Friday, August 26, 2011

தூக்கிலிடுவோம்...


தூக்கிலிடுவோம் தூக்கை. ஆம், அடுத்தவர் உயிரை ஒருவர் பறித்தார் என்ற காரணத்திற்க்காக அரசே அவரின் உயிரை பறிப்பதென்பது என்னை பொருத்தவரையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிலும் நடை பெற்ற  குற்றத்தில் நேரடியாக சம்பந்தப்படாதவரை Rarest of Rare crime பிரிவின் கீழ் தூக்கு தண்டனை வழங்குவது என்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள்  அனைவரும் தாங்களாகவோ அல்லது வேறு விதத்திலோ மரணம் அடைந்த  பிறகும் பேரறிவாளன் (இவர் கொலையாளிகளுக்கு பாட்டரி வங்கி  கொடுத்தார் என்பது  ஒரு குற்றம்) போன்றோரை தூக்கில் போடுவது என்பது  . நியாயமா என்று தெரியவில்லை.

அதே போல் தான் மற்ற இருவரும். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான, ரகசியத்திற்கு பேர்  போன தாக்குதல் திட்டங்களில் இவர்களுக்கு  எந்த  அளவிற்கு இந்த  படுகொலை தாக்குதல்  பற்றிய விபரம் தெரிந்திருக்கும் என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறிதான்.

ராஜீவ்காந்தி என்ற இந்தியாவின் பிரபலமான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் என்ற காரணத்திற்க்காக என்று இல்லை. அவர் யாராக இருந்தாலும்  ஒரு சாதாரண குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவரை கொல்ல  யாருக்கும் உரிமை இல்லை. அவரும் இரு குழந்தைகளுக்கு தந்தை. ஒரு குடும்பத்தலைவர். அதற்காக அதே தவறை ஒரு அரசாங்கமும் செய்யலாமா என்பதே என் கேள்வி? அது மட்டுமில்லை. இந்த நாகரீக உலகத்தில் இன்றும் அநாகரீகமா எனக்கு தெரிவது இந்த தூக்கு தண்டனைதான்.

அப்படியே போடவேண்டும் என்றால், கையில் ஏ.கே. 47 உடன் ஒன்றும்   அறியா பொதுமக்களை (அரசியலுக்காக ஏதோ   ஒரு உடன்பாடு போட்டு இன்று ஒரு இனத்தையே பரதேசிகளாக ஆக்கியவர்கள் அல்ல)  சுட்டுக்கொன்றானே கசாப். அவரைத்தான் முதலில் போடவேண்டும் . கையில் துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் ஒவ்வொரு இடமாக போய் கண்ணில் பட்டவரையெல்லாம் கொன்னானே. அது எல்லாம் வீடியோவாக பதிவாகியுள்ளதே. இதுதான் Rarest of rare crime. இதுதான்  சந்தேகத்திற்கு இடமின்றி நடை பெற்ற குற்றம். குற்றவாளி.

பேரறிவாளனோ  மற்றவர்களோ அல்ல. கிடைக்குமா தூக்கு  தண்டனைக்கு தூக்கு?

share on:facebook

Wednesday, August 24, 2011

தமிழ் புத்தாண்டும் முட்டாள் தமிழனும்


நேற்று சட்ட மன்றத்தில் பேசிய தமிழக முதல்வர், யாருக்கும் பலனளிக்காத, தமிழக மக்களின் மனதை புண்படுத்திய புதிய தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும் பழைய தினத்துக்கே மாற்றப்போவதாக அறிவித்தார். எத்தனை பேர் அவரிடம் தங்கள் மனது புண்பட்டுவிட்டதாக எடுத்துக்கூறினார்களோ  தெரியவில்லை. 

