Sunday, February 26, 2012

காலேஜ் ஸ்பெஷல் - லேடீஸ் காரேஜும், 'டிஸ்க்' புல்லிங்கும்.


பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது கடைசி பெஞ்சை பொதுவாக மாப்பிள்ளை பெஞ்ச் என்று கூறுவார்கள். அதாவது மாப்பிள்ளை பெஞ்சில் உட்கார்பவர்கள் எல்லாம் அதிகம் படிக்காத மார்க் எடுக்காத உருப்புடாதவர்கள் என்ற எண்ணம் இன்றளவும் உள்ளது. ஆனால், அப்படி கடைசி பெஞ்சில் ஜாலியாக உட்கார்ந்து அரட்டை அடித்து அதே நேரம் நல்ல மார்க் வாங்கி உருப்புட்டவர்களும் உண்டு. அவர்களை போல் வாழ்க்கையை படிப்பிலும் சரி, மற்ற விசயங்களிலும் சரி, அனுபவித்தவர்கள் இருக்க முடியாது.

நம்மூர் ரெயில்களில் கடைசி பெட்டி கார்ட் பெட்டியாகவும் அதற்க்கு முன்னால் உள்ள பெட்டி பெண்களுக்கான L.C. எனப்படும் லேடீஸ் காரேஜ் என்பார்கள். கல்லூரி படிக்கும் போது இந்த L.C. பெட்டிக்கு முன் பெட்டி தான் எங்கள் பேவரைட் பெட்டி. பள்ளி/கல்லூரிகளில் எப்படி கடைசி பெஞ்ச் மாப்பிள்ளை பெஞ்ச்சோ அதே மாதிரி தான் ரெயில்களில் நான் மேலே சொன்ன கடைசி பெட்டியும்.

சுமார் ஆறு ஆண்டுகள் நான் கல்லூரி செல்லும் பொருட்டு தினமும் ரெயிலில் செல்லும் பாக்கியம் பெற்றவன் நான். பொதுவாக கல்லூரி செல்பவர்கள் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள் தான் செல்ல நேரிடும். நான் மூன்று மூன்று ஆண்டுகள் என மொத்தம் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து ரெயில் பயணம். தஞ்சையிலிருந்து திருச்சிக்கு அப்போதெல்லாம் அதிக டிரெயின்கள் கிடையாது. விடியற்காலை பொன்மலை ரெயில் தொழிற்சாலை செல்லும் பணியாளர்களுக்காக சுமார் ஐந்து மணியளவில் ஒரு டிரெயின் உண்டு. அதன் பிறகு காலை ஏழு ஐந்து மணிக்கு (அது என்ன ஐந்து நிமிட கணக்கு என எனக்கு இன்றும் தெரியவில்லை).

இந்த ஏழு ஐந்து மணி டிரெயின்னை பொதுவாக ஆபீஸ் டிரெயின் என்று தான் சொல்வார்கள். இதில் பயணம் செல்லும் தொண்ணூறு சதவிகித பயணிகள் ஒன்று அலுவலகம் செல்பவர்களாக இருப்பார்கள் இல்லை பள்ளி கல்லூரி செல்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் தொடர்ந்து பயணம் செல்லும் வகையில் சீசன் டிக்கெட் வைத்திருப்பார்கள். பள்ளி/கல்லூரி கன்சஷன் சீசன் டிக்கெட் விலை மிகவும் மலிவு. அதாவது எனக்கு நினைவு தெரிந்து மூன்று மாதத்திற்கு ஆன சீசன் டிக்கெட் வெறும் அறுபது ரூபாய்தான். இந்த சீசன் டிக்கெட்டை வைத்து நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருச்சி தஞ்சை சென்று வரலாம். எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட. அப்போது டிரெயின் டிக்கெட் மூன்று ருபாய் இருந்திருக்கும்.

