Wednesday, October 21, 2009

பிதாமகன் - இந்திப் பட ரசிகர்கள் எதிர்ப்பு

என்னுடன் பணியாற்றும் சீயான் விக்ரமின் (வட இந்திய) ரசிகர்கள் சிலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த link-ஐ உங்களுடன் ஷேர் செய்ய விரும்புகிறேன்.


ஒரு தமிழ் நடிகர்/இயக்குனரின் மேல் இவர்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் பார்த்து உண்மையில் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.

அப்படியே உள்ளே சென்று, கருத்து கணிப்பில் உங்கள் வாக்குகளை இட்டீர்களானால் மிகவும் சந்தோசப்படுவார்கள்


 http://savepithamagan.blogspot.com/
share on:facebook

70 Vs 90ஹி ஹி ...தலைப்பை பாத்து தப்பா கற்பனை பண்ணிக்காதிங்க.

70 களில் நான் சிறுவனாக இருந்த போதும் இப்போது அதே வயதில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் சூழல் எப்படி எல்லாம் மாறி இருக்கிறது என்பதையும் பதிவு செய்ய விரும்பினேன்.

இதை படித்துவிட்டு 60 களில் பெரியவர்களாக இருந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கைமுறையை பின்னூட்டமிட்டால் இன்னும் சுவாரசியம் கூடும் என்றும் நம்புகிறேன்.

இனி 70-களின்...

* நடுவில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக் கொண்டு அம்மா எங்கள் எல்லோருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பார்.

* ரேடியோவில் கவாஸ்கர் எப்பொழுதாவது அடிக்கும் செஞ்சுரிக்கு எல்லோரும் கை தட்டுவோம்.

* மன்மத லீலை சினிமா போஸ்டர்களை பார்த்தால் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வோம்.

* கோலி, கிரிக்கெட், பட்டம், ஹாக்கி என அனைத்து விளையாட்டுகளையும் சீசன் வாரியாக விளையாடுவோம்.

* பொங்கல் விழாக் காலங்களில் அடுத்தவர் மீது மஞ்சள் தண்ணி தெளித்து விளையாடுவோம்.

* எங்கள் தெருவில் ஒரே ஒருவர் வீட்டில் மட்டும் இருந்த கருப்பு வெள்ளை டி.வி-இல் கொசு மொய்த்தது போல் தெரியும் சினிமா படங்களை பார்த்து ரசித்தது.

* ஊரில் இருந்து தாத்தா பாட்டி வரும் போது கொண்டு வரும் முறுக்கு, அதிரசம் பலகாரங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டது.

* "தந்தி" என்ற குரல் கேட்கும் போதெல்லாம் அம்மா ஏன் பதற்றமாகிறார்கள் என தெரியாமல் விழிப்போம்.

* மின்சாரம் போகும் போது, தெரு விளக்குகள் மற்றும் பெரிய வீட்டு விளக்குகள் அணையும் போது, "ஹே எங்க வீட்டுல மட்டும் கரண்ட் இருக்கே" என மண்ணெண்ணெய் விளக்கை கைகளால் அரவணைத்துக் கொள்வோம்.

* வீட்டில் விளையும் வெண்டைகாய், கத்திரிக்கா காய்களை தினம் காலை எழுந்தவுடன் பார்த்து மகிழ்வோம்.


இனி 90-களின்...

* காலையில் எழுந்தவுடன் சுட்டி டி. வி./போகோ டி. வி. பார்கிறார்கள்.

* தினமும் பள்ளிக்கு அவசர அவசரமாக கிளம்பி அட்டோவுக்காக அரைமணி நேரமாக வீட்டுக்கு வெளியே காத்திருக்கிறார்கள்.

* வேகாத வெயிலில் டையும் ஷூவும் அணிந்து பள்ளியில் வெந்து போகிறார்கள்.

* வீட்டுக்கு வந்தபின் நூடுல்சும், பிஸ்கட்டும் சாப்பிட்டு ஊதி போகிறார்கள்.

* இடைப்பட்ட நேரங்களில் வாக்மேன் எம்.பி,த்ரி கேட்டு காதை புண்ணாக்கி கொள்கிறார்கள்.

