Saturday, November 12, 2011

சான்டியாகோ ஏர் ஷோ - இரு வேறு அனுபவங்கள்

சான்டியாகோ மிராமார் ("Miramar") ஏர் ஷோ - வருடத்துக்கொருமுறை  அமெரிக்க கடற்படையின் புளூ ஏஞ்சல்ஸ் "Blue Angels" எனப்படும்   விமானப்பிரிவின் சாகச நிகழ்சிகள் திறந்த வெளியில் சான்டியாகோ விமானப்படை  மைதானத்தில் நடைபெறும். ஏற்கனவே செப்டம்பர் மாத இறுதியில் (பெரும்பாடுபட்டு வீட்டு எசமானிகளிடம் அனுமதி பெற்று)  நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து லாஸ் வேகாஸ் உல்லாச பயணம் செல்ல ரூம், கார் என எல்லாம் முன் பதிவு செய்திருந்தும், இந்த ஏர் ஷோ  நிகழ்ச்சிக்காக அனைத்தையும் ரத்து  செய்து விட்டு குடும்பத்துடன்  சான்டியாகோ சென்றோம்.

காலை 9.00 மணிக்கு துவங்கிய ஏர் ஷோ இரவு 9.00  மணிக்கு வான  வேடிக்கையுடன் முடிந்தது. விமான படை மைதானமாதலால், எங்கு பார்த்தாலும் அமெரிக்க ராணுவ வீரர்கள். பொதுவாகவே ராணுவ வீரர்கள் மிடுப்புடன் தான் இருப்பார்கள். அதிலும் அமெரிக்க வீரர்களை பற்றி கேக்கவே வேண்டாம். அப்படி ஒரு உடற்கட்டுடன் இருப்பார்கள். ஒரு பெரிய மைதானத்தில் ஒரு கோடு கூட இல்லாமல், ஆயிரக்கணக்கான  கார்களை அழகாக வரிசையாக ஒரே மாதிரி நிறுத்த அவர்களால் மட்டும் தான் சரியாக வழி காட்ட முடியும். 

சாண்டியாகோவில் பொதுவாக இதமான வெப்ப நிலை தான் இருக்கும் என்ற என் கணக்கு அன்று தவறாக போனது. எப்பவும் தலையில் அணியும் தொப்பியை எடுத்துக்கொண்டு போகும் நாங்கள் அன்று போகவில்லை. வெயில் சும்மா சுட்டெரித்தது. 90 டிகிரிக்கும் மேல். பரந்த மைதானத்தில் திறந்த வெளி காலரியில். ஹ்ம்ம்.. நாள் முழுக்க எசமானியிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருந்தேன்.

முதலில் சிறிய ரக கிளைடர் விமானங்களில் சாகச நிகழ்சிகளை நடத்தி காட்டினார்கள். நம்மூரில் பட்டம் விடுவது போல் விமானத்தை சர்வ சாதாரணமாக மேலும் கீழும் எழுப்பி நல்ல உச்சத்தில் சென்ற பின் வாலறுந்த குரங்கு போல் மேலிருந்து கீழே சுழன்று சுழன்று வேகமாக தரையை நோக்கி வந்த(விழுந்த) போது ஏதோ விமானம் கோளாறாகி  கீழே  விழுந்து நொறுங்க போவதாகவே தோன்றியது. ஒரு வாரத்திற்கு முன் நெவேடா மாகாணத்தில் இது போல் நடந்த விமான சாகச காட்சியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி 9 பேர் காலி. அந்த செய்தி வேறு மனதுக்குள் தோன்றி அடிக்கடி வயிற்றை கலக்கியது.

