ஒரு காலத்தில் மாப்பிள்ளை டாக்டர். லண்டனில் இருக்கிறார், அமெரிக்காவில் வசிக்கிறார் என பெருமையாக கூறுவார்கள். கடந்த பத்தாண்டுகளில் இது மாறிப் போய், பையன் அமெரிக்காவில் சாப்ட் வேர் என்ஜினியராக உள்ளார் என பெருமையாய் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அது இன்னும் எவ்வளவு நாள் நீடிக்க போகிறது என தெரியவில்லை.
சமீப காலமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் பலருக்கும் பெண் கொடுக்க பெற்றோர்களுக்கும், திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கும் அவ்வளவாக விருப்பம் இல்லாதது போல் ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இதற்க்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் பொதுவாக சொல்லப் படுகிற காரணம், பையன் அமெரிக்காவில் இருக்கிறான், அவன் அங்கு என்ன செய்கிறான் என முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியாது, யாரிடமும் விசாரிக்க முடியாது. கெட்டவனாக இருந்துவிட்டால் என்ன செய்வது? அவனுக்கு வேறு ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால் என்ன செய்வது? இது தான் பெரிய கவலை அவர்களுக்கு.
இவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அமெரிக்காவிற்கு யாரையும் யாரும் வெத்தலை பாக்கு வைத்து அழைப்பதில்லை. IT இல் வேலை பார்த்தால் கூட அவர்களும் பல சவால்களை சந்தித்து தான் இங்கு வருகிறார்கள். அப்படி பார்த்தால், அப்படி கஷ்டப் பட்டு தன்னுடைய உழைப்பையும் திறமையையும் மட்டுமே நம்பி இங்கு வருபவர்கள் எப்படி இங்கு வந்து கெட்டு போவர்கள் என்று நம்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை. மேலும் கெட்டு போவதற்கு நம் ஊரில் தான் அதிக வாய்ப்புகள்.
நம்ம ஊர் மீடியாவும்/சினிமாவும் இதற்க்கு ஒரு காரணம். உதாரணத்திற்கு T. ராஜேந்தரின் பழைய படங்களில் காலேஜ் மாணவர்கள் எல்லோருமே காதலிப்பவர்களாகவும், சிகரெட் பிடிப்பவர்களாகவும், பிட் அடித்து மட்டுமே தேர்வு எழுதுபவர்களாகவும் மட்டுமே காண்பித்து, காண்பித்து கல்லூரி மாணவர்கள் என்றாலே அவர்கள் ஊதாரிகளாகவும், பொறுக்கிகளாகவும் மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். அது போல் தற்போது IT மக்களின் நிலைமையும் ஆகிவிடுமோ என ஐயம் ஏற்படுகிறது. IT யில் வேலை செய்யும் எல்லோரும் பப்புக்கு போவதில்லை என சொன்னால் இவர்கள் நம்பத் தயாரில்லை. நம்புங்கள்...இத்தனை வருடங்களில் எனக்கு 'பப்' எப்படி இருக்கும் என்றே தெரியாது. ஒரு முறை கூட நான் சென்றதில்லை.
இந்த விசயத்தில் வட இந்தியர்களும் மற்ற பிற தென் மாநில மக்களும் ஓகே. தமிழர்கள் தான் அமெரிக்க மாப்பிளைகளுக்கு பெண் கொடுக்கவும், பெண்கள் திருமணம் செய்து கொள்ளவும் தயங்குகிறார்கள். இத்தனைக்கும் தமிழக பெண்கள் பெரும்பாலும் நன்கு படித்து பட்டம் பெற்றவர்கள். என்னுடைய நண்பர் ஒருவர் பெண் பார்த்த போது (பெண் இத்தனைக்கும் பி.ஈ கம்ப்யூடர் சயின்ஸ் படித்தவர்) அப்பெண், இந்தியாவிற்கு திரும்பி வருவதென்றால் மட்டும் திருமணம் செய்து கொள்கிறேன் என பிடிவாதமாக கூறி விட்டார். நண்பரும் இப்படி பிடிவாதமான பெண் எனக்கு வேண்டாம் என கூறி விட்டார்.
அதே போல் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார சறுக்கலும் அமெரிக்க மாப்பிளைகளின் மவுசு குறைய ஒரு காரணம். அங்கு வாங்கும் சம்பளத்தில் பாதி இங்கு வாங்கினாலும் பரவாயில்லை. இந்தியாவில் வேலை செய்யும் மாப்பிளை தான் வேண்டும் என சிலர் இன்னும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் அறுபது வயது வரையான அரசாங்க உத்தியோக சுகம் போகவில்லை. இவர்கள் ஐம்பது வயதில் சம்பாதித்ததை IT இல் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடத்தில் சம்பாதித்தாலும், 'நிலையான உத்தியோகம்' என்ற பொலம்பல் இன்னும் நிற்கவில்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக படித்து வேலைக்கு போகும் பெண்களாக இருப்பின் அவர்கள் தற்போது இந்தியாவில் பார்க்கும் வேலையை விட விருப்பம் இல்லாமையும், தங்கள் தாய் தந்தையரை அடிக்கடி பார்க்க முடியாது என்ற காரனங்களுக்காகவும் அமெரிக்க மாப்பிள்ளைகள் வேண்டாம் என்று கூறுவதும் உண்டு.
நல்ல வேலை, இதல்லாம் நடப்பதற்கு முன் நமக்கு திருமணம் முடிந்து விட்டது...
IT மக்களின் சங்கடங்கள் பற்றிய பிரபல பதிவுகள்...
அமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்
முதிர் கண்ணன்கள்: திருமணம் ஆகாமல் தவிக்கும் IT ஆண்கள்.
share on:facebook