Sunday, March 24, 2013

ரஜினியும், சொகுசு கார்களும்...


சூப்பர் ஸ்டார்  ரஜினி ராசி அப்படி. அவர் எதை பற்றியாவது பேசினாலும் பிரைச்சனை தான். பேசாவிட்டாலும் பிரச்சனைதான். சமீபத்தில் நாளிதழ்களில் வெளியான இரண்டு விஷயங்கள் மனதை சஞ்சலப்படுத்தியது. ஒன்று ரஜினி விட்ட அறிக்கை.

சமீபத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ரஜினி பெயரில் வெளியான அறிக்கை பலரையும் புருவம் உயர்த்த செய்திருக்கிறது. ரஜினியின் நெருங்கிய நண்பராகவே இருந்தாலும் அது அவருக்கும் அவர் நண்பருக்கும் இடையே உள்ள பாசம். சஞ்சய் தத்துக்காக இறைவனிடம் வேண்டும் அவர், அதை அவரிடம் நேரிடையாக தெரிவித்து இருக்கலாம். ஏன், அதை ஒரு 'press statement' ஆக வெளியிட வேண்டும் என தெரியவில்லை.

சஞ்சய் தத்துக்கும் மும்பை படுகொலைகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் அவர் ஆயுதங்கள் கொள்முதல் செய்ததும், வைத்திருந்ததும் சட்டப்படி குற்றம், அதை அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். நீதி மன்றத்திலும் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகி இருக்கிறது. அப்படி இருக்கையில் 'என் நண்பர், மீதமுள்ள தன் வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்' என்று ரஜினி அவர்கள் அறிக்கை விட்டிருப்பது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது.

உங்களுக்கு நெருங்கியவர்களுக்காக வருத்தபடுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் பொது வாழ்வில் உள்ளவர், தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் அதை அவர் வாழும் சமுதாயத்து மக்களின் பிரச்சனைகளுக்காகவும் ஏன் வருத்தப் படுவதில்லை என்பது தான் இப்போதைய கேள்வியே.

ஒன்று மட்டும் தெரிகிறது. சஞ்சய் தத்துக்காக தான் வருத்தப்படுவது யாருக்கோ அல்லது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது மட்டும் அவர் எண்ணம் என்று. என்னமோ தலைவா. நாங்கல்லாம் உங்கள் ரசிகனாக தான் இன்னமும் இருக்கிறோம். நீங்களும் திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவே இருந்து விட்டு போங்கள். அப்படி 'குரல்' கொடுக்க நினைத்தால் தமிழகத்திலும், தமிழர்களுக்கும் நிறையவே இதை விட பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கும் ஏதாவது 'குரல்' கொடுங்கள்.

அடுத்ததாக சமீபத்தில் CBI நடத்திய ரைடும் அதில் பெரும் பணக்காரர்களிடம் சிக்கிய வெளிநாட்டு சொகுசு கார்களும். தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் அவர்களிடம் பணம் இருக்கிறது. எந்த கார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளட்டும். அதை முறைப்படி வரி செலுத்தி வாங்க வேண்டியது தானே? ஓரிரு கோடிகள் கொடுத்து 'ஹம்மர்' வண்டி வாங்கும் அவர்கள் அதோடு சேர்த்து இன்னொமொரு கோடி வரியையும் செலுத்தினால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்?

இது வரை வரி ஏய்த்து வாங்கப்பட்டிருக்கும் 33 வெளிநாட்டு சொகுசு கார்களை அடையலாம் கண்டுள்ளது CBI. இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரும், BCCI தலைவருமான ஸ்ரீனிவாசனிடம் இருந்து 11 காரும், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தாளாளரிடம் இருந்து 7 கார்களும், MGM க்ரூப்பில் இருந்து 2 கார்களும் இதில் அடக்கம்.

இதில் வேதனையான விசயம் என்னவென்றால்,  இன்சூரன்ஸ் இல்லை, ரோட் டாக்ஸ் கட்டவில்லை  என்று டூ வீலரில் போபவர்களிடம் ஸ்பாட் பைன் போடும் காவல் துறையினர், இல்லை என்றால் வண்டியை ஸ்டேசனுக்கு விடு, இல்லைனா நாளைக்கு வந்து கோர்ட்டுல வண்டிய எடுத்துக்க என மிரட்டுகிறார்கள். ஆனால், இந்த வரி ஏய்ப்பு செய்து வாங்கிய வெளிநாட்டு சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு மட்டும், வண்டியை அவர்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தலாம், அவர்களே வைத்து கொள்ளலாம். தேவை பட்டால் மட்டும் எங்களிடம் காண்பிக்க வேண்டும் என அவர்களிடமே வண்டியை விட்டு விட்டார்கள். ஹ்ம்ம்..எளியோர் என்றால் ஒரு சட்டம். வலியோர் என்றால்...




  

share on:facebook

Wednesday, March 13, 2013

வேட்டி மறந்த தமிழனும், பாசக்கார மதுர மக்களும்.


சென்ற மாதம் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளுக்காக கும்பகோணம், மதுரை மற்றும் நாமக்கல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட வருடங்களுக்கு பின் இந்தியாவில் வந்து செட்டில் ஆகி இருப்பதால் மிக ஆர்வத்துடன் எல்லா திருமணங்களுக்கும் சென்று வந்தேன்.

