தென்மேற்கு பருவக்காற்று -
தமிழ் சினிமா உலகம் என்பது பிரமாண்டம், மாஸ் ஹீரோ, ஹீரோயின் மற்றும் பிரபலமான இயக்குனர்களிடம் மட்டுமே அடங்கிவிடவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த எல்லோரும் பார்க்க கூடிய ஒரு நல்ல தமிழ் படம்.
வழக்கம் போன்ற கதைதான். ஆனால் அதை சொன்ன விதமும் தேர்வு செய்த கதாபாத்திரங்களும் தான் தென்மேற்கு பருவக்காற்றை இதமாக வீச வைத்திருக்கிறது.
ஹீரோ சேது: ஐம்பது அறுபது வயதில் அதை மறைப்பதற்காக ரோஸ் பவுடரையும் ஏன் ஒரு சில நடிகர்கள் கண்களுக்கு மை எல்லாம் தீட்டிக்கொண்டு கல்லூரி மாணவனாக நடிப்பதை பார்த்து பார்த்து அலுத்து போய் இருக்கும் நேரத்தில் அசல் கிராமத்தானாக முரட்டு பார்வையும், நிமிர்ந்த நெஞ்சுமாய், கட்டில் அடங்கா காளையாக வளைய வரும் கதாநாயகன் சேது தனக்கு கிடைத்த பாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளார்.
தந்தை இல்லா பிள்ளையாக, ஒரு ஊதாரியாக சுற்றிவரும் கதாநாயகன் சேது தன் ஆட்டு பட்டியில் ஆடு திருட வரும் கும்பலை வளைத்து பிடிக்கும் போது ஏற்படும் திருப்பம் தான் கதைக்கு ஆரம்பம் என சொல்லலாம்.
ஹீரோயினாக வருபவர்கள் திருடனையும், போக்கிரியையும் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளும் படங்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். இதில் சற்றே மாற்றம். திருடியாக ஹீரோயின் வருகிறார்.
ஹீரோயின் வசுந்தரா: கிராமத்து ஹீரோயினாக அழகாக வந்து போகிறார். அதுமட்டுமில்லாமல் எங்கே தன்னை திருடி என எல்லோர் முன்னாடியும் காட்டி கொடுத்துவிடுவானோ என வெளிறி போய் நிற்கும் காட்சியாகட்டும், அழகாக ஒன்றிரண்டு காட்சிகளில் காதல் மொழி பேசுவதில் ஆகட்டும் தன் பங்கை கச்சிதமாக முடித்திருக்கிறார்.
சரண்யா: ஏற்கெனவே பல படங்களில் குணசித்திர வேடங்களில் தன் முத்திரையை பதித்தவர். இந்த படத்திலும் அருமையாக நடித்துள்ளார். ஒரு பாசமுள்ள அம்மாவாக, வைராக்கியமுள்ள விதவை தாயாக படம் பூராவும் ஒவ்வொரு காட்சியிலும் நம் மனதில் நிற்கிறார்.
டைரக்டர் சீனு ராமசுவாமி தான் படத்தின் உண்மையான ஹீரோ. சுவிசிலும், ஹவாய் தீவிலும் ஒன்றிரண்டு பாடல் காட்சிகள், மாடர்ன் ஹீரோ, அரை குறை ஆடை போட்ட ஹீரோயின் காம்பிநேசன் என எதுவும் படத்தில் இல்லாமல், அழகாக வயல் வெளி, மண் சாலை, பூசப்படாத சுவர்கள் கொண்ட கிராமிய வீடுகள் என்று படத்தில் சிறிதும் அதீத கற்பனை கலப்பு இன்றி படத்தை எடுத்துள்ளார்.
காமெடி என சொல்லிக்கொண்டு படத்தின் கதைக்கு சம்மந்தமே இல்லாமல் தனியாக டிராக் வைக்காமல் படத்தினூடே ஆங்காங்கு இயற்கையாக காமெடி கலந்துள்ளது. ஓரிரு இடங்களில் நல்ல கருத்துக்களையும் இயல்பாக சொல்லியிருகிறார். ஒரு பக்கம் செழுமையையும் மறு பக்கம் வறுமையையும் இயற்கையே கொடுத்திருந்தாலும் நாம அத மாத்தணுமா இல்லையா? என்கிறபோதும், பழிவாங்கும் உணர்ச்சி வந்துச்சுனா வாழ்க்கையை நல்ல விதமா அனுபவிக்க முடியாது என்று கடைசியில் முடிக்கும் போதும் பளிச்சென தெரிகிறார் டைரக்டர்.
ஆனா ஒரே ஒரு குறை. அது ஏன் ஒரு கிராமிய படம் என்றால் அதில் வரும் எல்லா ஹீரோக்களும் ஒன்றுக்கும் உதவாத தறுதளைகலாகவும், குடித்துவிட்டு ஊர்சுற்றும் குடும்பத்துக்கு அடங்காதவர்களாகவும் காண்பிக்கிறார்கள்? இது கிராமங்களை பற்றிய ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடாதா?
பி. கு. சினிமா விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. சரி அதை பகிர்ந்துகொள்ளலாமே என்றுதான்...
ஆமா பொன்வண்ணன் படத்துல எங்க வராரு?
அன்புடன்...
share on:facebook
5 comments:
அட, நீங்களும் ஆரம்பிச்சாச்சா..?
(உங்கள் பின்குறிப்பிற்கு செய்திக்கு )
பாக்கணும் நண்பா!!
அப்பப்போ பார்த்த நல்ல படங்களை பதிவு செய்யலாம் தவறில்லை
நல்லா விமர்சனம் பண்றீங்க..... தொடர்ந்து அசத்துங்க!
நல்லா விமர்சனம் பண்றீங்க..... தொடர்ந்து அசத்துங்க!
நன்றி மாதவன்.
நன்றி மோகன்.
நன்றி சித்ரா மேடம்.
Post a Comment