சென்ற முறை எந்திரன் படபிடிப்பிற்காக ஹாலிவுட் வந்திருந்த ரஜினிகாந்த் ஒரு நாள் காலை மிகவும் பசி ஏற்பட்ட காரணத்தால் அருகிலிருந்த 'மெக் டொனால்ட்ஸ்' சென்றார். அங்கு சூடாக ஒரு பிளேட் இட்லி வடை ஆர்டர் செய்தார். என்ன ஆச்சர்யம். ஐந்து நிமிடத்தில் ஆவி பறக்க இட்லி வடை அவர் டேபிளில்.
ஹலோ ஹலோ என்னாச்சு உங்களுக்கு என்று என்னை அடிக்க வருகிறீர்களா? இதே போல் தான் இந்த கதையை (!) என்னிடம் சொன்ன நண்பரை அடிக்க நான் பாய்ந்தேன். எப்படியா? எப்படி? மெக் டொனால்ட்ஸில், இட்லி வடையா? என்று. அதற்க்கு அவர் கூலாக சொன்ன பதில். ஆம், ஆர்டர் செய்தது ரஜினி அல்லவா? அதுதான் ரஜினி பவர் என்று.
சும்மா ஜோக்குக்காக இப்படி கூறினாலும், உண்மையை சொன்னால், மெக் டொனால்ட்ஸில் வழங்கப்படும் பாதிக்கும் மேற்ப்பட்ட உணவு வகைகள் ஜன்க் புட் எனப்படும் சத்தில்லாத அதே நேரத்தில் உடலை அதிக குண்டாக்கக் கூடியதும் ப்ரோசன் செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவைதான். இருந்தாலும் குழந்தைகளை குறிவைத்து கிட்ஸ் மீளுடன் அவ்வப்போது புதிய புதிய அழகான பொம்மைகள்/விளையாட்டு பொருட்களை இலவசமாக கொடுத்து குழந்தைகளை கவர்வதின் மூலம் அதன் மூலம் பெரியவர்களையும் வர வைப்பது தான் அவர்களின் டெக்னிக். தற்போது அவர்களின் ஜனக் புட்டுக்கு எதிராக பல குரல்கள். அதனால், தற்போது குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பிரைஸ் அளவை குறைத்து அதற்க்கு பதிலாக ஆப்பிள் துண்டுகளும், ப்ரூட்ஸ் வகைகள் இணைத்து கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
மெக் டொனல்ட்ஸ் கிட்ஸ் மீல்:
என்னைப் பொறுத்த வரையில் அமெரிக்கா வரும் முன் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான் நாக்கு ருசி அதிகம் பார்ப்பவர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், அது தவறு என சில நாட்களிலேயே தெரிந்து கொண்டேன். ஆம், அமெரிக்கர்கள் நம் எல்லோரை விடவும் உணவு பிரியர்கள் அல்லது சாப்பாட்டு ராமர்கள். நாம் கூட வித விதமாக சமைப்போமே ஒழிய வெளியில் சென்று பல நாட்டு உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட மாட்டோம். ஆனால், அமெரிக்கர்கள் அப்படி இல்லை. இனி அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை பார்ப்போம்.
சிக்கன் திரியாக்கி:
பொதுவாகவே அமெரிக்கர்கள் நம்மைப் போல் தினமும் சமைத்து சாப்பிடுவதில்லை. அப்படியே சமைத்தாலும் நம்மைப் போல் ஒவ்வொரு வேலைக்கும் சமைக்க மாட்டார்கள். எனக்கு தெரிந்து சில நேரங்களில் பாஸ்த்தா போன்றவைகளை ஒரு தடவை சமைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து விட்டால் அது ஒரு வாரம் அவர்களுக்கு காலை/இரவு உணவாக ஓடும். அது மட்டும் இல்லை. பெரும்பாலான அமெரிக்கர்கள் மதிய உணவை வீட்டில் தயாரித்து எடுத்து வருவதில்லை. வெளியில் தான் சாப்பிடுவார்கள்.
