Sunday, December 30, 2012

2013 முக்கிய நிகழ்வுகள் - மாயாண்(டி) காலண்டர் என்ன சொல்கிறது?


சென்ற வாரம் கண்டெடுக்கப்பட்ட மாயன் காலத்து கல்வெட்டுகளில் இருந்து தமிழ் நாட்டை பற்றி அதிலும் குறிப்பாக 2013 தமிழ் நாட்டில் நடக்க கூடிய முக்கிய 10 நிகழ்வுகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறதாம். இதோ அவைதான் இது...

1. 2013 முதல் தமிழகத்தில் கரண்ட் கட் இருக்கவே இருக்காது (இப்பவே கண்ணா கட்டுதா? மேலும் படிச்சுட்டு சொல்லுங்க).

2. என் வழி தனி வழி என மீண்டும் கூறியுள்ள சூப்பர் ஸ்டார், 2013 இல் நிச்சயம் புது கட்சி ஆரம்பிப்பார்.

3. தமிழகத்தின் உடன் பிறவா சகோதிரிகள் மீண்டும் 2013 இல் பிரிய போகிறார்கள்.

4. சென்னையை பிடிக்காமல் எல்லா கொசுக்களும் வேறு கண்டத்திற்கு செல்ல முடிவெடுக்குமாம்.

5. தமிழகம் கேட்ட போதெல்லாம் தண்ணீர் திறந்து விட தயார் என கர்நாடகம் அறிவிக்கும்.

6. 2013 முதல் வாயே மூடாமல் நம் பிரதமர் பேசிக் கொண்டிருப்பாராம்.

7. தமிழ் சானல்களில் இனி அழுகை சீரியலே கிடையாது என அனைத்து டி.வி. தயாரிப்பாளர்களும் அறிக்கை விடுவார்கள்.

8. தமிழகத்தின் உடன் பிறந்த சகோதரர்கள் 2013 முதல் இரட்டை குழல் துப்பாக்கியாக சேர்ந்து செயல் பட போவதாக அறிவிப்பார்கள்.

9. பதிவர்கள் எல்லோரும் 'ஹிட்' கவுண்டர்களை எடுத்து விடுவார்களாம்.

10. இது எல்லாவற்றுக்கும் மேலாக இதற்க்கு முன்னரே டிசம்பர் 30 ஆம் நாள் உலகம் அழியுமாம்.

ஹி, ஹி, ஹி...இத நீங்க நம்பலைல. அப்ப மேலே உள்ள எதையும் நம்பாதீங்க. நல்ல விசயங்கள என்னைக்கு இருந்தாலும் பின்பற்றுங்க, பின்பற்ற உறுதி எடுத்துக்குங்க. அப்புறம் பாருங்க. ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் புது வருட பிறப்பு தான்.

டிஸ்கி: இப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லை.



share on:facebook

Friday, December 28, 2012

சிறகொடிந்த பறவை இறந்து போனது.

டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான கல்லூரி மாணவி இன்று அதிகாலை சிகிர்ச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவ மனையில் காலமானார். இதையொட்டி டில்லி முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (இதற்காக தானே அப்பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்பினீர்கள்?).

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை சிங்கப்பூருக்கு மேல் சிகிர்சைக்கு அனுப்பியது மறுத்து ரீதியாக மேற்கொள்ளபட்ட  முடிவு அல்ல எனவும் அது அரசியல் முடிவு எனவும் தெரிய வருகிறது. இதிலயுமா உங்க பாலிடிக்ஸ்?

அம்மாணவி ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் வேண்டுவோம்.

share on:facebook

நீயா நானா: கார்பரேட் வாழ்க்கை - முழு வீடியோ மற்றும் மோகன் பேச்சு


நீயா நானா - கார்பரேட் வாழ்க்கை எப்பிசோடில் 'வீடு திரும்பல்' மோகனின் முக்கிய கருத்து இது தான்...

IT யில் அடிமை போல் வேலை வாங்குவது, தேவையல்லாது ஒருவரை பற்றி எஸ்கலேட் செய்வது என்பதெல்லாம் அவரவர் மேலாளரின் தனிப்பட்ட attitude மற்றும் behavior பிராபளம். நீங்கள் உங்கள் குறைகளை வெளியே சொல்லாவிட்டால் யாருக்கும் அது தெரிய போவதில்லை. இதை பற்றி உங்கள் H. R. மேலாளர் அல்லது அதற்கும் மேல் H. R. - V. P யிடம் கூட நீங்கள் கம்ப்ளைன்ட் பண்ணலாம் என்று தனது கருத்தை தெரிவித்தார். வக்கீல் அல்லவா?

IT  மட்டுமல்ல. எந்த துறையாக இருந்தாலும் அதை தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம். 'The choice is yours'. உங்களுக்கென்று ஒரு passion இருக்கலாம். ஆனால் அதை வைத்து உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாத போது வேறொரு துறையை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அதில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு கூட உங்களால் அதை விட்டு வெளியே வர முடியவில்லையா? நீங்கள் விருப்பப்பட்டதை அடைய பிற வழிகள் உண்டு. அதில் ஏதாவது ஒன்றில் ஈடுபடுங்கள் என்று அவர் 'பிளாக்' எழுத வந்த காரணத்தை சொன்னார்.

எனக்கென்னமோ அவர் சொல்வது சரியாக தான் படுகிறது.

முழு வீடியோவை இங்கே காணலாம். மோகனின் முக்கிய கருத்துக்கள் 55 மற்றும் 1.05 நிமிடங்களில்...அவர் குழுவில் சிறப்பு பரிசை தட்டி சென்றவரும் அவரே.

ட்ரீட் எப்ப மோகன்(இதுவும் கார்பரேட் கல்ச்சர் தான். ஒத்துக்கொள்கிறேன்)?



சம்மந்தப்பட்ட பதிவுகள்...

நீயா நானா : கார்பரேட் வாழ்க்கை - வந்ததும் வராததும்...

நீயா நானா: கார்பரேட் வாழ்க்கை - 'வீடு திரும்பல்' மோகன் சொல்வது சரியா?

share on:facebook

Thursday, December 27, 2012

நீயா நானா: கார்பரேட் வாழ்க்கை - 'வீடு திரும்பல்' மோகன் சொல்வது சரியா?


தனக்கு ஒரு முத்தம் கூட தன் கணவரிடம் இருந்து கிடைக்கவில்லை என நிகழ்ச்சியில் ஒரு சகோதிரி கூறினார். வருத்தப்பட வேண்டிய விஷயம் தான். ஒரு வேலை இருவரும் வேலைக்கு செல்லாமல் ஒருவர் மட்டும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் இம்மாதிரி பிரச்சனைகள் பெருமளவு குறைந்து விடும். அது அவர்கள் சொந்த விருப்பம்.

ஆனால் நான் சொல்ல வருவது வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் போது ஆரம்ப காலங்களில் சில கஷ்டங்களை சந்தித்து தான் ஆக வேண்டும். அது பொருளாதாரம் மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. வாழ்வில் சிலவற்றை நாம் இழக்க நேரிடும். எவ்வளவு இழக்கலாம். எவ்வளவு காலம் இழந்து வாழலாம் என்பது அவரவர் சூழ்நிலை மன நிலைக்கு ஏற்றது.

நான் IT யில் வேலைக்கு  சேர்ந்த புதிதில் மற்ற எல்லோரையும் விட எனக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு முதலில் கிடைத்தது. அப்போது என் சிரியவளுக்கு 1 1/2 வயது. ஆறு மாதம் கழித்து நான் திரும்பி வரும் போது என்னை அவள் 'அப்பா' என்றே அழைக்கவில்லை. கதவுக்கு இடுக்கில் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பாள். யாரென்று கேட்டால் 'மாமா' என்பாள். மற்றபடி என் போட்டோவை காண்பித்தால் 'அப்பா' என்பாள். வீட்டில் உள்ளவர்கள் நான் இல்லாத போது அடிக்கடி என் போட்டோவை காண்பித்ததால் வந்த வினை. அந்த நேரங்களில் எனக்கு மனதுக்கு சற்று கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும் இது சிறிது காலம் கழித்து சரியாகி விடும் என்று. இன்று அவளுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கிறது என்றால் அதற்க்கு நான் கொடுத்த அந்த சிறிய விலை தான்.

வேலை கஷ்டம் வேலை கஷ்டம் என புலம்புகிறார்கள். எனக்கு தெரிந்து எந்த பிராஜக்டிலும் வருஷம் 365 நாளும் கஷ்டம் இருக்க போவதில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் வேலை பார்க்கும் போக்குவரத்து காவலரை விட விடுமுறையே இல்லாமல் பணியாற்றும் போலீஸ், ராணுவத்தினரை விட நாம் அப்படி என்ன கஷ்ட படுகிறோம் என எனக்கு தெரியவில்லை. வேலை பளு வரும் போகும். அதற்க்கு தானே நமக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்?

அதே போல் எதை தான் சொல்லி IT மக்களை மட்டம் தட்டுவது என்றில்லை. சாட்டில் பதில் சொல்லும் பொது 'S' என்று ஒரே எழுத்தில் பதில் தருகிறார்கள், பேரை சுருக்கமாக சொல்லி கூப்பிடுகிறார்கள். என்னப்பா உங்களுக்கு பிராபளம்? இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அரசு அலுவலகம் போல் விடுப்பு எடுக்க வேண்டுமென்றால் ஒரு முழு நீள பேப்பரை வாங்கி இன்னமும் லீவ் லெட்டர் போல் எழுத வேண்டுமா இல்லை ஜஸ்ட் ஒரு SMS/ஈமெயிலில் I'm  sick  என சுருக்கமாக வேலையை முடிப்பதை வரவேற்பீர்களா?

அப்புறம் எல்லோரும் இப்போ விவசாயம் விவசாயம் என பேச ஆரம்பித்து விட்டார்கள். விவசாயம் என்னமோ இவர்களுக்கு பஞ்சு மிட்டாய் விற்பது போல் தோன்றுகிறது போலும். சார், நாங்கலாம் என்ன பெரும்பாலானோர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். விவசாயத்தில் கொட்டை போட்ட அந்த கால பெரியவர்களே தற்போது விவசாயம் செய்ய முடியவில்லை என நிலத்தை எல்லாம் குத்தகைக்கு கொடுத்து விட்டு ஊர் பக்கம் வந்து விடுகிறார்கள். பல காலம் விவசாயம் பார்த்த என் தந்தை அடிக்கடி இதை சொல்வார். இன்னமும் என் நினைவில் உள்ளது. 'Agriculture is like  gambling' என்று. விவசாயம் பார்ப்பதை நான் தவறாக சொல்லவில்லை. அது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று தான் கூறுகிறேன்.

அப்படி விவசாயம் பார்க்க IT வேலையை விட்டு விட்டேன் என கூறிய ஓரிருவரிடம் எப்போ வேலையை விட்டீர்கள் என கேட்கப்பட்ட போது ஒரு ஆறு ஏழு வருடங்கள் IT யில் வேலை பார்த்த பிறகு தான் தங்கள் வேலையை விட்டதாக ஒத்துக்கொண்டார்கள். அதில் ஒரு நேர்மை தெரிந்தது. அதாவது வேலையை கஷ்டம் என எடுத்தவுடனே விட்டு விடவில்லை. ஓரளவு தங்கள் வாழ்வை செட்டில் செய்து கொண்ட பிறகு தான் தாங்கள் விருப்பப்பட்ட வேலையை செய்ய கிளம்பி இருக்கிறார்கள்.அது தான் நடைமுறையில் சாத்தியம்.

இதை பற்றியெல்லாம் நம் 'வீடு திரும்பல்' மோகன் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் என்பதை...அடுத்த பதிவில் பார்ப்போம்.  

நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட சமீபத்திய பதிவு...

நீயா நானா : கார்பரேட் வாழ்க்கை - வந்ததும் வராததும்...



share on:facebook

Wednesday, December 26, 2012

நீயா நானா : கார்பரேட் வாழ்க்கை - வந்ததும் வராததும்...


விஜய் டி.வி. யே ஒரு கார்பரேட் கம்பெனி என்பதாலோ என்னவோ சென்ற வார நீயா நானாவில் கார்பரேட் வாழ்க்கை பற்றிய விவாதத்தின் போது  மிஸ்டர். கோபிநாத்தின் வாய்ஸ் கொஞ்சம்  கம்மியாகவே தெரிந்தது.

அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் (இரண்டு புறமும்) பெரும்பாலானவை உண்மையில் நடப்பவை தான். இருந்த போதிலும் IT யில் வேலை என்றாலே எல்லோரும் சுக போகமாக வாழ்க்கையை நடத்துபவர்கள் போலவும், அதிக படியாக செலவு செய்பவர்களாகவும் எப்போதுமே சித்தரிக்க படுகிறார்கள். இப்படியே போனால் பின் T. ராஜேந்தர் படத்தில் வருவது போல காலேஜ் பசங்க என்றாலே பெண்கள் பின்னால் சுற்றுபவர்களாகவும், பரீட்சை என்றாலே பிட் அடிக்காமல் இருக்க மாட்டார்கள் போலவும் சித்தரிக்க படுவது போல் பின்னாளில் எல்லோரும் IT மக்களை பற்றிய தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்புண்டு(பின்னாளில் என்ன இப்ப மட்டும் என்ன வாழுதாம்னு சக நண்பர்கள் சொல்வது கேட்கிறது!).

இனி, நிகழ்ச்சியிலிருந்து:

#IT வாழ்க்கை அடிமை வாழ்க்கை போல் சிலர் பேசினார்கள். அப்போ அரசாங்க உத்தியோகம் மட்டும் என்ன சுதந்திர வாழ்க்கையா? அப்படியே இருந்தாலும் ஒரு ரிசர்வேஷன் கவுண்டரில் உள்ளவர் இயற்கை உபாதைக்கு அஞ்சு என்ன ரெண்டு நிமிஷம் எழுந்து போனால் கூட நாமே கரிச்சு கொட்டுவோமே? 9 டு 5 ஆபிசில் இல்லையென்றால் அரசு அதிகாரிகள் விட்டு விடுவார்களா? உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யாமல் இருக்கலாம். அது வேறு கதை. கொடுத்த வேலையை/கடமையை நேரம் காலம பார்க்காமல் செய்தால் அது அடிமை தனமாம். இன்னும் சொல்லப்போனால் வேலைக்கு சேர்ந்த முதல் ஒன்றிரண்டு வருடங்கள் மட்டும் பல கம்பெனிகளில் பாண்ட் போடுவார்கள். அதன் பின் யாரும் யாரையும் பிடித்து வைத்துக்கொள்வதில்லை/முடியாது. இதில் எங்கிருந்து அடிமைத்தனம் வந்ததென்று தெரியவில்லை. இதோ, இரண்டு நாட்களுக்கு முன்னர் என் சக மேனேஜர் ஒருவரிடம் வேலை பார்க்கும் ஒரு ஊழியர், உங்கள்  டீமில் வேலை செய்ய பிடிக்கவில்லை. என்னை உடனே உங்கள் பிராஜக்டில் இருந்து ரிலீஸ் செய்யுங்கள் என்று கேட்டாராம். இதை என்னவென்று சொல்லுவது?

#அடுத்து அளவுக்கு அதிகமாக/ஆடம்பரமாக செலவழித்தல். இது எப்போதுமே எழுப்பப்படும் பொதுப்படையான ஒரு குற்றச்சாட்டு. உண்மையில் ஒரு மிக சிறிய சதவிகிதம் மட்டுமே அப்படி செலவு செய்வார்கள்/முடியும். அமெரிக்காவில் இருந்த போது கூட நான் தான் கடைசி ஆளாக ஐ-போன் வாங்கினேன். பணம் இல்லை என்று இல்லை. எனக்கு அதில் பெரிதாக ஆர்வம் இல்லை. என்னையும் சேர்த்து இந்த வருடத்தில் இரண்டு பேர் எங்கள் சென்னை கிளைக்கு அமெரிக்காவில் இருந்து மாற்றல் வங்கி வந்தோம். நான் இன்னமும் 1997 மாருதி தான் ஒட்டி செல்கிறேன். மற்ற இருவர் புது டூ வீலர் தான் வாங்கினார்கள். பெரும்பாலும் வீட்டில் நல்ல வசதியும் வேலையில் சேரும் புதிதில் தான் சிலர் கண்ணா பின்னாவென்று செலவு செய்வார்கள். அப்படியே செய்தால் தான் என்ன? அதனால் பொருளாதாரத்திற்கு தான் நல்லது. சும்மா அப்படியே மூட்டை மூட்டையா சேர்த்து வைக்கிற பழக்கத்த முதலில் விட்டு ஒழிப்போம்.

