Monday, April 22, 2013

ஹாரன் அவஸ்தைகள்...

அமெரிக்காவில் இருந்த வரை என் சின்ன பெண்ணுக்கு அடக்க முடியாத ஆசை என்று ஒன்று உண்டென்றால் அது கார் ஹாரனை அடித்து பார்ப்பது தான். ஒவ்வொரு முறையும் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்து காரை நிறுத்தும் போதும், அப்பா ஒரே ஒரு தடவை ஹாரனை அடித்து கொள்ளட்டுமா என கெஞ்சி கெஞ்சி கேட்பாள். ஒவ்வொரு தடவையும் என் பதில் 'நோ மா...' என்றாகவே இருக்கும். காரணம் அங்கு காரணம் இல்லாமல் யாரும் கார் ஹாரனை அடிக்க மாட்டார்கள். அடிக்கவும் கூடாது.

இந்தியாவிற்கு இடையில் வந்திருந்த போது இங்கு சாலைகளில் ஓயாமல் கேட்கும் கார் ஹாரன் சத்தம் கேட்டு கேட்டு, மீண்டும் அமெரிக்கா சென்ற பின்னர் அங்கு கார் ஹாரன் சத்தத்தையே கேட்க முடியாமற் போனது அவளுக்கு என்னமோ அதன் மீது ஒரு ஆசையை ஏற்படுத்தி விட்டது போலும். ஆம், அமெரிக்கா மட்டுமன்றி பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் தேவை இல்லாமல் கார் ஹாரனை அடிக்க மாட்டார்கள். ஏன், ஹாரனை அடிக்கவே மாட்டார்கள் என்று கூட கூறலாம். அங்குள்ள கார்களில் பயன்படாத ஒரு 'பார்ட்' என்றால் அது ஹாரன் பட்டனாக தான் இருக்கும். சில கார்களில் அது 'ட்ராஷ்க்கு' செல்லும் வரை அது உபயோக படாமலே போக வாய்ப்புண்டு.

அப்புறம் எப்படி டிராபிக்கில் சைடு வாங்கும் போதும், எதிரே வண்டிகள் வரும் போதும், அடுத்த வாகனத்தை ஓரம் போகவோ, இடித்து விடாமல் எச்சரிக்கையோ செய்வது என கேட்பவர்களுக்கு, இம்மாதிரியான சூழ்நிலைகள் அங்கு பெரும்பாலும் ஏற்படாது. காரணம் எல்லோரும் அங்கு 'லேன் டிசிப்ளினை' பாலோ செய்வார்கள், செய்ய வேண்டும். ஆகையால் ஒரு வண்டியை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்றால் தேவையான இடைவெளி விட்டு அடுத்த லேனுக்கு மாறி அங்கிருந்து தான் மீண்டும் நம் லேனுக்குள் செல்லலாம். அது மட்டுமில்லாமல் வேகத்திற்கு ஏற்ப பல லேன்கள் இருப்பதால் அதில் பெரிய சிரமமும் இருக்காது. இண்டிகேட்டரை சரியாக உபயோகப்படுத்தினாலே பெரும்பாலும் போதுமானது. உண்மையிலேயே ஒரு விபத்து நிகழ போகிறது உங்கள் பக்கத்து வண்டி உங்களை இடிக்க போகிறார். அவரை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற காரணங்களுக்காக  மட்டும் தான் ஹாரனை அடிக்கலாம், அடிக்க வேண்டும்.

இருந்தும் சில நேரங்களில் யாராவது ஹாரன் சப்தம் எழுப்புவார்கள். அது பெரும்பாலும் நம்மை எரிச்சல் ஊட்டும் சக வாகன ஓட்டியை நம்மூரில் 'போடா பரதேசி' என்றோ 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா' என்றோ நாம் இங்கு திட்டுவோமே அதற்க்கு பதிலாக அங்கு ஹாரன் அடிப்பார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் அங்கு ஒருவரை திட்ட வேண்டும் என்றால் ஹாரன் தான் அடிக்க முடியும். ஆனால் அதுவும் அங்கு தவறு தான். அமெரிக்க காவல் துறையே இதை பற்றி அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். யாராவது தங்களை எரிச்சல் ஊட்டும் அளவிற்கு வண்டி ஓட்டினாலும் ஹாரன் அடிக்காதீர்கள். அது அவர்களை மேலும் எரிச்சல் ஊட்டும். சிலர் இன்னும் முரட்டுதனமாகி உங்களை தாக்க கூட கூடும் என்று. நமக்கு எரிச்சல் வரும் நேரத்தில் இந்த அறிவுரை எல்லாம் எங்கு நினைவுக்கு வரும். நானே பல முறை இது மாதிரி சந்தர்பங்களில் ஹாரன் அடித்துளேன். திட்ட முடியாதே வேறு என்ன செய்வது?

