Saturday, May 19, 2012

மே 18. ஹோலோகாஸ்ட் முதல் முள்ளிவாய்க்கால் வரை...

மே 18. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மறக்க முடியாத நாள். ஆம், மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே நாள், இதே வாரத்தில் தான் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் குரல் முறிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. யாரும் அற்ற அனாதைகள் என கூறுவார்களே. அதற்க்கு உண்மையான உதாரணம் இன்று இலங்கையில் உள்ள மிச்சம் சொச்சம் உள்ள தமிழர்கள் தான். இதை சொல்வதற்கு நான் விடுதலை புலிகளின் ஆதரவாளனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழ் இனமே செத்து போன பிறகு இன்று தமிழ் ஈழம் தான் இலங்கை தமிழர்களுக்கு ஒரே தீர்வு என முழக்கமிடும் முன்னாள் முதல்வரும், ராஜ பக்சே கூண்டில் ஏற்றப் பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் இந்நாள் முதல்வரும், இவர்கள் எல்லாம் உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களும் ஒட்டு மொத்த குரலில் இலங்கையில் உள்ள எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள் என குரல் கொடுத்த போது எங்கு போனார்கள் என தெரியவில்லை. 

உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒரே குரலில் இலங்கை தமிழர்களின் இறுதி நாட்களின் போது கண்ணீர் விட்டு கதறி கேட்டார்களே, போரை நிறுத்துங்கள் என்று, அதுவரை உலகையே அச்சுறுத்தி வந்த விடுதலை புலிகளின் இயக்கமும் தங்கள் ஆயுதங்களை மவுநிக்கிறோம் என்று அறிவித்தார்களே, அப்போது எங்கு போனார்கள் இந்த அரசியல் வாதிகள். அப்போது மட்டும் செவிடாகிப் போன இவர்கள் இப்போது மீண்டும் இலங்கை தமிழர் நலன் பற்றி பேசுவது யாரை ஏமாற்றும் செயல். குண்டு மழை பொழிந்து குற்றுயிரும் கொலை உயிருமாய் தமிழர்கள் அங்கு தத்தளித்து கொண்டிருக்க இங்கு முன்னாள் மத்திய அரசில் பதவி தேடியும், தேர்தல் தோல்விக்கு பிறகு கோடை நாட்டில் ரெஸ்ட் எடுக்கவும் இவர்கள் சென்றதை யாரும் மறந்து விட மாட்டார்கள்.

விடுதலை புலிகள் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் உண்டு. அதில் உண்மையும் உண்டு. அப்படி பார்த்தால் இன்று உலகில் பல நாடுகள் அரசு தீவிரவாதத்தின் கீழ் தான் உள்ளது. எந்த நாடாக இருந்தாலும் ஒரு அரசுக்கு எதிராக பலமாக ஒரு இயக்கம் வளர்ந்தால் அதை ஜன நாயகம் பார்த்து கட்டுப் படுத்துவதில்லை. தீவிரவாதம் என தலைப்பு கொடுத்து தலையை கிள்ளி தான் எறிகின்றன. 

இலங்கை அரசுக்கு எதிராக சின்ன சின்ன எதிர்ப்பு போரட்டங்களையும், தாக்குதல்களையும் நடத்தி வந்த தமிழ் குழுக்களை தமிழக அரசியல்வாதிகளும், இந்திய அரசும் தங்கள் சுய நலம், பூலோக நலனுக்காகவே அவர்களை அழைத்து வந்து இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் வைத்து அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து, ஆயுதங்கள் கொடுத்து இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மிக பெரிய சக்தியாக உருவாக காரணமென்றால் அம்மாதிரியான தீவிரவாதத்தை வளர்த்ததும் ஒரு தீவிரவாத செயல்தான்.    

அதே தமிழ் குழுக்கள் வளர்ந்து மிக பெரிய பலம் பெற்ற பின் எங்கே அவர்களால் நமக்கு பிரச்னை வந்துவிடுமோ என அஞ்சி இந்திய அரசு அவர்களுக்குள் சகோதர சண்டை மூட்டி அதுவே கடைசியில் ஒட்டு மொத்த தமிழின அழிவுக்கு காரணமானதற்கு நம் சுய நலம் அன்றி வேறென்ன? இவையெல்லாம் ஆரம்பம் முதல் ஈழ பிரச்சனையை ஆழ்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும்.

