Saturday, April 2, 2011

சொர்க்கமே என்றாலும்...தரணி போற்றும் தஞ்சை தொடர்


தஞ்சையில் உள்ளூர் சிறப்புகள் பல உண்டு. போன வாரம் அதில் சிலவற்றை  குறிப்பிட்டு இருந்தேன். இந்த வாரம் நான்  சொல்லப்போவது  ராமலிங்கம் டீ  கடை  மற்றும் குனகுடிதாசன் சர்பத் பற்றி.

தஞ்சை மேரீஸ் கார்னரில் ராமலிங்கம் டீ கடை மிகவும் பிரபலம். ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் சிறிய இடத்தில் டீ போடுவது போன்றவைகளை வைத்துக்கொண்டு பொதுவாக பிளாட்பாரத்தை அடைத்துக்கொண்டு தான் இந்த டீ கடை பல வருடங்களாக செயல்பட்டது(கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடை மூடப்பட்டதாக கேள்வி). இங்கு ஒரு முறை நீங்கள் டீ சாபிட்டீர்கள் என்றால் பிறகு வேறு எங்கும் டீ சாப்பிட உங்களுக்கு தோணாது. டீ கிளாசில் நுரையை தவிர்த்து பார்த்தால் அரை கிளாஸ் தான் டீ இருக்கும். ஆனால் சுட சுட நன்கு நிறை கட்டிய பாலில் தயாரிக்கப்பட்ட அந்த டீயை நாலு மடக்கு சாப்பிட்டால் போதும். நாள் முழுதும் டீயின் சுவை உங்கள் நாவிலே ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த சுவைக்கு காரணம், தண்ணீர் கலக்காத பாலை  நாள் முழுதும் நிறை கட்டி (பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைத்துக்கொண்டே இருக்கும் போது அதன் மொத்த அளவு குறைந்து விடும். ஆனால் மீதமுள்ள  பால் மிகவும் ஸ்ட்ராங்காக ஆகி விடும்) அதை ஒரு ஸ்பூனோ  இரண்டு ஸ்பூனோ உங்கள் டீயில் கலப்பதுதான்.  இருபத்து நாலு மணி நேரமும் கடை எப்போதும் கூட்டமாகவே இருக்கும். அதிலும் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது அங்கு ஒரு டீ அடித்து விட்டு கிளம்பினால்...சும்மா சுகமா இருக்கும்.

அடுத்ததாக குணங்குடி தாசன் சர்பத்: தஞ்சை கீழவாசலில் குணங்குடி தாசன் சர்பத் ஸ்டால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உண்டு. இங்கு  அவர்களே சர்பத்துக்கான மூலப் பொருளை தயார் செய்கிறார்கள். கடையின்  முன்பு சில்லறை வியாபாரமாக கோடை காலங்களில் சர்பத் வியாபாரம்  கொடிகட்டி பறக்கும். வரிசையாக ஒரு 20 - 30 கிளாசுகளை வைத்து  ஒன்றன்பின் ஒன்றாக ஒரு 10 நிமிடத்தில் சர்பத் பானத்திற்கு தேவையான  ஐஸ் போடுவதில்  ஆரம்பித்து, பின் பால் ஊற்றி, சர்பத் மிக்ஸ் கலந்து,  பாதாம் சேர்ப்பது வரை அதை பார்த்துக்கொண்டே கூட்டம் பொறுமையாக  தங்கள் சர்பத் கிளாசுக்காக காத்திருக்கும். சர்பத் ரெடியான அடுத்த நொடி  எல்லா சர்பத்களும் விற்று தீர்ந்து விடும். நல்ல வெயில் காலத்தில் சில்லென்று அவர்கள் தரும் சர்பத்தை நாளெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே  இருக்கலாம். விலையும் அதிகம் கிடையாது. இங்கிருந்து சர்பத் பாட்டில்களை  வாங்கி வந்து நம் வீட்டிலேயே நாம் சர்பத் செய்து கொள்ளலாம்.  அவ்வளவு  நன்றாக இருக்கும். அடுத்த முறை நீங்கள் தஞ்சை சென்றால் தஞ்சை பழைய  பேருந்து நிலையம் அருகில் உள்ள கீழவாசல் சென்று குணங்குடி தாசன் சர்பத்தை பருகி பாருங்கள்.   

சிறப்புகள் தொடரும்... 

share on:facebook

3 comments:

அமைதி அப்பா said...

//இங்கு ஒரு முறை நீங்கள் டீ சாபிட்டீர்கள் என்றால் பிறகு வேறு எங்கும் டீ சாப்பிட உங்களுக்கு தோணாது//

நீங்கள் டீ யைப்பற்றி இவ்வளவு அழகாக எழுதியதிலிருந்து, உங்களுக்கு டீ பிடிக்கும் என்பது புரிகிறது.

என்ன, சென்னையிலும் பல கடைகள் உள்ளன. ஒரு தரம் டீ குடித்தால் வாழ்க்கையில் மீண்டும் டீ குடிக்கவே தோணாது!

நல்ல தொடர். இன்னும், நிறைய சின்ன சின்ன விஷயங்களை எங்களுக்கு அடையாளம் காட்டுங்கள்.
நன்றி.

CS. Mohan Kumar said...

Do not know these places. Will try to visit in next visit.

ஆதி மனிதன் said...

@அமைதி அப்பா
//என்ன, சென்னையிலும் பல கடைகள் உள்ளன. ஒரு தரம் டீ குடித்தால் வாழ்க்கையில் மீண்டும் டீ குடிக்கவே தோணாது!//

உண்மை. பல தடவை நானும் இதையே உணர்திருக்கிறேன்.

@மோகன் குமார்
//Do not know these places. Will try to visit in next visit. //

நன்றி. போய்விட்டு வந்து சர்பத் எப்படி இருந்தது என கூறுங்கள்.

Post a Comment