* சித்திரையில் ஏ.சி போட்டுக்கொண்டு மார்கழியில் வெளியே குளிர்கிறது என்று மப்ளர் கட்டிக்கொள்கிறார்கள்.

* சுப்ரபாதமும், கந்த சஸ்டி கவசமும் போய், நாக்க மூக்க ஒலிக்கும் தேநீர் கடைகள்.

* ஓடி ஆடும் விளையாட்டுக்களை மறந்து விட்டு ஜிம்முக்கு செல்லும் சிறுவர்கள்.

* நிலா சோறின் இன்பம் தெரியாமல் இருட்டில் உக்கார்ந்து பீட்சா சாப்பிடுகிறார்கள்.

* நுரை ததும்பும் சூடான பசும் பாலை அருந்த வழியில்லாமல் ஆடை நீக்கிய ஆவின் பாலை பிரீசரில் வைத்து பின் சூடாக்கி குடிக்கிறார்கள்.

நினைவுகள் தொடரும் ...

share on:facebook

Monday, October 12, 2009

தாத்தா பாட்டிநாளை தீபாவளி. வீடே கலகலப்பாக இருந்தது. எனது மூத்த மகளும், மாப்பிளையும் குழந்தை பரிவதனியை தூக்கிக்கொண்டு இன்று காலை வந்தார்கள். மாப்பிளை இங்கு பக்கத்தில் கும்பகோணத்தில் தான் இருக்கிறார். அவருக்கு அப்பா, அம்மா இல்லை. ஆதலால் தீபாவளியை எங்களுடன் வந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


எனது பையன் திருமணமாகி என்னுடனேயே வசிக்கிறான். அவனுடைய மகன் நகுலனுக்கும் பேத்தி பரிவதனிக்கும் எப்போதும் ஆகாது. நகுலன் பரிவதனியை விட மூத்தவன். பரிவதனி இன்னும் விளையாட்டு வயது. பேரனை காட்டிலும் பேத்திக்கு என் மீது அப்படி ஒரு பிரியம். எப்போதும் தாத்தா, தாத்தா என்று என்னையே சுற்றி சுற்றி வருவாள்.

பேரன் பேத்தி இருவரும் வீட்டில் இருந்தால் அவர்களின் சின்ன சின்ன சண்டைகளை சமாதான படுத்துவதே எனது முழு நேர வேலையாகிவிடும்.

இளைய மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒன்றும் அமையவில்லை. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து அதையும் தூக்கி கொஞ்சி விட்டால் என் எல்லா ஆசைகளும் நிறைவேறிவிடும்.

வாசலில் அழைப்பு மணி கேட்டது.

"அட டே... நம்ம கல்யாண ப்ரோக்கர்".

வாங்க சாமி, வாங்க ... இப்பதான் உங்கள பத்தி நினைச்சேன்.

"எல்லாம் நல்ல சேதி தான். நீங்க தானே நல்ல வரனா இருந்தா சின்ன பாப்பாவுக்கு பாக்க சொன்னிங்க. ஒரு நல்ல வரன் வந்தது. அதான் உங்கள உடனடியா பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்" என்றார் ப்ரோக்கர்.

"ரொம்ப நல்லது. கொஞ்சம் வெவரமா சொல்லுங்க", என்னனு பார்ப்போம் என்றேன்.

ரொம்ப நல்ல பையன். அப்பா, அம்மா கூடத்தான் இருக்கிறார். எஞ்சினியரிங் படிப்பு. கை நிறைய சம்பளம். ஒரு கூட பொறந்த தங்கச்சி. அதுக்கும் கல்யாணம் முடிச்சாச்சு. வேற எதாவது விவரம் வேணும்னா கேளுங்க சொல்றேன்.

பார்த்தா நல்ல வரனாதான் தெரியுது. ஆனா ...

வரதச்சனை பத்தி யோசிக்கிறிங்களா? மாப்பிள்ளை வீடு அப்படி ஒன்னும் கறார் பேர்வழிகள் கிடையாது. நாம பேசி தெரிஞ்சிக்கலாம்...

