Thursday, September 20, 2012

'ஆன்சைட்டா' அந்தப்புரமா?. IT படுத்தும் பாடு பார்ட் - 2



கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிட்டா எல்லா பெண்களையும் மற்ற பெண்கள் துளைத்து எடுக்கும் கேள்வி, என்ன 'விஷேசம் ஏதும் இல்லையா' என்பது. அது போல் IT யில் வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில் எல்லோரும் கேக்கும் கேள்வி. 'எப்போ ஆன்சைட்'? அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. அது போல் ஆன்சைட் போகதவருக்கு IT யில் மதிப்பில்லை.

சென்ற பதிவில் IT கம்பெனிகளில் வேலையில் சேர்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியமில்லை என்பதை கூறி இருந்தேன். இந்த பதிவில் அப்படியே ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விட்டாலும் அதோடு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முடியுமா என்பதை பார்ப்போம்.

முதல் பாராவில் கூறி இருந்தது போல், எப்படி ஒரு நடிகன் தன் வாழ் நாள் கனவாக 'ஆஸ்கார்' விருதை பெற்றிட வேண்டும் என நினைப்பானோ, எப்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு மாநில முதல்வர் பதவியோ அது போல் தான் பெரும்பாலான IT ஊழியர்களுக்கு 'ஆன்சைட்' கனவு.

'ஆன்சைட்' என்பது பெரும்பாலும் IT யில் வேலை பார்ப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொல். அது வேறொன்றும் இல்லை. அமெரிக்கவோ அல்லது பிற ஊர்களுக்கோ வேலை நிமித்தம் செல்வதை தான் 'ஆன்சைட்' போவதாக சொல்வார்கள். இதற்கு காரணம். நாம் வேலை பார்ப்பதே அவர்களுக்காக தான். அவர்கள் இடத்திற்கே சென்று வேலை பார்ப்பதை. On site என்று கூறுவார்கள்.

ஆன்சைட் வாய்ப்பு என்பது பெரும்பாலும் அவரவரின் அதிர்ஷ்டம் மற்றும் திறைமையை பொறுத்து. சில நேரங்களில் ஒன்னும் தெரியாதவன் ஒரே மாதத்தில் ஆன்சைட் செல்வான் சிலருக்கோ அதற்க்கு பல வருடங்கள் ஆகும். சரி அப்படி என்னதான் இருக்கு அந்த ஆன்சைட்டில் என கேப்பவர்களுக்கு...

# நல்ல சம்பளம் (இந்தியாவை ஒப்பிடும் போது)
# தான் பார்க்கும் வேலைக்கு ஒரு அங்கீகாரமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
# தன் வேலையில் மேலும் முன்னேற இதுவும் ஒரு வாய்ப்பு.
# மனைவி குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு அமெரிக்கா/இங்கிலாந்து  போன்ற வளர்ந்த நாடுகளில் போய் சுற்றி பார்க்கும்/வசிக்கும் வாய்ப்பை தரும்.
# இவை எல்லாவற்றுக்கும் மேலாக குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிராமல் உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.

அப்படி பட்ட ஆன்சைட் வாய்ப்புகள் இப்போது நிறைய இருந்தாலும் ஆன்சைட் பயணம் என்பது முன்பு போல் இப்போது இல்லை. முன்பு யார் வேண்டுமானாலும் (கம்பெனி நினைத்தால்) ஆன்சைட் போகலாம். இப்போது அமெரிக்கா மற்ற நாடுகளில் வீசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகள் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு முறை போய் விட்டு வரவே சிலருக்கு மூச்சு முட்டுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தற்போது நினைத்தாலும் பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.

'ஆன்சைட்' பயணம் பொதுவாக இரு வகை படும். 1. ஷார்ட் டெர்ம் என சொல்லப்படுகிற குறுகிய கால பயணம். 2. லாங் டெர்ம் என சொல்லப்படுகிற நீண்ட கால பயணம். இரண்டு வகையிலும் வசதிகளும் உள்ளன. சிரமங்களும் உள்ளன. அவைகளை பார்க்கும் முன், அந்த காலத்தில் ராஜாக்கள், ஊரில் உள்ள மிக சிறந்த அழகியையோ அல்லது பணக்கார நாட்டு ராஜாவின் இளவரசியையோ பெரும் பணம், பொருள் நாடு என்று திருமணம் செய்திருந்தாலும் அரண்மனைக்கு அப்பால் ஒரு அந்தபுரம் கட்டாயம் இருக்கும்.

