Thursday, December 29, 2011

ஒரு ரூபாய் = நாற்பத்தி ஏழு டாலர்கள் முப்பது சென்ட்ஸ்

2011 நினைவில் நின்றவை...

வேண்டும் விடுதலை: துனிசியாவில் ஏற்ப்பட்ட மக்கள் புரட்சி காரணமாக 2011 ஆண்டு, ஜனவரி மாதம் அந்நாட்டுக்கு கிடைத்த விடுதலை அப்படியே பல காலமாக ராணுவ/ஒரு நபர் ஆட்சியில் சிக்கி தவித்த எகிப்து மற்றும் லிபியாவிற்கு பரவி ஓரளவு அந்த நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தது. ஒசாமா பின் லேடன் சுட்டுக்  கொல்லப்பட்டதும் இந்த ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வு.

கை கூடுமா கூடங்குளம்: அணு உலை பல ஆண்டு காலம் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் நேரத்தில் அதன் விளைவுகளையும், ஆபத்துகளையும் முன்னிறுத்தி ஒரு மக்கள் போராட்டம். இது நாள் வரை ஏன் மவுனமாக இருந்தார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது. முன்னாள் குடியரசு தலைவரும் மதிப்பிற்குரிய இந்திய அணு விஞ்ஜானியுமான திரு. அப்துல் கலாம் அவர்கள் அணு உலையால் ஆபத்தில்லை என சொல்வது ஓரளவு ஏற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது.

பெரியாரும் பக்தர்களும்: இந்த பிரச்னையும் அப்படிதான். இத்தனை வருடங்களாக முல்லை பெரியார் ஆணை இவ்வாறு விஸ்வ ரூபம் எடுத்ததில்லை. திடீரென்று ஏன் பிரச்னை அவ்வளவு பெரிதாக ஆனது என தெரியவில்லை. ஒரு சிறிய இடை தேர்தலுக்காக என கூறுகிறார்கள். ஆனால், நம்ப முடியவில்லை. தமிழகத்தை சுற்றி உள்ள அனைத்து மாநிலங்களுடனும் தண்ணீர் தகராறு. வெளியூரில் அம்மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் வேலை பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் கஷ்டமாக இருக்கிறது. எல்லாரையும் விட ஐயப்ப பக்தர்கள் தான் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதற்க்கு மத்திய அரசு கண்டிப்பாக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அல்லது சுப்ரீம் கோர்ட் கடுமையாக மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும். 

இணைந்த கைகள் பிரிந்தன: ஜெவும், சசியும் இணை பிரியாதவர்கள். இன்று பிரிந்து விட்டார்கள். அதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. சசி தான் எல்லாவற்றுக்கும் காரணம் என சசியை விலக்கியதற்க்காக ஜெவை பத்திரிகைகள் பாராட்டுகின்றன. அப்ப இவ்வளவு நாள் அவ்வாறு தவறு செய்தவரை ஒரு முதல்வர் தன்னுடனே வைத்திருந்தது குற்றம் ஆகாதா? வழக்கம் போல் அவர்கள் பிணக்கு எவ்வளவு நாட்களுக்கு என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உள்ளங் கையில் உலகை தந்தவர்: ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு இந்த உலகிற்கு மிக பெரிய இழப்பு. ஆப்பிள் தயாரிப்புகள் மூலம் நம் உள்ளங் கையில் உலகையே காண வைத்தவர். சிறு வயதில் அவர் பட்ட கஷ்டமும், துறவறத்தை நாடி சென்றதும் அது கை கூடாது போன நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்து, அப்பப்பா என்ன ஒரு மாற்றங்கள் அவர் வாழ்வில். ஜாதி, மதம், மொழி, இனம் கடந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எல்லோர் மனதிலும் நீங்காது நிறைந்திருப்பார். என்றும்.

2G விவகாரத்தில் பல "ஜீ" க்கள் உள்ளே: இந்தியாவில் இன்றும் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆம், இல்லையென்றால் பல முன்னாள் (மத்திய) அமைச்சர்களும், மாநில முதல் அமைச்சர் ஒருவரின் மகளும், எம்.பிக்களும், அதுவும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இந்தியாவையே உலுக்கிய 2G ஊழல் சம்பந்தமாக திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும், சம்பிரதாயமாக ஓரிரு நாட்கள் இல்லாமல் பல  மாதங்கள் சிறைவாசம் அனுபவித்ததும் நினைத்து  பார்க்க முடியாத ஒன்று.  இவையெல்லாம் சாத்தியமாவதற்கு மீடியாவும் ஒரு முக்கிய பங்கு.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்: கொல்கத்தாவில் நிகழ்ந்த மருத்துவமனை தீ விபத்தும், சமீபத்தில் சென்னையில் நடந்த படகு விபத்தும் மனதை உருக்கிய சம்பவங்கள். கும்பகோணம் தீவிபத்து,  திருச்சி கல்யாண மண்டப விபத்து என எத்தனை விபத்துகள்  ஏற்பட்டாலும்  ஒவ்வொரு முறையும் அந்தந்த சம்பவங்களில் தொடர்புடைய  விசயங்களில் மட்டும் அதுவும் அப்போது மட்டும் கவனம் செலுத்தி விட்டு மற்ற  விசயங்களில் வரும் முன் காப்போம் என்ற உக்தியை மறந்து விடுவோம். சென்னையில் எத்தனையோ மருத்துவமனைகள், வியாபார நிறுவனங்களில்  இன்றும் தீயணைப்பு வசதிகளோ, தீயை தடுக்கும் முறைகளோ கையாளப் படுவதில்லை.  

அதிர்ஷ்டத்தின் மறு பெயர் தனுஷ்: முதலில் சூப்பர் ஸ்டாருக்கு மாப்பிள்ளையானது. தற்போது Why this kolaveri... Adi மூலம் உலகெங்கும்  பாபுலரானது. யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம். இப்பாடலின் வெற்றிக்கு எது காரணம் என இதுவரை எனக்கு புரியவில்லை. தமிழ் கலந்த ஆங்கிலமா? இசையா, குரலா, எது?

சபாஷ் தமிழர்கள்: என்ன தான் சொல்லுங்கள்? தமிழர்களை பற்றி பெருமையாக மற்ற மாநிலத்தவர்கள் பேச ஒரு காரணம் எப்போதும் உண்டு. அது ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சியை தூக்கி எறிந்து விட்டு எதிர் கட்சிக்கு வாய்ப்பை கொடுப்பதுதான். இந்த முறை சர்வ  வல்லமை படைத்த ஆளும் தி.மு.க. வை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் ஜெயலலிதாவை முதல் அமைச்சர் ஆக்கியது. ஹ்ம்ம். தற்போதைய ஆளும் கட்சிக்கும் இதே நிலைமைதான் பின்னாளில். ஒழுங்காக ஆட்சி புரியவில்லை என்றால்.

