Monday, April 30, 2012

பள்ளிகளை இழுத்து மூடும் உரிமை பெற்ற பெற்றோர்கள் - அமெரிக்காவின் அசத்தல் சட்டம்.


"Parent Trigger Law" - அமெரிக்காவில் சில மாகாணங்களில் மட்டும் இச் சட்டம் நடை முறையில் உள்ளது. இதனால் என்ன பயன் என்கிறீர்களா? இச் சட்டத்தின் மூலம் ஒரு பள்ளி சரிவர இயங்கவில்லை என அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் நினைத்தால் அப் பள்ளியையே இழுத்து மூடி விட முடியும். அது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட ஆசிரியர், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என யாரை வேண்டுமானாலும் பெற்றோர்கள் முடிவு செய்தால் வோட்டெடுப்பின் மூலம் அவர்களை மாற்றலாம். அது மட்டுமில்லை. அப்பள்ளி எப்படி இயங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் நினைத்தால் அதையும் அவர்கள் அவர்கள் மாற்றலாம்.


அமெரிக்காவை பொறுத்தவரை பெரும்பாலானோர் அரசு (பப்ளிக்) பள்ளிகளில் தான் படிப்பார்கள். தனியார் பள்ளிகள் மிகவும் குறைவு. அது தவிர தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமானால் பெருமளவு பணம் செலவு செய்ய வேண்டும். ஆனால் அரசு பள்ளிகள் அப்படி இல்லை. கிண்டர் கார்டன் முதல் உயர்நிலை பள்ளி வரை, அதாவது கல்லூரி செல்லும் வரை ஒரு பைசா (சென்ட்) கட்டனமாகவோ, புத்தகம், ஸ்பெஷல் பீஸ் அந்த பீஸ் இந்த பீஸ் என எந்த ஒரு கட்டணமும் கிடையாது. புத்தகங்கள் கூட பள்ளியிலேயே கொடுத்து விடுவார்கள். இது எல்லாம் எப்படி சத்தியம் என நீங்கள் கேட்கலாம்.

அதற்க்கு காரணம், நம்மூர்ரில் ஒரு நகராட்சி பள்ளி இருந்தால் அதில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ஏதோ அவர்கள் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சொல்லி கொடுப்பதாகவே நினைப்பு. அரசாங்கம் தானே நமக்கு சம்பளம் கொடுக்கிறது? மாணவர்களா கொடுகிறார்கள் என்ற அவர்களின் எண்ணம். அதே போல், பொது மக்களும் அது ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளி. அங்கு தரமான கல்வி கிடைக்காது என்று பல காரணங்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கிய காரணம், நம் வரி காசில் தான் ஒரு நகராட்சி நடக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். அதே போல் நகராட்சி உறுபினர்கள் அதன் தலைவர் என எல்லோரும் அவரவர் சார்ந்த கட்சியின் பலத்தாலேயே பதவிக்கு வருகிறார்கள். இதற்க்கு ஒரே தீர்வு குறைந்த பட்சம் உள்ளாட்சியிலாவது மக்கள் சுயேச்சையாக போட்டி இடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல், இங்கு எல்லோரும் பப்ளிக் பள்ளியிலேயே படித்து வருவதால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் இது நான் படித்த பள்ளி. இங்கு என் குழந்தையும் நன்றாக படித்து முன்னேறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளார்கள். சமீபத்தில் தமிழகத்தில் (மதுரையில் என நினைக்கிறேன்) ஒரு மாவட்ட கலெக்டர் தன குழந்தையை நகராட்சி பள்ளியில் சேர்த்ததாக படித்தேன். என்ன ஒரு ஆழமான, பரந்த நோக்கம். தன குழந்தை ஒரு அரசு பள்ளியில் படித்தால் அப்பள்ளியில் பணியாற்றும் அனைவரும் ஒழுங்காக வேலை பார்ப்பார்கள். மற்ற பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்ப்பார்கள் என நினைத்து தான் அந்த முடிவிற்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.

அந்த மாதிரியான ஒரு சூழல் தான் அமெரிக்காவில் பெரும்பாலான பள்ளிகளில் உள்ளது. அதனால் தான் அனைத்து அரசு பள்ளிகளும் இங்கு நன்கு இயங்குகின்றன.

அதே போல் ஒரு நிலைமை நம் நாட்டிலும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படும். எப்போது? அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அவர்கள் வாங்கும் சம்பளம் மக்கள் கொடுக்கும் வரிப் பணம் என்பதை உணரும்போது. நல்லவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் போது. நல்லவர்கள் அரசியலுக்கு வரும் போது. வந்தபின்பும், வெற்றி பெற்ற பின்பும் நல்லவர்களாகவே இருக்கும் போது.

share on:facebook

Thursday, April 26, 2012

அமெரிக்க குப்பைகள்


இன்று உலகத்திலேயே அதிக குப்பைகளை உருவாக்குபவர்கள் அமெரிக்கர்கள் தான். நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக 3-4 கிலோ குப்பைகளை உருவாக்குகிறார்கள். ஆண்டொன்றுக்கு ஒவ்வொருவரும் 100 டன் குப்பைகளை உருவாக்குவதாக கணித்துள்ளார்கள். இது மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட அளவு. 

இவ்வாறு பெருகிக் கொண்டிருக்கும் குப்பைகள் அனைத்தும் பெரிய பெரிய மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கில் குவிக்கப் பட்டு மக்கி வைக்கப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால், பல குடியிருப்புகள், நகரங்கள் இந்த குப்பை மேட்டின் மீதுதான் எழுப்பப் பட்டுள்ளது. அமெரிக்கர்களின் குப்பைகளில் அதிகம் இடம் பிடிப்பது உணவு/கோக் போன்ற கேன்கள் தான். அதற்க்கு அடுத்த படியாக உணவு பொட்டலங்களின் மிச்சங்கள். அதே போல் ஒவ்வொரு பொருளும் இங்கு பாக் செய்யப்பட்டே விற்கப் படுகின்றன. ஒரு சாதாரண கேமரா வாங்கினால் அதனுடன் வரும் பாக்கிங் மட்டும் பல டப்பாக்கள் சேரும். இது எல்லாமே குப்பைகள் தான். இம்மாதிரி பாகிங்களுக்கே அதன் தயாரிப்பாளர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். 

