'  என்று சொல்வார்கள். அது போல், பதிவர் மாநாட்டுக்கு போகலாமா வேண்டாமா? பதிவர் மாநாடு அவசியமா? பதிவர் மாநாட்டை புறக்கணிப்போம்....என்று மாநாட்டை வைத்து எத்தனை பதிவுகள். அப்புறம் நான் மட்டும் சும்மா இருப்பேனா?

அதான், பதிவர் மாநாட்டுக்கு, அமெரிக்காவிலிருந்து ஆதிமனிதன் ஆஜர்...ஹி  ஹி ஹி ....   

எப்படி இருந்தாலும் பதிவர் மாநாடு சிறப்புடன் நடை பெற என் இனிய வாழ்த்துக்கள். மாநாட்டை பற்றி சுட சுட பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும் நூற்றுக்கணக்கான பதிவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன்.

அதோடு அடுத்த மாநாடு எப்போ என விழா குழுவினர் அறிவித்தால் இன்னும் சந்தோசம்.

share on:facebook

Thursday, August 23, 2012

IT (வேலை) படுத்தும் பாடு 

ஒவ்வொரு தொழிலிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. உதாரணத்திற்கு சினிமாவை எடுத்துக் கொண்டால் நடிகர்/நடிகையர் எல்லோரும் சந்தோசமாக வாழ்வதாக நாம் நினைத்தால் அதை விட முட்டாள்தனம் வேறு ஏதும் இல்லை.

அது போல் தான் இந்த IT  துறையும். பணம் வேண்டுமானால் அவர்கள் ஒரு மாவட்ட கலெக்டரை விட அதிகம் சம்பாதிக்கலாம். நடிகர்களை போல பல நாடுகள் சுற்றி பார்க்கலாம். ஆனால் அவை ஒன்றொன்றுக்கும் அவர்கள் படும் பாடும் இழப்பதும் அதிகம்.

முதலில் IT யில் வேலை கிடைப்பது ஒன்றும் முன் போல் சாதாரண விஷயம் இல்லை. எல்லோரும் புத்திசாலிகளாக பிறப்பதில்லை. அதி புத்திசாலி மாணவர்கள் சிலரை தவிர மற்ற எல்லோரும் இந்த வேளையில் சேருவதற்கு படும் பாடு அவர்களிடம் கேட்டால் தான் தெரியும். வருடத்திற்கு ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு மேல் தமிழகத்திலிருந்து மட்டும் இஞ்சினியர்களாக வெளியே வருகிறார்கள். இவர்களில் ஐந்தில் ஒரு பகுதி மாணவர்கள் கூட நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவதில்லை.

மற்ற எல்லோரும் குறைந்தது ஆறு மாதத்திலிருந்து இரண்டு வருடம் மூன்று வருடம் படாத பாடு பட்டு தான் இத்துறைக்குள் நுழைய முடிகிறது. இந்த காலத்தில் இவர்கள் அதை படித்தால் வேலை கிடைக்கும் இதை படித்தால் வேலை கிடைக்கும் என்று பணம் செலவழித்து படிப்பதும், ஒவ்வொரு கம்பெனியாக நேர்முகத் தேர்வுக்கு அலைவதை போல் ஒரு கொடுமை வேறொன்றும் இல்லை. இதை விட பெரிய கொடுமை இவர்களோடு படித்த மற்ற மாணவர்கள் நல்ல கம்பெனிகளில் வேலைக்கு சேர்ந்திருந்தால் மற்றவர்களாலும், வீட்டில் உள்ளவர்களாலும் இவர்களுக்குள் ஏற்படும் குற்ற உணர்ச்சி தாங்க முடியாதது. இவை எல்லாம் இவர்களின் தன்னம்பிக்கையை சில நேரம் பதம் பார்த்து விடும்.

இதெல்லாம் முடிந்து ஒரு வழியாக வேலை கிடைத்தது என்றால் அது நிச்சயம் உள்ளூரில் இருக்காது. ஏன், நம் மாநிலத்தில் கூட இருக்காது. பெங்களூரு, மும்பை என அனுப்பி விடுவார்கள். அங்கு நமக்கு இந்தியும் தெரியாமல் முகங்களையும் தெரியாமல் ஓரிரு ஆண்டு வேலை பார்த்த பிறகு தான் 'டிரான்ஸ்பர்' என்ற பேச்சையே எடுக்க முடியும். அநேகமாக தற்போது எல்லா கம்பெனிகளும் இரண்டு வருடத்திற்காவது 'பான்ட்' போட்டு விடுவார்கள். நம்மூரிலேயே வேறொரு வேலை கிடைத்தாலும் இடையில் மாற முடியாது.