ஆண்டாண்டு காலமாக பழக்கத்தில் உள்ள, மக்கள் நம்பிக்கையில் அரசு  தலையிட  கூடாது என்று வாதிடுகிறார். அப்படி பார்த்தால் உலகம் தட்டை என்று பைபிளில் கூறியுள்ளது தவறுதான் என்று ஏன்  கிறிஸ்துவர்கள் எல்லோருக்கும் தலைவராக உள்ள  போப் ஆண்டவர் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒத்துக்கொள்ள வேண்டும்.

அது மட்டுமா, ஆண்டாண்டு காலமாக நடை பெற்று வரும் பொங்கல் திருநாளை ஒட்டிய மாட்டுப்பொங்கலின்  போது நடை  பெரும் மஞ்சு விரட்டுக்கு தற்போது ஏன் தடை விதிக்க வேண்டும்? தமிழ் புத்தாண்டைப்பற்றி பல இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதாக பேசும் முதல்வருக்கு திராவிட இயக்கங்கள் போற்றி புகழும் புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடலை  யாராவது எடுத்துக்கூறினால் தேவலை. 

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"

-பாரதிதாசன்.

மேலும் தமிழ் புத்தாண்டு பற்றி பல அரிய தகல்வல்கள் தெரிந்து  கொள்ள நண்பர் டான் அசோக் அவர்கள் பதிவு  இங்கே.

share on:facebook

Monday, August 22, 2011

அண்ணா ஹசாரே குறித்து நமீதா...அட உண்மையிலேயே தாங்க.


ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. மாற்றம் மக்களிடமிருந்து வர வேண்டும், என்றார் நடிகை நமிதா.

ஹசாரேவின் போராட்டம் குறித்து நமிதாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், "அன்னா ஹசாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும். ஹசாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு.

லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹசாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்திய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹசாரேயின் போராட்டம் காந்திய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹசாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன்கூட இருக்காது. இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளேகூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்," என்றார்.

ஹசாரேவின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, "இருக்கலாம். அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்தியா பரந்த நாடு. என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது," என்றார் நமிதா. இந்தப் போராட்டம் தெற்கு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறித்து? "அது உண்மைதான். காரணம் இங்கே அதைவிட முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் கருதலாம். ஹசாரே குறைந்தபட்சம் இந்த மாநில மக்களிடம் பிரசாரம்கூட செய்யவில்லையே. இதை அவருக்கும் அரசுக்குமான பிரச்சினையாகத்தான் ஹசாரே பார்க்கிறார். இதில் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது?" என்றார் நமிதா. அரேபியக் குதிர சொல்வதும் வாஸ்தவந்தானே....
நன்றி: koodal.com

share on:facebook

Wednesday, August 17, 2011

யோஷிமிட்டீ : காடு, கரடிகளுக்கு நடுவே ஓர் இரவு தங்கல் (Camping)


மீண்டும் ஒரு சுற்றுலா. இந்த முறை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோஷிமிட்டீ (Yosemite) என்ற ஒரு மலையில் அமைந்துள்ள தேசிய பூங்காவிற்கு. அமெரிக்காவில் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதிகளில் மக்கள் சென்று பொழுது போக்க அதை சிறிதளவு பூங்காக்களாக மாற்றி அதை தேசிய பூங்காவாக அறிவித்துவிடுவார்கள். இவைகள் பெரும்பாலும் காடுகள் போல் இருப்பதால் அதை ரேஞ்சர்கள் பொறுப்பில் விட்டுவிடுவார்கள்.


யோஷிமிட்டீ பூங்காவில் பல அம்சங்கள் உள்ளன. பெரிய பெரிய நீர்வீழ்ச்சிகள், கிரானைட் மலைகள், பெரிய பெரிய மரங்கள் என பார்ப்பதற்கு பல உள்ளன. இதை தவிர அங்கு ட்ரெக்கிங் செல்வது/காம்பிங் செய்வது மிகவும் பிரபலம்.


