Wednesday, November 30, 2011

அமெரிக்கா போறீங்களா? இத படிங்க முதல்ல...


மேலை நாடுகளுக்கு முதல் தடவை நாம் பயணம் செய்யும் போது பல விஷயங்கள் நமக்கு புதிதாக இருக்கும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பாலான பழக்க வழக்கங்கள் நமக்கு எதிர் மறையாக இருக்கும். இதற்க்கு காரணம் அமெரிக்கர்கள் இங்கிலாந்து நாட்டினர் கடை பிடிக்கும் எதையும் பின் பற்றாததுதான். அதற்க்கான காரணம் ஒரு தனி கதை.

சரி, விசயத்திற்கு வருவோம். பெரும்பாலானவர்கள் அமேரிக்கா சென்றதும்  முதலில் ஒரு ஓட்டலில் தான் தங்க நேரிடும். அப்படி ஓட்டலில் தங்கும்  போது தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்களை இப்போது பார்ப்போம்.

# வெளியூர், அதிலும் அமேரிக்கா வந்த பிறகு நாம் எல்லோரும் செய்ய  நினைக்கும் முதல் செயல், ஊருக்கு போன் செய்து நலமாக வந்து சேர்ந்து  விட்டதை தெரிவிக்க ஆசைபடுவது தான். இதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் எந்த ஒரு ஓட்டலில் இருந்து நீங்கள்  வெளிநாட்டுக்கு போன் செய்தாலும் அவ்வளவுதான். நிமிடத்திற்கு  பல  டாலர்களை நீங்கள் தொலை பேசி கட்டணமாக பின்னர் செலுத்த வேண்டி  வரும். தவிர்க்கவே முடியாத பட்சத்தில் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு வைத்து விடுவதுதான் சிறந்தது. அதன் பிறகு காலிங் கார்டு போன்று ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு பேசுவது தான் நன்று. அதில் கூட டோல் ப்ரீ நம்பருக்கு ஓட்டலில் சார்ஜ் செய்வார்களா என்று விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வது நன்று.

எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் முதலில் விபரம் தெரியாமல் இங்கு வந்து சேர்ந்த உடன் இந்தியாவிற்கு  பேசிவிட்டு பின் நூற்று கணக்கில்  டாலர்களில் டெலிபோன் பில்  கட்டிய கதை நடந்திருக்கிறது.

சென்ற பதிவில் கூறியிருந்தது போல், முதல் தடவை அமேரிக்கா சென்று இறங்கிய மறு தினம். Queue Discipline பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல், ஒரு கடையில் நாலைந்து பேர் Queue இல் நின்று கொண்டிருக்க, ஒரு குறிப்பிட்ட பொருள் கிடைக்குமா என்று தானே கேட்க போகிறோம் என்ற எண்ணத்தில் வரிசையை தாண்டி கவுண்டரிடம் உள்ளவரிடம் நான் சென்று கேட்க, அப்பெண்மணி என்னை கண்டு கொள்ளவேயில்லை. Excuse me..Excuse me...என்று நான் கூப்பிட்டுக் கொண்டே இருக்க கடைசியில், could you please come in Queue என்றது. அதன் பிறகு Queue என்று ஒன்று இருந்தால் அதில் கடைசி ஆளாக தான் இன்றும் நான் நிற்கிறேன்.

அதே போல் சில நேரங்களில் Queue விற்கு பக்கத்தில் ஒருவர் நின்றால் கூட அவரிடம் நீங்கள் Queue இல் நிற்கிறீர்களா என கேட்டுவிட்டு தான்  இங்கு  மக்கள்  Queue இல் சேர்ந்து கொள்வார்கள்.

அமெரிக்க தொல்லைகள் தொடரும்...

share on:facebook

Tuesday, November 29, 2011

ரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...


சென்ற பதிவில் ரஜினியின் ஒரு முகத்தை பார்த்தோம். இந்த பதிவில் அவரின் (எனக்கு தெரிந்த) இன்னொரு முகம்.

இது பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு. அடுத்த நாள் ரஜினியின் பிறந்த நாள். அதற்கு முதல் நாள் மாலை ரஜினியை சந்திக்க அவரின் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்றோம். குறிப்பிட்ட சில ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்று இருந்ததால் சகல  மரியாதைகளுடன் ரஜினி வீட்டின் வரவேற்பரையில் காத்திருந்தோம்.

மாலை நேரம் கடந்து இரவு ஆரம்பித்தது. அவ்வப்போது தலைமை மன்ற  நிர்வாகியோ வேறு எவரோ வந்து சார் இப்ப வந்துடுவார், டப்பின்  லேட்டாகிவிட்டது. சற்று பொறுங்கள். சார் வந்தவுடன் பார்த்து விட்டு போய்  விடலாம் என்று அவ்வப்போது நாங்கள் போரடித்து விடாமல் இருக்க  சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ரஜினியை நேரில் பார்க்க போகிறோம்,  அதுவும் கூட்டத்தோடு கோவிந்தாவாக இல்லாமல் குறிப்பிட்ட சிலரோடு  நெருக்கத்தில் பார்க்க போகிறோம் என்ற உணர்வில் மாலையாவது, இரவாவது  எதுவும் எங்களுக்கு சலிப்பாக தெரியவில்லை. இது எல்லாவற்றுக்கும் மேலாக  திருமதி. லதா ரஜினியே ஒரு முறை வந்து, சார் இப்ப வந்துடுவாங்க, கொஞ்சம்  பொறுத்துக்கோங்க என்று கூறிவிட்டு போனார்.

அநேகமாக நள்ளிரவுக்கு சில மணித்துளிகள் முன் ரஜினியின் கார், வீட்டின் முன் வந்து நின்றது. தலைவர் காரை விட்டு கீழே இறங்கி கிடு கிடுவென்று நடந்து வீட்டிற்க்குள் போகும் முன் வரவேற்பரையை எட்டி  பார்த்தவர், நாங்கள் கும்பலாக உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டு,  அவருக்கே உரித்தான ஸ்டைலுடன், பைவ் மினிட்ஸ் மா, இப்ப வந்துடுறன்  என்று உள்ளே சென்றவர், ஒரு பத்து பதினைந்து நிமிடம் கழித்து எங்களை  வந்து  சந்தித்தார்.

எங்களை காத்திருக்க வைத்ததிற்கு ஒரு முறைக்கு மேல்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டு, வழக்கமான விசாரிப்புகள் முடிந்த பின்  எங்களிடம்  இருந்து பிறந்த நாள் பரிசாக நாங்கள் எடுத்து சென்ற மாலை  மற்றும்  நினைவு கேடயத்தையும் பெற்று கொண்டார். தொடர்ந்து, "ஏற்கனவே  ரொம்ப லேட் ஆயுடுச்சு" நீங்கள் காலையில் மீண்டும் வந்தால் ரொம்ப  கூட்டம்  இருக்கும். அதனால் இப்பவே நாம் போட்டோ எடுத்து கொள்ளலாம்  என்று  அங்கிருந்த போடோ கிராபரை அழைத்து ஒவ்வொருடனும்  தனியாகவும், மொத்த குழுவுடனும் அலுக்காமல் போடோவுக்கு போஸ்  கொடுத்தார். இன்று அதையெல்லாம் ஒரு சாதாரண ரசிகனால் நினைத்து பார்க்க முடியுமா? ரஜினியை விடுங்கள். ஒரு சாதாரண முன்னணி நடிகரிடம் கூட இத்தகைய விருந்தோம்பலை நாம் எதிர்பார்க்க முடியாது.

