Tuesday, December 6, 2011

நூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்


தமிழக அரசானாலும் சரி, அது இந்திய அரசானாலும் சரி. அவ்வப்போது பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கும். இவைகளில் பல, ஆளும் கட்சி தொண்டர்கள் பலன் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் விழலுக்கு இறைத்த நீர் சிறுது பயிருக்கும் பாய்வது போல், ஒரு சில உண்மையான பயனாளிகளுக்கும் போய் சேரும். எனக்கு தெரிந்து இதற்க்கு நேர் மாறாக தமிழக அரசின் திட்டம் ஒன்று இருக்கிறதென்றால் அது தமிழக அரசின் "சேவை இல்லங்கள்" தான்.

தமிழகத்தில் தஞ்சை, கடலூர், தாம்பரம், சேலம், நாகப்பட்டினம் மற்றும் மதுரை என பல இடங்களில் "சேவை இல்லம்" என்ற பெயரில் அரசு நடத்தி வரும் இம்மாதிரியான பல்நோக்கு சேவை மையம் ஒன்று இருப்பது அவ்வூர் மக்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. சரி விசயத்திற்கு வருவோம். எனக்கு தெரிந்த தஞ்சை "சேவை இல்லத்தை" பற்றிய குறிப்புகள் சில கீழே வருமாறு:

தஞ்சையில் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நாஞ்சிக் கோட்டை ரோட்டில் அமைந்துள்ள சேவை இல்லம்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் அதன் சொந்த  கட்டடத்தில் இயங்கி வருகிறது. முதலில் ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்ட சேவை இல்லத்தில் இன்று பிளஸ் டூ வரை சொல்லிக்கொடுக்கப்படுகிறது. First group,  Second group, கம்ப்யூட்டர் சயின்ஸ் என அனைத்து பாட பிரிவுகளுக்கும் ஐந்து பைசா டொனேஷன் இன்றி அட்மிஷன் இலவசம். அது தவிர ஆறு மாத தையற்  பயிற்சி மற்றும் தட்டச்சு (தமிழ்+ஆங்கிலம்), குறுக்கெழுத்து  பயிற்சியும் தனி வகுப்புகளாக  நடத்தப்படுகிறது.

ஆறு மாத தையற்  பயிற்சியை முழுமையாக முடித்து வெளியேறும் போது அரசே இலவசமாக தையற் இயந்திரம் ஒன்றையும் வழங்குகிறது. சேவை இல்லத்தில் தட்டச்சு பயில்பவர்கள் மட்டும் வீட்டிலிருந்து(வெளியில்  இருந்து) வந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்ற அனைவரும்  அங்கேயே  இயங்கி வரும் விடுதியிலேயே தான் தங்கி படிக்க வேண்டும்.  ஆனால்  அதற்காக  கவலை பட வேண்டியதில்லை. சேவை இல்ல விடுதி  முற்றிலும் இலவசம். ஆம், தாங்கும் இடம், உணவு, உடை என  அனைத்துக்கும் அரசே  செலவிடுகிறது. விடுதியை கவனித்துக் கொள்ள ஒரு  வார்டனும்,  அவருக்கான குடியிருப்பும் சேவை இல்லத்தின் உள்ளேயே  உள்ளது.

உள்ளே உள்ள அனைத்து துறைகளையும் கவனித்துக் கொள்ள சூப்பிரண்டண்ட் என ஒரு மேலதிகாரியும் அவரே அங்குள்ள பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் உள்ளார். இவரின் வீடும் பள்ளி வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது. அதாவது இப்பள்ளியை வருடம் தோறும் இருபத்தி நான்கு மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு வார்டன் மற்றும் ஒரு சூப்பிரண்டண்ட் எப்போதும் பணியில். இவர்கள் தவிர பகல்/இரவு வாட்ச்மேன், பணியாளர்கள், ஆயாக்கள், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் வெளியில் இருந்து சென்று வரலாம்.

சரி இப் பள்ளியில் சேர என்ன தகுதி, யாரெல்லாம் சேரலாம் என கேட்கிறீர்களா? இப்பள்ளி முற்றும் பெண்களுக்கானது. அது மட்டுமல்ல  இப்பள்ளியில் சேர்ந்து படிக்க கீழ் கண்டவற்றுள்  எதாவது ஒன்றை பூர்த்தி செய்பவராக இருத்தல் வேண்டும்.

# பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவராக இருத்தல் வேண்டும்.
# கணவனால் கை விடப்பட்டவராகவோ அல்லது கைம்பென்னாகவோ  இருத்தல் வேண்டும்.
# தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்தவராக இருத்தல் வேண்டும்.
# வயது 18 பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
# குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

மேற்கூறிய தகுதிகள் உங்களில் ஒரு சிலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். சேவை இல்லத்தின் முழு நோக்கத்தை தெரிந்து கொள்ளும் போது அதற்க்கான காரணம் உங்களுக்கு புரியும்.

மேலும் விபரங்கள் அடுத்த (இந்த ஆண்டின்) 101  வது பதிவில்...


share on:facebook

3 comments:

துளசி கோபால் said...

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லீங்களே!

தகவல்களுக்கு நன்றியும் நூறுக்கு இனிய பாராட்டுகளும்.

Madhavan Srinivasagopalan said...

ஓஹோ.. நல்ல விஷயம்தான்..
மக்களுக்கு விழிப்புணர்வு தேவை..
இதை எனது அடுத்த பதிவில் மேற்கோள் காட்டுகிறேன், தங்கள் அனுமதி இருந்தால்.

// நூறாவது //
யப்பா.. டெண்டுல்கரால முடியல..
நீங்க செஞ்சு காமிச்சிட்டீங்க, அஷ்வின் மாதிரி..

ஆதி மனிதன் said...

நன்றி துளசி கோபால்.

நன்றி மாதவன். உங்களுக்கு இல்லாத அனுமதியா! தாராளமாய் பகிர்ந்து கொள்ளுங்கள்.

//யப்பா.. டெண்டுல்கரால முடியல..
நீங்க செஞ்சு காமிச்சிட்டீங்க, அஷ்வின் மாதிரி..//

நீங்கள் என்னுடைய http://aathimanithan.blogspot.com/2011/04/blog-post_12.html பதிவை படிக்கவில்லை போலும்.

Post a Comment