அதற்கு காரணம், அந்தபுரத்தில் கிடைக்கும் உல்லாசமும், கவலை, பொறுப்புகள் இல்லாத வாழ்க்கையும், அந்தபுரத்தில் இருக்கும் தருணம் வரை நாடு, வீடு என அனைத்துப் பொறுப்பையும் யாராவது ஒருவர் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பார். அந்த மாதிரி தான் ஆன்சைட் பயணங்களும் எங்களுக்கு (யாராவது இப்படி சொன்னதுக்கு சண்டைக்கு வரதா இருந்தா, நீங்க ஆன்சைட்ல எங்க எப்படி இருக்கீங்கன்னு விலா வாரியா சொல்லுங்க. அதுக்கப்புறம் பார்ப்போம் உங்க பக்கம் நியாயம் இருக்கானு).

ஐயா, தலைப்புக்கு சரியான விளக்கம் கொடுத்தாச்சு...இப்போ ஜூட்....அடுத்த பதிவில் மேலும் படுத்தலாம்...

தொடர்புடைய பதிவுகள்...

IT (வேலை) படுத்தும் பாடு...


share on:facebook

Wednesday, September 19, 2012

எனக்கு பிடித்த (வித்தியாசமான) பதிவர்.

இவரின் பதிவுகள் பெரும்பாலும் கிண்டல், கோவம், சமூக அக்கறை, சுய புராணம் நிறைந்ததாக இருக்கும். தவிர சில சமயங்களில் 'கில்மா' பதிவுகளும் அடக்கம். எல்லாம் பாக்கியராஜ் வகை தான். விருப்பமிருந்தால் அனுபவித்து ரசித்து படிக்கலாம். கெட்ட வார்த்தைகள் கொஞ்சம் (சில நேரங்களில் நிறைய) இருக்கும்.

நான் அவ்வப்போது பேசிக்கொண்டு  தொடர்பில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவர்களில் சாயும் ஒருவர். இவருக்கு என்னை தவிர சில பிரபல பதிவர்களும் நெருங்கிய பழக்கம் என்பது இவரது ஒன்றிரண்டு பதிவுகள் மூலம் அறிந்து கொண்டேன். இவரின் பிளாக்கில் கெட்ட வார்த்தைகள் கொஞ்சம் (சில நேரங்களில் நிறைய) இருக்கும். ஆனால், பதிவுகள் அப்படியில்லை. பல நேரங்களில் சாயின் சமூக அக்கறையும், ஆதங்கமுமே அவரின் கோவத்திற்கு காரணம்.

உள்ளதை (உள்ளத்தை) சொல்கிறேன் !! - மனதில் தோன்றுவதை கிறுக்க என்னுடைய கரும்பலகை.

இது தான் சாய் பிளாக்கின் பெயரும் (காரணப்பெயரும்). அதை அப்படியே பின்பற்றுகிறார். இவர் யாருக்காகவும் எழுதுவதில்லை. ஹிட்டுக்கோ, பின் பற்றுபவர்களுக்கோ அதிகம் முக்கியத்துவமோ, ஆர்வமோ இவர் காட்டுவதில்லை. நினைத்தால் எழுதுவார். நீங்கள் பின்னூட்டம் இட்டால் அவரும் மறக்காமல் பதில் பின்னூட்டமிடுவார். அவ்வளவுதான்.

தன் குடும்பம், வேலை, மகனின் படிப்பு, இந்தியாவை பற்றிய சலிப்பு, எரிச்சல் என பலதரப்பட்டவை இவரது பதிவுகள். கலிபோர்னியாவில் இருந்த போது அவரே ஓரிரு முறை என்னை சந்திக்க விருப்பப்பட்டு அலை பேசியில் கூப்பிட்டு இருந்தார். ஒரு முறை கூட என்னால் அவரை சந்திக்க இயலாமல் போய்விட்டது. பரவயில்லை சாய். அடுத்த முறை ஊருக்கு வரும் போது தெரிவியுங்கள். அவசியம் நாம் சந்திப்போம்.

பல ஆண்டுகள் வெளி நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் தாய் தமிழகம், இந்தியாவின் மீது பாசமும், கடைசி காலத்தில் தாய் நாட்டுக்கு வந்து செட்டில் ஆக வேண்டும் என்பதே இவரது உறுதியான முடிவு, ஆசை. தங்கள் ஆசை நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள் சாய்.

