Saturday, March 26, 2011

சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போலாகுமா...


உங்களுக்கு எந்த ஊர் என்று யாராவது என்னிடம் கேட்டால் தஞ்சாவூர் என சொல்லிக்கொள்வதில் நான் மிகவும் பெருமைகொள்வேன். தஞ்சையை  பற்றி நான் சொல்லி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.  இந்தியாவிற்கே படியளக்க கூடிய நெற்கலஞ்சியமாகட்டும்,  அங்குள்ள  பெரிய கோவிலோ, புகழ் மிக்க சரசுவதி மஹால் நூலகமோ,  அல்லது அருகில் உள்ள நாகூர் மற்றும் வேளாங்கண்ணி என எல்லா  மதத்திற்குமான திருத்தலங்கள் என எல்லாமும் எல்லோரும் அறிந்ததே. 

இதைதவிர உள்ளூர் சிறப்பாக உள்ள சில விசயங்களை இங்கு பகிர்கிறேன். தஞ்சை நகரில் மற்ற ஊர்களைப்போலவே அனைத்து விதமான  வியாபாரங்களும் தொழில்களும் உண்டு. ஆனால் அதில் ஒரு தனி  சிறப்பு என்னவென்றால் குறிப்பிட்ட ஒவ்வொரு தொழிலும் ஒரு நிறுவனம் மட்டும் என்றுமே வாடிக்கையாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.

முதலில் இனிப்புடன் ஆரம்பிப்போம் - பாம்பே ஸ்வீட் ஸ்டால்

தஞ்சையில் இனிப்பு வகைகள் என்றாலே தஞ்சை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு நினைவில் வருவது 'பாம்பே ஸ்வீட் ஸ்டால்' தான். ஒரு காலத்தில் சிறிய அளவில் இனிப்பு பலகாரங்கள் வியாபாரம் செய்துவந்த 'சேட்' என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்,    தன்னுடைய  கடுமையான உழைப்பாலும் இனிப்பு வகைகளின் தரத்தாலும் ஒரு மிக பெரிய வியாபார சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். அவரின் மறைவிற்கு பிறகும் அவருடைய மகன் திரு. மணி அவர்கள் அவரைவிட பலமடங்காக அதை விரிவாக்கி இருக்கிறார்.

தரமும், தங்கம் போல் இனிப்புகளை அளந்து பார்க்காமல் எப்பவுமே கூடுதலாக அள்ளி அள்ளி போட்டு  கொடுப்பதும் மக்களின் வரவேற்ப்பை  பெற்றதற்கான முக்கிய காரணம். தீபாவளி போன்ற நேரங்களில் வெளியூர்  செல்லும் பேருந்துகள் ஸ்வீட் ஸ்டால் முன் நிறுத்தி டிரைவர் கண்டக்டர்  பயணிகள்  என அனைவரும் ஸ்வீட்ஸ் வாங்குவது ஆச்சர்யமான ஒன்றாகும்.  இது எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்வீட் ஸ்டாலின் மறைந்த உரிமையாளரும்  அவரின் மகனும் வெளியே தெரியாமல் பல பேரின் படிப்புக்கும் நல்ல  காரியங்கள் பலவற்றுக்கும்  உதவுவது சிலருக்கு மட்டுமே தெரியும்.  தஞ்சை சென்றால் ஒரு  முறை அவசியம் அங்கு ஸ்வீட் வாங்கி சாப்பிட்டு பாருங்கள். குறிப்பாக  அவர்களின் சோமாசா + பாதாம் கீர் மிகவும்  ருசிமிக்கவை.  

உயிர் காக்கும் மருந்தகம் - ஸ்டேட் மெடிக்கல்ஸ்.

தஞ்சையில் மருத்துவக்கல்லூரி இருப்பதால் டாக்டர்களுக்கு பஞ்சமே இல்லை. தஞ்சை தெற்கு அலங்கத்தில் உள்ள கிளினிக்குகளில் பணியாற்றும் டாக்டர்களை கணக்கெடுத்தால் மட்டுமே மற்ற எல்லா ஊர்களிலும் உள்ள டாக்டர்களின் எண்ணிக்கையை தாண்டி விடுவார்கள். அதே போல் மருந்தகங்களும்.

