Tuesday, November 29, 2011

ரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...


சென்ற பதிவில் ரஜினியின் ஒரு முகத்தை பார்த்தோம். இந்த பதிவில் அவரின் (எனக்கு தெரிந்த) இன்னொரு முகம்.

இது பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு. அடுத்த நாள் ரஜினியின் பிறந்த நாள். அதற்கு முதல் நாள் மாலை ரஜினியை சந்திக்க அவரின் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்றோம். குறிப்பிட்ட சில ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்று இருந்ததால் சகல  மரியாதைகளுடன் ரஜினி வீட்டின் வரவேற்பரையில் காத்திருந்தோம்.

மாலை நேரம் கடந்து இரவு ஆரம்பித்தது. அவ்வப்போது தலைமை மன்ற  நிர்வாகியோ வேறு எவரோ வந்து சார் இப்ப வந்துடுவார், டப்பின்  லேட்டாகிவிட்டது. சற்று பொறுங்கள். சார் வந்தவுடன் பார்த்து விட்டு போய்  விடலாம் என்று அவ்வப்போது நாங்கள் போரடித்து விடாமல் இருக்க  சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ரஜினியை நேரில் பார்க்க போகிறோம்,  அதுவும் கூட்டத்தோடு கோவிந்தாவாக இல்லாமல் குறிப்பிட்ட சிலரோடு  நெருக்கத்தில் பார்க்க போகிறோம் என்ற உணர்வில் மாலையாவது, இரவாவது  எதுவும் எங்களுக்கு சலிப்பாக தெரியவில்லை. இது எல்லாவற்றுக்கும் மேலாக  திருமதி. லதா ரஜினியே ஒரு முறை வந்து, சார் இப்ப வந்துடுவாங்க, கொஞ்சம்  பொறுத்துக்கோங்க என்று கூறிவிட்டு போனார்.

அநேகமாக நள்ளிரவுக்கு சில மணித்துளிகள் முன் ரஜினியின் கார், வீட்டின் முன் வந்து நின்றது. தலைவர் காரை விட்டு கீழே இறங்கி கிடு கிடுவென்று நடந்து வீட்டிற்க்குள் போகும் முன் வரவேற்பரையை எட்டி  பார்த்தவர், நாங்கள் கும்பலாக உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டு,  அவருக்கே உரித்தான ஸ்டைலுடன், பைவ் மினிட்ஸ் மா, இப்ப வந்துடுறன்  என்று உள்ளே சென்றவர், ஒரு பத்து பதினைந்து நிமிடம் கழித்து எங்களை  வந்து  சந்தித்தார்.

எங்களை காத்திருக்க வைத்ததிற்கு ஒரு முறைக்கு மேல்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டு, வழக்கமான விசாரிப்புகள் முடிந்த பின்  எங்களிடம்  இருந்து பிறந்த நாள் பரிசாக நாங்கள் எடுத்து சென்ற மாலை  மற்றும்  நினைவு கேடயத்தையும் பெற்று கொண்டார். தொடர்ந்து, "ஏற்கனவே  ரொம்ப லேட் ஆயுடுச்சு" நீங்கள் காலையில் மீண்டும் வந்தால் ரொம்ப  கூட்டம்  இருக்கும். அதனால் இப்பவே நாம் போட்டோ எடுத்து கொள்ளலாம்  என்று  அங்கிருந்த போடோ கிராபரை அழைத்து ஒவ்வொருடனும்  தனியாகவும், மொத்த குழுவுடனும் அலுக்காமல் போடோவுக்கு போஸ்  கொடுத்தார். இன்று அதையெல்லாம் ஒரு சாதாரண ரசிகனால் நினைத்து பார்க்க முடியுமா? ரஜினியை விடுங்கள். ஒரு சாதாரண முன்னணி நடிகரிடம் கூட இத்தகைய விருந்தோம்பலை நாம் எதிர்பார்க்க முடியாது.

இதையெல்லாம் இங்கு சொல்வதற்கு காரணம், ரஜினி ஒன்றும் அப்போது சாதாரண நடிகர் இல்லை. அன்றும் அவர் சூப்பர் ஸ்டார் தான். இருந்தும்  ரசிகர்களுக்கும் அவருக்கும் அன்று பெரிய இடைவெளி இல்லை. ஆனால் இன்று? அவருக்கு என்று ஒரு வட்டத்தை அவர் உருவாக்கி கொண்டார் அல்லது அவரை அறியாமல் ஒரு வட்டம் அவரை சுற்றி உருவாகி அவரை ரசிகர்களிடம் இருந்து பிரித்து வைக்கிறது. அந்த வட்டத்தினுள் வேறு யாரும் அல்ல, எல்லோரும் எனக்கு நண்பர்கள் என்று சொன்னாலும் அவரை சுற்றி உள்ள ஒரு சில சுய நல கூட்டம் தான். அவர்கள் ஒன்று  சினிமாவை சேர்ந்த பெரிய புள்ளிகள் அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியுனுடைய தலைவர்கள். இவற்றை எல்லாம் உடைத்து கொண்டு ரஜினி வெளியே வர வேண்டும் என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

அடுத்து ரஜினியும், ரஜினி ரசிகர் மன்றங்களும்...

share on:facebook

1 comment:

Madhavan Srinivasagopalan said...

// பைவ் மினிட்ஸ் மா, இப்ப வந்துடுறன் என்று உள்ளே சென்றவர், ஒரு பத்து பதினைந்து நிமிடம் கழித்து எங்களை வந்து சந்தித்தார். //

சீகிரம்தான் வந்துட்டாரு..
அவரு ரேஞ்சுக்கு ஐநூறு நிமிஷம் கழித்துத்தான வந்துருக்கணும்..
(அவரு 'ஒரு' தடவ சொன்னா, 'நூறு' ஆச்சே)

Post a Comment