"அதுக்கு இல்ல சாமி..." என்ன சொல்வது என்று எனக்கு புரியவில்லை. என்னுடைய மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா கிடையாது. அதனால என் மூத்த பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் இதுவரை இல்லை. அதே போல் என் சின்ன பொன்னுக்கும் ஒரு வரன் அமைஞ்சா நல்ல இருக்கும். இதை எப்படி ப்ரோக்கர் கிட்ட சொல்றதுனு தெரியல ...

"இன்னும் ரெண்டு மூணு வரன் பார்த்துட்டு அப்புறம் முடிவு பண்ணலாமுன்னு எனக்கு தோனுது". ப்ரோக்கரை பார்த்து கூறினேன்.

"சரி அப்புறம் உங்க விருப்பம். நா அடுத்து நல்ல வரன் ஏதும் வந்தா அதையும் எடுத்துகிட்டு வரேன்".

ப்ரோக்கரை வழி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். எதிரே பேத்தி மதிவதனி தாத்தா என அழுதபடியே ஓடி வந்து என்னை கட்டி அணைத்தால்.

"என்னடா தங்கம்? நகுலன் அடிச்சனா"?

இல்ல தாத்தா... அவன் சைக்கிள நான் கேட்டேன். தர மாட்டேங்கிறான். எனக்கும் சைக்கிள் வேனும்ம்ம்... என்று அழுகையை தொடர்ந்தாள்.

சரிம்மா நா உனக்கும் சைக்கிள் வாங்கி தரேன். சரியா... இப்ப அழுகையை நிப்பாட்டு.

"போ தாத்தா... அவனுக்கு மட்டும் ரெண்டு தாத்தா இருக்காங்க. அவன் எப்பவும் உன்கூடயே இருக்கான். அதான் அவன் கேட்டதலாம் அவனுக்கு கிடைக்குது. எனக்கு எங்க வீட்டுல தாத்தாவே இல்ல. எனக்கும் என் கூடயே ஒரு தாத்தா வேனும்ம்ம்... என்று அழுகையை இன்னும் கூட்டினால்.

அவளை எப்படி சமாதான படுத்துவது என்றே தெரியவில்லை. ஒரு வழியாக பேரனிடம் இருந்து சைகிளை அவளுக்கு வாங்கி கொடுத்ததும் ஓரளவு சமாதனம் ஆனாள்.

ஆனால் எனக்கு தான் ஏதோ ஒன்று சமாதானமாகாமல் மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருந்தது.

அலைபேசியை எடுத்து கல்யாண ப்ரோகரை அழைத்தேன்.

"ஹலோ... சாமியா? நான் தான் பேசுரேன். சின்ன பொண்ணுக்கு ஒரு வரன் காமிச்சிங்கலே காலைல... அந்த வரனையே பார்த்துருவோம். சாயங்காலம் வாங்க".

மனதிற்குள் சற்று பாரம் குறைந்தது போல் இருந்தது. என் பேர குழந்தைகளுக்கு இனி "ரெண்டு தாத்தா" வேண்டும்.
share on:facebook

Thursday, October 8, 2009

அதற்கு பெயர் என்ன?


தமிழ் சினிமா உலகில் ஓரிரு நாட்களாக நடந்து வரும் சம்பவங்களும், கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் இன்னமொரு சம்பவமும் ஏனோ என்னை ஒன்றுக்கொன்று முடிச்சு போட தோன்றுகிறது.

சமீபத்தில் ....... வழக்கு ஒன்றில் ஒரு நடிகை கைது செய்யப்பட, அதுவும், அதன் ஒட்டி வெளியான தகவல்களும் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்திவிட்டதாக மிகப்பெரிய இரைச்சல் தாங்கமுடியாத வண்ணம் நம் கதை செவிடாக்கிக் கொண்டிருக்கிறது.

ஒருவர் தன் உடம்பை பலருக்கு பணத்திற்காகவோ, வேறு பல அனுகூலங்களுக்காகவோ விருந்தாக்கினால் மட்டுமே அது தவறு என்ற கண்ணோட்டம் நிலவுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அந்த மாதிரியான ஒரு தொழில் சில/பல நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட தொழிலாகவே நடக்கிறது.

