Thursday, March 29, 2012

அமெரிக்க மாப்பிளைகள்: மவுசு குறைய காரணம் என்ன ?


ஒரு காலத்தில் மாப்பிள்ளை டாக்டர். லண்டனில் இருக்கிறார், அமெரிக்காவில் வசிக்கிறார் என பெருமையாக கூறுவார்கள். கடந்த பத்தாண்டுகளில் இது மாறிப் போய், பையன் அமெரிக்காவில் சாப்ட் வேர் என்ஜினியராக உள்ளார் என பெருமையாய் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அது இன்னும் எவ்வளவு நாள் நீடிக்க போகிறது என தெரியவில்லை.

சமீப காலமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் பலருக்கும் பெண் கொடுக்க பெற்றோர்களுக்கும், திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கும் அவ்வளவாக விருப்பம் இல்லாதது போல் ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இதற்க்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் பொதுவாக சொல்லப் படுகிற காரணம், பையன் அமெரிக்காவில் இருக்கிறான், அவன் அங்கு என்ன செய்கிறான் என முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியாது, யாரிடமும் விசாரிக்க முடியாது. கெட்டவனாக இருந்துவிட்டால் என்ன செய்வது? அவனுக்கு வேறு ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால் என்ன செய்வது? இது தான் பெரிய கவலை அவர்களுக்கு.

இவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அமெரிக்காவிற்கு யாரையும் யாரும் வெத்தலை பாக்கு வைத்து அழைப்பதில்லை. IT இல் வேலை பார்த்தால் கூட அவர்களும் பல சவால்களை சந்தித்து தான் இங்கு வருகிறார்கள். அப்படி பார்த்தால், அப்படி கஷ்டப் பட்டு தன்னுடைய உழைப்பையும் திறமையையும் மட்டுமே நம்பி இங்கு வருபவர்கள் எப்படி இங்கு வந்து கெட்டு போவர்கள் என்று நம்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை. மேலும் கெட்டு போவதற்கு நம் ஊரில் தான் அதிக வாய்ப்புகள்.

நம்ம ஊர் மீடியாவும்/சினிமாவும் இதற்க்கு ஒரு காரணம். உதாரணத்திற்கு T. ராஜேந்தரின் பழைய படங்களில் காலேஜ் மாணவர்கள் எல்லோருமே காதலிப்பவர்களாகவும், சிகரெட் பிடிப்பவர்களாகவும், பிட் அடித்து மட்டுமே தேர்வு எழுதுபவர்களாகவும் மட்டுமே காண்பித்து, காண்பித்து கல்லூரி மாணவர்கள் என்றாலே அவர்கள் ஊதாரிகளாகவும், பொறுக்கிகளாகவும் மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். அது போல் தற்போது IT மக்களின் நிலைமையும் ஆகிவிடுமோ என ஐயம் ஏற்படுகிறது. IT யில் வேலை செய்யும் எல்லோரும் பப்புக்கு போவதில்லை என சொன்னால் இவர்கள் நம்பத் தயாரில்லை. நம்புங்கள்...இத்தனை வருடங்களில் எனக்கு 'பப்' எப்படி இருக்கும் என்றே தெரியாது. ஒரு முறை கூட நான் சென்றதில்லை.


இந்த விசயத்தில் வட இந்தியர்களும் மற்ற பிற தென் மாநில மக்களும் ஓகே. தமிழர்கள் தான் அமெரிக்க மாப்பிளைகளுக்கு பெண் கொடுக்கவும், பெண்கள் திருமணம் செய்து கொள்ளவும் தயங்குகிறார்கள். இத்தனைக்கும் தமிழக பெண்கள் பெரும்பாலும் நன்கு படித்து பட்டம் பெற்றவர்கள். என்னுடைய நண்பர் ஒருவர் பெண் பார்த்த போது (பெண் இத்தனைக்கும் பி.ஈ கம்ப்யூடர் சயின்ஸ் படித்தவர்) அப்பெண், இந்தியாவிற்கு திரும்பி வருவதென்றால் மட்டும் திருமணம் செய்து கொள்கிறேன் என பிடிவாதமாக கூறி விட்டார். நண்பரும் இப்படி பிடிவாதமான பெண் எனக்கு வேண்டாம் என கூறி விட்டார்.

அதே போல் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார சறுக்கலும் அமெரிக்க மாப்பிளைகளின் மவுசு குறைய ஒரு காரணம். அங்கு வாங்கும் சம்பளத்தில் பாதி இங்கு வாங்கினாலும் பரவாயில்லை. இந்தியாவில் வேலை செய்யும் மாப்பிளை தான் வேண்டும் என சிலர் இன்னும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் அறுபது வயது வரையான அரசாங்க உத்தியோக சுகம் போகவில்லை. இவர்கள் ஐம்பது வயதில் சம்பாதித்ததை IT இல் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடத்தில் சம்பாதித்தாலும், 'நிலையான உத்தியோகம்' என்ற பொலம்பல் இன்னும் நிற்கவில்லை.     

இவை எல்லாவற்றுக்கும் மேலாக படித்து வேலைக்கு போகும் பெண்களாக இருப்பின் அவர்கள் தற்போது இந்தியாவில் பார்க்கும் வேலையை விட விருப்பம் இல்லாமையும், தங்கள் தாய் தந்தையரை அடிக்கடி பார்க்க முடியாது என்ற காரனங்களுக்காகவும் அமெரிக்க மாப்பிள்ளைகள் வேண்டாம் என்று கூறுவதும் உண்டு.

நல்ல வேலை, இதல்லாம் நடப்பதற்கு முன் நமக்கு திருமணம் முடிந்து விட்டது...

IT மக்களின் சங்கடங்கள் பற்றிய பிரபல பதிவுகள்...

அமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்

முதிர் கண்ணன்கள்: திருமணம் ஆகாமல் தவிக்கும் IT ஆண்கள். 

share on:facebook

Wednesday, March 28, 2012

கமலின் மும்பை IIT பேச்சு...பழசுதான் ஆனாலும் worth sharing...share on:facebook

Tuesday, March 27, 2012

அமெரிக்க டி.வி. சீரியல்களும் நம்மூர் அழுக்காச்சி டி.வி. தொடர்களும்


இந்தியாவில் இருந்தவரை ஆங்கில படமென்றால் அது ஆக்சன் படமாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றும் பலரும் அது போல் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஆங்கிலத்திலும் அருமையான படங்கள் வெளி வருகின்றன.

நம்மூர் பாலசந்தர், பாரதி ராஜாவெல்லாம் தோத்துப் போகும் அளவுக்கு இவர்களும் திரைப் படம் எடுக்கிறார்கள். என்ன ஒன்று. இதெல்லாம் அதிகமாக நம்மூரில் திரை இடப் படுவதில்லை. இப்போது கொஞ்சம் தேவலாம். இன்டர்நெட், டி.வி.டி. இவை எல்லாம் வந்த பின் நிறைய நல்ல ஆங்கில படங்கள் நம்மூருக்கும் வருகிறது.