குப்பைகளை பற்றிய ஆராய்ச்சியை Garbology என சொல்கிறார்கள். Edward Humes என்பவர் தன்னுடைய Our dirty love affair with trash என்கிற தன் நூலில், அமெரிக்காவில் குப்பைகள் எப்படி உருவாக்கப் படுகிறது, அவை பிறகு எவ்வாறு கையாளப் படுகிறது என்பதை அழகாக எடுத்துக் கூறியுள்ளார். அவரின் கணக்குப் படி லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அமைந்துள்ள மலை அடிவாரங்களில் மட்டும் நூற்றுக்க் கணக்கான மில்லியன் டன் குப்பைகள் புதைக்கப்பட்டுள்ளன. இதனால் உருவாகும் மீதேன் வாய்வினால் பல கெடுதல்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளார். அது மட்டுமில்லாமல், மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் பொருட்கள் இங்குள்ள பசிபிக் கடலில் கலந்து போய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக முப்பது சதவிகிதத்திற்கும் மேலான குப்பைகள் முறையாக அழிக்கப் படுவதில்லை. இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைகளே. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தான் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு வந்தது. முதன் முதலில் பிளாஸ்டிக்கை வைத்து லாண்டரி பைகள் தான் உருவாக்கப் பட்டது. நாளடைவில் எல்லாவற்றுக்கும் பிளாஸ்டிக் பை உபயோகத்திற்கு வந்து தற்போது உலக சுற்று புற சூழலையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.


சரி, இந்த அமெரிக்க குப்பைகளால் யாருக்கு லாபம் என்கிறீர்களா? சைனாவுக்கு தான். சைனாவின் முதல் பெண் மில்லியனர் 49 வயதான Zhang Yin  அவர்களின் தொழிலே அமெரிக்காவிலிருந்து குப்பைகளை வாங்கி சீனாவில் அதை ரீ சைக்ளிங் செய்து அதையே மீண்டும் கார்ட் போர்ட், பாக்கிங் பேப்பர் என்று தயாரித்து அதை மீண்டும் அமெரிக்கவிற்கே விற்பது தான் அவரின் Nine Dragons Paper கம்பெனியின் பிசினஸே. 

கடைசியாக அமெரிக்காவில் குப்பைகள் குறைந்து போனால் அப்போதே அங்கு பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது என்பதற்கான அறிகுறி. ஆம், மக்கள் பொருட்களை வாங்கினால் தானே குப்பைகள் பெருகும். வாங்கும் திறன் குறைந்து போனால் குப்பைகளும் குறைந்து தானே போகும்.

நம்ம ஊர் செய்தி: எனக்கு தெரிந்து சென்னையில் நான் பார்த்த பல குளங்கள் சில காலங்களில் குப்பைகள் கொட்டப் பட்டு குப்பை மேடான பிறகு அவை ஒன்று பார்க்காகவோ, அப்பார்ட்மென்ட்டாகவோ மாறி போனதை பார்த்திருக்கிறேன்.      

share on:facebook

Wednesday, April 25, 2012

யூனிவர்சல் ஸ்டுடியோஸ் ஒரு ஜாலி டூர் - நீங்களும் வாங்க...


கலிபோர்னியா எப்படி IT கம்பெனிகளுக்கு பிரபலமானதோ அதே போல் பொழுது போக்கு அம்சங்களுக்கும் பிரபலம். குறிப்பாக லாஸ் ஏஞ்சலஸில் அமைந்துள்ள டிஸ்னி லான்ட் மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்றவைகள் வாழ்க்கையில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.

யூனிவர்சல் ஸ்டுடியோஸ் - பெரும்பாலானோர் தெரிந்துவைத்திருப்பார்கள். இந்தியாவில் பாலிவுட், கோலிவுட் எல்லாம் அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டை குறிக்கும் விதமாகவே பெயர் வைத்து அழைக்கப் படுகிறது. அப்படிப்பட்ட ஹாலிவுட்டில் தான் யூனிவர்சல் ஸ்டுடியோவும் அமைந்துள்ளது. இந்த ஸ்டுடியோவை முழுதும் சுற்றி பார்க்க குறைந்தது ஒரு வாரம் ஆகும். 

ஸ்டுடியோவில் உள்ள முக்கியமான பகுதிகளை மட்டும் இப்போது  பார்க்கலாம். ஸ்டுடியோ முழுதையும் ஓரளவு சுற்றி பார்க்க வசதியாக 'யூனிவர்சல் டூர்' என்று ஒரு பெரிய ட்ராமில் உட்கார வைத்து சுற்றி காண்பிக்கிறார்கள். இந்த பாதையில் ஸ்டுடியோவில் நிரந்தரமாக செட்-அப் செய்யப்பட்ட குடியிருப்பு பகுதிகள், மற்ற வகையான கட்டடங்கள் போன்ற எல்லாம் முகப்பு மட்டும் வடிவமைத்து இருப்பார்கள். பின் பக்கம் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. தேவைக்கு ஏற்றாற்போல் வண்ணம் மற்றும் அமைப்பை மாற்றிக் கொள்வார்கள் போலும். அது தவிர பிரபலாமான ஆங்கிலப் படங்கள் தயாரித்த போது போட்ட செட்களும் அங்கு பார்க்கலாம். இதை தவிர ரெக்கார்டிங் தியேட்டர் மற்ற திரைப்பட தயாரிப்பு சம்பந்தப் பட்ட கட்டிடங்களை வரிசையாக வெளியில் இருந்து பார்க்கலாம்.  