அமெரிக்காவிலேயே மிக உயர்ந்த நீர் வீழ்ச்சி(யோஷிமிட்டீ பால்ஸ்) இங்கு தான் உள்ளது. உலகத்திலேயே இது ஐந்தாவது உயர்ந்த நீர்வீழ்ச்சி. இது தவிர நிறைய நீர்வீழ்ச்சிகளும் அங்கு உள்ளது. அதில் என்னை மிகவும் கவர்ந்தது ப்ரைடல்வீல் (bridalveil) எனப்படும் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியை பார்க்கும் போது கிறிஸ்தவ மணப்பெண்கள் அணியும் வெள்ளை நிற உடை போல் நீண்டு வளைந்து காற்றில் அசைந்து தண்ணீர் விழும் அழகே தனி.

அதே போல் யோஷிமிட்டீ பால்ச்சும். அப்பர், லோயர் என இரு நீர்வீழ்ச்சிகள் மேலிருந்தும் பின் நடுவிலிருந்தும் விழும் அழகே தனி. யோஷிமிட்டீக்கு மேலும் அழகு சேர்ப்பது அங்குள்ள மிக உயர்ந்த மரங்கள். எல்லாம் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள். அவைகளை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வருகிறார்கள்.



மலை முகடுகள்/குன்றுகள் ஆங்காங்கே நிறைய இங்கு உள்ளது. அதில் பிரபலமானது ஹாப் டோம். ஒரு பெரிய மலையை பாதியாக வெட்டி எடுத்தால் எப்படி தெரியுமோ அப்படி காட்சி அளிக்கும் கிரானைட் மலை. சும்மா பள பள வென்று மாலை நேர சூரிய ஒளியில் தங்கம் போல் மினு மினுக்கிறது(இதில் சும்மா ஒரு டன் நமக்கு கிடைச்சதுனா போதும். ஆயிசுக்கும் செட்டில் ஆயிடலாம்). அதன் அருகே சிறிய ஓடை. பெரியவர்கள் மலை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்க சிறுவர்கள் அந்த நீரோடையில் வெயிலுக்கு இதமாக தண்ணீரில் நனைந்து விளையாடுவதை எப்போதும் காணலாம்.


இரண்டு நாள் யோசிமிட்டி சுற்றியதில் நேரம் போனதே தெரியவில்லை. முதல் நாள் யோசிமிட்டியில் சுற்றி பார்த்துவிட்டு அதே தினம் மாலை சற்று அருகில் உள்ள மாலை/காடு பிரதேசத்தில் காம்பிங் செய்வதாக திட்டம். அதன்படி மாலை ஆறு மணிக்கு காம்பிங் சைட்டுக்கு சென்று விட்டோம். அருவி ஒன்று அருகில் ஓட அதற்கு பக்கத்தில் உள்ள மலை அடிவாரம் தான் எங்கள் காம்பிங் சைட்.


அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்தது என்ன செய்வதாக  இருந்தாலும் அதற்கு தேவையானதை தேடியோ அதற்கு என்ன செய்வது என்றோ நாம் முழிக்க வேண்டியதில்லை. காம்பிங் செல்ல வேண்டுமென்றால் வால் மார்ட் சென்றால் போதும். காம்பிங்க்கு வேண்டிய டென்ட், லாந்தர், பையர் லாக் எனப்படும் மரத் துண்டுகள் முதற்கொண்டு எல்லாம் ஒரே  இடத்தில் கிடைக்கும். முதல் தடவை செல்பவர்கள் கூட எளிதாக தங்களை தயார் படுத்திக்கொள்ள முடியும்.

அப்புறம் புகைப்படங்கள் எல்லாம் நானே எடுத்தது. வேறு யாரும் எடுத்துக் கொடுத்ததோ, கூகுளில் சுட்டதோ இல்லை. ஆமா. 

தொடரும்... 

share on:facebook

Sunday, August 14, 2011

ஐரோப்பா யூனியனில் தமிழன் புகழ்: Dr. கலாமின் சிறப்புரை.