எங்கு மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ அங்கு நிச்சயம் புரட்சிகள் வெடிக்கும். புரட்சிகள் எப்போதும் பூக்களால் அலங்கரிக்கப் படுவதில்லை. நேப்பாளத்தில் புரட்சி வெடித்தது. மன்னராட்சி தூக்கி எறியப்பட்டு புரட்சியாளர்கள் நாட்டை பிடித்தார்கள். இன்று அவர்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வில்லையா? நேபாள புரட்சியாளர்கள் மட்டும் என்ன பூப் பந்தையா கையில் எடுத்தார்கள். அவ்வளவு ஏன், கடந்த ஓராண்டாக எகிப்த்து முதல் பல்வேறு நாடுகளில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட ஆட்சியாளர்கள் தானே ஆட்சி செய்து வந்தார்கள். அந்த நாடுகள் எல்லாம் 'Sovereign' ஸ்டேட்ஸ் தானே. அங்கு மட்டும் புரட்சி எப்படி அனுமதிக்கப் பட்டது. புரட்சியாளர்கள் அது வரை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்களை எல்லோரும் பார்க்க படு கொலை செய்தார்களே. அதுவெல்லாம் தீவிரவாதம் இல்லையா? 

ஒரு இனத்தையே முற்றிலும் அழித்தால் தான் தீவிரவாத்தை ஒழிக்க முடியும் என்றால் அப்புறம் உலகில் எந்த இனமும் வாழ வாய்ப்பில்லை. 

இந்த நூற்றாண்டின் ஹோலோகாஸ்ட் முள்ளி வாய்க்கால் படுகொலைகள்.  முள்ளி வாய்க்காலில் கொத்து கொத்தாய் மடிந்து போன என் தமிழ்  உறவுகளுக்கும், இந்த நூற்றாண்டின் ஹோலோகாஸ்டில் உயிர் பிழைத்து  இன்னமும்  கொட்டடிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் ஆதரவற்ற  தமிழ் இனத்திற்கு என்னுடைய வீர வணக்கங்கள்.      

share on:facebook

Tuesday, May 15, 2012

பழைய பேப்பர், பாத்திரங்களுக்கு அமெரிக்க டாலர்...


பழைய பேப்பர், பாத்திரங்களுக்கு பேரிச்சம்பழம்... பள்ளி பொது தேர்வு முடிந்தவுடன் நம்மூரில் இப்படி கத்தியபடி அடிக்கடி சைக்கிளில் தெரு தெருவாக சுற்றி வருவார்கள். சிறுவனாக இருக்கும் போது இதற்க்காகவென்றே ஒரு நோட்டு விடாமல் எழுதிய பக்கங்களை கிழித்து அதை சேமித்து பழைய பேப்பருக்கு போட்டு அந்த பணத்தை அம்மாவிடம் வாங்கிக்கொண்டு சினிமாவுக்கு சென்று விடுவேன்.

வழக்கம் போல் இதற்கும் ஒரு அமெரிக்க கதை இருக்குமே என்கிறீர்களா?... ஆம். குறிப்பிட்ட பழக்கவழக்கங்களில் நாம் ஊறிப் போகும்போது அதற்க்கு நேர் மாறாக ஏதாவது ஒன்றை பார்த்தால் சில நேரங்களில் ஆச்சர்யமாகவும் சில சமயம் அருவருப்பாகவும் கூட இருக்கும். பன்றி கறியை சாப்பிடுவர்களை பார்த்து நமக்கு குமட்டினால், கோழி கறி சாப்பிடும் நம்மை பார்த்து சைவர்களுக்கு குமட்டும். அது போல் தான் இதுவும்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது 'கராஜ் சேல்ஸ்'. அதாவது, உங்கள் வீட்டில் உங்களுக்கு உபயோகம் இல்லாமல் அல்லது பழசாகிப் போய் அதை நீங்கள் உபயோக படுத்தாமல் இருந்தால் அம்மாதிரி வீட்டில் உள்ள எல்லாவற்றையும் திரட்டி அதை அவர்கள் வீட்டின் முன் விற்பனைக்காக கடை பரப்பி விடுவார்கள். கராஜ் என்பது பொதுவாக கார் நிறுத்தும் இடத்தை குறிக்கும். அங்கு தான் அமெரிக்கர்கள் பலரும் அனைத்து தட்டு முட்டு சாமான்களையும் போட்டு வைத்திருப்பார்கள். அதனால் தானோ என்னவோ இப்பெயர். சில சமயங்களில் நமக்கு வேறு எங்கும் கிடைக்காத பொருட்கள் இம்மாதிரி கராஜ் சேல்சில் கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர் குழந்தைகள் என அனைவரும் இதை ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்கும் போது மிகுந்த சந்தோசத்துடன் செய்வார்கள்.