திரைப் படங்களை விட்டு தள்ளுங்கள். டி.வி. தொடர்களில் நம்மூரை மிஞ்சும் அளவிற்கு இங்கும் மெகா தொடர்கள் உள்ளன. ஆனால், அவைகளை தினமும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவைகள் பெரும்பாலும் நகைச்சுவை கலந்த குடும்ப அல்லது நண்பர்கள் பற்றியதாக இருக்கும். சொல்வதற்கு பல தொடர்கள் இருந்தாலும் 'Friends' மற்றும் 'Everybody loves Raymond' ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை (பெரும்பாலானோருக்கு).

1996 முதல் 2005  வரை மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பான 'Everybody loves Raymond' அதன் இயக்குனர் ரே (ரேமன்ட்) என்பவற்றின் வாழ்வில்/குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக கொண்டு எடுக்கப் பட்ட தொடராகும். இத் தொடர்களில் வரும் பெரும்பான்மையான பாத்திரங்களும் அவரின் நண்பர்கள் மற்றும் உறவுகளின் வாழ்வில் நடை பெற்ற உன்னை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப் பட்டவையே ஆகும்.

முழுக்க முழுக்க மாமியார் மருமகள், கணவன் மனைவி, கொழுந்தனார், குழந்தைகள் என இவர்களை சுற்றியே ஒவ்வொரு எப்பிசொடுகளும் எடுக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் நகைசுவை 100 % கியாரண்டி. 2005 லேயே இத்தொடர் முடிவுற்றாலும் இன்னமும் தினமும் குறிப்பிட்ட சானல்களில் பழைய தொடர்களை மீண்டும் ஒளி பரப்பி வருகிறார்கள். அமெரிக்காவில் தினமும் உள்ள வேலை பளுவினால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் நீங்க ஒரு அரை மணி நேரம் இத்தொடரை பார்த்தால் போதும். மைன்ட் தானாக ரிலாக்ஸ் ஆகி விடும்.  

ரே, டெப்ரா இவர்கள் கணவன், மனைவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் (இரட்டை பிறவிகள்) ஒரு மகள். ரேவின் பெற்றோர் மேரி, பரோன். அதாவது டெப்ராவின் மாமியார் மாமனார். ரேவின் மூத்த சகோதரர் ராபர்ட். இவரின் காதலி (பிறகு இவரையே மணக்கிறார்) இவர்களை சுற்றியே பெரும்பாலும் எல்லா எப்பிசொடுகளும் இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் அனைத்து கருத்து மோதல்களும், சமரசங்களும், மாமனார் மாமியார் பிரச்சனைகள் என இந்தியாவில் நாம் அன்றாடம் பார்க்கும்/சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக நகைச்சுவையுடன் சொல்லி இருப்பார்கள். இவையெல்லாம் பார்த்த பின்தான் எனக்கே அமெரிக்காவிலும் மாமியார் மாமனார் கொழுந்தனார் பிரச்சனைகள் உண்டு என்பதை அறிந்து கொண்டேன்.

எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் ரேவின் தந்தை  பரோன், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் சப்போர்ட் செய்வார். இவர் குண நலன்கள் எல்லாம் என் தந்தையை நினைவு படுத்துவதால் எனக்கு இவரின் பாத்திரம் மிகவும் பிடிக்கும்.

மேரி. எப்போதும் தன் மருமகளிடம் குற்றம் கண்டு பிடிக்கும் இவர், தன் இளைய மகன் மீது மட்டும் கொஞ்சம் அதிகம் கரிசனை காட்டுவார். இதனால் பாதிக்கப் படும் டெப்ராவும், மூத்த மகன் ராபர்ட்டும் சமயம் வரும்போது  தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்துவது அழகு. அதே நேரத்தில் மனைவிக்கும், அம்மாவுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தில் ரே தவிக்கும் ஒவ்வொரு சீனும் அற்புதமாக இருக்கும்.

ஹ்ம்ம்..இன்னொன்றை மறந்து விட்டேன். ராபர்ட்டின் காதலியாக வந்து மனைவியாகும் ஏமி மற்றும் அவரின் பெற்றோர், அண்ணன் பத்திரங்களும் ரொம்ப வித்தியாசமானவை. அதே போல், ரேவின் குழந்தைகளாக வரும் கதாபாத்திரங்களும் தொடர்ந்து நடித்து வந்ததால் முதல் நூறு எப்பிசொடுகளில் கை குழந்தைகளாக வந்து கடைசி நூறு தொடர்களை பார்க்கும் போது அவர்கள் வளர்ந்திருப்பார்கள். இது இத் தொடர் முழுவதற்கும் ஒரு உயிரோட்டத்தை கொடுப்பதாகவே என் எண்ணம்.

இங்கு அமெரிக்காவில், Everybody Loves Raymond தொடர்கள் அனைத்தும் வீடியோ/CD களாக கிடைக்கின்றன. இணைய தளத்திலும் பல எப்பிசோடுகள் உள்ளன. முடிந்தால் பார்த்து விட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

குறிப்பு: சில எப்பிசொடுகளில் வரும் குறிப்பிட்ட காட்சிகள் சிறியவர்களுக்கு ஏற்றதல்ல.

share on:facebook

Sunday, March 25, 2012

இலங்கை தமிழர் பிரச்னை : நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆங்கில நாளேடுகள்.


சென்ற பதிவில் இலங்கை தமிழர் பிரச்சனையில் நம்மூர் ஆங்கில நாளேடுகளின் இரட்டை வேடம் பற்றி எழுதி இருந்தேன். இந்து பத்திரிக்கை தான் அப்படி என்றால் தற்போது தென்னகத்தில் வேகமாக வளர்ந்து வரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும் அப்படிதான். இது இன்னும் மோசமாக தனது கருத்தை வெளியிட்டு உள்ளது.

நான் முன்பே கூறியிருந்தது போல் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஆரம்பம் முதல் நாம் (இந்தியா) தான் காரணம். நம் சுய நலன்களுக்காக அவர்களை பாடாய் படுத்தி இன்று நடு தெருவில் நிறுத்தி இருக்கிறோம். அது மட்டுமன்றி தமிழ் இனத்தின் ஜனத்தொகையில் பாதிக்கும் மேல் பலிகொடுத்து விட்டோம்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தின் படி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் ஆசிய கண்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப் பட்டோமாம். அதற்க்கு தமிழகம் தான் காரணமாம். நம் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷுடன் ஒன்று சேராமல் நாம் போனதற்கு தமிழர்கள் தான் காரணமாம். தெரியாமல் தான் கேட்கிறேன், இவர்கள் எல்லாம் நமக்கு என்ன நட்பு தேசங்களா என்ன? அருணாசலம் எங்கள் நாட்டை சேர்ந்தது என்று சீனாவும், ஜம்மு காஸ்மீர் எங்களது என்று பாகிஸ்தானும், இந்தியவிற்க்குள் ஊருடுவும் தீவிரவாதிகள் அனைவரும் பங்களாதேஷ் மூலமும் தான் வருகிறார்கள்.