இதே 'டூரில்', ஹை-டெக் கார் நடனம் ஒன்றை பார்க்கலாம். பார்க் செய்யப்பட்டது போல் முதலில் தெரியும் இரண்டு கார்கள் திடீரென்று உயரே எழும்பி இடையிடையே கொழுந்து விட்டு எழும்பும் தீ சுவாளைகளுக்கு மத்தியில் நடனமாடும். அடுத்த சிறிது தூரத்தில், டிராம் நிறுத்தப் படும். திடீரென்று ஏற்பட்ட வானிலை மாற்றத்தின் காரணமாக மழை வந்தாலும் வரலாம். அதலால், பயணிகள் சற்று நனைய வாய்ப்புண்டு என்ற அறிவிப்பை தொடர்ந்து, வானில் மின்னலும், இடியோசையும் கேட்கும். ஒ..மழைதான் வந்துவிட்டதோ என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று சுற்றிலும் உள்ள பழைய கால கட்டடங்களிலிருந்து வெள்ளம் கதவுகளை பிளந்து கொண்டு பெருக்கெடுத்து ஓடி வரும். அதே போல் வானத்திலிருந்து மழை பொத்துக் கொண்டு ஊற்றும். எல்லாமே அர்டிபிசியல். அடுத்த சில நிமிடங்களில் நம் வண்டி நகரும் முன் அந்த இடமே மழை பொழிந்தது போல் தெரியாத அளவிற்கு பழைய நிலைமைக்கு காட்சி அளிக்கும். அந்த அளவிற்கு பார்த்து பார்த்து செட் அப் செய்திருப்பார்கள்.

அடுத்து ஒரு சிறிய ஓடையை நம் வண்டி கடந்து செல்லும். அப்போது 'ஜாவ்ஸ்' திரைப் படத்தில் வந்த 'சீன்' போல் திடீரென்று ஒரு சிறிய ஷார்க் தண்ணீரில் இழுந்து வெளியே வந்து நம்மை பயமுறுத்தும். இப்படி ஒவ்வொன்றாக நம்மை வியப்பிற்கும், பிரம்மிப்பிற்க்கும் அழைத்துச் செல்லும். இவை அனைத்தையும் நம்முடன் வரும் அறிவிப்பாளர் நமக்கு விரிவாக வர்ணனை கொடுத்துக் கொண்டே வருவார். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கு என தனி தனியாக டிராம் வண்டிகள் உண்டு. நாம் பார்த்து ஏறி உட்கார வேண்டும்.

இதை தொடர்ந்து காணப் போகும் காட்சி தான் தற்போது மிக பிரபலம். கடந்த பல வருடங்களாக வைத்திருந்த ஒரு 'தீம்மை' தற்போது உள்ள தொழில் நுட்ப வசதியுடன் மாற்றி அமைத்து மிகவும் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். அது...அடுத்த பதிவில்.

யூனிவர்சல் ஸ்டுடியோ பக்கம் வந்தால் நம்ம வீட்டுக்கும் வாங்க. பக்கத்தில் தான் நான் வசிக்கிறேன்.

share on:facebook

Thursday, April 19, 2012

இலங்கை சரக்கும், இந்திய எம்.பி க்களும் - ஒன்னுமே புரியல


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களின் மறு புனரமைப்பு வசதிகளை பார்வையிட சென்ற இந்திய எம்.பி க்கள் நேற்று  காங்கேசன் துறைமுகம் சென்றனர். இதில் என்ன என்று கேட்கிறீர்களா? 

அங்கு சென்று போரினால் பாதிக்கப் பட்ட மக்களை பற்றி யாரும்  பேசவில்லை. அதற்க்கு பதிலாக காங்கேசன் துறை முகத்திலிருந்து  இந்தியாவிற்கு  சரக்குகளை எவ்வாறு மிக சிறந்த முறையில் ஏற்றி  அனுப்புவது இந்தியாவிலிருந்து கப்பல்கள் மூலம் வரும் சரக்குககளை எவ்வாறு சிறப்பாக பரிமாற்றம் செய்வது என்பதை விவாதித்ததாக செய்திகள்  வெளியாகி  உள்ளன.

அட பாவிகளா? நீங்கள் தமிழர்களின் மறு புனரப்பை பற்றி பார்வையிட இலங்கை சென்றீர்களா? இல்லை வியாபாரம் பேச சென்றீர்களா? ஒரு குறிப்பிட்ட இனமே அழிந்து போய் அல்லது அழியும் நிலையில் உள்ள போது, இழவு வீட்டில் எதையோ பிடுங்கியது போல், அங்கு சென்று  அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்க அந் நாட்டு அரசுடன் பேசுவதற்கு  பதிலாக அங்கு சென்று இந்திய கடையை விரித்துள்ளார்கள்.

எப்படியோ, நம்மூர் கோமாளி கட்சிகள் வழக்கம் போல் இலங்கை செல்லும்  எம்.பி க்கள் குழுவை புறக்கணித்து தங்கள் சுய ரூபத்தை மேலும் ஒரு முறை  பறை சாற்றி உள்ளன.  சரி, தேசபக்தி பேசும் பி.ஜே.பியும், கம்யூனிசம் பேசும்   காம்ரேட்களும் அங்கு சென்று வீராவேசமாக ஏதாவது பேசுவார்கள் என்றால், ஏதோ சுற்றுலா வந்த பயணிகள் போல் கும்பல் கும்பலாக எல்லா  இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு ஒன்றுமே பெரிதாக வாய்  திறக்கவில்லை. ` 

தொலைக்காட்சிகளில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே இந்திய குழுவை  காண்பித்தார்கள். அதிலும் அங்குள்ள தமிழர்களை அவர்கள் சந்தித்த முழு  விபரத்தையோ அல்லது குழுவின் பேட்டியையோ ஒன்றை கூட காட்டவில்லை.  அப்படியென்றால் போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆன பிறகும் கூட அங்குள்ள நிலைமையை தெரிந்து கொள்ளுங்கள்.     

கடைசியாக என்ன நடக்கும் என எல்லோருக்கும் அறிந்ததே. ஊருக்கு கிளம்பும் முன் ராஜபக்சே கொடுக்கும் விருந்தை வயிறு புடைக்க தின்று விட்டு, பிறகு சிரித்துக் கொண்டு எல்லோரும் அவரிடம் கை குழுக்குவதை   போல் ஒரு போஸ் கொடுத்து விட்டு வந்து விடுவார்கள். நல்ல வேலை  தமிழகத்திலிருந்து  கழக எம்.பி க்கள் யாரும் இலங்கை செல்லவில்லை. இல்லை என்றால், அவர்கள் இங்கு வந்து இறங்கும் முன், ராஜபக்சேவை  நேரில் சந்தித்து  உயிருடன் திரும்பும் அஞ்சா நெஞ்சனே வருக வருக என போஸ்டர் அடித்து ஒட்டி விடுவார்கள்.   