சில வீடுகளில் வீதிக்கு வந்திருக்கும் பொருட்களை ஒரு லாரியில்  ஏற்றலாம். அவ்வளவு இருக்கும். சிலர் இதற்கென்று ஒரிஜினல் கல்லா பெட்டி வைத்து வியாபாரம் செய்வார்கள். தெருவை சுற்றி கராஜ் சேல் பற்றி விளம்பர பதாதைகள் ஒட்டி விடுவார்கள். இம்மாதிரி இடத்தில் பொருள் வாங்குகிறோமே என யாரும் வெட்க பட மாட்டார்கள். அமெரிக்கர்கள் எதற்கு தான் வெட்கப் பட்டார்கள் என கேட்கிறீர்களா?

ஆம், உபயோகித்த உடைகள், செருப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என ஆரம்பித்து பெண்கள் உபயோகப் படுத்திய (நன்கு இண்டஸ்டரியல் வாஷ் செய்யப்பட பின்) உள்ளாடைகள் கூட அங்கு கிடைக்கும்.

அதே போல் அமெரிக்காவில் பழைய கார்களுக்கும் ஒரு மார்க்கெட் உண்டு. பழைய கார்களை வாங்க விற்க என்றே பல வலை தளங்கள் உண்டு. உங்கள் பழைய கரை நீங்கள் விற்க வேண்டும் என்றால் kbb.com போன்ற வலை தளங்களில் உங்கள் காரை பற்றிய எல்லா விபரங்களையும் அளித்தால் போதும். உங்கள் காரின் தற்போதைய சந்தை மதிப்பு என்ன வென்று காட்டி விடும். வாங்குபவர்களும் பெரும்பாலும் kbb.com மதிப்பு பார்த்து தான் வாங்குவார்கள். குறிப்பாக உங்கள் காரின் பிராண்ட், தயாரித்த வருடம், அதுவரை ஓடியுள்ள மைல்கள், காரில் உள்ள வசதிகளை பொறுத்து காரின் விலையை நிர்னைப்பார்கள்.

அமெரிக்காவில் ஸ்பீடா மீட்டரை யாரும் மாற்றிவைக்க முடியாது. அப்படி செய்தால் அது கடுமையான குற்றம். அது மட்டுமன்றி ஒவ்வொரு வண்டிக்கும் இங்கு ஹிஸ்டரி பராமரிக்கப் படும். வண்டி வாங்கும் நாள் முதல் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் இங்கு தானாக பதிவு செய்யப் படுகிறது. அதாவது ஸ்பீடா மீட்டரில் அவ்வப்போது தெரியும் வண்டி ஓடிய அளவும் சேர்த்து. அந்த வகையில் பெரிதாக நாம் ஏமாந்து விட  முடியாது.

