Sunday, December 5, 2010

வாடகை சைக்கிள்


வாடகை சைக்கிள்.

நான் சிறு வயதாக இருந்த போது தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் கடையாவது இருக்கும். அப்போதெல்லாம் சற்று வசதியானவர்கள் மட்டுமே ஸ்கூட்டரோ பைக்கோ வைத்திருப்பார்கள். அதுவும் ஒன்று பஜாஜ் செட்டாக் அல்லது இண்டு சுசூகி போன்று ஒன்று இரண்டு வகைகளை தான் பார்க்க முடியும். பிறகு டி வி எஸ் 50 வந்த பிறகு ஓரளவு கீழ்தட்டு மக்களும் வாங்கும் வகையிலும் இருந்தது.


இப்போதெல்லாம் பைசாவிற்கு வழியில்லை என்றாலும் பல்சர் வண்டி வாங்கிவிடுகிறார்கள். சரி மீண்டும் வாடகை சைக்கிள் விசயத்திற்கு வருவோம். எங்கள் தெருவில் ஒரு வாடகை சைக்கிள் கடை உண்டு. சனி ஞாயிறு என்றால் அங்கு படை எடுத்து சென்று விடுவோம்.


எல்லாம் அங்குள்ள ஒன்றிரண்டு சிறிய சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கு தான். நாம் போகும் முன்பே வேற ஒருத்தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டால் அவன் வரும் வரை அங்கேயே உக்கார்ந்து இருக்க வேண்டி இருக்கும். அவன் எப்ப வருவான் எப்ப வருவான் என்று அடிக்கு ஒரு தரம் வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டே இருப்போம். ஒரு வழியாக அவன் வந்து ஸ்டைலாக நிறுத்திய அடுத்த நொடி அந்த சைக்கிளை பெற ஒரு போரே நடக்கும்.


இதில் சில விசமிகள் சைக்கிளை திரும்ப விடுவது போன்று வந்து "அண்ணே மணி என்னாச்சுனே" என கேட்பான். மணியை சொன்னவுடன் அப்படியா சரி அப்ப இன்னும் அரை மணி நேரம் எனக்கு காசு இருக்கு என திரும்பவும் பறந்து விடுவான். மணிக்கு ஒரு ரூபாயோ என்னமோ. எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சிலர் வேண்டும் என்றே வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு கொடுக்கும் காசில் ஐந்து பத்து பைசாவிற்கு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விட்டு கடைகாரரிடம், "அண்ணே, பத்து பைசா கீழ எங்கயோ விழுந்துடுச்சுன்னே" என பரிதாபமாக பார்ப்பான். அவரும் சரி சரி வுட்டுட்டு போ என்பார்.


இதையெல்லாம் விட இன்றும் என் மனதில் பாரமாக தோன்றும் காட்சி அக் கடையில் வேலை பார்த்த எங்கள் வயது சிறுவன் ஒருவன். அவன் பெயர் தற்போது ஞாபகம் இல்லை. சைக்கிள் கடை ஓனரிடம் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தலையில் குட்டு வாங்கிக்கொண்டே இருப்பான். எப்பொழுதும் அழுக்கு சட்டையும் அழுக்கு அரை கால் டிராயரும் அணிந்து கொண்டு சைக்கிள் டூயுப் பஞ்சர் பார்ப்பது, சைக்கிளுக்கு காற்றடிப்பது போன்ற வேலைகளை காலையிலிருந்து மாலை வரை அசராமல் பார்ப்பான்.


பொழுது முழுவதும் சைக்கிள்களோடு உறவாடி கொண்டிருந்தாலும் காலையும் மாலையும் தன் கால்களே தனக்கு உதவி என நடந்தே வீட்டிற்கு போய் வந்து கொண்டிருப்பான். ஒரு தடவை கூட எங்களை போல் அவன் வயதிற்கு ஏற்ற சிறிய சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றி பார்த்ததில்லை. ஆனால் கடைகார அண்ணாச்சியும் நல்லவர் தான். நாள் முழுதும் வேலை வாங்கினாலும், குட்டினாலும் மதியம் அவனுடன் சேர்ந்து தான் சாப்பிடுவார். கறி குழம்பு ஆனாலும் மீன் குழம்பு ஆனாலும் அவனுக்கு கொடுத்துவிட்டு மீதி இருந்தால் தான் அவர் சாப்பிடுவார். கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும்.


