Thursday, March 10, 2011

கரையை கடக்குமா புரட்சிப்புயல்?இந்தியாவில் 'பாராளுமன்ற புலி' என்று வர்ணிக்கப்பட்டவர்  வைக்கோ அவர்கள். தொடர்ந்து 18 ஆண்டுகள் ராஜிய சபா  எம். பி. யாக  தி. மு. க. வின் சார்பில் பதவி வகித்தவர். தி. மு. க. விலேயே  வேறு யாரும் இவ்வளவு ஆண்டுகள் எம். பி. யாக இருந்ததாக  தெரியவில்லை. 

அப்படிப்பட்ட வைக்கோ நடிகர் ராமராஜனால் திருச்செந்தூர் பாராளுமன்ற  தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட போது, 'வைகோவை தோற்கடித்த தமிழா, உனக்கு மானம் ஒரு கேடா?' - என்று தி. மு. க. சார்பில் ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். உண்மையை சொல்லப்போனால் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் கூட வைக்கோ தோத்து போனதற்காக வருந்தினார்கள்.

வைக்கோவிற்க்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் தி. மு. க. வில் இருந்தபோதும் சரி, தனியாக கட்சி ஆரம்பித்த பிறகும் சரி. ஆனால், என்று அவர் தன் மீது கொலை பலி சுமத்தியதால் வெளியே வந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைத்தாரோ அன்றே அவரின் தனிமனித செல்வாக்கு குறையத்தொடங்கி விட்டது. பிறகு அடுத்த தேர்தலிலேயே தன்னை கொடும் சட்டத்தின் மூலம் மாதக்கணக்கில் சிறையில் அடைத்த  ஜெயலலிதாவிடமே கூட்டணி வைத்த பிறகு அவர் மீது இருந்த மரியாதையும் மற்றவர்களிடம் குறையத்தொடங்கிவிட்டது.

இன்று முகம் தெரியாத கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகளிடம் கூட்டணி வைத்துக்கொண்டு முதல் சுற்றிலேயே ஓரிரு சீட்டுகளை வாங்கிக்கொண்டு தேர்தல் களம் காண களம் இறங்கி விட்டது. ஆனால் புரட்சிப்புயல் வைக்கோ அவர்கள் 'காணவில்லை' விளம்பரம் தரும் அளவிற்கு அரசியலில் எங்கு இருக்கிறார் என்றே தெரியாத அளவிற்கு மங்கிப் போய்விட்டார். ஒரு காலத்தில் தி. மு. க. வின் தலைமை தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் வைக்கோ. வாக்குகள் என்னும் இடத்தில் வைக்கோ இருந்தால் அது ஆளும் முதல்வர் தொகுதியாய் இருந்தால் கூட எண்ணிக்கை நிலவரம் வெளியே போக முடியாது. ஒரு முறை எம்.ஜி.யார் முதல்வராக இருந்த போது ஒரு முக்கிய வேட்பாளர் போட்டியிட்ட வாக்குச் சாவடியிலிருந்து முன்னணி நிலவரம் அங்கிருந்த மாவட்ட  கலெக்டர் மூலம் எம். ஜி. யாருக்கு போய்கொண்டிருந்தது. இது தெரிந்த  வைக்கோ அவர்கள் கலெக்டரிடம் வாக்கு வாதம் செய்திருக்கிறார். ஆனால்  கலெக்டரோ ஒரு மாநில முதல்வர் கூப்பிட்டு தகவல் கேட்டால் அதை தர  வேண்டியது என் கடமை என கூறியுள்ளார். அதற்க்கு வைக்கோ அவர்கள், அப்படி என்றால் என்னுடைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள். அவரும் என்னிடம் முன்னணி நிலவரம்  பற்றி கேட்கிறார். நீங்கள்  எம்.ஜி.யாருக்கு தகவல் கொடுத்தால் நானும் கலைஞருக்கு தகவல்  கொடுப்பேன் என்று வாதிட்டு கடைசி வரை எம்.ஜி.யாருக்கு தகவல்  போவதை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

தி.மு.க. வில் அதிக காலம் எம்.பி. யாக இருந்த பெருமைக்கு உரியவர் வைக்கோ. தொடர்ந்து களத்தில் தோல்வியை தழுவி வந்தாலும் தி.மு.க. வில் இருந்தவரை அவருக்கு உரிய மரியாதையும் பதவியும் கட்சியிலும்  வெளியிலும் (பாராளுமன்றத்திலும்) கிடைத்து தான் வந்தது. 

அப்பேற்பட்டவர் இன்று போயஸ் தோட்ட வாசல் கதவு தனக்கு திறக்குமா  என தவம் கிடக்க வேண்டியதாகிவிட்டது. தேர்தலுக்கு தேர்தல் அடுத்த கூட்டணிக்கு தாவுவது சில கட்சிகளுக்கும்  அதன் தலைவர்களுக்கும்  ஏற்றதாகவும், லாபமாகவும் இருக்கலாம். ஆனால் வைக்கோ  போன்றவர்களின் கட்சி தொண்டர்களும் அவருக்கு வாக்களிக்கும்  பொதுமக்களும்  இதை ஏற்று கொள்வதில்லை போலும். இல்லை என்றால்  எதுவோ தேய்ந்து என்னமோ  ஆனா கதையாக அவரின் கட்சி இப்படி  ஆகியிருக்க வேண்டியதில்லை. 

எனக்கு தெரிந்து ஒருவரை கட்சியிலிருந்து நீக்கியதற்காக ஒரு சிலர்  தீக்குளித்தது (தீக்குளிப்பை நான் ஆதரிப்பவனில்லை-எந்த ஒரு காரணத்திற்கும்) வைக்கோவை தி. மு. க. விலிருந்து நீக்கிய  போதுதான். இன்னும் சொல்லப் போனால் இப்படி பட்ட  சம்பவங்களினால் மட்டுமே  ம.தி.மு.க. மலர்ந்தது, வளர்ந்தது.  ஆனால் அவர்கள் தீக்குளிக்க  காரணமானவர்கள் கட்சியுடன்தான்  வைக்கோ கடைசியில் கூட்டணி வைத்தார். 

எங்கோ உள்ள தமிழர்கள் சுய மரியாதை, கவுரவத்திற்காக துப்பாக்கி தூக்கவேண்டும் என முழங்கி விட்டு தன்னை அதே காரணத்திற்க்காக சிறையிலிட்ட  ஜெயலலிதாவுடன் எப்படி கூட்டணி அமைத்தார் என தெரியவில்லை. இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாக போய்விட்ட ம. தி. மு. க. வும் வைக்கோவும் மீண்டும் எழுந்து வருவது என்பது மிகவும் சிரமமமே. 

வைகோ அவர்களே! உங்களை யாரும் தோற்கடிக்க வேண்டியதில்லை. அதை உங்களுக்கு நீங்களே செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.

ஹ்ம்ம். இந்த முறையாவது புயல் கரையை கடக்கிறதா என பார்ப்போம்.


share on:facebook

4 comments:

யாசவி said...

உண்மையில் வருத்தமாகத்தானிருக்கிறது.

அவர் செய்த தவறான முடிவுகள் எங்கேயோ கொண்டுவந்து விட்டிருக்கிறது ம்ஹூம்

Anonymous said...

"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

ஆதி மனிதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாசவி.

மோகன் குமார் said...

மிக சரியான அலசல். அரசியலை உன்னிப்பாக தான் பார்த்து வருகிறீர்கள் போல

Post a Comment