#பெயர் சொல்லி கூப்பிடுவது மற்றும் கெட்ட வார்த்தைகள் பிரயோகம். இதில் வருத்தப்பட பெரிசா என்ன இருக்குனு தெரியல. சார், சார்னு இன்னும் தனக்கு மேல உள்ளவர்களுக்கு சலாம் போட்டுகிட்டே இருக்கணும்னு எதிர் பார்க்குறாங்களா? மேலை நாடுகளுடன் IT தொடர்பு உள்ளதால் அங்குள்ள  வழக்கம் போல் பேர் சொல்லி எல்லோரையும் கூப்பிடுகிறோம். அதற்காக அப்பா, அம்மாவையும் என்ன பேர் சொல்லியா வீட்டில் கூப்பிடுகிறோம்? கெட்ட வார்த்தைகள். சிலர் அதன் முழு அர்த்தம் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமாக உபயோக படுத்துகிறார்கள். இதையும் எல்லோரும் எல்லோரிடத்திலும் செய்வதில்லை. தமிழிலும், மற்ற தொழில் செய்பவர்களும் கெட்ட வார்த்தை பேசுவதே இல்லையா என்ன? இன்னும் சொல்லப்போனால் இங்கு யாரும் கெட்ட வார்த்தையை அடுத்தவர்களை திட்ட உபயோகிப்பதில்லை. மாறாக அவர்களுக்குள்ளாக 'ஷி...' என்று கூறிக்கொள்வார்கள். மற்ற வேலைகளில் கெ.வா. அடுத்தவர்களை திட்டவே உபயோக படுகிறது.

#கை நிறைய சம்பளம். வாங்கினா என்ன? கைக்கும் எட்டாம வாய்க்கும் எட்டாம பாதி மாசத்தில் இருந்து அடுத்தவரிடம் கை ஏந்தாமல் இன்றைய இளைஞர்கள் வாழ்கையில் முன்னேறுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? நான் முன்பே கூறியது போல் அதுவும் ஆரம்ப காலத்தில் பெரிய சம்பளமாக தோன்றும். பின் திருமணம் குழந்தைகள் என ஆன பின் எவ்வளவு வாங்கினாலும் பத்தாது. நான் ஒரு காலத்தில் பாசஞ்சர் ரயிலில் பொது பெட்டியில் துண்டை விரித்து இடம் பிடித்து சென்னை வருவேன். இப்போ எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் செய்து படுத்து தூங்கி போவது ஒரு முன்னேற்றம் தானே? அப்படி தானே எல்லோரும் சொல்லி வளர்கிறார்கள். வாழ்கையில் நிறைய சம்பாதிக்க வேண்டும். நல்ல வளமான வசதியான வாழ்வு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று. எல்லாம் நாங்கள் உழைத்து தானே சம்பாதிக்கிறோம். தவறான வழியில் அல்லவே?

                                                                                                                            இன்னும் வரும்...

தொடர்புடைய பழைய பதிவு: நீங்க என்ன புதுசா கண்டு பிடித்தீர்கள் Mr. (நீயா நானா) கோபிநாத் ?

  

share on:facebook

Thursday, December 20, 2012

பெண்களும் அண்ணாவும்...


பேரறிஞர் அண்ணா அரசியலில் மட்டுமன்றி அறிவாற்றலிலும் மாமேதை என்பதை எல்லோரும் அறிவர். அமெரிக்க உள்துறை மற்றும் யேல் பல்கலை கழகத்தின் விருந்தினராக 1968 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற அறிஞர் அண்ணாவுக்கு யேல் பல்கலைகழகம் chubb fellowship கொடுத்து கவுரவித்தது. அமெரிக்கர் அல்லாதவர் ஒருவர் chubb fellowship ஆனது அதுவே முதல் முறை. தினமும் படுக்க போகும் முன் இரு புதிய ஆங்கில வார்த்தைகளை அறிந்து கொள்வது அறிஞர் அண்ணாவின் வழக்கமாக இருந்தது.

இனி வருவது நம் லோக்கல் அண்ணாக்களை பற்றியது .

எங்கள் நிறுவனத்தில் வெளி மாநிலங்களில் இருந்து (பெரும்பாலும் மும்பையிலிருந்து) வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளும் trainees பலரும் அருகே உள்ள கம்பெனி கெஸ்ட் ஹவுசில் தங்கி உள்ளார்கள். இவர்களும் எங்கள் கம்பெனி பஸ்ஸில் தான் போய் வருவார்கள். பெரும்பாலான பஸ்கள் காண்ட்ராக்ட் முறையில் ஓடுவதால் ஓட்டுனர்கள் குறிப்பிட்ட இடத்தில் தான் ஊழியர்களை ஏற்றி இறக்குவார்கள். இருந்தாலும் இந்த (வட இந்திய) பெண்கள் அழகாக கொஞ்சும் தமிழில் 'அண்ணா...பிளீஸ் ஸ்டாப்' என்று டிரைவரிடம் கேட்டால் போதும், வண்டி எங்கே போய் கொண்டிருந்தாலும் உடனே அங்கேயே நிறுத்தி விடுவார். சார், டிரைவர் என்று சொல்வதை விட 'அண்ணா' என்று சொல்லும் போது அதற்குள் ஒரு பாசம் ஏற்பட்டு விடுகிறது போலும்.

அதே போல் அவ்வப்போது ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் போதும் பார்த்திருக்கிறேன். பெண்கள் பெரும்பாலும் 'அண்ணா' என்ற சொல்லை தான் உபயோகிக்கிறார்கள். அது ஆட்டோ டிரைவர்களுக்கு மரியாதையையும், அண்ணன் என்று உறவுக்குள்ளும் வருவதால் பெரும்பாலும் ரெஸ்பான்ஸ் நன்றாகவே இருக்கிறது. தற்போது நடந்து வரும் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை பார்க்கும் போது பெண்கள் இவ்வாறு 'அண்ணன்' முறை வைத்து அழைப்பதே நன்று என்று தெரிகிறது.

மும்பையில் இருந்த போது எங்கள் அபார்ட்மெண்ட் அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஒருவர் ரெண்டல் காண்ட்ராக்ட் சம்பந்தமாக என்னை ஒவ்வொரு முறை அழைக்கும் போது 'பையா(baiya), பையா' என்பார். ஆரம்பத்தில் என்னடா இவ்வளவு சின்ன பொண்ணு நம்மை பார்த்து பையா என்று அழைக்கிறதே என்று எனக்கு எரிச்சலாக இருந்தது. பின் வட இந்திய நண்பர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்த போது, பையா(baiya) என்றால் சகோதரா என்று அர்த்தம். உங்களை சகோதரா என்று தான் அந்த பெண் அழைத்திருக்கிறாள் என்று கூறினார்.

ஹ்ம்ம்...அண்ணா என்றாலே பாசமும் மரியாதையும் தான். உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கா இது மாதிரி?




share on:facebook

Tuesday, December 18, 2012

12/12 ரஜினியை நேரில் சந்தித்த அனுபவம் + பிறந்த நாள் செய்தி


ரஜினியை அவரின் முப்பத்தி ஏழாவது பிறந்த தினத்தன்று ரசிகர் மன்ற நண்பர்களுடன் சந்தித்து வாழ்த்து கூறினோம். பிறந்த நாள் அன்று கூட்டம் நிறைய இருக்கும் என்று அதற்கு முன் தினம் இரவே அவரது வீட்டில் சந்தித்து பிறந்த நாள் நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினோம்.

இரவு பதினோரு மணிவரை டப்பிங்கில் (மிஸ்டர் பாரத் என்று நினைக்கிறன்) இருந்து விட்டு வீடு திரும்பியவர் நாங்கள் மாலையிலிருந்து அவரை காண காத்திருக்கிறோம் என அறிந்து வீட்டிற்க்குள் நுழையும் முன் ஒரு நிமிடம் திரும்பி வந்து வரவேற்பறையில் காத்திருந்த எங்களை பார்த்து அவருக்கே உரித்தான ஸ்டைலில் என்னமா கண்ணு? எல்லோரும் சவுக்கியமா? என கேட்டு விட்டு. இதோ ஒரு அஞ்சு நிமிஷம், வந்துடுறேன் என விடு விடுவென்று உள்ளே சென்றவர், அடுத்த சில மணித்துளிகளில் மீண்டும் பிரஷாக வந்து எங்களுடன் ஒரு பத்து நிமிடங்கள் பேசி இருந்து விட்டு நாங்கள் கொண்டு வந்திருந்த பிறந்த நாள் பரிசுகளை பெற்றுக்கொண்டு, எல்லோரும் பார்த்து பத்திரமா ஊருக்கு போங்க அது தான் எனக்கு முக்கியம் என விடை பெற்று சென்றார்.

ரஜினி பிறந்த 12/12 நாளுக்கு அடுத்த வாரம் 19/12 என் பிறந்த நாளாக்கும். எனக்கு மட்டுமல்ல. தி.மு.க. வின் பொது செயலாளர் பேராசிரியர் அவர்களுக்கும் அன்று தான் பிறந்த நாள். இதை விட ஒரு சிறப்பு அம்சம் என் அண்ணனுக்கும் அன்று தான் பிறந்த நாள். அப்படியென்றால் நீங்கள் இரட்டை பிறவியா என கேட்பவர்களுக்கு? இல்லை, எனக்கும் என் அண்ணனுக்கும் மூன்று வயது வித்தியாசம். ஆம், என் அண்ணன் பிறந்து சரியாக மூன்று வருடங்கள் கழித்து அதே மாதம் அதே  தேதியில் நான் பிறந்தேன்.

சிறு வயதாக இருக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அம்மாவின் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு என்று சாக்லேட்டுகள் இருவருமாக சேர்ந்து எடுத்து சென்றால் எனக்கு ஏற்படும் ஒரே கவலை இருவருக்கும் சேர்த்து ஒரே பரிசு கொடுத்து விட்டால் யார் அதை எடுத்துக்கொள்வது என்று தான். அதன் பிறகு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வீட்டில் ஸ்வீட் செய்வதோடு நின்று விட்டது. இருந்தாலும் இன்று வரை பிறந்த நாளை மகிழ்வுடன் வீட்டிற்குள்ளே கொண்டாடி வருகிறோம். தற்போதெல்லாம் குழந்தைகள் ஏதாவது ஒரு பிறந்த நாள் பரிசு (எனக்கு தெரியாமல்) வாங்கி வைத்து பிறந்த நாள் அன்று பரிசாக எனக்கு தருகிறார்கள். சென்ற முறை என் பெரிய மகள் ஒரு அழகான வாட்ச் வாங்கி கொடுத்தாள் (அவள் சேமிப்பிலிருந்து). இந்த முறை என்ன கிடைக்கும் என ஆவலாக உள்ளேன்.

இப்போதெல்லாம் பிறந்த நாள் வரும் போது கூடவே நமக்கு வயதாகிறது என்ற நினைப்பும் கேட்காமலேயே வந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மனிதனுக்கு அப்படியே மீண்டும் வயது குறைந்து கொண்டே போனால் எப்படி இருக்கும்? சைக்கிளுக்கு கால் எட்டாமல் மூன்று காலில் ஓட்டுவதும், டீன் ஏஜ் பருவத்தில் கோ-எட் பள்ளியில் படிப்பதும், கல்லூரி என்றால் கட் அடித்து விட்டு சினிமா/பிரண்ட்ஸ் வீட்டுக்கு போவதற்கு தான் என்று அந்த கட்டுபாடற்ற வாழ்க்கை இனி கிடைக்குமா?

ஹ்ம்ம்...இப்படி ஆசை படுவது தான் மனிதன் முதிச்சி அடைய காரணமாமே?

ரஜினி பதிவுகள்...

McDonald's இட்லி வடை. ருசித்து சாப்பிட்டார் ரஜினி.

இணைய வசதி இன்றி இயங்கும் உலகின் முதல் வலைத்தளம். ஆல் அபவுட் ரஜினி.காம்

ரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...

share on:facebook

Thursday, December 6, 2012

IT அவலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்...

உலகம் பூராவும் எட்டு மணி நேர வேலை என்றால் IT கம்பெனிகளில் மட்டும் ஒன்பதரை மணி வேலை நேரம்.

இக்கரைக்கு அக்கறை பச்சை என்பார்கள். அப்படிதான் இந்த IT வேலையும். வெளியில் உள்ளவர்கள் எல்லாம் இன்று விலைவாசி உயர்வு தொடங்கி, ரியல் எஸ்டேட்டின் விண்ணை முட்டும் விலை வரைக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் இந்த IT யும், அதில் வேலை செய்பவர்களும் தான் என்கிறார்கள்.

வெளியில் இருந்து பார்க்கும் போது எல்லாம் நல்லாத்தான் தெரியும். உள்ளே வந்து பார்த்தால் தான் எங்கள் நிலைமை புரியும். கீழே சொல்லப்படும் எல்லாம் பல IT கம்பெனி நண்பர்கள் மூலம் வாய் மொழியாக கேட்டது.

நாள் முழுதும் ஏசியில் உட்கார்ந்து வேலை செய்கிறோம் என்று பலர் பொருமுவார்கள். ஆனால் IT கம்பெனிகளில் பல இடங்களில் ஏ.சி. வேலை செய்வதே இல்லை. இதை கேட்டால் 'டிசைனே'  அப்படிதான் சார் என்பார்கள். தொடர்ந்து கம்ப்ளைன்ட் செய்தால் ஒரு காற்றாடியை தூக்கி கொடுத்து விடுவார்கள். நாள் பூரா இண்டஸ்ட்ரியல் பேன் முன் உட்கார்ந்து பாருங்கள். மாலையில் வெளியே போகும் போது முகம் எல்லாம் பேயறைந்தது போல் இருக்கும்.

அடுத்து வேலை நேரம். உலகம் பூராவும் எட்டு மணி நேர வேலை என்றால் IT கம்பெனிகளில் மட்டும் ஒன்பதரை மணி நேரம் வேலை. இடையில் ஒரு மணி நேரம் மதிய சாப்பாட்டுக்கு என்றாலும் பெரும்பாலானோர் உட்காரும் இடத்திலேயே பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலையை தொடங்கி விடுவர். எட்டு மணி நேரமாக தான் இருந்தது முதலில். 2008 வாக்கில் ரூபாயின் மதிப்பு உயர்ந்த போது (ஒரு டாலர் நாற்பது ரூபாய்க்கும் குறைந்த போது) லாபம் குறைகிறது என்று சொல்லி கூட அரை மணி நேரம் வேலை பார்க்க சொன்னார்கள். இன்று ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்து ஒரு டாலர் ஐம்பத்தைந்தை தாண்டி விட்டது. ஆனால் இவர்கள் மட்டும் அதே நேரத்தை பின் பற்றுகிறார்கள்.

தீபாவளி பொங்கல் என்றால் எல்லோரும் ஓரிரு நாள் முன்பே ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டு போய் விடுவார்கள். சென்னையே வெறிச்சோடி கிடக்கும். ஆனால் அப்போது தான் அந்த ப்ரொடக்ஷன் பிராப்ளம், இந்த  இம்ப்ளிமெண்டேஷன் என்று முதல் நாள் இரவு வரை கட்டாயமாக இருக்க வைத்து விடுவார்கள்.

ஷிப்ட்டில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் ஷிபிட் முடிந்தால் கூட உடனே வீட்டுக்கு போக முடியாது. 11 ஷிப்ட் முடிந்தவன் 12 மணி ஷிப்ட் முடியும் வரை காத்திருந்து அவனோடு சேர்ந்து தான் வீட்டுக்கு கேப்பில் போக முடியும். கேட்டால் காஸ்ட் கட்டிங் சார். கேப் புல் ஆனால் தான் எடுக்க சொல்லி இருகிறார்கள் என்று அட்மினில் புலம்புவார்கள்.

படிச்சு முடிச்சோமா, வேலைக்கு சேர்ந்தோமா என்று இந்த தொழிலில் இருக்க முடியாது. வருடம் வருடம் அதை படி இதை படி அப்போதான் புரோமஷன் என்று நம் குழந்தைகளோடு சேர்ந்து நம்மையும் (வலு) கட்டாயமாக மீண்டும் படிக்க வைக்கிறார்கள். இல்லை என்றால் இன்கிரிமென்ட் கிடையாது புரோமோஷன் கிடையாது. என்ன தான் மாடு மாதிரி வேலை செய்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எந்த கம்பெனியிலும் வளர முடியாது.

ஆம், முதல் இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகள் அதிக பட்சமாக வளர்ச்சியை எதிர் பார்க்கலாம். அதன் பின் பெரும்பாலும் இறங்கு முகம் தான். இதற்க்காகவே ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு கம்பெனி மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி மாறுவது எளிதாகினும் அதன் பின் மீண்டும் முதலிலிருந்து நம் திறமையை புது கம்பெனியில் நிருபித்து காட்ட வேண்டும்.