ஒரு ரூபாய் = நாற்பத்தி ஏழு டாலர்கள்: என்ன நல்லா தானே எழுதிக்கிட்டு இருந்தே. இப்ப என்ன ஆனதுன்னு கேக்குறீங்களா? 2015 ல்  மூன்று லட்சம் அமெரிக்கர்கள் இந்திய மென் பொருள் கம்பெனிகளில்  வேலை பார்ப்பதற்காக இந்தியா செல்வர்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.  இப்போதே இன்போசிஸ் விப்ரோ போன்ற கம்பனிகளில் இந்தியாவில்  அமெரிக்கர்கள் வேலையில் சேர்ந்துள்ளார்கள். அப்படி ஒரு நிலைமை  வந்தால், அப்பாடா ஒரு வழியாய் நாங்கள் எல்லாம் இந்தியா திரும்பி அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு (onsite) வரும் அமெரிக்கர்களை ஆயா  கடையில் ஆப்பம் சாப்பிட வரும் போது "ஹாய்" Hi சொல்லலாம். நம் அம்மா  அப்பாவை நன்றாக கவனித்துக் கொண்டு அவர்களுடன் சந்தோசமாக  இந்தியாவிலேயே இருக்கலாம். 

share on:facebook

Wednesday, December 28, 2011

ஜெவும், அழகிரியும் ஒன்னு. தமிழர்கள் வாயில் மண்ணு.

என்ன கொடுமை சார் இது. ஒரு பிரதமர் வராரு. அவரை மாநில ஆளுநர், முதல் அமைச்சர் சந்திச்சு கை கொடுப்பதை மறைத்துக்கொண்டு ஒரு வீடியோ போடோகிராபர் வீடியோ எடுப்பதை பார்த்து அருகில் உள்ள மற்ற போடோகிராபர்கள். யோவ், செக்கூரிட்டி, ஹல்லோ, சார், நகருயா என பல்வேறு குரல்கள். இந்த கூச்சல்களுக்கு மத்தியில் ஒரு பிரதமர், முதல்வர் மற்றும் கவர்னர் நடந்து முன்னே செல்கிறார்கள்.

அதுக்கு அப்புறம் நடந்தது தாங்க இந்த கொடுமை. மாநிலத்தில் எதிர் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு சால்வை மரியாதை செய்து விட்டு பக்கத்தில் நிற்கும் ஒரு மாநில முதல்வரை கண்டு கொள்ளவேயில்லை. அதை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத முதல்வர் உடனே அங்கிருந்து (பிரதமரை அம்போ என்று விட்டு விட்டு) சென்று விடுகிறார். அட, பிரதமரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்.

இந்த லட்சணத்தில் இவர்கள் கூடங்குளம், முல்லை பெரியார் பிரச்சனையில் ஒன்றாக சேர்ந்து! தமிழக மக்களுக்கு என்ன செய்து விட போகிறார்கள்.

காணொளி உதவி. நக்கீரனுக்கு நன்றி.


share on:facebook

Tuesday, December 27, 2011

CNN -ல் Why this kolaveri di... TOP SONG OF 2011

Why this kolaveri di... பாட்டுக்கு கிடைத்த சமீபத்திய அங்கீகாரம். CNN டி.வியின் பிரபலமான எரின் பர்னெட்டின் (Erin Burnett) அவுட்பிரன்ட்  ப்ளாக்கில் Why this kolaveri di... பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Why this popularity - Top song of the year. Song recorded in Tamil and English going viral என்ற தலைப்புடன் அவரின் செய்தி தொகுப்பு இவ்வாறு போகிறது.

யூ டூபில் இந்த வருடம் மிகவும் பாபுலரான பாடலாக Why this kolaveri di... இடம் பெற்று இருக்கிறது. அது மட்டுமில்லாமல், ஒரு மாதத்தில்  பார்க்கப்பட்ட நாற்பது மில்லியன் யு டூப் வீடியோவில், இருபத்தி  எட்டு மில்லியன் தடவை இப்பாடல் மட்டும் பார்வை  இடப்பட்டுள்ளது.   

ஒரு வாரத்துக்கு முன் நியூசிலாந்து, ஒக்லாந்தில் உள்ள ஒரு மிக பெரிய மாலில் இப்பாடல் ஒளிபரப்பப்பட்டு அதற்க்கு எல்லோரும் நடனம் ஆடி  உள்ளார்கள்.  இப்பாடல் பற்றி குறிப்பிட்ட எரின், தமிழ் மொழி திரைப்படம் "3" க்காக தமிழ் மொழியில் இயற்றப்பட்ட இப்பாடல், உலகம் பூராவும் தமிழ்   மற்றும்  ஆங்கிலம் பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளதாகவும் அவருடைய  செய்தி  குறிப்பில் தெரிவித்துள்ளார். 

அவருடைய செய்தி குறிப்பின் முதல் கேள்வியாக, இந்த வருடத்தின் மிகவும் பாபுலரான பாடல் எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு நீங்கள்,  Adele?  Pitbull?  Bieber? என்றால் அது தான் இல்லை. இந்த வருடத்தின் மிகவும் பாபுலரான பாடல் இது தான் என்கிறார்.

Why this kolaveri di... பாடலை வைத்து இந்தியாவில், தமிழகத்தில் போக்குவரத்து போலீசார்,  வைத்திருக்கும் பாணர்களையும் தன்னுடைய செய்தி குறிப்பில் பகிர்ந்துள்ளார்.

CNN ல் Why this kolaveri di... பற்றிய முழு செய்தி குறிப்பை காண இங்கே சொடுக்கவும். எரின்னின் பிளாக்கில் முதல் பக்கத்தில் இச் செய்திக்குறிப்பை  காணலாம்.  

எப்படியோ, இங்குள்ள தமிழர் அல்லாத இந்தியர்கள் அனைவரும் "மாமா சூப் சாங்கு" என்று கொஞ்சு தமிழில் சொல்லும் போதும், அமெரிக்கர்கள் சிலர் கூட இப்பாடலை ரசிப்பதும், இப்பாடலுக்கு சொந்தக்காரர்களையே சேரும். அந்த வகையில் நமக்கு எல்லாம் பெருமையே.


share on:facebook

Thursday, December 22, 2011

முதல் விமான பயணமும் - விபத்துகளும்...


சென்ற பதிவில் முதல் தடவை அமெரிக்கா செல்ல எல்லாம் தயார் ஆன நிலையில் சன் டி.வியில் வந்த அந்த செய்தி எல்லோர் வயிற்றிலும் புளியை கரைத்தது என கூறியிருந்தேன். அந்த செய்தி, சென்னை விமான நிலையம் வந்த பிரான்ஸ் நாட்டு சரக்கு விமானம் ஒன்று ரன் வேயில் தீ பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதனால் சென்னை விமான நிலையம் மறு அறிவிப்பு வரும்வரை மூடப் படுகிறது என்பது தான்.

உடனே தகவல் அறிந்து என் கம்பனியில் இருந்து அடுத்து என்ன செய்யலாம்? எப்படி இவர்களை (நாங்கள் மூன்று பேர் அமெரிக்கா செல்ல இருந்தோம்) குறித்த தேதிக்குள்  அமெரிக்கா அனுப்பலாம் என விவாதிக்க தொடங்கி விட்டார்கள். அது தவிர குறிப்பிட்ட நாளுக்குள் நாங்கள்  அமெரிக்கா செல்ல முடியாவிட்டால் அந்த பிராஜக்டே எங்கள் கை நழுவி போய் விடும் நிலை வேறு.

