Sunday, October 20, 2013

காணாமல் போன என் ஐ-போன்


கடந்த சனியன்று தி. நகர் சென்றேன். ஒரு சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று. டிராபிக், பார்க்கிங் பிராப்ளம் இவற்றை தவிர்க்க மாநகர பேருந்தில் பயணித்தேன். ரொம்பவும் ஜாக்கிரதை  உணர்வுடன் பர்ஸ்சை பின் பாக்கட்டிலிருந்து முன் பாக்கட்டிற்கு மாற்றி இருந்தேன். அலை பேசி மட்டும் எப்போதும் போல் பெல்டில் மாட்டக்கூடிய பவுச்சுடன் பத்திரமாக முன் பக்கம்.

சில நேரங்களில் மாநகர பேருந்து பயணம் மிகவும் வசதியாக எனக்கு தெரிகிறது. நெற்குன்றத்திலிருந்து நேராக தி. நகருக்கு ஜஸ்ட் ஒன்பது ரூபாய் செலவில் சென்று விடலாம். தி. நகர் பேருந்து நிறுத்தத்தை அடையும் முன்பே ரங்கநாதன் தெரு சந்திப்பில் இறங்கி விட்டேன். போக வேண்டிய இடம் முன்னாலேயே கடந்து விட்டதால் மீண்டும் திரும்பி நடந்தேன்.

ஐநூறு அடி நடந்திருப்பேன். தி. நகர் பேருந்தில் வர எவ்வளவு நேரம் ஆனது என்று யோசித்தபடியே நடந்தேன். தி. நகர் கூட்டத்தில் கையில்  வாட்சை வேறு ஏன் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்ற அதீத ஜாக்கிரதையால் அன்று அதையும் கலட்டி வைத்து விட்டு தான் வந்தேன். சரி நேரம் தற்போது என்னவென்று பார்ப்போம் என்று ஐபோன் பவுச்சை ஓபன் பண்ண கையை வைத்தேன். அப்படியே ஒரு வினாடி உலகமே இருண்டு விட்டது. உடலில் உள்ள ஐம்புலன்களும் வேலை செய்ய மறுத்து விட்டன. ஆம். பவுச் ஏற்கனவே ஓபன் ஆகி இருந்தது. உள்ளே போன் இல்லை.

ஓரிரு வினாடிகள் சுதாரிப்பதற்குள் மண்டைக்குள்ளே என்னனவோ ஓடுகிறது. உள்ளே இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போடோக்கள், காண்டாக்ட்டுகள், நோட்பேட் அப்டேட்ஸ் அது இதுவென்று அய்யகோ...என்ன செய்வேன். போன் மட்டும் போனால் பரவாயில்லை. அதிலிலுள்ள டேட்டா தான் மிகவும் முக்கியம். அதை விட முன்பக்கம் வைத்து இருந்த ஒரு போனை கூட நம்மால் பத்திரமாக பாதுகாக்க முடியவில்லையே என்று என் மீதே எனக்கு ஏற்பட்ட கோவம், அவமானம்.

வீட்டில் சாமி இல்லை என்று மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வந்தேனே. இனி வாழ்க்கை பூராவும், சாமியை திட்டினீங்கள அதான் சாமி தண்டனை கொடுத்துடுச்சு என்று சொல்லி சொல்லி காட்டுவார்களே என்ற கவலை. இதை எப்படி குழந்தைகளிடம் முதலில் சொல்வது. அப்படி பத்திரமா போகணும், இப்படி பத்திரமா வச்சுக்கணும்னு எல்லாம் எங்களுக்கு சொல்வீங்களே இப்போ நீங்க...?

போலீஸ் பீட் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்றால் அது ஒரு ஐநூறு அடி தாண்டி இருந்தது. அங்கு போவதற்குள் என் போனை எடுத்தவன் தப்பித்து விடுவானே. சரி, அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம? ஹூஹூம்..என்ன செய்வது என்று யோசித்த கணத்தில். இது நடந்தது எல்லாம் ஓரிரு வினாடிகளில் தான். ஏதோ ஒன்று உள் மண்டைக்குள் உறுத்தியது. அது இப்போ, இப்போ தான் இந்த விநாடி தான் நம்ம போன் திருடு போய் விட்டது என்று ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லியது. அதை உடனே என் மூளை ஏற்றது.

