Tuesday, March 22, 2011

பீனிக்ஸ் தேசம் - வியக்க வைக்கும் ஜப்பானியர்கள்.


2001 செப்டம்பர் 11. யாரும் மறக்க முடியாத நாள். உலகில் தங்களை மிஞ்ச மீற யாரும் இல்லை என்ற மெதப்புடனும் தெம்புடனும் இருந்த அமெரிக்காவையே  அதன் வர்த்தக தலை நகரமாக விளங்கிய நியூயார்க் நகரத்தில் வானோக்கி  இருந்த   இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் விமானத்தால் மோதி  சிதைத்ததை யாராலும்   நியாயப்படுத்த முடியாது.  அதே சமயம் தீவிரவாத  தாக்குதல் நடந்தவுடன்  பேரிடர்  மேலாண்மை  என  சொல்லப்படுகின்ற  Disaster Management எல்லாம்  தெரிந்து அறிந்து புரிந்து வைத்திருந்தும், அமெரிக்க  அரசும் மக்களும் அதை எதிர் கொள்வதில் தோல்வியைத்தான் தழுவினார்கள்.

நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் அலறி அடித்துக்கொண்டு  ஓடியதும், தொலைபேசிகளும், கைபேசிகளும் செயல் இழந்து போய்,  ஆங்காங்கே மக்கள் எப்படி தங்கள் வீடுகளுக்கு திரும்பி போவது என  தெரியாமல் விழி பிதுங்கி நின்ற போது, அமெரிக்காவில் இப்படியா? அமெரிக்க மக்கள் இப்படியா என அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

இன்று அதை விட பேரழிவு, அதுவும் இயற்கையின் சீரழிவு, யாராலும்  கட்டுப்படுத்த முடியாத சுனாமி, பூகம்பம், அணு கசிவு எனவு நினைத்து  பார்க்க முடியாத அளவிற்கு ஜப்பான் மிகப் பெரும் இயற்க்கை பேரிடரை  சந்தித்துக்  கொண்டு இருக்கிறது. ஆனால் ஜப்பானிய மக்கள் என்றும்  போல் இன்றும் மனம்  தளராமல், அரண்டு போகாமல் எல்லாவற்றையும்  எதிர் கொண்டு வருகிறார்கள்.

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்ட போது அங்கிருந்த லண்டன்  பத்திரிக்கையாளர் ஒருவர் தனது அனுபவத்தை இப்படி கூறுகிறார். பூகம்பம்  வந்தபோது நான் ஒரு ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டு இருந்தேன். அப்போது பிளாட்பாரம் நகர்வதை போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. சரி, ரெயில் வேகமாக நகர்ந்து செல்வது தான் அப்படி ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியதோ என நினைத்துக் கொண்டு நான் சென்று கொண்டு இருந்த போதே, அருகே தெரிந்த தொலைக்கட்சியில் பூகம்பம் ஏற்பட்டிருப்பதையும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லுமாறும் அறிவிப்பு வந்தது கொண்டிருந்தது.

எனக்கு உடனே  படபடப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் என்னை  சுற்றி உள்ள எல்லோரும்  அமைதியாக அதே சமயத்தில்  வேகமாக  பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.  எங்கும் ஒரு கூச்சலோ மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுவதையோ என்னால் காண முடியவில்லை. ஏதோ பள்ளி குழந்தைகள் ஆசிரியர் கூறினால் எப்படி தங்கள் வகுப்பறைகளுக்கு அமைதியாக வேகமாக  செல்வார்களோ அதே ஒழுங்குடன் அனைவரையும் பார்க்க  முடிந்தது. என கூறியுள்ளார்.

மேலும் வானை தொடும் கட்டடங்கள் ஜெல்லியை போல் ஆடியபோது கூட  அதை  பார்த்து யாரும் மிரளவில்லை. ஒன்று அவர்கள் கட்டட கலையின் மீது  அவர்களுக்கு உள்ள நம்பிக்கை(நம்மூரில் மழைக்கு ஒதுங்கினால் கூட  கட்டடம் ஸ்ட்ராங்கா என பார்த்துவிட்டு தான் ஒதுங்க வேண்டும்).  இன்னொன்று அவர்கள் அந்த  அளவிற்கு தங்களை தயார்  படுத்திக்கொண்டுள்ளார்கள். நண்பர் ஒருவர் குறிப்பிட்டதைப்போல் சுனாமியின் போது  ஆங்காங்கு  பொருட்கள் கிடந்தபோதும் தெருக்கள் வெறிச்சோடி கிடந்த  போதும் ஒரு திருட்டு கொள்ளை அங்கு நடக்கவில்லை.
நம்மூரில் நாலு நாள் மழைக்கே பள்ளி அலுவலகங்களுக்கு விடுமுறை  விட்டு விடுவார்கள். ஜப்பானில் நில நடுக்கத்திற்கு அடுத்த நாளே டொயோடோ   கம்பெனி  தங்கள் தொழில் உற்பத்தியை தொடங்கி விட்டார்கள்.  ஜப்பானியர்களுக்கு தங்கள் நாட்டின் மீதும் தங்கள் மீதும் அதீத நம்பிக்கை. அணு கசிவின் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அரசு  அறிவுறித்தியது.  ஒருவரும் ஏன் என்றோ முடியாது என்றோ  கூறவில்லை. அனைவரும்  அப்படியே வீட்டுக்குள் முடங்கிப்  போனார்கள்.