என்னதான் இந்தியர்கள் சாதித்திருந்தாலும்/சாதித்தாலும்
அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் அவ்வளவு எளிதில் அதை  ஏற்றுக்கொண்டு அதற்க்கு உரிய மரியாதையை கொடுப்பார்கள்  என எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில், அதற்க்கு நேர்மாறாக  டாக்டர் கலாம் அவர்களுக்கும், அவரின் இந்த உரைக்கும்  அவர்கள் கொடுத்த மரியாதையும்,  பாராட்டும்...  டாக்டர் அப்துல் கலாமால் நமக்கு எல்லாம் பெருமையே.  

உரை பழசு என்றாலும் இதுவரை கேக்காதவர்களுக்காக ...
  




share on:facebook

Friday, August 12, 2011

தேவ பிரசன்னமும் - கோவில் கொள்ளைகளும்.

சமீபத்தில் திருவாங்கூர் கோவிலின் ரகசிய அறைகள் திறக்கப்பட்டதும், இதுவரை திறக்கப்பட்ட ஐந்து அறைகளிலிருந்து ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான தங்க வைர ஆபரணங்கள் இருப்பதும் தெரிந்ததே. மீதமுள்ள அறை 'பி' எனப்படும் ஆறாவது அறையை திறப்பதற்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில் பூசாரிகள் சிலர் ஒன்று கூடி "தேவ பிரசன்னம்" எனப்படும் குறி கேட்பது/சொல்வது போலான நிகழ்ச்சி  ஒன்றை அரங்கேற்றி உள்ளார்கள். 

அப்படி "தேவ பிரசன்னம்" கேட்டதில், "பி" அறையை திறந்தால் அப்படி திறப்பவர்களின் வம்சமே அழிந்து விடும் என்றும்(அதுவும் விஷ ஜந்துக்கள்  கடித்து), அறையை  திறக்க முயற்சி நடப்பது தெரிந்தும் அதை தடுக்க பரிகார பூஜை செய்யாதது தவறு என்றும், இனிமேல் அறையை திறக்காமல் இருக்க சிறப்பு பூஜை நடத்தவேண்டும் எனவும், கடைசி வாரிசு இருக்கும் வரை ராஜ குடும்பத்தினர் அறையை திறக்காமல் இருக்க போராட வேண்டும் எனவும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அப்படியானால் இதுவரை திறந்த எல்லா அறைகளையும் இழுத்து பூட்டிவிட்டால் போதுமா? அதற்கு தற்போது போடப்பட்டிருக்கும்  பாதுகாப்பு எதுவும் தேவை இல்லையா? அறையை திறப்பவர்களின் வம்சமே அழிந்து விடுமானால், அங்குள்ள பொக்கிசங்களை கொள்ளை அடிக்க நினைப்பவர்களை சாமி சும்மா விட்டு விடுமா?

இப்படி எல்லாம் கேட்பதினால் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவோ மத நம்பிக்கையை புன்படுத்துவதாகவோ அர்த்தமில்லை. "Reality" - அதாவது எதார்த்தமாக சிந்திக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல் பட வேண்டும்.

என்னுடைய கேள்வியெல்லாம், இப்போது இவை எல்லாவற்றையும் தெரிந்து சொல்லும் இந்த ஜோதிடர்கள், இந்த அறைகளை எல்லாம் திறப்பதற்கு முன், ரகசிய அறைகள் பல கோவிலினுள் இருக்கிறது என்றும் அதில் கோடிக்கணக்கான தங்க வைர ஆபரணங்கள் இருக்கிறது  என்றும், அதை திறக்க முயற்சி நடக்கிறது என்பதையும், அதை நாம் உடனே தடுக்க வேண்டும் எனவும் ஏன் சொல்லாமல் போனார்கள். 