கும்பகோணத்தில் நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம். நல்ல வசதி படைத்தவர்கள் தான். ஆனால் மணமக்களின் பூர்வீகம் கிராமம் தான் அவர்களின் பெற்றோர்கள் இன்னமும் கிராமத்தில் தான் வாழ்கிறார்கள். இதை சொல்ல காரணம் மணமக்கள் திருமணம் மற்றும் வரவேற்பின் போது உடுத்தி இருந்த உடைகள் தான். மருந்துக்கு கூட அங்கு தமிழர் பாரம்பரியமான பட்டு வேஷ்டியோ, சேலையோ பார்க்க முடியவில்லை. மணமகன் வட நாட்டவர்கள் உடுத்தும் 'செர்வானியும்', மணமகள் டிசைனர் சாரியும் அணிந்து கொண்டு தான் தாலி கட்டிக்கொண்டனர். சாதாரண மக்கள் மற்றும் சமூகத்தில் பெரிய லெவலில் உள்ளவர்களை கூட ஏன் இந்த வட நாட்டு மோகம் பிடித்து ஆட்டுகிறது என தெரியவில்லை. அதே போல் மணமகன் மற்றும்  நெருங்கிய உறவினர்கள் ஆளுக்கு ஒரு தலை பாகை வைத்து கொண்டு ராஜஸ்தான் ராஜாக்கள் போல காட்சி அளித்தது சற்று நகைச்சுவையாக தான் தோன்றியது.

பட்டு வேஷ்டியும், காஞ்சிபுரம் பட்டு புடவைக்கும் இதெல்லாம் ஈடாகுமா?

அடுத்து மதுரையில் கலந்து கொண்ட கல்யாணம். இங்கும் அதே கதை தான். அதை விட எனக்கு புதிதாக தெரிந்தது அங்கு வந்திருந்த பெரும்பாலான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அணிந்திருந்த தங்க நகைகள் தான். அப்பாப்பா! எவ்வளவு நகைகள். இதுவரை அவ்வளவு நகைகள் அணிந்து கடவுளர் சிலைகளை தான் பார்த்திருக்கிறேன். என்னுடன் வந்திருந்த தஞ்சை நண்பர் ஒருவரும் இதை பற்றி ஆச்சிர்யமாக தான் கேட்டார். இதற்க்கு நேர் மாறாக இருந்தது நாமக்கல் திருமண நிகழ்ச்சி.

அதை பார்க்கும் முன், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார, தென் மாவட்ட மக்களின் பாசத்தை பற்றி சொல்லத்தான் வேண்டும். மதுர பயபுள்ளைங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லை. காலை மெயின் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு டவுன் பஸ்ஸில் ஏறினேன். ஏறியதும் கண்டக்டரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்லி, வந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டேன். கடைசியில் இது தான் சார் கடைசி ஸ்டாப்பிங். இறங்கிக்கோங்க என்றார். நான் அங்குள்ள கல்யாண மண்டப பெயரை சொல்லி அதற்க்கு வழி கேட்டேன். இதை கேட்டுக்கொண்டிருந்த பஸ் டிரைவர், தம்பி, அப்படியே பஸ்ல உக்காருங்க. இதோட சர்வீஸ் முடிஞ்சிடுச்சு. இருந்தாலும் நீங்க சொல்ற மண்டபம் பக்கம் தான் வண்டி போகுது(அதற்க்கு ஏதோ காரணம் சொன்னார். மறந்து விட்டேன்). அங்கேயே நீங்க இறங்கிக்கலாம் என்று.  அப்படியே சென்னை பல்லவன் டிரைவர், கண்டக்டர் அனுபவங்கள் நினைவுக்கு வந்தது. முகம் தெரியாத வெளி ஊர் ஆட்களிடம் இவ்வளவு பாசம் காட்டுவதை பார்த்து சற்று மிரண்டு தான் போனேன்.

நாமக்கல் திருமணம் மிகவும் வித்தியாசமானது. ஆம், அங்கு பெரும்பாலானோர் நல்ல வசதியுடன் இருந்தாலும், சோ சிம்பிள். நண்பரின் திருமண வரவேற்ப்புக்கு வந்தவர்களில் ஒருவர் கூட இரண்டு செயினுக்கு மேல் அணிந்திருக்கவில்லை. அதுவும் சாதாரண ஒரு தாலி செயின் அதோடு சேர்த்து இன்னொரு செயின். அவ்வளவு தான். இத்தனைக்கும் வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் நல்ல வசதி படைத்தவர்கள். உள்ளூர் நண்பர் ஒருவரிடம் இதை பற்றி கேட்டேன். அவர் சொன்னது. இங்கு அப்படித்தானுங்க. சும்மா கைலி கட்டிக்கிட்டு போறாரேன்னு நினைச்சுடாதீங்க. அவருக்கு ஒரு பத்து லாரி இருக்கும். பெரிதாக யாரும் தங்கள் வசதியை உடை, நகைகள் மூலம் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

ஹ்ம்ம்...வெளியில் சென்றால் தான் எத்தனை அனுபவங்கள்.



share on:facebook