லசாங்கா:
மேலும் நம்மூரைப் போல் தெருவுக்கு ஒரு தனி தனி ஹோட்டல் போல் இங்கு இல்லாததாலும், எல்லாமே செயின் ரெஸ்டாரன்ட் என்பதாலும் உணவு வகைகள் நேர்த்தியாகவும், சுகாதாரமாகவும், எந்த ஊருக்கு போனாலும் ஒரே மாதிரியாக கிடைப்பதால் (நடுத்தர/மெக் டொனால்ட்ஸ் போன்ற ஹோட்டலில் சாப்பிடுவது அதிக செலவும் இல்லை எனவும் சொல்லலாம்) பெரும்பாலான அமெரிக்கர்கள் மதிய மற்றும் காலை மாலைகளில் வெளியிலேயே உணவை எடுத்துக் கொள்கிறார்கள்.
வெளியில் சென்று சாப்பிடுவது என்பது வெறும் வாய் ருசிக்காக மட்டும் இல்லை. நாம் குடும்பத்துடன்/நண்பர்களுடன் சினிமா பார்ப்பது, பூங்கா செல்வது போல், அமெரிக்கர்கள் ரெஸ்டாரண்டுக்கு சென்று குடும்பத்துடனோ பாய் பிரெண்ட்/கேர்ள் பிரண்டுகளுடன் உடனோ சேர்ந்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவர்கள். ஆர்டர் செய்த பின் உணவு வரும் வரை இருக்கும் நேரத்தையும், உணவு வந்த பின் பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் உணவை ஒரு மணி நேரம் சிறிது சிறிதாக ருசித்து அதே நேரத்தில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிடுவது அவர்களுக்கு பிடித்த விஷயம். சாப்பிடும் போது பேச கூடாது என்பது அமெரிக்காவில் இல்லை.
சப்வே சிக்கன் சான்ட்விச்:
அதே போல் நான் முன்பே கூறியிருந்தது போல் அமெரிக்கர்கள் உணவு பிரியர்கள். ஒரு நாட்டு உணவையும் விட்டு வைக்க மாட்டார்கள். ஜாப்பனீஸ், சைனீஸ், கொரியன், மெக்சிகன், இந்திய உணவு வகைகள் என்று மாறி மாறி ருசிப்பார்கள். அதிலும் குறிப்பாக இந்திய உணவு வகைகளை அவர்கள் எடுத்து உண்ண தெரியாமல் உண்ணும் அழகே அழகு. தோசையை போர்க்காலும், ரைஸை தனியாகவும், குருமாவை தனியாகவும் எடுத்து ருசிப்பதை பார்க்கும் போது நமக்கு பாவமாக இருக்கும். பெரும்பாலும் அமெரிக்கர்களை குறி வைத்து நடத்தப் படும் இந்திய ரெஸ்டாரன்ட்களில், ஒரு அப்பளம் ஒன்றிரண்டு ஐட்டங்களை தொட்டுக்க கொடுத்து அதற்க்கு இரண்டு, மூன்று டாலர்கள் பில் போட்டு போடுவார்கள்.
ஆரஞ்சு சிக்கன்:
அமெரிக்க ரெஸ்டாரன்ட்களில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால், ஆர்டர் செய்து விட்டு முழுவதையும் சாப்பிட முடியாவிட்டால், மீந்து போன உணவை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லி விட்டால் போதும் அழகாக அதை ஒரு பாக்சில் போட்டு கொடுத்து விடுவார்கள். ஐயோ காசு கொடுத்து சாப்பிட முடியவில்லையே என ஏங்க வேண்டாம்.
கடைசியாக எனக்கு பிடித்த உணவு வகைகள். ஜாப்பனீஸ் சிக்கன் திரியாக்கி, ஆரஞ்சு சிக்கன், ஹனி சிக்கன், பாஸ்தா, லசாங்க போன்ற பிற நாட்டு உணவு வகைகளும், அவ்வப்போது மெக் டொனால்ட்ஸ் சிக்கன் சான்ட் விச், சப் வே சான்ட் விச் போன்றவைகள். சப் வே சான்ட் விச் மிகவும் ஹெல்தியானது. எல்லாம் பிரஷ் பிரட் மற்றும் வெஜிடபிள்களால் ஆனது.
நிச்சயமா நான் சாப்பாட்டு ராமன் இல்லீங்கோ...
மேலும் சில அமெரிக்க கலாச்சாரம் அமெரிக்கர்கள் பற்றிய பதிவில் இங்கே...
பேய் விரட்டும் அமெரிக்கர்கள்
Black Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்களும்