Friday, January 7, 2011

புத்தாண்டில் ஒரு புண்ணியம்

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.

புத்தாண்டு தினத்தன்று பலரும் பலவிதமாக புது வருடத்தை வரவேற்றிருப்பார்கள். புத்தாண்டு உறுதிமொழி என்பது ஜாதி மத பேதமின்றி உலகெங்கும் உள்ள பல தரப்பு மக்களும் எடுத்துக்கொள்ளும் ஒரு நல்ல விஷயம். சிலர் உறதி எடுத்துக்கொண்ட முதல் நாளே இன்று புத்தாண்டு ஆதலால் நாளை முதல் தான் உறுதிமொழி செயல்படுத்தப்படும் என்று அன்றே எடுத்த உறுதியை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம். உண்மையான மகிழ்ச்சி என்பது நம் மனதளவில் ஏற்படுவது. நாம் மகிழ்ச்சியாய் இருப்பதுபோல் வெளியில் காட்டிக்கொள்ளலாம். ஆனால் நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருக்கின்றோமா என்பது நமக்கு மட்டும் தான் தெரியும். புத்தாண்டு போன்ற தினங்களில் இது போன்ற மகிழ்ச்சி ஓரளவிற்கு எல்லோருக்கும் ஏற்படும். நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாய் இருப்பதை பார்க்கும் போது அது நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

ஆனால் அப்படி ஒரு சுற்றமும் நட்பும் இன்றி அதரவற்றவர்களாக பல சிறார்களும் முதியவர்களும் இன்று பல சேவை இல்லங்களில் தங்கள் வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு புத்தாண்டும் பொங்கலும் ஒன்றுதான் - யாராவது வந்து அவர்களிடம் அன்பு காட்டும்வரை.

சென்ற வருடம் இந்தியாவில் இருந்தபோது எங்கள் நிறுவனத்தின் சார்பில் தீபாவளி அன்று சென்னையில் உள்ள ஒரு அதரவற்ற சிறுவர் நிலையத்தில் அவர்களுடன் தீபாவளியை கொண்டாடும் விதமாக ஒரு குழு அவர்களுக்கு புத்தாடை, பட்டாசுகள் இனிப்புகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு காலை முதல் மாலை வரை அவர்களுடனேயே தீபாவளியை கொண்டாடினோம். மாலை அவர்களிடம் இருந்து விடைபெறும் போது ஏதோ நம் வீட்டுப்பிள்ளைகளை விட்டுவிட்டு பிரிவதை போல் ஒரு மண இறுக்கம். அவர்களும் நாள் முழுவதும் மாமா, அங்கிள் ஆண்டி என எங்களுடன் உறவாடிவிட்டு நாங்கள் கிளம்பிய பிறகு ஏற்படபோகும் வெறுமையை நினைத்தோ என்னவோ அவர்கள் கண்களில் கண்ணீர் பெருகுவதை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

வெளியில் வரும்போது சேவை இல்லத்தின் நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, இப்போதெல்லாம் ஓரளவு எங்களுக்கு உதவிகள் வருகிறது ஆனால் இவ்வாறு யாராவது வந்து அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டால் மட்டுமே இங்கிருப்பவர்களிடம் உண்மையான மகிழ்ச்சியை காணமுடிகிறது என கூறியது உண்மை என்றே எங்களுக்கு தோன்றியது.

இன்று CSR - Corporate Social Responsibility எனப்படும் சமூக பொறுப்புகளை பல பெரிய நிறுவனங்கள் எடுத்து செய்துகொண்டிருக்கிறது. அதே போல் தனிப்பட்ட நபர்களும் சிலர் வெளியில் தெரிந்தும் சிலர் வெளியே தெரியாமலும் இம்மாதிரி பணிகளை செய்து கொண்டுதான் உள்ளார்கள். ஆனால் நான் கூறியபடி நம்மால் முடிந்தால் என்றாவது ஒரு நாள் இவ்வாறு சேவை நிலையங்களுக்கு சென்று வந்தால் நமக்கும் ஒரு புண்ணியம் நிச்சயமாக கிடைக்கும்.

இதேபோல் சமூகத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் இன்னும் ஒரு பிரிவு, பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து படித்து வாழ்கையில் முன்னேற துடிக்கும் திறமையுள்ள ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ மாணவிகள். அவ்வப்போது பத்திரிக்கைகளிலோ வலை தளங்களிலோ வரும் செய்திகளை பார்த்து பலரும் தங்களால் முடிந்த உதவிகளை இவ்வாறான ஏழை மாணவர்களுக்கும், உதவி தேவைப்படும் (அரசு) பள்ளிகளுக்கும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் நாம் உதவிகளை செய்ய நினைத்தும் முழுமையான விபரங்கள் இன்றி எங்கு யாருக்கு எப்படி உதவி செய்வது என தெரியாமல் விட்டுவிடுபவர்களும் உண்டு. அவ்வாறு உங்களுக்கு உதவி செய்ய தோன்றினால் வலை உலக நண்பர் சாய்ராமின் வலைதளத்திற்கு சென்று நீங்களும் உதவிகள் செய்யலாம்.

தான் படித்த பள்ளியை மறக்காமல் இன்றும் உதவிகளை செய்துவரும் நண்பர் சாய்ராம் Really Great.

புத்தாண்டில் முதல் பதிவாக இந்த பதிவை போடவேண்டும் என்றே காத்திருந்தேன். ஏதோ நம்மால் ஆன முயற்சி. புத்தாண்டில் ஒரு புண்ணியம்.நன்றியுடன்.....
share on:facebook

3 comments:

Madhavan Srinivasagopalan said...

புதிய ஆண்டில்.. நல்ல ஒரு செய்தியுடன் ஆரம்பம்.. வாழ்த்துக்கள் நண்பரே

மோகன் குமார் said...

Very good news as the first post in new year.

சாய் said...

Thank you Aadhi.

Post a Comment