சற்று வளர்ந்த பின்பு வெளி இடங்களுக்கு போகும்போது குறிப்பிட்ட இடத்திற்கு பேருந்தில் சென்றுவிட்டு அங்கிருக்கும் சைக்கிள் கடை ஒன்றில் சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வோம். அப்போதெல்லாம் மினி பேருந்து, ஆட்டோ, கால் டாக்சிகள் இல்லை. பேருந்து செல்லாத இடமாக இருந்தால் வாடகை சைக்கிள் தான் ஒரே சிறந்த வழி.


வெளி ஊராகவோ தெருவாகவோ இருந்தால் ஆள் தெரியாமல் சைக்கிள் கொடுக்க மாட்டார்கள். யாரவது தெரிந்தவர் சொன்னால்தான் கொடுப்பார்கள். சிறு வயதில் சைக்கிள் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். தஞ்சையிலிருந்து நானும் என் நண்பனும் (ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு நண்பன் சேருவான்) சைக்கிளிலேயே திருச்சி வரை சென்று வருவோம். அதுவும் நேர் வழியில் செல்லாமல், தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து கல்லணை, துவாக்குடி என்று ஊர் முழுவதும் சுற்றி திருச்சி செல்வோம்.


அது போல் எங்கள் உறவினர்கள் வீட்டுக்கு நீடாமங்கலத்திற்கு சைக்கிளிலே செல்வோம். ஏழாவது எட்டாவது படிக்கும் வயதாக இருந்ததால் சில சமயம் அவர்கள் என்னப்பா? வீட்ல சொல்லிட்டுதானே வந்தே? என ஆச்சிரியமாக கேப்பார்கள்.


சைக்கிள் கடைகளை பற்றி சொல்லும் போது தஞ்சையில் இருந்த மிகவும் பிரபலமான "மனோகரன்" சைக்கிள் கடை பற்றி கூறித்தான் ஆகவேண்டும். தஞ்சையிலுள்ள நாஞ்சிக்கோட்டை சாலையில் மனோகரன் சைக்கிள் கடை மிகவும் பிரபலம். இப்போது இருக்கா என தெரியவில்லை. அவர் மட்டும் தான் சுமார் நூறு சைக்கிள்கள் அப்போதே வைத்திருந்தார். சைக்கிள் எடுப்போர் பெயர், எடுக்கும் நேரம் ஆகியவற்றை ஒரு நோட்டில் குறிப்பதற்கென்றே ஒருவர் இருப்பார். திரும்ப கொடுக்கும் சைக்கிள்களில் எல்லா பாகமும் இருக்கிறதா என செக் செய்ய மட்டும் இன்னொருவர் இருப்பார். அவரின் கடையில் ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இருக்காதா பின்னே? நூறு சைக்கிள்கள் ஆச்சே!

அதே போல் இருதயபுரம் போஸ்ட் அபீஸ் பக்கம் "இயேசு" சைக்கிள் கடை என்று ஒன்று இருந்தது. அவரிடம் இருந்த அனைத்து சைகிள்களுமே ஓட்டை தான். இருந்தாலும் நல்ல சைக்கிள்கள் உள்ள பக்கத்து கடையில் எடுக்காமல் அவரிடம் தான் வந்து எல்லோரும் சைக்கிள் எடுப்பார்கள். எல்லாம் பழக்க வழக்கத்தினால் நடக்கும் வியாபாரம்.

ரயிலடி ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள G.M. சைக்கிள் மார்ட் சைக்கிள் உதிரி பாகங்களுக்கு மிகவும் பிரபலம். கடை சிறியதாக இருந்தாலும் பாரம்பரியமாக அந்த கடையை வைத்துள்ளார்கள். அவர்களுக்கென்றே வாடிக்கையாளர்கள் உண்டு. விலை எதுவாக இருந்தாலும் வாங்கும் ஆளுக்கேற்றவாறு அதிகபட்சம் விலையை குறைத்தே விற்பனை செய்வார்கள். தற்போதும் அக்கடை உள்ளது.

ஹீரோ சைக்கிள்கள் அப்போது பிரபலம். அதே போல் இப்போதுள்ள B.S.A. சைக்கிள்கள் சற்று அதிக விலை உள்ள சைக்கிள்கள்.

சிறுவர்களாகிய எங்களுக்கென்று சைக்கிள் எல்லாம் அப்போது வாங்கி கொடுத்ததில்லை. இப்போது என் பிள்ளைகள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே சைக்கிள் கேட்டு அடம் செய்து வாங்கிவிட்டார்கள்.

