Saturday, February 18, 2012

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா நடராஜன் கைது



சென்னை: நில அபகரிப்பு வழக்கில் சசிகலா கணவர்நடராஜன் தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. இவரது கணவர் நடராஜன். சசிகலாவும், அவரது உறவினர்களும், கட்சியிலும் , ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி சசிகலா, அவரது கணவனர் நடராஜன், திவாகரன், தினகரன், ராவணன். பாஸ்கரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதனையடுத்து போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேறிய சசிகலா தனது உறவினர் இளவரசி வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் வீடு இடிப்பு புகாரின் பேரில் சசிகலா சகோதரர் திவாகரன், திருவாரூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உறவினரான ராவணன், மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது நில அபகரிப்பு புகாரின் பேரில் சசிகலா கணவர் நடராஜனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர், தஞ்சை போலீசாரிடம் கொடுத்த புகாரில், தஞ்சையின் பிரதான இடத்தில் உள்ள தனக்கு சொந்தமான 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை நடராஜன் தூண்டுதலின் பேரில் சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், இடத்தை திருப்பி கேட்டபோது நடராஜனுடன் சேர்ந்து சிலர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். இதன் பேரில் தஞ்சை டி.ஐ.ஜி., அமல்ராஜ் தலைமையிலான போலீசார் பெசன்ட் நகரில் உள்ள வீட்டிலிருந்த நடராஜன் மற்றும் ஒருவரை அழைத்து சென்றனர்.

நன்றி: தினமலர் செய்தி.

share on:facebook

No comments:

Post a Comment