Friday, August 12, 2011

தேவ பிரசன்னமும் - கோவில் கொள்ளைகளும்.

சமீபத்தில் திருவாங்கூர் கோவிலின் ரகசிய அறைகள் திறக்கப்பட்டதும், இதுவரை திறக்கப்பட்ட ஐந்து அறைகளிலிருந்து ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான தங்க வைர ஆபரணங்கள் இருப்பதும் தெரிந்ததே. மீதமுள்ள அறை 'பி' எனப்படும் ஆறாவது அறையை திறப்பதற்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில் பூசாரிகள் சிலர் ஒன்று கூடி "தேவ பிரசன்னம்" எனப்படும் குறி கேட்பது/சொல்வது போலான நிகழ்ச்சி  ஒன்றை அரங்கேற்றி உள்ளார்கள். 

அப்படி "தேவ பிரசன்னம்" கேட்டதில், "பி" அறையை திறந்தால் அப்படி திறப்பவர்களின் வம்சமே அழிந்து விடும் என்றும்(அதுவும் விஷ ஜந்துக்கள்  கடித்து), அறையை  திறக்க முயற்சி நடப்பது தெரிந்தும் அதை தடுக்க பரிகார பூஜை செய்யாதது தவறு என்றும், இனிமேல் அறையை திறக்காமல் இருக்க சிறப்பு பூஜை நடத்தவேண்டும் எனவும், கடைசி வாரிசு இருக்கும் வரை ராஜ குடும்பத்தினர் அறையை திறக்காமல் இருக்க போராட வேண்டும் எனவும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அப்படியானால் இதுவரை திறந்த எல்லா அறைகளையும் இழுத்து பூட்டிவிட்டால் போதுமா? அதற்கு தற்போது போடப்பட்டிருக்கும்  பாதுகாப்பு எதுவும் தேவை இல்லையா? அறையை திறப்பவர்களின் வம்சமே அழிந்து விடுமானால், அங்குள்ள பொக்கிசங்களை கொள்ளை அடிக்க நினைப்பவர்களை சாமி சும்மா விட்டு விடுமா?

இப்படி எல்லாம் கேட்பதினால் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவோ மத நம்பிக்கையை புன்படுத்துவதாகவோ அர்த்தமில்லை. "Reality" - அதாவது எதார்த்தமாக சிந்திக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல் பட வேண்டும்.

என்னுடைய கேள்வியெல்லாம், இப்போது இவை எல்லாவற்றையும் தெரிந்து சொல்லும் இந்த ஜோதிடர்கள், இந்த அறைகளை எல்லாம் திறப்பதற்கு முன், ரகசிய அறைகள் பல கோவிலினுள் இருக்கிறது என்றும் அதில் கோடிக்கணக்கான தங்க வைர ஆபரணங்கள் இருக்கிறது  என்றும், அதை திறக்க முயற்சி நடக்கிறது என்பதையும், அதை நாம் உடனே தடுக்க வேண்டும் எனவும் ஏன் சொல்லாமல் போனார்கள். 


அது மட்டுமல்ல, இம்மாதிரியான "தேவ பிரசன்னங்களுக்கு" சட்ட ரீதியாக  என்ன மதிப்பு என்பதும் தெரியவில்லை.  மத நம்பிக்கை என்பது வேறு, ஒரு முக்கியமான நிகழ்வில் அரசோ/நீதிமன்றமோ பலவற்றையும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியது என்பது வேறு.

திருவாங்கூர் ராஜ வம்சத்திற்கும், கோவில் நிர்வாகத்துக்கும் அதரவாக வெளியிடப்பட்ட இந்த "தேவ பிரசன்னம்" அறிக்கை குறிப்பிட்ட சிலர் / அல்லது  குழுவின் ஆதரவோடும், அறிவுரையோடும் தான்  வெளியிடப்பட்டிருக்க வேண்டும்  என்பது சாதாரண ஒருவரால் கூட புரிந்து  கொள்ள முடியும்.  

மேலும் இப்படி கோடி கோடியாக பணத்தையும் பொருளையும் ரகசிய அறைகளில் பூட்டி வைப்பதால் யாருக்கு என்ன பயன். இவையெல்லாம் இப்போது அல்ல, அன்றைய காலக்கட்டத்திலேயே உபயோகப்படுத்தி இருந்தால் நம் நாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே  இருபத்தோராம்  நூற்றாண்டை சென்றடைந்திருக்கும்.

திருவாங்கூர் ரகசியமாவது பரவாயில்லை. பல வருடங்களுக்கு முன் அரசாட்சியில் நடந்தது. தற்போது  புட்ட பருத்தியில் கண்டு பிடிக்கப்பட்ட கிலோகணக்கான தங்கமும், வெள்ளியும் பண கட்டுகளும், இவைகளை என்ன சொல்வது?

வழக்கம் போல...அந்த ஆண்டவன் நேரில் வந்தால் தான் இவர்களை எல்லாம் திருத்த முடியும்.




share on:facebook

1 comment:

Madhavan Srinivasagopalan said...

//வழக்கம் போல...அந்த ஆண்டவன் நேரில் வந்தால் தான் இவர்களை எல்லாம் திருத்த முடியும்.//

கடைசில அதுதான் நடக்கப் போகுது.. கலி முடியறப்போ..

Post a Comment