பெங்களூர் மற்றும் பிற ஊர்களுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லலாம் என்றால் எங்கும் இடம் இல்லை. கடைசியில் மும்பைக்கு சென்று அங்கிருந்து  அமெரிக்கா  செல்லலாம் என்று முடிவான நிலையில் மும்பை செல்ல கூட எங்களுக்கு விமான டிக்கெட் கிடைக்கவில்லை. மும்பைக்கு டிரைனில் செல்ல கூட ஏற்பாடு செய்யப்பட்டது (இப்போது போல் அப்போது உள் நாட்டு விமான சேவைகள் பெரிதாக இல்லை). கடைசியில் ஒரு வழியாக அடுத்த நாள் காலை உள்நாட்டு விமான சேவை மட்டும் இயங்கும் என அறிவித்ததை தொடர்ந்து முதல் விமானத்தில் எங்களை மும்பைக்கு அனுப்பி வைத்தார்கள்.

என்னுடைய முதல் விமான பயணம். சென்னை டூ மும்பை. இந்தியன்  ஏர்லயன்ஸ். முன்பே கூறியது போல் என் பெற்றோர், மனைவி, மகள் மற்றும்   அனைவரும் அன்புடன் வழியனுப்ப விடியற்காலையில் விமானத்தில் ஏறி  அமர்ந்தோம். இந்தியன்  ஏர்லயன்ஸ். அனைத்து பனிப் பெண்களும்  சேலையில் வணக்கம் சொன்னார்கள். காலை உணவாக இட்லி வடை பரிமாறப்பட்டது. அரை பாவாடை, பீட்சா பர்கர் எதிர்பார்த்து போன எங்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.

நீண்ட தூர பேருந்தில் பயணம் போனாலே இரவு முழுதும் தூங்காமல் சீட் அருகே உள்ள கம்பியை பிடித்துக் கொண்டே போகும் தைரியசாலி நான். விமான பயணம் அதிலும் முதல் பயணம். விமானம் கிளம்பி ரன்வேயில் சென்று மேலே ஏறும் வரை வேண்டாத சாமி இல்லை. இப்போதும் விமானம் கிளம்பும் போது கண்களை சிறிது நேரம் மூடி விமானம் பத்திரமாக செல்ல மனதார பிராத்திப்பேன்.

ஒரு விமானம் கிளம்பி பத்திரமாக மீண்டும் தரை இறங்குவது என்பது விமானிகள், விமான பனிப் பெண்கள்,  மற்றும் ATC பணியாளர்கள் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையின் ஒத்துழைப்பு மிக அவசியம். ஒவ்வொரு முறை விமானம் மேலே சென்று அடைந்ததும் அதே போல் கீழே பத்திரமாக தரை இறங்கியதும் விமான பனிப் பெண்கள் ஒருவரை  ஒருவர் பார்த்து தங்கள் கட்டை விரலை உயர்த்தி "தம்ஸ்-அப்" சொல்லும் போது அவர்களின் முகத்தில் தெரியும் மன திருப்தியை பார்த்தாலே தெரியும். ஒவ்வொரு பயணமும் அவர்களுக்கும் ஒரு மறு வாழ்வு என்பது.

ஒரு வழியாக மும்பை சென்று இறங்கியதும் எங்களுக்கு காத்திருந்த  அடுத்த செய்தி மீண்டும் ஒரு விமான விபத்தை பற்றியது. அது அடுத்த  பதிவில்...  

share on:facebook

Tuesday, December 20, 2011

அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்?

அமெரிக்கா போவதற்கு முன் எத நல்லா செக் பண்றீங்களோ இல்லையோ, உங்க பற்களை நல்லா செக் பண்ணிக்குங்க. ஒரு பல்லு கோளாறா போயி கலட்டி மாட்டனுமுன்னா அதுக்கு ஆகுற பீசுக்கு நீங்க இந்தியாவுக்கு டிக்கெட் எடுத்துட்டு வந்து நம்ம ஊரு சனமெல்லாம் பாத்துப்புட்டு ஆயிரம் ரெண்டாயிரம் செலவு செய்து நம்ம பல்லையும் சரி பண்ணிபுட்டு போயிடலாம். அந்த அளவிற்கு பல் மருத்துவம் இங்கு காஸ்ட்லி.

அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்களுள் நிச்சயம் "டென்டிஸ்ட்" களும் அடக்கம். ஒரு முறை டென்டிஸ்ட்யிடம் சென்று வந்தால் குறைந்தது ஐநூறு ஆயிரம் டாலர்களுக்கு பில் நிச்சயம். ஓரளவு நல்ல இன்சூரன்ஸ் இல்லையோ அவ்வளவுதான்.

அதற்க்கு காரணம், அமெரிக்கர்கள் தங்கள் பற்களுக்கு தரும்  முக்கியவத்துவம் தான். பற்களை தங்கள் இருதயம் போல் பார்த்துக் கொள்வார்கள். வருடத்திற்கு ஒரு முறை தங்கள் தாய் தந்தையரை போய் பார்க்கிறார்களோ இல்லையோ, இரு முறை கண்டிப்பாக "டென்டிஸ்ட்டை" போய் பார்த்து விடுவார்கள். அதே போல் ஒவ்வொருவரின் பற்களும் பற்பசை விளம்பரத்தில் வரும் மாடல்கள் போல்தான் பளிச்சென்று இருக்கும். மேலும், அடுத்தவர்கள் பேசும் போது வரும் வாடை தான் அமெரிக்கர்கள் வெறுக்கும் முதல் விஷயம். அதனாலேயே இங்கு எல்லோரும் பற்களை சுத்தமாகவும் வாடை இன்றியும் வைத்துக் கொள்வார்கள்.

பொதுவாகவே பல் மருத்துவம் இங்கு சற்று அதிக செலவாகும் விஷயம். நல்ல இன்சூரன்ஸ் வைத்திருப்பவர்கள் கூட பல் மருத்துவத்திற்கு தங்கள் கையிலிருந்து குறைந்தது 10-20 சதவிகிதம் செலவு செய்ய நேரிடும். இருந்தாலும் முதல் செக்-அப் மற்றும் சின்ன சின்ன வைத்தியங்கள் பொதுவாக இன்சூரன்சில் கவர் ஆகி விடும்.

முதல் தடவை "டென்டிஸ்ட்டிடம்" சென்றால் அனைத்து பற்களையும் முதலில் கண்டிப்பாக எக்ஸ்ரே எடுப்பார்கள். கிட்ட தட்ட பதினைந்து பதினாறு சிறு சிறு எக்ஸ்ரேக்கள். எடுத்து முடிப்பதற்குள் போதும் என்று ஆகி விடும். அடுத்ததாக பற்களை கிளீன் செய்வார்கள். இங்கு வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக பற்களை கிளீன் செய்வார்கள். இந்த கிளீனிங் ப்ராசஸ் தான் சற்று கொடுமையானது. அதிலும் நாம் இதற்க்கு முன் கிளீன் செய்ததே இல்லை என்றால் அவ்வளவுதான். ஒரு மணி நேரத்திற்கு மேலாக கையில் ஒரு கம்பியை வைத்துக்கொண்டு பற்களில் உள்ள அனைத்து கரைகளையும் (பிளேக்) கரைத்து எடுத்து விடுவார்கள்.

அடுத்து பற்கள் சற்று பலம் இல்லாமல் இருந்தால் கூட ரூட் கனால் செய்ய வேண்டும் என்று கிரெடிட் கார்ட் அப்ளிகேஷனையும் சேர்த்து கொடுத்து விடுவார்கள். காமெடிக்காக சொல்லவில்லை. இங்கு பாங்க்கை தவிர கிரெடிட் கார்டு அப்ளிகேஷன் வைத்திருக்கும் ஒரே இடம் "டென்டிஸ்ட்" அலுவலகத்தில் தான்.