நான் முப்பது ஆண்டுகள் செர்விசில் இருந்தேன் என்றெல்லாம் பெருமை பட அரசு ஊழியர்களால் தான் முடியும் போல். இன்னும் சில ஆண்டுகளில் IT யை சேர்ந்தவர்கள் அறுபது வயதை தொடும் காலம் வரும். ஆனால் அது வரை தொடர்ந்து IT சமூகம் வேலையில் தொடர்வார்களா என்பது சந்தேகமே. எனக்கு தெரிந்து நாற்பது நாற்பத்தி ஐந்து வயதை நெருங்கிய, நன்றாக சம்பளம் வாங்கும் IT நண்பர்கள் சிலர் தற்போதே வேலையை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். அந்த அளவிற்கு வேலை பளு. மன அழுத்தம்.

இன்னும் சில வருடங்களில் IT மீதுள்ள மோகம் நிச்சயம் குறைந்து விடும் என நம்புகிறேன்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்...

IT நிறுவனங்களும் பெண்களின் ஆடை குறைப்பும்

'ஆன்சைட்டா' அந்தப்புரமா?. IT படுத்தும் பாடு பார்ட் - 2

ஆடி தள்ளுபடியில் IT மாப்பிள்ளைகள்


share on:facebook

Tuesday, December 4, 2012

அதிரடி அயல்நாட்டு சட்டங்கள். அதிர்ச்சியில் இந்திய பெற்றோர்கள்.

//நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன்//

நேற்று நார்வே நீதிமன்றம் ஒன்று தங்கள் குழந்தையை கொடுமை படுத்தினார்கள் என்பதற்காக அக்குழந்தையின் இந்திய பெற்றோருக்கு தந்தைக்கு 18 மாதமும் தாய்க்கு 15 மாதமும் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அயல் நாடுகளில் பல வருடங்கள் குடும்பத்துடன் வாழ்ந்த எனக்கே இது சற்று பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலே போவதற்கு முன், இந்தியாவிலிருந்து வெளி நாடு செல்லும் நண்பர்கள் யாராக இருந்தாலும் அந் நாட்டிற்கு செல்லும் முன், அந்நாட்டின்  முக்கியமான சட்ட திட்டங்களை, வரைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று எல்லா இடங்களிலும் இந்தியர்கள் தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய காரியமில்லை.

உதாரணத்திற்கு சிங்கப்பூர் மலேசியாவில் சுத்தம் மிக முக்கியம். நம்மூர் மாதிரி ரோட்டில் பேப்பர் அது இது என்று எதை போட்டாலும் 500 டாலர் 1000 டாலர் என்று பைன் போடுவார்கள் என்று தெரியும். சவூதி போன்ற நாடுகளில் மற்ற மதங்களின் வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக கடுமையான சட்டங்கள் உண்டு.

ஏன் நாம் மட்டும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லையா? நாம் பெற்ற குழந்தைகளை நமக்கு கண்டிக்க, அடிக்க உரிமை இல்லையா என சிலர் கேட்கலாம். எந்த நாடாக இருந்தாலும் அங்குள்ள சட்டங்கள் அங்குள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் தான் உருவாக்கி இருப்பார்கள். அப்படி பார்க்கும் போது, மேலை நாடுகளில் பரவலாக குழந்தை கொடுமைகள் உண்டு. அதற்க்கு காரணம் அவர்களுக்கு குழந்தைகள் மேல் பாசம் இல்லை என்றில்லை. இன்னும் சொல்லப்போனால் நம்மை விட அவர்கள் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிடுவார்கள். ஆனால், தனி மனித சுதந்திரம், விருப்பு வெறுப்பு என வரும்போது குழந்தை பாசம் அங்கே குறுக்கே வராது.

விவாகரத்து என்பது அங்கு சர்வ சாதாரணம். கணவன் மனைவியிடையே பிரச்னை உருவாகும் போது நம்மை போல் என் குழந்தைக்காக, குடும்பத்திற்காக தான் நான் பொறுத்து போகிறேன் அப்படி இப்படி எல்லாம் வசனம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள் அவர்கள். அப்போது இந்த குழந்தை பாசமும் குறுக்கே வராது. கோர்ட் உத்தரவு படி யாராவது ஒருவர் பராமரிப்பில் குழந்தை வளரும். பெற்றோர் மட்டுமல்ல, குழந்தைகளும் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வாறு பெற்றோர் பிரியும் போது நம்மூர் போலவே அப்பவோ அம்மாவோ மறுமணம் செய்து கொள்ளும் போது 'சித்தி/சித்தப்பா' கொடுமைகளை சில குழந்தைகள் சந்திக்க நேரிடும். அது மட்டுமின்றி 'சைல்ட் அப்யூசர்ஸ்' நிறைய பேர் அங்கு இருப்பார்கள். அம்மாதிரி கொடுமைகளை தண்டிக்க மேலை நாட்டு அரசுகள் கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் தான் நம் இந்திய பெற்றோர்கள் விட்டில் பூச்சி போல் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலை நாட்டில் உள்ள சட்டங்களை நாம் குறை கூறவும் முடியாது. அதே சமயம் அவர்களை போல் திட்டாமல், அடிக்காமல் நாம் குழந்தைகளை வளர்க்க முடியாது வளர்க்கவும் தெரியாது. நமக்கு ஒழுக்கம் அதிலும் நம் குழந்தைகள் ஒழுக்கமாக வளருவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம். ஆனால், அங்கோ, ஐந்து வயது குழந்தைக்கே தனி பெட் ரூம். அந்த ரூமிற்குள் செல்ல பெற்றோரே பெர்மிஷன் கேட்க வேண்டும்/தட்டிவிட்டு செல்ல வேண்டும். அப்படி பட்ட தனிமனித சுதந்திரம் உள்ள நாடுகள் அவைகள்.

ஆனால் இந்த குறிப்பிட்ட கைது/தண்டனை சம்பவம் பல சந்தேங்கங்களை கிளப்புகிறது. குழந்தை தன்னை பெற்றோர்கள் திட்டினார்கள், ஒழுங்காக நடக்கவிட்டால் இந்தியா திருப்பி அனுப்பி விடுவோம் என மிரட்டினார்கள் என்பதையெல்லாம் எப்படி குழந்தை கொடுமை என்று எடுத்துக்கொண்டார்கள் என தெரியவில்லை. எந்த நாட்டிலும் குழந்தைகளை சாதரணமாக (அதாவது பொது இடத்தில் அல்லாமல்) திட்டுவது ஒன்றும் பெரிய குற்றமில்லை. அதே போல் கண்டிப்பதும். பிசிகல் அப்யூஸ் தான் குற்றமாக கருதப்படும்.

அதே போல் சம்பவம் நடந்து ஆறு மதங்களுக்கு மேல் அதுவும் குழந்தைகள் தற்போது இந்தியாவில் உள்ள போது இம்மாதிரி பெற்றோர்களை சிறையில் அடைப்பது அநியாயம். இரண்டும் விபரம் அறியா குழந்தைகள். அவைகள்  அம்மா அப்பாவை பார்க்காமல் தவித்து விடாதா? அதிபட்சம் அவர்கள் வெர்பல் அப்யூஸ் செய்தததாக புகார் வந்திருந்தால் அவர்களை கூப்பிட்டு முதலில் ஒரு வார்னிங் செய்திருக்கலாம்.

முதலில் பெற்றோர்கள் திட்டினார்கள் என கூறிய அந்நாட்டு போலீஸ் தற்போது குழந்தை மீது காயங்களும் தழும்புகளும் இருந்தது என கூறுகிறது. குழந்தைகள் ஆறு மாதமாக இந்தியாவில் இருக்கும் போது இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. எது எப்படியோ, மக்களுக்காக தான் சட்டங்கள். அது எந்த நாடாக இருந்தாலும். இந்த பிரச்சனயை பொறுத்த வரை குழந்தையை திட்டினார்கள் என்பதற்கு சிறை தண்டனை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அக் குழந்தைகளுக்காவது பெற்றோர் இருவரையும் உடனடியாக நார்வே அரசு விடுதலை செய்ய வேண்டும். அது தான் என் வேண்டுதலும் விருப்பமும்.

அதை விட முக்கியம். வெளி நாடு செல்லும் பெற்றோர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டு அதன் படி நடப்பது. நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன். முடிந்தால் தனி பதிவாக போடுகிறேன். 

share on:facebook

Monday, December 3, 2012

நொறுக்ஸ்: மிலிடரி காதல் - ஹிந்துவின் காவடி.

இந்த வார நொறுக்ஸ்:

1. இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் இலங்கை பெண் ஒருவரை காதலித்து பின் கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளார். ராணுவ சட்டப்படி பணியில் உள்ள ஒருவர் வெளி நாட்டினரை திருமணம் செய்து கொள்ள முடியாது போலும் (விபரம் தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தலாம்).

இந்நிலையில் நம் ராணுவ வீரர், தான் வேறொரு நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு இராணுவத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பல காரணங்களை காட்டி ராணுவம் அதற்க்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதை எதிர்த்து ராணுவ வீரர் கோர்ட்டில் வழக்கு தொடர கோர்ட் அவருக்கு சாதகமாக தீர்பளித்துள்ளது.

அது மட்டுமல்ல. வெளி நாட்டினரை திருமணம் செய்து கொள்வதாலேயே அவரோ அவர் திருமணம் செய்து கொண்டவரோ நம் நாட்டுக்கு துரோகம் செய்வார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தன் கருத்தை வெளியிட்டு இருக்கிறது. ஹ்ம்ம்..காதல் செய்வதில் அதிலும் வெளிநாட்டு பெண்ணை  என்றால் இவ்வளவு பிரச்சனையா?

2. இதுவும் இலங்கை சம்பத்தப்பட்டது. ஹிந்து நாளிதழ். ஒரு காலத்தில் விரும்பி படித்ததுண்டு. ஆனால் சில வருடங்களாக, குறிப்பாக இலங்கை விசயத்தில் இலங்கை அரசின் பத்திரிக்கையாகவே மாறிவிட்டது. இலங்கையில், இறுதிகட்ட போரில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் பலியாகி, உள்நாட்டிலேயே அகதிகளாக கொட்டடிகளிலும், திறந்த வெளி கேம்புகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது கூட, ஹிந்து நாளேட்டில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமிலுள்ள டெண்ட்டுகளை முழு பக்கத்தில் கலரில் புகைப்படங்களாக வெளியிட்டு, உலகிலேயே சிறந்த அகதிகள் முகாம் இலங்கையில் தான் உள்ளது என்று புகழாரம் சூட்டியது. அட கண்றாவியே! இதையெல்லாமா பாராட்டுவார்கள்?

தற்போது இலங்கையிலிருந்து கடிதம் என்ற தலைப்பில் அவ்வப்போது ஏதாவது ஒன்றுக்கும் உதவாக கட்டுரை ஒன்றை வெளியிட்டு வருகிறது. பிராபகரன் வாழ்ந்த வீட்டை யாரும் பார்க்க போவதில்லை. அதற்க்கு பதிலாக இலங்கை அரசு அமைத்துள்ள போர் மியூசியத்தை மக்கள் சாரி சாரியாக சென்று பார்த்து வருகிறார்கள் என்று சொல்லி வருகிறது.

இன்னொரு கடிதத்தில் இலங்கை மக்கள் இப்போது தான் சந்தோசமாக வாழ்கிறார்கள். ஒன்றுமே இல்லாவிட்டாலும், மிக விரைவில் பெரிய பெரிய தொழில்கள் ஆரம்பித்து செல்வத்தில் கொழிக்க போகிறார்கள் என்று ஆருடம் கூறிக்கொண்டு இருக்கிறது.

இதை தவிர அவ்வப்போது ஹிமாச்சல் பிரதேசத்து பிரச்சனையில் ஒரு மாதிரியாக சீனாவுக்கு வக்காலத்து வாங்குவது போல் அவ்வப்போது எழுதி வருகிறது.

ஹ்ம்ம்...எப்படி இருந்த பத்திரிக்கை இப்படி ஆகிவிட்டது?

share on:facebook

Wednesday, November 28, 2012

சென்னையில் L.K.G. அட்மிஷனுக்கு ரூ. 17 லட்சம்.


தங்கள் பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவது இயற்கையே. ஆனால் அதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?

நேற்று ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி இது தான். தன் குழந்தைக்கு இடம் வாங்க மைலாப்பூரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு அக்குழந்தையின் தந்தை அப்பள்ளிக்கு கூடை பந்தாட்ட மைதானம் ஒன்றை தன் சொந்த செலவில் கட்டி தருவதாக கூறி உள்ளாராம். சும்மா இல்லீங்க. அதற்கு ஆகும் செலவு ஜஸ்ட் 17 லட்ச ருபாய் தான்.

இன்னொரு குழந்தையின் தந்தை கீழ்பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் தன் குழந்தையை சேர்பதற்காக அப்பள்ளிக்கு தன் சொந்த செலவில் கணிப்பொறி மையம் ஒன்றை கட்டி தருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது 'நன்கொடைகள்' தடை செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்களும் பள்ளிகளும் இவ்வாறு வேறு வகைகளில் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். டொனேஷன் என்பதற்கு பதிலாக இதை 'தெரிந்தே கொடுக்கும் நல் உதவிகள் என்றும் திரும்ப பெற்றுக்கொள்ளும் முதலீடு' எனவும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

சில பள்ளிகளில் அவ்வாறு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு வங்கி வட்டி போட்டுக் கொடுப்பதும் நடக்கிறதாம். பெற்றோர்களும் எப்படியோ பிள்ளைகளுக்கு சீட்டும் ஆச்சு. பணத்திற்கு வட்டிக்கு வட்டியும் ஆச்சு என சந்தோசப் பட்டுக் கொள்கிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் வட்டி இல்லா கடனாக பெற்றோர்களிடம் ஒரு லட்சம் முதல் பெற்றுக் கொண்டு அதை அவர்கள் பிள்ளைகள் பள்ளியை விட்டு செல்லும் போது திருப்பி கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு தருகிறார்களாம்.

ஒரு பள்ளியின் நிர்வாகி கூறும்போது, 'இப்போதெல்லாம் பெரிய மனிதர்களிடம் பெற்றோர்கள் போவது நன்கொடை இல்லாமல் சீட்டு வாங்க இல்லை. நாங்கள் அதிகமாக நன்கொடை கொடுக்கிறோம். அதனால் எங்களை சிபாரிசு செய்யுங்கள்' என்று கேட்பதற்கு தான் என்கிறார்.

சென்னையில் நல்ல பள்ளிகளில் நன்கொடைகள் அதிக பட்சமாக 4 லட்சம் வரை வாங்க படுகிறதாம். ஏன் மதுரை போன்ற பிற ஊர்களில் கூட 25,000 முதல் 75,000 வரை நன்கொடையின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறதாம். ஹ்ம்ம்...இருக்கிறவன் கொடுக்கிறான் என்கிறீர்களா? அது சரி.

நான் எவ்வளவு நன்கொடை கொடுத்தேன் தெரியுமா? ரூ. 750. இளநிலை பட்டப்படிப்புக்கு தனியார் கல்லூரி ஒன்றில் சேர. வருடம்....?

Thanks: TOI

share on:facebook

Sunday, November 25, 2012

IT - கனவாகி போகும் கேம்பஸ் வேலைகள்.


கல்லூரி இறுதி ஆண்டிலோ அல்லது அதற்கும் முதல் ஆண்டிலோ கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நன்கு படிக்கும் மாணவர்கள் பெரிய பெரிய IT கம்பெனிகளில் வேலைக்கு சேர, படிப்பை முடிக்கும் முன்பே வேலைக்கான ஆர்டர் வாங்கி விடுவர். அதும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் ஆபர் கொடுக்கும் போது எது அதிக சம்பளம் கொடுகிறது எது மிக நல்ல கம்பெனி என்றெல்லாம் பார்த்து அவற்றில் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்புறம் மீதம் உள்ள செமஸ்டர்களை பெயில் ஆகாமல் நல்ல மார்க்குடன் தேர்வாகி விட்டால் வேலைக்கு சேர்ந்த முதல் மாதமே ATM நிறைய சம்பளம். இப்படி தான் IT கனவுகள் இது நாள் வரை இருந்து வந்தன.
  
அதற்க்கெல்லாம் சமீப காலமாக பல வகைகளில் ஆப்புகள் விழ தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் பலருக்கு இன்னமும் வேலைக்கு வர சொல்லி பல பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு போகவில்லை அதற்க்கு பதிலாக சற்று பொறுத்திருங்கள். அடுத்த மூன்று மாதத்தில் சேரலாம் அடுத்த ஆறு மாதம் கழித்து சேரலாம் என்று ஓலை மட்டும் சென்று கொண்டிருகிறது. இதற்க்கு காரணம் எதிர் பார்த்த அளவு IT வேலைகள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கிடைக்காததுதான்.