கடந்த முறை திருவாளர் திருமா அவர்கள், ராஜபக்சேவை நேரில்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவன் கழுத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி  விடுவேன் என்று கொக்கரித்தார்.  கடைசியில் அத்தனை பற்களும் தெரியும் படி போடோவுக்கு போஸ் கொடுத்தார். என்னமோ போங்க. இலங்கை செல்லும் யாருமே அங்குள்ள சூழ்நிலையை உணர்ந்ததாக தெரியவில்லை.  ஏதோ சுற்றுலா  செல்வது போல் தான் சென்று வருகிறார்கள். இலங்கையில் தமிழன் இருக்கும் வரை அவனுக்கு அங்கு பிரச்சனைதான்.

share on:facebook

Tuesday, April 17, 2012

நீங்க என்ன புதுசா கண்டு பிடித்தீர்கள் Mr. (நீயா நானா) கோபிநாத் ?


சமீபத்தில் விஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர்களை வைத்து 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை சூர்யா நடத்தினார். அதில் பங்கேற்ற 'நீயா நானா' புகழ் திரு. கோபிநாத் சிறப்பாக விளையாடி பதினாறு லட்சம் வென்றார்.

இடை இடையே திரு. சூர்யா கேட்ட கேள்விகளுக்கு உணர்வு பூர்வமாக பதில் அளித்தார். எல்லாம் நன்றாக தான் போய்கிட்டு இருந்தது. திடீரென்று ஆடியன்சை பார்த்து, இனிமே வெளிநாடுகளுக்கு போய் இன்னொருத்தன் கிட்ட கையேந்தி வேலை செய்யறதை விட்டுட்டு அவங்களை போல் உலகமே பேர் சொல்லும் மாதிரி எதையாவது ஒன்றை (ஒரு ப்ராடக்டை) புதுசா கண்டு பிடிங்கப்பா. அப்பத்தான் இந்தியா முன்னேறும் என்றார். தொடர்ந்து என்னப்பா கண்டு பிடிப்பீங்களா? என்று விடை கிடைக்காத ஒரு கேள்வியும் கேட்டார்.

அவர் IT நண்பர்களை மனதில் வைத்துதான் அதை சொன்னார் என்பதற்கு வேறு விளக்கங்கள் தேவை இல்லை. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. அமெரிக்காவில் IT இல் வேலை பார்ப்பவர்களை பற்றி பலரும் ஒரு குத்தலாக தான் பேசுகிறார்கள். அதற்க்கு காரணம் அவர்களால் அவ்வாறு கண்டம் விட்டு கண்டம் சென்று மிகவும் சொகுசாகவும், மரியாதையாகவும் வாழ வழி இல்லை என்ற பொறமையையை தவிர வேறு ஒன்றும் இல்லை.

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தது போல், அமெரிக்காவிற்கு யாரும் வெத்தலை பாக்கு வைத்து அழைப்பதில்லை. இங்கு வரும் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவில் கஷ்டப்பட்டு படித்து, போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களுக்கு உள்ள தகுதியின் அடிப்படையில் முண்டி அடித்து தான் இங்கு வந்து சேருகிறார்கள். "Career" என்று சொல்வார்களே. அதில் ஒரு மைல் கல்லாகத்தான் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை IT இல் உள்ளவர்கள் கருதுகிறார்கள். பாங்க்கில் வேலை செய்யும் ஊழியர்கள் மானேஜர் போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும் போது பெரும்பாலும் வெளி ஊர்கள் அல்லது மாநிலங்களுக்கு டிரான்ஸ்பர் செய்யப் படுகிறார்கள். அது போல் தான் IT மக்கள் வெளி நாடுகளுக்கு டிரான்ஸ்பர் செய்யப் படுகிறார்கள். இதை எப்படி நம் நாட்டை விட்டுவிட்டு அடுத்தவனுக்கு சேவகம் செய்வதாக பார்க்கிறார்களோ தெரியவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களில் அதிக பட்சம் பத்து/பதினைந்து சதவிகிதம் பேர் கூட அங்கேயே செட்டில் ஆவதில்லை. ஒரு கட்டத்தில் பெரும்பாலானோர் இந்தியா திரும்பி விடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இப்போது தான் நம்மிடையே கணிப்பொறி மற்றும் அது சம்மந்தப் பட்ட அறிவு பெரும்பாலான மக்களிடையே பரவி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நம்மிடையே ஒரு பில் கேட்ஸ்சோ ஸ்டீவ் ஜாப்ஸ்சோ நிச்சயம் உருவாவார்கள். அதற்க்கு இந்த தலைமுறையின் கணணி அறிவு நிச்சயம் அடுத்த தலைமுறையை மேலும் அறிவாளிகளாக்க பயன்படும்.

கடைசியாக நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பார்த்து கோபிநாத் கேட்ட கேள்வியை அவரிடமே நான் கேட்க நினைக்கிறேன்.

ஆமா, 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நீங்களா கண்டுபிடித்த நிகழ்ச்சியா? பல நாடுகளில், மொழிகளில் நடத்தப் பட்ட, நடந்து கொண்டு இருக்கிற நிகழ்ச்சியை தானே நீங்கள் காப்பி அடிக்கிறீர்கள். நீங்க எப்போது இது மாதிரி ஒரு நிகழ்ச்சியை கண்டுபிடித்து உலகம் பூரா உள்ள மற்ற நாட்டு தொலைகாட்சிகள் உங்களை பின்பற்ற வைக்க போகிறீர்கள். சொல்வது எல்லாம் ஈசிதான் சார். அதை நாம செய்து பார்த்தா தான் கஷ்டம் தெரியும்.