அவ்வப்போது சென்னை வரும் இவரும் பொலம்பித் தள்ளி விடுவார். சில பொலம்பல்கள் இங்கே. இன்னொமொரு பொலம்பல் இங்கே. ஒரு முறை சென்னை வந்திருந்த போது தன் வீட்டின் எதிரே ரோட்டிலேயே எல்லோரும் குப்பையை கொட்டுகிறார்கள் என்று ஒரு நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு, குப்பை போட வருபவர் அனைவரையும் 'குப்பையை  குப்பை தொட்டியில் போடு. ஏன் ரோட்டில் போடுற' என ஒரு நாள் முழுதும் சவுண்டு விட்டு களைத்து போய் விட்டார்.

நம்ம ஊரு அப்படி தான் சாய். என்ன பண்றது. இப்படி எல்லாம் இருப்பது தெரிந்தும், 'இதற்காகத்தானே ஆசை பட்டாய்' என நம் தாய் நாட்டின் மீதுள்ள பாசத்தால் மீண்டும் இங்கு வந்து சேரத்தானே செய்கிறோம்.

தீவிர நாகேஷ் ரசிகரான சாய் ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் நாகேஷின் பிறந்த நாள் நினைவு நாளில் மறக்காமல் ஒரு பதிவு போட்டு விடுவார். எங்கே செல்லும் என் பாதை என ஒரு தொடர் பதிவு. தான் சந்தித்த அனுபவங்களையும் தன் கொள்கைகளையும் அப்படியே போட்டு உடைத்து இருப்பார். விருப்பமிருந்தால் இங்கே படித்துக் கொள்ளுங்கள்.

உலகம் முழுதும் சுத்தினாலும், அவ்வப்போது இந்தியா/சென்னை வந்து  தான் படித்த பள்ளி கல்லூரிகளுக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்வது இவரது பழக்கம். சென்னை பச்சையப்பனில் படித்ததையும் அதன் நாட்களையும் மறக்காமல் தன் பதிவுகளில் பதிவு செய்ய தவற மாட்டார்.

கெட்ட வார்த்தை என்பது ஒரு கோபத்தின் வெளிப்பாடுதான். நிறைய பேர் கோவப்படும் போது வெளியில் திட்டவில்லைஎன்றாலும் உள்ளுக்குள் திட்டிக்கொண்டு தான் இருப்போம். இன்னமும் எங்கள் ஊர்களில் அதிக பாசமாக/உரிமையாக கூப்பிடும்போது 'ஒக்கால ...' (இது சரியான வார்த்தை உபயோகமா  என்று எனக்கு தெரியவில்லை) என ஒருவரை பார்த்து கூப்பிடுவதுண்டு. பல ஊர்களில் இதை மிக மோசமான கெட்ட வார்த்தையாக சொல்லுவார்கள். உண்மையிலேயே இது மோசமான கெட்ட வார்த்தைதான்.

என்னைப் பொறுத்த வரையில் சாய் பதிவுகளில் அவ்வப்போது வரும் கெட்ட வார்த்தைகளும், ஒரு மாதிரியான பதிவுகளையும்   எங்கள் ஊரில் பேசப்படும் 'ஒக்கால...' ஆகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

சாய், உங்கள் அனுமதி இல்லாமலேயே இந்த பதிவை நான் வெளி இட்டு உள்ளேன். தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருக்காது என்ற நம்பிக்கையில்.
   

share on:facebook

Sunday, September 16, 2012

சுஜாதாவும் விமான பயணங்களும்...


சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது பலரும் அறிந்தது தான். சில வாரங்களுக்கு முன் உள்ளூர் விமான பயணம் ஒன்று மேற்கொண்ட போது சுஜாதா பல வருடங்களுக்கு முன் கட்டுரை ஒன்றில் எதிர்காலத்தில் விமான சேவைகள் எப்படி இருக்கும் என்பதை நகைசுவையை எழுதியது நினைவுக்கு வந்தது.

இப்போதெல்லாம் அதிகாலை வேளைகளில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கியூ இருக்கிறதோ இல்லையோ, விமான நிலையங்களில் கியூவில் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். விமான சேவை பற்றி திரு. சுஜாதா சொன்னதை பற்றி பார்க்கும் முன், சமீபத்தில் ஒரே மாதத்தில் மூன்று முறைக்கு மேல் உள்ளூர் விமான பயணம் மேற்கொண்டதில் பார்த்து ரசித்த/வருத்தப்பட்ட சம்பவங்கள் சில...

என்னதான் படித்திருந்தாலும், விமானத்தில் பயணம் என்றாலும் இன்னமும் சினிமா தியேட்டரில் முண்டியடித்துக்கொண்டு போகும் பழக்கத்தை சிலர் கை விடவில்லை. எல்லோரும் செக்யூரிடி செக் வரிசையில் காத்திருந்தால் ஒரு சிலர் நேராக சென்று தங்கள் உடமைகளை ஸ்கானரில் வைத்துவிட்டு நடுவில் வந்து புகுந்து விடுகிறார்கள்.