ஹாரனை அடிப்பதை இன்னொமொரு சுவாரசியமான விசயத்திற்கும் அங்கு பயன் படுத்துவார்கள். அதாவது ஒரு கோரிக்கை என்றால் அதை நான்கு ஐந்து பேர் சிக்னல் அருகே கைகளில் பதாகைகளை ஏந்தியபடி நிற்பார்கள். அந்த பதாகைகளில் அவர்களுடைய கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன் கீழேயே கோரிக்கைக்கு அதரவு தெரிவிப்பவர்கள் ஹாரன் அடிக்குமாறு எழுதப்பட்டிருக்கும். அதாவது கமல் ரசிகர்கள் 'விஸ்வரூபம்' தடையை நீக்குமாறு கோரிக்கை வைத்தால் அதை நீங்கள் ஆதரித்தால் சிக்னலை கடக்கும் முன் ஒரு 5 வினாடிகளுக்கு தொடர்ந்து ஹாரன் எழுப்பியபடி கடந்து செல்வார்கள்.

இங்கு காரணமே இல்லாமல் நம் கைகள் தன்னிச்சையாக அவ்வப்போது ஹாரனை அடித்துக்கொண்டே இருக்கிறது. ஏன், எதற்கு அடிக்கிறோம் என்றே தெரியாமல் ஹாரன் அடித்துக்கொண்டே செல்பவர்களை பல முறை பார்த்துள்ளேன்/கேட்டுள்ளேன். மற்ற எந்த பொலுஷனை விட இந்த நாய்ஸ் பொலுஷன் மிகுந்த எரிச்சலையும் ஸ்ட்ரெஸ்சையும் ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்போது தான் 'ஹாரன் அடிக்காதீர்கள். காதுகளை கொல்லாதீர்கள்' என ஆங்காங்கே பொது நலன் கருதி பேனர்கள் வைத்துள்ளார்கள். இதற்க்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து இந்த நாய்ஸ் பொலுஷனை நாம் மட்டு படுத்த வேண்டும்.

அதே போல் தான் வண்டிகளில் 'ஹை பீம்' லைட் பயன்பாடும். நம் ஊரில்  அநேகமாக 99 சதவீகித வண்டிகள் இரவில் 'ஹை பீம்' போட்டு தான் போகின்றன. அது மட்டும் இல்லாமல் எவ்வளவு பவர்புல் வாட்ஸ் போட முடியுமோ அந்த அளவிற்கு போட்டுக் கொண்டு தான் மட்டும் சரியாக சென்றால் போதும் மற்றவர் சொர்கத்திற்கு போனால் என்ன நரகத்திற்கு போனால் என்ற என்ற மனப்பான்மை. நானும் ஆரம்பத்தில் மாருதியில் ஒரிஜினலாக வந்த சாதாரண பல்பை தான் உபயோக படுத்தி வந்தேன். ஆனால் எதிரே TVS 50 வந்தால் கூட கண் தெரியாமல் போனது. அதன் பிறகு நானும் சற்று கூடுதல் பவர் உள்ள பல்பை மாட்டிக்கொண்டேன்.

மேற்கத்திய நாடுகளில் அப்படி இல்லை. எவ்வப்போது 'ஹை பீம்' போடலாம், போட வேண்டும் என்று வரைமுறை உள்ளது. அதே போல் நம் இஷ்டத்திற்கு அந்த வண்டிக்கென்று பரிந்துரைக்கப்பட்ட பல்பின் வாட்சை விட அதிகமாக போட கூடாது. அதனால் பெரும்பாலும் இரவு நெடும் தூரம் பயணம் செய்தாலும் கண்கள் அயர்ச்சி அடையாது. வண்டி ஓட்டுவதும் சிரமம் இல்லை. ஒரு சிலர் அவர்களுக்கு சைடு கொடுத்தாலோ, நின்று வழி விட்டாலோ அதற்க்கு நன்றியாக ஒரு விநாடி 'ஹை பீம்' போட்டு சிம்பலிக்காக நன்றி கூறுவார்கள். அது தான் அங்கு ஹை பீம் பயன்பாட்டின் அதிக பட்ச பயன்பாடு.

