நம்மூரில் அவ்வப்போது போலி சீட்டு கம்பெனிகள் மக்களை ஏமாற்றுவதும், அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஏழை மாணவிகளிடம் ஏமாற்றி பணம் பறிப்பதும் சாதரணமாக செய்திகளில் அடிபடும்.
ஆனால் அமெரிக்கா போன்ற நாட்டில் இம்மாதிரி ஒரு செய்தி கடந்த வாரம் வெளிவந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகனத்தில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பே ஏரியாவில் இயங்கி வந்த ட்ரை வாலி யூனிவர்சிட்டி (Tri-Valley University) மிக பெரிய பண முறைகேடு மற்றும் விசா மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு துறையால் குற்றம் சுமத்தப்பட்டு ரெய்டுக்கு உள்ளானதோடு சீல் வைத்து மூடப்பட்டது.
இதில் படித்து (?) வந்த 1500 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களின் கதி மற்றும் எதிர்காலம் தற்போது அமெரிக்க புலனாய்வு துறையின் சுறுக்கு கயிறில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. மொத்த மாணவர்களில் 95 % மேலானவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் குறிப்பா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
பல்கலையில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளையும் கேட்டால் நமக்கு தலை சுற்றுகிறது. பல்கலை என்ற பெயரில் வெளிநாடுகளில் (இந்தியாவிலிருந்து) இருந்து வரும் மாணவர்களிடம் பெரும் அளவில் பணத்தை பெற்றுக்கொண்டு மானாவாரியாக அமெரிக்க மாணவ விசாக்களை அள்ளித் தெளித்திருக்கிறது. பேப்பரில் மட்டுமே மாணவர்கள் பல்கலையில் படிப்பதாக இருந்தது. மற்றபடி விசாவை பெற்றுக்கொண்டு பெரும்பாலானவர்கள் வெவேறு மாநிலங்களில் சென்று அவரவர்களுக்கு கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இது அமெரிக்க சட்டப்படி மிக பெரிய குடிஉரிமை பித்தலாட்டம்.
மாணவ விசாவில் ஒருவர் அமெரிக்காவில் இருந்தால் அவ்வப்போது தான் படிக்கும் படிப்பின் முன்னேற்றத்தையும், அவ்வப்போது கல்லூரிக்கு நேரில் சென்று ஆஜர் ஆவதையும் தாங்கள் மாணவர் விசாவில் தொடர தகுதியானவர்கள் என்பதை நிருபிக்கும் பொருட்டு குடியுரிமை துறையிடம் பதிந்துகொன்டே இருக்க வேண்டும். ஆனால் Tri-Valley பல்கலை மாணவர்கள் சிலர் பல்கலை வாசலையே மிதித்ததாக தெரியவில்லை.
பெரும்பாலான மாணவர்கள் இப்பல்கலை பற்றி தெரிந்தே பெரும் பணம் கொடுத்து சேர்ந்துள்ளார்கள் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அப்படியென்றால் இவ்வளவு நாளும் ஏன் அந்த பல்கலை கழகம் செயல்பட அனுமதித்தார்கள் என்ற கேள்விக்கு பதிலில்லை.
மோசடியின் உச்ச கட்டமாக பல்கலையில் சேர்ந்த மாணவர்களின் பாதிக்கும் மேலானவர்களின் இருப்பிட முகவரியாக ஒரே அப்பார்ட்மெண்டின் முகவரி தரப்பட்டுள்ளது.
தற்போது இப்பல்கலையின் மாணவ விசாவில் வந்த அனைத்து மாணவர்களையும் அமெரிக்க புலனாய்வு துறை வலை வீசி ஒவ்வொருவராக தேடி வருகிறது. இவர்களில் பெரும்பாலனவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்றாலும் முறையாக படிக்க வந்த மாணவர்களாக இருப்பின் அவர்கள் மீண்டும் மற்ற பலகலைகளில் விண்ணப்பித்து தங்கள் படிப்பை தொடரலாம் எனவும் கூறியள்ளது சிலருக்கு பாலை வார்த்துள்ளது.
இதற்கிடையே விசாரணைக்கு என்று ஒரு சில மாணவர்களை தங்கள் கண்காணிப்பில் வைத்துள்ள புலனாய்வுத் துறையினர் அவர்களின் கால்களில் அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் கருவி ஒன்றை கட்டிக்கொள்ள செய்துள்ளது இந்திய சமுதாயத்தினரிடையே பெரும் மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் இப்படி காலில் நடமாட்டத்தை கண்காணிக்கும் கருவிகளை கட்டி விடுவது ஒன்றும் எங்களுக்கு புதிதில்லை. அதே நேரம் இப்படி காலில் கருவியை கட்டி கொள்வதால் மட்டும் அவர் குற்றவாளியாகவோ அல்லது குற்றம் புரிந்தவராகவோ ஆகிவிட முடியாது என சப்பை கட்டு கட்டுகிறார்கள். நமக்கு நினைத்தாலே அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
இதைபற்றி இந்திய அரசு தங்கள் ஆட்சேபனையை சற்று கடுமையாகவே தெரிவித்துள்ளது. ஆனால் நிலைமை மாறியதாக தெரியவில்லை. மொத்தத்தில் இந்த பிரச்சனையில் யாரை குற்றம் சொல்வதென்றே தெரியவில்லை.
தெரிந்தே பணம் கொடுத்து ஏமாந்த அமெரிக்கா செல்ல ஆசைப்பட்ட மாணவர்களா? அல்லது தெரிந்தே விசா மோசடியில் ஈடுபட்ட பல்கலையா? இல்லை இதையெல்லாம் கண்காணிக்க மறந்த அமெரிக்க அதிகாரிகளையா?
share on:facebook