சரி போதும், இன்று தான் நானும் டென்டிஸ்டிடம் சென்று பற்களை சுத்தம் செய்து வந்தேன். டயர்டாக இருக்கு. வரேன்.


கொசுறு: இங்கிலாந்திலும் அப்படிதான். பல்லுக்கு அதிக முக்கியவத்துவம் கொடுப்பார்கள். பல் வலிக்கு நீங்கள் அவசர கால உதவி ஆம்புலன்சையும் சட்டபடி கூப்பிடலாம்.


share on:facebook

Monday, December 19, 2011

IT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loopM.C.A - இன்று பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு படிப்பு. தெரிந்த படிப்பு மட்டுமில்லை. ஒரு காலத்தில் என் பையன் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறான் என எல்லா தமிழ் சினிமாவிலும் கேட்டு கேட்டு  புளித்து (பொறாமை) போன வசனத்தையே மாற்றி அமைத்த  படிப்பு. இப்போது எல்லா சினிமாவிலும் தங்கள் பையனை பற்றி பெருமையாக சொல்ல  வேண்டும் என்றால், என் பையன் M.C.A முடிச்சிட்டு அமெரிக்காவில் வேலை  பார்க்கிறான் என்று சொல்ல வைத்த படிப்பு. ஆம், அந்த படிப்பை என்னை  சார்ந்த அனைவரின் உதவினாலும் பர்ஸ்ட் பாட்ச்சில் ஒரு நல்ல  கல்லூரியில் சேர்ந்த படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

படித்து முடித்ததும் வேலைக்கு சேரும் எண்ணம் எனக்கு அப்போது ஏற்படவில்லை.  மாறாக சொந்தமாக IT சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற  எண்ணத்தில் தனியே Center ஒன்று தொடங்கினேன். அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் சொந்த தொழில் போரடிக்க தொடங்கி விட்டது. சரி, வெளியில் செல்லலாம் என முடிவு செய்து ஒரு நல்ல கம்பெனியில் ப்ரோக்ராமராக என் IT பயணத்தை தொடங்கினேன்.

பிப்ரவரி மாதம், 1999. அன்றைய காலகட்டத்தில் IT துறையில் இந்தியாவில் டாப் ஐந்து கம்பனிகளில் ஒன்று நான் வேலை பார்த்த நிறுவனம். சேர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது.  திடீரென்று ஒரு நாள்,  எங்கள் கம்பனியின் ஜெனரல் மானேஜரிடமிருந்து ஒரு போன் கால். உடனே  தன் அறைக்கு வந்து தன்னை பார்க்கும்படி. அடுத்த ஐந்து நிமிடத்தில்  அவர்  அறையில் நான்.

சம்பிராதய விசாரிப்புகளுக்கு பின், என்னிடம் எங்கள் GM கேட்ட கேள்வி,
உங்களை ஆன்சைட் (onsite) அனுப்ப முடிவு  செய்திருக்கின்றோம், உங்களுக்கு  விருப்பமா? என்று. கரும்பு தின்ன கூலியா? அமெரிக்கா போக IT காரனுக்கு கசக்குமா? உடனே "எஸ்" சொன்னேன். கூடவே, நீங்கள் ஆன்சைட் போகும் விஷயம் உங்களுடனே  வைத்துக்கொள்ளுங்கள். இப்போதைக்கு யாரிடமும் சொல்லாதீர்கள் என கண்டிப்பான அறிவுரை வேறு. சரி சார். சரி சார் என்று தலையாட்டிவிட்டு மீண்டும் என் தளத்திற்க்கு திரும்பினேன். மனம் முழுதும் சந்தோசத்துடன்.  இருக்காதா பின்னே! முனிவர்களுக்கு முக்தி போல், IT காரனுக்கு அமெரிக்கா இல்லையா?

என் இடத்தை நெருங்கியதும் தான் தாமதம், சுற்றி இருந்த அனைவரும் வந்து  கை கொடுத்தனர். அது மட்டுமில்லாமல் அப்புறம் எப்ப போறீங்க? எந்த பிளைட்  என்று அடுக்கடுக்காக  கேள்விகள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. GM அமெரிக்கா செல்வதை அடுத்தவர்களிடம் சொல்லாதே என்று கூறி இருக்கிறார், இங்கு என்னவென்றால், வந்ததும் எப்ப அமெரிக்கா கிளம்புற என கேட்கிறார்கள். அப்போது தான் தெரிந்தது எல்லோருக்கும் தெரிந்ததை ரகசியம் என்றால் அதற்க்கு பெயர் தான் "கார்பரேட் சீக்கிரட்" என்று. 

அடுத்த ஒரு வாரத்தில் வீசா ஸ்டாம்பிங் எல்லாம் முடிந்து, மார்ச் 8 ஆம்  தேதி  அமெரிக்கா பயணம். ஷாப்பிங் எல்லாம் பண்ணியாயிற்று. வீட்டில்  அம்மா அப்பா அண்ணன் மாமா மாமி நெருங்கிய குடும்ப நண்பர் என பட்டாளமே  திரண்டு வந்திருந்தது, என்னை வழியனுப்ப. அப்போது தான் அந்த செய்தி சன் டி.வி "Flash news"  வாயிலாக என்னுடைய அமெரிக்க பயணத்திற்கு  ஆப்பாக  வந்தது. அது என்ன செய்தி?

செய்திகள் தொடரும்...    

share on:facebook

சசிகலா அ. தி. மு. க. விலிருந்து நீக்கம். கனவா இல்ல நினைவா?

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா திடீர் நீக்கம் - போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற்றம்.


செய்தி.

share on:facebook

Sunday, December 18, 2011

தானத்தில் சிறந்தது ...தாய்மை தானம்.

சில நேரங்களில் ஒரு சிறிய நல்ல காரியம் செய்தால் கூட நம்மை நாமே பெருமையாக நினைத்துக் கொள்வோம். அதை விட பெரியதொரு நல்ல விஷயத்தை அமைதியாக சிலர் செய்யும் போது தான் நாம என்னத்த பெருசா கிழித்தோம் என்று நினைக்க தோன்றும்.

சமீபத்தில் பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களின் பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. ஒரு காலத்தில் இவரின் பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தேன் ஏனோ சமீப காலமாக அவரும் தொடர்ந்து எழுதுவதில்லை நானும் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

காரில் ஒருத்தருக்கு லிப்ட் கொடுப்பதையோ அல்லது முடியாத ஒருவரை கை தாங்களாக அழைத்து செல்வதையே பெருசாக நினைக்கும் நமக்கு(எனக்கு) ஸ்ரீராம் மற்றும் அவரின் மனைவி மற்றும் மகளின் தியாக சிந்தனை எல்லாராலும் பாராட்ட பட வேண்டியது. அப்படி என்ன தான் அவர் செய்து விட்டார் என கேட்பவர்கள் இங்கே சொடுக்கவும்.

ஸ்ரீராமை பாராட்ட நினைப்பவர்கள் அவரின் பதிவிலேயே தங்கள் பாராட்டை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன் ஆதி...

share on:facebook

Friday, December 16, 2011

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு - இந்திய பொறியாளர் உட்பட இருவர் காயம், மூவர் பலி, கலிபோர்னியாவில் பதட்டம்.


