Thursday, April 28, 2011

911 - அமெரிக்காவின் மூன்றெழுத்து மந்திரம்.


911 :

அமெரிக்காவில் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு முதல் நாள் டாடி  மம்மி சொல்லி கொடுக்கிறார்களோ இல்லையோ அவசர உதவிக்கு 911 எப்படி கால் பண்ண வேண்டும் என தொலை பேசி வடிவத்தில் உள்ள எண்களில் 9 1  1 எண்களை மட்டும் வட்டம் போட்டு காண்பித்து  விடுவார்கள். அந்த அளவிற்கு அவசர உதவி இங்கு தேவைப்படுவது மட்டுமில்லாமல் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது.

911 - ஒரு முறை நீங்கள் அழைத்து விட்டால் போதும். அமெரிக்காவின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் உங்களுக்கு  அடுத்த சில நிமிடங்களில் உதவி வந்து சேர்ந்து விடும். உதவி உங்களுக்கு வந்து சேரும் வரையில் ஒருவர் உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு உங்களை வழி நடத்திக்கொண்டே இருப்பார். பிரசவ வலி என்றால், குழந்தை பிறக்கும் நேரம் என்றால் ஒரு வேலை குழந்தை  பிறந்து விட்டால் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கு  அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கும். அது மட்டும் இல்லாமல் இங்கு Officers என்று சொல்லக்கூடிய அனைத்து காவல் துறையினர்க்கும் பிரசவம்  பார்ப்பது முதல், அனைத்து விதமான முதல் உதவி பயிற்சிகளும் முறையான  அளிக்கப்பட்டிருக்கும்.

பிரசவ வலி முதல் எந்த ஒரு அவசர தேவைக்கும் நீங்கள் 911  ஐ அழைக்கலாம். உங்கள் தொடர்பு துண்டித்து விட்டால் கூட உங்களை  மீண்டும் அழைத்தோ அல்லது உங்கள் இருப்பிடத்தை தேடியோ (எல்லாம்  சாட்டிலைட்/கம்பூட்டர் உதவி கொண்டு) உங்களை வந்து அடைந்து  விடுவார்கள். நீங்கள் மீண்டும் அழைத்து வேண்டாம் என்று கூறினால் கூட உங்களை நேரில் வந்து பார்த்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து விட்டுத்தான் செல்வார்கள் (நீங்கள் மிரட்டப்பட்டு இருப்பீர்களோ  என்ற சந்தேகத்தில்). அதே  நேரத்தில்  911 தவறாக பயன்படுத்தினால்  சிறை தண்டனை வரை உங்களுக்கு  தண்டனையாக கிடைக்கலாம்.

911 சேவை என்பது பொதுவாக காவல்துறை, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவை என்று அனைத்தும் வரிசையாக வந்து சேரும்(பிரச்சனையை பொறுத்து). 911 வாகனங்கள் சைரனுடன் வந்தால் சாலையில் செல்லும் எல்லா வாகனங்களும் ஓரமாக ஒதுங்கி வண்டியை நிறுத்தி விட வேண்டும். இருபுற சாலைகளில் நடுவே பாதுகாப்பு தடுப்பு இல்லை என்றால் எதிர் புற சாலையில் உள்ள வாகனங்களும் ஒதுங்கி நிற்க வேண்டும். பெரும்பான்மையான நேரங்களில் சாலைகளில்  உள்ள  சிக்னல்களின் கண்ட்ரோல்  911 சேவை வாகன ஒட்டிகளிடமே  இருக்கும்.  சிக்னலை நெருங்கும் முன்பே அதை  சிவப்பாக்கி இவர்கள் மட்டும் சென்றுவிடுவார்கள். அல்லது எதிர்புற சாலையில் செல்ல கூட இவர்களுக்கு உரிமை உண்டு.

