Tuesday, January 3, 2012

திருவள்ளுவரும் டெரரிஸ்ட்டும் ...

தலைப்பை பார்த்துட்டு யாரும் திட்டாதீங்க. சும்மா வேணும்னே பரபரப்புக்காக நான் இத வைக்கல. இன்னும் சொல்லப்போனால் "திருவள்ளுவர் டெரரிஸ்ட்டா" என்று தான் நான் தலைப்பாக வைத்திருக்க  வேண்டும். ஆனால், அப்படி வைக்க என் மனம் இடம் தர வில்லை. சரி விசயத்திற்கு வருவோம்.

கடந்த சில பல ஆண்டுகளாக இந்தியா, அமெரிக்கா என மாறி மாறி வாசம் செய்யும் எங்களுக்கு குழந்தைகள் எக் காரணம் கொண்டும் தமிழை மறந்து விட கூடாது என்பதில் மிகுந்த கவனம் காரணமாக தமிழ் பாடங்களையும், மற்ற பிற தமிழ் சார்ந்த விசயங்களையும் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

அப்படித்தான் சில நாட்களுக்கு முன், அய்யன் திருவள்ளுவரை பற்றி என் இளைய மகளிடம் என் மனைவி எடுத்து சொல்லி இருக்கிறார். திருவள்ளுவர் மிக சிறந்த புலவர், ரொம்ப நல்லவர், நல்ல விஷயங்கள் பல சொல்லி இருக்கிறார் என.  உடனே என்ன நினைத்தாலோ என் மகள், He could be a terrorist also என சொல்லி உள்ளார். எங்களுக்கெல்லாம் இதை  கேட்டவுடன் ஒரே ஷாக். ஏன் இப்படி சொல்கிறாய் என திரும்பி அவளிடமே கேட்டோம். அதற்கு அவள், நீங்கள் தானே அவர் ரொம்ப நல்லவர் என கூறினீர்கள். அதான் அவர் ஏன் நல்லவராக pretend செய்திருக்க கூடாது என நினைத்தேன் என்றாள்.

ஒரு வேளை திருவள்ளுவரின் தாடி மீசை மற்றும் அவரின் தலை முடி ஸ்டைலை பார்த்த பாதிப்பா என தெரியவில்லை. இல்லை இங்கு எப்பொழுதும் "Fight against terrorism" என்று எல்லா டி.வீ. க்களிலும்  நாள் தோறும் போடும் கூப்பாட்டை கேட்டுக் கொண்டிருப்பதால் அவளுக்கு இந்த எண்ணம் வந்ததா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அவள் இப்படி கூறியது எங்களுக்கு ஆச்சர்யம் மட்டும் இல்லை. சற்று அதிர்ச்சியாகவும் தான் இருந்தது. ஹ்ம்ம்...எல்லாம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் நாம் காணும் செய்திகளும் தான் காரணம் என எண்ணிக் கொண்டு திருவள்ளுவரை பற்றி இன்னும் பல கதைகளை அவளிடம் சொல்லி அவளுக்கு புரியவைத்தோம்.

அட்லீஸ்ட் என் பொண்ணாவது திருவள்ளுவரை டெரரிஸ்ட்டா என கேட்டாள். எங்களுக்கு தெரிந்த ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு (எட்டாவது படிக்கும் பெண்) திருவள்ளுவர் என்றால் யார் என்றே தெரியவில்லை. வெளி நாடுகளில் வாழும் எல்லா குழந்தைகளும் இப்படி தான் என நான் கூற வரவில்லை. சில குழந்தைகள் மிக அழகாக தமிழ் பேசவும் செய்வார்கள்.

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள்/இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நம் மொழி கலாச்சாரம் பற்றி அவர்களுக்கு கஷ்டமில்லாத வகையில் அவ்வப்போது சொல்லிக் கொடுப்பது இம்மாதிரியான சங்கடமான கேள்விகள்/பதில்களை தவிர்க்கும்.


எப்படி இருந்தாலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்  பேசவும்,  தமிழ் கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்வதும் அவர்களின் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. சிலர் வெளி நாட்டில் இருப்பதால் தங்களின் குழந்தைகள் ஆங்கிலம் நன்றாக தெரிந்து கொள்வது தான் முக்கியம் என வீட்டில் கூட குழந்தைகளிடம் தமிழ் பேசுவதை  தவிர்க்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.  வெளிநாட்டில் வளரும் குழந்தைகளுக்கு ஆங்கில புலமை தானாக வரும்.  தாய் மொழிதான் நாம் சொல்லி கொடுத்து வளர்க்காவிட்டால் அவர்களுக்கு   மறந்து போய் விடும் அபாயம் இருக்கிறது. சொல்றத சொல்லிப்புட்டேன்க.  அப்புறம் உங்க விருப்பம்.   

share on:facebook

2 comments:

Sankar Gurusamy said...

இந்த உலகத்துல திருவள்ளுவர் அளவுக்கு நல்லவனா வாழவே முடியாதுன்னு ஒரு தலைமுறை நினைக்கிற அளவுக்கு நாட்டு நடப்பும், சமூக சூழலும் மோசமா இருக்கரத நினைச்சா கவலையா இருக்கு.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

http://anubhudhi.blogspot.com/

sury said...

நடைமுறையிலே நடக்காத, நடக்க இயலாத, இன்றைய வாழ்வின் நடைமுறைக்கு ஒத்துவராத,
இருப்பினும் மனித வாழ்வின் லட்சியக் கருத்துக்களை பள்ளிகளிலே படித்து அவற்றினை பள்ளிகளிலேயே மறக்கும்
சூழ்னிலைதான் இன்று உள்ள நிலை.

இன்றைய அரசியலும் சினிமாவும் தமிழர் தமது பண்டைய பண்புகளை, கலாசாரத்தை போற்றும் இலக்கியங்களை மறந்து போவதற்கு துணை நிற்கின்றன எனச் சொல்ல முடியாவிடினும் மறைக்கின்றன எனச்சொன்னால் மிகையாகாது. மேலைய நாட்டு இசையிலே, அவர்களது நடை, உடைகளிலே,உணவுகளிலே, குடும்ப பண்பாடுகளிலே தமது இதயத்தையும் பொருளையும் நேரத்தையும் பறிகொடுக்கும்
இன்றைய இளைஞர் சமூகத்திடம்,

திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று சொல்லப்போனால்,

தாத்தா !! கொஞ்ச நேரம் சும்மா இரேன். !! என்று சொல்லத்தான் செய்வார்கள்.

வேதனையாக இருக்கிறது. திருவள்ளுவர் எதற்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் !! முக்காலத்து மக்களும்
கண்டிப்பாக செய்வார்கள் என நினைப்பதை மட்டும் சொல்லிவிட்டுப் போகக்கூடாதா ? என்று தோன்றுகிறது.

அப்படி யாரேனும் சொல்கிறார்களா என்று சுற்றிமுற்றி பார்த்தேன்.
ஒருவர் பாடுவதை கேட்டேன். ஒரு கோடி மக்கள் இன்று இதை பாடுகிறார்கள்.
என்ன என்று காது கொடுத்து கேட்டேன்.

ஒய் திஸ் கொலவெறி டி. !!

கொலவெறி என்று சொன்னாலும் எவ்வளவு ஸாஃப்டாகச் சொல்லுகிறார் !!!
அவரிட்ட போய், நீங்க பாடுறது தமிழ் இல்லை அப்படின்னா
நம்மை ஒரு தினுசா பார்க்கிறார் இல்லையா !!


சுப்பு ரத்தினம்.

Post a Comment