Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, June 15, 2011

அழகர் சாமியின் குதிரை - வெற்றிக்குதிரை


சமீபத்தில் வெளியான 'அழகர் சாமியின் குதிரை' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த சில வருடங்களாக இம்மாதிரி கிராமிய மனத்துடன் குறைந்த பட்ஜெட்டில் நல்ல திரைக்கதையுடன் குடும்பத்துடன் எல்லோரும் உட்கார்ந்து பார்க்குமளவு அவ்வப்போது படங்கள் வெளிவருவது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

குறிப்பாக அழகர் சாமியின் குதிரையில் எல்லாமே நன்றாக அமைந்திருந்தது. கிராம கோவில் திருவிழாக்களை பல படங்களில்  காண்பித்திருந்தாலும் இதில் ஒரு திருவிழாவை நடத்துவதற்கு முன்  நடைபெறும் நன்கொடை வசூலில் ஆரம்பித்து அதன் பிறகு திருவிழாவிற்கு   வந்து சேரும் உறவுகளை காண்பிப்பது வரை அனைத்திலும் இயக்குனரின் ஈடுபாடு பளிச்சென்று தெரிகிறது.

படம் முழுவதிலும் ஹிரோ ஹீரோயின் பத்து வார்த்தைகளுக்கு மேல் பேசியிருந்தால் அதுவே அதிகம். காட்சிகளும் சூழ்நிலைகளுமே திரைகதையை வழிநடத்தி செல்கிறது. சுவிசிலும் ஸ்காட்லாந்திலும்  கதைக்கு  சம்மந்தமே இல்லாமல் கதாநாயகன், நாயகி ஆடிப்படுவதை  பார்த்து பார்த்து அலுத்து போயிருந்த நமக்கு சைக்கிளில் வைத்தே ஒரு பாடல் (காதல்) காட்சியை  படமாக்கியிருந்தது புதுமை அருமை.

இரண்டு ஹிரோக்களுமே கதைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இன்ச் இன்ச்சாக மேக்கப்பை ஏத்தி திரையில் பள பலப்பாகவே ஹிரோக்களை  பார்த்த நமக்கு திரையில் வரும் கிராமத்து இளைஞன் மற்றும்  இரண்டாவது ஹிரோவின் (குதிரையின் சொந்தக்காரர்) தேர்வு கதைக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது. கதாநாயகிகள் தேர்வும் அசத்தல். 

சோகம், வெறுப்பு, கிராமத்து சண்டை, காதல் என்று இயல்பாக போகும்  கதையில்  ஆங்காங்கே சிறிது நகைச்சுவையும் மூட நம்பிக்கைக்கு  எதிரான கருத்துக்களும் என்று கதை சிறிது கூட தொய்வில்லாமல் நகர்ந்து செல்கின்றன. 

உள்ளூர் காவல் தெய்வம் (குதிரை) சிலை காணாமல் போன பின் திடீரென்று ஊருக்குள் வரும் ஒரு நிஜ குதிரையை ஊர்க்காரர்கள் தங்கள் காவல் தெய்வமே உயிருடன் வந்துவிட்டதாக எண்ணி கொண்டாடும் நேரத்தில் நிஜ குதிரையின் சொந்தக்காரர் வந்து தன் குதிரையை மீட்பதே கதை.  இதில் குதிரை காணாமல் போனதால் நின்று போன அவரின்  திருமணமும் குதிரையை கிராமத்து மக்களிடமிருந்து மீட்க முயற்சிக்கும் இலைஞனின் காதலும் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.

படம் பார்த்த பிறகும் பளிச்சென்று நினைவில் நிற்பவை.

#சின்னஞ்சிறு  குழந்தைகளை  வேலைக்கு அனுப்பும் போது பெற்றோர்கள் படும் வேதனை.

#கோவில் நன்கொடை என வரும்போது அவரவர்களும் தங்களால் கொடுக்க முடிந்த நன்கொடையை தரும் காட்சிகள்.

#மென்மையான தங்கள் காதலை ஊருக்கு பயந்து அடுத்தவர்களுக்கு தெரியாமல் கண்களாலேயே பேசிக்கொள்ளும் காதல் பாசை.

#தன் ஒரே சொத்தான பொதி சுமக்கும் கழுதை மீது அதன் சொந்தக்காரர் வைத்திருக்கும் பாசம்.

#காவல் தெய்வ குதிரை காணாமல் போக காரணமாக இருந்த உள்ளூர் சிற்பியின் வறுமை. 

#படத்தின் முடிவில் கதைக்கு ஏற்றவாறு மக்களின் மூடநம்பிக்கைக்கு வைக்கும் வேட்டு.

இளையராஜாவின் இசை அருமை. இயக்குனர் சுசீந்திரன் பாராட்டுக்குரியவர். படத்தில் வரும் இரண்டு (பெயர் தெரியாத - பிரபலமாகாத) ஹிரோக்கள் ஹிரோயின்கள்  மற்றும் நிஜ குதிரை என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள். நல்ல படம். 


share on:facebook

Sunday, January 16, 2011

தென்மேற்கு பருவக்காற்று - பொய்க்கவில்லை


தென்மேற்கு பருவக்காற்று - 

தமிழ் சினிமா உலகம் என்பது பிரமாண்டம், மாஸ் ஹீரோ, ஹீரோயின் மற்றும் பிரபலமான இயக்குனர்களிடம் மட்டுமே அடங்கிவிடவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த எல்லோரும் பார்க்க கூடிய ஒரு நல்ல தமிழ் படம்.