கலிபோர்னியா மாகாணத்தில் இர்வின்டேல் நகரத்தில் அமைந்துள்ள "சதர்ன் கலிபோர்னியா எடிசன்" அலுவலகத்தில் இன்று மதியம் நடை பெற்ற துப்பாக்கி சூட்டில் ஐவர் சுடப்பட்டதாகவும் அதில் ஒருவர்  இந்திய  கணிப்பொறி  வல்லுநர் என்றும் கூறப்படுகிறது.

சுடப்பட்ட ஐவரில் இருவர் இறந்து விட்டதாகவும், பின் துப்பாக்கி சூடு நடத்தியவரும் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்து விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் அடைந்த மற்ற இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது.

"ஆதிமனிதன்" பாதுகாப்பாக உள்ளார். மேலும் தகவல்கள் விரைவில்...


share on:facebook

Thursday, December 15, 2011

உலகின் மிக பெரிய ஜனாதிபதி மாளிகை - ஒரு விசிட்.


உலகில் உள்ள மொத்த ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்  உள்ளனர். உலக வங்கியின் அறிக்கை படி 40 % மேற்பட்ட இந்தியர்கள்  வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். ஆனால் உலகிலேயே மிக பெரிய  ஜனாதிபதி மாளிகை இந்தியாவில் தான் இருக்கிறது.

நாலு அடுக்குகளை கொண்ட நம் இந்திய ஜனாதிபதி மாளிகையின் மொத்த  பரப்பளவு சுமார் 200, 000 சதுர அடி. இதில் மொத்தம் 340 அறைகள்  உள்ளன.  1911 ஆம் ஆண்டு ஜார்ஜ் மன்னன் V இந்தியாவின் தலை நகரம்   கொல்கட்டாவிலிருந்து டெல்லிக்கு மாறுகிறது என்று அறிவித்ததை  தொடர்ந்து  இங்கிலாந்து வைஸ்ராய்கள்   தங்குவதற்காக கட்டப்பட்ட  மாளிகைதான் இன்றுள்ள ஜனாதிபதி மாளிகை. இதில்  குடியேறிய முதல்  வைஸ்ராய் லார்ட் இர்வின்.

இந்திய, முஹலாய, ஐரோப்பிய கட்டட கலைகளை கலந்து கட்டப்பட்ட இந்த  மாளிகையின் நடுவில் அமைந்துள்ள தாமிரத்தால் ஆன "டோம்" போன்ற   நடு பகுதி இம்மாளிகையின் உயரத்தை விட இரு மடங்கு உயரம் கொண்டது.  இம்மாளிகைக்குள் பொது மக்கள் போய் சுற்றி பார்க்க அனுமதி உண்டு. இங்குள்ள மார்பில் கூடத்தில் அக்காலத்திய ராஜ, ராணி, வைஸ்ராய் என  முக்கியஸ்தர்களின் முழு உருவ ஓவியங்கள் மற்றும் சிலைகள்  நிறைந்திருக்கும்.

இதற்க்கு கீழ் அமைந்துள்ள சமையல் அறை அருங்காட்சியத்தில் முன்னாள்  வைஸ்ராய்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் உபயோகித்த சமையல் அறை பாத்திரங்கள் மற்றும்  உபகரணங்களை காணலாம்.

இதை அடுத்து பரிசுப் பொருள் அருங்காசியகமும் மக்கள் மனதை கவரும் ஒரு அறையாகும். ஆம், இங்குதான் இந்திய ஜனாதிபதிகள் பெற்ற ஒவ்வொரு பரிசுப் பொருளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.  ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்ட அனைத்துப் பரிசுப் பொருட்களும் இந்த அருங்காட்சியத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. ஒரு முறை நீங்கள் பார்த்த பரிசுப்  பொருட்கள்  அடுத்த முறை நீங்கள் போகும் போது பார்க்க இயலாது. ஒவ்வொரு முறையும் பரிசுப் பொருட்கள் மாறிக்கொண்டே இருக்கும்.  அப்படியானால் மொத்தம் எவ்வளவு பரிசுகள் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

மாளிகையின் நடு கோபுரத்திற்கு கீழே தர்பார் ஹால் அமைந்துள்ளது. இங்கு தான் அந்நாளில் இங்கிலாந்து வைஸ்ராய்களும், வைஸ் ரீன்களும்  அமரும் சிம்மாசனங்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது இங்குதான் நம்  ஜனாதிபதியின் சிம்மாசனம் உள்ளது. பெரும்பாலான அரசு பூர்வ விழாக்கள்,  தேசிய விருதுகள் வழங்கும் விழாக்கள் இங்கு தான் நடை பெறுகின்றன.  

ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முகல் கார்டன்ஸ் மிகவும் பிரசித்தி பெற்றது. பதிமூன்று ஏக்கர் பரப்பளவில் மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள  இத்தோட்டத்தில் அழகிய தண்ணீர் ஊற்றுக்கள் மற்றும் அபூர்வ  வண்ண  மலர்கள் எங்கும் நிறைந்திருக்கும். இந்த தோட்டத்தில் தான் குடியரசு  நாள்  மற்றும் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் எல்லோருக்கும்  விருந்து  கொடுப்பார்.

ஜனாதிபதி மாளிகையின் கடைசி சுற்றில் ஒரு குழந்தைகள் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. குழந்தைகள் குடியரசு தலைவருக்கு அளித்த அனைத்து பரிசு பொருட்களும் இங்கு கட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும். அதே போல் இங்கு உள்ள எடை அளவுகோளில் நாம் சந்திரன் மற்றும் மற்ற கோளங்களில் வாழ்ந்தால் நம்முடைய உடல் எடை எவ்வளவு இருக்கும் என்பதை காட்டும்.

என்ன இப்போதே ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்க்க வேண்டும் போல் உள்ளதா? நீங்களும் போய் சுற்றி பார்க்கலாம். மாளிகையின் சில பகுதிகள் வார நாட்களில் செவ்வாய் வெள்ளி தவிர வருடம் முழுதும் திறந்திருக்கும். ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்க்க அனுமதி கோரி நீங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Military Secretary to the President, Rashtrapati Bhavan, New Delhi
அல்லது  மின்னஞ்சல் முகவரி: dmsp@rb.nic.in

சுற்றி பார்க்க விரும்பும் அனைவரும் தங்களின் முழு விபரத்தையும் மற்றும் சுற்றி பார்க்க விரும்பும் தேதியையும் குறிப்பிட வேண்டும். 

இந்த பதிவு எழுதி முடிக்கும் வரை ஜனாதிபதி என்று வரும் இடங்களில் எல்லாம் டாக்டர் அப்துல் கலாம் தான் என் கண் முன் வந்தார். ஜனாதிபதி  என்றால் அவர் தான் என்ற இமேஜை நமக்கு எல்லாம் ஏற்படுத்தி  விட்டார்.   

share on:facebook

Wednesday, December 14, 2011

"ட்ரைமஸ்டர்" தந்த தங்க தலைவி வாழ்க.


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது சில நல்ல திட்டங்களை கொண்டு வருவார். கடந்த முறை அவர் கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டம். அனைவராலும் பாராட்டப் பட்ட ஒன்று. சொல்லப் போனால் நகரம், கிராமம் என வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் உள்ள தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலான கட்டடங்களில் இத் திட்டம் நடை முறைப் படுத்தப் பட்டது. அதற்க்கு முழு காரணம் செல்வி. ஜெயலலிதாவும், இத் திட்டத்தை செயல் படுத்த அவரின் அரசு கடை பிடித்த கடுமையான நடைமுறைகளும் தான்.