பவர்புல் பல்ப் மற்றும் 'ஹை பீம்' வெளிச்சத்தினாலேயே பல விபத்துக்கள் நடக்கின்றன. இதற்கும் அரசு கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். எல்லோரும் பொறுப்புணர்வுடன் ஒரே மாதிரியான அளவு வெளிச்சத்தை உபயோக படுத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.


share on:facebook

Tuesday, April 16, 2013

IT: அதிகரிக்கும் தற்கொலைகளும், விவாக முறிவுகளும்

சென்னையில் திருமணமான 8 மாதத்தில் IT யில் பணிபுரிந்த வாலிபரும் அவருடைய மனைவியும் அதிகாலை 3 மணிக்கு வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை. பெங்களூரில் சாப்ட் வேர் இஞ்சினியர் தூக்கிட்டு தற்கொலை. கடந்த ஓரிரு வாரங்களில் செய்தி தாள்களில் வெளிவந்த மனதை வதைத்த செய்திகள்.

இது சற்று அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல. யோசித்து பார்த்தால் பொதுவாக தற்கொலைகள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு உடனே எடுக்கும் முடிவு என்பார்கள். இது அதையும் தாண்டியது போல் தான் எனக்கு தெரிகிறது. விடியற்காலை 3 மணிக்கு தம்பதி சகிதமாக மொட்டை மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொள்வது என்றால் ஜீரணிக்க முடியவில்லை. அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழி இல்லை, குழந்தை குட்டிகளை கப்பாற்ற வழி இல்லை என்று வறுமையின் பிடியில் சிலர் தற்கொலை செய்து கொள்வதை கேட்டிருக்கிறோம். ஆனால், கை நிறைய சம்பாதிக்கும் இவர்களுக்கு என்ன பிரச்னை என தெரியவில்லை.

என்னை பொருத்தவரை இதற்க்கெல்லாம் அவர்களின் சுற்றமும் பெற்றோர்களுமே காரணம் என கூறுவேன். சாதாரண குடும்பங்களில் பிள்ளைகள் வேலைக்கு சென்று திருமணம் ஆன பின்பு கூட பெற்றோர்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள். எங்கே செல்கிறார்கள், எப்படி செலவு செய்கிறார்கள் என விசாரித்து கொண்டே இருப்பார்கள். எங்கள் வீட்டில் இன்னமும் என் அம்மா (அப்பா இருந்தவரை அப்பாவும்) இந்த மாதம் என்ன செலவு செய்தாய்? இதை ஏன் செய்கிறாய்? அதை ஏன் செய்ய வில்லை என கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அது தான் நமக்கும் நம்மை. நம் மீது அக்கறை கொண்டவர்கள் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்டால் நாம் பதில் சொல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை எப்போதும் தந்து கொண்டே இருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக இன்று நன்றாக சம்பாதிக்கும் இளைஞர்களின் பெற்றோர்கள் இதை கடை பிடிப்பதில்லை. அது தான் இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு காரணம்.

என்னுடைய நண்பர் ஒருவர் மிக பெரிய தொழில் அதிபர். காலை முதல் இரவு வரை தொழிலை பற்றி மட்டுமே சிந்திக்க நேரம் இருந்தாலும், இரவு ஒரு அரை மணி நேரம் தன் வயது முதிர்ந்த அம்மாவிடம் அன்று நடந்த நல்லது கேட்டது என அனைத்தையும் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து சொல்லி விட்டு அவரை படுக்க வைத்து விட்டு தான் மற்ற வேலைகளை கவனிப்பாராம். அது தானே நண்பா இந்த வயதில் அவர்களுக்கு வேண்டும்? நாம் அவர்களோடு பேசுகிறோம், அவர்களிடம் கருத்து கேட்கிறோம் என்கிற எண்ணமே அவர்களை பல காலம் வாழ வைக்கும் என்பார். எதற்கு இதை சொல்கிறேன் என்றால் நாம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டோம், நமக்கு தெரியாதது அவர்களுக்கு என்ன தெரிந்து விட போகிறது என்கிற மனநிலையே நம்மை பெரியவர்களிடம் இருந்து தள்ளி வைக்கிறது. நமக்கு ஒரு பிரச்னை என்று வரும் போது யாரிடம் போய் சொல்வது என்று தெரியாமல் தவறான முடிவுக்கு இட்டு செல்கிறது.

