Showing posts with label கிராமத்தான். Show all posts
Showing posts with label கிராமத்தான். Show all posts

Sunday, October 27, 2013

மாட்டு வண்டி: தார் குச்சியும் லாந்தர் விளக்கும்.


எத்தனை பேருக்கு மாட்டு வண்டி பயணமும் அதை ஓட்டும் அனுபவமும் கிடைத்திருக்கும் என எனக்கு தெரியவில்லை. 80 களில் எங்கள் வீட்டிற்க்கு கிராமத்துடன் நேரடி தொடர்பும் விவசாயமும் இருந்தது. காலப்போக்கில் இப்போது விவசாயம் இல்லை. ஆனால் கிராமத்துடன் ஆன தொடர்பு ஓரளவிற்கு இருக்கிறது.

அப்போது நான் 5-6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிந்திருப்பேன். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை ஊரிலிருந்து டவுனுக்கு (அப்படி தான் தஞ்சை நகரத்தில் உள்ள எங்கள் வீட்டை சொல்வார்கள்) மாட்டு வண்டியில் தஞ்சையில் எங்கள் வீட்டில் வளர்த்த நான்கைந்து மாடு கன்றுகளுக்கு வைக்கோலும், வீட்டிற்க்கு தேவையான நெல்/உளுந்து வகையறாக்களும் வந்து சேரும். போகும் போது அதே வண்டியில் வீட்டில் வளர்த்த மாடுகள் மூலம் சேர்ந்திருக்கும் இயற்க்கை உரமான சாணி எருவை கிராமத்து வயல்களில் தெளிக்க எடுத்து செல்வார்கள்.

தஞ்சையில் வண்டி டேரா போட்டிருக்கும் ஒன்றிரண்டு நாட்களில் கெஞ்சி கூத்தாடி ஓரிரு முறையேனும் அதை எடுத்து எங்கள் தெருக்களில் ஒட்டி விடுவேன். அதில் அப்படி பட்ட சந்தோசம் எனக்கு.

இப்போ என் காரில் இருக்கும் பவர் steering எனக்கு பெரிய ஆச்சர்யத்தை தருவதில்லை. ஆனால் அந்த ரெட்டை மாட்டு வண்டியை சாலைகளில் திருப்பும் போது ஒரு மாடு நடையை குறைத்த பின் மற்றொரு மாடு அழகாக திரும்பும் பாருங்கள். அப்போது அதை செய்ய லாவகமாக உதாரனத்திற்க்கு, வலது பக்கம் திரும்ப வேண்டும் எனில், வலது மாட்டின் கயிற்றை இழுத்து பிடித்து இடது புற மாட்டின் கயிறை லூசாக விட்டு அதை லேசாக குச்சியால் தட்டி கொடுக்கும் போது, கயிற்றை இழுத்து பிடித்த மாடு, கயிறு இறுகும் காரணத்தால் கழுத்தோடு சேர்த்து தலையை சற்றே ஒரு புறமாக மேலே தூக்கிக் கொண்டு நடையை உள் வாங்கும். அப்போது அடுத்த மாட்டை பார்த்து, 'சீக்கிரம் நீயும் திரும்பு' என்பது போல் பார்க்கும். உடனே இடது புற மாடு பலது புறம் திரும்பி நடக்க ஆரம்பிக்கும். நான்கைந்து அடி சென்ற பின் இழுத்து பிடித்த ஒரு மாட்டின் கயிறாய் லூசாக விட்டோமானால் தானாக இரண்டு மாடுகளும் நேர் கோட்டிற்கு வந்து விடும்.   