சரி, L.C. பெட்டி பற்றி மீண்டும் பார்ப்போம். கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் இந்த L.C. பெட்டிக்கு முன் பெட்டியில் தான் பயணம் செய்வார்கள். அதற்க்கு காரணம் வேறாக நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை. ஆனால், நான் சொல்லும் காரணம், தாமதமாக வந்து டிரெயின்னை பிடிக்கும் நேரத்தில் கடைசி பெட்டி கார்ட் பெட்டி. அதில் ஏற முடியாது. அதற்க்கு முன் பெட்டி L.C. லேடீஸ் பெட்டியில் ஏற கூடாது. அதனால் தான் நாங்கள் L.C. பெட்டிக்கு முன் பெட்டியில் பயணம் செய்வோம். அதே போல், நான் முன்பே கூறியிருந்தது போல், பெரும்பாலனோர் தினமும் பயணம் செய்யும் பயணிகள் ஆதலால், ஒவ்வொரு க்ரூப்பும் ஒரே பெட்டியில் ஒரே இடத்தில் தினமும் ரிசர்வ் செய்தது போல் சேர்ந்து உட்காருவார்கள்.

டிரெயின்னை ஆபத்து சமயங்களில் நிறுத்துவதற்கு செயினை பிடித்து இழு என்று நீங்கள் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், எங்கள் பாஷையில் அதற்க்கு பெயர் 'டிஸ்க்' என்போம். வண்டியை உடனே நிறத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு பெட்டியிலும் வைத்துள்ள சங்கிலியை பிடித்து இழுக்கலாம். உண்மையை சொல்லப் போனால் சில லோக்கல் டிரெயின்களில் இந்த சங்கிலி சரியாக வேலை செய்யாது. அது தவிர இந்த சங்கிலிகள் எல்லோர் பார்வையில் படும் படி இருக்கும். ஆதலால், சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எல்லோருக்கும் தெரியும்.

அதே நேரம் இந்த 'டிஸ்க்' ஒவ்வொரு பெட்டியின் ஏறும்/இறங்கும் வழியில் கதவுக்கு மேல் பெட்டியின் மூலையில் ஒரு சாவி போல் இருக்கும். இந்த சாவியை பிடித்து மறு புறம் திருகினால் ரெயில் உடனே நின்று விடும். அதாவது, நீங்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தாலும் இந்த 'டிஸ்க்' எனப்படும் சாவிதான் ரெயிலின் பிரஷரை ரிலீஸ் செய்து வண்டியை நிறுத்தும். ஒவ்வொரு முறை அபாய சங்கிலி மூலம் வண்டி நிறுத்தப் படும் போதும் வண்டியின் டிரைவர் மற்றும் கார்ட் இருவரும் கீழே இறங்கி வந்து எந்த பெட்டியில் இந்த 'டிஸ்க்' திருகி இருக்கிறது என பார்த்து பின் அதை பழைய படி திருப்பிய பின் தான் வண்டியை எடுக்க முடியும். இந்த 'டிஸ்க்' டெக்னிக் எனக்கு தெரிந்து கல்லூரி மாணவர்களுக்கும் அடிக்கடி டிரெயின்யில் செல்லுபவர்களுக்கு தான் தெரியும்.     

சில சமயங்களில் ஆற்றை கடக்கும் போது சிலர் அபாய சங்கிலியையோ/டிஸ்க்கையோ பிடித்து இழுத்து விட்டால் அவ்வளவு தான். டிரெயின்னின் கார்டோ அல்லது டிரைவரோ உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆற்றுப் பாலத்தில் நடந்து வந்து எந்தப் பெட்டியில் இருந்து வண்டியை நிறுத்தினார்கள் என்று கண்டறிய வேண்டும். இதையெல்லாம் விட டிரெயின் டிரைவர்கள் மற்றும் கார்டுகளின் வேலை எப்போதும் மிகவும் சிரமமும், பொறுப்பும் வாய்ந்தது. அதை பற்றி அடுத்த பதிவில்...

சுய சரிதையின் வேறு பதிவுகள்...

"ஜெயிப்பது சுகம்" சுய சரிதை-1: காமர்ஸ் படித்தால் வெற்றி அடைய முடியாதா?

IT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loop  
   

share on:facebook

1 comment:

Sankar Gurusamy said...

நல்ல சுவராசியமான தகவல்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Post a Comment