Tuesday, January 11, 2011

என் ஜோடி மஞ்ச குருவி...அண்ணாதுரை? மர்த் டப்பிங் மாவீரன் சார்.

கிரிதரன்? விக்ரம் சார்.

சுப்பிரமணி? என் ஜோடி மஞ்ச குருவி சார்.

என்ன ஒண்ணும் புரியலையா மக்கா? வகுப்பாசிரியர் வருகை பதிவு (attendance) எடுக்கும் போது ஒவ்வொருவர் பெயராக கூப்பிடும் போது 'எஸ் சார்' என கூறுவதற்கு பதிலாக அப்போது வந்த திரை படங்களின் பெயரையோ, பாடலின் பெயரையோ பதிலாக கூறி வகுப்பசிரியரை குழப்பி/திகலடைய செய்வது எங்களுக்கெல்லாம் ஒரு விளையாட்டு.


தஞ்சை தரணியில் அப்படி ஒன்றும் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவு பெரிய பள்ளி அல்ல அது. ஆனால் அதற்கென்று சில சிறப்பம்சங்கள் அப்போதே உண்டு. 'அரசர் மேல்நிலை பள்ளி'. ஆம், பெயரிலேயே அரசரை தாங்கி இருந்த பள்ளி அது. அமெரிகாவில் பிறந்து வளரும் இந்திய குழந்தைகள் போல் அது ஒரு வித்தியாசமான பள்ளி.


1 . அரசுப் பள்ளியாகவும் இல்லாமல் தனியார் பள்ளியை போலும் இல்லாமல் 'சத்திரம் அட்மினிஸ்ரேசன்' என்று மாவட்ட கலெக்டரின் நேரடிப் பார்வையில் இயங்கிய ஒரு டிரஸ்டின் பள்ளி.

2 . பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியம் மட்டுமே, ஆனால் பிளஸ் ஒன் பிளஸ் டூ மட்டும் ஆங்கில மீடியமும் உண்டு.

3 . மேலும் அது மட்டுமே தஞ்சை நகரத்தில் அப்போதிருந்த ஒரே கோ எஜுகேசன் பள்ளி. ஹி ஹீ... 

4 . எனக்கு தெரிந்து தஞ்சை மாவட்டத்திலேயே காமர்ஸ் குரூப்  ஆங்கில மீடியத்தில் போதிக்கப்பட்ட ஒரே பள்ளி.

5 . Last but not the least நான் அங்கே படித்தேனாக்கும். இன்னொரு ஹி ஹீ...

அரசுப் பள்ளியை போன்றதானாலும் எங்கள் பள்ளியில் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களும் அறிவு ஜீவிகள், முத்துக்கள் என்றே சொல்லலாம். இல்லையென்றால் நான் இங்கு அமெரிக்காவிலோ, அல்லது என் பள்ளித்தோழர்கள் இன்று அடிட்டர்களாகவும், பேராசிரியர்களாகவும் பெரிய பிசினஸ்மேன்களாகவும் ஆகியிருக்க முடியாது.


கழுதை கெட்டால் குட்டிச்சுவர் போன்று வழக்கம் போல் வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சை தேய்த்துக்கொண்டிருப்போம். அது என்னவோ தெரியவில்லை, பள்ளியில் எல்லா லூட்டியும் அடித்தாலும் கூட, எங்கள் குழுவில் குறிப்பிட்ட நான்கைந்து பேர் மட்டும் இரவானால் க்ரூப் ஸ்டடி போட்டு தேர்வுகளில் மட்டும் மாணவிகளுக்கு போட்டியாக சில சமயங்களில் அவர்களை விட அதிக மதிப்பெண்களை கூட எடுத்து விடுவோம். இதனாலோ என்னவோ நாங்கள் எவ்வளவுதான் குறும்பு செய்தாலும் எங்களை மட்டும் ஆசிரியர்கள் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள். இதுவே நாங்களும் படிப்பை கோட்டைவிடாமல் நன்றாக பிடித்துக் கொண்டதற்கு ஒரு காரணம்.


நான் பள்ளியில் (பிளஸ் ஒன்) சேர்ந்த முதல் நாளே வகுப்பறையில் மயக்கமடித்து விழுந்து விட்டேன். அதுவும் முதல் வரிசையில் அமர்ந்திருந்த பெண்கள் முன்பு. அதுவும் ஒரு நல்லதாக போய்விட்டது. ஒரே நாளில் அதுவும் முதல் நாளிலேயே நான் பிரபலமாகிவிட்டேன். ஆரம்பத்தில் என்னை பரிதாபமாக பார்த்த பெண்கள் பிறகு அடாவடி கும்பல் ஆன பிறகு திரும்பி கூட பார்பதில்லை. இருந்தாலும் விடுவோமா நாம்?