அப்போதெல்லாம் இன்று உள்ள அளவிற்கு டூ வீலரோ கார்களோ கிடையாது. அப்போ போக்குவரத்து காவலர் எப்படி 'பைன்' போடுவார்? என நீங்கள் கேட்பது தெரிகிறது. அப்ப யார் மாட்டுவாங்கனு கேடீங்கனா, இந்த மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் தான. ஆம், மாட்டை விரைவாக ஓட்டுவதற்கு 'தார் குச்சி' என்று ஒன்றை உபயோகிப்பார்கள். அதாவது குச்சியின் ஒரு முனையில் கூர்மையான ஆணி போன்ற ஒரு பொருளை இணைத்து விடுவர். பின் அதை கொண்டு மாட்டின் தொடை பாகத்தில் மாற்றி மாற்றி குத்தும் போது மாடு வேகம் பிடிக்கும். இது அன்றைய காலகட்டத்திலேயே  தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால், தார் குச்சியால் குத்தாமல் மாடு மேடான பகுதிகளில் மற்றும் அதிக பாரம் இருப்பின் நகராது. பெரும்பாலானோர் தார் குச்சியை உபயோகப்படுத்துவார்.

அப்புறம் என்ன? ஒவ்வொரு முறையும் மாட்டு வண்டிகளை மறித்து, வண்டி முழுதும், அது முழுதும் வைக்கோல் ஏற்றி இருந்தால் கூட தார் ஊசி இருக்கிறதா என தேடி தேடி பைன் போடுவார்கள். வண்டி காரர்களும், நாம் ட்ராபிக்கை கண்டவுடன் செல் போனை மறைப்பது போல், தார் குச்சியை மறைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அடுத்ததாக மாட்டு வண்டி இரவில் சென்றால் அதற்க்கு 'ஹெட் லைட்' அவசியம் இருக்க வேண்டும். எங்கள் ஊரில் அதற்க்கு லாந்தர் விளக்கு என்போம். அதை எறிய விட்டு வண்டியின் அடியில் கட்டி விட வேண்டும். அதனால் ஒன்றும் பெரிதாக வெளிச்சம் வந்து விட போவதில்லை. இருப்பினும், சாலை விளக்குகளே இல்லாத கிராம சாலைகளில் செல்லும் போது இந்த அடியில் கட்டிய லாந்தர் விளக்கு ஓரளவு வெளிச்சத்தை கொடுக்கும். இந்த லாந்தர் விளக்கை கட்ட வில்லை என்றாலும் பைன் தான்.

தஞ்சையிலிருந்து ஊருக்கு வண்டி கிளம்பும் போது வண்டி ஓட்டிகளிடம், தார் குச்சி வேண்டாம்பா, லாந்தர் விளக்குல என்னை இருக்கானு பாத்துக்குங்க என்று திரும்பி திரும்பி சொல்லி அனுப்பி விட்டாலும், அவ்வப்போது, போலீசில் மாட்டிக்கொள்வர்கள். மாட்டு வண்டி பயணம், அதுவும் இரவில் பயணம் செய்வது ஒரு அலாதி அனுபவம். வேறொரு பதிவில் அதை பகிர்கிறேன்.





share on:facebook

Thursday, January 12, 2012

பொங்கல் - ஒரு பிளாஷ் பேக்


பொங்கல். தமிழர்களை பொறுத்தவரை ஜாதி மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரு முழுமையான பண்டிகை. ஆம், எங்கள் ஊரில் கிறிஸ்தவர்கள் கூட அந்தோனியார் பொங்கல் என்ற பெயரில் பொங்கலிட்டு கொண்டாடுவார்கள்.

அது மட்டுமில்லாமல் பொங்கலை பொறுத்தவரை எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் மையமாக வைத்து நாம் கொண்டாடுவதில்லை. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நமக்கு வாழ்வளிக்கும் தெய்வங்களான ஆடு மாடு கோழி என அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு சடங்காகவே பொங்கல் இது நாள் வரையில் கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விஷயம் என்னவென்றால் இது வரை பொங்கலை ஜாதி மத வளையத்துக்குள் இழுத்து வராமல் இருப்பது தான்.