அது மட்டுமல்ல, இம்மாதிரியான "தேவ பிரசன்னங்களுக்கு" சட்ட ரீதியாக  என்ன மதிப்பு என்பதும் தெரியவில்லை.  மத நம்பிக்கை என்பது வேறு, ஒரு முக்கியமான நிகழ்வில் அரசோ/நீதிமன்றமோ பலவற்றையும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியது என்பது வேறு.

திருவாங்கூர் ராஜ வம்சத்திற்கும், கோவில் நிர்வாகத்துக்கும் அதரவாக வெளியிடப்பட்ட இந்த "தேவ பிரசன்னம்" அறிக்கை குறிப்பிட்ட சிலர் / அல்லது  குழுவின் ஆதரவோடும், அறிவுரையோடும் தான்  வெளியிடப்பட்டிருக்க வேண்டும்  என்பது சாதாரண ஒருவரால் கூட புரிந்து  கொள்ள முடியும்.  

மேலும் இப்படி கோடி கோடியாக பணத்தையும் பொருளையும் ரகசிய அறைகளில் பூட்டி வைப்பதால் யாருக்கு என்ன பயன். இவையெல்லாம் இப்போது அல்ல, அன்றைய காலக்கட்டத்திலேயே உபயோகப்படுத்தி இருந்தால் நம் நாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே  இருபத்தோராம்  நூற்றாண்டை சென்றடைந்திருக்கும்.

திருவாங்கூர் ரகசியமாவது பரவாயில்லை. பல வருடங்களுக்கு முன் அரசாட்சியில் நடந்தது. தற்போது  புட்ட பருத்தியில் கண்டு பிடிக்கப்பட்ட கிலோகணக்கான தங்கமும், வெள்ளியும் பண கட்டுகளும், இவைகளை என்ன சொல்வது?

வழக்கம் போல...அந்த ஆண்டவன் நேரில் வந்தால் தான் இவர்களை எல்லாம் திருத்த முடியும்.




share on:facebook

Tuesday, August 9, 2011

முதிர் கண்ணன்கள்: திருமணம் ஆகாமல் தவிக்கும் IT ஆண்கள்.


நடக்கவேண்டிய காலத்தில அது அது தானா நடக்கனும்னு எங்க ஊர்ல  பெரியவங்க சொல்லுவாங்க. முக்கியமா கல்யாணம், குழந்தை பெத்துக்கறத  குறித்துதான் இந்த வாக்கியம் இருக்கும். இத்தனைக்கும் பத்து இருபது வருடங்களுக்கு முன் இருந்த வேலைவாய்ப்பு, பொருளாதார சூழ்நிலை இன்று பெரிதும் மாறுபட்டு இருக்கிறது. பெரும்பாலும் எல்லோருக்கும் (நன்கு படித்தவர்களுக்கு) ஒரு வேலை கிடைத்து விடுகிறது. வாழ்க்கை தரமும் சற்று உயர்ந்தே உள்ளது. இருந்தும் நான் மேலே கூறியது போல் அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க மாட்டேன்கிறது பலருக்கும்.

என் நண்பன் ஒருவன். ஆடிட்டர் ஆகி பல வருடங்களாகியும் திருமணமே செய்துகொள்ளவில்லை. கேட்டால், இன்னும் செட்டில் ஆகவில்லை மாம்ஸ். லைப்ல முதல்ல செட்டில் ஆகணும் என கூறுவார். தங்கை, தம்பியை கரை சேர்க்க வேண்டும், பெற்றோருக்கு செலவு செய்ய வேண்டும்  என்ற எந்த கட்டாயமும் இல்லாத  நினலையிலும் இதையே தான் கூறி  வந்தார். இத்தனைக்கும் ஆடிட்டர் என்றால்  அவருக்கு எவ்வளவு வருமானம்  வரும் என நினைத்துப்பாருங்கள். வேண்டிய பணம், சொத்து என எல்லாம் இருந்தும் அதற்கும் மேலே  எதிர்பார்ப்புகள், எண்ணங்கள். இவை எல்லாம் தான் என் நண்பனை  35 வயதை  கடந்து திருமணம் செய்து கொள்ள வைத்துள்ளது. இனி அவரின் பிள்ளை வளர்ந்து பெரியவனாகி/வளாகி ஒரு நல்ல நிலைக்கு வருவதற்குள் நிச்சயம் இவர் குடு குடு கிழவனாகி விடுவார்.