911, இதை கூறும்போதே நம்மை அறியாமல் நம்மிடம் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்ளும். காரணம், இங்கு ஒவ்வொரு தடவையும் சாலையில் அவசர உதவி வாகனத்தையோ அல்லது சைரன் போட்டுக்கொண்டு காவல் துறை வாகனங்கள் செல்லும் போதோ வானமே கீழே இறங்கி வந்தாற்போல் எழுப்பப்படும் சைரன் ஒலியும்/ஒளியும் அதற்கு மற்ற வாகனங்கள் மகுடிக்கு பணியும் பம்பை போல் வழி விட்டு ஒதுங்கி நிற்பதும்...அடுத்த முறை நீங்கள் வாகனம் ஓட்டும் போது சைரன் ஒலி கேட்டால் போதும் உங்களை அறியாமல் நீங்களே வண்டியை ஓரம் கட்டி விடுவீர்கள்.


911 சேவை (செய்தி) தொடரும்...

படம் நன்றி: bcffa.org

 

share on:facebook

Tuesday, April 26, 2011

கிளே பாம் - உலக போரில் எதிரிகளை கொல்ல பயன்படுத்தப்பட்ட கொசுக்கள்


"இந்த கொசுத்தொல்ல தாங்கமுடியல சாமி". கவுண்டமணியின் பிரபலமான  காமெடி வசனம் இது. ஆனால் இந்த கொசுக்களை வைத்து இரண்டாம்  உலகப்போரில்  ஒரு யுத்தமே நடந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது கிளே பாம்  என்று சொல்லக்கூடிய ஒரு ஒரு பாம்மை ஜப்பானியர்கள் சீனாவின் ராணுவ  மையங்களின் மீது  போட்டுள்ளார்கள். இந்த பாமில் அடக்கி வைக்கப்பட்ட எல்லாமே கொசுக்கள்  தான்.  கொசுக்கள் என்றால் சாதாரண கொசுக்கள் இல்லை. பிளாக் பிளேக் என்று சொல்லக்கூடிய உயிர்கொல்லி வியாதியான பிளேக் நோய் கிருமிகள்  செலுத்தப்பட்ட கொசுக்கள். இந்த கொசு ஒரு முறை கடித்தால் அடுத்த சில  நாட்களில் மர்கயா தான். இதே போல் ஒரு கிளே பாம்மை அமெரிக்காவின்  கலிபோர்னிய மாகாணத்திலும் போடுவதாக ஒரு பிளான் இருந்ததாம். ஆனால் அதை செயல்படுத்தும் முன்பே இரண்டாம் உலகப்போர்  முடிந்துவிட்டதாம்.  

பண்டைய காலத்து போர்களிலும் இம்மாதிரி விஷ வண்டுகள், தேள் போன்ற  ஜந்துக்களை எதிரிகளின் கூடாரம் நோக்கி விடுவதும் அதன் மூலம்  எதிரிப்படையை நாசப்படுத்துவதும் ஒரு போர் கலையாக இருந்துள்ளது.  

தற்போது அமெரிக்க ராணுவம், வண்ணத்து பூச்சிகளாக வளரும் முன்  அவை  "லாவா" எனப்படும் புழு போன்ற நிலையில் இருக்கும் போதே சிறிய  மைக்ரோ சிப்புகளை வைத்து  "லாவா" வண்ணத்துப்பூச்சி  ஆனபின் உள்ளே  இருக்கும் மைக்ரோ சிப்பின் மூலம் வண்ணத்துப்பூச்சியின்  நடமாட்டத்தை  கண்காணிக்கும் ஆராய்ச்சி நடை பெறுவதாகவும் இது வெற்றி  பெற்றால்  இம்மாதிரி வண்ணத்துப்பூச்சிகளை வைத்து எதிரிகளின்  அசைவுகளை  கண்காணிக்க ராணுவம் முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. ம்ம்...டெக்னிக் எல்லாம் பழசுதான். டெக்னாலஜி மட்டும் புதுசு.

இன்னொமொரு கொசு கதை விரைவில்...

share on:facebook

Monday, April 25, 2011

தள்ளு தள்ளு முக்கி தள்ளு - இது சீனா ஸ்டைல்.


நெட்டில் ரசித்தது...



இதுக்கு நம்ம பாண்டியனும் பல்லவனும் சோழனும் (நான் எக்ஸ்பிரெஸ் ரயிலை சொல்கிறேன்) எவ்வளவோ தேவலை போலிருக்கு.

share on:facebook

Friday, April 15, 2011

ஓட்டு போடாத இந்திய பிரதமர். உருப்புடுமா நாடு?



அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில், கடந்த 11ம் தேதி, பிரதமரும், அவரது மனைவி குர்ஷரண் கவுரும் திஸ்புர் சட்டசபை தொகுதியில் ஓட்டளிக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக, ராஜ்ய சபா உறுப்பினராக, அசாம் மாநிலத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தலைவர் சோனியா கூப்பிட்டால் வேலை பளு என்று அவர் உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் போய் பார்க்காமல் இருப்பாரா? இல்லை தன கட்சி போட்டியிடும் மாநிலங்களில் பிரச்சாரத்திற்கு போகாமல் தவிர்ப்பாரா?

அரசன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி. முதலில் தலைவர்கள் திருந்தட்டும். பிறகு மக்களுக்கு அறிவுரை வழங்கட்டும்.

மனம் நொந்து ஆதிமனிதன்...
படம் நன்றி: indiatoday 



share on:facebook

Thursday, April 14, 2011

'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' - சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி


''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப,எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.

ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி,அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்...

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

நன்றி: இமெயிலில் மடல் அனுப்பிய என் நண்பருக்கு.


share on:facebook

Tuesday, April 12, 2011

என்று தணியும் இந்த கிரிக்கெட் மோகம்?

விளையாட்டுல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கிரிக்கெட். இதை சொல்வதில் எனக்கு ஒன்றும் பெருமையோ சிறுமையோ இல்லை. ஆனால் எனக்கு ஏன் கிரிக்கெட் பிடிக்காது என்பதற்கு பல காரணங்கள் உண்டு.

இப்பதான் ஒரு உலக கோப்பை ஆட்டம் முடிந்தது. அதற்குள் இன்னொரு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் குறிக்கோள் என்னதான்  என்றே எனக்கு புரிவில்லை. வருடம் முழுவதும் சம்பாதித்துக்கொன்டே  இருப்பதா? இல்லை எல்லோரும் கிரிகெட் பார்த்துக்கொண்டே இருந்தால்  போதும் வேறு ஏதும் இந்த நாட்டுக்கு செய்ய வேண்டியதில்லையா?

முதலாவதாக கிரிக்கெட்டுக்கு மட்டும் கொடுக்கப்படும் அதீத மரியாதை + முக்கியத்துவம். மற்றொன்று வருடம் பூராவும் கொஞ்சமும் சலிக்காமல்  (ஆனால் சலிப்பை ஏற்படுத்தும் விதமாக) 20 - 20, 50 -50 என மாற்றி மாற்றி ஏதாவது ஒரு ஊரில் விளையாண்டுக்கொன்டே இருப்பது. அது  எப்படி  சலிக்காமல் ரசிகர்களும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்களோ! 

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கிரிகெட்டை மட்டுமே  விளையாடுவதால் நம் பாரம்பரியம் மிக்க, அது பாரம்பரியம் இல்லா  விளையாட்டாக இருந்தால் கூட மற்ற எந்த விளையாட்டையும் நம்  பிள்ளைகள் விளையாடுவதும் இல்லை அதை நாம் வலியுறுத்துவதும் இல்லை. கிரிகெட் ஒரு காலத்தில் மற்ற விளையாட்டுகளில் ஒன்றாகத்தான் இருந்தது. கோலி (பளிங்கு) முதல், பட்டம் விடுவது, ஹாக்கி, கிட்டிபுல் (கில்லி) புட்பால் என சீசனுக்கு தகுந்தார் போல் ஒவ்வொரு விளையாட்டையும் முறை வைத்து விளையாண்டது எங்கள் காலம். இப்போ இந்த கிரிகெட்டை மட்டும் வைத்துக்கொண்டு ஏன் தான் எல்லோரும் காலம் தள்ளுகிறார்களோ எனக்கு தெரியவில்லை.