இவர்களுடன் சேர்ந்து நாம் இலங்கைக்கு அதரவாக ஓட்டளிக்க வேண்டுமாம். இது என்ன நியாயம் என தெரியவில்லை. அது மட்டும்மல்ல, இலங்கைக்கு உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தால் அதனால் இலங்கை தமிழர்கள் தான் பாதிக்கப் பட போகிறார்களாம். என்ன இலங்கையில் வாழும் தமிழர்கள் கார் வாங்கவும், இறக்குமதியாகும் பொருட்களையும் வாங்கவும்  முடியாமல் அழ போகிறார்களா? அந்த நிலைமையிலா அவர்கள் இருக்கிறார்கள்?

இலங்கை அதிபர் ராஜபக்சேவை விட இவர்கள் தான் இலங்கையை பற்றி அதிகம் கவலை படுகிறார்கள். உண்மையை சொல்லப் போனால் விடுதலை புலிகள் நல்லவர்களோ கெட்டவர்களோ அவர்கள் இருந்தவரை நம் இந்திய பூலோக நலன்கள் காக்கப் பட்டது. சீனாக்காரனோ வேறு யாரோ இலங்கையில் காலடி வைக்க தயங்கினார்கள். ஆனால், இன்று அவர்களுக்கு எல்லாம் சிகப்பு கம்பள விரிப்பு. இதை எல்லாம் மறைக்கத்தான் எப்போது பார்த்தாலும் புலிகள் அகண்ட தமிழ் ஈழம் அடைய தமிழகத்தை தங்களுடன் இணைக்கும் திட்டம் போட்டுள்ளார்கள் என்று இவர்களாக ஒரு கதையை அவ்வப்போது பரப்பி அவர்களை இந்தியாவின் எதிரியாக எப்போதுமே பார்க்கப் பட வைத்ததாக விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.


எது எப்படியோ, அமெரிக்க தீர்மானத்தால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் போதும். அப்படியே நம்புவோமாக.

தொடர்புடைய பதிவுகள்...

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.

share on:facebook

Thursday, March 22, 2012

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.


'Genocide' என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் தேடினால் ஆப்பரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இலங்கை அரசு தான் பொருத்தமான உதாரணமாக இருக்கும். ஆனால், இலங்கை தமிழர்கள் ஆப்ரிக்க நாட்டவர்களை போல் காட்டு வாசிகள் இல்லை. படிப்பு, வியாபாரம், அரசியல் என்று பல துறைகளிலும் இலங்கையில் கோலோச்சினார்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு ஆபத்தாக கடைசியில் முடிந்தது.

ஆரம்பம் முதல் இலங்கை தமிழர் பிரச்னை இந்த அளவிற்கு வளர காரணம்  தமிழக அரசியல் வாதிகளும் இந்திய அரசாங்கமும் தான் என்பது விபரம்  அறிந்தவர்களுக்கு தெரியும். தமிழக அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக பிரச்சனையை ஊதி பெருக்கினார்கள் என்றால் இந்திய அரசு முற்றிலும் சுயநல போக்குடன் இந்தியாவின் பூலோக நலனுக்காக ஒரு இனத்திற்கு எதிராக ஆரம்பம் முதல் செயல் பட்டது.

இப்போது இந்த அரசியல் தலைவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்தியாவில் உள்ள ஆங்கில நாளிதழ்கள் நடந்து கொள்கின்றன. அதற்க்கு காரணம் சுயநலமும், வியாபார நோக்கமுமும் தான்.

ஒரு காலத்தில் 'தி ஹிந்து' நாளிதழும், அதன் ஆசிரியர் திரு. ராமும் எல்லோராலும் மதிக்கப் பட்டவர்கள். குறிப்பாக திரு. ராம் அவர்கள் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாகவும், பொது நல வாதியாகவும் அடிக்கடி காட்டிக் கொள்வார். ஆனால், ஊர் உலகத்தை பற்றி எல்லாம் எழுதும் அவர் மீதே நில மோசடி வழக்கு உள்ளது. இலங்கையில் நடந்த போரை பற்றி எல்லோரும் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் பக்கம் பக்கமாக தனது நாளிதழில், புகைப் படத்துடன் இலங்கை அரசு எவ்வாறு தமிழ் அகதிகளை சிறப்பாக 'கேம்ப்' புகளில் கவனித்துக் கொள்கிறது என்று ஊருக்கு ஒப்பாரி வைத்தார். முள் வேலிக்குள், டெண்டிர்க்குள் அப்பாவி மக்களை அடைத்து வைத்திருப்பதற்கு ஒரு பாராட்டுப் பத்திரம்.


இலங்கை அரசின் விருந்தினராகவே கவனிக்கப் பட்ட திரு. ராமிற்கு இலங்கை அரசை பற்றி புகழ்ந்து எழுதுவதும், அதன் அதிபர் ராஜபக்சேவை நேர்காணல் செய்வதுமையே தனது தலையாய கடமையாக கொண்டிருந்தார். இவை எல்லாவற்றுக்கும் காரணம், அவருக்கு இலங்கை அரசு கொடுத்த விருதும், அவரின் பத்திரிக்கையை இலங்கையில் அச்சடித்து விநியோகம் செய்ய அனுமதி அளித்ததும் தான் என்பது பரவலான குற்றச்சாட்டு.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு கட்டத்தில் இந்தியாவின் ஒரு அங்கமான அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் போக்குக்கு அதரவாக நடக்க ஆரம்பித்தார். கேரள மீனவர் ஒருவர் சுடப்பட்டு இறந்தார் என்பதற்காக இத்தாலிய கப்பலை கையகப் படுத்தி கப்பல் ஊழியர்களை கைது செய்து இரு நாட்டு உறவு பாழாய் போகும் அளவிற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்க்கு காரணம், இந்த ஆங்கில பத்திரிக்கைகளின் ஊளை தான். ஆனால், தினம் தினம் இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை தாக்கிக் கொண்டு இருக்கிறது. அது பற்றி எந்த ஒரு ஆங்கில பத்திரிக்கையும் மருந்துக்கு கூட செய்தி வெளியிடுவதில்லை.


தி.ஹிந்துவிற்கு அடுத்த படியாக, தற்போது இலங்கை தமிழர் நலனுக்கு எதிராக நரித்தனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அடுத்த பத்திரிகை ...அது பற்றி அடுத்த பதிவில்...

இலங்கை பிரச்னை பற்றிய வேறு சில பதிவுகள்...

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.


share on:facebook

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவாக ஓட்டளிப்புஜெனீவா: ஐநா.,மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24 நாடுகள் ஒட்டளித்துள்ளன. முடிவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நடந்த புலிகள் ஒழிப்பு நடவடிக்கையில் இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும், இங்கு நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பான விவாதங்கள் கடுமையாக நடந்தன. இந்த விவாதம் முடிந்த நிலையில் சற்று முன்பு நடந்த ஓட்டடெடுப்பில் இந்தியா, உள்ளிட்ட 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் நியமிக்கப்பட்டிருந்தது. கற்ற பாடங்கள், நல்லிணக்க குழு என்ற குழுவை இலங்கை அரசு நியமித்தது. ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்த வலியுறுத்தியே அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. தற்போது இந்த தீர்மானம் வெற்றியடைந்திருப்பதால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை சர்வதேச நாடுகள் விதிக்கும். இதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தடைபடும்.

வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதமர்: கடந்த வாரம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என பார்லி.,யில் தமிழக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர், இந்நேரத்தில் பதில் அளித்த பிரதமர் இலங்கை எதிரான தீர்மானத்தில் அமெரிக்காவை ஆதரிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார் . இதன்படி இந்தியா தமிழர்கள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறது.

தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகள் பட்டியல்: ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, கவுதமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிஷியஸ், மெக்சிகோ, நைஜிரியா, நார்வே, பெரு, போலந்து, மால்டோவா, ருமேனியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் உருகுவே.

இலங்கைக்கு ஆதரவாக ஓட்டளித்த நாடுகள் பட்டியல்: வங்கதேசம், சீனா, காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மவுரிடானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் உகாண்டா.

ஓட்டெடுப்பை புறக்கணித்த நாடுகள் பட்டியல்: அங்கோலா, போஸ்ட்வானா, பர்கினோ பாசோ, ஜிபூடி, ஜோர்டான், கிர்கிஸ்தான், மலேசியா மற்றும் செனகல்.

நன்றி: தினமலர்.காம் செய்தி.

share on:facebook

Wednesday, March 21, 2012

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.


போர் குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ. நாவில் அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டு வந்திருக்கும் இவ்வேளையில், ஆப்கானிஸ்தானில்  ராணுவ பணியில்  இருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கடந்த ஆண்டு ஒன்றும் அறியாத அப்பாவி பொது மக்கள் பதினாறு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் அவரின் மீது அமெரிக்க ராணுவ நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இவ்வழக்கில் அவருக்கு அதிக பட்ச தண்டனையாக தூக்கு தண்டனையை வழங்க ஏதுவாக பிராசுகூஷன் தரப்பில் தற்போது வழக்கை தயார் செய்து  வருவதாக சமீபத்து செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுவரை எந்த ஒரு அமெரிக்க ராணுவ நீதிமன்றமும் யாருக்கும் தூக்கு தண்டனை வழங்கியதில்லை என்றாலும் இந்த முறை வழக்கின் தன்மையை கருதி ராணுவ தரப்பில் குற்றம் சாட்டப் பட்ட ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை வாங்கி தர முயற்சிப்பதாக சொல்லப் படுகிறது.

அதற்க்கு சொல்லப் படும் முக்கிய காரணம், போரில் நேரடியாக சம்பந்தப் படாதவர்கள் அதிலும் சுட்டுக் கொள்ளப் பட்ட பதினாறு பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஆவர். இது மன்னிக்கப் பட முடியாத குற்றம் என்று காரணம் கூறப் படுகிறது.

இந்த செய்தி தான் தற்போது இலங்கையில் ராஜபக்க்ஷே சகோதரர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இல்லையா பின்னே? அப்பாவி மக்கள் பதினாறு பேரை சுட்டுக் கொன்ற ஒருவரே தூக்கு தண்டனையை எதிர்  நோக்கி இருக்கும் சமயத்தில் லட்சக் கணக்கான அப்பாவி பொது மக்கள்  குழந்தைகள், பெரியோர்களை ஈவு இரக்க மின்றி கொலை செய்ய காரணமான   ராஜபக்க்ஷே சகோதரர்களின் நிலைமை என்னாகும்?

காமெடி # 1 
மன்மோகன் சிங்: இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பது சம்பந்தமாக சப்பை கட்டு கட்டி வரும் நம் இந்திய பிரதமர், தீர்மானத்தின் நகல் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் அது பற்றி ஆராய்ந்து நல்லதொரு முடிவு எடுக்கப் படும் என கூறி உள்ளார். அட ராமா? தீர்மானம் என்ன தபால் கார்டிலா அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. உலகமே  அதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொது நம் பிரதமருக்கு மட்டும் அது பற்றி ஒன்னும் தெரியவில்லை. வேறு எது தான் தெரியும் இவருக்கு?

காமெடி # 2:
அ.தி.மு.க., தி.மு.க : இலங்கை தமிழர்கள் மீது திடீர் கரிசனம் காட்டும் அ.தி.மு.க, இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும்  வகையில் பாராளுமன்றத்தில் ஒரு திருத்த தீர்மானம் கொண்டு வந்தது.  இந்த தீர்மானம் வோட்டெடுப்புக்கு விடும் நேரம் தி.மு.க. உறுப்பினர்கள்  அனைவரும் நைசாக வெளி நடப்பு செய்து விட்டார்கள். போர் என்றால் அதில் பொது மக்களும் சாகத் தான் செய்வார்கள் என திருவாய் மலர்ந்த  புரட்சித் தலைவியும், அரை நாளில் உண்ணாவிரதம் இருந்த தமிழின  தலைவர், போர் முடிந்து விட்டது. தூவானம் விட சற்று நாளாகும் என கூறிய  பிறகு தான் அனைத்து தமிழர்களும் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்கள். 
 
இவர்களை நம்புவதை விட எங்கோ இருக்கும் அமெரிக்கா காரனை  தாராளமாக நம்பலாம்.

போர் குற்றம் பற்றிய காணொளியை இங்கே காணலாம்...


share on:facebook

Tuesday, March 20, 2012

இந்திய பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்த நார்வே அரசு - குற்றச்சாட்டும், திருப்பமும்.

குழந்தைகளுக்கு கையால் சாப்பாடு ஊட்டினர். அவர்களை தங்களுடன் படுக்கையில் ஒன்றாக தூங்க வைத்தனர். இது தான் நார்வே அரசின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்காக மூன்று மாதங்களுக்கு முன் நார்வேயில் வாழும் இந்திய பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் மூன்று மற்றும் ஒரு வயது குழந்தையை பிரித்து அவர்களை நார்வே அரசின் குழந்தைகள் நல்வாழ்வு மையத்தில் ஒப்படைத்தது நார்வே அரசு.

கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கு  இந்திய வெளி உறவு துறை மற்றும் நார்வே அரசுக்கு பெரும் தர்ம  சங்கடத்தை ஏற்படுத்தியது. வழக்கம் போல் நம் இந்திய மீடியாவும் பேனை பெருச்சாளி ஆக்கி நார்வே அரசை ஒரு அரக்கத்தனமாக சித்தரித்து மேலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. நார்வே அரசு ஆரம்பத்தில் இருந்து இதை மறுத்து வந்தாலும் யாரும் நம்பத் தயாராக இல்லை.

இந்நிலையில், குழந்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் இந்திய அரசு முயற்சி எடுத்துக் கொண்டிருக்க குழந்தைகளின் மாமா குழந்தைக்கு இந்தியாவில் கார்டியனாக இருப்பதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். இவை எல்லாம் நேற்று வரை. இன்று திடீர் திருப்பமாக குழந்தையின் தந்தையே குழந்தைகள் நார்வேயின் குழந்தைகள் நல்வாழ்வு மையத்தில் இருப்பதையே தாம் விரும்புவதாகவும், தன் மனைவி ஒரு கொடுமைக் காரி எனவும், பல நேரங்களில் தன்னை அடிக்கடி  அடித்து துன்புறுத்தியதாகவும்,  குழந்தைகளுக்காக இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டதாகவும்  தற்போது  தெரிவித்துள்ளார். 