இதையெல்லாம் சமாளித்து ஓரளவு ஸ்டெடி ஆகும் போது அவன்லாம் அமேரிக்கா போகிறான் ஆஸ்ட்ரேலியா போகிறான் நீ எப்ப போக போற என்று அடுத்தட கட்ட 'பியர் பிரஷர்' வந்து விடும். சும்மாவா, பக்கத்து சீட்டு காரன் ஒரு மூணு மாதம் அமேரிக்கா போயிட்டு வந்ததிற்கே கைல ஐபோன் ஐபாட்னு சுத்திக்கிட்டு அலைஞ்சா நம்மால சும்மா இருக்க முடியுமா? அடுத்த போராட்டம் எப்படியாவது 'ஆன் - சைட்', அதாங்க அமேரிக்கா அல்லது வேறு நாடு போறதுக்கு என்னவெல்லாம் பண்ணனும்னு ராவும் பகலும் நேரம் பார்க்காம பிராஜக்ட் மேனேஜர் சொல்ற வேலையெல்லாம் பாத்துக் கொடுக்கணும்.

ஒரு வழியா எவனோ ஒருத்தன் கல்யாணத்திற்கு இந்தியா வரான்னு அந்த கேப்புல நமக்கு ஒரு சான்ஸ் கிடைத்து அமேரிக்கா போனா அது மட்டும் சும்மாவா? அமேரிக்கா போறது அப்படி என்ன கஷ்டமான்னு கேகுறீங்களா? சொர்கத்துக்கே டிக்கெட்  வாங்கி போயிட்டு வந்துடலாம். ஆனா இந்த அமேரிக்கா போறது அப்படி ஒன்னும் ஈசி இல்லீங்கோ...

அதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...

   

share on:facebook

Tuesday, August 21, 2012

பதிவுலக மாநாடும் பத்து தீர்மானங்களும் ...


அன்பார்ந்த பதிவர்களே. ஏதோ அழையா விருந்தாளியா என்னைய நினைச்சுக்காதீங்க. முகம் காட்டுவதில்லை என்றாலும், சில முதிய (அதாங்க சீனியர்) பதிவர்களிடம் அடிக்கடி தொடர்பில் உள்ளவன் தான் நான். இந்த முறை ஒரு சீனியர் பதிவரிடம் இருந்து விழாவிற்கு வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பும் வந்தது (உண்மையிலேயே பெருமையா இருந்ததுங்கறேன்). ஆனால் அவருக்கே தெரியும் நான் தற்சமயம் தமிழகத்தில் இல்லை என்பது. சரி விசயத்திற்கு வருவோம்.

எத்தனையோ மாநாடுகள் நடக்கின்றன. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதுண்டு. ஆனால் அதை எத்தனை பேர் பின் பற்றுவார்கள் அல்லது அது சம்பந்தமாக அதன் பின் முயற்சி எடுப்பார்கள் என யாருக்கும் தெரியாது. பதிவுலகம் அப்படியில்லை. இந்த பதிவுலக விழாவும் அப்படி ஒன்றும் 'ஷோ'வுக்காக நடத்தப் படவில்லை. அநேகமானவர்கள், தங்களின் அனேக பதிவுகளில் சமூகத்தை பற்றி பேசியிருக்கிறார்கள் எழுதி இருகிறார்கள். அப்படியானால் இம்மாநாட்டில் இடம் பெறப்போகும் தீர்மானங்கள் நிச்சயம் நன்மை பயப்பதாக இருக்கும்.

விழா குழுவினர் என்ன தீர்மானங்கள் வைத்திருக்கிறார்கள் என எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை மிகவும் எளிதான அதே நேரம் அந்த தீர்மானத்தை நாமே நிறைவேற்ற முடியும் என்ற வகையில் அது நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்றால் இச் சிறுவன் கூறும் சில தீர்மானங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

1. சாலைகளில் செல்லும் போது எதிரிலோ பின்னாலோ 'ஆம்புலன்ஸ்' வண்டி வந்தால் அடுத்தவர்க்கு முன் உதாரணமாக முடிந்த அளவு நம் வண்டியை சாலை ஓரம் ஓரம் கட்டி வழி விடுவோம் என இந்நாளில் அனைத்து பதிவர்களும் உறுதி எடுப்போம்.

அந்த ஒரு நொடி ஒரு உயிரை காப்பாற்ற உதவுமே! அதில் உள்ளவர்கள் நம் உறவாக கூட இருக்கலாமே.

2. நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது அவசியம் 'சீட்' பெல்ட் அனிந்து செல்வோம். பெரும்பாலான வாகன விபத்துகளில் சீட் பெல்ட் அணியாததினாலேயே பெரும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. சீட் பெல்ட் அணிவதால் நாம் உள்ளேயே மாட்டிக்கொண்டு நசுங்கி விடுவோம் என்பது அறியாமை. Most of the death happens because of being thrown out / been hit internally என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

3. வாங்கனத்தை ஓடும் போது செல் போன் பேச மாட்டேன் என உறுதி எடுத்துக் கொள்வோம். செல் போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டியதால் ஏற்படும் விபத்துகள் உங்களை மட்டும் அல்லாமல் ஒன்றும் அறியா மற்றவர்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ணும் என்பதை நான் கூற வேண்டியதில்லை. சமீபத்து எடுத்துக்காட்டு சென்னை அண்ணா மேம்பாலத்தில் நடந்த விபத்து.

4. இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அவசியம் தலை கவசம் அணிந்து ஒட்ட வேண்டும். இரு சக்கர வாகன விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடி படுவதாலேயே உயிரழப்பு ஏற்படுகிறது. தலைக்கு வந்தது ஹெல்மெட்டோடு போச்சு என்று புதிய பழமொழி உருவாக்குவோமே!

5. அப்புறம் இது ரொம்ப ஈசிங்க. காசு பணம் செலவு இல்லைங்க. அதிலும் சென்னையை பொறுத்தவரை இதை கடைபிடிக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியமுங்க. 'குப்பையை குப்பை தொட்டியில் போடுவோம்'. இதை மக்களுக்கு விளங்க வைக்க அரசாங்கம் அவ்வளவு செலவு செய்யுதுங்க. சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லும். வீட்ட தினமும் பெருக்கி சுத்தமாக வைத்திருக்கும் நாம் வெளியில் வந்தவுடன் பேப்பரை கசக்கி ரோட்டில் தூக்கி போடுவோம். நாடு சுத்தமா இருந்தாதான் வீடும் சுத்தமா இருக்கும்முங்க.

6. வேணாங்க, இதுவே கொஞ்சம் அதிகமோன்னு இப்ப எனக்கு தோணுது. அது மட்டும் இல்லாமல், பிற பதிவர்களுக்கும் கொஞ்சம் இடம் வைப்போமே. ஆறிலிருந்து பத்தோ இல்ல அறுபதோ, நீங்க ஏதும் சொல்லனும்னு நினைச்சா அப்படியே சேத்து விடுங்க....


பதிவர் திருவிழா சிறப்பாக நடக்க இந்த சிறியவனின் வாழ்த்துக்கள். ஏதும் அதிக பிரசிங்கித்தனமா எழுதி இருந்தா மன்னிச்சுடுங்க....



share on:facebook

Thursday, August 16, 2012

இந்த இந்தி காரங்களே இப்படிதான்ப்பா..


இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். இப்படி ஒரு காலத்தில் கோஷம் போட்டவன் தான் நான். ஆனால், அதை படிக்காததால் இழந்தது நிறைய என்பதை காலம் தான் எனக்கு உணர்த்தியது. ஆமா, தெரியாமதான் கேக்குறேன்? ஹிந்தி படிச்சா நாம என்ன கெட்டா போய்டுவோம்?

சரி, முதலில் இந்தி பேசும் மக்கள் வாழும் ஊர்களில் உள்ள நல்ல விசயங்களை பார்ப்போம். மும்பைக்கு நீங்கள் போய் இருந்தீர்களானால் நிச்சயம் இதை விரும்பி இருப்பீர்கள். அது அங்குள்ள (பெரும்பாலான) ஆட்டோ காரர்களின் நேர்மை. நமக்கு இந்தியே தெரியாது என அவருக்கு தெரிந்தாலும், ஒழுங்கான மீட்டர் போட்டு, நேர் வழியில் சென்று மீட்டர் பார்த்து காசு வாங்குவது. ஒரு மொழி தெரியாத ஊருக்கு போகும் போது இதை விட comfort என்னங்க வேணும். ஒரு ருபாய் சில்லறை நமக்கு திரும்பி கொடுக்க வேண்டும் என்றால் கூட பாக்கெட்டை துலாவுவார்கள்.

அடுத்ததாக மும்பை அதன் சுற்றுள்ள நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் பாதுகாப்பு தன்மை. பெரும்பாலான குடியிருப்புகளில் வேலைக்கு சேரும் பணிப்பெண்ணாக இருக்கட்டும், செக்கூரிட்டியாக இருக்கட்டும், எல்லோரும் காவல்துறை வெரிபிகேஷன் செய்யப்பட்டு அவர்களை பற்றிய முழு வரலாற்றையும் சரிபார்த்த பிறகுதான் வேலைக்கு சேர்க்கிறார்கள். பல இடங்களில் வீட்டு சாவியை செக்கூரிடியிடம் கொடுத்து விட்டு போவதை பார்த்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல், வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் அவர்களிடம் சாவியை வாங்கி வேலை முடித்து மீண்டும் சாவியை செக்கூரிட்டியிடம் கொடுத்து விட்டு செல்கிறார்கள்.  