இருப்பினும் பொங்கல் கொண்டாட்டங்கள் தற்போது சிறிது மாறி இருக்கின்றன. நான் சிறுவனாக இருந்தபோது தஞ்சை நகரில் வாழ்ந்து வந்தாலும் பொங்கலுக்கு எங்கள் கிராமத்திற்கு சென்று விடுவோம். அதற்க்கு முன்பாக ஊரிலிருந்து இரட்டை மாட்டு வண்டி ஒன்று வரும். எங்கள் தந்தை எல்லோரையும் அழைத்துக் கொண்டு பெரிய மார்க்கெட் செல்வார். அங்கு அரிசி தவிர எல்லாவற்றையும் வாங்கி சாக்கு மூட்டைகளில் அடுக்குவோம். பிறகு வண்டி அங்கிருந்து இரவு கிளம்பினால் அடுத்த நாள் காலை எங்கள் கிராமத்தை சென்றடையும்.

மற்ற பொங்கலை விட எனக்கு பிடித்த பொங்கல் கன்னிப் பொங்கல் தான். அன்று ஒருவரும் புது சட்டையை அணிய மாட்டார்கள். ஏன் சட்டையை கூட சில பேர் அணிய மாட்டார்கள். காரணம், தெருவில் நீங்கள் நட மாட முடியாது. எந்தப் பக்கத்திலிருந்து மஞ்சள் தண்ணீர் வந்து உங்கள் மீது கொட்டும் என்றே சொல்ல முடியாது. ஆனால். மஞ்சள் தண்ணீரில் நனையாமல் நீங்கள் வீடு திரும்ப முடியாது. சிலர் மஞ்சளோடு இன்ன பிற சமாச்சாரங்களை கலந்து உங்கள் மீது தெளித்தால் அவ்வளவு தான். காலத்திற்கும் கறை போகாது.

பெரும்பாலும் பெண்கள் தான் மஞ்சள் தண்ணீரை ரோட்டிற்கு ஓடி வந்து உங்கள் மீது ஊற்றிவிட்டு ஓடுவார்கள். இதில் சில முறைகளும் உண்டு. ஆம். முறை பார்த்து தான் மஞ்சள் தண்ணீரை ஊற்றலாம். பொதுவாக அத்தை/மாமன் மகன் முறைமார்கள் மீது தான் மஞ்சள் தண்ணீர் ஊற்றுவார்கள்.

அதே போல், மாட்டுப் பொங்கலும், மஞ்சு விரட்டும் எனக்கு மிக பிடிக்கும். நோஞ்சான் மாடுகள் கூட அன்று ஒரு மாதிரியாக தான் விரைச்சுக்கிட்டு நிற்கும். ஒரு வேலை அதுகளுக்கு தெரிந்து விடுமோ என்னமோ. இன்று நாம் தான் ராஜா என்று. மாட்டு பொங்கலன்று சீட்டு குலுக்கிப் போட்டு சீட்டு விழுந்தவர் வீட்டின் முன் ஊரில் உள்ள எல்லா மாடுகளையும் கொண்டு வந்து விடுவார்கள். அவர் வீட்டில் பொதுவாக சாமி கும்பிட்டு விட்டு அவர் வீட்டின் மாட்டை அவிழ்த்த பின் தான் மற்ற மாடுகளை அவிழ்த்து விடுவார்கள்.

மாடுகள் அவிழ்த்து விட்ட பின் அது அது ஒவ்வொரு பக்கமாக மிரண்டு ஓடும். எங்கள் வேலையெல்லாம் எங்கள் வீட்டு மாடு எங்கு ஓடுகிறது அதன் பின்னாடியே ஓடி யாரும் மாட்டை காயப் படுத்தாமல் பார்த்துக் கொள்வதுதான். மாட்டின் மீது கட்டி இருக்கும் மஞ்சள் துணியில் சிறிது காசு, அரிசி கரும்பு துண்டு என எல்லாம் கட்டப் பட்டிருக்கும். அதை அவிழ்க்கிறேன் பேர்வழி என்று இரும்பு கம்பியால் இழுக்க முயன்று மாடுகளை காயப் படுத்தி விடுவார்கள். அதை தடுக்கத்தான் நாங்கள் எல்லாம் பின்னாலேயே ஓடுவோம்.

