Sunday, March 6, 2011

Hello Mr. President - ஒரு தமிழனின் புலம்பல்...


புரட்சித்தலைவி டாக்டர் அம்மா, முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர்  ஐயா,  கருப்பு எம்ஜியார் காப்டன் விஜயகாந்த். இப்படி அரசியல் தலைவர்களை மட்டுமல்ல.  நம் நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் விட்டு சென்றாலும் அவர்கள்  விட்டு சென்ற  ஆண்டான் அடிமைத்தனம் மட்டும் இன்றும் பல இடங்களில் நம்மை விட்டு விலகவில்லை. பள்ளியில்  ஆரம்பித்து ஒரு பதவியில் சேர்ந்த பிறகும் கூட அது எல்லா மட்டத்திலும் நம்மை விட்டு நீங்காமல்  நம்முடன்  நீக்கமற  நிறைத்திருக்கிறது.   

ஒரு கலெக்டருக்கு பின்னால் எதற்கு ஒரு டவாலி? அதுவும் நம் நாட்டிற்கு  சற்றும்  பொருத்தமிலாத ஒரு உடையை அணிந்துகொண்டு. ஜனநாயக  நாடு  என்றால் அனைவரும்  சமம். நம்மிடம் அது இருக்கிறதா? அமெரிக்காவின் அதிபரையே அதிபர் மாளிகையில் சுத்தம் செய்யும் ஒரு சாதாரணமான வேலைகாரர்  Hello Mr. President என கூப்பிட முடியும். அதே போல் அதிபராகவே  இருந்தாலும் அந்த வேலைக்காரரை தாண்டி செல்ல வேண்டுமானால்  'Excuse  me' என்று தான் கூறவேண்டும்.  சற்றே நினைத்து பாருங்கள்.   ஜெயலலிதாவையும், கருணாநிதியையும், Mr /Mrs. Cheif  Minister' என ஒரு அரசு உயர் அதிகாரியாவது அப்படி கூப்பிட இயலுமா? கேட்டால் மரியாதையை என்பார்கள். ஆனால் இந்த மரியாதைதான் நம்மை  பல விதத்திலும் அடிமையாக்குகிறது.  

காவல்துறை உங்கள் நண்பன் என்கிறார்கள். எங்காவது ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு சாதரணமான குடிமகன் சென்று மரியாதையை எதிர்  பார்க்க முடியுமா? அது என்னவென்று தெரியவில்லை.  இந்தியாவிலேயே மிகவும் சீரழிந்து போன ஒரு துறையான காவல்துறையில் தான் அவர்களை  எல்லோரும் "ஐயா" என கூற வேண்டும் என எதிர்பார்கிறார்கள்.  ஐயா என்றவுடனே அங்கு அடிமைத்தனம் வந்து விடுகிறது.

பள்ளிக்கூடம் சென்றால் அங்கு பெற்றோர்கள் அடிமைகளாக  பார்க்கப்படுகிறார்கள். நம் பிள்ளைகள் படிப்பதால் தான் அவர்களால்  பள்ளியே நடத்த முடிகிறது. ஆனால் ஒரு பள்ளியின் பிரின்சிபாலை பார்க்க சென்றால் நம்மை அடிமைகள் போல் நடத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நமக்கு அடிமைத்தனமும் எல்லாவற்றுக்கும்  பயப்படும்  குணமும் பள்ளியில் தான் ஆரம்பிக்கிறது. அங்கு ஆரம்பித்து நாம் வேலைக்கு செல்லும் போது அங்கும் அது தொடர்கிறது. ஒன்று நாம் பயந்து போகிறோம் அல்லது நம்மை பார்த்து நமக்கு கீழ் உள்ளவர்கள் பயப்பட வேண்டும் என எதிர்பார்கிறோம்.

முதலில் செய்யும் வேலைக்கு தகுந்தார் போல் மரியாதை தரும் குணம் நம்மிடமிருந்து விலகவேண்டும். வீட்டு வேலை செய்யும் கொத்தனாரை வாங்க போங்க என்போம். அதுவே சித்தாளை என்னய்யா வாய்யா போய்யா  என்போம். அமெரிக்காவில் எல்லா பள்ளிகளிலும் குழந்தைகள் கூட தங்கள் பள்ளியின் பிரின்சிபாலை எளிதில் நெருங்கவும் பேசவும் முடியும். Mr. Ms. என்று அவர்கள் எல்லோரையும் அவர்களின்  பெயரை சொல்லித்தான்  கூப்பிடுகிறார்கள். அதனால் யாரும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அதனால் அவர்களுக்கு தங்கள்  ஆசிரியர்களுடன் மேலும் பிடித்தம் ஏற்படுகிறது. தங்கள் தாய் தந்தையரை  பிடிக்கிறதோ இல்லையோ இங்குள்ள எல்லா பிள்ளைகளுக்கும்  தங்கள் ஆசிரியர்களை மிகவும் பிடிக்கும்.  

