Tuesday, September 10, 2013

வெள்ளைக்கார புள்ளைத்தாச்சி


நடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆளாவர். உதாரணமாக லைட் போட வேண்டும் என்றால் சுவிட்சை மேலே அமுக்கினால் தான் அங்கு 'ஆன்'. (பெரும்பாலான) பூட்டுக்கள் கிளாக் வைஸ் திருப்பினால் அது லாக் ஆகும். நம்மூரில் அது ஓபன் ஆகும். இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். என்னடா தலைப்பிற்கும் சப்ஜட்டுக்கும் சம்மந்தம் இல்லை என பாக்குறீங்களா? மேலே படியுங்கள்.

மேற்சொன்ன பல விஷயங்கள் நான் அங்கு போவதற்கு முன்பே எனக்கு தெரியும். காரணம் அங்கு சென்று வந்த நண்பர்கள் கூறி கேட்டது. பலருக்கும் கூட தெரிந்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் என்னை மிகவும் கவர்ந்தது இரண்டு விஷயங்கள். 1. குழந்தை வளர்ப்பு. 2. மாசமாக இருக்கும் பெண்கள்.

முதலில் குழந்தை வளர்ப்பை பார்ப்போம். கை குழந்தைகளை அவர்கள் கையாளும் முறை சற்றே வித்தியாசமானது. நம்மூரில் குழந்தை பிறந்து ஒரு 3-5 மாதங்கள் நம்மிடம் கொடுக்க கூட மாட்டார்கள். கேட்டால், உர விழுந்துடும், கழுத்து நிக்கல பார்த்து புடி அப்படி இப்படின்னு, ஆனால் அங்கு பிறந்து ஒன்றிரண்டு நாள் குழந்தைகளை நெஞ்சில் தொட்டி மாதிரி (முண்டா பனியன் மாதிரி) ஒரு பையை மாட்டிக்கொண்டு அதற்குள் குழந்தையை உட்கார்ந்த வாக்கில் வைத்துக்கொண்டு வேக வேகமாக நடப்பார்கள். அந்த குழந்தையின் கழுத்து பெரும்பாலும் கீழே தொங்கியபடி தான் இருக்கும்.

அதே போல் கைகுழந்தையை கூட குழந்தையின் ஒரு கையை பிடித்து தூக்கி பார்த்திருக்கிறேன். அப்போதும் குழந்தையின் கழுத்து கீழே தொங்கியபடி தான் இருக்கும். ஏன் அந்த ஊர் குழந்தைகளுக்கு மட்டும் கழுத்தில் உரம் விழ வில்லை?

அதே போல் நான் கவனித்த இன்னோர் விஷயம் குழந்தைகளுக்கு ஊசி போடுவது. கைகுழந்தைகளை கூட அங்கு உட்கார வைக்கிறார்கள். உட்கார வைத்து ஏதோ மாட்டுக்கு குத்துவது போல் ஊசி குத்துகிறார்கள் சாரி போடுகிறார்கள். 


இரண்டாவது, மாசமாக இருக்கும் பெண்கள். மூன்று மாதங்கள் என்று தெரிந்தாலே இங்கு அப்படி நடமா, இப்படி உட்காரும்மா என்று மாசமாக இருக்கும் பெண்களுக்கு பயங்கர அட்வைஸ் செய்து கேட்டிருக்கிறேன். ஆனால் அங்கு ஒருவர் மாசமாக இருப்பது அவரின் வயிற்றை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும். மற்றபடி மற்றவர்களை விட அவர்கள் மிகவும் வேகமாக நடப்பதும், எப்போதும் போல் வண்டி ஓட்டுவதும் அவர்களின் செயல்களை பார்த்தால் நமக்கு பயமாக இருக்கும்.

அதே போல் பிரசவத்திற்கு முதல் நாள் அல்லது அந்த நிமிஷம் வரை வேலைக்கு செல்வார்கள் (ஆனால் எந்த நிமிடமும் அவசர உதவி 911 அவர்களுக்கு கிடைக்கும் என்பது வேறு). இதற்க்கு வேறு ஒரு காரணமும் உண்டு. நம்மூர் போல் மருத்துவமனையில் போய் தேவை இன்றி நாமும் படுத்துக்கொள்ள முடியாது. மருத்துவமனைகளும் அதற்க்கு  அனுமதிக்காது. பெரும்பாலும் மருத்துவ காப்பீடு மூலமே அங்கு சிகிற்சைகள் மேற்கொள்ள படுவதுதான் அதற்க்கு காரணம். இல்லை என்றால் பிறகு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பதில் சொல்ல நேரிடும்.

பிரசவத்தின் போது கணவர் உடன் இருப்பதும், குழந்தை பிறந்தவுடன் அதை புகைப்படம் எடுத்து வெளியிடுவதும் அங்கு வழக்கம். இன்னொரு விசித்திரமான நடைமுறை/சட்டம் அங்கு உண்டு. பிரசவத்திற்கு பிறகு மனைவி குழந்தையை வீட்டுக்கு அழைத்து செல்லும் முன் உங்கள் காரில் குழந்தையை வைத்து எடுத்து செல்வதற்கான பேபி சீட் பொருத்தப்பட்டுள்ளதா அது குழந்தையின் எடையை தாங்குமா என பரிசோதித்த பின்னே அவர்களை டிஸ்சார்ஜ் செய்வார்கள்.

'ஆ'மெரிக்க கதைகள் தொடரும்....


share on:facebook

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆ ஆ...! தொடர வாழ்த்துக்கள்...

sury siva said...

இந்த இரண்டுமே நானும் அமெரிக்காவில் பார்த்து இருக்கிறேன்.



சுப்பு தாத்தா.

ராஜி said...

நம்ம ஊருல எல்லாத்தையும் செண்டிமெண்ட்லா பார்ப்போம்! அவங்க பிராக்டிக்கலா பார்க்குறாங்க! அதான்

Narmi said...

Yes. One more thing when Indian ladies get pregnant the whole structure bulges, when they become pregnant only their tummy becomes big

ADHI VENKAT said...

அமெரிக்க கதைகள் தொடரட்டும்...

Post a Comment