அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பெருமளவில் மெக்சிகர்கள் வசிக்கிறார்கள். அதற்கு காரணம் கலிபோர்னியா மெக்சிகோ நாட்டின் எல்லையில் உள்ளது. ஒரு காலத்தில் பெரும்பாலான கலிபோர்னியா மாகாணம் மெக்சிகோவிடம் இருந்ததாகவும் பிறகு அமெரிக்கா அதை இணைத்துக்கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.
எப்படி மும்பை டெல்லி போன்ற நகரங்களில் பிற வட மாநிலத்தவர்கள் கூலி வேலை போன்ற குறைந்த வருவாய் உள்ள வேளைகளில் ஈடுபடுகிறார்களோ அது போல் கலிபோர்னியாவிலும் பெரும்பாலான மெக்சிகர்கள் சாதாரண வேலைகளை செய்துதான் தங்கள் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். குறிப்பாக தென் கலிபோர்னியாவில் எங்கு பார்த்தாலும் மெக்சிகர்களை காணலாம்.
இதில் பெரும்பாலானவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியிருப்பவர்கள். அதாவது அமெரிக்க அரசுக்கு தெரிந்தே. இதை அமெரிக்க அரசும் கண்டும் காணாமல் விட்டு விடுகிறது. எல்லாம் சுயநலம் தான். இல்லையென்றால் அவர்களுக்கு சாதாரண அதே சமயம் அமெரிக்கர்கள் செய்ய விரும்பாத வேலைகளை செய்ய ஆள் கிடைக்காது. உதாரணமாக ரோடு போடுவது, புல் வெட்டுவது போன்ற வேலைகள்.
இப்படி சட்ட விரோதமாக குடியேறியவர்களிடம் எந்தவொரு அடையாள அட்டையோ குடியுரிமையோ இல்லாத காரணத்தால் இவர்கள் வாகன ஓட்டுரிமை போன்றவை எடுக்க முடியாது. அமெரிக்காவில் கார் இல்லாமல் எந்த ஒரு வேலைக்கும் செல்லவோ வாழ்க்கையை நடத்துவதோ முடியாது. ஆதலால் வேறு வழியே இல்லாமல் இவர்கள் வாகன ஓட்டுரிமை இல்லாமல் தான் தங்கள் வாகனங்களில் செல்வார்கள். அமெரிக்க சட்டப்படி இவ்வாறு ஓட்டுனர் உரிமை இல்லாமல் வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனத்தை மீண்டும் மீட்க பல நூறு அல்லது ஆயிரம் டாலர்களுக்கு மேல் செலவு செய்ய நேரிடும். இதில் அதிகம் பாதிக்கப்படுவது மெசிகர்கள்தான். இவர்களது பல நாள் கோரிக்கை, இவ்வாறு வாகன சோதனையின் போது ஓட்டுனர் உரிமை இல்லை என்றால் அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யாமல் வெறும் அபராதம் மட்டும் போடவேண்டும் என்பது தான். இப்போது அவர்களின் கோரிக்கையை லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் காவல் ஆணையர் நிறைவேற்றி உள்ளார்.
இது பற்றி லாஸ் ஏஞ்சலிஸ் நகர காவல் ஆணையர் தெரிவிக்கையில், லத்தீன் அமெரிக்க மக்கள் ஓட்டுனர் உரிமை பெறமுடியாத சூழ் நிலையால்தான் இவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஏற்கனவே கஷ்ட ஜீவனம் நடத்தும் அவர்கள், பறிமுதல் செய்யப்படும் காரை மீட்க மேலும் நூற்றுக்கணக்கில் செலவு செய்ய நேரிடுவது எங்களுக்கு புரிகிறது. ஆதலால் நகர வாகன சோதனையின் போது ஓட்டுனர் உரிமை இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக இல்லாத பட்சத்திலும் குடிபோதையில் வாகனம் ஒட்டாத பட்சத்திலும் அவர்களுக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது மெக்சிகர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
அதே சமயத்தில் இந்த விதிமுறை தளர்வு நகர வாகன பரிசோதனை மற்றும் குடியுரிமை இல்லாத மெக்சிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் குடியுரிமை/ சட்டப்படி வசிக்கும் எவருக்கும் இந்த தளர்வு பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
என்னை பொறுத்தவரையில் இப்படித்தான் சட்டத்தை அமல் படுத்தவேண்டும். மக்களுக்காக இயற்றப்பட்டது தான் சட்டமே ஒழியே சட்டத்திற்காக மக்கள் இல்லை. நம்மூரில் பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் டிக்கெட்டோ பாசோ இல்லையென்றால் பஸ்ஸிலிருந்து இறக்கிவிடுவதும், வயதான பெரியவர்களை புகைவண்டி, பேருந்துகளில் இருந்து முறையான டிக்கெட் இல்லை, பாஸ் இல்லை, சில்லறை இல்லையென இறக்கிவிடுவதும் கொடூரம்.
நல்லது எங்கு நடந்தாலும் ஏற்றுக்கொள்ளலாமே, பின்பற்றலாமே!
share on:facebook
4 comments:
// போது ஓட்டுனர் உரிமை இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக இல்லாத பட்சத்திலும் குடிபோதையில் வாகனம் ஒட்டாத பட்சத்திலும் அவர்களுக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என அறிவித்துள்ளார் //
அப்போ அடிக்கடி(மாட்டும் பொது) அவங்க "அபராதம்" தரணுமே.
இது நிரந்தர தீர்வு இல்லையே ?
நல்ல விஷயம் தான். இதன் அடுத்த படியாக அவர்களுக்கு டிரைவிங் லைசன்ஸ்சும் கிடைத்தால் நன்றாயிருக்கும்
வருகைக்கு நன்றி மோகன்.
//நல்ல விஷயம் தான். இதன் அடுத்த படியாக அவர்களுக்கு டிரைவிங் லைசன்ஸ்சும் கிடைத்தால் நன்றாயிருக்கும் //
நான் கூறியிருந்தது போல் அமெரிக்காவில் ஓட்டுனர் உரிமை எடுப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. ஓட்டுனர் உரிமை என்பது இங்கு நம்மூர் ரேஷன் கார்டு போல் மதிப்பு வாய்ந்தது, அடையாள அட்டை போன்றது. அவ்வளவு சீக்கிரம் இவர்களுக்கு ஓட்டுனர் உரிமையை கொடுத்து விட மாட்டார்கள்.
நன்றி மேடி.
//அப்போ அடிக்கடி(மாட்டும் பொது) அவங்க "அபராதம்" தரணுமே.
இது நிரந்தர தீர்வு இல்லையே ? //
வேறு வழியில்லை. அவர்களை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இங்கு ஓட்ட அனுமதிப்பதே பெரிய விஷயம்.
Post a Comment