தற்போது உள்ளூர் விமானங்களில் உணவோ/ஸ்நாக்ஸ் பரிமாறப்படுவதில்லை. அப்படியே காசு கொடுத்து வாங்கலாம் என்றால், அம்மாடி விலை யானை விலை குதிரை விலைதான். இதனால் மக்கள் தற்போது பிளைட் ஏறும்போதே வீட்டிலிருந்து பொட்டலம் கட்டி வந்து விடுகிறார்கள். விமானம் டேக் ஆப் ஆனதுதான் போதும். விமானம் முழுக்கு ஒரே கம கம மனம் தான். இதில் குரூப்பாக வருபவர்கள் வெவேறு இருக்கைகளில் அமர்ந்திருந்தால் இட்லியும் சப்பாத்தியும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு 'பார்சேல்'....

விமான பணியாளர்கள். சொல்லவே வேண்டாம். MTC கண்டக்டர்களை விட அதிகம் அலுத்துக் கொள்கிறார்கள். குடிக்க தண்ணீர் கேட்டால் கூட ஏதோ அவர்கள் சொத்தை கேட்பதை போல்/நமக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை எழுதி கொடுப்பது போல் தான் அவர்களின் ரியாக்ஷன். இதற்க்கெல்லாம் காரணம் வேறு யாருமல்ல. பயணிகளான நாம் தான். சில பயணிகள் விமானத்தில் ஏறிவிட்டாலே அங்குள்ள பணிப்பெண்கள் எல்லாம் அவர்களுக்கு பணிவிடை செய்யவே பிறந்தவர்கள் போல் அவர்களுக்கு கட்டளை இடுவதும், முறைத்துக் கொள்வதும் வாடிக்கையாக பார்த்தேன்.

எல்லாம் முடிந்து லேன்டிங் ஆகும் போது பல முறை பைலட் கேட்டுக்கொண்டும் கூட, விமானம் இறுதியாக நிற்பதற்கு முன்பே செல் போனை ஆன் செய்து, ஆங் நான் வந்துட்டேன்ப்பா. வண்டி அனுப்பிட்டியா? வண்டி இப்பதான் லான்ட் ஆனுச்சு...என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அதே போல் வண்டி நிற்கும் முன்பே எல்லோரும் தங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு நின்று விடுகிறார்கள். எல்லா முறையும் பார்த்துவிட்டேன். வண்டி நின்று குறைந்தது 10 நிமிடங்களாவது ஆகும் பிளைட்டின் கதவுகள் திறக்க. அப்படி என்ன தான் அவசரமோ நம் மக்களுக்கு. இத்தனைக்கும் மும்பையிலிருந்து மதுரைக்கு மூன்று மணி நேரத்தில் வந்து விடுகிறோம். ஒரு 10 நிமிடம் சீட்டிலேயே உட்கார்ந்து கொள்வதற்கு நமக்கு பொறுமையில்லை.

இதை விட கொடுமை. சென்ற முறை மும்பையிலிருந்து சென்னை வந்த போது ஒருவர் விடாமல் விட்ட ஏப்பம். அப்பப்பா...அப்படி ஒரு சத்தத்துடன் தொடர்ந்து அவர் விட்ட ஏப்பமே போதும் விமானம் பறப்பதற்கு. அவ்வாறு பொது இடத்தில் செய்யக்க் கூடாது என்று அவருக்கு தெரியுமா என அவருக்கே வெளிச்சம்.

சரி இதுக்கும் சுஜாதாவுக்கும் என்ன சம்பந்தம் என கேக்குறீங்களா? பல வருடங்களுக்கு முன் திரு. சுஜாதா, பிற்காலத்தில் இந்தியாவில் விமான சேவைகள் எப்படி இருக்கும் என்ற ஒரு கட்டுரையில், விமான பயணங்கள் மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வாக மாறி விடும். பயணிகளை கவர கட்டணங்கள் மிகவும் குறைக்கப்படும். அதற்க்கு தங்குந்தாற்போல்  சேவைகளும் மாறும். யார் கண்டது. குறைந்த கட்டணம் குறைந்த கட்டணம் என்று, விமானம் வந்து நின்ற பிறகு கீழே இறங்க மாடிபடிகளுக்கு பதிலாக கீழே மணலை குவித்து வைத்து அதில் குதிக்க சொன்னாலும் சொல்லுவார்கள் என கூறி இருந்தார். தற்போது அது போல் தான் உள்ளது பல விமான சேவைகள்.

