Saturday, February 26, 2011

காரைக்குடியில் கல்யாணம். கலிபோர்னியாவில் கொண்டாட்டம்.


கலப்பு மனம் கேள்விப்பட்டு இருக்கிறோம். வெவேறு ஜாதியையோ  மதத்தையோ சேர்ந்தவர்கள் திருமணம் புரிந்து கொண்டால் பொதுவாக 
மணமகன் எந்த ஜாதி மதமோ அந்த பிரிவுக்கு மணமகள் மாறிவிடுவார்.
சில நேரங்களில் மணமகன் பெண்ணின் பிரிவுக்கு மாறிவிடுவார். இன்னும்  சிலர் இரண்டு மதங்களையும் அவரவர் விருப்பம்  போல் தொடர்ந்து வழிபடுவர்.

ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர், தமிழகத்தை சேர்ந்தவர், காரைக்குடி அவருக்கு சொந்த ஊர். இந்தியாவிற்கு சென்று திருமணம் செய்து கொண்டு திரும்பி வந்தார். அடுத்த இரு வாரங்களில் எங்கள் எல்லோருக்கும் அவரிடம் இருந்து மீண்டும் ஒரு திருமண  அழைப்பிதல் இமெயிலில்  வந்தது. முதலில் குழம்பிப்போன நான் மீண்டும் ஒரு முறை  ஈமெயில்  சப்ஜெக்டை படித்தேன்.  "My (Re) wedding invitation" என இருந்தது. மீண்டும் குழம்பி  போனேன் என சொல்வதை  விட சற்று  அதிர்ந்து போனேன் என்றே சொல்லலாம்.

அதிர்ச்சிக்கு காரணம், தாங்கள் ஆசைப்படி கிறிஸ்த்தவ ஆலயத்தில் குறிப்பிட்ட நாளில் மீண்டும் மறுமணம் செய்து கொள்ள போவதாக  அழைப்பிதழில்  குறிப்பிடப்பட்டிருந்தது  தான். 

எனக்கு தெரிந்து நண்பர் ஒரு  இந்து. அவரின் பெயர் கூட முருக கடவுளின்
இன்னொரு பெயர். மணமகள் பெயர் ஈசனின் துணைவியின் பெயர். குழப்பம்  வராமல் என்ன செய்யும். நண்பரை  உடனே கூப்பிட்டு கேட்க ஒரு  மாதிரியாக  இருந்தது. மெதுவாக அடுத்த  நாள் என்ன பாஸ் ஆச்சர்யமாக இருக்கிறது.  முருக கடவுள் பெயரை வைத்திருக்கும் நீங்கள்  கிறிஸ்துவராக இருப்பீர்கள்  என நான்  நினைக்கவே இல்லை என ஆச்சர்யமாக கேட்டேன்.

அவரோ, யார் சொன்னது நான் கிறிஸ்டியன் என்று. நான் இந்துதான் என  கூறினார். ஒ, அப்ப உங்க  வைப் கிறிஸ்டியனா  என கேட்டேன். ஐயோ அவரும் கிறிஸ்டியன் இல்லை இந்துதான்.  உங்களுக்கு இப்ப என்ன  தெரியனும்  என என்னையே திருப்பி கேட்டார். உங்களுக்கு நான் ஏன் கிறிஸ்த்தவ  தேவாலயத்தில் மீண்டும் திருமணம் செய்து  கொள்கிறேன் என்று தானே தெரியனும்? சிறு வயதிலிருந்தே கிறிஸ்தவ பள்ளியில் படித்தேன், பல  நேரங்களில் கிறிஸ்தவ உதவி  மன்றங்களில் சேர்ந்து பணியாற்றி  இருக்கிறேன். அதனால் பல கிறிஸ்தவ நண்பர்கள் எனக்கு உண்டு.  அவர்களின் திருமணதிற்கு சர்ச்சுக்கு போய் போய்  எனக்கும் அந்த ஆசை  தொற்றிக்கொண்டது. அதாவது அவர்களைப்போல் கிறிஸ்தவ முறைப்படி  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று.

இந்தியாவில்   திருமணம் முடிந்து இங்கு வந்த பிறகு எங்கள் வீட்டருகில் உள்ள சர்ச் நிர்வாகத்திடம் இது பற்றி அனுமதி கேட்டேன். அவர்களும்  சம்மதித்தார்கள். எனக்கு சந்தோசமாக இருக்கிறது. நான் விருப்ப பட்ட மாதிரி  கிருஸ்தவ முறைப்படி  திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று சந்தோசம் பொங்க கூறினார்.

ஹ்ம்ம். மனிதர்களுக்குள் தான் எத்தனை வகையான ஆசைகள். சிலர் வித்யாசமாக ஆசைப்படுவார்கள். ஆனால் அதை அவர்களால் செய்து  முடிக்க முடிகிறதா என்பது தான் முக்கியம். நானும் சில விசயங்களுக்கு  ஆசைப்படுவேன். ஆனால் பல நேரங்களில்  என்னுடைய shyness காரணமாக  அதை செய்து பார்க்க  முடியாமல் போய் விடும். இதே நண்பரின்  கிருஸ்தவ  கல்யாணத்திற்கு போவதற்கு கூட நான் வெக்கப்படுகிறேன். நண்பரோ  இங்கு வந்து அவர்களை போல் திருமணமே செய்து கொள்கிறார். காதல் மணம், கலப்பு மணம்  போல் இதை விருப்ப மணம் என கூறலாமா?