அடுத்ததாக தற்போது ஒரு மிக பெரிய மாற்றத்தை பள்ளி கல்வித்துறையில் கொண்டு வந்துள்ளார் (சமச்சீர் கல்வி மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றத்தை சொல்ல வில்லை!). மாறாக தற்போதைய கல்வி முறையில் ட்ரைமஸ்டர் என்று சொல்லக் கூடிய பருவ முறை தேர்வு முறை அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என்ற மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

தற்போது உள்ள தேர்வு முறையில் காலாண்டு தேர்வுக்கு படித்த பாடத்தையே அரை ஆண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுக்கும் படிக்க வேண்டும். இதனால் எந்த உபயோகமும் இல்லை. மாறாக வருடம் முழுதும் அதே புத்தகத்தை சுமப்பதும், படித்து முடித்து தேர்வு எழுதிய பாடத்தையே மீண்டும் படிப்பதும் தான் மிச்சம். பருவ முறையில் ஒரு முறை படித்து தேர்வு எழுதி விட்டால் அடுத்த பருவ தேர்வுக்கு அந்த பாடத்தை மீண்டும் படிக்க வேண்டியதில்லை.

அது மட்டும் இன்றி, மூன்று பருவ தேர்வுகளின் மதிப்பெண்களையும் கூட்டி அதன் சராசரியை முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்ணாக கணக்கிடுகிறார்கள். இதனால், ஒரு நாள் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் இறுதி தேர்வு எழுத முடியவில்லை என்றால் கூட அதனால் அந்த ஆண்டு தேர்வில் தோல்வி என்ற கவலை இல்லை.

இந்த அறிவிப்பு எல்லா பெற்றோர்களையும் கல்வியாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் ஐயம் இல்லை. அது மட்டும் இல்லாமல் குழந்தைகள் இதன் முழு பலனையும் புரிந்து கொண்டால் அவர்களை விட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

என் குழந்தைகள் தற்போதே துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா சென்ற பின் தங்களுக்கு செமஸ்டர் முறை தேர்வுகள் என்று அறிந்தவுடன். இங்கு (அமெரிக்காவில்) உள்ள பள்ளி கல்வி முறையை முடிந்தபோது பகிர்கிறேன்.
  

share on:facebook

Tuesday, December 13, 2011

படித்தவுடன் இலவச பயிற்சி, அரசு வேலை - ஆம் தமிழகத்தில் தான்.


அரசு சேவை இல்லம் பற்றிய சென்ற பதிவின் தொடர்ச்சி...

இன்று அரசாங்க வேலை கிடைப்பதே அறிதாகி போய்விட்ட ஒன்று. அப்படி இருக்கையில், படித்து முடித்தவுடன், இலவச பயிற்சி மற்றும் அரசு வேலையென்றால் அது அரசு "சேவை இல்லத்தில்" படித்தவர்களுக்கு மட்டும் தான். இதற்கென்று ஒரு அரசு ஆணையே உள்ளதாக தெரிகிறது. அதாவது "சேவை இல்ல" சீல் உள்ள ட்ரைனிங் சர்டிபிகேட்/பள்ளி சான்றிதல் இருந்தால் அவர்களுக்கே அரசு வேலையில் முன் உரிமை.

சேவை இல்லத்தில் படித்தவர்களுக்கு அரசு வேளையில் சேர வயது வரம்பே கிடையாது. ஐம்பத்தி ஏழு வயதில் அரசு வேளையில் சேர்ந்து ஐம்பத்து எட்டு வயதில் பனி ஓய்வு பெறலாம்.

சென்ற பதிவில் கூறியிருந்தது போல், சேவை இல்லத்தில் சேர பதினெட்டு வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதற்க்கு காரணம், இப்பள்ளியே ஆதரவற்ற இளம் பெண்கள் நல்வாழ்வு பெறுவதற்கு தான். பெரும்பாலும் இங்கு சேர்பவர்கள் இளம் வயதிலேயே கணவனை இழந்தவர்களோ, அல்லது கணவனால் கை விடபட்டவர்களோ ஆவார்கள். அதனாலேயே ஐந்தாம்  வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும், இப்பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். இப்பெண்களுக்கு  குழந்தைகள் இருந்தால் ஆண் குழந்தை என்றால் மூன்று வயது வரையிலும்,  பெண் குழந்தை என்றால் ஐந்து வயது வரையிலும்  தாயுடனே தங்கி கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, சேவை இல்லத்தில் படித்த பெண்களுக்கு என்றே ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கடலூர் போன்ற மாவட்டங்களில் செயல்படுகிறது. பயிற்சி முழுவதும் இலவசம்.

அரசு சேவை இல்லம் மூலம் இன்னும் பல நல்ல வசதிகளை ஆதரவற்ற  ஏழை பெண்கள் பெற்றுக் கொள்ள தமிழக அரசின் சமூக நலத்துறையை அணுகலாம். என்னுடைய தாயார் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர்/  சூப்பிரண்டண்ட் ஆக பணியாற்றியதாலும் இப்பள்ளியை பற்றி பொது மக்களுக்கு அதிகம் தெரியாத காரணமும் இப்பதிவை எழுத தூண்டியது.

சேவை இல்லம் பற்றி எனக்கு தெரிந்த இன்னொரு பெருமை, இம்மாதிரி  அதரவற்ற பெண்களாக இப்பள்ளியில் சேர்ந்து என் தாயிடம் படித்த இரு மாணவிகள் முது நிலை பட்டம் பெற்று   இப்பள்ளியிலேயே ஆசிரியர்களாக பணியாற்றுவதுதான்.


share on:facebook

Monday, December 12, 2011

அமெரிக்காவின் உல்லாச நகரம் : லாஸ் வேகாஸ் போலாம் வாங்க...


லாஸ் வேகாஸ். உல்லாச உலகின் தலை நகரம் என்றும் கூறலாம். அமெரிக்காவின் நவாடா மாகாணத்தில் அமைந்துள்ள இந்நகரம் முற்றிலும் பாலை வன பிரதேசம். அமெரிக்கர்கள் அதையே இன்று அதிக வருவாய் பார்க்கும் நகரமாக மாற்றி இருக்கிறார்கள்.

சரியோ தவறோ, ஒரு மாநகரத்தில் கேளிக்கை விடுதிகள் நிச்சயம் வேண்டும். அப்போது தான் பெரும் பணக்காரர்களிடம் உள்ள பணமும் வளமும் வெளியே வரும். அந்த வகையில் அமெரிக்கர்களிடம் உள்ள அதிகப்படியான பணம் அனைத்தும் லாஸ் வேகாஸில் தான் செலவிடப்படுகிறது.

லாஸ் வேகாஸ் நகரம் முழுவதும் கேசிநோஸ் என சொல்லப்படும் சூதாட்ட விடுதிகள் தான். நம்மூர் மூணு சீட்டிலிருந்து அனைத்து வகையான சூதாட்டங்களும் இங்கு பிரபலம். பெரும்பாலான அமெரிக்கர்கள் வருடத்துக்கு ஒரு முறை லாஸ் வேகாஸ் சென்று தங்கள் விடுமுறையை கழிக்கும் வழக்கம் உள்ளவர்கள். இதற்க்கென்றே தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை மாதாமாதம் சேமிப்பவர்களும் உண்டு.