இதையெல்லாம் இங்கு சொல்வதற்கு காரணம், ரஜினி ஒன்றும் அப்போது சாதாரண நடிகர் இல்லை. அன்றும் அவர் சூப்பர் ஸ்டார் தான். இருந்தும்  ரசிகர்களுக்கும் அவருக்கும் அன்று பெரிய இடைவெளி இல்லை. ஆனால் இன்று? அவருக்கு என்று ஒரு வட்டத்தை அவர் உருவாக்கி கொண்டார் அல்லது அவரை அறியாமல் ஒரு வட்டம் அவரை சுற்றி உருவாகி அவரை ரசிகர்களிடம் இருந்து பிரித்து வைக்கிறது. அந்த வட்டத்தினுள் வேறு யாரும் அல்ல, எல்லோரும் எனக்கு நண்பர்கள் என்று சொன்னாலும் அவரை சுற்றி உள்ள ஒரு சில சுய நல கூட்டம் தான். அவர்கள் ஒன்று  சினிமாவை சேர்ந்த பெரிய புள்ளிகள் அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியுனுடைய தலைவர்கள். இவற்றை எல்லாம் உடைத்து கொண்டு ரஜினி வெளியே வர வேண்டும் என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

அடுத்து ரஜினியும், ரஜினி ரசிகர் மன்றங்களும்...

share on:facebook

Monday, November 28, 2011

Black Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்களும்


"Thanks giving day" - அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் இறுதி வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு விழா. பல நூறு ஆண்டுகளுக்கு முன்  அமெரிக்கா வந்தேறிய குடியேறிகளுக்கு (சிகப்பு இந்தியர்கள் தான்  அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள்), விவசாயம் செய்யவும், வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ளவும் கற்று கொடுத்த சிகப்பிந்தியர்களுக்கு நன்றி  தெரிவிக்கும் வகையில் உருவாக்க பட்ட நாள் தான் தேங்க்ஸ் கிவிங் டே. இது ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நாலாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படும். 


நம்மூரில் பிள்ளையார் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்வது போல், இங்கு தேங்க்ஸ் கிவிங் டே அன்று வான்கோழி விருந்து வழக்கம். முழு வான்கோழியை அப்படியே குடைந்து, அதனுள் மசாலா வகையறாக்களை   திணித்து, ஓவனில் வேக வைத்த பிறகு அப்படியே கேக்கை கட் செய்வது  போல் துண்டு  துண்டாக வெட்டி எடுத்து சாப்பிடுவார்கள். இது தான் தேங்க்ஸ்  கிவிங்  டேயின் மெயின்  மெனு. மற்றபடி ட்ரிங்க்ஸ், டி.வி., பூட் பால் கேம்ஸ்  என  அன்று பல வீடுகளில் உற்சாகம் களைகட்டும்.

இதை எல்லாம் விட பெரிய கொண்டாட்டம், ஷாப்பிங் தான். ஆம், தேங்க்ஸ் கிவிங் டேவிற்கு அடுத்த நாள் (தேங்க்ஸ் கிவிங் டே அன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும்).  "Black Friday" என்று  அழைப்பார்கள். அன்று நம்மூர் ஆடித்தள்ளுபடியை விட பல மடங்கு மேலான தள்ளுபடியில் எல்லா பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கும். குறிப்பாக  எலெக்ட்ரானிக் சாதனங்கள். 100 டாலர் பெறுமானமான பொருளை 50 டாலருக்கு தந்து, அதை  நாம் வாங்க போக, மேலும்  200 டாலர்களுக்கு வேறு பொருட்களை வாங்கி  வந்து விடுவோம். இது தான் வியாபார உத்தி.

சில பொருட்கள் அடிமாட்டு விலைக்கு கிடைக்கும். அப்பொருள்களை வாங்க முதலில் வரும் 10 அல்லது 50 பேருக்கு மட்டும் கூப்பன் தருவார்கள். இதை வாங்க நடுங்கும் குளிரில் முதல் நாள் மாலையே சென்று வரிசையில் நிற்பார்கள். பொதுவாக கடை நள்ளிரவு 12 மணிக்கோ  அல்லது விடியற்காலையோ திறக்கப்படும்.

கடந்த சில வருடங்களாக ஆன்லைன் விற்பனையும் சூடு பிறக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் நானும் இந்த மாதிரி முதல் நாள் மாலையே சென்று, நடுங்கும் குளிரில் காத்திருந்து நல்ல நல்ல பொருட்களை  அடிமாட்டு விலைக்கு வாங்கியதுண்டு. தற்போது அந்த ஸ்பிரிட் குறைந்துவிட்டது. இருந்தும் இந்த ஆண்டு இரவு முழுதும் ஷாப்பிங் செய்ததில் என் பர்சு இளைத்தது என்பதை விட வீடு நிறைந்தது என்றே சொல்லலாம். குழந்தைகளுக்கு எல்லாம் அப்படி ஒரு சந்தோசம். இருக்காதா பின்னே?

ஆமா அப்படி என்ன பொருள் வாங்கினீங்க என்று கேப்பவர்கள் காத்திருக்கவும்...


share on:facebook

Thursday, November 24, 2011

இருபது லட்சம் ஹிட்ஸ் - Why this kolaveri ...Di உலகம் முழுவதும் பிரபலம்.



"3" படத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இருபது லட்சம் ஹிட்ஸ். "தி இந்து" நாளிதழில் முதல் பக்கத்தில் விமர்சனம். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மொழி வானொலிகளிலும் பாடல் ஒலிபரப்பு. இதுவரை  சமீப காலத்தில்  எந்த ஒரு தமிழ் சினிமா பாடலுக்கும் கிடைக்காத  ஒரு  வரவேற்ப்பு  Why this kolaveri ...Di பாடலுக்கு கிடைத்து இருக்கிறது.

முதல் தடவை Why this kolaveri ...Di பாடலை கேட்ட போது என்ன பாடல் இது என்று தான் நான் நினைத்தேன்(இப்போதும்). ஆனால், மாற்றமாக ஒன்றை  தந்தால் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பதற்கு இந்த பாடலின் ஹிட் ஒரு  உதாரணம். 

இது பெண்களையும், ஆங்கிலம் பேசுபவர்களையும் அவமானப் படுத்துவதாக அமைந்திருக்கிறது என்ற குற்றசாட்டு எழுதுள்ள  வேலையில்,  அப்படி ஏதும் இல்லை என்கிறார் 3 படத்தின் இயக்குனர்  ஐஸ்வர்யா தனுஷ். தனுஷ் "ஆடுகளத்தில்" முன்பு உடைந்த ஆங்கிலத்தில் பேசியது அவருடைய காரக்டருக்கு நன்றாக இருந்தது. அது போல் முயற்சித்தால் என்ன என்று நினைத்தோம். அவ்வளவு தான். வேறொன்றுமில்லை என்கிறார்.

பத்து நிமிடத்தில் டியுன் போட்டு இருபது நிமிடத்தில் இப்பாடலை பதிவு  செய்திருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல, இங்கு அமெரிக்காவில் கூட என்னுடைய வட இந்திய நண்பர்கள் இப்பாடலை கேட்டுவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்றார்கள். 

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்.

share on:facebook

Wednesday, November 23, 2011

ஜெயலலிதா "பெயில்"




செய்தி: பெங்களூரு நீதிமன்றத்தில் நான்கு நாட்களில் கேட்கப்பட்ட ஆயிரத்து முன்னூற்று  முப்பத்தொன்பது கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு "தெரியாது", "மறந்து போயிற்று" என்று தமிழக முதல்வர் பதில்.

இப்ப சொல்லுங்க, ஜெயலலிதா மேடம் "பெயில்" தானே?

share on:facebook

Tuesday, November 22, 2011

ரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை

தமிழ் திரை உலகில் ரஜினி வில்லனாக உலா வந்த நேரம். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ரஜினி படம் என்றால் எப்போதும் "நோ"  தான். அவன் கெட்டவன், அவன் படத்துக்கெல்லாம் போக கூடாது  என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்(இன்றைய ரஜினி ரசிகர்கள் கோபித்து  கொள்ள கூடாது).

முகம்: 1

16 வயதினிலே "பரட்டை" ஆகட்டும், மூன்று  முடிச்சு வில்லன் காரக்டர்  ஆகட்டும். நம்பியார், அசோகன் காலத்திற்கு  பிறகு வில்லன் என்றால் ரஜினி, ரஜினி என்றால் வில்லன் என்றால்  மிகையாகாது. அதிலும் மூன்று  முடிச்சில், நீச்சல் தெரியாத கமலஹாசனை  தண்ணீரில் விழும் போது அதை பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாத ரஜினி, ஸ்ரீதேவி எவ்வளவோ கெஞ்சியும் தனக்கு நீச்சல் தெரியாது என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு துடுப்பை போட்டபடி "மனநிலைகள்  யாருடனோ, மாயவனின்  விதிவலைகள்.." என்று முகத்தை அவ்வளவு  இறுக்கமாக வைத்துக்கொண்டு  பாடும் பாடல் காட்சியில் யாருக்குமே  ரஜினியை பிடிக்காது. இப்போது உள்ள  அனைத்து வில்லன்களும் அப்படி  ஒரு கெட்ட! பெயர் வாங்க  ரொம்ப கஷ்ட  பட வேண்டும். 

