Tuesday, October 2, 2012

'அம்மா' ப்ராஜக்ட்.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக நாம் தினமும் உபயோகிக்கும் கிரெடிட் கார்ட் முதற்கொண்டு, அமெரிக்கர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை முறையாக பராமரிப்பது வரை  பல உயர் தொழில்நுட்ப ப்ராஜக்ட்களில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்திருந்தாலும், அம்மா அப்பாவின் அருகில் இருந்து அவர்களின் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றி தர முடியவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே இருந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியா வந்து 'செட்டில்' ஆனதிற்கு அதுவும் ஒரு காரணம்.

என்ன தான் பெற்றோர்களுக்கு நல்ல வீடு, வசதிகள், கார், கலர் டி.வி என வாங்கி கொடுத்திருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் அதுவல்ல. அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ஒரே விஷயம் தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள் என அவர்களோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு, கதை பேசி எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அது நிறைவேறியதில் மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. காலாண்டு விடுமுறை முழுதும் குழந்தைகள் தங்கள் அம்மாச்சி, அப்பாயி, பெரியப்பா வீடு என மாறி மாறி எல்லோருடனும் ஒன்றாக இருந்து சாப்பிட்டு, பொழுது போக்கி, தூங்கியதை அவர்கள் மட்டுமல்ல பாட்டி, தாத்தாக்களும் நன்றாக 'என்ஜாய்' செய்தார்கள்.

அப்பா உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் திருநாளின் போதும் லண்டனிலிருந்தோ, கலிபோர்னியாவில் இருந்தோ வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் போது திருவிழா பற்றி விசாரித்தால், என்னாப்பா தீபாவளி, பொங்கல். நீங்கள் இல்லாதது தான் எங்களுக்கு பெரிய குறை. நீங்கள் எல்லாம் திரும்பி வந்து ஒண்ணா இருந்தாலே போதும். அப்புறம் தினம் தினம் தீபாவளி தான் என ஒரு முறை இரு முறை அல்ல, ஒவ்வொரு முறையும் சொல்லுவார்.

2004 க்கு பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் பல்வேறு காரணங்களால் அப்பா, அம்மாவோடு சேர்ந்து பண்டிகைகள் கொண்டாட முடியாமல் போய் விட்டது.  2008 இல் மீண்டும் இந்தியா திரும்பினோம். வந்து சிறிது காலம் இருக்கலாம் என முடிவு செய்து வந்தோம். ஓரிரு மாதங்கள் சென்றிருக்கும். இன்னும் ஓரிரு மாதங்களில்  தீபாவளி அடுத்து பொங்கல் என மனது கொண்டாட்டங்களுக்கு தயாரானது. 'நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை...' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இடையிலேயே தந்தை திடீரென்று காலமாகி விட்டார். இந்த வயதிலும் உலகமே இருண்டு விட்டது போன்று ஒரு உணர்வு. பெற்றோரில் ஒருவரை இழப்பது என்பது எவ்வளவு பெரிய சோகம் என்று அன்று  தான் உணர்ந்தேன்.    

அதன் பிறகு சிறிது காலம் கழித்து மீண்டும் அமெரிக்க பயணம். இம்முறை அப்பாவின் இழப்பை மறப்பதற்காகவும், அம்மாவை அழைத்துக் கொண்டு போய் அவர்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். வேலை காரணங்களால் இந்தியாவில் அம்மாவுடன் கூட இருந்து கவனிக்க முடியாமல் போனதை சரி செய்ய அவர்களை அமெரிக்கா அழைத்துக் கொண்டேன். கூடுமானவரை எல்லா இடங்களையும் சுற்றி காண்பித்தோம். அவர்களுக்கும் குழந்தைகளை தினமும் பள்ளிக்கு கொண்டு விடுவது, அமெரிக்கா வந்திருக்கும் மற்ற பெற்றோர்களுடன் வாக்கிங் போவது என நன்றாகவே அவர்களுக்கு பொழுது போனது.

அப்பா இருந்திருந்தால் அவர்களையும் அழைத்து வந்திருக்கலாம் என அவ்வப்போது வருத்தப் படுவார்கள். அவர்களே மீண்டும், அப்பாவுக்கெல்லாம்  இங்க வந்தால் ரொம்ப கஷ்டம்பா. அவர்களுக்கு போர் அடித்து விடும் என  பின்னர் சமாதானம் ஆகி கொள்வார்கள்.
 