Exceptions are everywhere. இருந்தாலும் நான் பார்த்தவற்றை தான் இங்கு பகிர்கிறேன்.

அது போல் சமீபத்தில் பார்த்த சில பொதுவான விஷயங்கள். அநேகமாக எல்லா மோட்டார் சைக்கிளிலும் மழை காலத்தில் முன்புறம் உள்ள ஹெட் லைட் மற்றும் இன்டிகேடர்களை மழையிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அதை சுற்றி ஒரு கவர் போட்டுள்ளார்கள்.

அலுவலகம் செல்லும் பெரும்பாலானோர் backpack என்று சொல்லக்கூடிய பாக்கை எடுத்து செல்கிறார்கள். இதில் என்ன புதுமை என்கிறீர்களா? நாம் எல்லாம் backpack பின் புறம் தான் மாட்டிக்கொள்வோம். இங்கு பெரும்பாலானோர் அதை முன் பக்கம் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலும் டூ வீலரில் செல்பவர்கள் முன் பக்கம் தான் மாட்டிக் கொள்கிறார்கள். இதனால் இரு பயன்கள். ஒன்று, முன் பக்கம் மாடிக்கொள்வதால் உங்களுக்கு தெரியாமல் யாரும் பாக்கில் உள்ளதை எடுத்து விட முடியாது. இன்னொன்று வண்டியில் உங்களுடன் வேறு யாரும் உட்கார்ந்து கொண்டு வந்தால் உங்கள் பாக் முன் பக்கம் இருப்பதால் அவர்களால் வசதியாக உட்கார முடிகிறது.

வட நாட்டில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடாவிட்டாலும் மும்பை போன்ற இடங்களில் pure vegetarian ஹோட்டல்கள் பார்ப்பது அரிது. அதை விட முக்கியம் பெரும்பாலான ஹோட்டல்கள் பார்களுடன் அமைத்திருப்பது. Family restaurant & Bar என்று இருந்தால் அங்கு குடும்ப சகிதம் போய் வெறுமனே சாப்பிடலாம்/சரக்கு அடித்துக்கொண்டும் சாப்பிடலாம். வெறும் Family restaurant என்றால் அங்கு சரக்கு அடிக்கும் வசதி கிடையாது. அதை விட இங்கு குடும்பத்துடன் சாப்பிட ஹோட்டலுக்கு வரும்போது ஆண்கள் (சில சமயம் வீட்டுப்பெண்களும்) பீர்/ஹாட் அடிப்பார்கள். குழந்தைகள் அவர்கள் கூடவே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் அல்லது அங்கேயே விளையாண்டுக் கொண்டிருப்பார்கள்.










share on:facebook

Wednesday, August 15, 2012

அப்பா என்னும் மந்திர சொல்.

இன்று சுதந்திர தினம். இந்த நாள் மற்ற பண்டிகைகளை விட சற்று வித்தியாசமானது. தீபாவளிக்கு இந்துக்கள் புது ஆடை அணிவார்கள். அதே கிறிஸ்துமஸ், ரம்சானுக்கு பண்டிகை வந்தால் அந்தந்த மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அநேகமாக இந்தியாவில் உள்ள அனைவரும் கொண்டாடும் தினம் இந்த சுதந்திர தினமாகத் தான் இருக்கும். எனக்கும் அப்படி தான் இருந்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை.

அம்மா ஒரு தலைமை ஆசிரியர், அண்ணன் ஒரு பேராசிரியர், நான் என் மனைவி கூட ஒரு காலத்தில் விரிவுரையாளர்களாக பனி புரிந்ததினாலோ என்னவோ சுதந்திர தினம் எங்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவே இருந்து வந்தது. அது மட்டும் அல்லாமல், இன்றைய தினம் என் அக்காளின் பிறந்த நாளும் கூட. சுதந்திர தினத்தில் அவர் பிறந்ததால் அவருக்கு 'சுதந்திரா தேவி' என்று பெயர். ஒவ்வொரு முறையும் எல்லோரும் அவரை அழைத்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம். ஆனால், இன்று எங்கள் குடும்பத்திற்கு மட்டும் ஒரு சோக நாள்.