எல்லாவற்றுக்கும் மேலாக IT துறையில் எந்தவொரு நிலையில்/பதவியில்  இருந்தாலும் அவர்களை பெயரை சொல்லித்தான் கூப்பிடுகிறார்கள்.  இதனால்  இருவருக்கும் உள்ள இடைவெளி குறைந்து  நல்ல புரிதல்  உண்டாகிறது. முதன் முதலில் நான் என்னுடைய சீனியர் மேனஜரை சார்  என கூறியபோது அவர் சார் என்று கூப்பிடாதீர்கள். என்னை பெயர்  சொல்லியே  அழையுங்கள் அதுதான் எனக்கு மரியாதை என கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இன்று பெயர் சொல்லி  அழைப்பது என்பது எனக்கு பழகி போய்விட்டது. வீட்டு அம்மா தான் என்  நண்பர்களை எப்போதும் பெயர் சொல்லி அழைக்காமல் சார் சார் என்பார்கள். ஆனால் அது என் நண்பர்கள் எல்லோருக்கும் தர்மசங்கடமாக இருக்கும்.  ஒவ்வொரு தடவையும் அவர்களை சார் என்று சொல்லும் போது என் நண்பர்களின் முகத்தை  பார்க்கணுமே. காலம் தான்  எவ்வளவு மாறிவிட்டது?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது எல்லாவற்றுக்கும் மேலாக நம்மூரில் மருத்துவ துறையில் இருக்கும் டாக்டர்கள் அதிலும் மிக பெரிய புகழ் வாய்ந்த டாக்டர்கள். அப்பா, அவர்கள் செய்யும் அலும்பு இருக்கிறதே! அவர்களுக்கு என்னமோ பெரிய ஆர்மி ஜெனெரல் என்றுதான் நினைப்பு. ரூமுக்குள் நுழையும் போதே ஒரு பெரிய பட்டாளத்துடன் தான் நுழைவார்கள். அவர்களுடன் வரும் கைத்தடிகள் (பிராக்டிஸ் டாக்டர்கள்/செவிலியர்கள்) எல்லோரையும் விரட்டிக்கொண்டே வருவார்கள். அவர் பேஷண்டை பார்ப்பதும் தெரியாது போவதும் தெரியாது. நாம் தான் அவர்கள் அடிமைகள் போல் பின்னாடியே போய் எப்பொழுது அவர்கள் முகத்தை திருப்புவார்களோ அப்போது என்னவென்று கேட்டுக்கொள்ள வேண்டும். ஹ்ம்ம். இன்னும் எவ்வளவோ நாம் மாற வேண்டும். எப்படி?  எப்போது? 

புலம்பல்கள் தொடரும்...

படம் நன்றி: gurneyjourney.blogspot.com
  

share on:facebook

5 comments:

Anonymous said...

பிரித்தானியரிடமே இந்நாடு இருந்திருக்கலாம்.. உண்மையில் பிரித்தானியரின் ஆட்சயே நம் நாட்டின் பொற்காலமாக இருந்துள்ளது !!! சமூக மாற்றங்களையும், பல்வேறு வளர்ச்சிகளையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும், உருவாக்கினார்கள். 500 நாடுகளாக இருந்த இப்பகுதிகளை இணைத்து, சட்டம், நிர்வாகம் என அனைத்தும் தந்தவர்கள் அவர்கள்... ஆனால் விடுதலை வேண்டிப் போராடி அடிமையினும் அடிமை நிலையில் வந்துவிட்டோம் எனலாம். ................ இந்த நூறுகோடி மக்களில் விளையாட்டு வீரர்களும் உருவாகவில்லை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல .... உருப்பாடியன் அரசியல்த் தலைவரும் உருவாகவில்லை ............

bandhu said...

இதை நான் பல நாள் எண்ணி நொந்திருக்கிறேன். மிக அழகாக எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள். இந்த மன நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளியே வரவேண்டும். அதற்க்கு முதலில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதென்று எல்லோரும் உணர வேண்டும்.

ஆதி மனிதன் said...

@இக்பால் செல்வன்

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி இக்பால்.

உங்கள் கருத்தை ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் விடுதலை பெற்ற பின் நம்மை நாம் இன்னும் வளர்த்துக் கொண்டிருக்கவேண்டும் அல்லவா. அமெரிக்காவை போல். அதுவும் ஒரு காலத்தில் அடிமையாக இருந்த நாடு தானே.

ஆதி மனிதன் said...

@bandhu said...

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி bandhu.

//அதற்க்கு முதலில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதென்று எல்லோரும் உணர வேண்டும். //

உண்மை, உண்மை. இது என் மனதில் தோன்றாமல் போய்விட்டதே?

ஆதி மனிதன் said...

@Madhavan Srinivasagopalan said...
//Rightly said //

நன்றி மேடி.

Post a Comment