Thursday, January 12, 2012

பொங்கல் - ஒரு பிளாஷ் பேக்


பொங்கல். தமிழர்களை பொறுத்தவரை ஜாதி மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரு முழுமையான பண்டிகை. ஆம், எங்கள் ஊரில் கிறிஸ்தவர்கள் கூட அந்தோனியார் பொங்கல் என்ற பெயரில் பொங்கலிட்டு கொண்டாடுவார்கள்.

அது மட்டுமில்லாமல் பொங்கலை பொறுத்தவரை எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் மையமாக வைத்து நாம் கொண்டாடுவதில்லை. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நமக்கு வாழ்வளிக்கும் தெய்வங்களான ஆடு மாடு கோழி என அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு சடங்காகவே பொங்கல் இது நாள் வரையில் கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விஷயம் என்னவென்றால் இது வரை பொங்கலை ஜாதி மத வளையத்துக்குள் இழுத்து வராமல் இருப்பது தான்.

இருப்பினும் பொங்கல் கொண்டாட்டங்கள் தற்போது சிறிது மாறி இருக்கின்றன. நான் சிறுவனாக இருந்தபோது தஞ்சை நகரில் வாழ்ந்து வந்தாலும் பொங்கலுக்கு எங்கள் கிராமத்திற்கு சென்று விடுவோம். அதற்க்கு முன்பாக ஊரிலிருந்து இரட்டை மாட்டு வண்டி ஒன்று வரும். எங்கள் தந்தை எல்லோரையும் அழைத்துக் கொண்டு பெரிய மார்க்கெட் செல்வார். அங்கு அரிசி தவிர எல்லாவற்றையும் வாங்கி சாக்கு மூட்டைகளில் அடுக்குவோம். பிறகு வண்டி அங்கிருந்து இரவு கிளம்பினால் அடுத்த நாள் காலை எங்கள் கிராமத்தை சென்றடையும்.

மற்ற பொங்கலை விட எனக்கு பிடித்த பொங்கல் கன்னிப் பொங்கல் தான். அன்று ஒருவரும் புது சட்டையை அணிய மாட்டார்கள். ஏன் சட்டையை கூட சில பேர் அணிய மாட்டார்கள். காரணம், தெருவில் நீங்கள் நட மாட முடியாது. எந்தப் பக்கத்திலிருந்து மஞ்சள் தண்ணீர் வந்து உங்கள் மீது கொட்டும் என்றே சொல்ல முடியாது. ஆனால். மஞ்சள் தண்ணீரில் நனையாமல் நீங்கள் வீடு திரும்ப முடியாது. சிலர் மஞ்சளோடு இன்ன பிற சமாச்சாரங்களை கலந்து உங்கள் மீது தெளித்தால் அவ்வளவு தான். காலத்திற்கும் கறை போகாது.

பெரும்பாலும் பெண்கள் தான் மஞ்சள் தண்ணீரை ரோட்டிற்கு ஓடி வந்து உங்கள் மீது ஊற்றிவிட்டு ஓடுவார்கள். இதில் சில முறைகளும் உண்டு. ஆம். முறை பார்த்து தான் மஞ்சள் தண்ணீரை ஊற்றலாம். பொதுவாக அத்தை/மாமன் மகன் முறைமார்கள் மீது தான் மஞ்சள் தண்ணீர் ஊற்றுவார்கள்.

அதே போல், மாட்டுப் பொங்கலும், மஞ்சு விரட்டும் எனக்கு மிக பிடிக்கும். நோஞ்சான் மாடுகள் கூட அன்று ஒரு மாதிரியாக தான் விரைச்சுக்கிட்டு நிற்கும். ஒரு வேலை அதுகளுக்கு தெரிந்து விடுமோ என்னமோ. இன்று நாம் தான் ராஜா என்று. மாட்டு பொங்கலன்று சீட்டு குலுக்கிப் போட்டு சீட்டு விழுந்தவர் வீட்டின் முன் ஊரில் உள்ள எல்லா மாடுகளையும் கொண்டு வந்து விடுவார்கள். அவர் வீட்டில் பொதுவாக சாமி கும்பிட்டு விட்டு அவர் வீட்டின் மாட்டை அவிழ்த்த பின் தான் மற்ற மாடுகளை அவிழ்த்து விடுவார்கள்.