நான் எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. என்னுடைய நண்பர்கள் என் பிராஜக்ட்டில் வேலை செய்யும் பலரும் தங்கள் அக்காள், தங்கைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் நிறைய செய்கிறார்கள். அம்மாதிரியான ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு ஒரு பொறுப்பு வந்து அதை அவர்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மேலே நடந்துள்ள சம்பவங்கள் பெரும்பாலும் இம்மாதிரி எந்த கவலையும் இல்லாதவர்களிடம் தான் அதிகம் நடப்பது போல் தெரிகிறது.

சமீபத்திய செய்தி ஒன்றில் தெரிந்து கொண்டது. 2012 ல் சென்னை போலீசாரிடம் வந்த குடும்பம் சார்ந்த பிரச்சனைகளில் 50 % மேல் IT யில் பணிபுரிபவர்களிடம் இருந்து தானாம். அதில் பாதிக்கும் மேல் உப்பு சப்பு இல்லாத விவகாரங்கள். என் கணவர் திருமணத்திற்கு முன் வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட வெளியில் அழைத்து செல்வார். இப்போது அது போல் செய்வதில்லை என்பது போன்ற புகார்கள். தனியே சுயமாக வாழ்வது, வாழ கற்றுகொள்வது நல்ல விஷயம் என்றாலும், அதற்கும் ஒரு மன பக்குவம் வேண்டும். அது வரும் வரை அல்லது ஒரு சிறிய காலத்திற்காவது பெரியோர்களுடன் சேர்ந்து இருப்பது பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வழி வகுக்கும். இல்லாவிட்டால் ஒரு சிறிய சந்தோசத்திற்காக ஓட்டல் செல்வது போய் அது அழைத்துக்கொண்டு போகாதது ஒரு மிக பெரிய குற்றமாக பார்க்கப்படுகின்றது.

எனக்கு தெரிந்த குடும்பத்தில் ஒருவரின் மகன் IT யில் நல்லதொரு வேலையில்  அமெரிக்காவில் இருந்தார். திருமணத்திற்கு முன்பே லோன் போட்டு சென்னையில் ஒரு மிக பெரிய அபார்ட்மெண்ட் வாங்கினர். வாங்கியது தவறில்லை. அதை முற்றிலும் பர்னிஷ் செய்து வாங்கினார். அவருக்கே தெரியும் அவர் அப்போது ஒன்றும் இந்தியா திரும்ப போவதில்லை என்று. இருந்தும் பர்னிஷ் செய்த வீட்டை வாடகைக்கு தான் விட்டார். அதுவும் அவர் பிராஜக்ட்டில் இந்தியாவில் வேலை பார்த்தவர்களுக்கு. பிறகென்ன வாடகை கூட மார்க்கெட் நிலவரத்தில் பாதி  தான் கிடைத்தது. இதையெல்லாம் அவருடைய விவசாய தந்தை என்னிடம் சொல்லி ஒரு முறை வருந்தினார். அதை சொல்லி கூடவே இதையும் சொன்னார். ஆரம்பத்திலேர்ந்தே அவன் அதிகமா சம்பாதிக்கிறார், சம்பாதிக்கிறார் என்று யாரும் அவனை கேள்வி கேட்பதில்லை. அதன் பலன் தான் இன்று நாங்கள் அனுபவிக்கிறோம் என்று.

வேலைக்கு சேர்ந்த அடுத்த வாரத்திலேயே கிரெடிட் கார்ட் அப்ளிகேஷன், ஓரிரு மாதத்தில் கார் லோன், ஓரிரு வருடத்தில் ஹவுசிங் லோன். இது தான் இவர்களின் பிரச்னை. எல்லாவற்றிலும் அவசரம். ஏன் வேறு யாருமே தற்கொலை செய்து கொள்வதில்லையா என கேட்டால், அவர்களுக்கு ஆயிரம்  ஆயிரம் பிரச்சனைகள் இருந்திருக்கும். நல்லா சம்பாதிக்கும் இவர்கள் ஏன் இம்மாதிரி பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது தான் என் ஆதங்கம்.

