Monday, September 12, 2011

கவாஸ்கர் சதமும் ரேடியோ மனிதர்களும் - நினைவலைகள்


"அதோ பந்து மேல் நோக்கி வேகமாக பறந்து வருகிறது...", "கவாஸ்கர் மட்டையை தூக்கிக்கொண்டு ஓரடி முன்னே வந்து..., இதோ வேகமாக அடிக்கப்பட்ட பந்து பவுண்டரியை தாண்டி போய் விழுகிறது"

சிறுவயதாக இருக்கும் போது இப்படிதான் சிறிய வானொலிப்பொட்டி  முன் அமர்ந்து கொண்டு தமிழ் கிரிக்கெட் கமெண்ட்ரிக்களை நண்பர்களுடன்  கேட்டு  ரசித்ததுண்டு. அப்போதெல்லாம் இப்போது போல் வருடம் முழுவதும்  போட்டிகள்  இருக்காது. அவ்வப்போது சென்னையில் போட்டிகள்   நடக்கும் போது இவ்வாறு தமிழில் வர்ணனை இருக்கும். அதை மட்டும் தான் கேட்டு ரசித்து, கவாஸ்கர் சிக்ஸர் அடிக்கும் போதும், அவ்வப்போது செஞ்சுரிகள் விழும் போதும் கைதட்டி கொண்டாடியதுண்டு.

அப்போது எங்கள் தெருவில் ஒருவர் வீட்டில் மட்டும் தான் ரேடியோ இருந்தது. அந்த சிறிய ரேடியோவில் கீழே வரிசையாக நாலைந்து நபர்கள் ஏதோ இசை உபகரணங்களை வாசிப்பது போல் சிறிய சிறிய ஸ்டிக்கர்கள்  ஒட்டப்பட்டிருக்கும். நான்  சிறு வயதாக இருக்கும் போது ரேடியோவிலிருந்து  வரும் பாட்டும் இசையும் ஸ்டிக்கரில் தெரியும் மனிதர்கள் தான் (ரேடியோவின்) உள்ளே இருந்து வாசிக்கிறார்கள் என நம்பியதுண்டு(நான் ரொம்ப அப்பிரானியாக்கும்). அதே போல் திரைப்படங்களில் வரும் காட்சிகள் அனைத்தும் திரைக்கு உள்ளே இருந்து கொண்டு நடிக்கும் நடிகர் நடிகைகளின் காட்சிதான் வெளியே திரையில்  தெரிகிறது எனவும் நான் நம்பியதுண்டு(இப்ப தெரியுதா என் பெயர் ஏன் ஆதிமனிதன் என்று!?) அல்லது யாரோ எனக்கு தவறாக சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் போலும்.

அதன் பிறகு பள்ளி கல்வி வரை கிரிக்கெட் விளையாடியதுண்டு. பிறகு  கிரிக்கெட் என்றால் பிடிக்காமல் மட்டும் போகவில்லை. அதன் மேல் ஒரு வெறுப்பே வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம், அப்போதெல்லாம் கிரிக்கெட் பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆங்கில புலமையை காட்டுவதற்காக ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். அது ஒரு வெறுப்பு (இத்தனைக்கும் நான் ஆங்கில வழி கல்வி பயின்றவன்). அப்புறம் வருடம் முழுவதும் விளையாண்டால் அதை எப்படி ரசிக்க முடியும். பிரியாணி என்பதற்காக அதையே நாள் முழுவதும் உன்ன முடியுமா?

ரேடியோ பற்றி சொல்லும்போது இதையும் சொல்ல வேண்டும். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. ஓரளவு வசதி இருந்தும் ஏனோ எங்கள் பெற்றோர்கள் சற்று வறட்சியை காட்டியே வளர்த்தார்கள் (அதனால் தான் நாங்கள் எல்லாம் உருப்புட்டோம் என்பது வேறு கதை). அவ்வப்போது எங்கள் தந்தை ரேடியோ வாங்க போகலாம் என்று தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே இருந்த(அப்போது இருந்த ஒரே எலெக்ட்ராணிக்ஸ்) கடைக்கு அழைத்து  செல்வார். நாங்கள் ரேடியோ வாங்க வந்தவர்கள் ஆதலால் எல்லா ரேடியோவையும் எடுத்து ஆன் செய்து, திருகி, பாட்டு கேட்டு கடைசியில் வாங்காமலேயே திரும்பி வந்து விடுவோம். அந்த சந்தோசத்தை இப்போது நினைத்தாலும் பசுமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. கடைசியாக எங்கள் வீட்டிலும் ஒரு ரேடியோவை வாங்கினோம்.