அதன் பிறகு ஹீரோ ரோல் பண்ண ஆரம்பித்த பிறகு, அவருடைய ஸ்டைலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழக சினிமா ரசிகர்கள் அடிமை ஆக ஆரம்பித்தார்கள். குழந்தைகளிடம் ரஜினி ஸ்டைல் பாப்புலராக  ஆரம்பித்தது. எதார்த்தமாக  கையை காலை தூக்கினால் கூட அது என்ன? ரஜினி ஸ்டைலா? என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த காலக்கட்டத்திலேயே (இன்றும் அவர் முன்னணி ஹீரோ தான்) அவருடைய  நூறாவது படமாக "ராகவேந்தர்" வெளிவந்தது. இது தமிழக தாய்மார்களிடம் பெரும்  வரவேற்பையும், ரஜினியை பற்றிய மாற்று கருத்தையும் உருவாக்கியது.

அன்றிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமல்ல. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினியை ரசிக்க ஆரம்பித்தார்கள். ரஜினி படமென்றால் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பார்க்கலாம்  என்ற அளவில் அவரை பற்றிய கண்ணோட்டம் மாறியது. அதன்பிறகு வந்த படங்களில் காரக்டர் ரோல், கிராமத்தான், காமெடி ரோல் என பல வேடங்கள் ஏற்று தான் ஒரு முழு நடிகன் என நிரூபிக்க ஆரம்பித்தார். அவருடைய  படங்கள் பெரும்பாலும் நன்றாகவே ஓடின.

80 களின் இறுதியில் தனக்கென தமிழகத்தில் ஒரு பெரும் படையையே ரசிகர்களாக உருவாக்கி வைத்திருந்தார் ரஜினி. அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (பாக்கியம்) எனக்கு கிடைத்தது. அவருடைய போயஸ் கார்டன் இல்லத்திலேயே.

தொடரும்...
  

share on:facebook

Monday, November 21, 2011

அமெரிக்காவிற்கு (முதல் முறையாக) செல்கிறீர்களா - தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.


பொதுவாகவே வெளியூரோ அல்லது வெளி மாநிலத்திற்கோ நாம் செல்லும்  முன் அவ்வூரை பற்றி ஆவலுடன் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவிற்குள்  பயணம் மேற்கொள்ளும் போதே இது மிக அத்தியாவிசமான ஒன்று. நூறு  இருநூறு மைல்களுக்கு  அப்பால் சென்றாலே மொழி வேறு, கலாச்சாரம் வேறு. உணவும் உடைகள்  கூட வேறுபடும். இதனால் பயன்களும் உண்டு,  பிரச்சனைகளும்  உண்டு.  அப்படி இருக்கையில் இரு கண்டங்கள்  தாண்டி  ஆங்கிலம் ஒன்றையே  துணையாக கொண்டு அமெரிக்கா  போன்ற  நாடுகளுக்கு முதல் முறை  செல்லும்  போது அந்நாட்டின் கலாச்சாரம், உணவு, உடைகளை பற்றி நாம் தெரிந்து (பயணத்திற்கு முன்பே) கொள்வது  நமக்கு பல வகைகளில் உதவும். ஏதோ என்னால் ஆன சிறு முயற்சி... சிலருக்கு அது பலன்  அளிக்குமானால் கூட அதுவே  எனக்கு பெரு மகிழ்ச்சி.

# அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் "Queue Discipline" என்று சொல்ல  கூடிய வரிசை நெறிமுறையை கடை பிடிப்பது மிக அவசியம். எங்கு  சென்றாலும் இதை கடை பிடிப்பது அவசியம். எல்லோரும் வரிசையில்  நிற்கும் போதும் நீங்கள் மட்டும் இடையில் புகுந்தால், ஒன்று எல்லோரும்  உங்களை  சத்தம் போட்டு உள்ளே விட மாட்டார்கள். இது கூட  பரவாயில்லை. சில இடங்களில்  யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் உங்களை  பார்க்கும் பார்வை இருக்கிறதே. நாக்கை  பிடிங்கிக்கொண்டு சாகலாம் போல்  இருக்கும். வரிசையின் நடுவே  செல்பவர்களை புழுவை போல் பார்ப்பார்கள்.  எல்லாவற்றையும் விட  முக்கியமானது வரிசை என்றால் நூறு பேர் இருக்க  வேண்டும் என்றில்லை.  ஒருவர் உங்களுக்கு முன் நின்றால் கூட அது வரிசைதான். அவர் காரியம்  முடிந்து நகன்ற பிறகு தான் நீங்கள் முன்னால் செல்ல வேண்டும். அது  ஒன்றுக்கும் உதவாத அரை நொடி கேள்வியாக இருந்தால் கூட*.

# அடுத்ததாக "Courtesy". ஒரு நிறுவனத்திற்கு உள்ளே செல்லும் போதோ, இல்லை எந்த ஒரு இடத்திலும் கதவை திறந்து கொண்டு உள்ளே போகும் போது அடுத்து யாராவது வந்தால் அவருக்காக கதவை பிடித்து கொண்டு  நிற்க வேண்டும். ஆம். அதுதான் நாம் கடை பிடிக்க வேண்டிய மரியாதை.  இன்னும் சொல்ல போனால், நமக்கு பின்னால் ஒருவர் வந்தால், அவருக்காக கதவை திறந்து விட்டு அவர் உள்ளே சென்ற பிறகு தான் நாம் செல்ல வேண்டும். சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் கூட வரிசையாக மக்கள் உள்ளே செல்லும் போது அடுத்து பின்னால் வருபவர் மேல் கதவு சென்று அறைந்து விட கூடாது என்பதற்காக ஒவ்வொருவரம் கதவை தங்கள் கையால்  தாங்கி தாங்கி செல்வர். பாதுகாப்பு நிறைந்த கட்டடங்களுக்கு  மட்டும் இது பொருந்தாது**.

# "Please, Thanks". இது தான் நீங்கள் அதிகமாக உபயோகிக்கும் வார்த்தையாக இருக்கும். ஆம், எதற்கு எடுத்தாலும் நாம் பிளீஸ் என்றும் தாங்க்ஸ் என்றும் சொல்ல  வேண்டும். ஒரு பேருந்தில் ஏறி டிக்கெட் எடுக்க வேண்டும்   என்றால்  கூட நடத்துனரிடம் ஒன் டவுன் டவுன் "ப்ளீஸ்" என்று தான் கேக்க வேண்டும்.  பேருந்தை விட்டு இறங்கும் போது மறக்காமல் ஓட்டுனருக்கு  "தாங்க்ஸ்"  சொல்ல  வேண்டும்***.

* நான் முதல் முறை அமெரிக்கா சென்ற போது "Queue Discipline" தெரியாமல்  பெற்ற அனுபவம்.

** Courtesy - இங்கு கடைபிடித்த மரியாதையை எனது இந்திய அலுவலகத்தில் கடைபிடித்ததால் கிடைத்த "சம்மன்".

*** "பிளீஸ்" சொல்லாததால் இங்கிலாந்தில் எனக்கு கிடைத்த அனுபவம்.  இவையெல்லாம் அடுத்த பதிவில். 

இன்னும் பல சுவராசியங்கள் அடுத்த பதிவில்... 

share on:facebook

Saturday, November 19, 2011

சான்டியாகோ ஏர் ஷோ - Fire Ball, Fireworks Spectacular

சான்டியாகோ ஏர் ஷோ - இரு வேறு அனுபவங்கள் பதிவின் முடிவில் இன்னொன்றுக்கும் மக்கள் வரிசை கட்டி நின்றார்கள். அது என்னவாக இருக்கும் என்பதை உங்கள் guess க்கு விட்டு விடுகிறேன். முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் என எழுதியிருந்தேன். வழக்கம் போல் நம் பதிவுக்கு குறைந்த பின்னூட்டங்களே இருக்கும் (நம்ம யாருக்கும் கமென்ட் போட்டால்தானே என்று யாரோ சொல்வது கேட்கிறது...ஹ்ம்ம்).