சரி அதற்க்கு அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் என்றால்? பாவம் அவர்கள் இல்லை. வேலை உறுதி என்று இத்தனை நாட்கள் காத்திருந்து அதை நம்பி மேற்படிப்புக்கு கூட முயற்சிக்காமல், வேறு கம்பெனிகளில் வந்த ஆபரையும் வேண்டாம் என கூறிய மாணவர்கள் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களை இன்னும் நன்றாக பட்டை தீட்டிக் கொள்ளலாம் என்று கூறுபவர்கள் உண்டு. ஆனால், நினைத்து பாருங்கள். படிப்பை முடிக்கும் முன்பே வேலை உறுதி என்ற நிலையிலிருந்து இன்று வேலை திரும்பவும் கிடைக்குமா கிடைக்காதா என விரக்தியோடு வீட்டில் உட்காருவது எவ்வளவு கஷ்டம்.

இது சமீபத்தில் வந்த செய்தி. ஒரு பிரபல IT கம்பெனி இந்த ஆண்டு கேம்பஸ் செலெக்ஷன் ஆனவர்களுக்கு வேலையில் சேரும் முன் மீண்டும் ஒரு திறனாய்வு தேர்வு வைத்ததாகவும் அதில் கலந்து கொண்ட 3000 பேரில் ஆயிரத்து சொச்சம் பேர் மட்டுமே பாசானதகவும், இத்தேர்வில் பாசானவர்கள் மட்டுமே வேலையில்  சேர முடியும் என்று கூறி இருக்கிறது. ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியூயில் தேர்வானவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வு வைப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. அதுவும் எந்த வித பயிற்சியும் அளிக்காமல்.

அது மட்டும் இல்லை. தேர்வுக்கான வினாக்களும் சற்று கஷ்டமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தேர்வில் பெயிலானோர்கள் மறு தேர்வு எழுதி பாசாகும் வரை வேலையில் சேர முடியாது என்றும் மறு தேர்வு எப்போது என தற்போது சொல்ல முடியாது என்றும் கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்கள். இந்த கம்பெனி வேலையை நம்பி மற்ற கம்பெனி ஆபர்களை வேண்டாம் என்று சொன்னவர்கள் நிலைமை தான் இன்னும் பாவம்.   

கஷ்டப்பட்டு படித்து பல மாணவர்களுக்கு மத்தியில் கேம்பஸ்யில் தேர்வாகி பின் மாதக்கணக்கில் காத்திருக்கும் மாணவர்களின் மனநிலையை சற்று இந்த கம்பெனிகள் யோசித்து பார்க்கவேண்டும். அட முழு சம்பளம் இல்லை என்றாலும் கூட ஸ்டைபண்ட் போல் எதாவது கொடுத்து உடனே வேலை கொடுக்கலாம். அதே போல் வேலைக்கு தேர்வாகிய பின் மீண்டும் ஒரு தேர்வு வைத்து தான் எடுப்போம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதை எல்லாம் IT கம்பெனிகள் நினைத்து பார்த்து ஒரு நல்ல முடிவை எடுத்தால் ஆயிரகணக்கான மாணவர்கள் வாழ்த்துவார்கள்.     


share on:facebook

Tuesday, November 20, 2012

கசாப் தூக்கிலிடப்பட்டார்


இன்று காலை 7.30 மணியளவில் புனே சிறையில் மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிட பட்டார்.

share on:facebook

இந்த பதிவு(ம்) பிரச்சினை ஆகுமோ?

//'Which is the largest democracy in the world' ?

அவளே பதிலையும் சத்தம் போட்டு படித்தாள்.

India.//

வடிவேலு ஒரு படத்தில், ஒரே நாளில் கோடீஸ்வரனாவது எப்படி' என எல்லோரிடமும் நூறு ருபாய் வாங்கிக்கொண்டு கடைசியாக ஒரு ஐடியா தந்து எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்வார்.




அது போல இது நம்ம ஐடியா. அதுக்காக அடிக்கிறதா இருந்தாலும் அடிச்சுடுங்க. ஆனா, பதிவ 'லைக்' பண்ணி கமென்ட் மட்டும் போட்டுடாதீங்க. அப்புறம் அது உங்களுக்கு பிரச்சனையானால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. ஆமா சொல்லிப் புட்டேன்.

நீங்கள் கைதாகாமல் தப்பிக்க வேண்டுமானால், இப்படி தான் உங்கள் பதிவு இனி இருக்க வேண்டும். 

எல்லோரும் வாழ்க. அரசு வாழ்க, அரசியல் வாதிகள் வாழ்க. நாடு வாழ்க. பதிவுலகம் வாழ்க. பதிவர்கள் வாழ்க. கடைசியாக போலீஸ் வாழ்க.

இப்படி ஒரு பதிவு போட்டால் நீங்கள் கைதாக வாய்ப்பே இல்லை. எப்புடீ...?

இன்று காலை என் மகள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தது ஏதோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

'Which is the largest democracy in the world' ?

அவளே பதிலையும் சத்தம் போட்டு படித்தாள்.

India.

மீண்டும் சொல்லுகிறேன். இந்த பதிவை யாரும் லைக் பண்ணி கமெண்ட் போட்டு அது உங்களுக்கு பிரச்சனையானால் அதற்க்கு நான் பொறுப்பு இல்லை. ஆமா சொல்லிப் புட்டேன்.

share on:facebook

Wednesday, November 7, 2012

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் புதிய 'சானிடரி' நாப்கின் - பாமர தமிழனின் கண்டுபிடிப்பு.

Amazing...



share on:facebook

Wednesday, October 31, 2012

நீலம் புயல் எதிரொலி. பிரபல IT கம்பெனியின் ஒரு பகுதி சரிந்ததா?


இன்று மாலை மூன்று மணிக்கெல்லாம் 'நீலம்' காரணமாக பெரும்பாலான IT கம்பெனிகள் முன்னரே மூடி விட்டார்கள். எங்கள் கம்பெனி பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது தான் அந்த காட்சியை கவனித்தேன்.

சென்னை சிறுசேரியில் உள்ள மிக பெரிய IT கம்பெனி அது. 'Elevation' என்று சொல்வார்களே. அதற்காக இக்கம்பெனியின் மேல் பறவை பறப்பது போல் இருபுறம் ரெக்கைகள் விரிந்திருப்பது போலும் மிக பெரிய இரும்பு குழாய்கள் மூலம் வடிவமைத்து இருப்பார்கள்.

நான் எதார்த்தமாக எங்கள் பஸ்ஸில் இருந்து பார்த்தபோது தான் அதை கவனித்தேன். பக்கவாட்டில் உள்ள இந்த புறா ரெக்கை போன்ற அமைப்பு கொண்ட இரும்பு குழாய்கள் அப்படியே சரித்து போய் கிடந்தன. இவை நிச்சயம் அக்கம்பெனியில் உள்ளவர்கள் கவனித்து இருப்பார்கள். ஆனால், அதை வெளி காட்டவில்லை என நினைக்கிறன். பெயர் கெட்டுவிடுமோ என்ற எண்ணமாக இருக்கலாம். ஏன் என்றால் அந்த IT கம்பெனியும் மிக பிரபலமானது. அக்கட்டிடத்தை கட்டியதும் ஒரு பிரபல நிறுவனம் தான்.

இதுவே கட்டிடத்தின் மேல் பிராமாண்டமாக இருக்கும் மிக பெரிய குழாய் அமைப்புகளுக்கு இந்த புயலில் ஏதும் ஆகி இருந்தால். நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. இம்மாதிரி கட்டிடங்கள் கட்டும் போது, அதுவும் ஒரு காலத்தில் வயல் வெளிகளாக இருந்த நிரப்பரப்பில், இம்மாதிரி மிக பெரிய கட்டிடங்கள் கட்டும் போது 'நீலம்' போன்ற புயல் மழையை  தாக்கு பிடிக்க முடியும் அளவுக்கு ஆராய்ந்து கட்டுவது நலம்.  

எப்படியாவது அவ்வாறு இரும்பு குழாய்கள் சரிந்து இருந்ததை புகைபடம் எடுத்து விடலாம் என நினைத்தேன். முடியவில்லை. அதற்குள் எங்கள் பஸ் நகர்ந்து விட்டது. என்னடா கம்பெனி பேர் சொல்லாமல் ரொம்ப பம்முறானு பாக்குறீங்களா? ரெண்டு விஷயம். நானும் ஒரு IT கம்பெனியில் வேலை பார்கிறேன். ஆதாலால், முழுதும் தெரியாமல் இன்னொரு கம்பெனியை பற்றி சொல்லக் கூடாது. இரண்டாவது இந்த ட்விட்டர்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமைகள். எதை எழுதினால் என்ன கேஸ் போடுவார்கள் என்றே தெரியவில்லை. ஏன் நமக்கு ஊர் பொல்லாப்பு?  

அப்பா...கரண்ட் வந்ததும் ஒரு பதிவை போட்ட திருப்தி.

படம்: எங்கள் கம்பெனியின் வாசலில் உள்ள மரங்கள் தலை விரித்து ஆடியபோது க்ளிக்கியது.

share on:facebook

Thursday, October 25, 2012

ஊரெங்கும் வெள்ளக்காடு. 'அம்மா'வுக்காக கொட்டும் மழையில் புதிய சாலைகள்.

உலகத்திலேயே நம் தமிழக அரசியல் தலைவர்கள் தனி ரகம். அது அம்மாவாக இருந்தாலும் சரி ஐயாவாக இருந்தாலும் சரி.

சில காலம் நான் வட மாநிலங்களில் இருந்திருக்கிறேன். நம்ம ஊர் லெட்டர் பேட் கட்சியின் ஆடம்பரம் கூட பெரிய கட்சிகளின் கூட்டங்கள், அவற்றில் கலந்து கொள்ள வரும் தலைவர்களின் வரவேற்புகளில் இருக்காது. ஆனா நம்ம ஊர் அரசியல் வாதிகள் இருக்கிறார்களே?

கடந்த ஒரு வாரமாக சென்னையின் பெரும் பகுதி இடங்கள் நீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ரோடு எங்கே என்று தெரியாத அளவிற்கு தண்ணீர் முழங்கால் முட்டும் தேங்கி கிடக்கிறது. பல IT கம்பெனிகள் அமைந்துள்ள OMR ரோடும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இத்தனைக்கும், இதற்க்கு எக்ஸ்பிரஸ் வே என்று பெயர். துரைப்பாக்கத்தில் ஆரம்பித்து சோளிங்க நல்லூர் வரை இரு புறமும், தண்ணீர் குளம் போல் தேங்கி (இன்று வரை) நிற்கிறது.

இதனால், பேருந்துகள் முதல், ஆட்டோ, பைக்குகள் வரை எல்லோரும் ஸ்லோ ரேசில் போவது போல் நகர்வதே தெரியாத அளவிற்கு அவ்வளவு மெதுவாக ஊர்ந்து கொண்டு போய் வருகிறன. அதே போல் வேளச்சேரி செல்லும் அனைத்து இணைப்பு சாலைகளும். நத்தை வேகத்தில் தினமும் பயணம். இவை எல்லாம் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாதா என்ன?

இதை எல்லாம் விட்டு விட்டு, 'கிடக்கறது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணையில வை' என்று பெருங்களத்தூர் - கேளம்பாக்கம் இணைப்பு சாலையை இந்த கொட்டும் மழையில் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று நான் வேறு சொல்ல வேண்டுமா? அங்கு புதிதாக அமைய உள்ள காவலர் குடியிருப்புக்கான  அடிக்கல் நாட்டு விழாவிற்கு அம்மா அவ்வழியே வருவதால்.

அது மட்டுமா? ஐம்பது அடிக்கொரு வரவேற்ப்பு பேனர், நூறு அடிக்கு ஒரு போலிஸ் என ஏரியாவே திருவிழா களையில். அவ்வழியே ரெகுலராக போய் வருபவர்களுக்கு தெரியும். ஒரு முறையாவது நீங்கள் மூக்கை பொத்திக்கொள்ளாமல் அந்த இணைப்பு சாலையை கடக்க முடியாது. ஆடு மாடு என எந்த மிருகம் இறந்து போனாலும் அங்கு தான் வந்து போட்டு விட்டு போய் விடுவார்கள். இன்று அந்த நாற்றம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

இதே போல் யாராவது ஒரு புண்ணியவான் வேளச்சேரி சாலையிலும், OMR சாலையிலும் ஏதாவது ஒரு திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா என்று ஏற்பாடு செய்யுங்கப்பா. அங்குள்ள மக்கள் எல்லாம் உங்களை வாழ்த்துவார்கள்.

இப்படிக்கு,

தினம் தினம், தேங்கி கிடக்கும் மழை தண்ணீரால் வண்டி ஓட்ட முடியாமல் தவிக்கும் அப்பாவி குடிமகன்.   

share on:facebook

Wednesday, October 24, 2012

நண்பேண்டா - இனிப்பும் உழைப்பும். தஞ்சையின் பிரபல தொழில் அதிபர்.


 உலகில் மற்ற அனைத்து உறவுகளும் ஏதோ ஒரு காரணத்தால் நம்மால் மட்டுமே முடிவு செய்யப் படுவதில்லை. அன்னை, தந்தை, அக்காள், அண்ணன் ஏன் மனைவி கூட நம்மால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை தவிர.

அதிலும் பள்ளி கல்லூரி கால நண்பர்கள். அவர்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. வேலையில் சேர்ந்த பிறகு ஏற்படும் நட்புகள் வேறு. அவர்களிடம் எல்லாவற்றையும் நாம் பகிர்ந்து கொள்ள முடியாது. ஸ்டேடஸ், ஈகோ, கவுரவம் என பல காரணங்கள் அதற்குள் வரும். ஆனால், பால்ய நண்பர்கள் அப்படி இல்லை. அவன் சாப்பாட்டை நாம் சாப்பிட்டு, காசில்லாத போது சிறிதும் யோசிக்காமல் மாம்ஸ், ஒரு அஞ்சு ரூபா இருந்தா கொடேன் என்று கேட்டு விடுவோம்.

அப்படி ஒரு பால்ய நண்பரை கடந்த மாதம் சந்திக்க நேர்ந்தது. ஒரே ஊர் என்றாலும் எப்பவாவது இந்தியா வந்து கொண்டிருந்த போது அவ(ரை)னை சந்திக்கும் வாய்ப்பு பெரும்பாலும் கிடைத்ததில்லை. அதற்க்கு கரணம் அவர் தற்போது ஒரு மிக பெரிய தொழில் அதிபர். சென்ற முறை தஞ்சை சென்றிருந்த போது அவரின் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எதிரே நண்பர் வந்தார். பார்த்தவுடன் சிறிது மலைத்து நின்று விட்டு, பிறகு சுதாரித்து என்னை அடையாளம் கண்டு கொண்ட பின், அவரின் முகத்தில் சந்தோசத்தை பார்க்க வேண்டுமே. எனக்கும் தான்.

கைகளை இறுக பிடித்துக் கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கையிலேயே, அவரை சுற்றி ஓரிரு முக்கியஸ்தர்கள் எதற்கோ அவருக்காக கத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, சரிப்பா, நீ எப்ப ப்ரீயா இருப்பனு சொல்லு. நான் வந்து பார்கிறேன் என்றேன். நண்பர் அதை பற்றியெல்லாம் கவலை படாமல், தன்னுடன் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க தொடங்கிவிட்டார்.

இவன் என்னுடன் பள்ளியில் படித்தவன். என்னுடைய பெஸ்ட் பிரண்டு. ரொம்ப வருடங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கிறோம் என்று பழைய கதைகளை சிறிது நேரம் எல்லோருடனும் பகிர தொடங்கி விட்டார். பரிட்சையில் காப்பி அடித்தது முதல், கட் அடித்து விட்டு சினிமா போனது வரை.

நாங்கள் எல்லாம் அதை படித்து, இதை படித்து, எங்கெங்கோ சென்று ஒரு வருடத்தில் சம்பாதித்ததை, சம்பாதித்துக் கொண்டிருப்பதை, நண்பர் தன தொழில் மூலம் ஓரிரு மணி நேரத்தில் கல்லா கட்டிவிடுவார். அது மட்டுமில்லை. இன்று தஞ்சை நகரில், முக்கியமான ஒரு தொழில் அதிபர். பிராதான தொழிலான 'ஸ்வீட் ஸ்டால்' தவிர, பழமுதிர்சோலை, கல்யாண மண்டபம் என்று அவரின் தொழில் சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் காரணம், உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டும் தான். பள்ளி நாட்களிலேயே, பள்ளி விட்டு வீடு திரும்பினாலும், மீண்டும் பள்ளிக்கு வரும் முன்பும், ஸ்வீட் தயாரிப்பில் தானும் உட்கார்ந்து, அதன் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்ட நண்பர் இன்றும் அவ்வப்போது ஸ்வீட் போடும் போது தானும் தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்.