இந்தியாவில் நிலை இப்படி என்றால், இங்கு அமெரிக்கா வரும் சில இளைஞர்களின் நிலையோ இன்னும்  பரிதாபம். அமெரிக்கா வந்து விட்டதினாலோ என்னவோ, எல்லோருக்கும் பெண் சிகப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது போலும். எனக்கு தெரிந்து பார்க்க சுமாராக இருக்கும் இரு இளைஞர்கள் இரண்டு  வருடங்களுக்கும்  மேலாக பெண்   தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் நண்பர்களும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் சிகப்பு பெண் தான் வேண்டும் என்று தங்கள் திருமண வயதை தாண்டி போய்/தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இது இப்படி என்றால், அமெரிக்க மாப்பிள்ளை என்று சொன்னால் இன்று நம் பெண்கள் கேட்கும் கேள்விகள், வைக்கும் கண்டிசன்கள் தலை சுத்தற வைக்கிறது. எனக்கு தெரிந்த நண்பர் அமெரிக்காவில் நல்ல சம்பளத்தில் இருந்தாலும் அவர் பார்த்த பெண், இதில் பாதி நான் இந்தியாவிலே சம்பாதிக்கிறேன். ஒன்று நீங்கள் கம்பெனி மாறுங்கள். அல்லது உங்களுடைய பேங்க்  பாலன்சை காட்டுங்கள் என  அதிரடியாக கூறி இருக்கிறார். அதே போல் பெண் வீட்டாரிடம் சீதனம் கேட்ட காலம் போய் இப்போது மாப்பிளையிடம்  உங்களிடம் என்ன கார் இருக்கிறது , US ல் சொந்த வீடு இருக்கிறதா? GC  இருக்கிறதா என    பல கேள்விகள். இங்குள்ள பெரும்பாலானோருக்கு இதற்கு பதில் தெரியவில்லை. பாவம். நம்மை கல்யாணம் செய்துக்க  போகிறதா  இல்லை  வைத்து வியாபாரம் செய்யப்போகிறார்களா என தெரியவில்லை என  முனு முணுக்கிறார்கள்.

இந்தியாவில் கேக்கவே வேண்டாம். மாப்பிளையின் ஜாதகத்தை கேக்கிறார்களோ இல்லையா முதலில் பே ஸ்லிப் காப்பி கேக்கிறார்கள் பெண் வீட்டார்கள். அடுத்து IT ல் மாப்பிளை வேலை பார்த்தால் அமெரிக்க  சென்று வந்துள்ளாரா, H1 இருக்கிறதா  இவை எல்லாம் தான் முதல் பொருத்தங்கள். மாப்பிள்ளைகளுக்கும் பெண் நல்ல கம்பெனியில்  வேலையில் இருக்கிறாரா, அவளின் அலுவலகமும் நம் அலுவலகமும் பக்கத்தில் அமைந்திருக்கிறதா, பக்கத்தில்  டே கேர் இருக்கிறதா என பல  விஷயங்கள் திருமண பொருத்தம் பார்ப்பதற்கு முன்னே பார்த்து விடுகிறார்கள்.

கை நிறைய சம்பாதிப்பவர்கள் பலரும் இன்று காலம் தாழ்த்தியே   திருமணம்  செய்து  கொள்கிறார்கள். இதனால் ஒன்றும் பெரிதாக பயன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. "அப்பா" என குழந்தை கூப்பிடுவதற்கு பதிலாக "தாத்தா" என கூப்பிட்டு உடனடி ப்ரோமோசன் கொடுப்பதை தவிர.  