அடுத்ததாக கிரிகெட் விளையாட 22 பேர் தேவை இல்லை (என்ன? எனக்கு கிரிகெட் அறிவு இருக்கா?) என்றால் கூட குறைந்த பட்சம் நிறைய பேர் தேவை. ஆனால் மற்ற விளையாட்டுகள்  பொதுவாக அப்படி இல்லை. ஒரு சில பேர் இருந்தால் கூட விளையாட முடியும். பெரிய அளவிற்கு ரூல்ஸ் எல்லாம் கிடையாது. விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களும் எளிதாக கிடைக்க கூடியவை.

கிரிகெட் பார்பதினால் பெரிதளவில் பாதிக்கப்படுவது குழந்தைகளே. கிரிகெட் பார்கிறேன் பேர்வழி என்று எந்நேரம் பார்த்தாலும் தொலைகாட்சி பெட்டிக்கு முன் அமர்ந்து கொண்டு கொட்ட கொட்ட பார்த்து கொண்டிருப்பது. இடைவிடாமல் நடக்கும் போட்டிகளால் தங்கள் வீட்டு பாடங்களை கூட முடிக்க முடியாமல் கஷ்டப்படுவது என்று  சொல்லிக்கொண்டே  போகலாம். 

மற்றதை விட்டு தள்ளுங்கள். இந்த பள்ளிகளில் எங்காவது குழந்தைகளுக்கு  மற்ற விளையாட்டுகளை சொல்லி தருகிறார்களா? அல்லது விளையாட  வசதிகளை  ஏற்படுத்தி தருகிறார்களா? இல்லையே.   ஒரு  கணம் கண்களை மூடி சின்னஞ் சிறார்கள் பூட்பால் விளையடுவதையோ, டென்னிஸ் ஆடுவதையோ நினைத்து பாருங்கள். எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது.

எந்த ஒரு பொழுது போக்கு அம்சமாக இருந்தாலும் அது அளவோடு இருந்தால்  தான் ரசிக்க முடியும். பரம ரசிகனாக இருந்தால் கூட ரஜினி மாதத்துக்கொரு  படம் ரிலீஸ் செய்தால் அதை ரசிகர்கள் அதே ஆராவாரத்துடன்  பார்ப்பார்களா என்பது சந்தேகமே. அப்படி இருக்க இந்த கிரிகெட் மட்டும்   மாத  மாதம் அம்மாவாசை வருகிறதோ இல்லையோ மேட்ச் மட்டும்  வந்து விடுகிறது. அதையும் ரசிகர்கள் அலுக்காமல் பார்த்துக்கொண்டே  இருக்கிறார்கள்.

அதே போல் மற்ற எல்லா துறையிலும் அதிகம் சம்பாதிப்பவர்களில்  எல்லோரும் இல்லாவிட்டாலும் கூட ஒரு சிலராவது பொது நலனுக்காக  நன்கொடை  வழங்குவதை பார்த்திருக்கிறேன். இந்த கிரிகெட் வீரர்களை  தவிர. ஒவ்வொரு போட்டியின் போதும் கிடைக்கும் காரையும் பரிசு  பொருட்களையும் என்ன தான் செய்வார்களோ. இவர்கள் தவிர இந்த  விளையாட்டின் மூலம் அதிகம் சம்பாதிப்பது விளம்பர நிறுவனங்களும்  விளம்பரங்கள் மூலம் தங்கள் பொருட்களை வியாபாரமாக்கும் மிக பெரிய  கார்பரேட்களும் தான்.

ஏமாந்த பேர்வழிகள்? அவர் சிக்ஸர் அடித்தார் இவர் ரன் அவுட் ஆனார் என்று விளையாட்டு முடிந்தும் அதை நான்கு நாட்களுக்கு பேசிக்கொண்டு  திரியும் கிரிகெட் ரசிகர்களே...

என்றோ அறிஞர் பெர்னாட்ஷா கூறியது ஏனோ ஞபகத்துக்கு  வருகிறது... பதினோரு ..... விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிக்கும் ஒரு விளையாட்டு 'கிரிகெட்'.

ம்ம்...பலநாள் எழுத நினைத்தை எழுதிவிட்டேன். எதிர்வரும் பின்னூட்டங்களை சந்தித்துதானே ஆகவேண்டும்.

share on:facebook

Friday, April 8, 2011

உதய சூரியனுக்கு 'தடா' - தேர்தல் கமிஷன் அதிரடி.


அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் யாரும் சூரியனை பார்க்க கூடாது, இலை என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. இப்படி கூட தேர்தல் கமிஷன் உத்தரவு போட்டாலும் போடும் போல.

ஒருவரின் பெயர் அவரின் விருப்பத்திற்கேற்பவோ அல்லது அவரின் பெற்றோர்களோ வைக்கும் பெயர். அது அவர்களின் தனி மனித உரிமை. உதயசூரியன் என்ற பெயர் இருப்பதினாலேயே அவர் தி.மு.க. காரரராக இருப்பார் என்று சட்டமில்லை. மேலும் எனக்கு தெரிந்து கருணாநிதி என்ற பெயருள்ளவர் அ.தி.மு.க. விலும் ஜெயலலிதா என்ற பெயர் தி.மு.க. அனுதாபி குடும்பத்தில் உள்ளதும் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தமிழகத்தில் என்ன ஒரே ஒரு கருணாநிதியும் ஜெயலலிதாவும் தான் உள்ளார்களா? கீழே தினமலரில் வெளியாகியுள்ள செய்தியை பாருங்கள். என கொடுமை சார் இது...

போடி: "உதயசூரியன்' என பெயர் வைத்த போடி தாலுகா இன்ஸ்பெக்டர், தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் திருநெல்வேலி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போடி தாலுகா இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் உதயசூரியன். இவர், பொறுப்பேற்று ஒரு மாதமாகிறது. தேர்தல் பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்த பணியில் ஈடுபட்டார். இவர், போடியிலிருந்து திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

நன்றி தினமலர்.


share on:facebook

Tuesday, April 5, 2011

விக்கித்த நரேந்திர மோடி - வேட்டையாடிய கரன் தப்பார்.


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி CNN IBN தொலைகாட்சியில் பிரபல அரசியல் விமர்சகர் கரன் தப்பாருக்கு அளித்த (பழைய) ஆங்கில பேட்டி  கீழே. 

அவர்களின் விவாதத்திற்குள்  செல்ல நான் விரும்பவில்லை. ஆனால் ஒரு  மாநில முதல்வரிடம் பத்திரிக்கையாளர் என்ற ஒரே தகுதியுடன் திரு. கரன்  கேட்ட கேள்விகளும், அதற்கு ஒரு பலம் மிகுந்த மாநில முதல்வராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பதில் அளித்த விதமும், என்னை நிமிர்ந்து உக்கார  செய்தது. 

இதே போல் ஒரு கேள்வியை தமிழகத்தில் யார் முதல்வராக இருந்தாலும்  கேள்வியை கேட்டு விட்டு அந்த நபர் அடுத்த நாள் ...... இருக்க முடியுமா?     

எல்லாவற்றுக்கும் வட இந்தியாவின் பத்திரிகை, தொலைகாட்சிகள் மற்றும்  அரசியல்வாதிகளை சாடுகிற நாம் இதற்கு சலாம் போட்டே தீர வேண்டும்.  


பேனாவின் முனை வாளின் முனையை விட கூர்மையானது என கேள்விபட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மை.

சத்தியமா நான் எந்த கட்சியையும் ஆதரிச்சோ எதிர்த்தோ இந்த பதிவ  போடலைங்க... இன்னும் சொல்லப்போனா நான் தமிழ் நாட்டு எலக்க்ஷன்ல  வோட்டு போட்டே பல மாமாங்கம் ஆவுதுங்க. You  tube  சும்மா துழாவிகிட்டு  இருந்தப்ப பார்த்தேன். பகிர்கிறேன். அவ்வளவுதாங்க.  

share on:facebook

Saturday, April 2, 2011

சொர்க்கமே என்றாலும்...தரணி போற்றும் தஞ்சை தொடர்


தஞ்சையில் உள்ளூர் சிறப்புகள் பல உண்டு. போன வாரம் அதில் சிலவற்றை  குறிப்பிட்டு இருந்தேன். இந்த வாரம் நான்  சொல்லப்போவது  ராமலிங்கம் டீ  கடை  மற்றும் குனகுடிதாசன் சர்பத் பற்றி.

