Thursday, December 22, 2011

முதல் விமான பயணமும் - விபத்துகளும்...


சென்ற பதிவில் முதல் தடவை அமெரிக்கா செல்ல எல்லாம் தயார் ஆன நிலையில் சன் டி.வியில் வந்த அந்த செய்தி எல்லோர் வயிற்றிலும் புளியை கரைத்தது என கூறியிருந்தேன். அந்த செய்தி, சென்னை விமான நிலையம் வந்த பிரான்ஸ் நாட்டு சரக்கு விமானம் ஒன்று ரன் வேயில் தீ பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதனால் சென்னை விமான நிலையம் மறு அறிவிப்பு வரும்வரை மூடப் படுகிறது என்பது தான்.

உடனே தகவல் அறிந்து என் கம்பனியில் இருந்து அடுத்து என்ன செய்யலாம்? எப்படி இவர்களை (நாங்கள் மூன்று பேர் அமெரிக்கா செல்ல இருந்தோம்) குறித்த தேதிக்குள்  அமெரிக்கா அனுப்பலாம் என விவாதிக்க தொடங்கி விட்டார்கள். அது தவிர குறிப்பிட்ட நாளுக்குள் நாங்கள்  அமெரிக்கா செல்ல முடியாவிட்டால் அந்த பிராஜக்டே எங்கள் கை நழுவி போய் விடும் நிலை வேறு.

பெங்களூர் மற்றும் பிற ஊர்களுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லலாம் என்றால் எங்கும் இடம் இல்லை. கடைசியில் மும்பைக்கு சென்று அங்கிருந்து  அமெரிக்கா  செல்லலாம் என்று முடிவான நிலையில் மும்பை செல்ல கூட எங்களுக்கு விமான டிக்கெட் கிடைக்கவில்லை. மும்பைக்கு டிரைனில் செல்ல கூட ஏற்பாடு செய்யப்பட்டது (இப்போது போல் அப்போது உள் நாட்டு விமான சேவைகள் பெரிதாக இல்லை). கடைசியில் ஒரு வழியாக அடுத்த நாள் காலை உள்நாட்டு விமான சேவை மட்டும் இயங்கும் என அறிவித்ததை தொடர்ந்து முதல் விமானத்தில் எங்களை மும்பைக்கு அனுப்பி வைத்தார்கள்.

என்னுடைய முதல் விமான பயணம். சென்னை டூ மும்பை. இந்தியன்  ஏர்லயன்ஸ். முன்பே கூறியது போல் என் பெற்றோர், மனைவி, மகள் மற்றும்   அனைவரும் அன்புடன் வழியனுப்ப விடியற்காலையில் விமானத்தில் ஏறி  அமர்ந்தோம். இந்தியன்  ஏர்லயன்ஸ். அனைத்து பனிப் பெண்களும்  சேலையில் வணக்கம் சொன்னார்கள். காலை உணவாக இட்லி வடை பரிமாறப்பட்டது. அரை பாவாடை, பீட்சா பர்கர் எதிர்பார்த்து போன எங்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.

நீண்ட தூர பேருந்தில் பயணம் போனாலே இரவு முழுதும் தூங்காமல் சீட் அருகே உள்ள கம்பியை பிடித்துக் கொண்டே போகும் தைரியசாலி நான். விமான பயணம் அதிலும் முதல் பயணம். விமானம் கிளம்பி ரன்வேயில் சென்று மேலே ஏறும் வரை வேண்டாத சாமி இல்லை. இப்போதும் விமானம் கிளம்பும் போது கண்களை சிறிது நேரம் மூடி விமானம் பத்திரமாக செல்ல மனதார பிராத்திப்பேன்.

ஒரு விமானம் கிளம்பி பத்திரமாக மீண்டும் தரை இறங்குவது என்பது விமானிகள், விமான பனிப் பெண்கள்,  மற்றும் ATC பணியாளர்கள் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையின் ஒத்துழைப்பு மிக அவசியம். ஒவ்வொரு முறை விமானம் மேலே சென்று அடைந்ததும் அதே போல் கீழே பத்திரமாக தரை இறங்கியதும் விமான பனிப் பெண்கள் ஒருவரை  ஒருவர் பார்த்து தங்கள் கட்டை விரலை உயர்த்தி "தம்ஸ்-அப்" சொல்லும் போது அவர்களின் முகத்தில் தெரியும் மன திருப்தியை பார்த்தாலே தெரியும். ஒவ்வொரு பயணமும் அவர்களுக்கும் ஒரு மறு வாழ்வு என்பது.

ஒரு வழியாக மும்பை சென்று இறங்கியதும் எங்களுக்கு காத்திருந்த  அடுத்த செய்தி மீண்டும் ஒரு விமான விபத்தை பற்றியது. அது அடுத்த  பதிவில்...  

share on:facebook

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

அட ராமா..

Madhavan Srinivasagopalan said...

// அரை பாவாடை, //

So, did you expect 'quarter'?

Just for fun :-)

Post a Comment