அமெரிக்காவிலும் பிச்சைகாரர்கள் உண்டு. அங்கும் சிக்னலில் நின்று கொண்டு பிச்சை எடுக்கும் பிச்சைகாரர்கள் உண்டு என்றால் பலர் நம்ப கூட மாட்டார்கள்.
நேற்று எங்கள் வீட்டருகில் இருந்த பார்மசி ஒன்றிற்கு சென்றுவிட்டு வெளியே வந்த போது, ஒரு கையில் குழந்தையும், ஒரு கையில் "Help me please " என்ற வாக்கியத்துடன் கூடிய அட்டையுடன் இளம் பெண் ஒருவர் என்னிடம் கையேந்திய போது சற்றே அதிர்ச்சியானேன். தேனாம்பேட்டை சிக்னலில் பிச்சை எடுப்பவர்களுக்கும் இந்தப்பெண்ணுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை எனக்கு. என்ன ஒன்று, இப்பெண் அணிந்திருந்த ஆடை ஆங்காங்கு கிழியாமலும் கையில் வைத்திருந்த குழந்தை நல்ல சிகப்பாகவும் இருந்தது அவ்வளவு தான்.
அதே போல் நகரத்தில் உள்ள சில சிக்னல்களின் அருகில் சாலை ஓரத்தில் "Help me ", "Penny please " போன்ற வாக்கியங்களை அட்டைகளில் எழுதி ஏந்தியபடி அங்கும் இங்கும் சிக்னலுக்காக காத்திருக்கும் கார்களின் பார்வையில் படும்படி நடந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மிக சிலரே தங்கள் கார் கண்ணாடிகளை இறக்கி இவர்களுக்கு பணம் போடுவார்கள் என்பது வேறு கதை. அமெரிக்கர்கள் பெரும்பாலும் பிச்சை எடுப்பதை ஊக்கப்படுத்த மாட்டார்கள்.
அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் போன்ற பெரு நகரங்களிலும் பிச்சைகாரர்களை அதிகம் பார்க்கலாம். நியூயார்க் நகர ரயில் நிலையங்களில் கேக்கவே வேண்டாம். ஆங்காங்கு அழுக்கானா ஆடைகளுடன் பார்க்கவே பயம் ஏற்படுமளவு சுற்றிக்கொண்டு இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் போதைக்கு அடிமையானவர்களாகவோ அல்லது முன்பு வேறு ஏதாவது தவறு செய்து தண்டனை பெற்றவர்களாகவோ இருப்பார்கள். ஆதலால், இவர்கள் பிச்சை கேட்டால் உடனே ஓரிரு டாலர்களை கொடுத்து விடுவது நல்லது. இல்லை என்றால் சிலர் என்ன செய்வார்கள் என்றே யூகிக்க முடியாது.
வாழ்த்து கெட்டவர்கள் என்பார்களே, அது போல் அமெரிக்கர்கள் பல காரணங்களுக்காக திடீரென்று ரோட்டுக்கு வந்து விடுவார்கள். உண்மையை சொல்லப்போனால் இந்த விசயத்தில் இந்தியர்களும், இந்திய கலாச்சாரமும் பல வகைகளில் அமெரிக்காவை விட மேலானது. ஒரு குடும்பம் நொடித்துப்போனால் பல நேரங்களில் அவர்களுக்கு உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கை கொடுப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஒரே வீட்டை சேர்ந்த பெற்றோர் மற்றும் சகோதரர் சகோதிரிகளுக்கும் பொருந்தும். ஒரு மாதம் வேலை இல்லையென்றால் கூட அடுத்த மாதம் அவர்கள் வீட்டு வாடகை கட்ட கூட சிரமப்படுவார்கள். ஏனெனில் அமெரிக்கர்களிடம் சேமிப்பு பழக்கம் குறைவு.
நம்மூரை போலவே அமெரிக்க அரசும் பிச்சை காரர்களுக்காக பல்வேறு நல திட்டங்களும், நல்வாழ்வு மையங்களும் அமைத்திருந்தாலும் பிச்சை எடுப்பவர்கள் அதை சரியாக உபயோக படுத்திக்கொள்வதில்லை. ஒரு தள்ளு வண்டியிலோ, பெரிய பைகளிலோ தங்கள் உடமைகளை வைத்துக்கொண்டு குளிர்காலங்களில் ரோட்டோரம் இவர்கள் சுருங்கிப்படுத்திருப்பதை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும்.
பிச்சை எடுப்பவர்களை பற்றி சிறு வயதில் என்னுடைய கருத்து எல்லோரையும் போல, "கை கால் நல்லா இருக்குல, போய் வேலை ஏதாவது செய்து சம்பாதிக்கலாமே" என்றுதான் சொல்வேன். ஆனால் என் தந்தை ஒவ்வொரு தடவையும் அதற்கு இப்படி தான் பதில் அளிப்பார். "உலகத்தில் பிச்சை எடுப்பதை விட ஒரு கேவலம் வேறு ஏதும் இல்லை". அப்படி கேவலம் என தெரிந்தும் ஒருவர் பிச்சை என்று வந்து கேட்டால் அப்போது இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது என்பார். அதே போல் என்ன தான் கஷ்டப்பட்டாலும் எல்லோரும் பிச்சை எடுக்க வந்து விட மாட்டார்கள் என்பார். அப்படி வருபவர்களிடம் நியாயம் தர்மம் பார்க்க கூடாது என்பார்.
அதனாலேயே ஒவ்வொரு தடவையும் இங்கு (அமெரிக்காவில்) பிச்சைகாரர்களை பார்க்கும் போது புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்தாலும், அவர்களின் நிலைமையை புகைப்படம் எடுத்து அவர்களை இன்னும் புண்படுத்த மனம் வராமல் எடுப்பதில்லை.
share on:facebook