Tuesday, March 20, 2012

இந்திய பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்த நார்வே அரசு - குற்றச்சாட்டும், திருப்பமும்.

குழந்தைகளுக்கு கையால் சாப்பாடு ஊட்டினர். அவர்களை தங்களுடன் படுக்கையில் ஒன்றாக தூங்க வைத்தனர். இது தான் நார்வே அரசின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்காக மூன்று மாதங்களுக்கு முன் நார்வேயில் வாழும் இந்திய பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் மூன்று மற்றும் ஒரு வயது குழந்தையை பிரித்து அவர்களை நார்வே அரசின் குழந்தைகள் நல்வாழ்வு மையத்தில் ஒப்படைத்தது நார்வே அரசு.

கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கு  இந்திய வெளி உறவு துறை மற்றும் நார்வே அரசுக்கு பெரும் தர்ம  சங்கடத்தை ஏற்படுத்தியது. வழக்கம் போல் நம் இந்திய மீடியாவும் பேனை பெருச்சாளி ஆக்கி நார்வே அரசை ஒரு அரக்கத்தனமாக சித்தரித்து மேலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. நார்வே அரசு ஆரம்பத்தில் இருந்து இதை மறுத்து வந்தாலும் யாரும் நம்பத் தயாராக இல்லை.

இந்நிலையில், குழந்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் இந்திய அரசு முயற்சி எடுத்துக் கொண்டிருக்க குழந்தைகளின் மாமா குழந்தைக்கு இந்தியாவில் கார்டியனாக இருப்பதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். இவை எல்லாம் நேற்று வரை. இன்று திடீர் திருப்பமாக குழந்தையின் தந்தையே குழந்தைகள் நார்வேயின் குழந்தைகள் நல்வாழ்வு மையத்தில் இருப்பதையே தாம் விரும்புவதாகவும், தன் மனைவி ஒரு கொடுமைக் காரி எனவும், பல நேரங்களில் தன்னை அடிக்கடி  அடித்து துன்புறுத்தியதாகவும்,  குழந்தைகளுக்காக இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டதாகவும்  தற்போது  தெரிவித்துள்ளார். 

இதற்க்கு ஆதாரமாக தாங்கள் பல முறை குடும்ப பிரச்சனைகளுக்காக கவுன்சிலிங் சென்றதையும் கூறியுள்ளார். மேலும் நார்வே அரசுத் தரப்பில், அக்குழந்தைகள் கடுமையான மன சிதைவுக்கு ஆளாகி உள்ளதாகவும், பெற்றோர்கள் அடிக்கடி சண்டை இட்டு கொண்டதும், கை கலப்பில் இறங்கியதும் அச் சிறு குழந்தைகளை பெரிதும் பாதித்ததால் அவர்களுக்கு  பெற்றோர்கள் மீது இருந்த பாச பிணைப்பு உடைந்து சிதைந்து போய்  விட்டதாக  குற்றம் சாட்டி உள்ளனர்.

கடைசியாக குழந்தைகளை இந்தியாவில் தத்து எடுத்து பார்த்துக் கொள்வதாக கூறி இருந்த குழந்தைகளின் மாமாவும் இன்று தன் முடிவில் இருந்து பின் வாங்கி உள்ளார். அவர் கூறுகையில், குழந்தைகளுக்கு தற்போது உள்ள வசதியான சூழ்நிலையை தன்னால் தர இயலாது என தான்  பயப்படுவதாக தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தையின் தந்தையே தன் குழந்தைகள் நார்வே வளர்பகத்தில் வளருவதையே தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உண்மை எல்லாம் வெளி வருவதற்கு முன்பே இந்திய அரசியல் வாதிகளும் (பி. ஜே. பியின் சுஸ்மா சுவராஜ் உட்பட), பத்திரிகை, தொலைகாட்சிகளும் நார்வே அரசை ஒரு நரகசுரன் போல் சித்தரித்து முடித்து விட்டன.

* நார்வே குழந்தைகள் காப்பகம் என சொன்னாலும், அவர்கள் ஒரு இந்திய குடும்பத்தின் பராமரிப்பில் தான் உள்ளனர் என்பது ஒரு கூடுதல்  செய்தி. இதிலிருந்தே தெரியவில்லையா? நார்வே அரசுக்கு குழந்தைகள்  மீது உள்ள அக்கறை.  


share on:facebook

4 comments:

Sankar Gurusamy said...

இன்றைக்கு இதெல்லாம் பொய் என்று கூறி மீண்டும் தமது பழைய நாடகங்களை மீடியா மூலம் அரங்கேற்ற கிளம்பிவிட்டார்கள். உண்மை அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

CS. Mohan Kumar said...

ஒரே குழப்பமா இருக்கு இந்த பிரச்சனை. எது நிஜம்?

ப.கந்தசாமி said...

கண்ணால் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீர விசாரித்தறிவதே மெய் என்று சும்மாவா சொன்னாங்க நம்ம பெரியவங்க.

ஆதி மனிதன் said...

நன்றி சங்கர்: ஒ அப்படியா?

நன்றி மோகன்: உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கலாம் (இந்தியாவில் இருப்பதால்).

@பழனி.கந்தசாமி said...
//கண்ணால் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீர விசாரித்தறிவதே மெய் என்று சும்மாவா சொன்னாங்க நம்ம பெரியவங்க.//

உண்மை.

Post a Comment