அப்படி  வந்தவைகளில் அம்பலத்தார் அவர்களும் அகில் பூங்குன்றன்  அவர்களும்  சரியாகவே கணித்திருந்தார்கள். ஆம். அமெரிக்கர்களுக்கு அது அது அவ்வப்போது செய்து விட வேண்டும் அவர்களால் எதையும் அடக்கவோ, எதற்கும் காத்திருக்கவோ முடியாது. ஆங்காங்கு வைத்திருந்த போர்டபிள்  டாய்லைட்டுகளுக்கு முன் தான் வரிசை கட்டி மக்கள் நின்று  கொண்டிருந்தார்கள். அதற்கு இன்னொரு காரணம் நம்மூர் போல் சந்து ஓரம்  ஒதுங்க முடியாது அல்லவா? 



சரி, மீண்டும் ஏர் ஷோவுக்குள் போகலாம். நாள் முழுதும் நடந்து கொண்டிருந்த ஏர் ஷோவில் எங்களை மிகவும் கவர்ந்தது, ஐந்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பல திசைகளில் இருந்து வந்து திடீரென்று வானில் முக்கோணம் வடிவில் ஒன்று சேர்வதும் பிறகு ஒரு கட்டத்தில் திடீரென்று நான்கு திசைகளில் பிரிந்து போவதும் தான்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இரு விமானங்கள் நேர் எதிர் திசைகளில் இருந்து ஆயிரம் மைல்  வேகத்தில் நேருக்கு நேராக வந்து,  நொடிக்கும் குறைவான நேரத்தில் அப்படியே மல்லாக்க திரும்பி ஒன்றை  ஒன்று தாண்டி போனதுதான். இது போல் பல முறை செய்தார்கள். ஒவ்வொருமுறையும் நான் பலவாறாக முயன்றும் என்னால் அப்படி கடக்கும் போது படம் எடுக்க முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு விமானங்களும் கடந்து சென்று விட்டன.

தரையில் 50 - 60 மைல் வேகத்தில் கார் ஓட்டும் போதே சில சமயங்களில் முன்னால் ஒரு வாகனம் ப்ரேக் அடித்தால் அதை கட் அடித்து நம்மால் செல்ல இயலவில்லை. ஆனால் நொடிப் பொழுதில் ஆயிரம் மைல் வேகத்தில் இரு விமானங்களை புரட்டி போட்டாற்போல் விமானிகளும்  இருவரும் ஒட்டி சாதனை செய்ததை நேரில் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது.

அடுத்ததாக ஷோவின் நிறைவாக "Fire Ball" என சொல்லக்கொடிய ஆங்காங்கு மிக பெரிய வெடிகளை வெடித்து அது பெரும் தீ ஜுவாலையாக  கிளம்பி வானத்தில் போனது பார்க்க பிரமிப்பாக இருந்தது. சுமார் அரை கிலோ  மீட்டருக்கும் மேல் அதன் சூட்டின் தாக்கம் எங்களால் உணர முடிந்தது.

இதனிடையே உலகிலேயே தரையில் அதிவிரைவாக செல்லக்கூடிய  ராணுவ வாகன ஓட்டம் நடத்திக்காட்டப்பட்டது. இந்த வாகனம் ஒரே நிமிடத்தில் முன்னூறு மைல் (500 கிலோமீட்டர்) வேகத்தை அடையும் திறன் கொண்டது. அது சென்ற வேகத்தில் அதனுடைய சைலன்சர்களில்  இருந்து வெளியேறிய நெருப்பு ஜுவாலைகள், ஏறக்குறைய தரையில் ஒரு ராக்கெட் கிளம்பி போனதை பார்த்த அனுபவம் கிடைத்தது.

இறுதியாக வழக்கம் போல் வான வேடிக்கைகள் நடை பெற்றன. சுமார்  அரை மணி நேரம் நடை பெற்ற வான வேடிக்கைகள் எப்படி பார்த்தாலும்  நம்மூர் காசுக்கு ஒரு 10 லட்சத்தை தாண்டி இருக்கும்.

ஆமா இரு வேறு அனுபவங்கள்னு தலைப்பு இருக்கே...அந்த இன்னொரு அனுபவம் என்னவா? அது தனியாக இன்னொரு தலைப்பில் விரைவில்...

share on:facebook

Friday, November 18, 2011

ஜெ...கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்


ஆட்சிக்கு வந்து முழுதாக ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள் தமிழக முதல்வர் எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்துமே மக்கள் விரோத  அல்லது மக்களை வருத்தப்பட வைக்கும் விசயங்களே.

எடுத்தவுடனே சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் காட்டிய தயக்கமும்  அதனால் பள்ளி சென்றும் குழந்தைகள் படிக்க முடியாத சூழ்நிலையால்  படித்தவர் முதல் பாமரர் வரை தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் மீது எரிச்சல் ஏற்பட்டது.

பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற போவதாக அறிவித்தது. எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். வேலை இல்லாத ..... எதையோ எடுத்து .....தானாம் என்று. அது போல் தான் இருக்கு இந்த அரசும். பணியாற்ற வேண்டிய பணிகள் பல இருந்தும் ஒன்றுக்கும்  உதவாத இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது.

அடுத்து சமீபத்தில், முந்தய அரசு நியமித்த ஒரே காரணத்திற்க்காக பதிமூன்றாயிரத்திர்க்கும் மேற்பட்ட கிராம நல பணியாளர்களை  மூன்றாவது முறையாக வீட்டுக்கு அனுப்பியது எல்லோரையும் பரிதாப பட வைத்தது. என்ன தான் அவர்களால் அரசுக்கு எந்த பலனும் இல்லை என்றாலும் திடீரென்று அரசு பணியில் உள்ள ஒருவரை வீட்டுக்கு அனுப்பினால் அதை நம்பி வாழ்க்கையை ஓட்டும் அவர்களின் வாழ்வில் மண் அள்ளி போடுவதற்கு சமம்.

தற்போது எல்லாவற்றுக்கும் சிகரமாக மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை தாறு மாறாக ஏற்றி இருப்பது மீண்டும் அவருடைய ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆன மாதிரியே தெரிகிறது. என்ன? இந்த தடவை ஆரம்பத்திலே கவுன்ட் டவுன் ஆரம்பித்து விட்டது.

ஊருக்கு போகும் போது எழுவது ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்  திரும்பும் போது நூற்றி இருபது ரூபாய் பஸ்சுக்கு கொடுக்க வேண்டும் என்றால் யாருக்கு தான் கஷ்டமாக தெரியாது. இன்றும் நம் ஊரில் காசை எண்ணி எண்ணி செலவு செய்பவர்களும் பயணத்துக்கான டிக்கெட் காசை தவிர டீ குடிக்க கூட காசில்லாமல் பயணம் செய்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்களை பற்றி எல்லாம் இந்த அரசு நினைத்து பார்க்க வேண்டாமா?

அடுத்து பால் விலையை லிட்டருக்கு ஆறு ருபாய் உயர்த்தியது. இதனால்  பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை எளியவர்களே. பால் விலை உயர்வினால் இயல்பாகவே கடைகளில் டீ, காப்பி விலைகள் உயர்த்தப்படும். அது மட்டுமில்லாமல் ஏழை நடுத்தர பணக்காரர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு விலை ஏற்றம் இது.

மின் கட்டணமும் வேறு உயர்த்த போகிறார்களாம். அதற்கு சொன்ன காரணம் தான் சிரிப்பை வரவழைத்தது. பிரதமர் மண்மோகன் சிங் நான் சொல்வாதை கேக்க மாட்டார் என அன்னை சோனியா சொன்னால் அதை  உங்களால் நம்ப முடியுமா? அது போல் தான் முதல்வர் கூறியிருப்பது.  மின்சார வாரியம்  தனியே இயங்கும் ஒரு வாரியம். அது மின்சார  கட்டணத்தை உயர்த்தினால்  அதை என்னால் (தமிழக அரசால்) தடுக்க  முடியாது என கூறுவது. 

Sky rocketing price hike என்று சொல்லக்கூடிய இந்த வரலாறு காணாத விலை ஏற்றம். அதுவும் இரவோடு இரவாக மூன்று அத்தியாவிச பொருட்களின் மீது. இதனால் மக்கள் எவ்வளவு கஷ்ட படுவார்கள் என முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டுமானால்...

அடுத்த ஒரு மாதத்திற்கு அவருக்கு வரும் சம்பளத்தை மட்டுமே வைத்து (அது ஒரு லட்சமாக இருந்தால் கூட) அவருடைய எல்லா செலவுகளையும் அதை வைத்தே அவர் செய்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு பால் வாங்குவதிலிருந்து, அவர் தினமும்! தலைமைச்செயலகம்  செல்ல தன்  காருக்கு  பெட்ரோல் போடுவது வரை. ஒரு மாதம் கழித்து சொல்லட்டும்.  அவரால் அவரின் சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மாதத்தை  ஓட்ட முடிந்ததா என்று.