அதே நேரத்தில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, அவர் இன்னொருவரின் வாழ்வில் அதாவது இன்னொருவரின் குடும்பத்தில் புகுந்து அடுத்தவரின் மனைவியை/கணவனை அபகரிப்பது தான் மிகப்பெரிய விளைவுகளை பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஏற்படுத்துகிறது.

சமீப காலமாக ஒரு மிக பெரிய நடிகரை ஒரு முன்னணி நடிகை அவருடைய மனைவியிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகவும், அவரை அவர் குடும்பத்துடன் சேர விடாமல் தன்னிடமே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், கிட்டத்தட்ட அனைத்து முன்னணி வார ஏடுகளிலும் அட்டை படம் போட்டு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

தன் கணவனை தன்னிடமிருந்து பிரிக்க நினைக்கும் நடிகையை நேரில் கண்டால் கண்டிப்பேன்/உதைப்பேன் என ஒரு ஆத்திரத்தில் கூறியதற்கு, அவ்வாறு சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒரு குடும்பத் தலைவியை, இரண்டு குழந்தைகளுக்கு தாயை பார்த்து "உனக்கு அந்த அருகதை இல்லை" என அந்த நடிகை கூறிஉள்ளார். மேலும், அப்படி ஏதாவுது நடந்தால் நானும் திரும்பி அடிப்பேன் என்று பகிரங்கமாக பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.


பத்திரிக்கைகளில் ஊகங்களின் பேரில் வெளியான தகவல்களுக்கே "பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டப்படி" நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, அமாம் நான் இன்னொருவரின் கணவருடன் சுற்றுவேன், அவருடன் குடும்பம் நடத்துவேன், என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என கூறும் நடிகை மீது பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவி புகார் கொடுத்தால் அந்த நடிகை மீதும் இதே நடவடிக்கையை காவல்துறை எடுக்குமா?

அப்படி எடுத்தால் நடிகர் சங்கம் இதே மாதிரி அந்த நடிகைக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்குமா?

கடைசியாக ஒரு கேள்வி.
 
இவ்வாறு இன்னொருவரின் கணவரை அவரின் குடும்பத்திலிருந்து பிரித்து அவருடன் தனியாக குடும்பம் நடத்த துடிக்கும் இந்த செயலுக்கு என்ன பெயர்?
share on:facebook

Wednesday, October 7, 2009

"உ(எ)ன்னை போல் ஒருவன்"


ஏங்க... எழுந்திரிங்க. இன்னைக்கு உங்க G.M. ஆபீஸ்க்கு வராருன்னு சொன்னீங்க? மணி எட்டு ஆகுது.


எழுந்திரிக்க மனமில்லை. சற்று கழித்து ஒரு வழியா எழுந்து குளியலறை நோக்கி விரைந்தேன். குளித்து முடித்து அவசர அவசரமாக கிளம்பி ஆபிஸ் சென்றடைந்த போது மணி 9 இருக்கும்.

கிளார்க் மணி எதிரே தென்பட்டார். என்ன மணி G.M. எப்ப வரார்?

"இல்ல சார். அவரு இன்னைக்கு வரலை. அடுத்த வாரம் தான் வரார்".

நான் வேலை பார்ப்பது BSLN broadband customer service section. எப்ப பார்த்தாலும் எனக்கு ஸ்பீட் இல்ல, கனக்க்ஷன் கட்டாகுது, லிங்க் பிரேக் ஆகுதுன்னு ஒரே கம்ப்ளைன்ட் வந்த மாதிரியே இருக்கும். இதுல G.M. விசிட்டுனா கேக்கவே வேணாம்...

அப்படா. இன்னைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம் என்று எண்ணியபடி எனது கவுண்டருக்கு சென்று அப்போதுதான் அமர்ந்தேன்.

"Excuse me sir" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

"சார் எங்க வீட்டுக்கு வர இன்டர்நெட் கேபிள் அறுந்து  ரெண்டு நாள் ஆயிடுச்சு. நான் போன்ல எப்ப ரிங் பண்ணாலும் ரிங் போய்கிட்டே இருக்கு. யாரும் எடுக்க மாட்றாங்க. அதான் நேர்ல வந்தேன். எப்ப சார் வந்து சரி பண்ணுவீங்க?"