எத்தனையோ புது மருந்தகங்கள் வந்தாலும் கூட ரயிலடி அருகில் உள்ள ஸ்டேட் மெடிகல்ஸ் மிகவும் பெயர் பெற்றது. இதன் உரிமையாளர் கூட ஒரு காலத்தில் சிறிய அளவில் மட்டுமே நடத்தி வந்தார். பிறகு அவரின் மகன் திரு. நேரு பொறுப்பேற்றபின் அவரின் உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்களை  கவனிக்கும்/கவரும் பண்பின் காரணமாக மக்கள்  தலைவலி மாத்திரை வேண்டும் என்றால் கூட அரை மணி நேரம் காத்திருந்து  வங்கி செல்வார்கள். கடையை அடைத்து கூட்டம் இல்லாமல் நான் ஒரு நாள்  கூட பார்த்ததில்லை. சாதாரண உடல் உபாதைகளுக்கெல்லாம் அவரே சரியான  ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் தருவார். அதே நேரத்தில் மற்ற  விசயங்களுக்கு முறையாக இதை நீங்கள் டாக்டரிடம் தான் காட்ட வேண்டும்  எனவும் கூற தவற மாட்டார். ஒரு ருபாய் இரண்டு ருபாய் குறைவாக இருந்தால்  கூட எற்றுக்கொள்வார். ஏழைகளாக இருந்தால் கணக்கு பார்க்க மாட்டார். அவரின் சிரித்த முகமும், வாங்க சார், என்னம்மா வேணும் என்று அவர் அன்பாக கேட்கும் அழகே தனி. 

தவறாமல் ஒரு முறை அங்கு சென்று வாருங்கள் என கூற மாட்டேன்.  ஏனென்றால் அது மருந்து கடை ஆயிற்றே.  

சிறப்புகள் தொடரும்...
share on:facebook

10 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வணக்கம் சார்.. அதே போல் தஞ்சையில் யுகபாரதியின் வீடு இருப்பதை சொல்லி இருக்கலாம். அப்புறம் ஜோக் எழுத்தாளர்கள் ஆதி, தஞ்சை தாமு,பா து பிரகாஷ்,அனார்கலி,ராகவ் மகேஷ் எல்லோரும் என் நண்பர்கள்...

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி செந்தில்குமார்.

நீங்கள் கூறியவர்கள் மட்டுமல்ல. எல்லா துறைகளிலும் பெயர் பெற்றவர்களில் ஒருவராவது தஞ்சையை சேர்ந்தவராக கண்டிப்பாக இருப்பார்.

சிவாஜி, கலைஞர், மனோரமா, மூப்பனார் என பலர்...லிஸ்ட் போட்டால் அது நிச்சயம் பெரியதாக தான் இருக்கும்.

sury said...

நானும் தஞ்சையைச் சேர்ந்தவன் தான். 1962 முதல் அங்கே இருந்து வந்து 1994 ல் சென்னைக்கு குடி
பெயர்ந்த எனக்கு, இனியும் எப்பொழுதாவது வாழ்க்கையில் சிறிது நாளேனும் அப்புனித தஞ்சையில்
இருக்கமாட்டோமா என்ற எண்ணம் மேலோங்கியே நிற்கிறது.

பாம்பே ஸ்வீட் ஸ்டால் என்னுடைய ஃபேவரிட் கடைகளில் முக்கியமான ஒன்றுதான். இருப்பினும், அந்தக்காலங்களில் தஞ்சை பழைய‌
பஸ் ஸ்டான்ட்க்கும் மெடிகல் காலேஜுக்கும் இடையே செல்லும் 6ம் நம்பர் பஸ் என்னுடைய வாழ்க்கையில்
இணை பிரியாத தோழன். அந்த பஸ்ஸின் கண்டக்டர் ( அவர் பெயர் நினைவில் இல்லை ) எத்தனை கூட்டம்
இருந்தாலும் முகம் சுளிக்காமல், பஸ் செல்லும்பொழுது பல விதமான ஜோக் சொல்லிக்கொண்டு மக்களைச்
சிரிக்க வைப்பார். கான்வென்ட் பக்கத்திலே ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. இப்பொழுது இருக்கிறதா எனத்
தெரியவில்லை. அப்பொழுது ' சினிமா பைத்தியம் ' என்று ஒரு படம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த
பஸ் அந்த ஸ்டாப்பை அடைந்த உடன் அந்த கண்டக்டர் " சினிமா பைத்தியமெல்லாம் இறங்கிக்கங்க "
என்று ஒரு தடவை சொன்னார். அந்த பஸ்ஸில் ஏறும் அத்தனை தினப்படி வாடிக்கையாளரையும்
அவருக்குத் தெரிந்திருந்தது எனக்கு அதிசயமாக இருக்கும். அவர்கள் எங்கே போகவேண்டும் எங்கே
இறங்கவேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துபடி. கரெக்டான டிக்கெட்டை அவர்கள் கேட்காமலேயே
நீட்டுவார்.