ஆம், கடந்த 2008 ஆம் ஆண்டு இதே தினம் எங்கள் தந்தை எங்களை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார்கள். பிள்ளைகள் எல்லோருடனும் அவர் ஒரு நண்பராக தான் பழகினார். அம்மா மிகவும் கண்டிப்பு. அதனாலோ என்னவோ, எங்கள் தந்தை எங்களிடம் கண்டிப்பு காண்பிக்கவே மாட்டார். கல்லூரி நாட்களில் pocket money அம்மா இரண்டு ரூபாய் தான் தருவார்கள். நான் ஐந்து ரூபாய் கேட்டால் உனக்கு எதற்கு அவ்வளவு பணம் என அம்மா கேட்பார். அப்பாவோ, அவன் காலேஜ் போகிறான். பிரண்ட்ஸ் கூட ஸ்நாக்ஸ் சாபிடுவான் அவனுக்கு பணம் குடு என கேட்டு வாங்கி கொடுப்பார்.

அது மட்டும் அல்ல, அரசியல், சினிமா, உலகம் என அனைத்தையும் எங்கள் தந்தையுடன் நாங்கள் அலசுவோம். பல நேரங்களில் சாப்பிடும் போது அரசியல் வாதங்கள் சண்டையாக மாறி விடும். அம்மா தான் சமாதானம்  செய்வார்.

அப்பாவுக்கு அடுத்தவர்களுக்கு உதவுவது மிகவும் பிடிக்கும். வீட்டின் வெளியே யார் வந்து யாசகம் கேட்டாலும் இல்லை என்று சொல்லக்கூடாது  என்பது அவர் உத்தரவு. 

அதே போல், ஜாதி மத பேதம் அவர் என்றுமே பார்த்ததில்லை. அதனால் இன்று வரை எனக்கும் ஜாதி மதத்தின் மேல் அப்படி பெரிதாக ஒரு ஈர்ப்பு இல்லை. கிராமத்திலிருந்து தஞ்சை டவுனில் உள்ள எங்கள் வீட்டிற்கு மாட்டு வண்டியில் நெல் ஏற்றி அனுப்பினால், அதில் வர விவசாய கூலி தொழிலாளிகள் போட்டி போட்டுக் கொண்டு நிற்பார்கள் ஒரே காரணம், "மாப்பிள்ளை" ஐயா(இப்படி தான் எல்லோரும் அப்பாவை கூப்பிடுவார்கள்). வீட்டுக்கு போனா நடு வீட்டுல உக்கார வச்சு வயிறார சாப்பாடு போடுவார்கள். செலவுக்கும், சினிமா பார்ப்பதற்கும் பணம் கொடுப்பார்கள் என்பதால் தான் போட்டி இருக்கும்.

தான் ஒரு மிராசுதார், முதலாளி என்று அவர் என்றுமே நினைத்ததில்லை. வேலை ஆட்களுடன் ஒன்றாக அவர்கள் வண்டியில் பின்னாடி உட்கார்ந்து கொண்டு செல்வார்.

அவரின் ஒரே ஆசை நான் இந்தியா வந்து எல்லோருடனும் இருக்க வேண்டும் என்பது அதே போல் நான் இங்கு வந்து அவரும் என் மேல் உள்ள பிரியத்தினால் ஒரு வாரம் என்னுடன் சென்னையில் தங்கி அடுத்த நாள் ஊருக்கு திரும்ப வேண்டிய நேரத்தில் தான் Massive Heart Attack வந்து கண நேரத்தில் கண் மூடிவிட்டார். எப்போதும் அவர் கூறி வந்ததெல்லாம், யாருக்கும் கஷ்டம் வைக்காமல் என் அப்பாவை போல் (எங்கள் தாத்தா) பொட்டுன்னு போய்டணும் என்று. அதே போல் எங்கள் யாருக்கும் கஷ்டம் வைக்காமல், அவரும் அதிகம் கஷ்டபடாமல் இந்த மண்ணுலகை விட்டு போய்விட்டார்.

எனக்கும் கடவும் நம்பிக்கை அதிகம் கிடையாது. ஆனால், என் தந்தையை நான் இன்று எங்களை வழிநடத்தும் தெய்வமாக தான் பார்கிறேன். எங்கள் வாழ்வு, வசதி அனைத்தையும் உங்கள் பொற் பாதங்களுக்கு சமர்பிக்கிறோம் அப்பா. "அப்பா" இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது தான் என்ன ஒரு நம்பிக்கை, தைரியம் கிடைக்கிறது.

எங்களை வழி நடத்துங்கள் தந்தையே. உங்கள் விருப்பம்போல் பிறருக்கு என்றும் உதவும் நல்ல மனசு எங்களை விட்டு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.   

share on:facebook

Tuesday, August 7, 2012

ஆடி தள்ளுபடியில் IT மாப்பிள்ளைகள்


அமெரிக்க IT மாப்பிளைகளின் அவல நிலையை வேறொரு பதிவில் பதிந்திருந்தேன். அது இன்னமும் மாறியதாக தெரியவில்லை. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு சாரார் ஆண்களின் உரிமைகளுக்காக போராட ஒரு கமிஷன் தேவை என கோரிக்கை வைத்துள்ளார்கள். அதாவது, பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வழங்கப் படுவதாகவும், அதிலும் பிள்ளைகளின் பொறுப்பு என வரும் போது  அது தாயிடமே ஒப்படைக்கப் படுவதாகவும் இந்த குழு குற்றச்சாட்டை வைக்கிறது. அது உண்மையும் கூட.