இதற்க்கு ஆதாரமாக தாங்கள் பல முறை குடும்ப பிரச்சனைகளுக்காக கவுன்சிலிங் சென்றதையும் கூறியுள்ளார். மேலும் நார்வே அரசுத் தரப்பில், அக்குழந்தைகள் கடுமையான மன சிதைவுக்கு ஆளாகி உள்ளதாகவும், பெற்றோர்கள் அடிக்கடி சண்டை இட்டு கொண்டதும், கை கலப்பில் இறங்கியதும் அச் சிறு குழந்தைகளை பெரிதும் பாதித்ததால் அவர்களுக்கு  பெற்றோர்கள் மீது இருந்த பாச பிணைப்பு உடைந்து சிதைந்து போய்  விட்டதாக  குற்றம் சாட்டி உள்ளனர்.

கடைசியாக குழந்தைகளை இந்தியாவில் தத்து எடுத்து பார்த்துக் கொள்வதாக கூறி இருந்த குழந்தைகளின் மாமாவும் இன்று தன் முடிவில் இருந்து பின் வாங்கி உள்ளார். அவர் கூறுகையில், குழந்தைகளுக்கு தற்போது உள்ள வசதியான சூழ்நிலையை தன்னால் தர இயலாது என தான்  பயப்படுவதாக தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தையின் தந்தையே தன் குழந்தைகள் நார்வே வளர்பகத்தில் வளருவதையே தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உண்மை எல்லாம் வெளி வருவதற்கு முன்பே இந்திய அரசியல் வாதிகளும் (பி. ஜே. பியின் சுஸ்மா சுவராஜ் உட்பட), பத்திரிகை, தொலைகாட்சிகளும் நார்வே அரசை ஒரு நரகசுரன் போல் சித்தரித்து முடித்து விட்டன.

* நார்வே குழந்தைகள் காப்பகம் என சொன்னாலும், அவர்கள் ஒரு இந்திய குடும்பத்தின் பராமரிப்பில் தான் உள்ளனர் என்பது ஒரு கூடுதல்  செய்தி. இதிலிருந்தே தெரியவில்லையா? நார்வே அரசுக்கு குழந்தைகள்  மீது உள்ள அக்கறை.  


share on:facebook

Sunday, March 18, 2012

அமெரிக்க டிரைவிங் லைசன்ஸ் அவ(வி)திகள்: பாகம் - 1


உங்களிடம் ஒருவர் வந்து நம்மூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் எதற்கும் லஞ்சம் வாங்குவதில்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் நம்பத்தான் வேண்டும் நீங்கள். ஆம், ஆனால் ஒரே ஒரே வித்யாசம். நம்மூர் என்று நான் சொன்னது அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு நகரத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை (DMV).

அமெரிக்காவில் DMV என்று சொல்லப் படுகின்ற நம்மூர் வட்டார போக்குவரத்து அலுவலக செயல்பாடுகள் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. அதை பற்றி எழுதுவதால் உடனே இந்தியாவை பற்றி குறை கூறுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆதங்கத்தில் தான் இதை எழுதுகிறேன். 

அமெரிக்காவில் டிரைவிங் லைசன்ஸ் என்பது நம்மூர் ரேஷன் அட்டையை போன்ற மிக முக்கியமான ஒரு ஆவணம். வண்டி ஓட்டும் உரிமையை தருவதை விட ஓட்டுனர் அடையாள அட்டை இங்கு ஒரு முக்கியமான அடையாள அட்டையாக (identity card) கையாளப் படுகிறது. பாங்கில் அக்கவுன்ட் ஓபன் பண்ணுவது முதல், ஹோட்டலில் ரூம் போடுவது வரை இங்கு ஓட்டுனர் உரிமையையை தான் அடையாள அட்டையாக உபயோகிக்கிறார்கள். அதுவும் இல்லாமல் கார் ஓட்ட முடியாது என்பது இங்கு ஒரு கால் இல்லாதவன் போல் ஆகும். ஆகவே ஓட்டுனர் உரிமை பெறுவது என்பது இங்கு நம்மூர் எஸ். எஸ். எல். சி. தேர்வு எழுதி பாஸாவது போல.

அப்படி பட்ட முக்கியவத்துவம் வாய்ந்த ஓட்டுனர் உரிமையை பெறுவதற்கு இங்கு ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலானோர் முதலில் எழுத்து தேர்வு எழுத வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விதிமுறை இருந்தாலும் பொதுவாக நாற்பது கேள்விகள் இருக்கும். அதில் குறைந்த பட்சம் முப்பத்தி நாலு கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் தான் 'பயிற்சி' ஓட்டுனர் உரிமை தருவார்கள்.

எழுத்து தேர்விற்கு ஏதோ பப்ளிக் எக்ஸ்சாமுக்கு தயாராவது போல் போக்கு வரத்து விதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் படித்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பத்து வருடம் அமெரிக்காவில் கார் ஒட்டி இருந்தாலும் இன்னொரு மாகாணத்திற்கு செல்லும் போது அங்கு எழுத்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதை பாசாகாமல் நமக்கு ரெகுலர் லைசன்ஸ் கிடைக்காது. ஆன்லைன், பழைய வினாத்தாள்கள் என எல்லாவற்றையும் படித்து பார்க்க வேண்டும்.

எழுத்து தேர்வில் தேர்வாகி விட்டால் அவர்களுக்கு பயிற்சி ஓட்டுனர் உரிமை தருவார்கள். பயிற்சி ஓட்டுனர் உரிமை வைத்திருப்பவர்கள் 'L' போர்ட் எல்லாம் போட்டுக் கொண்டு காரை ஓட்ட வேண்டியதில்லை. அதே நேரம் உரிய லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவர் வண்டி ஓட்டுபவரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்.

அமெரிக்காவில் பொதுவாக மக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் 'DMV' அலுவலகமும் ஒன்று. ஆனால், நம்மூர் மாதிரி உள்ளே நுழைவதற்கு அரை கிலோ மீட்டார் முன்பே புரோக்கர்களையும், தரகர்களையும் பார்க்க முடியாது. உரிய பயிற்சி ஓட்டுனர் லைசன்ஸ், வாகனத்திற்கான காப்பீடு, பதிவு அட்டை ஆகியவற்றுடன் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவருடன் சென்றால் தான் 'ரோடு டெஸ்ட்' எடுத்துக் கொள்ள முடியும். டெஸ்ட் எடுக்கும் முன், காரின் முக்கியமான கருவிகள், செயல்பாடுகளை காண்பிக்க, செயல்படுத்த சொல்லி கேட்பார்கள். அதற்கும் மதிப்பெண் உண்டு. அதன் பிறகே கண்காணிப்பாளர் உங்களுடன் அமர்ந்து வண்டியை ஓட்டச் சொல்லி கேட்பார்.

அதன் பிறகு ரோடு டெஸ்ட் எப்படி இருக்கும். அது அடுத்த பதிவில்...

அமெரிக்க போலீஸ் பற்றி கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.

அமெரிக்க அரசு பள்ளிகள் பற்றி அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா?

share on:facebook

Thursday, March 15, 2012

தமிழகத்தின் (ஒரே) ஒளி விளக்கு !