இப்போது, பத்து வயது கூட நிரம்பாத என் இளைய மகள் தனக்கு ஐ-பாடு வேண்டும் என கேட்கிறாள்.

சுனில் கவாஸ்கர் பிறந்தவுடன் மருத்துவமனையிலே  பெட் மாறிவிட்டார். அதாவது, அவரை செவிலியர்கள் வேறொரு தாயிடம் (மீனவ குடும்பத்தை  சேர்ந்த)  கொடுத்து விட்டார்கள். பிறகு பிறவியிலேயே அவருக்கு இருந்த ஒரு உடல் அடையாளத்தை வைத்துதான் குழந்தை மாறிப்போன  விஷயம் தெரிந்து அவரை  மீண்டும் அவரின் தாயாரிடம் சேர்த்ததாக நான் கேள்விப்பட்டதுண்டு. நிஜமா நண்பர்களே?


share on:facebook

7 comments:

CS. Mohan Kumar said...

பழைய நினைவுகளை எனக்கும் கிளறி விட்டது பதிவு. தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே எனும் போதே ஆற்று பாலம் கண்ணில் விரிகிறது. தஞ்சை தஞ்சை தான்யா !

கடைசி செய்தி நான் கேள்விப்பட்டதே இல்லை

Philosophy Prabhakaran said...

படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது... எனக்கு இதுபோன்ற அனுபவங்கள் கிடைக்கப் பெறவில்லை... டிவிக்கள் வரத்தொடங்கிய பின்னர்தான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன்... அப்போதும் பக்கத்து வீட்டில் போய் டிவி பார்த்த அனுபவங்கள் உள்ளன...

Madhavan Srinivasagopalan said...

// அடிக்கப்பட்ட பந்து பவுண்டரியை தாண்டி போய் விழுகிறது" //

எல்லைக் கோட்டை

ஆதி மனிதன் said...

@மோகன் குமார் said...
//தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே எனும் போதே ஆற்று பாலம் கண்ணில் விரிகிறது. தஞ்சை தஞ்சை தான்யா !//

சென்னையில் இருந்துகொண்டு, நீடாவிற்கு சென்று கொண்டு இருக்கும் தங்களுக்கே இந்த உணர்வுகள் என்றால், இரண்டு கண்டங்களை தாண்டி இன்னமும் தஞ்சையை நினைத்துக்கொண்டு இருக்கும் என் நிலைமையை நினைத்து பாருங்கள்..

//தஞ்சை தஞ்சை தான்யா !// ரிபீட்டு...

ஆதி மனிதன் said...

நன்றி பிரபா.

//அப்போதும் பக்கத்து வீட்டில் போய் டிவி பார்த்த அனுபவங்கள் உள்ளன...//

டி.விக்கள் முதல் முதலாய் வந்தபோது பக்கத்து தெருவிற்கு சென்று ஒருவர் வீட்டில் பார்த்த அனுபவம் என்னுடையது.

ஆதி மனிதன் said...

//எல்லைக் கோட்டை//

நன்றி மாதவ்...

அமுதா கிருஷ்ணா said...

எங்கள் வீட்டில் டி.வி சைஸ் ரேடியோ இருந்தது.நடுவில் பெரியதாய் 6 டைப் மெஷின் கீ மாதிரி வெள்ளையில் பட்டன்கள் வேறு இருக்கும். மர பீரோவின் மேல் பகுதியில் ரேடியோ ஸ்டாண்ட்.அந்த ஸ்டாண்டின் பின்புறம் சின்ன சின்ன துளைகள் செய்யப்பட்டிருக்கும்.ரேடியோ வைத்து இரண்டு கதவினை மூடிவிடலாம்.பசங்க கிட்ட சொன்னா சிரிக்கிறார்கள்.ரேடியோவிற்கு எதற்கு இப்படி ஒரு ஏற்பாடு என்று. அந்த பீரோ பேரே ரேடியோ பீரோ..எனக்கு சின்ன வயதில் கமெண்ட்ரி கேட்டால் தலைவலிக்கும்.சிலோன் ஸ்டேஷன் தான் ஃபேவரைட்.

Post a Comment