இந்தியர்கள் தான் முதன் முதலில் அனைவரும் இலவசமாக பயன்படுத்தும் வகையில் முதன் முதலில் இன்டர்நெட் பேஸ்ட் ஈமெயில் வசதியை கண்டு பிடித்து அதை செயல் படுத்தினார்கள். அது தான் தற்போதுள்ள மைக்ரோ சாப்ட்  'ஹாட் மெயில்'. ஆரம்பித்த சில ஆண்டுகளில் நல்ல விலை கிடைத்தவுடன் அதை மைக்ரோ சாப்ட்டிடம் விற்று விட்டார்கள். நாம ஏற்கனவே கண்டு பிடித்து விட்டோம் சார். இன்னும் நிறைய கண்டு பிடிப்போம்...     

share on:facebook

Sunday, April 15, 2012

அமெரிக்க Step Fathers and Step Mothers


நம்மூரில் சில, மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் சில பெண்கள் தங்கள் துப்பட்டாவை அதன் உண்மையான பயன் பாட்டுக்கு மேல் பயன் படுத்துவார்கள். அதாவது மாரப்பை மறைக்க பயன் படுத்துவதை தாண்டி தங்கள் முகத்தையும் அதனால் மறைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறோம். ஒன்று டூ வீலரில் போகும் போது. மற்றொன்று தங்களுக்கு பிடித்த இனியவருடன் அதே டூ வீலரில் பின்னால் உட்கார்ந்து கொண்டு/கட்டி பிடித்துக் கொண்டு செல்லும் போது தங்களை யாரும் பார்த்து விட கூடாது என்பதற்காக.

இதற்க்கெல்லாம் காரணம் நம்மூர் கலாச்சாரம் பண்பாட்டின் படி திருமணம் ஆகும் முன் இன்னொரு ஆணுடன் சேர்ந்து செல்வதை இன்னமும் நம் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்பதால். அதே நேரம், மேலை நாடுகளில் அவ்வாறான கலாச்சாரம் இல்லை என்பது நம்முடைய பொதுவான கருத்து. அது பெருமளவில் தவறு. கண்ணியமானவர்களும் நல்ல கலாச்சாரமும் உலகெங்கும் பரவி இருக்கிறது. என்ன ஒன்று? நமக்கு தவறாக தெரியும் ஒன்று வேறொரு கலாச்சாரத்தின் படி அவர்களுக்கு சரியாக படும். இது பல காலமாக நாம் கடை பிடித்து வரும் முறைகளினாலும் பழக்க வழக்கத்தினாலும் ஏற்படுவது.  

சரி நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். சமீபத்தில் அமெரிக்காவில் பிரபலமான கால் பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ஒருவர் (இவர் ஏற்கனவே திருமணமானவர்) இன்னொரு பெண்ணுடன் தனியாக தனது காரில் சென்றார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். அதாவது இதுவும் ஒரு காரணமாக கூறப் படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் திருமணமான ஒருவர் வேறொரு பெண்ணுடன் தனியாக செல்வது ஒன்றும் ஒரு பெரிய குற்றமான காரியமாக நமக்கு தெரிவில்லை என்றாலும், அவ்வாறு அவர் செய்திருக்க கூடாது என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்...

திருமணமான இவர், தன் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தனியாக காரில் செல்வது என்பது தன் மனைவிக்கு செய்யும் துரோகம். அதே போல் அவர் தனது அணிக்கும் ஏன் துரோகம் செய்ய மாட்டார் என்பது தான் அணியின் தலைமை குழு தற்போது எழுப்பும் கேள்வி. அமெரிக்காவில் குடும்ப உறவுகள் அவ்வளவு வலுவானது இல்லை என்பது தெரிந்த ஒன்று தான். இருப்பினும் தற்போது அங்கும் குடும்ப உறவுகளை காத்து நெடுநாள் அதே கணவன்-மனைவியுடன் உறவுகளை தொடரவே விரும்புகிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில் பிடிக்காதவருடன் நம்மை போல் காலம் முழுதும் குழந்தைகள், குடும்ப கவுரவம் போன்ற காரணங்களுக்காக அவர்கள் தொடர்ந்து வாழ விரும்புவதில்லை. அதே போல் இங்குள்ள குழந்தைகளும், தங்கள் தந்தையோ, தாயோ வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலையில் புதிதாக வரும் அம்மாவையோ, அப்பாவையோ ஸ்டேப் பாதர், ஸ்டேப் மதர் என மிகவும் ஈஸியாக புது உறவுகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஒன்றி விடுகிறார்கள்.

அதே போல் கணவன்/மனைவி பிரிந்து போன பின் அந்த நிகழ்வையும் அவர்கள் முதலில் சற்று வருத்தமாக இருந்தாலும் பெரும்பாலனோர் மறு மணம் செய்த பின் மை எக்ஸ் ஹஸ்பண்ட/எக்ஸ் வைப் என்று சர்வ சாதாரணமாக அடுத்தவர்களிடம் பேசிக் கொள்வார்கள். அதே சமயம் நீண்ட நாள் கணவன் மனைவியாக இருக்கும் தம்பதிகள், நாங்கள் இருபது வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்கிறோம் எங்களுக்கு திரு'மணம் ஆகி முப்பது வருடங்கள் ஆகின்றன என்பதை பெருமையாக கூறிக் கொள்வார்கள்.

ஒரு முறை என் குழந்தையின் தோழி எங்கள் வீட்டிற்கு வார விடுமுறையில் வந்திருந்தாள். மாலை வீட்டுக்கு கிளம்பும் போது, நான் கொண்டு வந்து விடவா என கேட்டேன். அதற்க்கு அவள், இல்லை நான் எங்கள் அம்மா வீட்டிற்க்கு போகிறேன். என் அப்பா என்னை என் அம்மா வீட்டில் விட்டு விடுவார் என கூறியதை கேட்டு முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் பிறகு தான் என் மகள், 'her parents got separated Dad' என்று புரிய வைத்தாள். இதை விட கொடுமை என்ன வென்றால் இருவரும் அடுத்த அடுத்த தெருவில் தான் பிரிந்து வசிக்கிறார்கள். இப்படி பட்டவர்களை தான் அமெரிக்காவில் சிங்கிள் மாம், சிங்கிள் டாட் என்பார்கள். ஹ்ம்ம்...அமெரிக்கா சில சமயம் 'ஆ'மெரிக்கா தான்.
     

share on:facebook

Thursday, April 5, 2012

அமெரிக்கர்கள் அறிவாளிகளா சோம்பேறிகளா ?


பொதுவாக அமெரிக்கர்கள் மற்றும் மேலை நாட்டவர்களை நாம் அறிவாளிகளாகவே பார்த்து வருகிறோம். வெள்ளை தோல் உள்ளவர்களை எல்லாம் வெள்ளை காரர்கள் (ஆங்கிலேயர்கள்) என்று நாம் நினைத்துக் கொள்வது போல் தான் இதுவும்.