எப்படியோ நான்கரை வருடம் கழித்து இவர்களை வீட்டுக்கு அனுப்ப எதிர் கட்சியினர் பெரிதாக ஒன்றும்  கஷ்ட பட வேண்டியது இல்லை.  ஆல்ரெடி கவுன்ட் டவுன் ஸ்டார்டட்.    

share on:facebook

ஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே -



share on:facebook

Thursday, November 17, 2011

அனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்

நம்மில் பல பேர் என்ன வசதி இருந்தாலும் "என்னப்பா வாழ்க்கை"  என்று அலுத்துக்கொள்வார்கள். அந்த வகையில் அமெரிக்கர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவே பிறந்தவர்கள்.

மழை கொட்டினாலும், வெயில் அடித்தாலும், ஸ்நோ பொழிந்தாலும் அவை  அனைத்தையும் அனுபவிப்பார்கள். நம்மூரில் மார்கழி குளிருக்கே (80-85 டிகிரி) இழுத்து  போர்த்திக்கொண்டு தூங்குவோம். இங்கு நான் இருந்த மினசோட்டா  மகானத்தில் 0-20 டிகிரி குளுரில் ஊரில் உள்ள அனைத்து கால்வாய்/ஏரிகளும்  உறைந்து போயிருக்கும். அவ்வாறு உறைந்து போய் இருக்கும் ஏரியின் (
4 -5 அடிக்கு ஐய்சாக  உறைந்திருக்கும்) மேல் காரில் சென்று டிரில்லிங்  இயந்திரத்தால் உறைந்து போய் இருக்கும் ஐஸ்சை துளையிட்டு அந்த நடுங்கும்  குளிரில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு மீன்  பிடிப்பார்கள்.
இதை பற்றி என் அமெரிக்க நண்பர்களிடம் கிண்டலாக, "ஏன்பா, இப்படி  குளிரில் உக்கார்ந்து மீன் பிடிப்பதற்கு, ஐந்து டாலர் கொடுத்தால் ஒரு கிலோ  மீன் வாங்கி சாப்பிடலாமே என கேட்டால்?", அதில் என்ன சுகம் இருக்கு? இப்படி குளிரில் உக்கார்ந்து மீன் பிடித்து அதை வாட்டி சாப்பிட்டால்  தான் சுகம் என்பார்கள். அந்த அளவிற்கு இயற்கையை அனுபவித்து அதில் சுகம் காண்பார்கள். 

அதுமட்டுமில்லை, கொட்டும் ஸ்நோவிலும் பல்வேறு பனிசறுக்கு  விளையாட்டுகளில்  (அது அபாயம் மிகுந்ததாக இருந்தால் கூட)  தங்கள் பொழுதை கழிப்பார்கள். ஐந்து நிமிடம் தண்ணீரில் கை வைத்தாலே  உடம்புக்கு ஆகாது என நம்  குழந்தைகளை அனுமதிக்க மாட்டோம்.  ஆனால் பிறந்து சில  மாதங்களே ஆனா குழந்தைகளை கூட ஸ்நோவில்  போட்டு உருட்டி  விளையாடுவார்கள்.

வெயில் காலம் வந்துவிட்டால் போதும். சனி ஞாயிற்று கிழமைகளில்  ஒருவர் கூட வீட்டில் இருக்க மாட்டார்கள். புட்பால், சாக்கர் மைதானங்கள்  நிறைந்து விடும். ஒவ்வொருவரும் நாற்காலி, ஸ்நாக்ஸ், ட்ரிங்க்ஸ் என்று  குடும்ப சகிதம் வந்து வெயிலையும் ஆட்டத்தையும் கண்டு கழிப்பார்கள்.

இது எல்லாவற்றையும் விட முக்கியம், பொழுதுக்கும் T.V. க்கு முன்  உட்கார்ந்து பொழுதை கழிக்க மாட்டார்கள். பொதுவாக விடுமுறை/பண்டிகை நாட்களில் "அமெரிக்க தொலைக்காட்சிகளில் முதல்முறையாக"  என்று T.V. க்கு முன்பாக உட்கார்ந்து பொழுதை கழிக்காமல் பெரும்பாலும், எங்காவது பெரிய டீம்கள் விளையாடும் புட்பால் போட்டியோ, பேஸ் பால் போட்டியோ காண சென்று விடுவார்கள்.

அடுத்த பதிவில் மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை, மற்றும்  பார்பிகியூ பற்றிய செய்திகள்... 

share on:facebook

Tuesday, November 15, 2011

அட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.


இதுவரை அமெரிக்காவில் உள்ள நல்ல விஷயங்கள் பலவற்றை  பகிர்ந்துள்ளேன்.  உலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கும் உண்டு. அதே போல் நல்லவைகளும் கெட்டவைகளும் எல்லா நாட்டிலும் உண்டு. அந்த வகையில் அமெரிக்காவிலும் பல விஷயங்கள் நமக்கு எரிச்சல் ஊட்டும். அந்த நேரங்களில் எப்படா நாம் இந்தியா திரும்பி போவோம் என்ற ஏக்கம் வந்து விடும்.

அதில் முக்கிய பிரச்னை, மருத்துவம் சார்ந்தது. என்ன தான் உயர் தர சிகிர்ச்சையும், அவசர  கால உதவியும்  இங்கு உடனே கிடைத்தாலும்,  சாதாரண தலைவலி ஜூரம் என்றால் அவசரத்திற்கு ஒரு மருத்துவரிடம்  நாம் செல்ல முடியாது. இங்குள்ள அனைத்து மருத்துவர்களும் அரசாங்க வேலை போல காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை தான் தங்கள் கிளினிக்குகளை திறந்து வைத்து இருப்பார்கள். அதற்கும் முன் கூட்டியே  பதிவு செய்திருந்தால் மட்டுமே மருத்துவரை பார்க்க முடியும். சனி ஞாயிறு  ஒரு டாக்டர் கூட வேலைக்கு வரமாட்டார். இதற்கு இடைப்பட்ட  நேரத்தில் ஏதும் சாதாரண மருத்துவ சிகிர்ச்சை  தேவை என்றால் கூட Emergency Care தான் செல்ல வேண்டும். இங்கு சென்றால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சோதனை செய்த பிறகே மருத்துவம் பார்ப்பார்கள்.

அதே போல் உரிய மருத்துவ காப்பீடு இல்லை என்றால்  அவர்கள் தரும் பில்லுக்கு பணம் கட்ட நாம் ஆயுள் காலமெல்லாம் சம்பாதிக்க வேண்டும். உதாரணமாக சாதாரண தலைவலி ஜூரம் என்று ஒரு முறை டாக்டரிடம் சென்று வந்தாலே (ஒரு சில டெஸ்ட்டுகள் மற்றும் டாக்டர் பீஸாக மட்டும்) 400 - 500 டாலர்கள் பில் வந்து விடும்.

அமெரிக்கர்கள் பலரும் நல்ல திடகாத்திரமாக இருப்பது போல் தோன்றினாலும்  தினமும் பத்துக்கும் மேற்ப்பட்ட மாத்திரைகளை சாபிட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களால் எந்த ஒரு வலியையும், கஷ்டத்தையும் தாங்க முடியாது. அதே போல் நமக்கும் அது வராமல் இருக்க, இது வராமல் இருக்க என்று மருந்து மாத்திரைகளை எழுதித்தள்ளிவிடுவார்கள்.

குழந்தைகள் இருந்தால் கேக்கவே வேண்டாம். சனி ஞாயிறு டாக்டர்கள்  இருக்க மாட்டார்கள். திங்கள் மூதல் வெள்ளி வரை காலை முதல் மாலை வரைதான் டாக்டர்களை பார்க்க முடியும். அப்படியானால் ஒவ்வொரு  முறையும்  டாக்டரை பார்க்க Dr Appointment என்று அலுவலகத்தில் பர்மிஷன் போட்டு தான் போய் வர வேண்டும். இவர்கள் பேசும் ஆங்கிலம் சில சமயம் புரியாதலால் வீட்டு அம்மணிகளும் தனியே குழந்தைகளை டாக்டர்களிடம் கூட்டி போய் வர தயங்குவார்கள்.