அமெரிக்க வாழ் இந்தியர்களை பொறுத்தவரையில் பெரும்பாலானோர் இரண்டு/மூன்று வருடம் முதல் ஆறு வருடங்கள் வரை அமெரிக்காவில் தொடர்ந்து வேலை செய்யும் வைப்பு கிடைக்கும் (கிரீன் கார்ட் நபர்கள் கணக்கில் இல்லை). இவர்களில் பெரும்பாலானோர் வீட்டிற்கு தேவையான சோபா, டைனிங் டேபிள், கார் என பலவற்றை செகண்ட் சேல்சில் தான் எடுப்பார்கள். ஒன்று இவர்கள் வேலை பார்க்கும் கம்பெனியில் உள்ளவர்கள் மூலம் இவர்களுக்கு தேவையான பொருட்கள் பற்றிய விபரம் கிடைக்கும் அல்லது இதற்கென்று உள்ள வலைத்தளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் விட அமெரிக்காவில் வீட்டை காலி செய்யும் போது ஒரு பொருளையும் அங்கு விட்டு வர முடியாது. அதாவது சில பொருட்களை நாம் குப்பை தொட்டி அருகே கூட வைத்து விட்டு வர முடியாது. எல்லாவற்றையும் பொருளுக்கு தகுந்த மாதிரி முறையாக 'டிஸ்போஸ்' செய்ய வேண்டும். உதாரணமாக நம்மூர் போல் பாட்டரி, ஆயில் வேஸ்ட், மின்சார பல்புகளை போன்றவற்றை குப்பை தொட்டியில்  தூக்கி போட்டு விட முடியாது. அவைகளை அந்தந்த மாகாண சட்டப்படி  முறையாக 'டிஸ்போ' செய்ய வேண்டும். இல்லை என்றால் அதற்கும் அபராதம் தான்.
ஆக மொத்தம், புதிதாக அமெரிக்கா செல்லும் போதும் கஷ்டம். பின் அமெரிக்காவை விட்டு செல்லும் போதும் கஷ்டம் தான். அங்கு இருக்கும் வரைதான் எல்லா வாழ்வும், வசதியும்.

share on:facebook

Sunday, May 13, 2012

படிப்பு: ஆறாவது பெயில். பதவி: மாநில IT (தகவல் தொழில் நுட்ப) அமைச்சர்.


நான் ஒன்னும் அப்படி சொல்லலீங்க. கீழே உள்ள தினமலர் செய்தி தான் அப்படி சொல்லுது. இது தொடர்பாக இன்று தினமலரின் இணைய தளத்தில் வந்துள்ள செய்தி கீழே...


தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், தவறான கல்வித்தகுதியை அரசுக்கு அளித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம்சாட்டி, முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முக்கூர் சுப்பிரமணியன். இவர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார். இவரது கல்வித்தகுதி, புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

6ம் வகுப்பு பெயில்:முக்கூர் சுப்பிரமணியன், 2009ம் ஆண்டு ஆரணி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்த, அபிடவிட்டில் செய்யாறு தாலுகா, கொருக்கை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1972 ஏப்ரல் 21ம் தேதி, ஆறாம் வகுப்பு படித்து பெயிலானவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அபிடவிட் விவரம், தற்போது இந்திய தேர்தல் கமிஷன் வெப்சைட்டிலும் உள்ளது.

கடந்த, 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், செய்யாறு தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தாக்கல் செய்த வேட்பு மனுவில் (2011 மார்ச் 11ம் தேதி), தமிழ்நாடு திறந்த வெளி பல்கலையில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவரம், தமிழக தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் உள்ளன.முக்கூர் சுப்பிரமணியன் கொடுத்த தகவலின்படி, 2009-10 கல்வியாண்டில் முதலாமாண்டும், 2010-11 இரண்டாம் ஆண்டும், 2011-12 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டும் படித்திருக்க முடியும். 

இதன்படி, 2012ம் ஆண்டு நடந்த தேர்வில், மூன்றாம் ஆண்டு தேர்வு எழுத தகுதி உடையவராகிறார். அதற்கான ரிசல்ட் வரும், ஜூன் மாதத்துக்கு பின் தெரியவரும். மேலும், இவர் மூன்று ஆண்டுகளும் தேர்வு எழுதி இருந்து, அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவர் பி.ஏ., முடித்ததாக கருதப்படும்.

பி.ஏ., பாஸ்?தமிழக அரசு சார்பில், வெளியிடப்படும் அமைச்சரின் விவரங்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள் அடங்கிய வெப்சைட்டில், அவருடைய கல்வித்தகுதி, பி.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது."அமைச்சராக உள்ள ஒருவர், அரசுக்கு தன் கல்வியின் விவரங்களை தவறாக கூறியுள்ளார். மேலும், அவருடைய கல்வித்தகுதியை முதல்வருக்கு, தவறாக தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து முதல்வருக்கு புகார் மனுவை அனுப்ப உள்ளோம்' என, அமைச்சரின், எதிர் கோஷ்டி, அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர்.