பிறகு பெரியவர்கள் ஆன பிறகு கிராமத்திற்கு சென்று பொங்கல் கொண்டாடுவது நின்று போய் விட்டது. தஞ்சையில் உள்ள இல்லத்திலேயே வீட்டின் போர்டிகோவில் பொங்கல் வைப்போம். ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் சில நேரங்களில் வித்தியாசமாக பார்ப்பார்கள். நாங்கள் அதை பற்றி கவலை படுவதில்லை. இன்றும் கேசில் நாங்கள் பொங்கல் வைப்பதில்லை. அதே போல் என் தந்தை இருந்தவரை, பொங்கல் பொங்கும் நேரம் அவருக்கு தெரிந்த பொங்கல் பாடலை உரக்கமாக பாடுவார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று கூவுவோம்.

அதே போல் மாட்டு பொங்கலன்று (ரொம்ப நாட்கள் வீட்டில் கறவை மாடுகள் வளர்த்தோம்) கிராமத்தை போலவே மாடுகளுக்கு அலங்காரம் செய்து பொங்கல் ஊட்டி கொண்டாடுவோம். எல்லோரும் ஒரு தட்டையோ தாம்பாளத்தையோ எடுத்துக் கொண்டு அதை குச்சியால் தட்டி சத்தம் எழுப்பி பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் என கூவிக் கொண்டே மாடுகளை வலம் வருவோம்.

பொங்கல் ஒரு நிறைவான திருநாள். அதே போல் வந்தது போய்விட்டது என்றில்லாமல் குறைந்தது மூன்று நாட்கள் பொறுமையாக ஆர்பாட்டம் அவசரம் இல்லாமல் குடும்பத்துடன் அமைதியாக கொண்டாடப் படும் திருநாள். எனக்கு மிகவும் பிடித்தமானது. அடுத்த வருடமாவது நம்மூரில் கொண்டாட வேண்டும் என்று ஆசை. பார்ப்போம். எப்படி இருந்தாலும் இந்த முறை கேசில் தான் பொங்கல் இங்கு.

எல்லோருக்கும் என் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.  ஹி ஹி ஹி ...

share on:facebook

Tuesday, March 29, 2011

பேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா?



தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சிலரின் பெயரைக்கேட்டு ஆச்சர்யப்படுவேன்.  இருக்காதா பின்னே? அம்மாவசை, லைட்டு, பஞ்சாயத்து, தஞ்சாவூரான், பட்டாளத்தார் என்று விதவிதமாக பெயர்கள் அங்கு உண்டு. சில அவர்களின் உண்மையான பெயர். சில காரணப்பெயர்கள்.

அம்மாவாசை: நீங்கள் நினைப்பது போல் அவர் கறுப்பானவர் இல்லை. ஆனால் அவர் அம்மாவாசையன்று பிறந்ததினால் அப்பெயர்.

லைட்டு: இவர் எப்போதுமே கையில் (லாந்தர்) விளக்குடன் தான் இருப்பார்.

பஞ்சாயத்து: யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் தானாக ஆஜராகி சமாதானம் பேசுபவர்.

தஞ்சாவூரான்: இவர் தஞ்சை பெரிய ஆஸ்பத்திரியில் வந்து பிறந்ததால் இப்பெயர். 

பட்டாளத்தார்: இவர் பட்டாளத்தில் (ராணுவத்தில்) இருந்து ரிடையர் ஆனவர்.

இவர்கள் யாரும் எந்த காரனத்திற்க்காகவும் தங்கள் பெயர்களை  மாற்றிக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒன்று அவர்களின் பெற்றோர்கள்  வைத்த பெயர். இல்லை மற்றவர்கள் பாசத்துடன் வைத்த பட்டப்பெயர்.  கிராமங்களில் இன்றும் யாரும் பாஷனுக்காகவோ ராசி பார்த்தோ பெயர் வைப்பதில்லை. பெரும்பாலும் குழந்தைகளின் தாத்தா பாட்டி பெயரை அல்லது குலதெய்வத்தின் பெயரை வைத்துவிட்டு பின்பு செல்லப்பெயராக ஒரு பெயரை கூப்பிடுவதற்கு வைத்துக்கொள்வார்கள். பின்னே மாமனார்  மாமியார் பெயரை சொல்லி கூப்பிட முடியாதல்லவா. சிலர் இதற்க்கென்றே  திட்டும்  போது மட்டும் உண்மையான பெயரை சொல்லி திட்டுவார்கள்.