வழக்கம் போன்ற கதைதான். ஆனால் அதை சொன்ன விதமும் தேர்வு செய்த கதாபாத்திரங்களும் தான் தென்மேற்கு பருவக்காற்றை இதமாக வீச வைத்திருக்கிறது.

ஹீரோ சேது: ஐம்பது அறுபது வயதில் அதை மறைப்பதற்காக ரோஸ் பவுடரையும் ஏன் ஒரு சில நடிகர்கள் கண்களுக்கு மை எல்லாம் தீட்டிக்கொண்டு கல்லூரி மாணவனாக நடிப்பதை பார்த்து பார்த்து அலுத்து போய் இருக்கும் நேரத்தில் அசல் கிராமத்தானாக முரட்டு பார்வையும், நிமிர்ந்த நெஞ்சுமாய், கட்டில் அடங்கா காளையாக வளைய வரும் கதாநாயகன் சேது தனக்கு கிடைத்த பாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளார்.


தந்தை இல்லா பிள்ளையாக, ஒரு ஊதாரியாக சுற்றிவரும் கதாநாயகன் சேது தன் ஆட்டு பட்டியில் ஆடு திருட வரும் கும்பலை வளைத்து பிடிக்கும் போது ஏற்படும் திருப்பம் தான் கதைக்கு ஆரம்பம் என சொல்லலாம்.

ஹீரோயினாக வருபவர்கள்  திருடனையும், போக்கிரியையும் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளும் படங்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். இதில் சற்றே மாற்றம். திருடியாக ஹீரோயின் வருகிறார்.  

ஹீரோயின் வசுந்தரா: கிராமத்து ஹீரோயினாக அழகாக வந்து போகிறார். அதுமட்டுமில்லாமல் எங்கே தன்னை திருடி என எல்லோர் முன்னாடியும் காட்டி கொடுத்துவிடுவானோ என வெளிறி போய் நிற்கும் காட்சியாகட்டும், அழகாக ஒன்றிரண்டு காட்சிகளில் காதல் மொழி பேசுவதில் ஆகட்டும் தன் பங்கை கச்சிதமாக முடித்திருக்கிறார்.

சரண்யா: ஏற்கெனவே பல படங்களில் குணசித்திர வேடங்களில் தன் முத்திரையை பதித்தவர். இந்த படத்திலும் அருமையாக நடித்துள்ளார். ஒரு பாசமுள்ள அம்மாவாக, வைராக்கியமுள்ள விதவை தாயாக படம் பூராவும் ஒவ்வொரு காட்சியிலும் நம் மனதில் நிற்கிறார்.

டைரக்டர் சீனு ராமசுவாமி தான் படத்தின் உண்மையான ஹீரோ. சுவிசிலும், ஹவாய் தீவிலும் ஒன்றிரண்டு பாடல் காட்சிகள், மாடர்ன் ஹீரோ, அரை குறை ஆடை போட்ட ஹீரோயின் காம்பிநேசன் என எதுவும் படத்தில் இல்லாமல், அழகாக வயல் வெளி, மண் சாலை, பூசப்படாத சுவர்கள் கொண்ட கிராமிய வீடுகள் என்று படத்தில் சிறிதும் அதீத கற்பனை கலப்பு இன்றி படத்தை எடுத்துள்ளார்.

காமெடி என சொல்லிக்கொண்டு படத்தின் கதைக்கு சம்மந்தமே இல்லாமல் தனியாக டிராக் வைக்காமல் படத்தினூடே ஆங்காங்கு இயற்கையாக காமெடி கலந்துள்ளது. ஓரிரு இடங்களில் நல்ல கருத்துக்களையும் இயல்பாக சொல்லியிருகிறார். ஒரு பக்கம் செழுமையையும் மறு பக்கம் வறுமையையும் இயற்கையே கொடுத்திருந்தாலும் நாம அத மாத்தணுமா இல்லையா? என்கிறபோதும், பழிவாங்கும் உணர்ச்சி வந்துச்சுனா வாழ்க்கையை நல்ல விதமா அனுபவிக்க முடியாது என்று கடைசியில் முடிக்கும் போதும் பளிச்சென தெரிகிறார் டைரக்டர்.

ஆனா ஒரே ஒரு குறை. அது ஏன் ஒரு கிராமிய படம் என்றால் அதில் வரும் எல்லா ஹீரோக்களும் ஒன்றுக்கும் உதவாத தறுதளைகலாகவும், குடித்துவிட்டு  ஊர்சுற்றும் குடும்பத்துக்கு அடங்காதவர்களாகவும் காண்பிக்கிறார்கள்? இது கிராமங்களை பற்றிய ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடாதா?

பி. கு. சினிமா விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. சரி அதை பகிர்ந்துகொள்ளலாமே என்றுதான்...

ஆமா பொன்வண்ணன் படத்துல எங்க வராரு?

அன்புடன்...
share on:facebook