Monday, August 1, 2011

கருப்பு சாமி


உலகத்திலேயே இரண்டாவது பணக்கார சாமி திருப்தி ஏழுமலையான். இப்போது திருவாங்கூர் கோவிலும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் நமக்கு பெருமைதான். ஆனால் இன்று அண்ணா ஹசாரேயும்  மத்திய அரசும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கருப்பு பணத்தை  வெள்ளை ஆக்குவது பற்றி தினந்தோறும் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை  விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மறந்து விட்டு. அது மதத்தின் பெயராலும் சாமியார்களிடமும் உள்ள கோடிக்கணக்கிலான கணக்கில் வராத அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்.

கோவில்களிலோ மற்ற வழிபாட்டு தளங்களிலோ காணிக்கை  செலுத்துபவர்கள் தங்கள் பெயர் முகவரியை பதிய வேண்டும், எவ்வளவு  காணிக்கை செலுத்துகிறார்கள் எனவும் பதிய வேண்டும் என  நாளையே  இந்திய அரசு ஒரு சட்டத்தை போட்டால் என்ன ஆகும் என நினைத்துப்பாருங்கள். கின்னஸ் சாதனையாக திருப்பதியில் அன்று தான்  முதல் முறையாக குறைந்த அளவு காணிக்கை செலுத்தப்பட்டிருக்கும். 

சரி கருப்பு பணம் தானே, எப்படியோ வெளியில் தானே வருகிறது என்று வாதிட்டாலும், இம்மாதிரி காணிக்கைகள் எவ்வாறு பிறகு செலவிடபடுகிறது  என்பதுதான்  கேள்வியே. அது இந்து கோவில்கலானாலும் மற்ற எந்த மதத்தினருடைய வழிபாட்டு தளமானாலும் காணிக்கையாக  செலுத்தப்படும் பொருள் நேரடியாக அரசுக்கு சேராது. இன்று பெரும்பாலானா காணிக்கைகள் அந்தந்த வழிபாட்டு தளங்களின் நிர்வாகத்தினரின் விருப்பத்திற்க்கேற்ப மீண்டும் சாமிகளுக்கு தங்க ஆபரணங்களாகவும்,  சுவர்களுக்கு தங்க முலாம் பூசவும் தான் பயன்படுகிறது. 

இந்தியாவில் கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்கள்  இப்படிதான்  முடங்கி கிடக்கின்றன. அதே சமயம் இன்றும், 14,853 ஆளில்லா  ரயில்வே  கிராசிங்குகள் இந்தியாவில் உள்ளது. அதாவது மொத்தம் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் அநேகமாக பாதி அளில்லாதவையே. அதனால் இதுவரை எத்தனையோ விபத்துக்கள், உயிர் இழப்புக்கள்.  இவற்றுக்கெல்லாம்  என்று நம் அரசாங்கம் நிதி ஒதுக்கி செய்யப்போகிறது. சென்னையில் இன்றும் சில பள்ளி கூடங்கள் கரும் பலகைகள் இன்றி சுவற்றில் கருப்பு வண்ணம் அடித்து அதில் எழுதிப்போடுகிறார்கள். மற்ற நகர கிராமங்களில் உள்ள பள்ளிகளின் நிலைகளை பற்றி சொல்ல தேவையில்லை.

திருப்பதி, திருவாங்கூர், புட்டபருத்தி இங்கெல்லாம் முடங்கி கிடக்கும் பணத்தையும் பொருளையும் சரியாக உபயோகப்படுத்தினாலே  போதும். பல வருடங்களாக செய்ய முடியாத பல நல்ல காரியங்களை  செய்து முடிக்கலாம். இதையெல்லாம் பரந்த மனப்பான்மையோடு எல்லோரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

யாருடைய மதத்தையோ, மனதையோ புண்படுத்துவது என் நோக்கமல்ல. இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான மதம் சம்மந்தப்பட்ட ட்ரஸ்ட் மற்றும் நிறுவனங்கள் மதத்தின் பெயராலும் சட்டத்தில் உள்ள சிறுபான்மை,  பெருபான்மை என வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டு மக்களையும்  அரசாங்கத்தையும்  இன்றும் ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றன.

ஹ்ம்ம்...இவர்களையெல்லாம் அவர்கள் வழிபடும் ஆண்டவன் வந்தால் தான் திருத்த முடியும்.



share on:facebook

1 comment:

அமுதா கிருஷ்ணா said...

எந்த மதத்தினரும் ஒத்துக் கொள்ள போவதில்லை.நாம் புலம்பிட்டே இருக்க வேண்டியது தான்.

Post a Comment