"சார். நீங்க இப்பதான் வந்து சொல்றீங்க. இனிமேதான் நாங்க யார் பிரீயா  இருக்குறாங்கன்னு பார்த்து அனுப்பனும். நாளைக்கு வேற sunday எப்படியும்  செவ்வாய் கிழமைக்குள்ள பார்த்து அனுப்புறேன்" என்றேன்.

"சார், நான் வீடுலேர்ந்துதான் வேலை செய்கிறேன். நான் செவ்வாய் கிழமை வரைக்கும் காத்திருக்க முடியாது சார். எனக்கு இன்னைக்கோ இல்ல நாளைக்கோ சரி பண்ணி கொடுங்க சார்"

"அதெல்லாம் முடியாதுங்க. ஏற்கனவே ஒரு டெக்னிசியன் லீவு. இருக்குற ஒருத்தர வச்சிக்கிட்டு நாங்க என்ன பண்ணுவோம். உங்க ஒருத்தருக்காக நான் எதுவும் செய்ய முடியாது. வேணும்னா நீங்க மேல A.E. இருக்காரு, அவர போய் பாருங்க".

வந்தவர் பதில் கேள்வி கேட்காமல் அல்லது கேட்க விரும்பாமல் ஏதோ முனுமுனுத்தபடி திரும்பி சென்றார்.
 
மணி கொண்டு வந்து வைத்திருந்த இன்றைய தினசரியை எடுத்து புரட்ட ஆரம்பித்த நேரத்தில் என் செல் போன் ஒலித்தது.


வீட்டிலிருந்து தான் அழைப்பு.

"என்னங்க நம்ம வீட்டுல இரண்டு நாளா ஒரு பேஸ் கரண்ட் வேலை செய்யல. நாலஞ்சு தடவ போன் பண்ணி சொல்லியாச்சு. ஒருத்தரும் இதுவரை வந்து பார்கலை. இன்னைக்கு E.B. ஆபிசுக்கு நேரே போய் என்னன்னு பார்த்துட்டு வந்துடுறிங்களா?

சரிம்மா, நான் இன்னைக்கு ப்ரீ தான். G.M. விசிட் கூட கான்சல். நான் இப்பவே போறேன்.

மணியை கூப்பிட்டு, நான் கொஞ்சம் வேலையா வெளிய போறேன். யாரும் கஸ்டமர் வந்தா, இன்னைக்கு G.M. விசிட். எல்லோரும் பிசியா இருக்காங்கன்னு சொல்லி சமாளி என்றபடியே வண்டி ஸ்டாண்ட் நோக்கி சென்றேன்.

அரை மணி நேரத்தில் E.B. ஆபிஸ் அடைந்து அங்கிருந்த Enquiry counter-இல் விசாரித்தேன். ஒருத்தர் தான் படித்துக்கொண்டிருந்த பேப்பரை மடக்காமலே நான் சொல்வதை மட்டும் கேட்டுகொண்டிருந்தார்.


"சார் எங்க வீட்டுல ரெண்டு நாளா ஒரு பேஸ் கரண்ட் இல்ல. நாலு அஞ்சி தடவ போன் பண்ணி சொன்னேன். ஆனால் இதுவரை ஒருத்தரும் வந்து பார்கலை...

"எல்லா விசாரிப்புகளுக்குப்பின், அங்க ரெண்டாவுது கவுண்டர் போய் பாருங்க" ... என்றபடி மீண்டும் தினசரியை எடுத்து புரட்ட ஆரம்பித்து விட்டார்.

அவருக்கு தேங்க்ஸ் சொல்ல கூட மனமில்லை. பின்ன.., என்னமோ பத்திரிகை ஆபிஸ்ல வேல பாக்குரமாதிரி பேப்பரையே பார்த்துகிட்டு பதில் சொல்றாரு. இவருக்கு பேப்பர் படிக்க காசு கொடுக்குறாங்களா இல்ல நமக்கு பதில் சொல்ல காசு கொடுக்குறாங்களா... பொலம்பிக் கொண்டே இரண்டாம் நம்பர் கவுண்டர் நோக்கி நடந்தேன்.

பேர்தான் இரண்டாவுது கவுண்டர். ஆனால் அது இருந்ததோ கடைசியில்...