அதன் பிறகு வரிசையாக விமான சாகசங்கள் தான். மதியம், ஒரு மிக பெரிய போர் விமானத்தை அப்படியே தரையில் இருந்து நேராக (ரன்வேயில் ஓடாமல்) மேலே எழுப்பி அதன் பிறகு வலது, இடது, முன் மற்றும் பின் புறமாக ஏதோ ரிமோட் கன்ட்ரோலில் காரை ஓட்டுவது போல் செய்து காட்டினார்கள். அதே போல் லாண்டிங்கும் ரன்வேயில் ஓடாமல் நேராக 90 டிகிரியில் மேலிருந்து கீழே நேராக இறங்கி தரையை தொட்டது.இதனிடையே F-18 ரக போர் விமானம் ஒன்று அவ்வப்போது மின்னல் வேகத்தில் குறுக்கே சென்று வந்து கொண்டிருந்தது. சத்தம் கேட்டு தலையை  திருப்பி பார்க்கும் முன் அது அடுத்து பல மைல்கள்  கடந்து சென்றிருக்கும். அது எழுப்பும் சத்தம். அப்பா...காதை  கிழித்துக்கொண்டு அது செல்லும் வேகம். எதிரி நாட்டு படைகளுக்கு மேல் ஒரு தடவை சென்று  வந்தால்  போதும். அவர்களின் தைரியத்தையும் நம்பிக்கையையும் தகர்த்து  விடலாம். 

அமெரிக்கர்களிடம் உள்ள தொழில் நுட்பம், ராணுவ பலம் ஆகியவற்றை நினைத்தால், அவர்களை எதிர்த்து வெல்லுவது (ராணுவ பலத்தால்) என்பது   ஒரு கனவு தான். அதே சமயம், இவ்வளவு இருந்தும் அவர்களால் ஒரு போரில் வெற்றி அடைய முடியவில்லை என்றால் (வியட்நாம், ஈராக் 
போன்றவை) அதற்கு காரணம் அவர்களை எதிர்த்து போரிடும் மக்களின் உறுதியும், நம்பிக்கையும் தான்.

மதியம் அங்கேயே நாங்கள் கொண்டு சென்றிருந்த வெஜ் பிரியாணி மற்றும் தயிர் சாதத்தை சாப்பிட்டு விட்டு சிறிது ஓய்வு எடுத்தோம் (வீட்டு அம்மணி வெயிலின் உக்கிரத்தினாலும், தயிர் சாதம் சாப்பிட்ட மயக்கத்திலும் அப்படியே நிழலில் சாய்ந்து விட்டார்). சாகச நிகழ்சிகள்  தொடர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் (நானும் நண்பரும்) சுற்றி சுற்றி  வந்தோம். பல ஸ்டால்கள் அங்கு போடப்பட்டிருந்தது. வழக்கம் போல் உணவக ஸ்டால்களில் மக்கள் வரிசை கட்டி நின்றார்கள். என்ன ஒன்று, எல்லாம் யானை விலை குதிரை விலை. ஒரு பாட்டில் தண்ணீர் $ 3.50 அம்மாடியோவ். திரும்பி வரும் வழியில் கேஸ் போட (இங்கு  பெட்ரோலை அப்படிதான் கூறுவார்கள்) போன கடையில் இதே போல் 24  தண்ணீர் பாட்டில் வெறும் நான்கு டாலர் தான். அப்போ நீங்களே கணக்கு  போட்டுக்கொள்ளுங்கள்.

இன்னொன்றுக்கும் மக்கள் வரிசை கட்டி நின்றார்கள். அது என்னவாக இருக்கும் என்பதை உங்கள் guess க்கு விட்டு விடுகிறேன். முடிந்தால்  பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். 

share on:facebook

6 comments:

அம்பலத்தார் said...

உள்ளே போன தண்ணியை வெளியேற்றவும் வரிசையில் நின்றிருப்பார்கள்.

அகில் பூங்குன்றன் said...

portables :)

மோகன் குமார் said...

Very interesting. Hope u had a wonderful time.

ஆதி மனிதன் said...

அம்பலத்தார் said...

//உள்ளே போன தண்ணியை வெளியேற்றவும் வரிசையில் நின்றிருப்பார்கள். //

சரியாக சொன்னீர்கள் அம்பலத்தார். அதே தான். ஆனால் அதை படமெடுத்தால் நன்றாக இருக்காது என்பதால் எடுக்கவில்லை.

ஆதி மனிதன் said...

அகில் பூங்குன்றன் said...

//portables :) //

நீங்கள் போர்டபிள் டாய்லட்டை தான் கூறினீர்கள் என்றால் ஆம். நீங்களும் சரிதான்.

ஆதி மனிதன் said...

நன்றி மோகன்.

ஆனால் இதனுடைய இரண்டாம் அனுபவம் (சான்டியாகோ ஏர் ஷோ - இரு வேறு அனுபவங்கள் ) தான் மிகவும் திகிலானதும், சுவாரசியமானதும். அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

Post a Comment