தீபாவளி  மற்ற பண்டிகைகளின் போது தஞ்சை ரயில்வே நிலையம் அருகே உள்ள நண்பரின் ஸ்வீட் ஸ்டால் வழியே செல்லும் பேருந்துகள் கூட சில சமயம் நிறுத்தப்பட்டு டிரைவர், கண்டக்டர், பிரயாணிகள் என அனைவரும் அவரின் கடையில் இனிப்புகளை வாங்கி செல்வர். இவை எல்லாவற்றுக்கும் காரணம், தரமான இனிப்பு, கார வகைகள் நியாயமான விலையில் கிடைப்பதே. உதாரணத்திற்கு, சென்னையில் உள்ள பிரபல இனிப்பு கடைகளின் விலைகளை ஒப்பிட்டால், இங்கு அதில் சரி பாதி தான் இருக்கும்.

பெரிய தொழில் அதிபர் மட்டுமன்றி நண்பர் பலருக்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் படிப்புக்கு மட்டுமன்றி பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். நண்பர்களை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வதில் யாருக்கு தான் பெருமை இல்லை. அந்த வகையில், தஞ்சை 'பாம்பே' ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் என் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை தான்.

தஞ்சை சென்றால், பாம்பே ஸ்வீட் ஸ்டாலில் இனிப்பு வகைகளை வாங்கி சுவைத்து பாருங்கள். அடுத்த முறை தஞ்சை சென்றால் மீண்டும் வாங்காமல் வர மாட்டீர்கள். பாம்பே ஸ்வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது, சந்திரகலா மற்றும் ட்ரை குலோப்ஜாமுன். குடிப்பதற்கு பாதாம் கீர்.




      

share on:facebook

Tuesday, October 16, 2012

இவர் எல்லாம் ஒரு பதிவரா?


ரொம்ப நாளா இவர் கிட்ட நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கனும்னு காத்துக்கிட்டு இருந்தேன். இப்போ 'பவர் ஸ்டார்' வேற கோர்ட்டு கேசுன்னு ஆள் சிக்க மாட்டேன்குறாரா. அதான் இவர் மாட்டிக்கிட்டார்.

ஆதி. ம: நீங்க பிரபல பதிவரா? பிரபலமாகிக் கொண்டிருக்கும் பதிவரா?

மொக்க பதிவர்: ரெண்டுமே இல்லீங்க. நான் ஒரு பதிவர். நாலு பேராவது என் பதிவுகளை படிகிறார்கள். அது மட்டும் நிச்சயம்.

ஆதி. ம: பதிவு எழுத ஆரம்பிச்சு எத்தன வருசமாச்சு? எத்தன பதிவுகள் இது வரைக்கும் எழுதி இருக்கீங்க?

மொ. ப: மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு. இது வரைக்கும் இருநூத்தி ஐம்பதுக்கும் மேல்.பதிவுகள் போட்டாச்சு.

ஆதி. ம: நீங்கள் எழுதியதில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?

மொ. ப: வாகன விபத்துக்கள் பற்றிய இந்த பதிவும், இதய நலன் பற்றிய இந்த பதிவும் எனக்கு மிகவும் பிடித்ததாகும். வாகன விபத்து பற்றிய பதிவு நான் பதிவெழுத வந்த காலத்தில் எழுதியது. இருந்தும் அதற்க்கு நல்ல வரவேற்பும் பாராட்டுதல்களும் கிடைத்தது எனக்கு நல்ல ஊக்கத்தை தந்தது.

அதே போல் இதய நலன் பற்றிய பதிவும் நானே ரசித்து ரசித்து படித்திருக்கிறேன். அது தவிர ஒரு பிரபல பதிவர் இப்பதிவை பற்றி வலைச்சரத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதி. ம: நீங்க ஹிட்டுக்காக பதிவு எழுதுறீங்களா? இல்ல உங்களுக்கு பிடிச்சத எழுதுறீங்களா?

மொ. ப: இரண்டுமே. எல்லா பதிவர்களுக்கும் உள்ள பிரச்சனைதான் எனக்கும். நல்ல பதிவை போட்டாலும் அதன் தலைப்பு வசீகரமாக இல்லாவிட்டால் சீந்துவாரில்லை(பிரபல பதிவர்களின் பதிவுகள் இதற்க்கு விதிவிலக்கு). அதனால் நல்லதையும் எனக்கு பிடித்ததையும் எழுதினாலும் தலைப்புக்காக நான் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியதாகிறது.

ஆதி. ம: அமா, நீங்க வேற யாருடைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் வழக்கமா போடறதில்லையாமே? நீங்க அப்படி என்ன பெரிய பதிவரா?

மொ. ப: அட, நீங்க வேறங்க. நான் எனக்கு வர பின்னூட்டத்திற்கே பதில் பின்னூட்டம் சில சமயங்களில் என்னால் போட முடிவதில்லை. இப்படி சொல்வதால் நீங்க தப்பா நினைக்க கூடாது. என்னுடைய அலுவல் பொறுப்பு, வீட்டு வேலைகள் காரணமாக எனக்கு பதிவுகள் எழுதவே நேரம் கிடைப்பதில்லை. காலை 9 முதல் மாலை 6.30 வரை அலுவலக பனியில் சில நேரம் எழுந்து போய் தண்ணீர் குடிக்க கூட முடிவதில்லை. இது தவிர போக்குவரத்தில் மட்டும் 4 மணி நேரம் போய் விடுகிறது. இதன் பின் வீட்டுக்கு வந்து குழந்தைகள், வீட்டு வேலைகள் என்று. அப்பப்பா...இப்ப சொல்லுங்க நான் ரொம்ப பிஸியா இல்லையானு... 

இருந்தும் என்னுடைய பதிவுகளை படித்து தொடர்ந்து பின்னோட்டம் இடும் பல பதிவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதி. ம: உங்களுடைய பதிவுகளில் அதிகம் அமெரிக்காவை பற்றி தான் இருப்பதாகவும், அதிலும் சில, இந்தியர்களையும், இந்தியாவையும் குறைத்து மதிப்பிடுவதாகும் ஒரு சிலர் கருதுகிறார்கள். இதை பற்றி உங்கள் விளக்கம் என்ன?

மொ. ப: உங்களுக்கு தெரிந்ததைதானே எழுத முடியும். நான் கடந்த 8-10 வருடங்களாக அயல் நாடுகளில் அதிகம் வசித்திருக்கிறேன் அங்கு நான் பார்த்த நல்ல விசயங்களை (பெரும்பாலும்) தான் எழுதி இருக்கிறேன். நல்லது எங்கே யார்கிட்டே இருந்தாலும் அதை பாராட்டுவதிலும் பின் பற்றுவதிலும் ஒன்னும் தப்பு இல்லையே? நம்ம கிட்ட தெரிந்தோ, தெரியாமலோ   ஒட்டிக்கொண்ட தவறான பழக்க வழக்கங்களை ஒத்துக் கொள்வதில் ஒன்று தவறில்லையே?

அதே போல் அமெரிக்காவை பற்றியும் IT ஐ பற்றியும் எழுதும் போது அதற்க்கு நல்ல வரவேற்ப்பு கிடைப்பதும், அமெரிக்கா பற்றி அதிகம் எழுதுவதற்கு காரணம். மற்ற படி, சினிமா தவிர நாட்டு நடப்பு, அரசியல் என்று எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன்.

ஆதி. ம: நீங்கள் எழுதிய ஒரு பதிவு தவறானது என்றோ அல்லது அதற்க்கு கண்டனங்கள் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

மொ. ப: அப்படி ஒன்றும் எனக்கு பெரிதாக ஏற்பட்டதில்லை. ஒரு முறை சரியாக 'ஹோம் வொர்க்' செய்யாமல் அமெரிக்க வீட்டுக் கடன் பற்றி ஒரு பதிவு போட்டு விட்டேன். சக பதிவர் ஆதாரங்களுடன் அதை தவறென்று சுட்டிக் காட்டிய பிறகு அதை உடனே நீக்கி விட்டேன். தமிழ் மேல் எனக்கு அதிகம் ஆர்வம் இருந்தாலும், தமிழில் அவ்வளவு சுத்தம் கிடையாது. சில நேரங்களில் அம்மாதிரி தவறுகளை சிலர் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அவ்வளவு தான்.

ஆதி. ம: இந்த தமிழ்மணம் ரேன்க், வோட்டு, நட்சத்திர பதிவர் இது பற்றியெல்லாம்...

மொ. ப: நீங்க வேறங்க. ரேசில் கலந்து கொள்பவர்களுக்கு தான் முதல், இரண்டாவது இடத்தை பற்றி எல்லாம் கவலை வேண்டும். நாமலாம் ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்குறவங்க. யார்ட்ட போய் என்ன கேள்வி கேக்குறீங்க. அப்புறம் இந்த தமிழ்மண வோட்டு. யாரும் எனக்கு வழக்கமா போடறதும் இல்ல. நானும் கேட்டுக்கிட்டது இல்ல. இது மூலமா வேணா அந்த கோரிக்கையை வைக்கிறேன். பதிவு நல்லா இருந்தா முடிஞ்சா வோட்டு போடுங்க.

ஆதி. ம: சாரி சார். நீங்களே 'ரொம்ப பிசியான' ஆளு. அதனால கடைசியா ஒரு கேள்வி. நீங்க ஏன் இன்னும் உங்க அடையாளத்தை (முகத்தை) காண்பிக்க மாட்டேன்குறீங்க?

மொ. ப: ஓபனா சொல்லப் போனால், வெட்கம் தான் சார். ஏதோ ஒரு காரணத்துக்காக முதலில் அடையாளத்தை காண்பிக்கவில்லை. அதன் பிறகு தற்போது அதே பழகி போனதால் புதுசா முகத்த காண்பிப்பதற்கு என்னவோ போல இருக்கு. இன்னும் சொல்லப்போனால் பத்திரிக்கைகளில் கூட ஒவ்வொரு கட்டுரையோ, செய்திகளோ வந்தால் அதை யார் எழுதினார் என்று போட்டோ போட்டா போடுகிறார்கள். நமக்கு தேவை விஷயம். அவ்வளவுதான் அப்படி எடுத்துக் கொளுங்களேன்.

ஆதி. ம: ரொம்ப நன்றி சார். கடைசியா பதிவுலகத்துக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?

மொ. ப: ஹி ஹி ஹி ...அந்த அளவுக்கு நான் இன்னும் வளரலீங்க. அதே நேரத்தில் இந்த மூன்று வருடங்களாக என் பதிவுகளை எப்போதும், அவ்வப்போதும், எப்பவோ ஒரு முறையும் படிக்கும், படித்து வரும் பதிவர்களுக்கும் வசககர்களுக்கும் ஒரே வேண்டுகோள்.

ஆதிமனிதனை பற்றி தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் மிகவும் வரவேற்கிறேன். நிச்சயம் அது எனக்கு ஒரு ஊக்கத்தையும் குறைகள் இருந்தால் திருத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

இப்படிக்கு, இதுவரை ஆதிமனிதனின் மனசாட்சியா பேசிக் கொண்டிருந்த மொக்க பதிவர். நன்றி நன்றி நன்றி....


share on:facebook

Wednesday, October 10, 2012

தீபாவளிக்கு ரயில், பஸ்ஸில் டிக்கெட் கிடைக்கவில்லையா? இதோ இருக்கு மாற்று வழி.

வருடத்திற்கு இரண்டு தீபாவளி வந்தால் முதலில் சந்தோசப் படுபவர்கள் ஆம்னி பஸ் காரர்களாகத்தான் இருப்பார்கள். பின்ன என்னங்க? சென்னை டூ தஞ்சாவூர் ஒரு டிக்கெட் இன்றைய நிலவரப்படி ரூபாய் 1100  ஐ தாண்டிவிட்டது (பொதுவாக 350-400 ருபாய் தான் இருக்கும்).

ரெயில் கதை நமக்கு தெரிந்ததுதான். மூன்று மாதங்களுக்கு முன்பே விண்டோ ஓபன் ஆன பத்து பதினைந்து நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் தீர்ந்து போய் விட்டன. அதே நிலைமை தான் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும். பல்வேறு காரணங்களால் இந்த இரண்டையும் கோட்டை விட்டு விட்டு தற்போது எப்படி தீபாவளிக்கு போவதென்று தலையை முட்டிக் கொண்டபோது தான் நமக்கு பொறி தட்டியது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் சென்னையிலிருந்து கிளம்பி நம்ம ஊருக்கு டிக்கெட் போடாமல் பக்கத்தில் உள்ள சின்ன சின்ன ஊர்கள் ஒவ்வொன்றாக தேடி பார்த்தேன். அதிலும் சிறிது ஏமாற்றம் தான். அதையும் விடுத்து அதிக போக்குவரத்து அல்லாத நடுத்தர ஊர்களை ஒவ்வொன்றாக போட்டு பார்த்ததில். அய்யா, சென்னை டூ அரியலூர் வரை டிக்கெட் கிடைத்தது. அதுவும் கூட முன் பக்க இருக்கைகள் கிடைத்தன.

அரியலூரிலிருந்து தஞ்சை சுமார் நாற்பது கிலோ மீட்டர்கள்தான். அடுத்த லோக்கல் பஸ் பிடித்தால் ஒரு மணி நேரத்தில் ஊர் போய் விடலாம். நால்வருக்கும் சேர்த்து எண்ணூறு ரூபாய்தான் டிக்கெட் செலவு ஆனது. செமி டீலக்ஸ் பஸ். எப்படியாக இருந்தாலும் ஆம்னி பஸ் நிலைமையும்  அன்று அப்படிதான் இருக்கும். கண்ட கண்ட பஸ்களை கொண்டு வந்து ட்ரிப் அடிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் ஊர் போகும் வரை எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றிக் கொ(ல்)ள்வார்கள். அதற்க்கு இது எவ்வளவோ தேவலை.

என்ன மக்களே. உங்களுக்கும் டிக்கெட் பிரச்னை இருந்தால் இது மாதிரி முயற்சித்து பாருங்களேன். All the best.

share on:facebook

Tuesday, October 9, 2012

பொரித்தால் புழு கூட முறுகலாதான் இருக்கும் - KFC சிக்கன் பீஸில் புழுக்கள்


பதிவின் தலைப்பையும் மேலே உள்ள படத்தில் உள்ள வாசகத்தையும் ஒரு முறை திரும்பி படித்து பாருங்கள்! இது வரை நான் தேர்ந்தெடுத்த எந்த ஒரு படத்துக்கும், பதிவுக்கும் இப்படி ஒரு  அர்த்தம் கிடைத்ததில்லை.

KFC எனப்படும் மேற்கெத்திய உணவகத்தின் திருவனந்தபுரத்து கிளையில் நேற்று பரிமாறப்பட்ட சிக்கன் பீச்களில் இருந்து புழுக்கள் வெளிவந்ததாக செய்தி வெளி வந்தது சற்று என்ன மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது.

முதலில் ஒன்றை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இங்கு செயல்படும் KFC, McDonald's, Pizza hut, போன்ற எல்லா உணவகங்களும் நம்மூர் லோக்கல் மக்கள் வைத்து நடத்துவது தான். அங்கு போய் சாப்பிடுவதினாலோ, அம்மாதிரி ஜன்க் புட் எனப்படும் உடலுக்கு கெடுதலான உணவை அடிக்கடி குடும்பத்தோடோ, குழந்தைகளுடனோ போய் சாப்பிடுவதால் நாம் ஒன்றும் அமெரிக்கர், ஐரோப்பியர்கள் ஆகி விட முடியாது.

நிச்சயம் ஓரிரு முறை பல்வேறு உணவு வகைகளை ருசித்து பார்க்க வேண்டும் என்ற அளவில் இந்த உணவு வகைகளை உண்ணலாம். அதை விடுத்து, வறட்டு கவுரவுத்துக்காகவும், பெருமைக்காகவும் சாப்பிட்டால்  இம்மாதிரி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

நம்ம ஊரு நாட்டுக்கோழி குழம்பு, அதுவும் வீட்டில் பெண்கள் மிளகாய், மல்லி என்று கைப்பட அரைத்து வைத்த குழம்பு என்றால் அதற்க்கு இந்த KFC சிக்கன் கிட்ட வர முடியுமா? மேலை நாட்டினரே இப்போதெல்லாம் இயற்கை உணவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். சமீபத்திய ஆய்வின் படி இயற்கை உணவை பெரும்பாலும் விநியோகிக்கும் 'சப் வே' தான் மிக சிறந்த உணவகமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மிக மோசமான உணவகங்களாக McDonald போன்றவைகள் இடம் பெற்றிருந்தன.