லாஸ் வேகாசின் இன்னொமொரு சிறப்பு அம்சம் அங்குள்ள சூதாட்ட விடுதிகளின் கட்டட கலைகள். இங்குள்ள ஒவ்வொரு விடுதியும் ஒரு "theme" என்று சொல்லக் கூடிய வகையில் அமைத்திருப்பார்கள். ஹோட்டல் "பாரிஸ்"  பாரிஸ் நகர ஈபில் டவரின் வடிவில் அமைத்திருப்பார்கள். ஹோட்டல் "நியூயார்க் நியூயார்க்" நியூயார்க் நகரில் அமைந்துள்ள கட்டடங்களின் அமைப்பில் வடிவமைத்திருப்பார்கள்.


இதே போல் ஈஜிப்ட் நகரில் உள்ள பிரமிடுகளின் அமைப்பில் ஒரு விடுதியும் அங்கு உள்ளது. ஒவ்வொரு விடுதியும் பல தளங்களை கொண்டிருக்கும். பெரும்பாலும் கீழ் தளம் சூதாட்ட விடுதியும், மேல் தளங்களில் தங்கும் அறைகளும் அமைத்திருக்கும். லாஸ் வேகாசின் இன்னொரு சிறப்பு அம்சம், இங்குள்ள அனைத்து விடுதிகளும் (பெரும்பாலும் த்ரீ ஸ்டார் அல்லது பைவ் ஸ்டார் அந்தஸ்து கொண்டவை) மிக குறைந்த அளவிலேயே தங்கும் கட்டணம் வசூலிப்பார்கள். அதே போல் லாஸ் வேகாஸ் செல்ல விமான கட்டணங்களும் மிக குறைவே. இவ்வாறு கட்டண சலுகைகள் மூலம்  மக்களை அங்கு வரவழைப்பதே அவர்களின் நோக்கம்.

அமெரிக்காவில் இங்கு மட்டும் தான் நீங்கள் பொது இடங்களில் மது அருந்தலாம். மது அருந்தவும் புகைக்கவும் இங்கு தடை செய்யப்பட்ட இடம் என்று ஒன்று இல்லை. அதே போல் பெரும்பாலான விடுதிகளில் சூதாட்டம் ஆடுபவர்களுக்கு மது இலவசமாக விநியோகிக்கப் படும். எனக்கு தெரிந்த ஒரே கட்டுப்பாடு, சூதாட்ட தளங்களில் குழந்தைகள் தனியாக உலவ அனுமதி கிடையாது. அவர்கள் சூதாடுபவர்களுடன் அமரவும் முடியாது. இரவு நகரம் என சொல்லக்கூடிய லாஸ் வேகாஸில் பகல் பொழுதை விட இரவில் தான் அதிக நடவடிக்கைகள் உண்டு.

உல்லாசங்கள் தொடரும்...share on:facebook

Sunday, December 11, 2011

ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம்.

இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு ரசிகனின் வாழ்த்துக்கள்.


share on:facebook

Thursday, December 8, 2011

இன்று ஊழல் ஒழிப்பு தினம் - அரசு அலுவலக பியூனுக்கு ரூ.4.5 கோடிக்கு சொத்து


உஜ்ஜயினி : மத்திய பிரதேச மாநிலத்தில், அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பியூன் வீட்டில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், அவருக்கு சொந்தமாக இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் பியூனாக பணிபுரிபவர் நரேந்திர தேஸ்முக், 53. இவரது வீட்டில், லோக் ஆயுக்தா அதிகாரிகளைக் கொண்ட 15 பேர் குழு, நேற்று முன்தினம் சோதனை நடத்துவதற்காக சென்றது. வீட்டில் இருந்தவர்கள், அவர்களை அனுமதிக்கவில்லை. நுழைவாயிலில் உள்ள கேட் பூட்டப்பட்டது. 

அதிகாரிகள் உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக, தேஸ்முக்கின் வீட்டில் வளர்க்கப்படும் நாயும், கேட் அருகே நிறுத்தப்பட்டது. இதனால், 20 நிமிடங்களுக்கு மேல், அதிகாரிகள் வெளியில் நிற்க வேண்டியதாகி விட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில், தேஸ்முக்கின் மனைவி, சில நகைகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை பின்பக்க வழி மூலமாக, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுக்க முயற்சித்தார். வீட்டுக்குள் புகுந்த அதிகாரிகள், ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர். 

அப்போது, ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்கள் அங்கு இருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டனர். நவீன வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடம்பர நாற்காலிகள், மேஜைகள், படுக்கைகள் ஆகியவை வீட்டில் இருந்தன. மேலும், தேஸ்முக்கிற்கு சொந்தமாக இரண்டு ஆடம்பர வீடுகள், ஒரு கோழிப் பண்ணை, கோழிக் கறிக்கடை, மகாராஷ்டிர மாநிலத்தில் ஐந்து ஏக்கர் நிலம், மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் பங்குதாரர், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள், வங்கிகளில் 16 லட்சம் டிபாசிட் மற்றும் நகைகள் உட்பட 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், இவருக்கு சொந்தமாக இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின.

இதுகுறித்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறுகையில், "தேஸ்முக் கடந்த 1980ல் பணிக்கு சேர்ந்தார். பதவி உயர்வுக்கு இவர் பெயர் சில முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும், ஊழல் புகார்கள் காரணமாக பதவி உயர்வு கிடைக்கவில்லை. இவர் வாங்கும் சம்பளம் மிகக் குறைவு. குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு, இந்தளவுக்கு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றனர்.

நன்றி: தினமலர் செய்தி.

share on:facebook

Wednesday, December 7, 2011

(முல்லை) பெரியாரும் (ஐயப்ப) பக்த்தர்களும்


முல்லை பெரியார் அணை பிரச்சனையால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்கள் படும் பாடு எல்லோருக்கும் தெரிந்ததே. வாடிக்கையாளர்கள் வரவால் தான் ஒரு வியாபாரம் செழிக்கும். அது போல் பக்தர்கள் வருகையால் தான் ஒரு திருத்தலம் புகழ் பெற முடியும். தமிழக ஐயப்ப பக்தர்கள் ஒரு வருடம் சபரி மலைக்கு செல்வதை நிறுத்தினாலே போதும். அடுத்த வருடம் சபரி மலையை நிர்வகிக்க கேரளா அரசிடம் டப்பு இருக்காது. இவை எல்லாம் தெரிந்திருந்தும் கேரளா அரசு தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்படும் இன்னலை கண்டும் காணாமல் இருக்கிறதென்றால் அவர்களுக்கு சரியான பாடம் கற்ப்பிக்க வேண்டும்.

அதற்காக இங்கு தமிழகத்தில் உள்ள கேரளா வர்த்தக நிறுவனங்கள் மீதும் மலையாளிகள் மீதும் தாக்குதல் நடத்தி தான் நம் கண்டனத்தை தெரிவிக்க  வேண்டும் என்று இல்லை. சமீபத்தில் சபரி மலை செல்லும் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகளால்தவித்த தமிழக பக்தர் ஒருவர்,  இனி நாங்கள் சபரி மலை சென்று ஐயப்பனை தரிசிக்க  போவதில்லை.  தமிழ் உணர்வுடன் இங்கு உள்ள (அவர் சொன்ன ஊர் பெயர் நினைவில்லை)  ஐயப்பன் கோவிலுக்கே  சென்று விரதத்தை முடித்துக் கொள்ளப் போகிறோம்  என்று தெரிவித்தார்.  என்ன உன்னதமான ஒரு புத்திசாலித்தனமான முடிவு.