சரி நம்ம ஊர் மேட்டருக்கு வருவோம். இன்று வாழ்க்கை துணையை தேடும் போது  ஆண்களை விட பெண்கள் தான் பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக IT யில் வேலை பார்க்கும் பெண்களை பற்றி கேட்கவே வேண்டாம் (இப்படி சொல்வதற்காக என்னுடன் சண்டை போட யாரும் வருவதற்கு முன்னால், நானும் IT யில் இருக்கிறேன். எனக்கு தெரிந்த/என் உறவுகார பெண்களே அப்படிதான் இருகிறார்கள்). தமிழகத்தை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அப்படி பார்த்தால் இன்று வேலை பார்க்கும் பெண்கள் பெரும்பாலும் சாதாரண நிலையில் இருந்து தான் வந்திருப்பார்கள். ஆனால், இவர்களின் எதிர்பார்ப்புகள் தான் திகைக்க வைக்கின்றன.

என் டீமில் உள்ள பையன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் தேடுகிறார். அமெரிக்காவில் இருந்தாலும் ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. காலை மாலை என வீட்டில் பட்டையை போட்டுக்கொண்டு சாமி கும்பிடுவார். வார இறுதிகளில் கோவிலில் மறக்காமல் இவரை காணலாம் (நிஜமாதான் சொல்றேன்). இத்தனைக்கும் இவர் வரதச்சனை என்ற வார்த்தையை கூட வரன் தேடும் போது உபயோகிக்கவில்லை. இவருடன் இரண்டு பெண்கள் வைத்த கோரிக்கைகள் பின் வருமாறு.

1. கல்யாணமாகி அமேரிக்கா வந்தால் ஒரு புதிய "ஆடி(Audi )" கார் வாங்க வேண்டும் அதுவும் கருப்பு கலர் தான் எனக்கு பிடிக்கும்.

2. அப்படி இந்தியா வந்து வேலை பார்பாரானால் வருடத்திற்கு குறைந்தது 15 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும்.

முதலில் ஒரு Audi காரின் விலை என்ன வென்று இந்தப்பெண்ணுக்கு  தெரியுமா என எனக்கு தெரியவில்லை. அடுத்ததாக ஒருவர் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றால் அவருக்கு 27 முதல் 30 வயதிற்குள் இருக்கும். அப்படியானால் IT துறையில் அவர் வேலைக்கு சேர்ந்து ஒரு பத்து வருடங்கள் கூட ஆகி இருக்காது. அப்படி இருக்கும் போது ஒரு சில பெரிய நிறுவனங்களை தவிர பெரும்பாலான கம்பனிகளில் பத்து வருட அனுபவத்திற்கு நிச்சயம் 15 லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்காது. இதெல்லாம் அந்தப் பெண்ணுக்கு தெரியுமா என தெரியவில்லை.

இன்னொரு பெண், எனக்கு தெரிந்த ஒரு அமெரிக்க மாப்பிள்ளையிடம் முதன் முதலில் திருமண பேச்சு வார்த்தை எடுத்தவுடனேயே, திருமணம் ஆனா பிறகு எல்லா முடிவுகளையும் நான் தான் எடுப்பேன் என கூறியுள்ளார். அதன் பிறகு நம்மாளு ஏன் பேசப் போகிறாரு!

என் டீமில் உள்ள  இதே போல் பெண் பார்த்துக்கொண்டிருக்கும் சிலரிடம் நீங்கள் எல்லாம் கொஞ்சம் குறைவா பவுணு கேட்டா சீக்கிரம் பொண்ணு கிடைக்கும்பா என கிண்டலாக கூறினேன். அதற்க்கு அவர்கள், ஹல்லோ அவுங்க எங்களிடம் வரதச்சனை கேட்காம இருந்தா சரி சார் என்று பொலம்பி தள்ளி விட்டார்கள். சரி இப்படியே போனா எப்பப்பா நீங்கல்லாம் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணப் போகிறீர்கள் என கேட்டதற்கு, பொண்ணுக்கு வயது 20 - 24 வயசு இருக்கும் போதுதான் இந்த ரூல்ஸ் எல்லாம் போடுவாங்க அப்புறம் 26-27 வயசு ஆயிடுச்சுனா எல்லா ரூல்சும் தள்ளுபடி ஆகி செட்டில் ஆயிடும். ஏன்னா அப்ப அவங்களுக்கு கொஞ்சம் வயசு ஆகி போயிடும் அதுதான் என விரக்தியில் கூறினார்கள்.