எப்பொழுதுமே புன்முறுவலுடன் இணைந்த அவரது முகம் இன்னமும் நினைவில் இருக்கிறது.

சென்னையின் பஸ் கண்டக்டர்களிடையே அவர் போன்று ஒருவரைப் பார்ப்பது என்பது அமாவாசையன்று
சந்திரனைக் காண முயல்வது போன்றாகும்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://kandhanaithuthi.blogspot.com

ச. வீரமணி: said...

அன்புள்ள ஆதிமனிதரே,
நான் பிறந்த தஞ்சாவூர் குறித்து இடுகையில் தங்கள் மூலம் பார்த்ததும் உள்ளம் உவகையால் பூரித்தும் போனது.
இன்றைய தஞ்சாவூரைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளீர்கள். அடுத்து வரும் தொடர்களில் தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்புக்களையும் விவரிப்பீர்கள் என நம்புகிறேன்.
தாங்கள் இடுகையில் இட்டதும், எனக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்கள். பார்த்துப் பரவசமடைகிறேன்.
நட்புடன்
ச.வீரமணி.
என் மின் அஞ்சல் முகவரி:
veeramani1107@gmail.com
நேரமிருப்பின் என் இடுகையையும் பாருங்கள்:
http://illakkia.blogspot.com
http://www.scribd.com/veeramani1107

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி சூரி.
//கான்வென்ட் பக்கத்திலே ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. இப்பொழுது இருக்கிறதா எனத்
தெரியவில்லை//

இன்னமும் இருக்கிறது. அருள் தியேட்டர். ஆனால் ஒரு காலத்தில் அதுதான் தஞ்சைக்கு மல்டிப்ளக்ஸ் போல. இப்போது அது டூரிங் தியேட்டர் நிலைமைக்கு ஆகிவிட்டது.

//சென்னையின் பஸ் கண்டக்டர்களிடையே அவர் போன்று ஒருவரைப் பார்ப்பது என்பது அமாவாசையன்று
சந்திரனைக் காண முயல்வது போன்றாகும்.//

உண்மை. நம்மூர் போல சென்னையில் ஒரு பந்தம் ஏற்படாது/இருக்காது.

பாட்டு ரசிகன் said...

நாட்டின் நெற்களஞ்சியத்தைப்பற்றி தெளிவாக சொன்னீர்கள்.. வாழ்த்துக்கள்..

பாட்டு ரசிகன் said...

என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. ..

விவரங்களுக்கு..

http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post_26.html

மோகன் குமார் said...

அலோ... ரயிலடியிலேயே நிக்குறீங்க, சீக்கிரம் மத்த இடம் போங்க.

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி திரு. வீரமணி அவர்களே.

//தாங்கள் இடுகையில் இட்டதும், எனக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்கள். பார்த்துப் பரவசமடைகிறேன்.//

கண்டிப்பாக செய்கிறேன். மிக்க சந்தோசம்.

மோகன் குமார் said...
//சீக்கிரம் மத்த இடம் போங்க//

போய்டுவோம். தஞ்சை மாவட்டத்துக்காரர் நீங்க சொன்னதுக்கப்புறம் 'அப்பீல்' எது?

Lakshmi said...

தஞ்சை பற்றி தெரியாத பல விஷ்யங்கள் தெரிந்து கொல்ள முடிந்த்து. இன்னமும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு. கண்டின்யூ.

Post a Comment