பிற நாடுகளில் பேரழிவுகள் ஏற்பட்ட போது உதவிக்காக எல்லோரிடமும்  கை நீட்டினார்கள்(அமெரிக்க உட்பட). ஆனால் இன்றுவரை ஜப்பான் பெரிதாக  எந்த உதவியையும் உலக நாடுகளில் இருந்து கேட்கவில்லை.  இதை  அமெரிக்காவில் உள்ள ரெட் கிராஸ் தெரிவிக்கிறது.  எங்களுக்கு என்ன  மாதிரியான உதவி ஜப்பானுக்கு தேவைபடுகிறது என்றே  தெரியவில்லை.  ஜப்பான்  ஒரு வளமிக்க நாடு. அது குறிப்பிட்டு  ஏதாவது  உதவி கேட்டால் தான் நாங்கள் செய்ய முடியும் என  அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது ஒரே நேரத்தில் ஏற்பட்ட சுனாமி, நில நடுக்கம் மிக  பெரிய அளவிலான அணு கசிவு ஆகிய சோதனைகளில் இருந்து ஜப்பான் வழக்கம் போல் மீண்டு வந்து விட்டால் அவர்களை வெல்ல  உலகத்தில் வேறு யாரும் கிடையாது.

ஜப்பானியர்கள் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள். இந்த பேரழிவில் இருந்தும் அவர்கள் மீண்டும் மீண்டு வருவார்கள் என நம்புவோம் ஆக.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஜப்பான் செல்ல எனக்கு வாய்ப்பு வந்தது.  குறுகிய  கால பயணம் என்பதாலும், அங்கு அடிக்கடி ஏற்படும் நில  நடுக்கம், ஆங்கில  கல்வி முறை போதனை அதிகம் இல்லாதது  போன்ற  காரணங்களால் அதை தவிர்த்து விட்டேன். நானும் ஒரு சராசரி இந்தியன் தானே!   

ஆமாம் Seismologist என்றால் யார் என்று தெரியுமா உங்களுக்கு? Google  பண்ணாமல்  முடிந்தால் பின்னூட்டத்தில் போடுங்கள். நன்றி.

share on:facebook

8 comments:

பாட்டு ரசிகன் said...

முதல் மழை

CS. Mohan Kumar said...

எனக்கும் ஜப்பானியர்கள் குறித்து இதே உணர்வு தான்.

நீங்கள் ஜப்பான் செல்லாதது சரி என தோணலை. எனக்கு வாய்ப்பு வந்தால் நிச்சயம் சென்றிருப்பேன்.

ஆதி மனிதன் said...

நன்றி மோகன்.

எனக்கும் ஜப்பான் செல்ல ஆசைதான். குறிப்பாக அவர்களின் தொழில்நுட்பம் வேலையின் மீது அவர்கள் காட்டும் அசாத்திய ஈடுபாடு ஆகியவற்றை நேரில் காண ஆசை. அனால் குறுகிய கால பயணத்தில் நிறைய இடையூறுகள் ஏற்படும். மேலும் குழந்தைகள் கல்வி ஒரு மிக பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஜப்பானில் பெரும்பாலும் ஜப்பானிய மொழி பள்ளிகள் தான் உண்டு. ஆங்கில வழி கல்வி பயங்கர காஸ்ட்லி.

ஆதி மனிதன் said...

முதல் வருகைக்கு நன்றி முதல் மழை.

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்,மிக மனதிடம் படைத்தவர்களாய் இருக்கிறார்கள்.இயற்கையினை எதிர்த்து ஏதும் செய்ய இயலாது தவித்து கொண்டு உள்ள அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Madhavan Srinivasagopalan said...

//ஆமாம் Seismologist என்றால் யார் என்று தெரியுமா உங்களுக்கு? Google பண்ணாமல் முடிந்தால் பின்னூட்டத்தில் போடுங்கள். நன்றி.
//

பூகம்பம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்.
Without googling, I replied.

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அமுதா.

ஆதி மனிதன் said...

//பூகம்பம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்.
Without googling, I replied. //

சூப்பர் மாதவன்.

Post a Comment