ஆனால், அமெரிக்கா சென்ற சிறு காலத்திலேயே அவர்கள் எல்லாம் அவ்வளவு அறிவாளிகள் இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனாலும் அவர்களால் மட்டும் எப்படி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக ஆக முடிந்தது என்பது தான் என் மிக பெரிய கேள்வி. அதற்க்கான பதில்..

பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் விருப்பம் போலவே கற்கிறார்கள். எதை ஆசை படுகிறார்களோ அதில் மட்டும் தங்கள் கவனத்தை செலுத்தி அத்துறையில் சாதித்து காட்டுகிறார்கள். ஒரு ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் கல்லூரி படிப்பை தொடர்வது ஐம்பது சதவிகிதத்துக்கு குறைவானவர்களே. அதற்க்கு காரணம், ஒன்று வேலை இல்லா திண்டாட்டம் அங்கு மிக குறைவு. மேலும் தங்கள் படிப்பிற்கும் தகுதிக்கும் என்ன வேலை கிடைக்கிறதோ அதையே விரும்பி செய்வார்கள். எதிர்காலம், குழந்தைகள் எதிர்காலம் என்றெல்லாம் அவர்கள் அதிகம் கவலை படுவதில்லை.

இரண்டாவது, யாரும் தங்கள் குழந்தைகளை வறுத்து எடுத்து இதை படி அதை படி என்று கட்டாயப் படுத்துவதில்லை. அப்படி கட்டாயப் படுத்தவும் முடியாது. கல்லூரி விரிவுரையாளராக இருப்பவர் சாதாரண மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என விருப்பப் பட்டு பள்ளியில் வேலை செய்பவரும், நான் ஐந்து ஆண்டுகளாக மூன்றாம் வகுப்புக்கு படம் எடுக்கிறேன் என பெருமையாக சொல்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆசைகள்.

இவை எல்லாவற்றையும் சொல்வதற்கு காரணம், பெரும்பாலான அமெரிக்கர்கள் மிக பெரிய ஆளாக வேண்டும் பெரிய வேலைக்கு செல்ல வேண்டும், மிக பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று கூட எண்ணுவதில்லை. இருந்தும் எல்லாவற்றிலும் அந்நாடு முன்னேறியதற்கு காரணம் அப்படி விருப்பப்படும் ஒரு சிலர் தங்கள் நிலையை அடைவதற்கு அங்கு எந்த தடையும் இல்லை. நேர் மாறாக அவர்களுக்கு தேவையான எல்லாம் கிடைக்கிறது. படிப்பு மட்டுமே வாழ்க்கையில் முன்னேற ஒரே படியாக அவர்கள் எண்ணுவதில்லை. அதே நேரம் மற்ற வகைகளில் அவர்கள் முன்னேறவும் அங்கு தடை இல்லை.

அதனால் தான் இன்று ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் பில் கேட்ஸ் வரை அனைத்து ஜாம்பாவன்களும் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் ஆனாலும் அவர்களால் நினைத்த இடத்திற்கு செல்ல முடிந்தது. ஒன்றுக்கும் உதவாதவர் என பள்ளியில் இருந்து அனுப்பப் பட்ட எடிசன் நூற்றுக்கணக்கான கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி செய்வதாலேயே அவர்களால் அதில் ஏதாவது ஒன்றை பிற்காலத்தில் சாதிக்க முடிகிறது என்பதே என் எண்ணம்.

அதே போல் அமெரிக்கர்களின் கண்டு பிடிப்புகளுக்கு அவர்களின் சோம்பேறித்தனமும் ஒரு காரணமோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு. அதையே வேறு வகையில் சொல்வதென்றால் உடல் உழைப்புக்கு அதிகம் வேலை வைக்காமல் அதையே சிறிய சிறிய கண்டு பிடிப்புகளால் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிக் கொள்கிறார்கள். 

அமெரிக்காவில் நான் வியந்த/ரசித்த சில விஷயங்கள்...

# வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் கூட நூறு நோட்டுக்களை சேர்ந்த மாதிரி எண்ணத் தெரியாது. அதை பத்து பத்து நோட்டுக்களாக தனி தனியாக எண்ணி வைப்பார்கள்.

அதனால் தானோ என்னவோ எங்கு பார்த்தாலும் அவர்கள் ஆட்டோமேடிக் வெண்டிங் மெஷின் வைத்திருக்கிறார்களோ...

# லோட் வண்டிகள் அனைத்திலும் பாரங்களை எளிதாக ஏற்ற இறக்க ஆட்டோமேடிக்காக இயங்கும் படிக்கட்டுக்கள் உண்டு. வீடு மாறும் போதெல்லாம் இம்மாதிரி வண்டிகளை வாடகைக்கு எடுத்தால் நாமே மொத்த பொருட்களையும் ஏற்றி இறக்கி விடலாம்.தனியாக பாரங்களை இறக்க லோட் மேன்கள் தேவை இல்லை.

# கடைகள் போன்ற நிறுவனங்களுக்கு பொருட்களை டெலிவெரி செய்ய நம்மூரை போல் ஒரு வேன் ஓட்டுனர், லோட் மேன், கலக்க்ஷன் ஏஜென்ட் என்று ஒரு படையே செல்லாது. ஒரே ஒருவர், அவரே வண்டி ஓட்டுவார், அழகாக 'டானா' ஷேப்பில் ஒரு சிறு வண்டி இருக்கும். அதில் எல்லா பொருட்களையும் அவரே எடுத்து வைத்து டெலிவெரி செய்வார். அவரே கலக்க்ஷன் செய்து கொள்வர்.

# பெரிய பெரிய மால்களில் நடந்து செல்வதை கூட சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு, நகரும் எலிவேட்டர் அமைத்து அதில் தான் நகர்ந்து செல்கிறார்கள்.

இன்னும் எவ்வளாவோ உதாரணங்கள் உள்ளன...நேரம் கிடைத்தால் பின்னாடி ஒரு ரவுண்ட் பார்க்கலாம்.

  

share on:facebook

Tuesday, April 3, 2012

அமெரிக்காவின் அரிவாள் கலாச்சாரம்.