எனக்கு என்னாமோ அளவுக்கு மீறின எதிர்பார்ப்புகளும், தேவையில்லாத கட்டுப்பாடுகளை திருமணத்திற்கு முன்பே போடுவதும் அவர்களையும் பாதித்து, இதை எல்லாம் தாண்டி திருமணம் ஆகும் போது அதுவே மணமக்களுக்குள் தேவையில்லாத இடைவெளியை ஏற்படுத்தும் என்றே என் எண்ணம். அதற்க்கு பதிலாக திருமணம் ஆனபின் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாக எனக்கு தோன்றுகிறது.

சமீபத்தில் பெண் தேடி அலையும் ஒரு IT வாலிபர் என்னிடம் சொன்னது, சார், எங்காவது ஆடி தள்ளுபடியில் மாப்பிள்ளை வேணும்னு விளம்பரம் பார்த்தா சொல்லுங்க சார். நாங்க ரெடி என்று.

என்ன கொடுமை சரவணா இது?


share on:facebook

Thursday, August 2, 2012

சென்னையிலிருந்து மும்பைக்கு சென்ற முதல் மனிதன். சுவாரசிய அனுபவங்கள்...


தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ இது ஒரு சரித்திர பதிவு. புதுசா ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்து வந்திருந்தால். சாரி. சமீபத்தில் சென்னையிலிருந்து மும்பைக்கு அலுவல் நிமித்தம் செல்ல நேர்ந்தது. ஆதி மனிதனும் முதல் மனிதனும் ஒன்று தானே. அதான் தலைப்பு அப்படி.

ஓரிரு முறை மும்பைக்கு ரெயிலில் சென்று உள்ளேன். ஆனால் இதுவரை ஏ. சி. கோச்சில் சென்றதில்லை. இம்முறை 2AC பயணம். மிகுந்த எதிர்பார்ப்புடன்  சென்றேன். ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்தது என்றே சொல்ல வேண்டும். என்ன ஒன்று. பொதுவாக ரோட்டில் செல்லுபவர்களிடம் நாமாக போய்  பேசுவதில்லை. ரெயில் பயணம் அப்படி இல்லை. நாம் பேசாவிட்டாலும்  நம்முடன் வருபவர்கள் பேச ஆரம்பித்த விட்டால் நாமும் பேச ஆரம்பித்து  விடுவோம்.

பக்கத்து பெர்த்தில் பயணித்தவர்கள் ஜப்பான் கம்பெனியான Fujitech lift க்கில் வேலை பார்ப்பவர்கள். சென்னைக்கு ஒரு கான்பாரன்ஸ் கலந்துக்க வந்துவிட்டு போவதாக சொன்னார்கள். Lift பற்றி பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. Lift பற்றி பேச்சு வந்ததும் அமெரிக்காவில் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் உள்ள lift பற்றியும் அதன் வேகம் பற்றியும் பேச்சு போனது. எனக்கு தெரிந்த சில தகவல்கள் கீழே...

எம்பயர் ஸ்டேட் பில்டிங்க்ளில் மொத்தம் 73 லிப்ட்கள் உண்டு. முதல்  தளத்திலிருந்து 80 தளம் வரைக்கும் ஒரே நேரத்தில் பார்வையாளர்கள்  பயணிக்கலாம். பின் அங்கிருந்து 86 தளத்திற்கு படிகள் வழியாகவோ  வேறொரு லிப்டிலோ பயணிக்கலாம். முதல் 80 மாடிகள் சுமார் ஒரு  நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் லிப்ட் சென்றடைந்து விடும். அட ஆமாங்க. லிப்டில் தெரியும் டிஜிடல் சிஸ்டத்தில் 5, 10, 20 என்று மாடிகள் கடந்து போவதை பார்த்து நமக்கு தானாக தலை சுத்துகிறதோ இல்லையோ, முக்கால்வாசிப் பேருக்கு நாற்பது ஐம்பதாவது மாடியை கடக்கும் போது தானாகவே, காதை அடைக்கும். தலை சுற்றும். ஏன் சில  நேரத்தில் நெஞ்சை அடைப்பது போல் கூட உணர்வு ஏற்படும்.