Excuse me Sir. எங்க வீட்டுல ரெண்டு நாளா ஒரு பேஸ் கரண்ட் இல்ல. அதான் கம்ப்ளைன்ட் பண்ணலாமுன்னு வந்தோம்.

"இந்த complaint book-ல உங்க வீடு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் எழுதி வச்சிட்டு போங்க. யாராவது வந்து பார்பாங்க"

சார் நான் நேத்தே எல்லா details சொல்லி போன்லையே கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு சார். ஆனா இதுவரைக்கும் யாரும் வந்து பார்கவே இல்ல. அதான் நேர்ல வந்தேன்.

இத ஏன் நீங்க முன்னாலேயே என்கிட்டே சொல்லல?

நான் இதல்லாம் enquiry-ல சொல்லித்தான் கேட்டேன். அவர் தான் உங்ககிட்ட அனுப்பினார்.

சரி சரி... பழைய கம்பளைண்ட்னா மேல முதல் மாடில அசிஸ்டன்ட் எஞ்சினியர் இருப்பாரு அவரை தான் நீங்க போய் பார்க்கணும். இந்த கவுண்டர் புது கம்பளைண்ட்க்கு மட்டும் தான்.

இக்கும்... விடிஞ்சது... மனதுக்குள் முனகிகொன்டே மேல் மாடி நோக்கி நடக்க தொடங்கினேன்.

மேலே முதல் மாடியில் அசிஸ்டன்ட் எஞ்சினியர் ரூமை தட்டினேன். உள்ளே இருந்து ஒருவர் எட்டி பார்த்து "என்னா சார் வேணும்?" என்றார்.

அசிஸ்டன்ட் எஞ்சினியர பார்க்கணும்.

அவர் வர நேரமாகும் சார். அப்படி உக்காருங்க. அவர் வந்தா நான் சொல்றேன்.

ஒரு அரை மணி நேரம் கழித்து  ஒருவர் ரூம் உள்ளே நுழைந்தார். இஞ்சினியர் ஆகத்தான் இருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, முதலில் என்னை விசாரித்தவர் வந்து, "சார் வந்துட்டாரு. உள்ளே போய் பாருங்க" என்றார்.

உள்ளே நுழைந்தேன். "குட்மார்னிங் சார்".

சொல்லுங்க என்ன வேண்டும்? என்றார் இஞ்சினியர்.

மீண்டும் எல்லா கதையையும் சொன்னேன்.

"சார் இங்க ரொம்ப ஆள் பற்றாகுறை. நாளைக்கு வேற sunday. உங்க ஏரியாவுல முளுக்க ப்ராப்ளம்னா ஏதாவுது ஆள் தேடி அனுப்பலாம். உங்க ஒரு வீட்டுக்காக இப்ப ஒன்னும்  பண்ண முடியாது. நீங்க monday வந்து எதுக்கும் பாருங்க" என்றார்.

"என்ன சார். ஏற்கனவே ரெண்டு நாளாச்சு. இன்னும் ரெண்டு நாள் ஆகும்றிங்கலே. நானும் கவர்மன்ட் ஸ்டாப் தான் சார். இப்படி சொன்ன எப்படி சார்". என்றேன்.

என்னால இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது சார். வேணும்னா கீழ EC இருப்பாரு அவர் கிட்ட போய் சொல்லுங்க.

வேறொன்றும் சொல்லத் தோன்றாமல் நான் வெளியே வந்தேன்.

எல்லாரும் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றாங்களே ... இவங்கல்லாம் என்ன வேலை பார்கிறாங்க... E.C. மட்டும் என்ன செய்ய போறாரு. அவரும் ஏதாவுது சாக்கு வச்சிருப்பாரு. திங்கள்கிழமை வரை பாப்போம். அப்படி இல்லனா திரும்பி வந்து போராட வேண்டியதுதான். மனதுக்குள் எல்லோரையும் திட்டிக்கொண்டே வெளியே வந்து வண்டியை எடுத்தேன்.
 
எதிரே "உ(எ)ன்னை போல் ஒருவன்" பாணர் ஒன்று பெரிதாக தெரிந்தது.
share on:facebook