Thursday, March 3, 2011

சோத்துக்கட்சி - என் அப்பாவின் நினைவாக.
இதோ ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது. ஓரளவு விபரம் தெரிய ஆரம்பித்ததிலிருந்தே எனக்கு அரசியலில் நாட்டம் உண்டு. அது இன்றும் தொடருகிறது. கிரிகெட் மேட்ச் பார்க்க மாட்டேன். ஆனால் தேர்தல்  முடிவுகளை  விடிய விடிய கண் விழித்து பார்த்ததுண்டு. இதில் எனக்கு ஒன்றும்  வெக்கமில்லை. கிரிகெட்டை  விட  நம் நாட்டில் அரசியல் ஆர்வம் தான் இளைஞ்சர்களிடம் அதிகம் இருக்க வேண்டும்  என்பது என் நிலைப்பாடு. யாரோ ஜெயிக்கிறார்கள்  நமக்கென்ன  என்று அரசியல்வாதிகளை பார்த்து கூறினால்,  கிரிகெட் வீரர்கள்  மட்டும் ஜெயித்து நாட்டுக்கு என்ன செய்கிறார்கள்  என்பதே என்  தனிப்பட்ட கருத்து. சரி அதை விடுவோம்.

நான் சிறு வயதில் என் அப்பாவிடம் நீங்கள் எந்த  கட்சி   என்றால்  'நாமலாம் சோத்து கட்சிடா' என்பார். இருந்தாலும் நாங்கள் நிறைய  அரசியல் பேசுவோம். ஆனால் என்றுமே என் அப்பாவும்   அம்மாவும் அவர்கள் எந்த கட்சிக்கு வோட்டு போட்டார்கள் என  கூறியதே இல்லை. கேட்டால் நான் கவர்மென்ட் செர்வன்ட். வெளியே  சொல்லக்கூடாது என்பார்கள். இப்போலாம் கவர்மென்ட் அபீசுக்குள்ளேயே  ஆளும் கட்சியினர் கட்சி நடத்துகிறார்கள்.

ஒரு இருபது வருடங்களுக்கு முன் இருந்த அரசியல்  மற்றும்  தேர்தல்களை ஒப்பிட்டு பார்த்தால் இன்று நிறைய மாற்றங்கள்.  சில நல்லவை. சில கேட்டவை. 

இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியும், இந்தியாவையே மாற்ற முடியும் என செய்து காட்டியவர்  முன்னாள் தலைமை தேர்தல் கமிஷினர் திரு. T  N சேஷன்  அவர்கள். 

முன்பெல்லாம் எந்த ஒரு அரசியல்  கட்சியும்  இரவு   பத்து  மணிக்கு முன்பு பொது கூட்டங்களை ஆரம்பித்ததாக சரித்திரமில்லை.  ஆனால் இன்று இரவு ஒன்பது மணி  ஐபத்தொன்பது   நிமிடமானால் முதல்வரோ பிரதமரோ யாராக இருந்தாலும் சரி மைக்கோடு சேர்த்து வாயையும் மூடிக் கொள்கிறார்கள்.  தேர்தல் கமிஷன் முன் அவ்வளவு பயம். வோட்டு போட்ட  மக்களுக்கு  பயப்படாதவர்கள் ஒரு தேர்தல் அதிகாரிக்கு  பயப்பிடுகிறார்கள்.  அதே போல் தேர்தல் வந்தால் ஒரு  வீட்டின் சுவரு கூட  மிஞ்சாது அப்போது. எல்லாவற்றிலும் கை  சின்னமோ,  இரட்டை  இல்லையோ சூரியனோ ஒளிர்ந்து  கொண்டிருக்கும். இன்று  சிறிதாக கிறுக்கினால் கூட போன் செய்து  வேட்பாளர்களிடம்  கூறினால் ஓடி வந்து வெள்ளை  அடித்து கொடுக்கிறார்கள். 

எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது.  இந்த பயம்  எல்லாவற்றையும் ஒரே ஒரு தனி மனிதர்  T  N  சேஷன் ஏற்படுத்தினார்.  அவரிடம் எப்படி உங்களால் இவ்வளவு  மாற்றங்களை கொண்டு வர முடிந்தது என ஒரு முறை  கேட்டபோது, நான் எதுவும்  புதுசாக செய்யவில்லை. எல்லாம் ஏற்கனவே  இருந்த   விதிகள்தான். அதை முதல் முறையாக  நடைமுறை படுத்தினேன். அவ்வளவுதான் என  பதிலளித்தார்.        

கடந்த சில வருடங்களாக வோட்டுக்கு பணம் என்பது ஒரு கட்டாயமாக ஆக்கப்பட்டு விட்டது. என் அம்மாவும் அப்பாவும் வோட்டளிக்க செல்ல பல கட்சிகளிலிருந்தும் காரில் வந்து அழைப்பார்கள். அப்போதெல்லாம் நான் காரில் செல்ல வேண்டும் என்ற ஆசையில் அம்மா கார் வந்துடுச்சு சீக்கிரம் வாங்க வாங்க என கூப்பிடுவேன். ஆனால் ஒவ்வொரு முறையும் என் அம்மா காரை  திருப்பி அனுப்பி விடுவார். வோட்டளிப்பது நம் கடமை. அதை  நாம் தான் செய்ய வேண்டும் என வேகாத வெயிலில் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து சென்று தான் வோட்டளிப்பார். அதுமட்டுமில்லாமல் நான் ஒரு அரசு ஊழியை. கட்சி கொடி கட்டிய காரில் எல்லாம் நான் போக மாட்டேன் என்பார். ஆனால் இன்று கார் மட்டுமா வருகிறது. வாக்காளர்கள் கேட்டால் குவாட்டர் முதல் கோழி பிரியாணி முதல் கவரில் பணத்துடன் எல்லாமே கிடைக்கிறது.

பதவி போய் விட்டது என தெரிந்தவுடன் அரசு காரிலிருந்து  இறங்கி அரசு பஸ் பிடித்து போன முன்னால் அமைச்சர் ஐயா   கக்கன், தான் பதவியில் இருந்த போது அரசு ஒதுக்கிய வீட்டிற்கு  வந்த அவரின் சம்பந்தியிடம் நீங்கள் உறவினராக வந்திருக்கிறீர்கள்  என்றால் இங்கே நீங்கள் தங்க முடியாது. என் கிராமத்திற்கு வரும்  போது சொல்லிவிடுகிறேன். அங்கு வாருங்கள் என திருப்பி அனுப்பியவர். 

இன்று மகன் மகள் மச்சான் பேரன் பேத்தி குடும்பம் அல்லது தோழி தோழியின் கணவர், அக்காள், அக்காள் மகன் என  குடும்பமும் சுற்றமுமே கட்சிகளாகிபோனது. அதனால் நாம் என்றுமே சோற்று கட்சிதான். காசு வாங்காமல் முடிந்த போது வோட்டு போடும் சொந்தகட்சி.

படம் நன்றி: greenearthafrica.com    

share on:facebook

3 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

படிச்சிட்டு வற்றேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மைதான் அர சியல் அது நமக்கல்ல என்று எல்லோரும் ஒதுங்கிவிடுவதால் தான் அரசியல் வாதிகள் தன் இஷ்டத்திற்கு ஆடுகிறார்கள்..

உண்மையிலே T N சேஷன பாரட்டப்பட வேண்டியவர்தான்..

அருமையான பதிவு..

ஆனா நானும் சோத்து கட்சிதாங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

இதையும் படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_04.html

Post a Comment