அதேபோல் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் எங்கு பார்த்தாலும் 'நீலகன்டர்கள்' நீக்க மற நிறைந்து இருப்பார்கள். காரணம் அங்குள்ள பிரசித்தி பெற்ற நீலகண்ட சுவாமி கோவிலும் அங்குள்ள கடவுளும்.  பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் இருந்தால் அவர்களில்  15 பேரின் பெயர்கள் நீலகண்டன். இனிஷியலும் "N" ஆகத்தான் இருக்கும்.  நினைத்து பாருங்களேன் வாத்தியாரின் கஷ்டத்தை! 

ஆனால் இன்று நல்ல நிலையில் உள்ளவர்கள் கூட தங்கள் பெற்றோர் வைத்த பெயரை பெயர் ராசி, நூமரலாஜி என பல காரணங்களுக்காக மாற்றிக்கொள்கிறார்கள். T. ராஜேந்தர் விஜய T ராஜேந்தராகவும்,  வை. கோபால்சாமி வைகோவாகவும் மாறிவிட்டார்கள். என்னை பொறுத்த   வரையில் பெற்றோர் வைத்த பெயரை  மாற்றிக்கொள்வதில் எனக்கு ஏற்புடையதல்ல. நம்மை இந்த  உலகத்திற்கு  அடையாளப்படுத்தியதே  அவர்கள் தான். அந்த அடையாளத்தை மாற்றிக்கொள்ள நமக்கு உரிமை எது?

இந்த பெயர் ராசி, நூமராலாஜி போன்றவைகளால் இன்னதுதான் பெயர் வைக்கவேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. என்னுடைய நண்பர் ஒருவரின் பெயர் ஆங்கிலத்தில் 'Subramoney'.  நம்ப முடிகிறதா? அதே போல் அர்த்தம் தெரியாத பெயர்களும் நிறைய உண்டு.

பெயரில் என்னங்க இருக்கு? போன தலைமுறை வரை டாடா பிர்லா என  கூறிக்கொன்டிருந்தவர்கள் இப்போது இவர் என்ன 'பெரிய அம்பானியா'  என கூற ஆரம்பிக்கவில்லையா?  இத்தனைக்கும் மூத்த அம்பானி ஒரு கூலியாகத்தானே தன் வாழ்க்கையை  ஆரம்பித்தார்? அம்பானி என பெயர்  வைத்ததால் அம்பானியாகவில்லையே?       

எங்கள் வீட்டை பொறுத்தவரையில் எல்லா பெயர் தேர்வுகளும் எங்கள்  அம்மாவோ அப்பாவோ அல்லது மூத்தவர்கள் செய்த தேர்வுதான். சில நேரங்களில் எங்கள் குடும்பத்தில் மருமகள்களாக வந்தவர்களின்   பெயர்களுக்குள்ளும்  ஒரு ஒற்றுமை ஏற்பட்டது. சில பெயர்கள் இதோ...(என்னுடைய பெயர் மிகவும் அரிதானது. 'Facebook' ல் மொத்தம் 7  பேர்தான் என்னுடைய  பெயரில் உள்ளார்கள். சென்னை தொலைபேசி  டைரக்டரியில் மொத்தம் 2  பேர்தான். அதனால் சஸ்பென்ஸ்). 

சுதந்திரா தேவி (சுதந்திர தினத்தன்று பிறந்தவர்)
மிர்னாலினி தேவி
யாழினி தேவி
மணி வண்ணன்
முகில் வண்ணன்
எழில் வண்ணன்
விஜய லக்ஷ்மி
வீர லக்ஷ்மி
விஜய நிலா
விஜய பாரதி

அம்மாவாசை ஒரு நாள் அம்பானி ஆகிவிட முடியும். ஆனால் சச்சின் என்று பெயர் வைப்பதினால் மட்டும் ஒருவன் சச்சின் ஆகிவிட முடியாது (கலக்குற மச்சி).

     

share on:facebook