I Like this ....share on:facebook

Wednesday, March 14, 2012

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?லேசான மனம் படைத்தவர்கள் இதை தயவு செய்து பார்க்க வேண்டாம்...


share on:facebook

Tuesday, March 13, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...


share on:facebook

Sunday, March 11, 2012

தமிழில் ஏன் பேச வேண்டும் - நடிகர் கமல ஹாசன்

சமீபத்தில் நான் ரசித்த கமலின் பேட்டி. அவர் சொல்வது போல் ஒன்றிரண்டு முக்கிய சொற்களையாவது  நாம் தமிழில் அடிக்கடி பேச வேண்டும். அப்போது அதற்குரிய மதிப்பும், வலிமையையும் தனி தான். நான் பொதுவாக நண்பர்களிடம்/மற்றவர்களிடம் பேசும் போது பெரும்பாலும் 'வணக்கம்', நன்றி போன்ற வார்த்தைகளை உபயோகிப்பேன். அதனால் எனக்கு இன்னும் அதிக மரியாதை தான் அவர்களிடம் இருந்து கிடைக்கிறதே ஒழியே யாரும் என்னை குறைவாக மதிப்பிடுவதில்லை. 


share on:facebook

Thursday, March 8, 2012

பெண்கள் பற்றி சில வரிகள் - ஆண்கள் பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன...


சமீபத்தில் ஒரு பிரபலமான ஆங்கில (இந்தியாவில் இருந்து வெளியாகும்) நாளிதழில் பெண்களை பற்றி வந்திருந்த கருத்துக்கள். இதை போட்டதற்காக என்னை பெண்ணின விரோதி அப்படியெல்லாம் எழுதிடாதீங்க...அப்படி கோவம் ஏதும் இருந்தா சொல்லுங்க. அந்த பத்திரிக்கை எதுன்னு பின்னூட்டத்தில் போட்டு விடுகிறேன்.

பெண்களை பற்றிய வினோதமான அதே நேரத்தில் நகைசுவையான விஷயங்கள் என்ற தலைப்பில்...இதோ...

# பெண்கள் எப்போதும் தங்கள் கைபையை எடுக்காமல் வெளியே போவதில்லை. அதில் என்ன இருக்கும் என யாருக்கும் தெரியாது (ஏன், சில நேரங்களில் அவர்களுக்கே கூட தெரியாது). இருந்தும் அது இல்லாமல் அவர்களால் வெளியே செல்ல முடியாது. ஏதும் கையில் இல்லாமல் இருப்பது அவர்களால் முடியாது.

# எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை ஐந்தே நிமிடத்தில் செலவு செய்ய தெரிந்த பெண்களிடம் எப்போதும் உள்ள குறை. அணிந்துகொள்ள அவர்களிடம் உருபுடியான எந்த துணியும் இல்லை என்பது தான். அதே நேரத்தில் அவர்களுடைய அலமாரிகளில் உள்ள பல செட் உடைகளை ஒரு தடவைக்கு மேல் உடுத்தி இருக்க மாட்டார்கள்.

# பெண்களால் தான் இன்று பெருமளவு டி.வி. சீரியல்கள் கல்லா கட்டுகின்றன. நமக்கெல்லாம் முட்டாள் தனமாக தெரியும் இந்த சீரியல்கள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. அதற்க்கு காரணம், நம்மை விட மோசமானவர்கள் இந்த உலகத்தில் உள்ளார்கள் என்ற மன திருப்தியை அவர்களுக்கு தருவது தான்.

# பெண்கள் பேரம் பேசுவதில் கில்லாடிகள் என அனைவருக்கும் தெரியும். அதிலும் ஒரு பொருளை வாங்க வேண்டாம் என அவர்கள் முடிவு செய்து விட்டால், அவர்களால் அப்பொருளுக்கு பேரம் பேசாமல் அவர்களால் இருக்க முடியாது.

# பெண்கள் தாங்கள் அணியும் எந்த உடையையும் மற்ற பெண்கள் அணிந்திருந்தால் அது அவர்களுக்கு பிடிக்காது.

# ஆண்களை விட பெண்கள் வேகமாக விபரம் ஆனவர்களாக ஆகிவிடுவார்கள்.

# பெண்களால் ஒரு நாள் முழுதும் அழகு பார்க்கும் கண்ணாடி முன் செலவு செய்ய முடியும்.

***** மேலும் சில விசயங்களை இங்கு நான் சேர்க்க வில்லை. அப்புறம் என் பெண் வாசகர்கள் (யாரும் இருந்தால்) அவர்களை நான் இழக்க நேரிடும் என்ற பயத்தினால் தான்.

பெண்களுக்கான வேறொரு பதிவு...
கவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி? - பெண்களுக்கு மட்டும்.

share on:facebook

Wednesday, March 7, 2012

சூர்யாவுக்கு ஒரு கேள்வி: சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா? மட்டனா?


சமீபத்தில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியை பார்த்தேன். அட ராமா! இவ்வளவு செயற்கைத்தனமாக ஒரு நிகழ்ச்சியை எப்படி எடுக்க முடியும் என்று தான் முதலில் எண்ணத் தோன்றுகிறது.

சூர்யா சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். அவர் என்னதான் எனர்ஜட்டிக்க்காக பேசுவது போல் 'நடித்தாலும்' அது எடு படவே இல்லை. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கோன் பனேகா க்ரோர் பதியை நினைவு படுத்தும் நிகழ்சிகளை மாற்றி மாற்றி பெயரிட்டு எடுத்துக் கொண்டு இருப்பார்களோ. சுயமாக சிந்திங்கப்பா!

ஒவ்வொரு கேள்வியை கேட்டு முடித்த பின் அதற்க்கு சரியான (இதற்க்கு ஹார்வர்ட் போய் படித்திருந்தால் தான் பதில் சொல்ல முடியும்) பதிலை சொன்ன பிறகு கை தட்டுகிறார்கள் பாருங்கள். ஐயோ தாங்க முடியல. எப்படி? எப்படி சூர்யாவும், கலந்து கொண்டவரும், அதை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களும் தங்களை மறந்து கை தட்டுகிறார்கள்.

கேள்வி இது தான்: ஒருவர் செய்வதை பார்த்து அதே போல் இன்னொருவர் செய்வதற்கு என்ன வென்று சொல்வார்கள்?

A. பேய் அடிச்சான் காப்பி.

B. பிசாசு அடிச்சான் காப்பி.

C. கொசு அடிச்சான் காப்பி.

D. ஈ அடிச்சான் காப்பி.

ஐயா, வேற கேள்வியே உங்களுக்கு கிடைக்கலியா? இல்ல நீங்க ஈ அடிச்சான் காப்பி செய்வதை எல்லோருக்கும் சொல்கிறீர்களா?

இதற்க்கு எல்லோரும் கை வேறு தட்டுகிறார்கள். சூர்யாவின் மேலும் அவரின் தந்தை நடிகர் சிவ குமாரின் மேலும் தனிப்பட்ட மதிப்பு எனக்கு உண்டு. இருவரும் உழைப்பால் தங்கள் சொந்த திறமையால் முன்னுக்கு வந்தவர்கள். ஆனால், இங்கு சூர்யா சொல்வதென்ன? ஒரு போட்டியாளரை பார்த்து அவர் கேட்கும் கேள்வி.

