Thursday, January 17, 2013

25 ஆண்டுகள் கழித்து பள்ளி நண்பர்களை சந்தித்த/சந்திக்கும் அனுபவம்.


//ஒருவருக்கொருவர் அலை பேசியில் அழைத்து 'மாப்பிள்ளை', மச்சான், வாடா போடா என பேசிக்கொள்வது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது//

25 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பள்ளி நண்பர்கள் சிலரை குறிப்பிட்ட இடத்தில் வைத்து சந்தித்த போது ஒரு சிலரை எங்களுக்குள் ஒருவருக்கொருவர் அடையாளம் காண முடியாமல் போனது ஆச்சரியம்   தான்.

நாங்கள் அமெரிக்காவில் இருந்த போது என்னுடன் பத்தாவது படித்த நண்பர்கள் 25 ஆண்டுகள் கழித்து ஒரு கிருஸ்துமஸின் போது எங்களுக்கு  பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை அழைத்து ஒரு ஓட்டலில் வைத்து கவுரவித்த நிகழ்ச்சியின் படங்களை நண்பர் ஒருவரின் முக புத்தகத்தில் பார்த்த போதே என்னுள் அந்த எண்ணம் தோன்றி விட்டது. இந்தியா சென்ற பின் நாமும் நமக்கு + டூ சொல்லி கொடுத்த ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும் என்று.

நான் உட்பட என்னுடன் +2 படித்த அனைவரும் பத்தாவது வரை வேறு ஒரு பள்ளியில் படித்தவர்கள். அதற்க்கு காரணம் நாங்கள் +2 படித்த பள்ளியில் 10 வது வரை தமிழ் வழிக்கல்வி மட்டுமே. நாங்கள் அனைவரும் ஆங்கில வழி கல்வி பயின்றவர்கள்(இப்போது தெரிகிறதா? என் பதிவுகளில் தமிழ் பிழைகள் இருப்பதற்கு காரணம்!). இருந்தாலும் எங்கள் பள்ளியும் எங்கள் நட்பு உலகமும் சற்று வித்தியாசமானதே. அதற்க்கு காரணம் எங்கள் பள்ளி ஒரு அரசு பள்ளியும் அல்லாமல் தனியார் பள்ளியும் அல்லாமல் மாவட்ட கலெக்டரின் நேரடி பார்வையில் நடை பெற்றது தான்.

சரி அப்படி என்ன அந்த பள்ளியில் இருந்தது என நீங்கள் கேட்கலாம். தஞ்சை மாவட்டத்திலேயே (இன்று வரையிலும்) காமர்ஸ் க்ரூப் ஆங்கில மீடியம் அங்கு மட்டும் தான் இருந்தது/இருக்கிறது. அதாவது தமிழ், ஆங்கிலம் தவிர accountancy, commerce, economics மற்றும் maths உள்ள க்ரூப். அதுவே தமிழ் வழி கல்வியில் maths பதிலாக வரலாறு வைத்திருப்பார்கள். நாங்கள் அனைவரும் காமர்ஸ் க்ரூப் விரும்பி எடுத்து படித்தோம். அது தவிர, எங்கள் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த அனைத்து ஆசிரியர்களும் அப்போது தான் ஓரிரு வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்கள் நல்ல பேர் எடுக்க வேண்டும், பள்ளி நல்ல பேர் எடுக்க வேண்டும் என எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வில்லை. மாறாக எங்களுக்காக சொல்லிக்கொடுத்தார்கள். நாங்கள் நன்றாக படிக்க வேண்டும் என சொல்லி கொடுத்தார்கள்.

அதாவது எங்களுக்கு வேண்டிய சுதந்திரமும் அங்கு கிடைத்தது. தரமான கல்வியும் கிடைத்தது. நன்றாக படித்தவர்கள் நன்றாக வந்தார்கள். அதே போல் +1 சேர்ந்த போதே எங்கள் அனைவரையும் அனைத்து ஆசிரியர்களும் வாங்க போங்க என்று மரியாதையாக கூப்பிட்டார்கள். இது எங்கள் ஆசிரியர்கள் பால் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி கொடுத்தது. பத்தாவது வரை எங்களை வாடா போடா, கழுதை என ஆசிரியர்கள் கூற கேட்டு திடீரென்று எல்லோரும் மரியாதையை கொடுத்தது எங்களுக்குள் மிகுந்த positive thoughts ஏற்பட வழி வகுத்தது. ஓ, நாம் நன்றாக படித்தால் இன்னும் நமக்கு மரியாதை கிடைக்கும் என ஒரு உந்துதல் கிடைத்தது.

அப்படிப்பட்ட பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் வரும் மாதம் மீண்டும் அதே பள்ளியில் ஒன்று கூட இருக்கிறோம். ஆம், 25 ஆண்டுகள் கழித்து. இதில் பல நண்பர்களை நான் நடுவில் சந்தித்ததே இல்லை. தற்போது ஓரிரு மாதங்களில் ஒருவருக்கொருவர் அலை பேசியில் அழைத்து 'மாப்பிள்ளை', மச்சான், வாடா போடா என பேசிக்கொள்வது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது. இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஓரிரு பழைய நண்பர்கள் அழைத்து பேசும் போது காலை முதல் இருந்த வேலை டென்ஷன் எல்லாம் மறைந்து மிகுந்த ரிலாக்ஸ் ஆகிறேன். நட்புக்கு தான் என்ன வலிமை, பெருமை.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக தொழில் முறை நண்பர்களிடம் மட்டுமே பழகி வந்துவிட்டு தற்போது எல்லா உரிமையுடன் பேசும் பழைய பள்ளி நண்பர்கள் கிடைத்தது இவ்வளவு நாள் ஏன் நமக்கு இது தோணாமல் போய் விட்டது என்று வருத்தப்பட்டேன். பரவயில்லை இப்போதாவது மீண்டும் அனைவரும் தொடர்பில் வந்தோமே என்று சற்று அறுதல் பட்டு கொள்கிறேன்.

இதோ, வரும் மாதம் இதே தேதியில் நாங்கள் அனைவரும் ஒன்று கூட இருக்கிறோம். நினைத்தாலே இனிக்கிறது...





  

share on:facebook

7 comments:

CS. Mohan Kumar said...

நீங்க பள்ளி முடிச்சு 25 வருஷம் ஆச்சா? நான் உங்க வயசே 25 க்குள் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன் :)

விழா சிறக்க வாழ்த்துகள்

ஆதி மனிதன் said...

//நான் உங்க வயசே 25 க்குள் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன் :)//

நன்றி மோகன்.

அப்படிதான் நானும் நினைச்சுகிட்டு இருக்கேன். உடலுக்கு தானே வயசு மோகன். மனசுக்கு எது?

ADHI VENKAT said...

நட்பு வலிமை பெறட்டும். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said...

"அடையலாம் காண முடியாமல் போனது ஆச்சிர்யம் தான்"

அடையாளம்.... ஆச்சரியம்...இப்படி தானே வரும்...

அமுதா கிருஷ்ணா said...

சந்தித்து கலக்குங்க..

ஆதி மனிதன் said...

நன்றி கோவை2தில்லி.

நன்றி அமுதா கிருஷ்ணா.

//அடையாளம்.... ஆச்சரியம்...இப்படி தானே வரும்...//

அவசரத்தில் எழுதியது. திருத்திக்கொண்டேன்.

ஆதி மனிதன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா.

நிச்சயமாக...

Post a Comment