மும்பை விமான நிலையத்தில் வரிசையாக பேருந்துகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் நிற்கும் இடத்தில் இறக்கி விடுகிறார்கள். சில நேரங்களில் பேருந்து நிலையம் போல் வரிசையாக நிற்கும் விமானத்தில் எதில் ஏறுவது என குழப்பம் வந்து விடுகிறது. மேலே உள்ள படம் இரண்டு விமானங்களுக்கு நடுவே நின்ற எங்கள் பஸ்ஸிலிருந்து எடுத்தது.

share on:facebook

Thursday, September 13, 2012

நான்-வெஜ் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை - இறந்து (அழுகி!) போன இறைச்சிகளை வாங்கி சமைக்கும் ஹோட்டல்கள்...



அடுத்த தடவை ஏதாவது ஒரு நான்-வெஜ் ஹோட்டலுக்கு செல்லும் போது  இந்த செய்தி நினைப்புக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.


சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி வயிற்றை கலக்கியது. ஆந்திராவின் சில பகுதிகளில் இருந்து சென்னைக்கு இறந்து போன ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சிகள் சட்ட விரோதமாக ரயில்வே பார்சல்கள் வழியாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவை நடுத்தர மற்றும் போஷ் ஏரியா என்று சொல்லப்படுகின்ற VIP வசிக்கும் ஏரியாக்களில் உள்ள 'சில' ஹோட்டல் ரெஸ்டாரன்ட்களில் கூட வாங்கி சமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது அந்த செய்தி.

ஆடுகளை இறைச்சிக்காக கொல்வதற்க்கேன்றே  சென்னையில் மூன்று இடங்கள் உள்ளன. இவற்றில் தினமும் ஆயிரத்திற்கும் மேலான ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் ஆடுகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என சோதித்தபின் தான் ஆடுகள் வெட்டப்படுகின்றன. ஆடுகள் வெட்டப்பட்ட பின் அவற்றின் மேல் சீலும் குத்தப்படுகின்றன.

ஆனால் ஆந்திராவிலிருந்து இறக்குமதி ஆகும் இம்மாதிரியான இறந்து போன ஆடு/மாட்டிறைசிகள் இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்கப் படுவதில்லை. இத்தகைய இறைச்சிகள் வெளியில் விற்கப்படும் இறைச்சியை விட 40/50 சதவிகிதம் விலை குறைவு என்பதாலேயே  'சில' ஹோட்டல்கள் இவற்றை வாங்குகின்றன.

ஒரு சில பெரிய ஹோட்டல்களும் இதில் அடக்கமாம். ஆனால் இவர்கள் தங்கள் தரப்பு நியாயமாக இவ்வாறான இறைச்சிகளை நாங்கள் வாங்கினாலும் அவற்றை விஞ்ஞான முறையில் சுத்தம் செய்த பிறகே சமைக்கிறோம் என்கிறார்கள். எப்படி சுத்தம் செய்தாலும் வேக வைத்தாலும் அதிலுள்ள கிருமிகள் வேண்டுமானால் சாகலாம். ஆனால், இறந்த பின் அவற்றினுள் உருவாகும் டாக்ஸின் ஆசிடுகள் நம் உடலுக்குள் சென்றால் அது நம் உயிருக்கே உலை வைத்து விடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கடைசி செய்தி: நேற்று வெளியான இந்த செய்தியை தொடர்ந்து இன்று சுகாதார துறை அதிகாரிகள் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ரைடு சென்றிருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் சென்ட்ரல்/ஸ்டேட் அதிகாரிகளுக்குள் இடையே உள்ள ஈகோ பிரச்சனையால் போலிஸ் பிளாட்பாரம் உள்ளே  செல்ல தாமதமான நேரத்தில் இறைச்சி வியாபாரிகள் அனைவரும் எஸ்கேப். (இறைச்சியுடன் தான்).

share on:facebook

Monday, September 10, 2012

சீ... சீ...

கோடானு கோடி தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு முதல்வர், உலகின் மிக பெரிய நாட்டின் ஒரு பிரதமர் என இருவரை விவரிக்க முடியாத
, ஒரு முறை பார்த்த பிறகு மறு முறை பார்க்க இயலாத ஒரு கேவலமான கார்டூனை வரைந்த சிங்கள பேரினவாத கார்டூனிஸ்ட்ஐயும் அதை வெளியிட்ட சிங்கள பத்திரிக்கையையும்...

சீ சீ சிங்களம்...இதை தவிர வேறு என்ன சொல்வது.

share on:facebook