அடுத்ததாக ஈகோ, ஈகோ, ஈகோ.அமெரிக்காவில் என் நண்பன் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்து கொள்கிறான். அவ்வப்போது வீட்டில் இருந்தபடியே ப்ரீ லான்சராக பணிபுரிந்து அவருடைய பாக்கெட் மணியை தேற்றி கொள்கிறார். அவருடைய மனைவி தான் மெயின் source of income. ஆனால் அதை நண்பர் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சகஜமாக எல்லோரிடமும் கூறுவார். ஆனால், நம்மூரில் கணவனும் மனைவியும் வேலைக்கு சென்றால் யார் அதிகம் சம்பாதித்தாலும் பிரச்னை தான். நம் டீம் மேட் பெண்களுடன் நாம் வெளியே லஞ்ச் போய் வரலாம். ஆனால் அதுவே நம் மனைவி அவர்கள் டீமுடன் போய் வந்தால் நமக்கு சற்று இடிக்கும்.

எது எப்படியோ, குழந்தையற்ற பெற்றோர்களில் யாரரவது தற்கொலை செய்து கொண்டால் அது அவர்களுடன் முடிந்து விடுகிறது. ஆனால், சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டு விட்டு இவர்கள் எப்படி தான் அந்த முடிவிற்கு செல்கிறார்களோ தெரியவில்லை. பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட IT வாலிபருக்கு 1 1/2 வயதில் ஒரு குழந்தை உள்ளதாம். அவர் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமை தாங்காமல் தான் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வைத்துள்ளாராம்.

யார் மனதையும் புண்படுத்த இதை நான் எழுதவில்லை. முதல் பாராவில் கண்ட செய்திகளால் என் மனது புன்பட்டதின் வெளிபாடே இது. மேலே கூறியவை அனைத்தும் என் சொந்த கருத்தாகும்.

share on:facebook

Thursday, April 11, 2013

தமிழ் ஈழம்: அறுவடைக்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகள்


போர் என்று ஒன்று நடந்தால் அதில் பொது மக்கள் பலியாவது சகஜம் தான் என்றவரும், அயல் நாட்டு விசயத்தில் ஓரளவு தான் தலை இட முடியும் என்று சொன்னவர்களும் தான் இன்று ஈழ பிரச்சனையில் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கிறார்கள்.

ஈழப்  பிரச்னை பற்றி ஆரம்பம் முதல் நன்கு அறிந்தவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும் இவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும், தமிழ் ஈழ பிரச்சனையில் அரசியல் லாபம் கருதி இவர்கள் அவ்வப்போது எடுத்த மாறுபட்ட நிலை பற்றியும்.

1980 களின் துவக்கத்தில் ஜெயவர்த்தனா ஆட்சியில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது (கவனிக்கவும்: போராளிகள் அல்ல. அனைவரும் அப்பாவி தமிழர்கள்) தமிழகம் எங்கும் மனித சங்கிலிகளும் ஈழத் தமிழர்களுக்கான அதரவுக்குரலும் ஓங்கி ஒலித்த நேரம். ஏன், இதே காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இந்தியாவின் பிரதமருமான, இந்திரா காந்தி அம்மையார் இலங்கையில் நடப்பது 'Genocide' ஒரு இனப்படுகொலை என பகிரங்கமாக அறிவித்தார்.

அதற்க்கு சற்றும் சளைக்காமல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும்  அரசு சார்பில் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தமிழகத்தில் பொது மக்களின் பேராதரவோடு நடத்தி  வந்தார். நான் அப்போது பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். ஓரளவு நன்றாக வரைய கூடியவன். பாட நேரத்தின் போதே ஒரு நோட்டு புத்தகத்தில் இலங்கையின் வரைபடத்தை வரைந்து, அதற்க்கு பக்கத்தில் ஜெயவர்த்தனா தன் கோர பற்களால் தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது போலவும் அதை பார்த்து இந்திய தாய் கண்ணீர் சிந்துவது போலவும் வரைந்து எல்லோரிடமும் காண்பித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்போதே அந்த வயதிலேயே இலங்கை தமிழர்கள் பால் கவலையும் அவர்களுக்கான தார்மீக அதரவு மனநிலையும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி தமிழகம் முழுதும் நிலவியது. அதை விட முக்கிய காரணம் இப்போது போல் அரசியல் அந்த காலத்தில் அவ்வளவு நாற்றம் பிடித்ததாக இருந்ததில்லை.

ஏதோ ஒரு வகையில் (காரணங்களை எழுதினால் அது ஒரு பதிவு போல் நீண்டு விடும்) அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆருக்கு விடுதலை புலிகளையும், தம்பி பிரபாகரனையும் பிடித்து போக அதே காரணத்தினாலும், அரசியலில் எதிர் எதிராக இருந்த காரணத்தாலும் (நாற்பதாண்டு நண்பர் என்ற வசனமெல்லாம்  எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு எழுதியது தான்) கலைஞர் சீறி சபாரத்தினம் குழுவை ஆதரிக்க நேர்ந்தது. ஒரு காலத்தில் சீறி சபாரத்தினம் விடுதலை புலிகளால் கொல்லப்பட தமிழகம் எங்கும் 'கொலை கார பாவி  பிரபாகரா...' என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. அதுவும் ஓர் அரசியல் தான்.

அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களின் நல்வாழ்க்கை இந்திய பூலோக நலன் (காக்கப்பட) சார்ந்தும், தமிழக அரசியல் கட்சிகளின் வோட்டு அரசியலிலும் கலந்து அல்லோகல்ல பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு பலமிக்க நாடாக வந்து பிற்காலத்தில் பாகிஸ்தான் போல் இந்தியாவிற்கு தொல்லையாகி விட கூடாது என்பதில் அன்றைய இந்திய அரசுக்கு கவலை. அதற்க்கு ஒரே வழி அங்கு சுய மரியாதைக்காக போராடி வரும் குழுக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலம் இலங்கை அரசை பலவீனமாக்குவது மட்டுமே இந்தியாவிற்கு நல்லது என்ற 'உயர்ந்த' நோக்கோடு இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் இலங்கையில் சிறிய அளவில் போராடி வந்த குழுக்களை இந்தியா அழைத்து வந்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வைத்து ஆயுத பயிற்சியை பகிரங்கமாக கொடுத்தது.

ஆரம்பத்தில் விடுதலை புலிகள் தவிர்த்து மற்ற அனைத்து போராளிகளும் இந்திய அரசின் உதவிகளையும், ஆயுத பயிற்சியையும் இந்தியாவிலும் தமிழகத்திலும் பெற்று வந்தனர். கடைசியாக தான் விடுதலை புலிகள் அமைப்பும் சேர்ந்து கொண்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் போராளிகள் ராணுவ சீருடைகளில், 'ஜீப்' வாகனங்களில் சீறி சென்றதெல்லாம் நான் சிறுவனாக இருந்த போது பார்த்ததுண்டு. அப்போது அவர்கள் மீது தமிழகத்தில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ போராளி குழுக்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுதலை புலிகள் என்றே தமிழகத்தில் அழைத்து வந்தனர். ஒரு வேலை வி.பு. என்ற பெயர் பொருத்தமாகவும், ஈர்பதாகவும் இருந்திருக்கலாம்.

இதற்கிடையே அன்றைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலை புலிகளை அழைத்து அவர்களின் போராட்டத்திற்கு 3 கோடி ரூபாய் ரொக்க பணத்தை எல்லோரும் அறிய நன்கொடையாக  வழங்கினார். அதற்கும் அப்போது எதிர்ப்பு கிளம்பியது. ஒரு கட்டத்தில் ஒரு முதல்வர் என்ற முறையில் இதை கொடுக்க எனக்கு உரிமை இல்லை என்றால் அதை என் கட்சியின் சார்பாக கொடுக்கிறேன் என்று சொல்லி தைரியமாக அறிவித்தார். பெரும் நிதிப் பற்றக்குறையில் சிக்கி தவித்த வி.பு. களுக்கு அன்றைய கால கட்டத்தில் 3 கோடி ரூபாய் மிக பெரிய பணமாக பட்டது. அதன் காரணமாகவே கடைசி வரையிலும் வி.பு. மத்தியிலும் ஈழ தமிழர்கள் மத்தியிலும் எம்.ஜி.ஆருக்கு மிக பெரிய மரியாதையும் மதிப்பும் இன்றளவும் இருந்து வருகிறது.

இப்படி கூறுவதால் எம்.ஜி.ஆர் மட்டும் தான் ஈழ மக்களுக்கு உதவி செய்தார் என்றில்லை. அதற்க்கு சற்றும் சளைக்காமல் கலைஞர் அவர்களும் பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார். ஆனால் இந்த பாலாய் போன அரசியல் காரணமாக ஒவ்வொரு கால கட்டத்தில் ஈழ மக்களுக்கு உதவி செய்ததற்கு இணையாக அவர்களுக்கு கேடு வரும் போது அதை தடுக்க முடியாமலும் அல்லது அவர்களுடைய நலன்களுக்கு எதிராகவும் அவர்களுடைய அரசியல் செயல் பாடுகள் அமைந்தது தான் பெரும் கொடுமை.

இன்னும் நிறைய இருக்கு....


share on:facebook