வெளி நாடுகளில் இம்மாதிரி உணவுகளை ஜன்க் புட் என்று தான் கூறுவார்கள். அங்கு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அவசரத்திற்காகவோ, குறைந்த விலையில் உணவை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, இல்லை குழந்தைகள் அவர்களுக்கு பொம்மைகள் கிடைக்கும் என்பதற்காகவோ வற்புறுத்தி கூட்டிக் கொண்டு போனால் தான் உண்டு. எந்த ஒரு பார்ட்டிக்கும் அங்கு McDonald 's கூட்டிக் கொண்டு போக மாட்டார்கள்.

ஆனால் நம் மக்கள் தான் அதை ஒரு 'ஸ்டேடஸ் சிம்பலாக' இங்கு எடுத்துக் கொள்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு மூன்று முறை எங்கள் பிராஜக்ட் டீமில் KFC யில் ஆர்டர் செய்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த செய்தி தெரிந்தால் அடுத்த முறை ஆர்டர் செய்வார்களா என தெரியவில்லை. அதில் 'டீசண்டாக' சாப்பிட வேண்டும் என்று சிக்கன் பீஸ்களை பிய்த்து கூட சாப்பிடாமல், வாயிலிருந்து எடுக்காமல் அப்படியே கடித்து மென்று சாப்பிட்டால் அப்புறம் எப்படி உள்ளே புழுக்கள் இருப்பது தெரியும்?

இது எங்கோ நடந்த ஒரு சம்பவமாக நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் இதே போல் ஒரு சம்பவம் ஓரிரு மாதத்திற்கு முன் இதே கேரளாவில் நடந்து ஒரு பொறியாளர் 'புட் பாய்சனால்' இறந்தே விட்டார். அது மட்டுமன்றி இங்கு தயாரிக்கப் படும் பெரும்பாலான உணவு வகைகள் 'ப்ரோசன்' செய்யப்பட்டு பாதுகாக்கப் படுபவை. நம்மூரில் நிலவும் கரண்ட் கட்டில் இவர்கள் ஜெனரேட்டர்கள் வைத்து பிரீசரை ஆனில் வைத்திருப்பார்களா என தெரியவில்லை.

சமீபத்தில் பீசா ஹட் அருகே காத்திருந்த போது ஒரு முதிய தம்பதியினர் பீசா ஹட்டில் சாப்பிட உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் வெகு நேரம் காத்திருந்து திரும்பி சென்றதை பார்த்து சற்று ஆச்சர்யமாக தான் இருந்தது. ஹ்ம்ம் எல்லோருக்கும் மெல்லிய வெளிச்சத்தில் ஆயிரம் ருபாய் கொடுத்து இரண்டு மூன்று சிக்கன் பீஸ்கள் சாப்பிட ஆசை வந்து விட்டது.

என்னைப் பொறுத்தவரை நான்வெஜ் என்றால் வீட்டில் சமைக்கப் பட்டதற்கு ஈடு இணை ஏதுமில்லை. குறிப்பாக நாள் பட்டு போன இறைச்சியாக இருக்குமோ? நேற்றைய குழம்பாக இருக்குமோ என அஞ்ச தேவையில்லை.

லேட்டஸ்ட் அப்டேட்: முதல் கட்ட விசாரணையில், ஸ்டாக் செய்யப்பட்டிருந்த கோழி இறைச்சிகள் ஐந்து மாதத்திற்கும் மேற்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகப் படுகிறார்கள். அதே நேரத்தில் 270 டிகிரி வெப்பத்தில் இறைச்சிகளை நாங்கள் வேக வைக்கும் போது புழுக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்று KFC ஐ சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  


share on:facebook

Monday, October 8, 2012

IT நிறுவனங்களும் பெண்களின் ஆடை குறைப்பும்


எனக்கு தெரிந்து ஆண்களின் கால்கள் கவர்ச்சி பகுதி இல்லை. ஆனால், இந்த IT நிறுவனங்கள் எங்கிருந்து தான் கண்டு பிடித்தார்களோ? யார் சொல்லிக் கொடுத்தார்களோ? ஆண்கள் இப்படி உடை அணிய வேண்டும். அது வெளியே தெரிய கூடாது. இது வெளியே தெரியகூடாது என ஆண் ஊழியர்களை மட்டும் காய்த்து விடுகிறார்கள்.

பின்ன என்னங்க? திங்கள் முதல் வெள்ளி வரை பார்மல்ஸ் இல்லை பிசினஸ் காஷுவல்ஸ் என்று கழுத்து முதல் கால்வரை மூடிக் கொண்டு அது பத்தாதுன்னு கழுத்து மேல் பட்டன் வரை போட்டிருக்க வேண்டுமாம். அடிக்கும் நூறு டிகிரி வெயிலில் தினமும் ஷூ வேறு போட்டுக் கொள்ள வேண்டும். இது எல்லாம் ஆண் ஊழியர்களுக்கு மட்டும் தான். பெண் ஊழியர்களுக்கு?

அவர்கள் சேலையில் ஆரம்பித்து வெஸ்டர்ன் பார்மல்ஸ் வரை அவர்கள் விருப்பப் பட்டதை அணிந்து கொள்ளலாம். ஷூ போட வேண்டிய கட்டாயம் இல்லை. கை வைத்த சட்டை அணிய வேண்டிய ரூல்ஸ் இல்லை. வார நாட்களில் ஜீன்சை தவிர எது வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம்.

அட இதுவாவது பரவாயில்லீங்க. வெள்ளிக்கிழமை அன்று காஷூவல்ஸ் என்று தான் பேர். அது பெண்களுக்கு மட்டும் தான். ஆண்கள் 'டீ' ஷர்ட் போடலாம். ஆனால் அது காலர் வைத்ததாக இருக்க வேண்டும். அப்படியே காலர் வைத்த 'டீ' ஷர்ட் போட்டாலும், அதில் எந்த வித வாசகமோ, படங்களோ இருக்க கூடாது. அதிலும் குறிப்பாக மற்ற கம்பெனிகளின் லோகோ இருக்கவே கூடாது.

ஆனால், பெண்கள் மட்டும் ஸ்லீவ்லெஸ் பனியன்கள் அணிந்து வரலாம். டிசைன் போட்ட பனியன்கள் அணிந்து வரலாம். முக்கியமாக காலில் செருப்பு போட்டுக் கொண்டு வரலாம். தெரியாம தான் கேக்குறேன். பெண்கள் ஸ்லீவ்லெஸ் போட்டால் அது கவர்ச்சி இல்லை. ஆண்கள் காலர் இல்லாத 'டீ' ஷர்ட் போட்டால் அது மட்டும் கவர்ச்சியா? செருப்பு அணிந்து வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்படி என்ன வித்தியாசத்தை கண்டு பிடித்தார்களோ? செருப்பு அணிந்து வருவது பார்மல்ஸ் இல்லை என்றால் பெண்கள் மட்டும் எப்படி செருப்பு அணிந்து வரலாம்?

இது மட்டுமா? ஷிப்டில் வேலை பார்த்தால், வேலை முடிந்து வீட்டிற்கு 'கேப்' இல் போகும் போது பெண்களாக இருந்தால் அவர்கள் வீட்டு வாசற்படியில் இறக்கி விட வேண்டும். இது நிச்சயம் செய்ய வேண்டியது தான். ஆனால் அதே நேரத்தில் அதுவே ஆண்களாக இருந்தால் தெரு முக்கு தான். அது நடு சாமமாக இருந்தாலும் 'கேப்' டிரைவர், சார் ஜென்ட்ஸ் எல்லாம் தெரு முனையில் இறக்கி விட்டால் போதும்னு அட்மின்ல சொல்லிட்டாங்க அப்படின்பார். ஏன் தெரு நாய்கள் ஆண்களை கடிக்காதா? இல்லை தெருவோர பள்ளங்கள் பெண்கள் விழுவதற்கு மட்டும் தானா?

நான் என்னா சொல்றேன். பெண்களுக்கு என்று நிச்சயம் சில சலுகைகள் வேண்டியது தான். ஆனால், இந்த மாதிரி உடை விசயத்திலும், பாதுகாப்பு விசயத்திலும், நாங்கள் பெண்களுக்கு சலுகைகள் வேண்டாம்னு சொல்லலை. எங்களுக்கும் அத தாங்கனுதான் சொல்றோம்.

ஹ்ம்ம்...இதெல்லாம் கேக்கறத்துக்கு யாருமே இல்லையா? அது யாருப்பா அது? போடா போடா புண்ணாக்கு பாட்ட இப்ப போடுறது?

IT - Is it only for women?
  

share on:facebook

Sunday, October 7, 2012

ஆதலினால் 'ஊழல்' செய்வீர்


கடந்த இரு மாதங்களில் சென்னை டு தஞ்சாவூர் பேக் டு சென்னை என காரில் இரண்டு முறைக்கு மேல் செல்ப் டிரைவிங் செய்தேன். இந்தியாவின் பொருளாதார நிலையில் இந்த ஹை வே சாலைகள் நமக்கெல்லாம் ஒரு வரபிரசாதம் என்றே கூறலாம்.

ஆனால், ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு டோல் என்று ஏறக்குறைய முன்னூறு ருபாய் டோல் கட்டணமாக நம்மிடம் தீட்டி விடுகிறார்கள். அது தான் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. மற்றபடி சாலையின் ஊடே குறுக்கிடும் ஒவ்வொரு ஊரையும் கடக்க மேம்பாலங்கள், ஊருக்குள் செல்ல தனியே 'சர்வீஸ்' ரோடுகள் என்று மேலை நாட்டு சாலைகளை நினைவூட்டும் வகையில் மிகவும் அருமையாக சாலைகளை வடிவமைத்துள்ளார்கள்.

அதே நேரத்தில் சாலை குறியீடுகள் ஒரு சில இடங்களில் மிகவும் குழப்புவதாக உள்ளது. ஓரளவு அந்த சாலையில் போய் வந்தவர்களால் மட்டுமே சரியாக குறியீடுகளை புரிந்து கொள்ள முடியும். இதை அவசியம் நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும். எங்கோ சென்று பிரியும் சாலைக்கு வெகு தொலைவில் குறியீடுகளும், அதே போல் சாலை பிரியும் இடத்தின் வெகு அருகில் குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

'லேன்' டிசிபிளின் பயன்கள் பற்றி எத்தனை ஓட்டுனர்களுக்கு தெரியும் என தெரியவில்லை. வெறுமனே 'Follow Lane Disipline' என ஆங்காங்கு போர்டுகள் வைப்பதினால் ஒன்றும் பயன் இல்லை. அவ்வப்போது நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அதன் பயன்களை விளக்க வேண்டும். ஆனால், தற்போது பெரும்பாலான இடங்களில் இருவழி சாலைகளும் ஒரு வழியில் இரு லேன்களுக்கு மேல் இருப்பதால் வாகன ஓட்டிகளே தெரிந்தோ தெரியாமலோ 'லேன்' டிசிப்ளினை பின் பற்றுகிறார்கள்.

லேன் டிசிப்ளினை பின் பற்றினால் நிச்சயம் விபத்துகள் குறையும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் எல்லோரும் சென்று கொண்டிருக்கும் போது எதிரே போகும் வண்டிகளை தாண்டிச்செல்லும் போது மிகவும் உதவும். ஆமா? லேன் டிசிப்ளின் அப்படின்னா என்னான்னு கேக்குறவங்களுக்கு, அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லைங்க. சாலையில் மூன்று லேன்கள் இருந்தால் லேனுக்குள்ளே வண்டி ஓட்ட பலகனும்க. இரண்டு லேன்களை பிரிக்கும் கோட்டின் நடுவே வண்டி ஓட்டக்கூடாது. அதே போல் கன ரக வாகனங்கள் இடது ஓரமாகவும் சிறிய, வேகமாக செல்லும் வாகனங்கள் வலது ஓரமாகவும் செல்ல வேண்டும். ஊருக்குள் செல்லும் முன்பே இடது ஓரத்திற்கு வந்து விட வேண்டும். கடைசி நேரத்தில் லேன் மாறுவது ஆபத்தில் முடியும்.   

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் சாலை வசதிகளில் முன்னோக்கி இருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம். ஹை வேக்கள் மட்டுமின்றி சென்னைக்குள்ளும் பறக்கும் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், தடுக்கி விழுந்தால் பாலங்கள் என கட்டுமானத்தில் நாம் நிச்சயம் முன்னேறி இருக்கிறோம். ஒரு காலத்தில் மும்பை போன்ற மாநகரங்களை பார்த்து மலைத்து போய் இருக்கிறேன். பெரிய பெரிய பாலங்கள், நிறைய ஹை வேக்கள் என்று. தற்போது மற்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சென்னை, தமிழகத்தையும் அப்படி தான் பார்ப்பார்கள் (இன்னமும் குண்டும் குழியுமான சாலைகளில் போய் வந்து கொண்டிருக்கும் பலர் உறுமுவது கேட்கிறது. ஏதோ பொதுவாக சொல்றேங்க..)

நெடுஞ்சாலைகளில் இன்னமும் ஒரு பெரிய குறை உண்டென்றால் அது 'ரெஸ்ட் ஏரியா' மற்றும் உணவகங்கள் தான். சென்னை தாண்டியவுடன் ஆங்காங்கே ஒரு சில ரெஸ்ட் ஏரியாக்கள் கண்ணில் பட்டது. ஆனால் அவைகளை சாலையிலிருந்து பார்க்கும் போதே அங்கு சுத்தமோ, பாதுகாப்போ இருப்பது போல் தெரியவில்லை. அதே போல் ஊருக்குள் சென்றால் தான் நல்ல உணவகங்கள் கிடைக்கின்றன. மற்றவை எல்லாமே அவ்வளவு நன்றாக இல்லை. அப்படியே இருந்தாலும் விலைகள் யானை விலை குதிரை விலை தான். பெரிய பெரிய நிறுவனங்களிடம் இந்த 'ரெஸ்ட் ஏரியா', சாலை யோர உணவகங்களை கொடுத்தால் ஓரளவு பராமரிப்பும் நல்ல உணவும் கிடைக்கும் என நினைக்கிறன்.

ஆமா, இதெல்லாம் சொல்றீங்களே, அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என கேகுறீங்களா? தமிழக சாலை வசதிகளை பார்த்து வியந்த நேரத்தில் லோக்கல் அரசியல்வாதி ஒருவரிடமும் ஒரு நெடுஞ்சாலை துறை பொறியாளரிடமும், சாலை வசதிகளில் தமிழகம் முனைப்பு கட்டுவதற்கு ஏதும் கரணம் இருக்கிறதா என கேட்டேன். அதற்க்கு அவர்கள் சொன்ன பதில்...

மற்ற எதில் ஊழல் செய்தாலும் அது மக்களை கோபம் அடைய செய்யும். சாலை, மேம்பாலங்கள் போடுவதில் ஊழல் நடந்தாலும் மக்களுக்கு அது நேரிடையாக உபயோகப் படுவதால் மக்கள் அதில் நடக்கும் ஊழல்களை பற்றி அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அது மட்டும் இல்லாமல் இதில் கிடைக்கும் (காண்ட்ராக்ட்) கமிஷனும், சாலை பராமரிப்பு என தொடர்ந்து கிடைக்கும் காண்ட்ராக்ட்களும் தமிழக அரசியல் வாதிகளை ரொம்பவே இதில் ஈர்த்து விட்டதாக கூறினார்கள். அப்புறம் என்னங்க? அப்படியாவது (அப்படிதான்) நமக்கு  நம்மைகள் கிடைக்கிறது என்றால் 'ஊழல் செய்து விட்டு போகட்டுமே'.

share on:facebook

Tuesday, October 2, 2012

'அம்மா' ப்ராஜக்ட்.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக நாம் தினமும் உபயோகிக்கும் கிரெடிட் கார்ட் முதற்கொண்டு, அமெரிக்கர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை முறையாக பராமரிப்பது வரை  பல உயர் தொழில்நுட்ப ப்ராஜக்ட்களில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்திருந்தாலும், அம்மா அப்பாவின் அருகில் இருந்து அவர்களின் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றி தர முடியவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே இருந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியா வந்து 'செட்டில்' ஆனதிற்கு அதுவும் ஒரு காரணம்.

என்ன தான் பெற்றோர்களுக்கு நல்ல வீடு, வசதிகள், கார், கலர் டி.வி என வாங்கி கொடுத்திருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் அதுவல்ல. அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ஒரே விஷயம் தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள் என அவர்களோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு, கதை பேசி எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அது நிறைவேறியதில் மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. காலாண்டு விடுமுறை முழுதும் குழந்தைகள் தங்கள் அம்மாச்சி, அப்பாயி, பெரியப்பா வீடு என மாறி மாறி எல்லோருடனும் ஒன்றாக இருந்து சாப்பிட்டு, பொழுது போக்கி, தூங்கியதை அவர்கள் மட்டுமல்ல பாட்டி, தாத்தாக்களும் நன்றாக 'என்ஜாய்' செய்தார்கள்.