தமிழ் சினிமாவில் திருநெல்வேலி என்று வந்தாலே அதனுடன் மறக்காமல் அரிவாளையும் சேர்த்து விடுவார்கள். அந்த அளவிற்கு வீட்டுக்கு வீடு திருநெல்வேலியில் அரிவாள் வைத்திருப்பார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால், அமெரிக்காவில் பெரும்பாலானோர் வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பார்கள்.

பெரும்பாலானோர் தற்காப்புக்காக மட்டுமே வைத்திருந்தாலும், சில சமயங்களில் அதுவே தவறாக கையாளப் படும்போது அப்பாவி உயிர்கள் பலியாகின்றன. அமெரிக்காவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருடத்திற்கு ஒரு முறையேனும் யாராவது ஒருவர் பள்ளி/அலுவலகம்/பொது இடம் என்று கூட பார்க்காமல் எதாவது ஒரு பிரச்சனைக்காக தங்கள் துப்பாக்கியால் ஏதும் அறியா பொதுமக்களை சுட்டு தள்ளி விடுகிறார்கள்.

1999 கொலம்பியன் ஹை ஸ்கூலில் மாணவர் ஒருவர் இவ்வாறு கண்மூடி தனமாக சுட்டதில் சக மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உடனே அமெரிக்க அரசு துப்பாக்கி லைசன்ஸ் மற்றும் சட்ட திட்டங்களை கடுமை ஆக்குவதாக அறிவித்தது. அவ்வளவுதான். அதனால் ஒன்றும் பெரிய மற்றம் இல்லை.

கடந்த சில மாதங்களில் மட்டும் கலிபோர்னியாவின் லாஸ் ஏன்ஜெலஸ் நகரில் இரண்டு துப்பாக்கி சூடு சம்பவங்கள். ஒருவர் துப்பாக்கியுடன் ஒரு சலூனில் நுழைந்து அங்கிருந்த ஐந்துக்கும் மேற் பட்டவர்களை கண் மூடி சுட்டதில் அனைவரும் பலி. தனது மனைவிக்கும் தனக்குமான கருத்து வேறுபாடில் தன் பிள்ளைகளை கோர்ட் மனைவியின் பாதுகாப்பில் விட்டு விட்டதில் ஆத்திரமடைந்து அவரின் மனைவியை பலி வாங்க சுட்டதில் மற்ற ஐந்து பேரும் பலியானார்கள்.


அதே போல் நான் பணியாற்றும் நிறுவனத்தின் ஒரு கட்டடத்தில் தற்போதைய ஊழியர் ஒருவரே தன் மேலதிகாரியின் மேல் இருந்த கோபத்தின் காரணமாக அவரையும் அவருடன் மீட்டிங்கில் இருந்த இன்னொரு மேலாளரையும் மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்று விட்டார். இரண்டு நாட்களுக்கு முன் ஒக்லாந்து மாகாணத்தில் ஒரு மாணவர் தன் ஆசிரியர் சக மாணவர்களின் மேலிருந்த கோபத்தில் துப்பாக்கியை எடுத்து அவர்களையும் சேர்த்து ஏழு பேரை சுட்டுக் கொன்று விட்டார்.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்ள எளிதான சட்ட நடை முறைகளும், எல்லோரும் வைத்திருப்பதால் தாமும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமுமே ஆகும். வீட்டில் பெரியோர்கள் தங்கள் துப்பாக்கியை பத்திரமாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் அது அவர்களின் குழந்தைகள் கைக்கு எளிதாக கிடைத்து விடுவது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம்.

சமீபத்தில் ஒரு பள்ளி மாணவரின் கைப்பையில் இருந்து துப்பாக்கி வெடிக்க, அதை பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தன்னை பிடிக்காத சக மாணவர்களினால் தனக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் தான் எப்போதுமே தன் தந்தையின் துப்பாக்கியை அவருக்கு தெரியாமல் தினமும் பள்ளிக்கு எடுத்து வந்ததாக அம் மாணவர் தெரிவித்துள்ளார்.  

இந்த கட்டடத்திற்குள் துப்பாக்கிகள் அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு பலகையை பல நிறுவனங்களில் காணலாம். அமெரிக்காவில் ஒருவர் மீது கோவம் வந்தால் அவரிடம் அனாவசியமாக சண்டை போடுவது என்பது வேண்டாத வேலை. ஆம், யாரிடம் துப்பாக்கி இருக்கும் என்றே தெரியாது. அட அப்போது இல்லாவிட்டாலும் எந்த நேரமும் நம் மீது கோவம் வந்து தன் துப்பாக்கியை எடுத்து வந்து மீண்டும் நம்மை சுடும் அபாயம் எப்போதும் உண்டு.  கத்தி இருந்தால் கத்தியால் குத்துவார்கள். ஒன்றும் இல்லாவிட்டால் வெறும் கையால் குத்துவார்கள். துப்பாக்கி இருந்தால் ....யம்மாடி நமக்கு இந்த விளையாட்டே வேண்டாம். 

share on:facebook

Sunday, April 1, 2012

மின்வெட்டால் பாதித்தோருக்கு நஷ்டஈடு: மின்சார ஒழுங்கு முறை வாரியம் அதிரடி.


கடந்த மாதம் திடீரென்று ஏற்பட்ட சூறாவளி காற்றினால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இரண்டு நாட்களுக்கு மேலாக மின்சாரம் இன்றி இருட்டில் மூழ்கின. பல தொழில் சாலைகளும், பள்ளி மற்றும் மருத்துவ மனைகளுக்கும் மிகுத்த சிரமம் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து வந்து குவிந்த ஆயிரக்கணக்கான புகார்களின் அடிப்படையில், அதனையே வழக்காக எடுத்துக் கொண்ட மின்சார ஒழுங்கு வாரியம், மின்சார தடையை உடனடியாக சரி செய்ய இயலாத மின் வழங்கும் கம்பெனியிடம் அதற்க்கு அபராதம் விதித்து அந்த தொகைய பதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடாக வழங்க முடிவு செய்துள்ளது.

பொறுங்க, பொறுங்க...இது நம்மூர்ல நடந்த விசயமில்லீங்க...அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த சம்பவம். ஆம், அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மின் தடை என்பது என்ன வென்றே தெரியாது என்று கூட சொல்லலாம். எதிர்பாராத இயற்க்கை பேரிடர் அல்லது வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களால் மின் தடை ஏற்பட்டால் ஒழிய மற்றபடி மின் வெட்டு என்பது அங்கு அரிது.