ஹ்ம்ம். எல்லாம் காலம் மாற்றிய கோலம். எப்படி பார்த்தாலும் இவை எல்லாம் அளவுக்கு மீறிய ஆசையினால் வரும் வினை.


share on:facebook

Friday, August 5, 2011

ரஜினி கமல் காதல் புரிந்த இடங்கள்


எங்கள் கிராமத்தில் ஒரு காலத்தில் பெரிய மிராசுதாரராக இருந்த  ஒருவரின்  மகனின் பொழுது போக்கு, தமிழ் திரைப்படங்களில் வரும்  பாடல் காட்சிகளில் இடம்பெற்றுள்ள ரம்மியமான இடங்களை எல்லாம் உடனே  சென்று சுற்றி பார்த்து விட்டு வருவது. அப்படி சுற்றி சுற்றியே மிராசுதாரின் சொத்தில் பாதியை அழித்து விட்டார்.

ஆனால் அதே மாதிரியான ஒரு ரசிப்பு தன்மை உடைய தமிழகத்தை சேர்ந்த  இருவர் (ஒருவர் தன்னிச்சையான புகைப்பட வல்லுநர் - Free Lancer ),  மற்றொருவர் அவரின் கல்லுரி நண்பர் (இவர் அமெரிக்காவில்  கணணி  வல்லுனராக உள்ளார்), தாங்கள் அவ்வாறு சுற்றி பார்த்த இடங்களையும்  சுற்றி பார்க்க முடியாத இடங்களையும் சேர்த்து முழு விபரத்தையும் ஒரு  வலை தளம் உருவாக்கி அதில் விபரங்களை பகிர்ந்துள்ளார்கள்.  

அமெரிக்க ஹாலிவுட்டில் இவ்வாறு திரை படம் எடுக்க ஏதுவாக உள்ள இடங்கள் மற்றும் அது சம்மந்தமான விபரங்களை கொண்டு பல வலை தளங்கள் உள்ளது. ஆனால் தமிழ்/இந்திய திரை உலகம் சம்மந்தப்பட்ட இடங்களை (shooting spot ) முதல் முறையாக பட்டியல் இட்டுள்ளது இவர்கள் இருவரின் வலைத்தளம் தான் எனலாம்.

இனி நீங்கள் "அண்டங்காக்கா கொண்டைக்காரி" பாடல் முதல் "பள்ளே  லக்கா, பள்ளே லக்கா" பாடல் வரை அது எங்கு படமாக்கப்பட்டது  என  இவர்களின் வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.   

அந்த வலைத்தளம் இங்கே  

share on:facebook

Thursday, August 4, 2011

டங்கு னோசா - நாக்கு மூக்க பாடலின் ஆங்கில பதிப்பு.

நாக்கு மூக்க பாடல் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த டங்கு னோசா பாடல் கண்டிப்பாக பிடிக்கும். என்னமாய் அனுபவித்து இந்த பாடலை  பாடுகிறார் மதுரை சின்னபொண்ணு .   


நன்றி: youtube 


share on:facebook

Tuesday, August 2, 2011

நார்வேக்கு நாடு கடத்த கேக்கும் VIP கைதிகள்.

அப்புறம், இப்படி ஒரு வசதி இருந்தா நம்ம ஆளுங்க கேக்கமாட்டாங்களா?


நன்றி: youtube 

share on:facebook

Monday, August 1, 2011

கருப்பு சாமி


உலகத்திலேயே இரண்டாவது பணக்கார சாமி திருப்தி ஏழுமலையான். இப்போது திருவாங்கூர் கோவிலும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் நமக்கு பெருமைதான். ஆனால் இன்று அண்ணா ஹசாரேயும்  மத்திய அரசும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கருப்பு பணத்தை  வெள்ளை ஆக்குவது பற்றி தினந்தோறும் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை  விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மறந்து விட்டு. அது மதத்தின் பெயராலும் சாமியார்களிடமும் உள்ள கோடிக்கணக்கிலான கணக்கில் வராத அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்.