சைக்கிள்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதன் தொடர்ச்சியா அதையும் எழுதலாம் என உள்ளேன். சரி ஜூட்...
share on:facebook

13 comments:

Philosophy Prabhakaran said...

வசீகரமான எழுத்து நடை... பழைய ஞாபகங்களை வரவழைத்தது...

Philosophy Prabhakaran said...

// மணிக்கு ஒரு ரூபாயோ என்னமோ. எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. //

அரைமணிநேரத்திற்கு இரண்டு ரூபாய்... ஒருமணிநேரத்திற்கு நாலு ரூபாய்... இது நான் வாடகை சைக்கிள் ஒட்டிய காலம் அதாவது பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த கணக்கு...

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Philosophy Prabhakaran said...

நான் வலைப்பூவிற்கு வந்த புதிதில் இதே பச்சை நிற டெம்ப்ளேட் தான் வைத்திருந்தேன்... இப்போது புதுசா புதுசா நிறைய வந்திருக்கு... மாத்திக்கலாமே...

Chitra said...

ஓரம்போ..... ஓரம்போ.... சைக்கிள் வண்டி நினைவுகள் வருது..... தொடரட்டும்!

Madhavan Srinivasagopalan said...

நல்ல நினைவலைகள்.. நானும் இதுபோன்று அனுபவித்திருக்கிறேன்.
தெரியாத ஒரு கிராமத்தில் நான்கு கிலோமீட்டர் செல்ல சைக்கிள் எடுப்பதற்கு என்னுடைய கல்லூரி அடையாள அட்டையை கொடுத்துவிட்டு சென்று வந்தேன். எங்கு சென்றாலும் அடையாள அட்டை வைத்திருபாது நல்லதல்லவா ?
அடிக்கடி எழுதுங்கள்..
எப்போதுதாவது எழுதுவது எனக்கு வருத்தமளிக்கிறது..

CS. Mohan Kumar said...

எனக்கும் இத்தகைய மலரும் நினைவுகள் உண்டு

CS. Mohan Kumar said...

எத்தனை பேர் உங்களை எழுத்து நடை அருமை / தொடர்ந்து எழுதுங்கள் என்கிறார்கள்; கவனியுங்கள் . அலுவல் வேலை பாதிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்

ஆதி மனிதன் said...

@philosophy prabhakaran
//உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது...//

நன்றி நன்றி நன்றி..."பிரபாகரன்". பேரே சும்மா அதிருதுல.

//வசீகரமான எழுத்து நடை... //

மிகவும் நன்றி பிரபாகரன். என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். நிசமாவா?

//ஒருமணிநேரத்திற்கு நாலு ரூபாய்... அதாவது பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த கணக்கு... //

அப்போ நான் சொன்ன கணக்கு சரிதான்.

//நான் வலைப்பூவிற்கு வந்த புதிதில் இதே பச்சை நிற டெம்ப்ளேட் தான் வைத்திருந்தேன்... //

நேரம் கிடைக்கும் போது நிச்சயம் மாற்றம் செய்கிறேன்.

ஆதி மனிதன் said...

@Chitra
//சைக்கிள் வண்டி நினைவுகள் வருது..... தொடரட்டும்! //

நன்றி சித்ரா மேடம். கண்டிப்பாக தொடருகிறேன்.

ஆதி மனிதன் said...

@Madhavan Srinivasagopalan

//...அடிக்கடி எழுதுங்கள்..எப்போதுதாவது எழுதுவது எனக்கு வருத்தமளிக்கிறது.. //

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் மாதவன். நீங்கள் இனி வருத்தப்பட வேண்டாம்.

ஆதி மனிதன் said...

@Mohan
//எத்தனை பேர் உங்களை எழுத்து நடை அருமை / தொடர்ந்து எழுதுங்கள் என்கிறார்கள்; கவனியுங்கள் . அலுவல் வேலை பாதிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்//

நிச்சயம் முயற்சிக்கிறேன் மோகன். நான் ஏற்கனவே கூறியது போல் உங்களை போன்றோர் தரும் ஆதரவும் ஊக்கமும் தான் நான் இன்னும் இன்னும் எழுதுவதற்கு முக்கிய கரணம். மீண்டும் நன்றி.

ADMIN said...

ரசித்து படிக்கு வைக்கும் எழுத்து நடை.. தொடருங்கள்..!

நன்றி! வாழ்த்துக்கள்..!

Post a Comment