இயற்க்கை காரணங்களை தவிர வேறு காரணங்களுக்காக மின் தடை ஏற்படுவது அரிது என்றாலும் அப்படி ஏற்படுமாயின், அதை முன் கூட்டியே தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை மின் வெட்டு ஏற்படும், அதனால் என்னென்ன வீட்டு மின் உபகரணங்கள் பாதிக்கப் படும், மின் வெட்டின் போது வீட்டில் உள்ள மின் உபகரணங்களை எவ்வாறு முறையாக பாத்து காக வேண்டும் உட்பட அனைத்தையும் ஒரு கடிதம்/நோட்டீஸ் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முன் கூட்டியே தெரியப் படுத்தி விடுவார்கள்.

2020 இல் சூப்பர் பவர், 2050 இல் உலகையே ஆளப் போகிறோம் என்றெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது ஆகும். அல்லது நம்மை அரசியல் வாதிகள் ஏமாற்றும் செயல். நாட்டின் ஒவ்வொரு குடி மகனுக்கும், குடிக்க சுகாதரமான குடிநீர், நல்ல சாலை வசதிகள், மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் வசதிகள் அனைத்தையும் எந்த ஒரு நாடு/அரசாங்கம் ஏற்படுத்தி தருமோ அல்லது அதற்க்கான திட்டங்களை வகுத்து செயல்படுமோ அந்த நாடு தான் சூப்பர் பவர் தன்னை கூறிக் கொள்ள முடியும்.

இதையெல்லாம் நாங்கள் சொன்னால், சும்மா அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தாய் நாட்டையே தூற்றுபவனாக நம்மை பார்க்கும். வேறு ஒன்றும் இல்லைங்க. எல்லாம் வாயிற்று எரிச்சல் தான். இத்தனைக்கும் அமெரிக்காவில் மட்டும் ஒன்றும் ஒரே நாளில் எல்லா வசதிகளும் வானத்திலிருந்து பொத்துக் கொண்டு வந்து விட வில்லை. பல நூறு வருடங்கள் அரசும், அரசியல் மேதைகளும், மக்களும் திட்டம் போட்டு, அதை நல்ல முறையில் லஞ்சம் ஊழல் இன்றி செயலாற்றியதன் பலனை தான் அதன் பின் பல தலைமுறைகளும் அனுபவித்து வருகிறார்கள்.


இன்று தமிழகத்தில் அமலில் உள்ள மின் வெட்டை பற்றி வரும் துணுக்குகள் பல. பிறந்த குழந்தை நர்சிடம், இங்கு கரண்ட் இருக்கிறதா என கேட்பதும் அதற்க்கு நர்ஸ் ஆம் என்று சொன்னால், அப்பா, அப்ப நான் தமிழ் நாட்டுல பிறக்கல என சிரிப்பதும் என்று.

மின்சாரம் என்பது மற்ற எந்த பொருட்களையும் விட சற்று வித்தியாசமானது. அதை பல வகைகளில் உருவாக்க முடியும் ஆனால், சேமித்து வைக்க முடியாது. அது தான் பிரச்சனையே. அமெரிக்காவே என்றாலும், மின்சாரம் மட்டும் வீட்டு உபயோகத்திற்கு ஒரு நிறுவனத்திடம் இருந்து தான் பெற முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் எங்குமே மின்சாரம் வழங்குவதில்லை. அந்த ஒரு காரணத்தினாலேயே எல்லா நாடுகளிலும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உள்ளது. அது எவ்வாறு சிறப்பாக செயலாற்றுகிறது என்பதில் இருந்துதான் அந் நாட்டு மின்சார பிரச்சனையின் அளவும்.

அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவின் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட மின்சார நிறுவனம் ஐந்து மில்லியன் (50 லட்சம்) வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. அவர்கள் இன்று ஒரு யூனிட்டுக்கு ஒரு சென்ட் உயர்த்துவது என்றாலும் அதற்க்கு மின்சார ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு ஒரு பெரிய 'நோ' சொல்லி விட்டது. அதற்க்கு காரணம், நான்கு மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்த போது, வெறும் பதினாறாயிரம் ஊழியர்களை மட்டுமே இருந்த அந்த நிறுவனத்தில் இன்று ஐந்து மில்லியன் வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் இருபத்திநான்கு ஆயிரம் ஊழியர்களை வைத்துள்ளது. அது ஏன், அவர்களுக்கு கொடுக்கப் படும் சம்பளம் வாடிக்கையாளர்கள் தலையில் தானே கட்டண உயர்வாக அமையும் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளது.


இப்போ சொல்லுங்கள், நம்மூர் அரசியல் வாதிகள், பயனற்ற அரசு திட்டங்கள், இலவசங்கள் என பல்வேறு வகையில் அரசுக்கும், மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை சரிகட்டவே மின்சார கட்டணம் உயர்த்தப் படுகிறது என்றால் அந்த உயர்வு நம் தலையில் ஏன் வந்து விழ வேண்டும்.


நான் ஒன்றும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவன் இல்லை. இருப்பினும் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகம் வந்திருந்த போது அனுபவித்த மின் வெட்டின் தாக்கம் இன்றும் என்னை பயமுறுத்துகிறது. கேட்ட வார்த்தையே உபயோகிக்காத நான், அந்த ஒன்றிரண்டு மாதங்கள் காலை வேளையில் மின்சாரம் போகும் போது, வந்து என்னை பிடுங்கி தின்ற கொசுக்களின் மத்தியிலும், உடல் முழுதும் வியர்வையில் எறிந்த போதும், நான் திட்டாத கேட்ட வார்த்தைகள் இல்லை. அரசியல் வாதிகளையும் தமிழக அரசையும் தான்.

மின்வெட்டால் வியர்த்து போய் இருந்தால், சற்று கூலாக ஒரு ஜோக். ரஜினிகாந்த் வீட்டில் மட்டும் மின் வெட்டு பிரச்னை இருந்தாலும் பிரச்னை இல்லை. ஏனென்றால், அவர்தான் 'மின்சார கண்ணா' வாச்சே...      

share on:facebook