நோய் நொடி இல்லாதவரை அமெரிக்காவில் தொந்தரவு இல்லை. மற்றபடி  அடிக்கடி டாக்டரிடம் போய் வருவதென்பது இங்கு மிக பெரிய சிரமம்.

share on:facebook

Monday, November 14, 2011

"Occupy wall street" அம்பானி வருவாரா?

"Occupy wall street" - கடந்த இரு மாதங்களாக அமெரிக்க செய்திகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரு போராட்டம். ஆரம்பித்தது அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்தில் என்றாலும் இன்று அமெரிக்காவின் மற்ற முக்கிய நகரங்களையும் தாண்டி ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டம் விரிவடைந்திருக்கிறது.

நியூயார்க் அமெரிக்காவின் வர்த்தக தலைநகரம் என்றால், அந்நகரில் உள்ள
Wall street எனப்படும்  பகுதியில் தான் உலகின் மிக பெரிய நிறுவனங்களின்  தலைமை அலுவலகங்கள் நிறைந்துள்ளது. அதன் அருகில் தான் "Occupy wall street" போராட்டம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

பெயர் தான் "Occupy wall street" என்றாலும், உண்மையில்  போராட்டகாரர்களின்  நோக்கம்  மேலே குறிப்பிட்டுள்ள Wall street பகுதியை கை பற்றுவது அல்ல.   மாறாக Wall street - ல் அமைந்துள்ள நிறுவனங்களின் கொள்கைகளுக்கு  எதிராகவும், அவற்றினால் சாதாரண பொது மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக  பாதிக்கபடுகிறார்கள் என்பதை அரசுக்கும் மக்களுக்கும் எடுத்துரைப்பது தான்.

"Occupy wall street" போராட்டக்காரர்களின் முக்கிய நோக்கம் இது தான். அமெரிக்காவின் பெருமளவு  வளமும், வருமானமும் ஒரு சதவிகித (1 %) மக்களிடம் மட்டுமே குவிந்து கிடக்கிறது. மீதி உள்ள தொண்ணூற்று ஒன்பது (99%) சதவிகித மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டபடுவது மட்டுமன்றி மேலே  குறிப்பிட்ட ஒரு சதவிகித மக்கள் தான் மீதி உள்ள தொண்ணூற்று ஒன்பது சதவிகித  மக்களின் வாழ்க்கை தரத்தை  நிர்ணைகிறார்கள்  என்பது தான். அதை மாற்றி இம்மாதிரி பெரிய நிறுவனங்களுக்கு அதிக வரிகளை விதித்தால் அதுவே பொருளாதரத்தை மேம்படுத்தவும், சாதாரண 99% மக்களின் வரிச்சுமையை குறைப்பது மட்டும் இல்லாமல் பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும் சமப்படுத்தும் என்பதுதான்.

இது ஒரு வினோதமான அதே நேரத்தில் உன்னதமான போராட்டம். முதலில் நியூயார்க் நகருக்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான ப்ரூக்ளின் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தும் அளவிற்கு  போராட்டக்காரர்கள்   திடீரென்று நடுவே இறங்கி நடக்க தொடங்கினார்கள்.  இது அமெரிக்க  சட்டப்படி குற்றம். இருந்தும் அரசும் போலீசும் பெரிதாக  ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

அடுத்ததாக நியூயார்க் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள லிபர்ட்டி  சதுக்கத்தில் போராட்டகாரர்கள் அனைவரும் குவியத்தொடங்கினார்கள். முதலில் 50 பேர் 100 பேர் என திரண்ட கூட்டம் கடந்த 50 நாட்களில் ஆயிரத்தை தொட்டுவிட்டது. லிபர்ட்டி சதுக்கத்திலே தற்காலிக கூடாரம் அமைத்து அங்கேயே உள்ளிருப்பு போராட்டம் போல் தங்கி விட்டார்கள். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மற்ற வசதிகளுக்கும் தேவையான பணத்திற்காக ஆங்காங்கே பெரிய உண்டியல்கள் வைத்திருக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் முதல் பலரும் தங்கள் தார்மீக ஆதரவை இவர்களுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் இவர்கள் சொல்லும் ஒரு சதவிகித அமெரிக்க நிறுவனங்களால்  எவ்வாறு அமெரிக்க  பொருளாதாரமும் பொது  மக்களும்  பாதிக்கப்படுகிறார்கள் என்று மைக்கில் பிரசாரமும், அவ்வழியே போவோர்  வருவோரிடம் துண்டு பிரசுரங்களும்  விநியோகித்து வருகிறார்கள். தங்கள் சொந்த நலனுக்காகவும்  வருமானத்திற்க்காகவும்  நாட்டின் பொருளாதாரத்தையே படுகுழிக்குள் இந்நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் தள்ளிவிடுவதாகவும் இன்று  ஏற்பட்டுள்ள அணைத்து பொருளாதார பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சதவிகித மக்களே காரணம் என்பதும் இவர்களின் வாதம்.

இதில் முக்கிய நிகழ்வாக, தற்போது மேலே குறிப்பிட்டு உள்ள ஒரு சதவிகித பெரும் முதலாளிகளில் ஒரு சிலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் ஆதரவை தெரிவித்துள்ளது தான். "Occupy wall street" பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

ஆமாம்,  "Occupy Dalal Steet" நடந்தால் அங்கு அம்பானியும், விஜய் மல்லையாவும் வந்து கலந்து கொள்வார்களா?

share on:facebook

Sunday, November 13, 2011

"டைனமிக்" கல்யாணமும், கட்டிப்பிடி முத்தம் கொடு கலாச்சாரமும்

சமீபத்தில் "டைனமிக்" கல்யாணம் பற்றி ஒரு வீடியோ பதிவை பார்த்து அதிர்ச்சியானேன். ஐயர் வைத்து, ஆகம விதிகள்படி சடங்குகள் நடத்தி திருமணம் நடத்துவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. அந்த வகையில் எங்கள் குடும்பத்தில் முடிந்தவரை புரியாத சடங்குகளை நாங்கள் பெருமைக்காக செய்வதேயில்லை. அதே நேரத்தில் புரட்சிகரம் என சொல்லிக்கொண்டு நமக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் செயல்படுவது அதை விட கொடுமை.


"டைனமிக்" திருமணங்களில் மணமக்களுக்கு ஒரு விதவை தாய் மாலை எடுத்துக்கொடுக்க அதை மணமக்கள் மாற்றிக்கொள்கிறார்கள். இதெல்லாம் சரிதான். அடுத்ததாக மணமக்கள் ஒருவரை ஒருவர் எல்லோர் முன்னிலையிலும் ஆரத்தழுவி கட்டி கொள்கிறார்கள். இது நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடையது இல்லாவிட்டாலும் கூட, சரி இதெல்லாம் மேலை நாடுகளில் சகஜம் என கூறி ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், அதன் பிறகு வருகிறது பாருங்கள் ஒரு சடங்கு. அது தான் "புரட்சிகர திருமணம்" என்ற வார்த்தைக்கே இழுக்கை ஏற்படுத்துகிறது. திருமணத்திற்கு வரும் ஒவ்வொருவரும், ஆண்கள் மணப்பெண்ணையும், பெண்கள் மணமகனையும், ஒருவரை ஒருவர் எல்லோர் முன்னிலையிலும் திருமண மேடையிலேயே இறுக கட்டி தழுவிக்கொள்கிறார்கள். இதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள். பார்க்க சகிக்கலை. கருமம். கண்றாவி.

ஒரு வேளை "டைனமிக்" திருமண குழுவினர், மேலை நாடுகளில் ஒருவரை ஒருவர் கை கொடுத்துக்கொள்வதில்லையா? கட்டி தழுவி முத்தம் இட்டுக்கொள்வதில்லையா என கேட்டால், அட பாவிகளா அதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கீறீர்கள் என்று தான் கூற வேண்டும்.

மேலை நாடுகளில் கூட ஒரு பெண்ணை சந்திக்கும்போது அப்பெண் முதலில் கைகளை நீட்டினால் மட்டுமே ஒரு ஆண் தன் கைகளை நீட்டி கை கொடுக்கலாம். அதே போல், ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியோ அல்லது காதலர்களோ இல்லாத பட்சத்தில், ஒருவரை ஒருவர் ஆரத்தளுவுவது என்பது "டைனமிக்" கலாச்சாரம் போல் இறுக கட்டித்தழுவ மாட்டார்கள். உரிமை இல்லாத பெண்ணை தழுவும் போது ஒரு ஆணின் கைகள் மட்டும் தான் அப்பெண்ணின்  தோள்களில் படும். முடிந்த மட்டும் பெண்ணின் மார்பு பகுதியோ மற்ற அவயன்களோ தங்கள் மேல் படாதவாறு பார்த்துக்கொள்வார்கள்.