அப்பா உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் திருநாளின் போதும் லண்டனிலிருந்தோ, கலிபோர்னியாவில் இருந்தோ வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் போது திருவிழா பற்றி விசாரித்தால், என்னாப்பா தீபாவளி, பொங்கல். நீங்கள் இல்லாதது தான் எங்களுக்கு பெரிய குறை. நீங்கள் எல்லாம் திரும்பி வந்து ஒண்ணா இருந்தாலே போதும். அப்புறம் தினம் தினம் தீபாவளி தான் என ஒரு முறை இரு முறை அல்ல, ஒவ்வொரு முறையும் சொல்லுவார்.

2004 க்கு பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் பல்வேறு காரணங்களால் அப்பா, அம்மாவோடு சேர்ந்து பண்டிகைகள் கொண்டாட முடியாமல் போய் விட்டது.  2008 இல் மீண்டும் இந்தியா திரும்பினோம். வந்து சிறிது காலம் இருக்கலாம் என முடிவு செய்து வந்தோம். ஓரிரு மாதங்கள் சென்றிருக்கும். இன்னும் ஓரிரு மாதங்களில்  தீபாவளி அடுத்து பொங்கல் என மனது கொண்டாட்டங்களுக்கு தயாரானது. 'நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை...' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இடையிலேயே தந்தை திடீரென்று காலமாகி விட்டார். இந்த வயதிலும் உலகமே இருண்டு விட்டது போன்று ஒரு உணர்வு. பெற்றோரில் ஒருவரை இழப்பது என்பது எவ்வளவு பெரிய சோகம் என்று அன்று  தான் உணர்ந்தேன்.    

அதன் பிறகு சிறிது காலம் கழித்து மீண்டும் அமெரிக்க பயணம். இம்முறை அப்பாவின் இழப்பை மறப்பதற்காகவும், அம்மாவை அழைத்துக் கொண்டு போய் அவர்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். வேலை காரணங்களால் இந்தியாவில் அம்மாவுடன் கூட இருந்து கவனிக்க முடியாமல் போனதை சரி செய்ய அவர்களை அமெரிக்கா அழைத்துக் கொண்டேன். கூடுமானவரை எல்லா இடங்களையும் சுற்றி காண்பித்தோம். அவர்களுக்கும் குழந்தைகளை தினமும் பள்ளிக்கு கொண்டு விடுவது, அமெரிக்கா வந்திருக்கும் மற்ற பெற்றோர்களுடன் வாக்கிங் போவது என நன்றாகவே அவர்களுக்கு பொழுது போனது.

அப்பா இருந்திருந்தால் அவர்களையும் அழைத்து வந்திருக்கலாம் என அவ்வப்போது வருத்தப் படுவார்கள். அவர்களே மீண்டும், அப்பாவுக்கெல்லாம்  இங்க வந்தால் ரொம்ப கஷ்டம்பா. அவர்களுக்கு போர் அடித்து விடும் என  பின்னர் சமாதானம் ஆகி கொள்வார்கள்.
 
'அம்மா'. நினைவு தெரிந்த நாளிலிருந்து எனது ஒரே முன் உதாரணம். உழைப்பு, எளிமை, தியாகம் என எங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு  அவரின் பங்களிப்பு மிக பெரிது. அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தும் கூட மற்ற குடும்ப சுமைகளால் சற்று கஷ்ட பட்டே எங்களை எல்லாம் வளர்த்தார்கள். எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை 'அம்மா' தான் பேமிலி ஹெட். வரவு செலவில் தொடங்கி, ஒரு புது கனெக்க்ஷன், சொத்து வாங்கினால் கூட அது அம்மா பெயரில் தான் வாங்குவோம். அப்பாவுக்கும் அதில் தான் விருப்பம்.

இன்று வரை அம்மாவை எங்காவது 'ஆட்டோவில்' கூப்பிட்டுக் கொண்டு போவதென்றால் ரொம்ப கஷ்டம் தான். ஆட்டோவில் ஏறக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார்கள். நாங்கள் எல்லாம் சென்னை வருவதற்கு முன்பே அவர்கள் சென்னை வந்தால், எக்மோரில் இருந்து சாந்தோம், T நகர் என்று எங்கு சென்றாலும் MTC பஸ் தான். எல்லாம் காசை மிச்சப் படுத்தவேண்டும் என்று தான். ஆட்டோவில் சென்றால் அதிகம் செலவாகும் என்று ஆட்டோவில் ஏறவே மாட்டார்கள். அதுமட்டுமிலாமல் பாதுகாப்பு கருதியும் ஏறமாட்டார்கள்.

அவ்வளவு கஷ்டத்திலும் படிப்பு ஒன்று தான் அழியா சொத்து என்று மூன்று பிள்ளைகளையும் LKG முதல் பட்ட மேற் படிப்பு வரை ஆங்கில வழிக்கல்வியிலேயே படிக்க வைத்தார்கள். அதே போல் படிப்பு விசயத்தில் அவருடைய விருப்பத்தை எங்களிடம் திணிக்கவில்லை. எங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை படிக்க வைத்தார்கள். அப்படிதான் காமர்ஸ் குரூப் எடுத்த நான் பின்னர் கம்ப்யூடர் சயின்ஸ் எஞ்சினியராக மாறினேன். பர்ஸ்ட் க்ரூப் எடுத்த என் அண்ணன் பின்னர் ஆங்கில பாடத்தில் 'டாக்டரேட்' முடித்தார்.    

எதையோ சொல்ல வந்து எது எதையோ எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆங், கடந்த ஓரிரு மாதங்களாக அம்மாவுடன் கூடவே இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு உள்ள சின்ன சின்ன உடல் பிரச்சனைகளுக்காக மருத்துவர்களிடம் அழைத்துக் கொண்டு போவதும், சிகிர்ச்சை எடுத்துக்கொள்ள உதவியதும் மனதுக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. இன்னும் சின்ன சின்ன ஆசைகள் அவர்களுக்கு நிறைய. எல்லாம், நாமே வியக்கும் விஷயங்கள். இந்த வயதிலும் அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதே என் தற்போதைய ஆசை.

சமீபத்தில் மனைவிக்கு உடல் நிலை சற்று சரி இல்லாமல் போன போது நான் ஊரில் இல்லாத நேரத்தில் ஒரு ஆண் பிள்ளை போல் டாக்டர், கிளினிக் என எல்லா இடத்திற்கும் அவர்களை அழைத்துக் கொண்டுபோய், அப்பப்பா... அது உங்களால் தான் முடியும்மா. அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுரை படி என் மனைவி ரெஸ்ட் எடுத்துக் கொள்ள மாமா வீட்டிற்கு செல்ல ஒரு மாதத்திற்கு  மேல் மூன்று (ஹி ஹி ஹி என்னையும் சேர்த்து) குழந்தைகளையும் சற்றும் சலிக்காமல் இடையிடையே உங்களுக்கு ஏற்பட்ட கண் வலிக்கிடையே நாள் முழுதும் பார்த்துகொண்டது. என்ன தவம் செய்தேனோ அம்மா. தங்களை தாயாக நான் 'பெற்றதற்கு' ?

share on:facebook

Thursday, September 20, 2012

'ஆன்சைட்டா' அந்தப்புரமா?. IT படுத்தும் பாடு பார்ட் - 2



கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிட்டா எல்லா பெண்களையும் மற்ற பெண்கள் துளைத்து எடுக்கும் கேள்வி, என்ன 'விஷேசம் ஏதும் இல்லையா' என்பது. அது போல் IT யில் வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில் எல்லோரும் கேக்கும் கேள்வி. 'எப்போ ஆன்சைட்'? அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. அது போல் ஆன்சைட் போகதவருக்கு IT யில் மதிப்பில்லை.

சென்ற பதிவில் IT கம்பெனிகளில் வேலையில் சேர்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியமில்லை என்பதை கூறி இருந்தேன். இந்த பதிவில் அப்படியே ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விட்டாலும் அதோடு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முடியுமா என்பதை பார்ப்போம்.

முதல் பாராவில் கூறி இருந்தது போல், எப்படி ஒரு நடிகன் தன் வாழ் நாள் கனவாக 'ஆஸ்கார்' விருதை பெற்றிட வேண்டும் என நினைப்பானோ, எப்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு மாநில முதல்வர் பதவியோ அது போல் தான் பெரும்பாலான IT ஊழியர்களுக்கு 'ஆன்சைட்' கனவு.

'ஆன்சைட்' என்பது பெரும்பாலும் IT யில் வேலை பார்ப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொல். அது வேறொன்றும் இல்லை. அமெரிக்கவோ அல்லது பிற ஊர்களுக்கோ வேலை நிமித்தம் செல்வதை தான் 'ஆன்சைட்' போவதாக சொல்வார்கள். இதற்கு காரணம். நாம் வேலை பார்ப்பதே அவர்களுக்காக தான். அவர்கள் இடத்திற்கே சென்று வேலை பார்ப்பதை. On site என்று கூறுவார்கள்.

ஆன்சைட் வாய்ப்பு என்பது பெரும்பாலும் அவரவரின் அதிர்ஷ்டம் மற்றும் திறைமையை பொறுத்து. சில நேரங்களில் ஒன்னும் தெரியாதவன் ஒரே மாதத்தில் ஆன்சைட் செல்வான் சிலருக்கோ அதற்க்கு பல வருடங்கள் ஆகும். சரி அப்படி என்னதான் இருக்கு அந்த ஆன்சைட்டில் என கேப்பவர்களுக்கு...

# நல்ல சம்பளம் (இந்தியாவை ஒப்பிடும் போது)
# தான் பார்க்கும் வேலைக்கு ஒரு அங்கீகாரமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
# தன் வேலையில் மேலும் முன்னேற இதுவும் ஒரு வாய்ப்பு.
# மனைவி குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு அமெரிக்கா/இங்கிலாந்து  போன்ற வளர்ந்த நாடுகளில் போய் சுற்றி பார்க்கும்/வசிக்கும் வாய்ப்பை தரும்.
# இவை எல்லாவற்றுக்கும் மேலாக குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிராமல் உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.

அப்படி பட்ட ஆன்சைட் வாய்ப்புகள் இப்போது நிறைய இருந்தாலும் ஆன்சைட் பயணம் என்பது முன்பு போல் இப்போது இல்லை. முன்பு யார் வேண்டுமானாலும் (கம்பெனி நினைத்தால்) ஆன்சைட் போகலாம். இப்போது அமெரிக்கா மற்ற நாடுகளில் வீசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகள் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு முறை போய் விட்டு வரவே சிலருக்கு மூச்சு முட்டுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தற்போது நினைத்தாலும் பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.

'ஆன்சைட்' பயணம் பொதுவாக இரு வகை படும். 1. ஷார்ட் டெர்ம் என சொல்லப்படுகிற குறுகிய கால பயணம். 2. லாங் டெர்ம் என சொல்லப்படுகிற நீண்ட கால பயணம். இரண்டு வகையிலும் வசதிகளும் உள்ளன. சிரமங்களும் உள்ளன. அவைகளை பார்க்கும் முன், அந்த காலத்தில் ராஜாக்கள், ஊரில் உள்ள மிக சிறந்த அழகியையோ அல்லது பணக்கார நாட்டு ராஜாவின் இளவரசியையோ பெரும் பணம், பொருள் நாடு என்று திருமணம் செய்திருந்தாலும் அரண்மனைக்கு அப்பால் ஒரு அந்தபுரம் கட்டாயம் இருக்கும்.

அதற்கு காரணம், அந்தபுரத்தில் கிடைக்கும் உல்லாசமும், கவலை, பொறுப்புகள் இல்லாத வாழ்க்கையும், அந்தபுரத்தில் இருக்கும் தருணம் வரை நாடு, வீடு என அனைத்துப் பொறுப்பையும் யாராவது ஒருவர் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பார். அந்த மாதிரி தான் ஆன்சைட் பயணங்களும் எங்களுக்கு (யாராவது இப்படி சொன்னதுக்கு சண்டைக்கு வரதா இருந்தா, நீங்க ஆன்சைட்ல எங்க எப்படி இருக்கீங்கன்னு விலா வாரியா சொல்லுங்க. அதுக்கப்புறம் பார்ப்போம் உங்க பக்கம் நியாயம் இருக்கானு).

ஐயா, தலைப்புக்கு சரியான விளக்கம் கொடுத்தாச்சு...இப்போ ஜூட்....அடுத்த பதிவில் மேலும் படுத்தலாம்...

தொடர்புடைய பதிவுகள்...

IT (வேலை) படுத்தும் பாடு...


share on:facebook

Wednesday, September 19, 2012

எனக்கு பிடித்த (வித்தியாசமான) பதிவர்.

இவரின் பதிவுகள் பெரும்பாலும் கிண்டல், கோவம், சமூக அக்கறை, சுய புராணம் நிறைந்ததாக இருக்கும். தவிர சில சமயங்களில் 'கில்மா' பதிவுகளும் அடக்கம். எல்லாம் பாக்கியராஜ் வகை தான். விருப்பமிருந்தால் அனுபவித்து ரசித்து படிக்கலாம். கெட்ட வார்த்தைகள் கொஞ்சம் (சில நேரங்களில் நிறைய) இருக்கும்.

நான் அவ்வப்போது பேசிக்கொண்டு  தொடர்பில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவர்களில் சாயும் ஒருவர். இவருக்கு என்னை தவிர சில பிரபல பதிவர்களும் நெருங்கிய பழக்கம் என்பது இவரது ஒன்றிரண்டு பதிவுகள் மூலம் அறிந்து கொண்டேன். இவரின் பிளாக்கில் கெட்ட வார்த்தைகள் கொஞ்சம் (சில நேரங்களில் நிறைய) இருக்கும். ஆனால், பதிவுகள் அப்படியில்லை. பல நேரங்களில் சாயின் சமூக அக்கறையும், ஆதங்கமுமே அவரின் கோவத்திற்கு காரணம்.

உள்ளதை (உள்ளத்தை) சொல்கிறேன் !! - மனதில் தோன்றுவதை கிறுக்க என்னுடைய கரும்பலகை.

இது தான் சாய் பிளாக்கின் பெயரும் (காரணப்பெயரும்). அதை அப்படியே பின்பற்றுகிறார். இவர் யாருக்காகவும் எழுதுவதில்லை. ஹிட்டுக்கோ, பின் பற்றுபவர்களுக்கோ அதிகம் முக்கியத்துவமோ, ஆர்வமோ இவர் காட்டுவதில்லை. நினைத்தால் எழுதுவார். நீங்கள் பின்னூட்டம் இட்டால் அவரும் மறக்காமல் பதில் பின்னூட்டமிடுவார். அவ்வளவுதான்.

தன் குடும்பம், வேலை, மகனின் படிப்பு, இந்தியாவை பற்றிய சலிப்பு, எரிச்சல் என பலதரப்பட்டவை இவரது பதிவுகள். கலிபோர்னியாவில் இருந்த போது அவரே ஓரிரு முறை என்னை சந்திக்க விருப்பப்பட்டு அலை பேசியில் கூப்பிட்டு இருந்தார். ஒரு முறை கூட என்னால் அவரை சந்திக்க இயலாமல் போய்விட்டது. பரவயில்லை சாய். அடுத்த முறை ஊருக்கு வரும் போது தெரிவியுங்கள். அவசியம் நாம் சந்திப்போம்.

பல ஆண்டுகள் வெளி நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் தாய் தமிழகம், இந்தியாவின் மீது பாசமும், கடைசி காலத்தில் தாய் நாட்டுக்கு வந்து செட்டில் ஆக வேண்டும் என்பதே இவரது உறுதியான முடிவு, ஆசை. தங்கள் ஆசை நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள் சாய்.

அவ்வப்போது சென்னை வரும் இவரும் பொலம்பித் தள்ளி விடுவார். சில பொலம்பல்கள் இங்கே. இன்னொமொரு பொலம்பல் இங்கே. ஒரு முறை சென்னை வந்திருந்த போது தன் வீட்டின் எதிரே ரோட்டிலேயே எல்லோரும் குப்பையை கொட்டுகிறார்கள் என்று ஒரு நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு, குப்பை போட வருபவர் அனைவரையும் 'குப்பையை  குப்பை தொட்டியில் போடு. ஏன் ரோட்டில் போடுற' என ஒரு நாள் முழுதும் சவுண்டு விட்டு களைத்து போய் விட்டார்.

நம்ம ஊரு அப்படி தான் சாய். என்ன பண்றது. இப்படி எல்லாம் இருப்பது தெரிந்தும், 'இதற்காகத்தானே ஆசை பட்டாய்' என நம் தாய் நாட்டின் மீதுள்ள பாசத்தால் மீண்டும் இங்கு வந்து சேரத்தானே செய்கிறோம்.