'அம்மா'. நினைவு தெரிந்த நாளிலிருந்து எனது ஒரே முன் உதாரணம். உழைப்பு, எளிமை, தியாகம் என எங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு  அவரின் பங்களிப்பு மிக பெரிது. அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தும் கூட மற்ற குடும்ப சுமைகளால் சற்று கஷ்ட பட்டே எங்களை எல்லாம் வளர்த்தார்கள். எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை 'அம்மா' தான் பேமிலி ஹெட். வரவு செலவில் தொடங்கி, ஒரு புது கனெக்க்ஷன், சொத்து வாங்கினால் கூட அது அம்மா பெயரில் தான் வாங்குவோம். அப்பாவுக்கும் அதில் தான் விருப்பம்.

இன்று வரை அம்மாவை எங்காவது 'ஆட்டோவில்' கூப்பிட்டுக் கொண்டு போவதென்றால் ரொம்ப கஷ்டம் தான். ஆட்டோவில் ஏறக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார்கள். நாங்கள் எல்லாம் சென்னை வருவதற்கு முன்பே அவர்கள் சென்னை வந்தால், எக்மோரில் இருந்து சாந்தோம், T நகர் என்று எங்கு சென்றாலும் MTC பஸ் தான். எல்லாம் காசை மிச்சப் படுத்தவேண்டும் என்று தான். ஆட்டோவில் சென்றால் அதிகம் செலவாகும் என்று ஆட்டோவில் ஏறவே மாட்டார்கள். அதுமட்டுமிலாமல் பாதுகாப்பு கருதியும் ஏறமாட்டார்கள்.

அவ்வளவு கஷ்டத்திலும் படிப்பு ஒன்று தான் அழியா சொத்து என்று மூன்று பிள்ளைகளையும் LKG முதல் பட்ட மேற் படிப்பு வரை ஆங்கில வழிக்கல்வியிலேயே படிக்க வைத்தார்கள். அதே போல் படிப்பு விசயத்தில் அவருடைய விருப்பத்தை எங்களிடம் திணிக்கவில்லை. எங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை படிக்க வைத்தார்கள். அப்படிதான் காமர்ஸ் குரூப் எடுத்த நான் பின்னர் கம்ப்யூடர் சயின்ஸ் எஞ்சினியராக மாறினேன். பர்ஸ்ட் க்ரூப் எடுத்த என் அண்ணன் பின்னர் ஆங்கில பாடத்தில் 'டாக்டரேட்' முடித்தார்.    

எதையோ சொல்ல வந்து எது எதையோ எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆங், கடந்த ஓரிரு மாதங்களாக அம்மாவுடன் கூடவே இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு உள்ள சின்ன சின்ன உடல் பிரச்சனைகளுக்காக மருத்துவர்களிடம் அழைத்துக் கொண்டு போவதும், சிகிர்ச்சை எடுத்துக்கொள்ள உதவியதும் மனதுக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. இன்னும் சின்ன சின்ன ஆசைகள் அவர்களுக்கு நிறைய. எல்லாம், நாமே வியக்கும் விஷயங்கள். இந்த வயதிலும் அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதே என் தற்போதைய ஆசை.

சமீபத்தில் மனைவிக்கு உடல் நிலை சற்று சரி இல்லாமல் போன போது நான் ஊரில் இல்லாத நேரத்தில் ஒரு ஆண் பிள்ளை போல் டாக்டர், கிளினிக் என எல்லா இடத்திற்கும் அவர்களை அழைத்துக் கொண்டுபோய், அப்பப்பா... அது உங்களால் தான் முடியும்மா. அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுரை படி என் மனைவி ரெஸ்ட் எடுத்துக் கொள்ள மாமா வீட்டிற்கு செல்ல ஒரு மாதத்திற்கு  மேல் மூன்று (ஹி ஹி ஹி என்னையும் சேர்த்து) குழந்தைகளையும் சற்றும் சலிக்காமல் இடையிடையே உங்களுக்கு ஏற்பட்ட கண் வலிக்கிடையே நாள் முழுதும் பார்த்துகொண்டது. என்ன தவம் செய்தேனோ அம்மா. தங்களை தாயாக நான் 'பெற்றதற்கு' ?

share on:facebook

4 comments:

அமுதா கிருஷ்ணா said...

என்னுடைய அம்மா தன்னுடைய 42ஆவது வயதில் தன் கணவரை இழந்தார்.கவலை பட்டால் அது எங்களை பாதிக்கும் என்று தைரியமாய் இருப்பார். அவர் சொல்கிற கோயில்களுக்கெல்லாம் கூட்டி போவது தான் என்னுடைய பொழுது போக்கே.

Avargal Unmaigal said...

பதிவை படித்ததும் மனம் நெகிழ்ந்தது.....என்ன சொல்லவது என்றே தெரியவில்லை

இராஜராஜேஸ்வரி said...

என்ன தவம் செய்தேனோ அம்மா.
தங்களை தாயாக நான் 'பெற்றதற்கு' ?

நிறைவான வரிகள் !

சாய் said...

Super Aadhi

Post a Comment