உலகில் உள்ள மொத்த ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளனர். உலக வங்கியின் அறிக்கை படி 40 % மேற்பட்ட இந்தியர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். ஆனால் உலகிலேயே மிக பெரிய ஜனாதிபதி மாளிகை இந்தியாவில் தான் இருக்கிறது.
நாலு அடுக்குகளை கொண்ட நம் இந்திய ஜனாதிபதி மாளிகையின் மொத்த பரப்பளவு சுமார் 200, 000 சதுர அடி. இதில் மொத்தம் 340 அறைகள் உள்ளன. 1911 ஆம் ஆண்டு ஜார்ஜ் மன்னன் V இந்தியாவின் தலை நகரம் கொல்கட்டாவிலிருந்து டெல்லிக்கு மாறுகிறது என்று அறிவித்ததை தொடர்ந்து இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகைதான் இன்றுள்ள ஜனாதிபதி மாளிகை. இதில் குடியேறிய முதல் வைஸ்ராய் லார்ட் இர்வின்.
இந்திய, முஹலாய, ஐரோப்பிய கட்டட கலைகளை கலந்து கட்டப்பட்ட இந்த மாளிகையின் நடுவில் அமைந்துள்ள தாமிரத்தால் ஆன "டோம்" போன்ற நடு பகுதி இம்மாளிகையின் உயரத்தை விட இரு மடங்கு உயரம் கொண்டது. இம்மாளிகைக்குள் பொது மக்கள் போய் சுற்றி பார்க்க அனுமதி உண்டு. இங்குள்ள மார்பில் கூடத்தில் அக்காலத்திய ராஜ, ராணி, வைஸ்ராய் என முக்கியஸ்தர்களின் முழு உருவ ஓவியங்கள் மற்றும் சிலைகள் நிறைந்திருக்கும்.
இதற்க்கு கீழ் அமைந்துள்ள சமையல் அறை அருங்காட்சியத்தில் முன்னாள் வைஸ்ராய்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் உபயோகித்த சமையல் அறை பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை காணலாம்.
இதை அடுத்து பரிசுப் பொருள் அருங்காசியகமும் மக்கள் மனதை கவரும் ஒரு அறையாகும். ஆம், இங்குதான் இந்திய ஜனாதிபதிகள் பெற்ற ஒவ்வொரு பரிசுப் பொருளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்ட அனைத்துப் பரிசுப் பொருட்களும் இந்த அருங்காட்சியத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. ஒரு முறை நீங்கள் பார்த்த பரிசுப் பொருட்கள் அடுத்த முறை நீங்கள் போகும் போது பார்க்க இயலாது. ஒவ்வொரு முறையும் பரிசுப் பொருட்கள் மாறிக்கொண்டே இருக்கும். அப்படியானால் மொத்தம் எவ்வளவு பரிசுகள் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
மாளிகையின் நடு கோபுரத்திற்கு கீழே தர்பார் ஹால் அமைந்துள்ளது. இங்கு தான் அந்நாளில் இங்கிலாந்து வைஸ்ராய்களும், வைஸ் ரீன்களும் அமரும் சிம்மாசனங்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது இங்குதான் நம் ஜனாதிபதியின் சிம்மாசனம் உள்ளது. பெரும்பாலான அரசு பூர்வ விழாக்கள், தேசிய விருதுகள் வழங்கும் விழாக்கள் இங்கு தான் நடை பெறுகின்றன.
ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முகல் கார்டன்ஸ் மிகவும் பிரசித்தி பெற்றது. பதிமூன்று ஏக்கர் பரப்பளவில் மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள இத்தோட்டத்தில் அழகிய தண்ணீர் ஊற்றுக்கள் மற்றும் அபூர்வ வண்ண மலர்கள் எங்கும் நிறைந்திருக்கும். இந்த தோட்டத்தில் தான் குடியரசு நாள் மற்றும் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் எல்லோருக்கும் விருந்து கொடுப்பார்.
ஜனாதிபதி மாளிகையின் கடைசி சுற்றில் ஒரு குழந்தைகள் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. குழந்தைகள் குடியரசு தலைவருக்கு அளித்த அனைத்து பரிசு பொருட்களும் இங்கு கட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும். அதே போல் இங்கு உள்ள எடை அளவுகோளில் நாம் சந்திரன் மற்றும் மற்ற கோளங்களில் வாழ்ந்தால் நம்முடைய உடல் எடை எவ்வளவு இருக்கும் என்பதை காட்டும்.
என்ன இப்போதே ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்க்க வேண்டும் போல் உள்ளதா? நீங்களும் போய் சுற்றி பார்க்கலாம். மாளிகையின் சில பகுதிகள் வார நாட்களில் செவ்வாய் வெள்ளி தவிர வருடம் முழுதும் திறந்திருக்கும். ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்க்க அனுமதி கோரி நீங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy Military Secretary to the President, Rashtrapati Bhavan, New Delhi
அல்லது மின்னஞ்சல் முகவரி: dmsp@rb.nic.in
சுற்றி பார்க்க விரும்பும் அனைவரும் தங்களின் முழு விபரத்தையும் மற்றும் சுற்றி பார்க்க விரும்பும் தேதியையும் குறிப்பிட வேண்டும்.
இந்த பதிவு எழுதி முடிக்கும் வரை ஜனாதிபதி என்று வரும் இடங்களில் எல்லாம் டாக்டர் அப்துல் கலாம் தான் என் கண் முன் வந்தார். ஜனாதிபதி என்றால் அவர் தான் என்ற இமேஜை நமக்கு எல்லாம் ஏற்படுத்தி விட்டார்.
share on:facebook
4 comments:
// இந்த பதிவு எழுதி முடிக்கும் வரை ஜனாதிபதி என்று வரும் இடங்களில் எல்லாம் டாக்டர் அப்துல் கலாம் தான் என் கண் முன் வந்தார். ஜனாதிபதி என்றால் அவர் தான் என்ற இமேஜை நமக்கு எல்லாம் ஏற்படுத்தி விட்டார். //
ரிபீட்டோய்..
தகவலுக்கு நன்றி.சுற்றி பார்த்து விட்டு ஒரு பதிவு போட வேண்டும்.
நன்றி. டில்லி செல்லும் போது பார்க்க முயற்சிக்கிறேன்
பக்கத்தில் குழந்தைகள் இருக்கிறார்கள், இதை படிக்கச் சொன்னால் இப்பவே எழுதிப் போடுங்க என்று சொல்லிவிடுவார்கள், ஆனால் இந்த பதிவு எனக்கு பின்னால் உபயோகப்படும்,
Post a Comment