சடாரென்று திரும்பி எதிர் திசையில் நடக்க துவங்கியவன், அரக்க பரக்க சுற்றும் முற்றும் எதிரே வந்தவர்களை எல்லாம் திருடர்களாகவே பார்த்தேன். ஒரு இரண்டடி நடந்திருப்பேன். எதிரே வந்தவர்களில் ஒருவர், கையில் ஒரு போனை வைத்துக்கொண்டு  ஏதோ செய்து கொண்டே நடந்து கொண்டிருந்தார். என்னையும் அறியாமல் என் கை அவரின் கையை பற்றியது. ஏய்....என்று சிறிது மிரட்டலான அதட்டல், என்னை கேட்காமல் என் குரல் அவ(ரை)னை மிரட்டி இருக்க வேண்டும்.

சார், இது உங்களுதா என்று என் போனை, ஆம். அது என் போனே தான். என்னிடமே நீட்டினார். கீழே கிடந்துச்சு என்று என்னிடம் மறு பேச்சு பேசாமல் கொடுத்து விட்டு எந்த சஞ்சலமும் இல்லாமல் தன் நடையை தொடர்ந்தார். ஒரு கணம் என் கண்களால் என்னையே நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் என் போனை பார்த்தபடியே என் கண்கள் கலங்கி விட்டன. அடுத்த நிமிடமே பவுச்சுடன் எடுத்து முன் பாக்கட்டில் வைத்து விட்டு நடையை தொடர்ந்தேன்.

உண்மையிலேயே நான் நடந்து சென்ற போது போன் பவுச்சை விட்டு கீழே விழுந்து, அதை அவர் எடுத்து என்ன செய்வது ஏது செய்வது என்று நினைத்துக் நடந்து வந்த அந்த தருணத்தில் தான் அவர் என் எதிரே தென் பட்டாரா? அவர் திருடியது போலும் எனக்கு முழுமையாக தோன்றவில்லை. பின் ஏன் போனை கொடுத்து விட்டு நிற்காமல் சென்று விட்டார்? ஒரு வேளை அவர் நல்லவராக இருந்து, நாம் அவரை தவறாக நினைத்து போலீஸில் சொல்லி விடுவோமோ என்று பயந்து அவர் வேறு ஏதும் சொல்லாமல் நடையை கட்டி விட்டாரா? இல்லை அவன் செல் போன் திருடனே தானா?  ஒன்றுமே புரியவில்லை இன்னமும்.

எப்படியோ...காணமல் போன மிக முக்கியமான ஒரு பொருள், அதும் தி.நகர் போன்ற இடத்தில், தீபாவளி நேரத்தில். திரும்பி கிடைத்தது என்றால்?

Oh My God... 

share on:facebook

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கும் வாய்க்காது... வாழ்த்துக்கள்... இனிமேல் கவனமாக இருக்கவும்... இனி வீட்டில் திட்டு + அறிவுரை இருக்காது என்று நினைக்கிறேன்...!

MUTHU said...

I THING YOU ARE LUCKY MAN

pudugaithendral said...

வாழ்த்துக்கள். தி நகர்ல காணமபோன ஐபோன் உடனடியா கிடைச்சிருக்கே!!!! நீங்க சொல்லியிருப்பது போல இப்ப செல்போன் இப்ப வெறும் போன் மட்டுமில்லையே..... ஸ்மார்ட்போன் போனா பல டேடாக்கள் போயிடும். உண்மைதான்

வெளங்காதவன்™ said...

பாஸ்....Find My iphone அபிளிகேசன வைங்க பாஸு. icloud ல ட்ரெஸ் பண்ணிப்புடலாம். அப்புறம், காண்டக்ட் அண்ட் போடோஸ் எல்லாம் அப்பப்ப கம்பியூட்டர் பொட்டில/icloudல பேக்அப் எடுத்துக்குங்க.

முக்கியமா, இன்சூரன்ஸ் எடுங்க போனுக்கு.

;-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

எப்படியோ அந்த கணம் அவனே திருடனாய் இருந்தாலும் அவனுக்கு நன்றி சொல்லலாம்... தப்பே இல்லை...

Anonymous said...

If you say this incident to your wife again your wife will say..."this has happened to prove you there is god."......moral..wife is always wife...(On funny note)

Post a Comment