பொதுவாகவே தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை  அதிகம்.  அதனால் தவறு  ஒன்றும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஐயப்ப சேவா சங்கங்களும் உடனே கூடி சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அடுத்த வருடத்தில் இருந்து நாங்கள் யாரும் சபரி மலைக்கு வர மாட்டோம். இங்குள்ள பழனிக்கோ, குன்றக்குடிக்கோ விரதம் இருந்து காவடி எடுப்போம் என்று ஒரு அறிக்கை விடட்டும். அது போதும், கேரளா அரசு அணை கட்டும் பேச்சை கூட எடுக்காது.

தமிழகத்திற்க்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள தண்ணீர் பிரச்னை வேறு.  ஆனால் முல்லை பெரியாறு அணை பிரச்னை வேறு. ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் கல்லணை உறுதியாக உள்ள போது சுமார் நூறு  வருடங்களுக்கு முன் கட்டிய அணை எவ்வாறு பலமிழந்து போகும்.  சுப்ரீம்  கோர்ட் முதல் அனைத்து வல்லுனர்களும் அணையின் பலத்தை பற்றி அறிக்கை கொடுத்தும் கூட கேரளா அரசு அடம் பிடிப்பது சண்டித்தனம்  என்பதை தவிர வேறு என்ன?

கேரளா அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றால், தமிழகத்திலுள்ள அனைத்து கேரளா நிறுவனங்களையும் (குறிப்பாக தொண்ணூறு சதவிகத்திற்க்கும் மேலான டீ கடைகளை) தமிழர்கள் புறக்கணித்தால் போதும். கேரளா அரசுக்கு மலையாளிகளே நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். பொருளாதார ரீதியாக அடித்தால் போதும் ஒரு மாநில அரசு என்ன ஒரு நாட்டையே வீழ்த்தி விட முடியும்.

உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதத்தை தவிர்ப்போம். பொருளாதார ரீதியாக கேரளா அரசை மிரட்டுவோம்.  

share on:facebook

Tuesday, December 6, 2011

நூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்


தமிழக அரசானாலும் சரி, அது இந்திய அரசானாலும் சரி. அவ்வப்போது பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கும். இவைகளில் பல, ஆளும் கட்சி தொண்டர்கள் பலன் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் விழலுக்கு இறைத்த நீர் சிறுது பயிருக்கும் பாய்வது போல், ஒரு சில உண்மையான பயனாளிகளுக்கும் போய் சேரும். எனக்கு தெரிந்து இதற்க்கு நேர் மாறாக தமிழக அரசின் திட்டம் ஒன்று இருக்கிறதென்றால் அது தமிழக அரசின் "சேவை இல்லங்கள்" தான்.

தமிழகத்தில் தஞ்சை, கடலூர், தாம்பரம், சேலம், நாகப்பட்டினம் மற்றும் மதுரை என பல இடங்களில் "சேவை இல்லம்" என்ற பெயரில் அரசு நடத்தி வரும் இம்மாதிரியான பல்நோக்கு சேவை மையம் ஒன்று இருப்பது அவ்வூர் மக்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. சரி விசயத்திற்கு வருவோம். எனக்கு தெரிந்த தஞ்சை "சேவை இல்லத்தை" பற்றிய குறிப்புகள் சில கீழே வருமாறு:

தஞ்சையில் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நாஞ்சிக் கோட்டை ரோட்டில் அமைந்துள்ள சேவை இல்லம்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் அதன் சொந்த  கட்டடத்தில் இயங்கி வருகிறது. முதலில் ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்ட சேவை இல்லத்தில் இன்று பிளஸ் டூ வரை சொல்லிக்கொடுக்கப்படுகிறது. First group,  Second group, கம்ப்யூட்டர் சயின்ஸ் என அனைத்து பாட பிரிவுகளுக்கும் ஐந்து பைசா டொனேஷன் இன்றி அட்மிஷன் இலவசம். அது தவிர ஆறு மாத தையற்  பயிற்சி மற்றும் தட்டச்சு (தமிழ்+ஆங்கிலம்), குறுக்கெழுத்து  பயிற்சியும் தனி வகுப்புகளாக  நடத்தப்படுகிறது.

ஆறு மாத தையற்  பயிற்சியை முழுமையாக முடித்து வெளியேறும் போது அரசே இலவசமாக தையற் இயந்திரம் ஒன்றையும் வழங்குகிறது. சேவை இல்லத்தில் தட்டச்சு பயில்பவர்கள் மட்டும் வீட்டிலிருந்து(வெளியில்  இருந்து) வந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்ற அனைவரும்  அங்கேயே  இயங்கி வரும் விடுதியிலேயே தான் தங்கி படிக்க வேண்டும்.  ஆனால்  அதற்காக  கவலை பட வேண்டியதில்லை. சேவை இல்ல விடுதி  முற்றிலும் இலவசம். ஆம், தாங்கும் இடம், உணவு, உடை என  அனைத்துக்கும் அரசே  செலவிடுகிறது. விடுதியை கவனித்துக் கொள்ள ஒரு  வார்டனும்,  அவருக்கான குடியிருப்பும் சேவை இல்லத்தின் உள்ளேயே  உள்ளது.

உள்ளே உள்ள அனைத்து துறைகளையும் கவனித்துக் கொள்ள சூப்பிரண்டண்ட் என ஒரு மேலதிகாரியும் அவரே அங்குள்ள பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் உள்ளார். இவரின் வீடும் பள்ளி வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது. அதாவது இப்பள்ளியை வருடம் தோறும் இருபத்தி நான்கு மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு வார்டன் மற்றும் ஒரு சூப்பிரண்டண்ட் எப்போதும் பணியில். இவர்கள் தவிர பகல்/இரவு வாட்ச்மேன், பணியாளர்கள், ஆயாக்கள், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் வெளியில் இருந்து சென்று வரலாம்.

சரி இப் பள்ளியில் சேர என்ன தகுதி, யாரெல்லாம் சேரலாம் என கேட்கிறீர்களா? இப்பள்ளி முற்றும் பெண்களுக்கானது. அது மட்டுமல்ல  இப்பள்ளியில் சேர்ந்து படிக்க கீழ் கண்டவற்றுள்  எதாவது ஒன்றை பூர்த்தி செய்பவராக இருத்தல் வேண்டும்.

# பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவராக இருத்தல் வேண்டும்.
# கணவனால் கை விடப்பட்டவராகவோ அல்லது கைம்பென்னாகவோ  இருத்தல் வேண்டும்.
# தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்தவராக இருத்தல் வேண்டும்.
# வயது 18 பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
# குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

மேற்கூறிய தகுதிகள் உங்களில் ஒரு சிலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். சேவை இல்லத்தின் முழு நோக்கத்தை தெரிந்து கொள்ளும் போது அதற்க்கான காரணம் உங்களுக்கு புரியும்.

மேலும் விபரங்கள் அடுத்த (இந்த ஆண்டின்) 101  வது பதிவில்...


share on:facebook