அடுத்து நடுவே ரெயிலில் நடுவே ஏறிய ஒருவர், தமிழ், தெலுங்கு, மராத்தி ஹிந்தி என்று பிளந்து கட்டினார். ஆற்றில் மணல் அள்ளும் காண்ட்ராக்ட்  தொழில் அவருக்கு. மணல் கொள்ளை பற்றி அவரே விரிவாக கூறினார். மகாராஸ்ட்ராவில் அள்ளப்படும் மணல் பிற மாநிலங்களுக்கு விற்க தடை உள்ளதாக கூறினார். நம் தமிழ் நாட்டில் அப்படி ஏதும் சட்டம் உள்ளதா என எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில், அவர் கார் தலை குப்புற கவிழ்ந்து, கார் கண்ணாடி உடைந்து அது அவரின்  தலையின் மேற்பகுதி தோல் முக்கால்வாசி  பகுதியை வழித்து    போட்டுவிட்டதாம். தலை முழுதும் தற்போது வேறொரு இடத்திலிருந்து  தோல் எடுத்து வைத்து தைத்திருக்கிறார்கள். கேட்கவே திகிலாக இருந்தது. ஆனால், மனுஷன் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தற்போது சிறிது சிறிதாக முடி முளைத்து வருவதாகவும் மீண்டும் தலையில் முடி முழுவதும் முளைத்து விடும் என்று தான் நம்புவதாக கூறினார். முடிக்கு என்ன மரியாதை பாருங்கள்.

ரெயில் பயணத்தில் ரொம்பவும் எதிர்பார்த்து ஏமாந்தது கேண்டீன் சமாசாரம் தான். ஓரிரு முறை பெங்களூரு சென்ற போது ரெயிலில் கேண்டீன் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. அந்த ஆசையில், நம்பிக்கையில் சாப்பாடு ஏதும் எடுக்காமல் சென்று விட்டேன். பான்ட்ரி இருந்த இடமும் அவர்கள் சாப்பாடு தயாரிப்பது அதை டெலிவெரி செய்யும் விதத்தையும் பார்த்து கடைசிவரை சாப்பாடு வாங்க மனம் வரவில்லை. வெளியே ஸ்டேஷனில் எங்கும் வாங்கலாம் என்றால் அங்கு அதற்க்கு மேல். எல்லாம் ஈ மொய்த்த படி.

அதை விட கொடுமை, எல்லா பெர்த்திலும் நீக்க மற நிறைந்திருந்த கரப்பான் பூச்சிகள் தான். ஈ, கொசு, வியர்வைக்கு பயந்து AC கோச்சில் சென்றால் அங்கு கரப்பான் பூச்சிகள் எல்லோருக்கும் முன்னே ரிசர்வேஷனில் கடை ஸ்டேஷன் வரை பயணித்து கொண்டிருக்கின்றன.

ஆங், சொல்ல மறந்து விட்டேனே, நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு மிக பிரபலமான தமிழ் நாவல் ஒன்றை இந்த பயணத்தில் படிக்க முடிவு செய்து படிக்க ஆரம்பித்தேன். டச்ப்ச்து 'மோகமுள்'. சுதந்திரத்திற்கு முந்தய காலக்கட்டத்தில் சொல்லப்பட்டதான ஒரு நாவல். பலர் இந்த நாவலை முன்பே படித்திருக்கலாம். அதனால் அதை பெருமையாக நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. முடித்தபின் பார்ப்போம்.

ஒரு வழியாக தானேயில் விடியற்காலை மூன்று மணிக்கு இறங்கி வந்து ஆட்டோவை நான் தேடும் முன், அவராகவே வந்த ஆட்டோ டிரைவரிடம் நான் போக வேண்டிய இடத்தை கூறினேன். மறு பேச்சின்றி என்னை ஏறச் சொன்ன அடுத்த நிமிடம் வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் அவர் செய்த முதல் காரியம் ஆட்டோ மீட்டரை ஆன் செய்ததுதான். நன்றாக கேளுங்கள் நண்பர்களே. நான் செல்ல வேண்டிய இடத்தில் எங்கும் சுற்றாமல் நேர் வழியில் சென்று நான் இறங்கிய பின் மீட்டரை பார்த்து, இரவு நேரமாதலால் ஒரு புக்கை காண்பித்து இரவு பயணத்திற்கு 1 1/2 மடங்கு கட்டணம் என்பதை எடுத்து கூறி ஒரு ரூபாய் கூட அதிகமாக கேட்காமல் சரியான தொகையை மட்டும் வாங்கி சென்றார். 'முருகா' நாம் மும்பையில் பிறந்திருக்க கூடாதா என ஒரு கணம் நினைத்துக் கொண்டேன். இதற்காகவே, மும்பை ஆட்டோ காரர்களுக்கு ஒரு மிக 'பெரிய சல்யூட்.

*** அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த கரப்பான் பூசிகளை போட்டோ எடுக்க முயன்றேன். லைட்டிங் சரி இல்லாததால் முடியவில்லை. யப்பா இந்த கரப்பான் பூச்சிகளை நினைத்தால் தான் மீண்டும் ஒரு முறை ரெயிலில் போக பயமாக இருக்கிறது. 

share on:facebook