மாடுகள் அவிழ்த்து விட்ட பின் அது அது ஒவ்வொரு பக்கமாக மிரண்டு ஓடும். எங்கள் வேலையெல்லாம் எங்கள் வீட்டு மாடு எங்கு ஓடுகிறது அதன் பின்னாடியே ஓடி யாரும் மாட்டை காயப் படுத்தாமல் பார்த்துக் கொள்வதுதான். மாட்டின் மீது கட்டி இருக்கும் மஞ்சள் துணியில் சிறிது காசு, அரிசி கரும்பு துண்டு என எல்லாம் கட்டப் பட்டிருக்கும். அதை அவிழ்க்கிறேன் பேர்வழி என்று இரும்பு கம்பியால் இழுக்க முயன்று மாடுகளை காயப் படுத்தி விடுவார்கள். அதை தடுக்கத்தான் நாங்கள் எல்லாம் பின்னாலேயே ஓடுவோம்.

பிறகு பெரியவர்கள் ஆன பிறகு கிராமத்திற்கு சென்று பொங்கல் கொண்டாடுவது நின்று போய் விட்டது. தஞ்சையில் உள்ள இல்லத்திலேயே வீட்டின் போர்டிகோவில் பொங்கல் வைப்போம். ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் சில நேரங்களில் வித்தியாசமாக பார்ப்பார்கள். நாங்கள் அதை பற்றி கவலை படுவதில்லை. இன்றும் கேசில் நாங்கள் பொங்கல் வைப்பதில்லை. அதே போல் என் தந்தை இருந்தவரை, பொங்கல் பொங்கும் நேரம் அவருக்கு தெரிந்த பொங்கல் பாடலை உரக்கமாக பாடுவார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று கூவுவோம்.

அதே போல் மாட்டு பொங்கலன்று (ரொம்ப நாட்கள் வீட்டில் கறவை மாடுகள் வளர்த்தோம்) கிராமத்தை போலவே மாடுகளுக்கு அலங்காரம் செய்து பொங்கல் ஊட்டி கொண்டாடுவோம். எல்லோரும் ஒரு தட்டையோ தாம்பாளத்தையோ எடுத்துக் கொண்டு அதை குச்சியால் தட்டி சத்தம் எழுப்பி பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் என கூவிக் கொண்டே மாடுகளை வலம் வருவோம்.

பொங்கல் ஒரு நிறைவான திருநாள். அதே போல் வந்தது போய்விட்டது என்றில்லாமல் குறைந்தது மூன்று நாட்கள் பொறுமையாக ஆர்பாட்டம் அவசரம் இல்லாமல் குடும்பத்துடன் அமைதியாக கொண்டாடப் படும் திருநாள். எனக்கு மிகவும் பிடித்தமானது. அடுத்த வருடமாவது நம்மூரில் கொண்டாட வேண்டும் என்று ஆசை. பார்ப்போம். எப்படி இருந்தாலும் இந்த முறை கேசில் தான் பொங்கல் இங்கு.

எல்லோருக்கும் என் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.  ஹி ஹி ஹி ...

share on:facebook

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

இப்பொழுதெல்லாம் கேஸ் ஸ்டவ்ல தான் பொங்கல்.பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Vetirmagal said...

அது ஒரு நிதானமான வாழ்க்கை முறையாக இருந்த்து. இப்போது உறவுகள் எல்லாம் பல இடங்களில் சிதறி, ஹாயாக பண்டிகைகள் என்பது அரிதாகி விட்டது. போதாக்குறைக்கு, செல்,அய் போன் எல்லாம் தான் முக்கியமாகி, பண்டிகைகள், ரசித்து கோண்டாடுவது, குறைந்து போச்! அப்படி கொண்டாடுபவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த மாதிரி, பதிவுகள் படிக்கும் போது, என் நினைவுகளும் கிளறப்படுகின்றன.

என்ஜாய்.

Post a Comment