தஞ்சை மேரீஸ் கார்னரில் ராமலிங்கம் டீ கடை மிகவும் பிரபலம். ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் சிறிய இடத்தில் டீ போடுவது போன்றவைகளை வைத்துக்கொண்டு பொதுவாக பிளாட்பாரத்தை அடைத்துக்கொண்டு தான் இந்த டீ கடை பல வருடங்களாக செயல்பட்டது(கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடை மூடப்பட்டதாக கேள்வி). இங்கு ஒரு முறை நீங்கள் டீ சாபிட்டீர்கள் என்றால் பிறகு வேறு எங்கும் டீ சாப்பிட உங்களுக்கு தோணாது. டீ கிளாசில் நுரையை தவிர்த்து பார்த்தால் அரை கிளாஸ் தான் டீ இருக்கும். ஆனால் சுட சுட நன்கு நிறை கட்டிய பாலில் தயாரிக்கப்பட்ட அந்த டீயை நாலு மடக்கு சாப்பிட்டால் போதும். நாள் முழுதும் டீயின் சுவை உங்கள் நாவிலே ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த சுவைக்கு காரணம், தண்ணீர் கலக்காத பாலை  நாள் முழுதும் நிறை கட்டி (பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைத்துக்கொண்டே இருக்கும் போது அதன் மொத்த அளவு குறைந்து விடும். ஆனால் மீதமுள்ள  பால் மிகவும் ஸ்ட்ராங்காக ஆகி விடும்) அதை ஒரு ஸ்பூனோ  இரண்டு ஸ்பூனோ உங்கள் டீயில் கலப்பதுதான்.  இருபத்து நாலு மணி நேரமும் கடை எப்போதும் கூட்டமாகவே இருக்கும். அதிலும் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது அங்கு ஒரு டீ அடித்து விட்டு கிளம்பினால்...சும்மா சுகமா இருக்கும்.

அடுத்ததாக குணங்குடி தாசன் சர்பத்: தஞ்சை கீழவாசலில் குணங்குடி தாசன் சர்பத் ஸ்டால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உண்டு. இங்கு  அவர்களே சர்பத்துக்கான மூலப் பொருளை தயார் செய்கிறார்கள். கடையின்  முன்பு சில்லறை வியாபாரமாக கோடை காலங்களில் சர்பத் வியாபாரம்  கொடிகட்டி பறக்கும். வரிசையாக ஒரு 20 - 30 கிளாசுகளை வைத்து  ஒன்றன்பின் ஒன்றாக ஒரு 10 நிமிடத்தில் சர்பத் பானத்திற்கு தேவையான  ஐஸ் போடுவதில்  ஆரம்பித்து, பின் பால் ஊற்றி, சர்பத் மிக்ஸ் கலந்து,  பாதாம் சேர்ப்பது வரை அதை பார்த்துக்கொண்டே கூட்டம் பொறுமையாக  தங்கள் சர்பத் கிளாசுக்காக காத்திருக்கும். சர்பத் ரெடியான அடுத்த நொடி  எல்லா சர்பத்களும் விற்று தீர்ந்து விடும். நல்ல வெயில் காலத்தில் சில்லென்று அவர்கள் தரும் சர்பத்தை நாளெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே  இருக்கலாம். விலையும் அதிகம் கிடையாது. இங்கிருந்து சர்பத் பாட்டில்களை  வாங்கி வந்து நம் வீட்டிலேயே நாம் சர்பத் செய்து கொள்ளலாம்.  அவ்வளவு  நன்றாக இருக்கும். அடுத்த முறை நீங்கள் தஞ்சை சென்றால் தஞ்சை பழைய  பேருந்து நிலையம் அருகில் உள்ள கீழவாசல் சென்று குணங்குடி தாசன் சர்பத்தை பருகி பாருங்கள்.   

சிறப்புகள் தொடரும்... 

share on:facebook

இதிலாவது இலங்கையிடம் நாம் வெற்றி பெற்றோமே!

 வாழ்த்துக்கள்...


share on:facebook