T. ராஜேந்தர் படத்தில் வருவது போல் வழக்கமான ஒரு தலை காதல்கள் நிறையவே இருந்தது. ஒரே பெண்ணை இருவர் சுற்றி வந்தோம். இருவரும் பொட்டு வைத்திருப்போம். அதாவது திருநீர் மாதிரி. நம்ம வில்லன் சந்தனப்பொட்டு வைத்திருப்பார். நான் (ஹீரோ!) சாந்துபொட்டு வைத்திருப்பேன். ஆனால் இருவருக்குமே அந்தப் பெண் கடைசியில் நாமத்தை போட்டது தனிக்கதை.


எங்கள் ஆசிரியர்களில் நாங்கள் மிகவும் மரியாதை வைத்திருப்பது (இன்றும் கூட) T.P.M. என்று சொல்லக்கூடிய திரு. T. பிச்சைமாணிக்கத்தை. நல்ல ஆங்கிலம் பேசக்கூடியவர், பார்க்க மிகவும் டெரராக இருப்பார். அவர் அக்கவுண்டன்ட்டன்சி பாடம் எடுத்தால் இன்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்காலாம். அப்படி ஒரு லைவாக மாணவர்களையே உதரணாமாக கூறி ஒவ்வொரு வகை அக்கவுன்ட்ச்சையும் பாடமெடுப்பார்.


நடு இரவில் தட்டி எழுப்பி 'What are the three types of accounts' எனக்கேட்டால் கூட சொல்ல வேண்டும் என்று அன்று அவர் எங்களுக்கு சொல்லிகொடுத்த விதம் இன்றும் நான் கூறுவேன். Personal, Real and Nominal accounts என்று. மற்ற ஆசிரியர்களும் ஆற்றலில் ஒன்றும் குறைவானவர்கள் இல்லை. செங்குட்டுவன், எழிலரசன், சோ கா (சோ. கனகசபாபதி) என பலரும் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தார்கள்.

தமிழ் மேல் இருந்த பற்றின் காரணமாக இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று அரசியல் வியாதிகள் கூறியதை கேட்டு பள்ளியில் strike எல்லாம் செய்து ஹீரோவாக காட்டிக்கொண்ட கதையெல்லாம் உண்டு. இன்று என் பிள்ளைகளை இந்தி தெரிவது அவசியம் என தனியாக படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன். அனேகமாக இதை தமிழர்கள் எல்லோரும் தற்போது உணர்ந்து விட்டார்கள். தமிழக அரசியல் வியாதிகளை தவிர.


Leadership qualities என்று சொல்லக்கூடிய தலைமை பண்புகளை முதலில் கற்றுக்கொண்டது எனது பள்ளியில் தான். Interact club என்ற அமைப்பிற்கு வழக்கமாக ஆசிரியர்க்கு பிடித்த/வேண்டிய பையன்களை தான் அதுவரை தலைவராக நியமித்து வந்தார்கள். முதன் முதலாக நான் தான் அதுவரை அன்னபோஸ்ட்டா நிரப்பிய அந்த பதவியை நானும் நிற்க போகிறேன் என்று ஆசிரியர்களிடம் வாதாடி தேர்தல் வைத்து அதில் வெற்றியும் கண்டேன். நான் இதை இங்கு குறிப்பிட காரணம் அதன் பிறகு வரிசையாக கல்லூரியிலும் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் முதல் ஆளாய் கை தூக்கும் பழக்கமும் தைரியமும் எனக்கு ஏற்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக என் தாய் தந்தை மற்றும் என் நண்பர்கள் என அனைவரும் எனக்கு என்றும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்ததும் உண்மை.

