Wednesday, December 8, 2010

லண்டன் டு பாரிஸ்.


ஆக்காஷவாணி, செய்திகள் வாசிப்பது "சரோஜ் நாராயண்சாமி". - தற்போது உள்ள சூரியம் எப். எம்., சந்திரன் எப். எம். எல்லாம் வருவதற்கு முன் அகில இந்திய வானொலி மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த போது டெல்லி அலைவரிசையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவரின் குரலுக்கு பலர் ரசிகர்களாக இருந்தார்கள். அப்படி ஒரு தமிழ் உச்சரிப்பு, கணீரென்ற குரல் வளம்.

இனி என்னைப்பற்றி: செய்திகள் சுவாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இணையம், செய்தித்தாள், தொலைக்காட்சி என்று எதுவாக இருந்தாலும் மாய்ந்து மாய்ந்து செய்திகளை படிக்கும் பழக்கம் எனக்கு. அதில் என்னை கவர்ந்த சுவாரிசியமான செய்திகள் இருந்தால் அதை எல்லோரிடமும் பகிர்ந்தும் கொள்வேன்.

சரி இப்ப தலைப்பிற்கு வருகிறேன்...லண்டன் டு பாரிஸ்.

லண்டன்: சமீபத்தில் லண்டனுக்கு சென்ற இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு நாட்டு அதிபராக இருந்தும் விமான நிலைய புற வாசல் வழியாக வெளியே செல்லும் நிலைமை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லை. அவர் கலந்து கொள்வதாக இருந்த ஆக்ஸ்போர்ட் யூனியன் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இது எல்லாவற்றுக்கும் காரணம் லண்டனில் உள்ள தமிழர்கள். இலங்கை இனப்போராட்டத்தில் அவர் நடத்திய படுகொலைகளை கண்டித்து கொட்டும் பணியையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் அவர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்ததுதான்.

எனக்கு தெரிந்து எந்த ஒரு நாட்டு அதிபரும் இது மாதிரியான ஒரு எதிர்ப்பை தங்கள் பதவிக்காலத்தில் சந்தித்து இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். வீர்கள் அணிவகுப்பு மரியாதை, அமைச்சர்கள் வரவேற்பு என இருந்திருக்க வேண்டிய ஒரு நாட்டு அதிபரின் பயணம் இப்படி ஆகிப்போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

போர் முடிந்து இரண்டு ஆண்டு ஆகியும் இன்னமும் இலங்கை தமிழர்களுக்குள் தகித்துக்கொண்டிருக்கும் நெருப்பு அவர்களின் போராட்டமும் பிரச்சனைகளும் இன்னமும் தீரவில்லை என்றே காட்டுகிறது.

பாரிஸ்: பாரிசிலிருந்து ஜூலை 2000 ஆம் ஆண்டு கிளம்பிய (Concord) கான்கோர்டு விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே தீ பிடித்து வெடித்து சிதறியது. அந்த விபத்திற்கு காரணம் கான்கொர்டு விமானம் கிளம்புவதற்கு முன் கிளம்பிய காண்டினண்டல் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து கழன்று விழுந்த ஒரு சிறு இரும்புத்துண்டு. ரன்வேயில் விழுந்து கிடந்த அந்த சிறு இரும்புத் துண்டு கான்கோர்டு விமானத்தின் டயர்களை கிழித்து, கிழிந்து விழுந்த அந்த டயர் துண்டுகள் விமானத்தின் பெட்ரோல் டாங்க்கை சென்று தாக்கி ஓட்டை போட்டதால் தான் இந்த மாபெரும் விபத்து ஏற்பட்டது என்று இறுதியாக அறிவித்துள்ளார்கள்.

இவ்விபத்திற்கு காரணமானவர்கள் என்று காண்டினெண்டல் ஏர்லைன்சில் வேலை பார்த்த மெக்கானிக் ஒருவருக்கும் மற்றும் ஒருவருக்கும் அபராதமும் கடும் சிறை தண்டனையும் அளித்துள்ளார்கள்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என கூறுவார்கள். இங்கு அதுவே பல பேரின் உயிரை எடுத்துள்ளது.

கான்கொர்டு பற்றிய சுவாரசியமான சில தகவல்கள்:

* இது ஒரு அதிவேக விமானம். சாதாரண தொலை தூர விமானங்களை காட்டிலும் இது இருமடங்கு வேகம் செல்லக்கூடியது. பாரிசிலிருந்து நியூயார்க் செல்ல வெறும் மூன்று மணி நேரம்தான். சாதாரண விமானங்கள் சுமார் 8 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

* மற்ற விமானங்கள் 30,000 அடி உயரத்தில் பறந்தால் இது 60,000 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு தகுந்தாற்போல் தான் அதன் வேகம் இருக்கும்.

* அதே போல் பயணக் கட்டணமும் மற்ற விமானத்தை விட பன்மடங்கு அதிகம்.

* கான்கொர்டு விமானம் ஒரே ஒரு முறைதான் விபத்துக்குள்ளாகியது. அது ஜூலை 2000 ஆண்டு நடந்த இந்த ஒரு விபத்து தான்.

மீண்டும் புதிய செய்திகளுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது...ஆதி.
share on:facebook

4 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

சுவராசியமாய்தான் இருக்கிறது!

Madhavan Srinivasagopalan said...

நல்ல தகவல்.... என்னோட பிரண்டு ரெண்டு நாளைக்கு முன்னாடி இதச் சொன்னான்..

Chitra said...

இன்னும் நிறைய செய்திகளுடன் அடிக்கடி வாங்க ஆதி, சார்!

ஆதி மனிதன் said...

நன்றி சை. கொ. ப., மாதவன், சித்ரா மேடம்.

Post a Comment