அதே போல், கன்னத்தில் முத்தமிடுவது என்பது ஒரு (symbolic) அடையாளமாகத்தான் செய்வார்களே ஒழிய, "டைனமிக்" கலாச்சாரம் போல் உரிமை இல்லாத ஒரு பெண்ணின் கன்னத்தில் பஜக் பஜக் என்று முத்தமிட மாட்டார்கள். பெண்ணின் கன்னத்தில் தங்கள் கன்னத்தை வைத்து பெயருக்கு முத்தம் கொடுப்பது போல் வாயை அசைப்பார்கள். அப்பெனின் மீது அதிகபட்சம் உதடுகள் படவே படாது.

"டைனமிக்" கல்யாணத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் மணமக்களை கட்டிப்பிடித்து முத்தமிடுவதை பார்க்கும் போது காதலன் காதலிகள் கூட  தோற்று போய் விடுவார்கள். அப்படி ஒரு இறுக்கம். ஆசை போல.  என்னமோ இதற்க்கேன்றே காத்திருந்தது போல் ஒவ்வொரும் அப்படி  இறுக  கட்டிப்பிடுத்து முத்தமிடுகிறார்கள். அதுவும் ஒரு நொடி இரண்டு நொடி  அல்ல. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கத்திலேயே  இருக்கிறார்கள்.  என்னமோ போங்க...இந்த இயக்கத்திற்கு ஒரு கவிஞர், அவர் இவர் என்று ஒரு பட்டாளம். இந்த கும்பலை பற்றி அதிகம் தெரிந்தவர்கள் இன்னும் பகிரலாம்.


share on:facebook

Saturday, November 12, 2011

சான்டியாகோ ஏர் ஷோ - இரு வேறு அனுபவங்கள்

சான்டியாகோ மிராமார் ("Miramar") ஏர் ஷோ - வருடத்துக்கொருமுறை  அமெரிக்க கடற்படையின் புளூ ஏஞ்சல்ஸ் "Blue Angels" எனப்படும்   விமானப்பிரிவின் சாகச நிகழ்சிகள் திறந்த வெளியில் சான்டியாகோ விமானப்படை  மைதானத்தில் நடைபெறும். ஏற்கனவே செப்டம்பர் மாத இறுதியில் (பெரும்பாடுபட்டு வீட்டு எசமானிகளிடம் அனுமதி பெற்று)  நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து லாஸ் வேகாஸ் உல்லாச பயணம் செல்ல ரூம், கார் என எல்லாம் முன் பதிவு செய்திருந்தும், இந்த ஏர் ஷோ  நிகழ்ச்சிக்காக அனைத்தையும் ரத்து  செய்து விட்டு குடும்பத்துடன்  சான்டியாகோ சென்றோம்.

காலை 9.00 மணிக்கு துவங்கிய ஏர் ஷோ இரவு 9.00  மணிக்கு வான  வேடிக்கையுடன் முடிந்தது. விமான படை மைதானமாதலால், எங்கு பார்த்தாலும் அமெரிக்க ராணுவ வீரர்கள். பொதுவாகவே ராணுவ வீரர்கள் மிடுப்புடன் தான் இருப்பார்கள். அதிலும் அமெரிக்க வீரர்களை பற்றி கேக்கவே வேண்டாம். அப்படி ஒரு உடற்கட்டுடன் இருப்பார்கள். ஒரு பெரிய மைதானத்தில் ஒரு கோடு கூட இல்லாமல், ஆயிரக்கணக்கான  கார்களை அழகாக வரிசையாக ஒரே மாதிரி நிறுத்த அவர்களால் மட்டும் தான் சரியாக வழி காட்ட முடியும். 

சாண்டியாகோவில் பொதுவாக இதமான வெப்ப நிலை தான் இருக்கும் என்ற என் கணக்கு அன்று தவறாக போனது. எப்பவும் தலையில் அணியும் தொப்பியை எடுத்துக்கொண்டு போகும் நாங்கள் அன்று போகவில்லை. வெயில் சும்மா சுட்டெரித்தது. 90 டிகிரிக்கும் மேல். பரந்த மைதானத்தில் திறந்த வெளி காலரியில். ஹ்ம்ம்.. நாள் முழுக்க எசமானியிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருந்தேன்.

முதலில் சிறிய ரக கிளைடர் விமானங்களில் சாகச நிகழ்சிகளை நடத்தி காட்டினார்கள். நம்மூரில் பட்டம் விடுவது போல் விமானத்தை சர்வ சாதாரணமாக மேலும் கீழும் எழுப்பி நல்ல உச்சத்தில் சென்ற பின் வாலறுந்த குரங்கு போல் மேலிருந்து கீழே சுழன்று சுழன்று வேகமாக தரையை நோக்கி வந்த(விழுந்த) போது ஏதோ விமானம் கோளாறாகி  கீழே  விழுந்து நொறுங்க போவதாகவே தோன்றியது. ஒரு வாரத்திற்கு முன் நெவேடா மாகாணத்தில் இது போல் நடந்த விமான சாகச காட்சியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி 9 பேர் காலி. அந்த செய்தி வேறு மனதுக்குள் தோன்றி அடிக்கடி வயிற்றை கலக்கியது.

அதன் பிறகு வரிசையாக விமான சாகசங்கள் தான். மதியம், ஒரு மிக பெரிய போர் விமானத்தை அப்படியே தரையில் இருந்து நேராக (ரன்வேயில் ஓடாமல்) மேலே எழுப்பி அதன் பிறகு வலது, இடது, முன் மற்றும் பின் புறமாக ஏதோ ரிமோட் கன்ட்ரோலில் காரை ஓட்டுவது போல் செய்து காட்டினார்கள். அதே போல் லாண்டிங்கும் ரன்வேயில் ஓடாமல் நேராக 90 டிகிரியில் மேலிருந்து கீழே நேராக இறங்கி தரையை தொட்டது.



இதனிடையே F-18 ரக போர் விமானம் ஒன்று அவ்வப்போது மின்னல் வேகத்தில் குறுக்கே சென்று வந்து கொண்டிருந்தது. சத்தம் கேட்டு தலையை  திருப்பி பார்க்கும் முன் அது அடுத்து பல மைல்கள்  கடந்து சென்றிருக்கும். அது எழுப்பும் சத்தம். அப்பா...காதை  கிழித்துக்கொண்டு அது செல்லும் வேகம். எதிரி நாட்டு படைகளுக்கு மேல் ஒரு தடவை சென்று  வந்தால்  போதும். அவர்களின் தைரியத்தையும் நம்பிக்கையையும் தகர்த்து  விடலாம். 

அமெரிக்கர்களிடம் உள்ள தொழில் நுட்பம், ராணுவ பலம் ஆகியவற்றை நினைத்தால், அவர்களை எதிர்த்து வெல்லுவது (ராணுவ பலத்தால்) என்பது   ஒரு கனவு தான். அதே சமயம், இவ்வளவு இருந்தும் அவர்களால் ஒரு போரில் வெற்றி அடைய முடியவில்லை என்றால் (வியட்நாம், ஈராக் 
போன்றவை) அதற்கு காரணம் அவர்களை எதிர்த்து போரிடும் மக்களின் உறுதியும், நம்பிக்கையும் தான்.

மதியம் அங்கேயே நாங்கள் கொண்டு சென்றிருந்த வெஜ் பிரியாணி மற்றும் தயிர் சாதத்தை சாப்பிட்டு விட்டு சிறிது ஓய்வு எடுத்தோம் (வீட்டு அம்மணி வெயிலின் உக்கிரத்தினாலும், தயிர் சாதம் சாப்பிட்ட மயக்கத்திலும் அப்படியே நிழலில் சாய்ந்து விட்டார்). சாகச நிகழ்சிகள்  தொடர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் (நானும் நண்பரும்) சுற்றி சுற்றி  வந்தோம். பல ஸ்டால்கள் அங்கு போடப்பட்டிருந்தது. வழக்கம் போல் உணவக ஸ்டால்களில் மக்கள் வரிசை கட்டி நின்றார்கள். என்ன ஒன்று, எல்லாம் யானை விலை குதிரை விலை. ஒரு பாட்டில் தண்ணீர் $ 3.50 அம்மாடியோவ். திரும்பி வரும் வழியில் கேஸ் போட (இங்கு  பெட்ரோலை அப்படிதான் கூறுவார்கள்) போன கடையில் இதே போல் 24  தண்ணீர் பாட்டில் வெறும் நான்கு டாலர் தான். அப்போ நீங்களே கணக்கு  போட்டுக்கொள்ளுங்கள்.