மேலும், அமைச்சரின் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், "2009ம் ஆண்டு பி.ஏ., முதலாமாண்டு தேர்வு எழுதியது உண்மை. அதில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறவில்லை. 
இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவே செல்லவே இல்லை. அப்படி இருக்க அவர் எவ்வாறு, பி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க முடியும்' என, கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கல்வி வளர, தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் நிலையில், அமைச்சர் இது போன்று ஈடுபட்டு வருவது கேலிக்குரியது என, அ.தி.மு.க., வினர் புலம்பி வருகின்றனர். திடீரென எழுந்துள்ள புகாரால், அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியத்துக்கு, சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எனக்கு தெரியாது:இதுகுறித்து, அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், நான் பி.ஏ., படித்து வருகிறேன். முதல் இரண்டாண்டு தேர்வு எழுதியுள்ளேன். மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவில்லை. பி.ஏ., பட்டப்படிப்பு முழுவதும் முடிக்கவில்லை. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வெப்சைட்டில், கல்வித்தகுதி என்ன வெளியிடப்பட்டுள்ளது என, எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கிறேன்.இவ்வாறு கூறினார்.

share on:facebook

Wednesday, May 2, 2012

ஊர் உலகமெல்லாம் சண்டை போடும் அமெரிக்காவில் வீட்டில் சண்டை போட முடியாது.



ஊர் உலகமெல்லாம் வழிய போய் சண்டை போடும் அமெரிக்காவில் நாம் வீட்டிற்க்குள் சண்டை போட முடியாது. ஆம், நாலு சுவத்துக்குள்ள நம்ம சண்டை நடந்தாலும் அதை பக்கத்து வீட்டுகாரன் பார்த்தால் உடனே 911 கால் செய்து விடுவார்கள். டொமஸ்டிக் வயலன்ஸ் என்று ரிப்போர்ட் ஆனால் பெரும்பாலும் உடனடியாக காப்பு தான். 

அதே போல் அலுவலகத்திலோ அல்லது வேறு எங்குமோ ஒருவர் செய்கை நமக்கு பிடிக்க வில்லையென்றால் கூட அல்லது ஒருவருடன் பிரச்னை என்றால் அவருடன் நீங்கள் சண்டை போடலாம். ஆனால், முகத்தில் நாம் கோவத்தை காண்பிக்க கூடாது. சிரித்துக் கொண்டே தான் அவருடன் சண்டை போட வேண்டும்(அதாவது அட்லீஸ்ட் உணர்சிகளை காட்டாமல் இருக்க வேண்டும்). இல்லையென்றால் அப்யூஸ் என்று குற்றம் சாட்டி விடுவார்கள்.

நாம் பெற்ற குழந்தை என்றால் கூட அவர்கள் மீது நமக்கு ஓரளவு தான் உரிமை. அதாவது நம் குழந்தை தப்பு செய்தாலோ, சரியாக படிக்கவில்லை என்றாலோ அவர்களை அடிக்க கூட முடியாது. அப்படியே அடித்தாலும் அதை அவர்கள் வெளியில் சொல்லாத வரை ஒன்றும் பிரச்னை இல்லை. பள்ளி ஆசிரியரிடமோ வேறு யாரிடமோ சொல்லிவிட்டால் அங்கிருந்தே 911 கால் போய் விடும். இம்மாதிரியான சிக்கல்கல்களில் பெரும்பாலும் இந்தியர்கள் மாட்டிக் கொள்வதுண்டு. அதாவது இந்நாட்டு சட்ட திட்டங்கள் தெரியாததாலும் நம் குழந்தை மீது நமக்கு இல்லாத உரிமையா என்ற நினைப்பிலும் கொஞ்சம் அதிகப் படியாக நடந்து கொண்டால் பின்னர் சிக்கல் தான்.

அதே போல் முகம் தெரியாத சிறுவர் சிறிமியரிடம் இங்கு ஓரளவு தான் நட்பாக பழகலாம். நம்மூர் போல் தெரியாத குழந்தையை ஒரு பொது இடத்திலோ/பார்க்கிலோ மிக அழகாக இருக்கிறது என்று பார்த்து சிரித்தாலோ கொஞ்சினாலோ அதன் பெற்றோர்களுக்கு சந்தேகம் வந்து விடும். அதற்க்கு காரணம் இங்கு குழந்தைகளை கெட்ட செயலுக்காக ஒரு சில கயவர்கள் கடத்துவதும் அல்லது கட்டாயப் படுத்துவதுமே காரணம். அம்மாதிரி செய்து தண்டனை பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தண்டனை முடிந்து வெளியே வந்தால் கூட அவர்களுக்கு எலக்டிரானிக் கருவிகளை காலில் கட்டி விட்டு விடுவார்கள். அவர்களின் நடமாட்டம்/நடவடிக்கைகளை கண்காணிக்க. 