கோவில்களிலோ மற்ற வழிபாட்டு தளங்களிலோ காணிக்கை  செலுத்துபவர்கள் தங்கள் பெயர் முகவரியை பதிய வேண்டும், எவ்வளவு  காணிக்கை செலுத்துகிறார்கள் எனவும் பதிய வேண்டும் என  நாளையே  இந்திய அரசு ஒரு சட்டத்தை போட்டால் என்ன ஆகும் என நினைத்துப்பாருங்கள். கின்னஸ் சாதனையாக திருப்பதியில் அன்று தான்  முதல் முறையாக குறைந்த அளவு காணிக்கை செலுத்தப்பட்டிருக்கும். 

சரி கருப்பு பணம் தானே, எப்படியோ வெளியில் தானே வருகிறது என்று வாதிட்டாலும், இம்மாதிரி காணிக்கைகள் எவ்வாறு பிறகு செலவிடபடுகிறது  என்பதுதான்  கேள்வியே. அது இந்து கோவில்கலானாலும் மற்ற எந்த மதத்தினருடைய வழிபாட்டு தளமானாலும் காணிக்கையாக  செலுத்தப்படும் பொருள் நேரடியாக அரசுக்கு சேராது. இன்று பெரும்பாலானா காணிக்கைகள் அந்தந்த வழிபாட்டு தளங்களின் நிர்வாகத்தினரின் விருப்பத்திற்க்கேற்ப மீண்டும் சாமிகளுக்கு தங்க ஆபரணங்களாகவும்,  சுவர்களுக்கு தங்க முலாம் பூசவும் தான் பயன்படுகிறது. 

இந்தியாவில் கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்கள்  இப்படிதான்  முடங்கி கிடக்கின்றன. அதே சமயம் இன்றும், 14,853 ஆளில்லா  ரயில்வே  கிராசிங்குகள் இந்தியாவில் உள்ளது. அதாவது மொத்தம் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் அநேகமாக பாதி அளில்லாதவையே. அதனால் இதுவரை எத்தனையோ விபத்துக்கள், உயிர் இழப்புக்கள்.  இவற்றுக்கெல்லாம்  என்று நம் அரசாங்கம் நிதி ஒதுக்கி செய்யப்போகிறது. சென்னையில் இன்றும் சில பள்ளி கூடங்கள் கரும் பலகைகள் இன்றி சுவற்றில் கருப்பு வண்ணம் அடித்து அதில் எழுதிப்போடுகிறார்கள். மற்ற நகர கிராமங்களில் உள்ள பள்ளிகளின் நிலைகளை பற்றி சொல்ல தேவையில்லை.

திருப்பதி, திருவாங்கூர், புட்டபருத்தி இங்கெல்லாம் முடங்கி கிடக்கும் பணத்தையும் பொருளையும் சரியாக உபயோகப்படுத்தினாலே  போதும். பல வருடங்களாக செய்ய முடியாத பல நல்ல காரியங்களை  செய்து முடிக்கலாம். இதையெல்லாம் பரந்த மனப்பான்மையோடு எல்லோரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

யாருடைய மதத்தையோ, மனதையோ புண்படுத்துவது என் நோக்கமல்ல. இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான மதம் சம்மந்தப்பட்ட ட்ரஸ்ட் மற்றும் நிறுவனங்கள் மதத்தின் பெயராலும் சட்டத்தில் உள்ள சிறுபான்மை,  பெருபான்மை என வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டு மக்களையும்  அரசாங்கத்தையும்  இன்றும் ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றன.

ஹ்ம்ம்...இவர்களையெல்லாம் அவர்கள் வழிபடும் ஆண்டவன் வந்தால் தான் திருத்த முடியும்.



share on:facebook