தீவிர நாகேஷ் ரசிகரான சாய் ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் நாகேஷின் பிறந்த நாள் நினைவு நாளில் மறக்காமல் ஒரு பதிவு போட்டு விடுவார். எங்கே செல்லும் என் பாதை என ஒரு தொடர் பதிவு. தான் சந்தித்த அனுபவங்களையும் தன் கொள்கைகளையும் அப்படியே போட்டு உடைத்து இருப்பார். விருப்பமிருந்தால் இங்கே படித்துக் கொள்ளுங்கள்.

உலகம் முழுதும் சுத்தினாலும், அவ்வப்போது இந்தியா/சென்னை வந்து  தான் படித்த பள்ளி கல்லூரிகளுக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்வது இவரது பழக்கம். சென்னை பச்சையப்பனில் படித்ததையும் அதன் நாட்களையும் மறக்காமல் தன் பதிவுகளில் பதிவு செய்ய தவற மாட்டார்.

கெட்ட வார்த்தை என்பது ஒரு கோபத்தின் வெளிப்பாடுதான். நிறைய பேர் கோவப்படும் போது வெளியில் திட்டவில்லைஎன்றாலும் உள்ளுக்குள் திட்டிக்கொண்டு தான் இருப்போம். இன்னமும் எங்கள் ஊர்களில் அதிக பாசமாக/உரிமையாக கூப்பிடும்போது 'ஒக்கால ...' (இது சரியான வார்த்தை உபயோகமா  என்று எனக்கு தெரியவில்லை) என ஒருவரை பார்த்து கூப்பிடுவதுண்டு. பல ஊர்களில் இதை மிக மோசமான கெட்ட வார்த்தையாக சொல்லுவார்கள். உண்மையிலேயே இது மோசமான கெட்ட வார்த்தைதான்.

என்னைப் பொறுத்த வரையில் சாய் பதிவுகளில் அவ்வப்போது வரும் கெட்ட வார்த்தைகளும், ஒரு மாதிரியான பதிவுகளையும்   எங்கள் ஊரில் பேசப்படும் 'ஒக்கால...' ஆகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

சாய், உங்கள் அனுமதி இல்லாமலேயே இந்த பதிவை நான் வெளி இட்டு உள்ளேன். தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருக்காது என்ற நம்பிக்கையில்.
   

share on:facebook

Sunday, September 16, 2012

சுஜாதாவும் விமான பயணங்களும்...


சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது பலரும் அறிந்தது தான். சில வாரங்களுக்கு முன் உள்ளூர் விமான பயணம் ஒன்று மேற்கொண்ட போது சுஜாதா பல வருடங்களுக்கு முன் கட்டுரை ஒன்றில் எதிர்காலத்தில் விமான சேவைகள் எப்படி இருக்கும் என்பதை நகைசுவையை எழுதியது நினைவுக்கு வந்தது.

இப்போதெல்லாம் அதிகாலை வேளைகளில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கியூ இருக்கிறதோ இல்லையோ, விமான நிலையங்களில் கியூவில் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். விமான சேவை பற்றி திரு. சுஜாதா சொன்னதை பற்றி பார்க்கும் முன், சமீபத்தில் ஒரே மாதத்தில் மூன்று முறைக்கு மேல் உள்ளூர் விமான பயணம் மேற்கொண்டதில் பார்த்து ரசித்த/வருத்தப்பட்ட சம்பவங்கள் சில...

என்னதான் படித்திருந்தாலும், விமானத்தில் பயணம் என்றாலும் இன்னமும் சினிமா தியேட்டரில் முண்டியடித்துக்கொண்டு போகும் பழக்கத்தை சிலர் கை விடவில்லை. எல்லோரும் செக்யூரிடி செக் வரிசையில் காத்திருந்தால் ஒரு சிலர் நேராக சென்று தங்கள் உடமைகளை ஸ்கானரில் வைத்துவிட்டு நடுவில் வந்து புகுந்து விடுகிறார்கள்.

தற்போது உள்ளூர் விமானங்களில் உணவோ/ஸ்நாக்ஸ் பரிமாறப்படுவதில்லை. அப்படியே காசு கொடுத்து வாங்கலாம் என்றால், அம்மாடி விலை யானை விலை குதிரை விலைதான். இதனால் மக்கள் தற்போது பிளைட் ஏறும்போதே வீட்டிலிருந்து பொட்டலம் கட்டி வந்து விடுகிறார்கள். விமானம் டேக் ஆப் ஆனதுதான் போதும். விமானம் முழுக்கு ஒரே கம கம மனம் தான். இதில் குரூப்பாக வருபவர்கள் வெவேறு இருக்கைகளில் அமர்ந்திருந்தால் இட்லியும் சப்பாத்தியும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு 'பார்சேல்'....

விமான பணியாளர்கள். சொல்லவே வேண்டாம். MTC கண்டக்டர்களை விட அதிகம் அலுத்துக் கொள்கிறார்கள். குடிக்க தண்ணீர் கேட்டால் கூட ஏதோ அவர்கள் சொத்தை கேட்பதை போல்/நமக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை எழுதி கொடுப்பது போல் தான் அவர்களின் ரியாக்ஷன். இதற்க்கெல்லாம் காரணம் வேறு யாருமல்ல. பயணிகளான நாம் தான். சில பயணிகள் விமானத்தில் ஏறிவிட்டாலே அங்குள்ள பணிப்பெண்கள் எல்லாம் அவர்களுக்கு பணிவிடை செய்யவே பிறந்தவர்கள் போல் அவர்களுக்கு கட்டளை இடுவதும், முறைத்துக் கொள்வதும் வாடிக்கையாக பார்த்தேன்.

எல்லாம் முடிந்து லேன்டிங் ஆகும் போது பல முறை பைலட் கேட்டுக்கொண்டும் கூட, விமானம் இறுதியாக நிற்பதற்கு முன்பே செல் போனை ஆன் செய்து, ஆங் நான் வந்துட்டேன்ப்பா. வண்டி அனுப்பிட்டியா? வண்டி இப்பதான் லான்ட் ஆனுச்சு...என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அதே போல் வண்டி நிற்கும் முன்பே எல்லோரும் தங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு நின்று விடுகிறார்கள். எல்லா முறையும் பார்த்துவிட்டேன். வண்டி நின்று குறைந்தது 10 நிமிடங்களாவது ஆகும் பிளைட்டின் கதவுகள் திறக்க. அப்படி என்ன தான் அவசரமோ நம் மக்களுக்கு. இத்தனைக்கும் மும்பையிலிருந்து மதுரைக்கு மூன்று மணி நேரத்தில் வந்து விடுகிறோம். ஒரு 10 நிமிடம் சீட்டிலேயே உட்கார்ந்து கொள்வதற்கு நமக்கு பொறுமையில்லை.

இதை விட கொடுமை. சென்ற முறை மும்பையிலிருந்து சென்னை வந்த போது ஒருவர் விடாமல் விட்ட ஏப்பம். அப்பப்பா...அப்படி ஒரு சத்தத்துடன் தொடர்ந்து அவர் விட்ட ஏப்பமே போதும் விமானம் பறப்பதற்கு. அவ்வாறு பொது இடத்தில் செய்யக்க் கூடாது என்று அவருக்கு தெரியுமா என அவருக்கே வெளிச்சம்.

சரி இதுக்கும் சுஜாதாவுக்கும் என்ன சம்பந்தம் என கேக்குறீங்களா? பல வருடங்களுக்கு முன் திரு. சுஜாதா, பிற்காலத்தில் இந்தியாவில் விமான சேவைகள் எப்படி இருக்கும் என்ற ஒரு கட்டுரையில், விமான பயணங்கள் மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வாக மாறி விடும். பயணிகளை கவர கட்டணங்கள் மிகவும் குறைக்கப்படும். அதற்க்கு தங்குந்தாற்போல்  சேவைகளும் மாறும். யார் கண்டது. குறைந்த கட்டணம் குறைந்த கட்டணம் என்று, விமானம் வந்து நின்ற பிறகு கீழே இறங்க மாடிபடிகளுக்கு பதிலாக கீழே மணலை குவித்து வைத்து அதில் குதிக்க சொன்னாலும் சொல்லுவார்கள் என கூறி இருந்தார். தற்போது அது போல் தான் உள்ளது பல விமான சேவைகள்.

மும்பை விமான நிலையத்தில் வரிசையாக பேருந்துகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் நிற்கும் இடத்தில் இறக்கி விடுகிறார்கள். சில நேரங்களில் பேருந்து நிலையம் போல் வரிசையாக நிற்கும் விமானத்தில் எதில் ஏறுவது என குழப்பம் வந்து விடுகிறது. மேலே உள்ள படம் இரண்டு விமானங்களுக்கு நடுவே நின்ற எங்கள் பஸ்ஸிலிருந்து எடுத்தது.

share on:facebook

Thursday, September 13, 2012

நான்-வெஜ் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை - இறந்து (அழுகி!) போன இறைச்சிகளை வாங்கி சமைக்கும் ஹோட்டல்கள்...



அடுத்த தடவை ஏதாவது ஒரு நான்-வெஜ் ஹோட்டலுக்கு செல்லும் போது  இந்த செய்தி நினைப்புக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.


சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி வயிற்றை கலக்கியது. ஆந்திராவின் சில பகுதிகளில் இருந்து சென்னைக்கு இறந்து போன ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சிகள் சட்ட விரோதமாக ரயில்வே பார்சல்கள் வழியாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவை நடுத்தர மற்றும் போஷ் ஏரியா என்று சொல்லப்படுகின்ற VIP வசிக்கும் ஏரியாக்களில் உள்ள 'சில' ஹோட்டல் ரெஸ்டாரன்ட்களில் கூட வாங்கி சமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது அந்த செய்தி.

ஆடுகளை இறைச்சிக்காக கொல்வதற்க்கேன்றே  சென்னையில் மூன்று இடங்கள் உள்ளன. இவற்றில் தினமும் ஆயிரத்திற்கும் மேலான ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் ஆடுகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என சோதித்தபின் தான் ஆடுகள் வெட்டப்படுகின்றன. ஆடுகள் வெட்டப்பட்ட பின் அவற்றின் மேல் சீலும் குத்தப்படுகின்றன.

ஆனால் ஆந்திராவிலிருந்து இறக்குமதி ஆகும் இம்மாதிரியான இறந்து போன ஆடு/மாட்டிறைசிகள் இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்கப் படுவதில்லை. இத்தகைய இறைச்சிகள் வெளியில் விற்கப்படும் இறைச்சியை விட 40/50 சதவிகிதம் விலை குறைவு என்பதாலேயே  'சில' ஹோட்டல்கள் இவற்றை வாங்குகின்றன.

ஒரு சில பெரிய ஹோட்டல்களும் இதில் அடக்கமாம். ஆனால் இவர்கள் தங்கள் தரப்பு நியாயமாக இவ்வாறான இறைச்சிகளை நாங்கள் வாங்கினாலும் அவற்றை விஞ்ஞான முறையில் சுத்தம் செய்த பிறகே சமைக்கிறோம் என்கிறார்கள். எப்படி சுத்தம் செய்தாலும் வேக வைத்தாலும் அதிலுள்ள கிருமிகள் வேண்டுமானால் சாகலாம். ஆனால், இறந்த பின் அவற்றினுள் உருவாகும் டாக்ஸின் ஆசிடுகள் நம் உடலுக்குள் சென்றால் அது நம் உயிருக்கே உலை வைத்து விடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கடைசி செய்தி: நேற்று வெளியான இந்த செய்தியை தொடர்ந்து இன்று சுகாதார துறை அதிகாரிகள் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ரைடு சென்றிருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் சென்ட்ரல்/ஸ்டேட் அதிகாரிகளுக்குள் இடையே உள்ள ஈகோ பிரச்சனையால் போலிஸ் பிளாட்பாரம் உள்ளே  செல்ல தாமதமான நேரத்தில் இறைச்சி வியாபாரிகள் அனைவரும் எஸ்கேப். (இறைச்சியுடன் தான்).

share on:facebook

Monday, September 10, 2012

சீ... சீ...

கோடானு கோடி தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு முதல்வர், உலகின் மிக பெரிய நாட்டின் ஒரு பிரதமர் என இருவரை விவரிக்க முடியாத
, ஒரு முறை பார்த்த பிறகு மறு முறை பார்க்க இயலாத ஒரு கேவலமான கார்டூனை வரைந்த சிங்கள பேரினவாத கார்டூனிஸ்ட்ஐயும் அதை வெளியிட்ட சிங்கள பத்திரிக்கையையும்...

சீ சீ சிங்களம்...இதை தவிர வேறு என்ன சொல்வது.

share on:facebook

Monday, August 27, 2012

பதிவர் மாநாடு: தீர்மானகளும் அடுத்த மாநாட்டு தேதியும்?


எத்தனையோ மாநாடுகள் பார்த்திருக்கிறோம். அரசியல் கட்சி மாநாடுகள், ரசிகர் மன்ற மாநாடுகள், ஊழியர் சங்க மாநாடுகள். அங்கெல்லாம் என்ன நடக்கும்னு எல்லோருக்கும் தெரியும்.

ரசிகர் மன்றங்களுக்கு தன் தலைவனை புகழ் பாட மட்டுமே தீர்மானங்கள் இயற்றப்படிருக்கும். அரசியல் கட்சிகளுக்கு சொல்லவே வேண்டாம். எது எது அவர்களால் செய்ய முடியாதோ அதை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்து கிழிப்போம் என தீர்மானங்களாக தீட்டி இருப்பார்கள். ஊழியர் சங்கங்களோ, தங்களுக்கு தேவை என்றால் ஆளும் கட்சியை புகழ்ந்தும், தேவை இல்லாதபோது எதிர் கட்சிகளோடு சேர்ந்து கொண்டு கண்டன தீர்மானங்களும் போட்டுத் தாக்கும்.

ஆனால், பதிவர் மாநாடு அப்படி  நடந்ததாக எனக்கு தெரியவில்லை. நமக்கு மற்றவர்களை போல் எந்த நிர்பந்தமும் இல்லை. இருந்தும் நம் மாநாட்டில் அப்படி ஏதும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டனவா என எனக்கு தெரியவில்லை. அப்படி ஏதும் இருந்தால், மாநாட்டின் தீர்மானங்களை பற்றி  தெரிந்து கொள்ள உங்களைப் போலவே நானும் ஆவலாக உள்ளேன்.

அது மட்டும் அல்லாமல் குறிப்பாக மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதவர்களின் முதல் கேள்வியாக தற்போது இருப்பது, அடுத்த மாநாடு எப்போது என்பது தான் (ஆமா முதல் மாநாட்டுக்கே வர வழிய காணோம். அதுக்குள்ளே அடுத்த மாநாடு பத்தி கேள்வி கேக்குறாரு பாருன்னு யாரோ சொல்றது கேக்குது. என்ன பண்றது ஒரு நப்பாசைதான்).


இந்த கேள்விகளையெல்லாம் கேட்க எனக்கு தகுதி இருக்கானு தெரியல. ஏனென்றால் நான் மாநாட்டில் காலத்து கொள்ள (முடிய)வில்லை. இருப்பினும் முடிந்த வரை நிகழ்சிகளை நேரலையின் மூலம் கண்டுகளித்தேன். மதியத்திற்கும் மேல் என்னால் பார்க்க இயலவில்லை. ஒரு வேலை அந்த நேரத்தில் தீர்மானங்கள் ஏதும் படிக்கப்பட்டதா என தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் அதை என்னைப்போல பதிவர்களுக்காக ஒரு பதிவாக சம்மந்தப் பட்டவர்கள் போட்டால் நன்றா இருக்கும்.

பதிவர் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுத்த அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் பதிவுலகம் சார்பாக என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட கேள்விகள் என் ஆர்வ மிகுதியால் கேட்கப்பட்டவையே தவிர யாரையும் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். . அதே போல் எல்லோரும் மாநாடு முடிந்து மீண்டும் அவரவர் பணிகளில் மூழ்கி இருப்பீர்கள். சிலருக்கு அயர்ச்சியாக கூட இன்னும் இருக்கலாம். ஆகவே ஆற அமர இதை பற்றிய விபரங்களை தெரிவித்தால் போதுமானது. மீண்டும் மாநாட்டு நிர்வாகிகளுக்கு என் நன்றிகள்.



பதிவர் மாநாடு தொடர்புடைய மற்ற பதிவுகள்...




பதிவர் மாநாட்டு நிகழ்சிகள். சுடச் சுட Recorded videos...

பதிவுலக மாநாடு 1.00 PM update. பதிவுலகில் அதிகம் சம்பாதித்தவர் யார்...

பதிவர் மாநாடு12.27 PM update - சில சுவாரசியங்கள்...சில ஏமாற்றங்கள்...



share on:facebook