எனக்கு பெர்சனாலாக நடந்த ஒரு சம்பவம். அப்போது மினசோட்டாவில் நாங்கள் இருந்த போது என் குழந்தை ஒரு பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் வயதுடைய (சுமார் 3 -4 வயது) ஒரு குழந்தையும் எங்களுடன் சேர்ந்து விளையாட ஒரு கட்டத்தில் நாங்கள் மூவரும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த அக்குழந்தையின் தாய் என்னை பார்த்து சத்தம் போட ஆரம்பித்து விட்டார். யார் நீ? நீ ஏன் என் குழந்தையுடன் விளையாடுகிறாய்? உன் வீடு எங்கே என்று அநேகமாக கம்பிளைன்ட் செய்யும் அளவுக்கு போய் விட்டார். நான் என் குழந்தை அங்கு விளையாடுவதை காண்பித்து இது எங்கள் அபார்ட்மென்ட் பார்க் எனவும் வேண்டு மென்றால் அபார்ட்மென்ட் மானேஜரை கேளு என்று கூறிய பின் தான் அவருக்கு என் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்தது.

இம்ம்...நல்ல விசயங்களை பகிரும் போது இது மாதிரி சம்பவங்களையும் பகிர தானே வேண்டும்.   

share on:facebook

Tuesday, May 1, 2012

காபூலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: அமெரிக்க அதிபர் ஒபாமா உயிர் தப்பினார்

தற்போது தினமலர் இணைய தளத்தில் பார்த்த செய்தி. தலைப்பை பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி ஆகி விட்டேன். வேறு எந்த செய்தி தாளிலும் பெரிதாக ஒன்றும் போடவில்லை. இது உண்மையா?  

காபூல் : அல்குவைதா இயக்க தலைவர் பின் லேடனின் முதலாம் ஆண்டு நி‌னைவு தினத்தில் ஆப்கானில் குண்டு வெடிப்பு நிகழ்‌ந்தது. இச்சம்பவத்திற்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஒபாமா ரகசிய பயணம் : அல்குவைதா இ‌யக்கத்தினர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதன் முன்னாள் தலைவர் பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அவ் வியக்கத்தினரால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய பயணமாக ஆப்கான் சென்றிருந்தார்.அங்கு தலைநகர் காபூலில் அதிபர் ஹர்சாயை சந்தித்து நிதியுதவி , மற்றும் படைகளை படிப்படியாக குறைப்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ‌தொடர்ந்த அமெரிக்க ராணுவத்திரின் மத்தியில் பேசிய அதிபர் இந்தாண்டு இறுதிக்குள் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என கூறினார்.

உளவுத்துறை எச்சரிக்கை : அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லாடனின் நினைவு தினத்தை முன்னிட்டு தீவரவாதிகள் திடீர் தாக்குதலி்ல் ஈடுபடக்கூடும் என அமெரிக் உளவுத்துறை ஆப்கானிஸ்தானின் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தீவிரவாதிகள் தாக்குதல் : அதிபர் ஒபாமா தனது ஒருநாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ஆப்கானி்ன் கிழக்கு மாகாண தலைநகரில் அமெரிக்க தூதரகம் அமைந்து ள்ள கிரீன்வில்லேஜ் வணிக வளாகத்தி்ல் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட அறிக்கயில் தெரிய வந்துள்ளது.

மற்றொரு தாக்குதல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பினர் பொறுப்பேற்ற நிலையில் மேற்கு பகுதியில் குடியிருப்நு வளாக பகுதியில் சக்தி வாய்நத குண்டு வெடிப்பு நிகழ்‌ந்துள்ளது. இச்சம்பவத்தில் சுமார் 6 பேர் வரை பலியாகியிருக்க கூடும் என தலைமை போலீசார் அயூப் சாலங்கி தெரிவித்தார்.

share on:facebook