இன்னொன்றுக்கும் மக்கள் வரிசை கட்டி நின்றார்கள். அது என்னவாக இருக்கும் என்பதை உங்கள் guess க்கு விட்டு விடுகிறேன். முடிந்தால்  பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். 

share on:facebook

Tuesday, November 8, 2011

கன்னடர்களுக்காக கவலை படும் ஜெயலலிதா

தலைப்பை பார்த்து கன்னட சகோதர சகோதிரிகள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சொத்து குவிப்பு வழக்கில் நூறு முறைக்கு மேல் வாய்தா வாங்கி இருக்கும் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா தற்போது தொடர்ந்து ஆஜர் ஆவதிலிருந்து தப்பிக்க புதிய வழி ஒன்றை தேர்ந்தெடுத்து  உள்ளார். அதாவது இவர் விசாரணைக்காக பெங்களூரு செல்வதால்,   இவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டால் பெங்களூரு பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு  ஆளாகிறார்களாம். அதனால் இவர் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா  தெரியல. 

அப்ப தினமும் இவர் தலைமை செயலகம் செல்வதற்காக போயஸ்  கார்டனிலிருந்து தலைமை செயலகம் வரை நிறுத்தப்படும் போக்குவரத்தால் சென்னை மக்கள் கொளுத்தும் வெயிலில் நடு வழியில் நிறுத்தி வைக்கப்படுவது அவர்களுக்கு சுகமான அனுபவத்தை தருகிறதா?

குற்ரம் சுமத்தப்பட்டவராக கோர்ட்டு விசாரணைக்கு செல்லும் இவரின்  காரில் தேசிய கொடி பறப்பதும், வழி நெடுக காவலுக்கு நிற்கும் காவல் துறை  உயர் அதிகாரிகள் மிலிடரி சல்யூட் அடிப்பதும் எந்த வகையில் சட்டப்படி சரி     என்று தெரியவில்லை. இவ்வாறு செய்வது இவருக்கு எதிராக வாதாட  போகும் வக்கீல், மற்றும் இவருக்கு எதிராக சாட்சியம் சொல்லப்போகும்  சாட்சிகள் ஆகியோரை மறைமுகமாக பயமுறுத்துவது போலாகாதா.

என்னை பொறுத்தவரை தமிழக முதல்வர் மீது குற்றம் மட்டும் தான் சுமத்தப்பட்டிருக்கிறது. இறுதி தீர்ப்பு வரும் வரை அவர் குற்றமற்றவராக தான் கருத வேண்டும். அப்படி இருக்கையில், இவர் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தான் ஆட்சி செய்யும் நாட்டு மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அல்லவா திகழவேண்டும்? 

என்னமோ போங்க. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. புரட்சி தலைவிக்கு ஏதாவது ஒரு நல்ல பட்டம் சொல்லுங்கள் கொடுத்து விடுவோம். 

share on:facebook

Monday, November 7, 2011

பேய் விரட்டும் அமெரிக்கர்கள்



பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் குடும்பத்துடன் காலடி எடுத்து வைத்த முதல்  நாள்  இரவு.  வந்த களைப்பில் உடனே தூங்கி விட்டோம்.  அடுத்த நாள் எழுந்து  குழந்தைகளுடன் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலின்  வரவேற்பு  அறைக்கு  சென்றோம். அவ்வளவு தான், குழந்தைகள்  அலறியடித்து என் பின்னே  வந்து  ஒடுங்கி நின்றார்கள். பின்னே, அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட், காத்திருந்தவர்கள்  என எல்லோரும் பேய் பிசாசுகள் போல்  உடை அணிந்து கொண்டு எவ்வளவு  கொடூரமாக காட்சி அளிக்க முடியுமோ  அந்த அளவுக்கு தங்கள் உடலிலும்  வண்ணங்கள் மூலம் மேக்கப்  போட்டிருந்தார்கள். 

உலகில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் தான் மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனங்களும் நிறைந்திருக்கும் என பலரும் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அமேரிக்கா போன்ற மேலை   நாடுகளில் இன்னமும் ஹாலோவீன் (halloween) போன்ற கொண்டாட்டங்கள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-31 ம்  தேதி ஹாலோவீன் இங்கு  கொண்டாடப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், பேய், பிசாசு  போன்ற  கெட்ட சக்திகள் நம்மை அண்டாமல் இருக்க, அவைகள் போல் உடை அணிந்து கொண்டு (அல்லது அவர்களை விட கோரமாக) அவைகள் விரட்டுவதே ஹாலோவீன் கொண்டாட்டத்தின் நோக்கம்.

அவையே சிறிது சிறிதாக மாறி அவரவர்களுக்கு பிடித்தமான ஆடைகளை  அணிந்து கொள்வதும் வழக்கமாகி போனது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான உடைகளை அன்று அணிந்து கொண்டு பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வார்கள். பிறந்த ஒரு மாத  குழந்தைகளுக்கு கூட கார்டூன் காரெக்டர்கள் போல் அழகழகான உடை அணிந்து அழகு பார்ப்பார்கள். அதே நேரத்தில் சிலர், பார்க்கவே முடியாத அளவிற்கு கோரமாக முகமூடி அணிந்தும் (எலும்புகூடு போல்), உடல் முழுதும் ரத்தம் வழிவது போலவும் உடை அணிபவர்களும் இருப்பர்.


இது எல்லாவற்றுக்கும் மேல், ஹல்லோவீன் அன்று குழந்தைகள் எல்லோரும் ஒரு பையை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு வீட்டின் கதவை தட்டி "Trick or Treat" என்பார்கள். உடனே வீட்டில் உள்ளவர்கள் கை நிறைய  மிட்டாய்களை (candies) அள்ளி அக்குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி கிடைக்கும் மிட்டாய்கள் கிலோ கணக்கில்  தேறும். கேக்கவா வேண்டும் குழந்தைகளின் கொண்டாட்டத்திற்கு?     

அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு குழந்தையும் நான் டாக்டர் ஆக வேண்டும் நான் பைலட்டாக வேண்டும் என்று அவர்களை போலவே உடை அணிந்து அவர்கள் ஆசை (மற்றும் பெற்றோர்களின் ஆசையையும்)  தீர்த்துக்கொள்வார்கள். ஹாலோவீன் பரேடு என்று பள்ளிகளில் ஹாலோவீன் வேடமிட்ட அனைத்து குழந்தைகளும் வரிசையாக ஊர்வலம் போவதை பார்ப்பது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

அதே போல் பெரும்பாலான வீடுகளில் பேய் வீடுகளுக்குரிய டெகரேஷன்  செய்திருப்பார்கள். வீட்டை சுற்றி சிலந்தி வலை போல் பஞ்சு நூலால் சுற்றி  ஆங்காகே பொம்பை வவ்வால், சிலந்தி ஆகியவையும், சில வீடுகளில் எலும்பு  கூடுகள், பேய் பொம்மைகள் போன்றவற்றையும் நிறுத்தி வைத்து  பயமூடுவார்கள்.   

கொசுறு செய்தி: நாங்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளில்  தற்போது பெரிய அளவில் இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஆதலால் இந்த வருடம் ஹாலோவீன் தினத்தன்று இந்திய குழந்தைகளின் ஆதிக்கம் நிறைய இருந்தது. வீட்டுக்கு வீடு கும்பலாக இந்திய குழந்தைகள் பல்வேறு வேடமிட்டு மிட்டாய்கள் வாங்க சென்றார்கள். என் குழந்தைகள் மட்டுமே சுமார் 7-8 பவுண்டுகள் சாக்லேட்டுகள் அள்ளிக்கொண்டு வந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆமா, நம்மூர்ல பேய் விரட்ட இன்னும் விளக்கமாறும், (போலி) சாமியார்கள் தான்  இருக்கிறதா? 

share on:facebook