பள்ளியை கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு சென்று வருவது என்பது எங்களுக்கெல்லாம் அப்போது ஒரு வீர விளையாட்டு மாதிரி. இப்போ மாதிரி வீட்டில் இருந்தபடியே நினைத்த போது சினிமா பார்க்கும் வசதி அப்போதில்லை. எல்லா சினிமாவிற்கும் வீட்டில் காசும் கொடுக்கமாட்டார்கள். அனுமதியும் இருக்காது. ஒரு தடவை ஒரு பிரபலமான மலையாள (இயக்குனரின்!) படத்தை பார்க்க கட் அடித்துவிட்டு சென்றோம். இடைவேளையில் காண்டீன் பக்கம் போன என் நண்பன் அலறி அடித்துக்கொண்டு உன்ளே ஓடி வந்தான். என்னடா உங்க அப்பா கிப்பா யாராவது பாடம் பார்க்க வந்திருகிறார்களா? என கிண்டலாக கேட்டோம். இல்லைடா. நம்ம ஹய் ஸ்கூல் வாத்தியார் ..... பாடம் பார்க்க வந்திருக்கார்டா என முகம் வெளிறி போய் கூறினான். ஊம்ம் இதுதானா...அட போடா. நீயே அவர் முன்னாள் போய் நின்னால் கூட அவர் தான் உன்னை கண்டு ஒளிவார். ஏன்னா அவரே கிளாசை கட்டடித்துவிட்டு தான் அதுவும் இந்த படத்திற்கு வந்திருக்கார் என நாங்கள் கூறியதை மெதுவாக புரிந்து கொண்ட பிறகு தான் அவன் முகமே தெளிவானது. பிறகு பல நாள் எங்களை பார்த்தாலே அவர் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவார்.


இம்ம்...இப்படி எழுதிக்கொண்டே போகலாம். அது ஒரு கனாக் காலம்...

நன்றி படம்: flickr.com
share on:facebook

8 comments:

சாய் said...

ஆதி சூப்பர்.

பழைய நினைவுகளை நோக்கி என்னை உங்கள் இடுகை அழைத்து சென்றது.

மறுபடியும் படித்து இன்னொரு கருத்து போடுகின்றேன் (எனக்கு பொருந்தும் சில விசயங்களை வைத்து). அல்லது உங்கள் இடுகையை மேற்கோள் காட்டி என் பள்ளி பருவத்தை போடலாமா ?

Chitra said...

T. ராஜேந்தர் படத்தில் வருவது போல் வழக்கமான ஒரு தலை காதல்கள் நிறையவே இருந்தது. ஒரே பெண்ணை இருவர் சுற்றி வந்தோம். இருவரும் பொட்டு வைத்திருப்போம். அதாவது திருநீர் மாதிரி. நம்ம வில்லன் சந்தனப்பொட்டு வைத்திருப்பார். நான் (ஹீரோ!) சாந்துபொட்டு வைத்திருப்பேன். ஆனால் இருவருக்குமே அந்தப் பெண் கடைசியில் நாமத்தை போட்டது தனிக்கதை.


......சிரிச்சு முடியல!

Philosophy Prabhakaran said...

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்...

Philosophy Prabhakaran said...

உங்கள் காதல் கதை, குறும்புகள் சூப்பர்... அப்படியே ஒரு தொடராக ஆரம்பிக்கலாமே...

ஆதி மனிதன் said...

@Philosophy Prabhakaran said...
//தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்... //

என்ன பிரபா? லேட்டா வந்தாலும் நாமலாம் எப்பவுமே லேட்டஸ்ட் தானே.

ஆதி மனிதன் said...

@Philosophy Prabhakaran said...
//உங்கள் காதல் கதை, குறும்புகள் சூப்பர்... அப்படியே ஒரு தொடராக ஆரம்பிக்கலாமே... //

கண்டிப்பா. நீங்கலாம் கேக்க தயாரா இருந்தா!

ஆதி மனிதன் said...

@Chitra said...
//நம்ம வில்லன் சந்தனப்பொட்டு வைத்திருப்பார். நான் (ஹீரோ!) சாந்துபொட்டு வைத்திருப்பேன். ஆனால் இருவருக்குமே அந்தப் பெண் கடைசியில் நாமத்தை போட்டது தனிக்கதை. //

உண்மைய தான் சொன்னேன் சித்ரா மேடம். ஆனால் எங்களுக்குள் (சாந்து போட்டு, சந்தன போட்டு) சண்டையும் வந்ததில்லை. நாங்கள் தாடியும் வளர்க்கவில்லை.

ஆதி மனிதன் said...

@சாய் said...
//அல்லது உங்கள் இடுகையை மேற்கோள் காட்டி என் பள்ளி பருவத்தை போடலாமா ? //

என்ன சாய். இதுக்கெல்லாம் என்கிட்ட பர்மிஷனா? mine is copyright free. நாம் ஏன் இதை ஒரு தொடர் இடுகையாக மாற்ற கூடாது?

அப்புறம் மறக்காமல் மீண்டும் ஒரு முறை உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி.

Post a Comment