இதோடு இந்த பதிவை முடிக்கலாம் என்று தான் இருந்தேன்.  ஆனால் இன்று நண்பரின் கிருஸ்தவ திருமண நிகழ்ச்சிக்கு போய் வந்த பிறகு அதை பற்றியும் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஏனெனில் திருமணத்திலும் ஒரு வித்யாசத்தை செய்துள்ளார் நண்பர். அதை நாளைக்கு சொல்கிறேனே...

படம் நன்றி: hubpages.com   

share on:facebook

5 comments:

sury said...

திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆணும் பெண்ணும் வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக அல்லது பையன் வீட்டிலோ அல்லது பெண் வீட்டிலோ தம்மை நாத்திகர்கள் என மற்றவர்களுக்குத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள் வீடுகளில் இது போன்று இரண்டாம் முறை அவரவர் மனதிற்கேற்ப திருமணச் சடங்குகள் நடப்பது வெகு காலமாகவே இருந்து வருகிறது. எனது நண்பர் ஒருவர் எந்த மதத்திலும் நம்பிக்கைஇல்லாதாவர் தனக்கு விருப்பமான கிருஸ்துவப்ப்பெண்ணைத் திருமணம் ஒரு ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில், பெண்ணின் உற்றோர், சுற்றம் பயமுறுத்தலுக்கும் இடையே செய்துகொண்டார். அவளை அந்த ஊரைச்சார்ந்த சர்ச்
கிட்டத்தட்ட ஒதுக்கி வைத்தது. பெண்ணுக்கு அவளது மதம் விட்டுக்கொடுக்க் இயலாததாக இருந்தாலும் காதல் அதைவிட பெரிதாக அப்பொழுது இருந்தது. ஒரு பத்து பதினைந்து வருடங்கள் தாக்குப்பிடித்த எனது நண்பர் தனது 45
வயதில் தன் பெயரை ராஜகோபால் என்பதிலிருந்து பால் ஆக மாற்றிக்கொண்டார். மனைவிக்கு மன நிறைவைக்கொடுத்தார்.

நிற்க. பொதுவாக நம்மில் பலர் குடும்ப மரபுகளை மீறி நடக்க ஒரு காலத்தில் துணிந்திருந்தாலும் பிற்காலத்தில் அதை ஏதோ இனம் புரியா பீதி காரணமாக தத்தம் நிலைகளை மாற்றிக்கொண்டு தாம் செய்ததாக நினைக்கும் தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்வதையும் என் வாழ் நாளில் பார்த்திருக்கிறேன். இதெல்லாமே ஒரு வகையில்
நம்பிக்கையைப் பொருத்தன. நம்பிக்கைகள் ஒருவரது வாழ் நாளில் மாறுவதும் இயற்கையே.

நிற்க. ஒன்று கவனித்திருப்பீர்களென நினைக்கிறேன். நான் இந்து மதம் மட்டுமல்ல, கிருஸ்துவ மதம்,
இஸ்லாம் மதம், சீக்கிய மதம், பார்ஸி மதம் சார்ந்த என் நண்பர்கள் திருமணங்களுக்கு சென்றிருக்கிறேன்.
உணவும் ( சைவம் மட்டுமே) சாப்பிட்டு இருக்கிறேன். மதச்ச்டங்குகளில் சொல்லப்படும் மந்திரங்கள் வார்த்தைகள்
எல்லாமே ஒன்றைத் தான் வெவ்வேறு மொழிகளில் சொல்லுகின்றன. முக்கியமாக இந்த வாசகம் :

" நாங்கள் இருவரும் வண்டியில் பூட்டப்பட்ட நுகத்தடியைத் தாங்கி இந்த வாழ்க்கையைத் துவங்கி, எங்களில் ஒருவர் உலகத்தை விட்டு நீங்கும் வரை, இணைந்து நிற்போம். வாழ்க்கையின் சுக துக்கங்களைச் சரிசமமாக பங்கிடுவோம்."

சுப்பு ரத்தினம்.

AZIFAIR-SIRKALI said...

//மனிதர்களுக்குள் தான் எத்தனை வகையான ஆசைகள்//
ஹ்ம்ம். ok

azifair-sirkali.blog

மோகன் குமார் said...

// நானும் சில விசயங்களுக்கு ஆசைப்படுவேன். ஆனால் பல நேரங்களில் என்னுடைய shyness காரணமாக அதை செய்து பார்க்க முடியாமல் போய் விடும். இதே நண்பரின் கிருஸ்தவ கல்யாணத்திற்கு போவதற்கு கூட நான் வெக்கப்படுகிறேன். //

உண்மையாக எழுதியிருக்கிறீர்கள்

ஆதி மனிதன் said...

//" நாங்கள் இருவரும் வண்டியில் பூட்டப்பட்ட நுகத்தடியைத் தாங்கி இந்த வாழ்க்கையைத் துவங்கி, எங்களில் ஒருவர் உலகத்தை விட்டு நீங்கும் வரை, இணைந்து நிற்போம். வாழ்க்கையின் சுக துக்கங்களைச் சரிசமமாக பங்கிடுவோம்."//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூரி. நீங்கள் மேலே குறிப்பிட்டதை போல் எல்லா திருமணத்திலும் இதை தான் குறிப்பிடுகிறார்கள். தற்சமயம் சென்று வந்த திருமணத்திலும் கூட.

ஆதி மனிதன் said...

நன்றி அசிபர்.


@மோகன் குமார் said...
//உண்மையாக எழுதியிருக்கிறீர்கள் //

நன்றி மோகன்.

Post a Comment