சூர்யா: உங்களின் ஒரு மாத சம்பளம் எவ்வளவு?
போட்டியாளர்: சுமார் பதினைந்தாயிரம்.
சூர்யா: ஒரு மாதம் நீங்கள் சம்பாதிக்க போகும் பணத்தை ஒரு பத்து நிமிடத்தில் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போக போகிறீர்கள். யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்.

நம்ம கேள்வி: அப்ப ஒரு மாசம் அவர் கஷ்ட பட்டு உழைத்து சம்பாதிப்பதை நீங்கள் ஏளனம் செய்கிறீர்களா? வர எல்லோருக்கும் நீங்க அவங்க அவங்க ஒரு மாச சம்பளத்தை கொடுக்க தயாரா?

அடுத்த கேள்வி: "புரட்சித் தலைவர்" என யாரை அழைப்பார்கள்?

நல்ல வேலை, நிலவுக்கு போன ஆம் ஸ்ட்ராங், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், சேகுவாரா என கஷ்டப் படுத்தாமல் அதில் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் பெயரையும் சேர்த்தீர்கள்.

சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா? மட்டனா? பண்ணி கறியா அல்லது மாட்டுக் கறியா என கேட்காமல் போனார்கள். சொல்ல முடியாது. அடுத்த நிகழ்ச்சியில் இந்த கேள்வியை எதிர் பார்க்கலாம். நாபகம் வைத்துக் கொள்ளுங்கள் மக்களே! சிக்கன் பிரியாணியில் இருப்பது "சிக்கன்" தான். இது தெரிய வில்லை என்றால், அப்புறம் நீங்கள் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டி இருக்கும்.

போட்டியாளர்களின் வீடு, குடும்பம் என அனைத்தையும் காண்பிக்கிறார்கள். அதே போல் போட்டியை நடத்துபவர்களின் குடும்பம், வீடு அனைத்தையும் காண்பித்தால் நல்லது. அப்போது தெரியும் நமக்கு. ஒரு லட்சம் இரண்டு லட்சத்தை கொடுத்து விட்டு எத்தனை கோடிகளில் அவர்கள் புரள்கிறார்கள் என்று.

மணி சார், ஜீனியஸ் சார் என்று உயிரற்ற பொருட்களுக்கெல்லாம் ஒரு பெயர். சரியான காமெடி. சூர்யா பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மடிக் கணணி கூட ஒரு பொம்மை கணணியாக இருக்கக் கூடும். பின்னால் இருந்து கொண்டு யாரோ டிஸ்ப்ளேவில் விடைகளையும் அடுத்த கேள்வியையும் நமக்கு கலர் புல்லாக காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்புறம் ஒரு கேள்வி கேட்டார்கள் பாருங்கள். நிச்சயம் இந்த கேள்வியை 'காப்டன்' அவர்களை மனதில் வைத்து தான் சூர்யா கேட்டிருப்பார் என நினைக்கிறேன். கேள்வி இது தான்.

திருநெல்வேலி எதற்கு பெயர் போனது?

A. இட்லிக்கா?

B. சட்னிக்கா?

C. சாம்பாருக்கா?

D. அல்வாவுக்கா?

ஆமா, அப்புறம். நம்ம காப்டன் ஒரு முறை பேட்டியின் போது உணர்ச்சி வசப்பட்டு சொன்னது (அவர் எப்போது தான் உணர்ச்சி வச பட வில்லை). திருநெல்வேலிக்கே அல்வாவா? DMDK கே சவாலா? என்று. அதை மனதில் வைத்து தான் இந்த கேள்வியை வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.


நல்லவேளை. திருநெல்வேலி என்றதும் நினைவுக்கு அருவாளா? ஜாதி சண்டையா? முரட்டு மீசையா? இல்ல ஒஸ்தி சிம்புவின் திருநெல்வேலி தமிழா? என்று கேட்கவில்லை.


போங்கப்பா. போய் புள்ள குட்டிங்களை படிக்க வைங்க. ஏதாவது நாலு பள்ளியை சேர்ந்த குழந்தைகளை கூப்பிட்டு அவர்களுக்கு அறிவு சார்ந்த "குவிஸ்" போட்டிகளை நடத்துங்கள். நல்ல பரிசுகளை பெரிய அறிவு ஜீவிகளை வைத்து கொடுங்கள். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் பார்க்கும். அவர்களின் பெற்றோர்கள் சேர்த்து தான். அப்ப போட்டுக்குங்க. உங்க கிரைண்டர் மிக்சி விளம்பரங்களை.

குழந்தைகள், கல்வி பற்றிய மேலும் சில பதிவுகள் ...

அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா? 

ஆறு மாதத்தில் ஒரு மில்லியன் - அமெரிக்க குழந்தைகள் சாதனை...

share on:facebook

Tuesday, March 6, 2012

எப்படி இருந்த நான் இப்படி ஆக போகிறேன் - எஸ். வி. சேகர் சிறப்பு (போட்டோ) பேட்டி..

எப்படி இருந்த நான்... இப்படி ஆக போகிறேன் ...


செய்தி: எஸ்.வி.சேகர் அ.தி.மு.கவில் சேர போகிறார். 

share on:facebook

Sunday, March 4, 2012

அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்


நம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் கொண்டு செல்வது சகஜம். கேரளத்தில் இதை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனால், அதே போல் தமிழகத்தில் பெண்கள் உடை அணிய முடியாது. அது போல் தான் ஒவ்வொரு கலாச்சாரமும். இது நாட்டிற்கு நாடு பெரும் அளவில் மாறு படுகிறது. இதை நான் கூறுவதற்கு காரணம், அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள் என்று தான் கூறியுள்ளேனே தவிர அவர்கள் அவ்வாறு செய்வது தவறு என நான் கூற வரவில்லை.

# எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும் அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்தம் போட்டு மூக்கை சிந்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. வேலை செய்யும் இடம், கழிவறை, சாப்பிடும் போது என கொஞ்சமும் இடம், பொருள் பார்க்காமல் மிகவும் சத்தத்துடன் அவர்கள் மூக்கை சுத்தம் செய்வது, அப்பப்பா தாங்க முடியாது.

# குழந்தை பருவம். அது யாருக்கும் திரும்ப கிடைக்காது. அதே போல் தான் இளம் தாய் தந்தையர். ஐந்தறிவு உள்ள மிருக இனங்கள் கூட தங்கள் குட்டியை அவை பெரியவை ஆகும் வரை தங்களுடனே அனைத்துக் கொண்டு தூங்கும். அதே போல் தான் நம் நாட்டிலும். ஆனால், இங்கு பிறந்த ஓரிரு மாதங்களிலேயே குழந்தையை தனியாக படுக்க வைத்து விடுவார்கள். குழந்தை அழுதால் அதை தெரிந்து கொள்ள அந்த தனியறையில் ஒரு சென்சார் பொருத்தி குழந்தை அழுதால் அப்போது மட்டும் போய் பார்த்துக் கொள்வார்கள். தாயின் அரவணைப்பு அதிகம் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.

# பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.

# எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர்கள், 'நள தமயந்தி' படத்தில் மாதவன் கூறுவது போல், இவ்வளவு பெரிய பிளைட்டில் ஒரு சின்ன சொம்பு வைக்க கூடாத என கேட்பார். அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது. அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும். அப்பப்பா நினைத்துப் பாருங்கள். அதிலும் அலுவலகமாக இருந்தால் கூட அது வந்து விட்டால் அவர்களுக்கு அடக்க தெரியாது. ஓடி போய்விட்டு திரும்பவும் வந்து சீட்டில் உட்கார்ந்து விடுவார்கள் (தற்போது அவர்கள் சுத்தம் செய்யும் முறையை நினைத்துக் கொள்ளுங்கள்).  

# திருமணத்தின் போது என்னமோ வானுலக தேவதை தேவனை கை பிடித்தது போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சந்தோசத்தின் உச்சியில் கண்ணீர் விட்டு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம். அலுவலகம் வீடு என எல்லாவற்றிலும் அவர்கள் மாட்டி இருக்கும் படங்களில் காட்டி இருக்கும் இறுக்கம் எப்படி அவ்வளவு எளிதில் விரிசலாகி போகிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.

அட ஐந்து முடிஞ்சிடுச்சே?

அமெரிக்க கஷ்டங்கள் மேலும் சில ...

அட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.

அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்?

share on:facebook

Thursday, March 1, 2012

இந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்

எத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousewife.com பற்றி கேள்விப் பட்டேன். இந்தியா பற்றி ஒரு வெளி நாட்டவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது.

அமெரிக்கா பற்றி நான் எழுதும் பதிவுகள் எத்தனை பேருக்கு பிடிக்கிறது அல்லது படிக்க சுவாரசியமாக இருக்கிறது என எனக்கு தெரியாது. ஆனால், ஆஸ்திரேலியா விலிருந்து  சமூக சேவை செய்ய கொல்கட்டா சென்று அங்கு ஒரு நைட் கிளப்பில் DJ வாக இருந்த இந்தியரை திருமணம் செய்து கொண்டபின் மும்பையிலேயே குடும்பமாக செட்டில் ஆகி விட்ட "ஷறேல்' தன்னுடைய  whiteindianhousewife.com மூலம் இந்தியாவை பற்றி அவர் எழுதும் பதிவுகளும் (ஆங்கிலத்தில் தான்), அவர் எழுதிய புத்தகங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவரின் பதிவுகளில் ஒன்று இரண்டு சாம்பிளுக்காக (தமிழாக்க சுருக்கம் கீழே) ...

5 Things About India that Attract Me

என்னுடைய தற்போதைய வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு இந்தியா சென்றதை பார்த்து சிலர் நான் பைத்தியம் என்று கூட நினைப்பார்கள். ஆனால், என் கணவரை காதலிக்க தொடங்கும் முன்னே நான் இந்தியாவை காதலிக்க தொடங்கி விட்டேன் என்று கூறும் அவர், தான் முதன் முறை 2000 ஆம் ஆண்டு இந்தியா சென்ற போது இந்தியாவின் பரந்த, ஆழமான  முழு  வாழ்க்கை முறையை பார்த்து மனதை பறி கொடுத்து விட்டதாக எழுதி  இருக்கிறார்.

இந்தியாவை அவருக்கு பிடித்ததற்கான ஐந்து காரணங்கள் கீழே...

1. India is Untamed - எங்கு பார்த்தாலும் எப்போதும் ஏதாவது ஒன்று புதுசாக இருந்து கொண்டே இருக்கும். அதனால் வாழ்க்கை போரடிக்காது. மிகவும் சுவாரசியமாக போய்க் கொண்டே இருக்கும்.

2. Incense - இந்திய ஊது பத்திகள் மற்றும் நறு மணங்கள் தன்னை எப்போதும்  புத்துணர்ச்சியுடன் வைத்த்திருப்பதாகவும், காலை, மாலை மற்றும் இரவு  நேரங்களில்  அதை ஏற்றி வைத்து நறு மணத்தை அனுபவிப்பது இன்னமும்  அவருக்கு புது குதூகலத்தை குடுப்பதாக கூறுகிறார்.

3. Mystery - இந்தியா பழமையான நாடு. அங்கு கண்டு பிடிக்கவும் தெரிந்து கொள்ளவும் நிறைய உள்ளது. அதன் வரலாறு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவை எல்லாம் இந்தியா அவ்வப்போது சிறிது சிறிதாக தான் வெளி படுத்தும். அதனால் இந்தியா பற்றி நான் இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை இந்தியாவில் இருக்க தூன்றுகிறது.

4. Spirituality - நான் ஒரு மதவாதி இல்லை. ஆனால், ஒரு நம்பிக்கைவாதி. என்னுடைய பெற்றோர் எனக்கு எந்த மதத்தையும் சொல்லி தரவில்லை. ஆனால், இந்தியா வந்த பிறகு இந்தியர்களின் கடவுள் மீதான நெருக்கத்தை  கண்டு வியந்தேன். கடவுள் எங்கும்  இருக்கிறார் என்பதற்கு இந்தியா தான் சிறந்த எடுத்துக் காட்டு. அதிலும் ஹிந்து மதத்தில் கடவுளை காண பல  வழிகள் உள்ளது. அது மனதுக்கும் உடம்பிற்கும் ஏற்றதான ஒரு மதம் என்று கூறுகிறார். இந்தியா தான் தனக்கு வாழ்க்கை என்றால் என்ன? மரணம்  என்றால் என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ள உதவியதாக  குறிப்பிடுகிறார்.

5. Clothes - நான் இந்திய உடைகளை மிகவும் விரும்புவேன். அதன் வண்ணங்கள், வடிவமைப்பு, ஆபரணங்கள் மற்றும் உடை அலங்காரங்கள்  எனக்குள் ஒரு பெரிய மாற்றத்திற்கு உருவாக்கியது என்கிறார்.

Should I Move To India? என்ற பதிவில் இந்தியா செல்லலாமா என்ற அவருடைய வாசகர்களின் கேள்விகளுக்கு அவருடைய அனுபவத்தின் பேரில் பதில் அளித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா செல்வதற்கும் அங்கேயே சென்று வாழ்வதற்கும் நிறைய வித்தாயசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மைதானே.

இந்தியா ஏன் செல்ல வேண்டும் என அவர் சொல்லும் காரணங்கள்...

# ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க...
# புதிய அனுபவங்களை அனுபவிக்க...
# ஏனென்றால் உங்களுக்கு இந்தியாவின் கலாச்சாரம் பிடித்து இருக்கிறது...

இந்தியா ஏன் செல்ல வேண்டாம் என அவர் சொல்லும் காரணங்கள்...

# உங்களுடைய தற்போதைய பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக ....
# உங்களுடைய தற்போதைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக...
இன்னும் நிறைய இருக்கிறது அவருடைய வலை தளத்தில்...பிடித்தால் படித்துப் பாருங்கள்.
 
பி. கு. படத்தில் இருப்பது 'ஷறேல்'  அல்ல. 

அமெரிக்கா பற்றி எனக்கு பிடித்த சில பதிவுகள்.

அனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்

கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.

share on:facebook